ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Google’s new search protocol is restricting access to 13 leading socialist, progressive and anti-war web sites

கூகுளின் புதிய தேடல் நெறிமுறைகள், 13 முன்னணி சோசலிச, முற்போக்கு மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களை அணுகுவதைத் தடுக்கிறது

Andre Damon and David North
2 August 2017

சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் கடந்த மூன்று மாதங்களாக கண்டுள்ள பாரிய வாசகர் எண்ணிக்கை இழப்புக்கு, கூகுள் தேடுபொறி மூலமாக வந்த அணுகுதலில் ஏற்பட்ட 45 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியே காரணம் என்பதை உலக சோசலிச வலைத் தளம், ஏனைய இணைய-வழி செய்தி நிறுவனங்கள் மற்றும் தேடல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் தொகுத்துள்ள புதிய தரவுகள் நிரூபிக்கின்றன.

கூகுளின் தேடல் மதிப்பீட்டு நெறிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் பொறியியல் துறை துணை தலைவர் பென் கோம்ஸ் குறிப்பிடுகையில், அதிக "அதிகாரபூர்வ உள்ளடக்கத்தை" முன்னுக்குக் கொண்டு வர வேலை செய்து வருகின்ற அதேவேளையில், கூகுள் அதன் தேடுபொறியில் செய்துள்ள மேம்பாடானது "அத்துமீறும்" தளங்களை அணுகுவதை தடுக்கும் என்று குறிப்பிட்டு, ஏப்ரல் 25 இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கணிசமான வாசகர்களைக் கொண்ட 13 தளங்களைக் கூகுள் தேடல்கள் மூலமாக அணுகியவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மதிப்பிட்டு, SEMrush நிறுவனத்திடமிருந்து உலக சோசலிச வலைத் தளம் புள்ளிவிபரங்களைப் பெற்றது. அதன் முடிவுகள் பின்வருமாறு உள்ளன:

* wsws.org, 67 சதவீதம் சரிந்தது
* alternet.org, 63 சதவீதம் சரிந்தது
* globalresearch.ca, 62 சதவீதம் சரிந்தது
* consortiumnews.com, 47 சதவீதம் சரிந்தது
* socialistworker.org, 47 சதவீதம் சரிந்தது
* mediamatters.org, 42 சதவீதம் சரிந்தது
* commondreams.org, 37 சதவீதம் சரிந்தது
* internationalviewpoint.org, 36 சதவீதம் சரிந்தது
* democracynow.org, 36 சதவீதம் சரிந்தது
* wikileaks.org, 30 சதவீதம் சரிந்தது
* truth-out.org, 25 சதவீதம் சரிந்தது
* counterpunch.org, 21 சதவீதம் சரிந்தது
* theintercept.com,19 சதவீதம் சரிந்தது

இப்பட்டியலில் உள்ள 13 வலைத் தளங்களில், உலக சோசலிச வலைத் தளமே மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கூகுள் தேடல்கள் மூலமாக இதை அணுகியவர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

கூகுளின் தணிக்கை நடவடிக்கையில் WSWS தான் மைய இலக்கில் இருப்பதை இந்த புதிய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. புதிய கூகுள் நெறிமுறைகள் நடைமுறைப்படுத்துவதற்கு முந்தைய பன்னிரெண்டு மாதங்களில், WSWS இன் வாசகர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது. இந்த அதிகரிப்பின் ஒரு குறிப்பிடத்தக்க கூறுபாடாக, கூகுள் தேடல் முடிவுகள் இருந்தன. தேடுபொறியில் தேடி அணுகியவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தமையானது, 2016 இன் போது சோசலிச அரசியல் மீது மக்கள் ஆர்வம் அதிகரிந்திருந்ததைப் பிரதிபலித்தது. இந்த அதிகரிப்பின் வேகம் நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் தீவிரமடைந்ததுடன், இது ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களுக்கு இட்டுச் சென்றது.   

துல்லியமாக கூகுள் அதன் தணிக்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த தொடங்கிய அந்த சமயத்தில் தான், ஏப்ரல் 2017 இல், WSWS ஐ தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்ந்தது.

கூகுள் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மற்றொரு தளமும், WSWS கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தும் தகவல்களை வழங்கியுள்ளது.

“கூகுள் அல்காரிதம் மாற்றங்களானது, மே மாத இறுதியில், உள்ளார்ந்த கூகுள் தேடல்களினூடாக Common Dreams வலைத் தளத்தை அணுகியவர்களின் எண்ணிக்கையை பாதித்தது,” என்று முற்போக்கு செய்தி நிறுவனமான Common Dreams இன் வளர்ச்சித்துறை இயக்குனர் ஆரோன் கௌஃப்மான் தெரிவித்தார். “மே மாதத்திலிருந்து, கூகுள் தேடல் மூலமாக Common Dreams அணுகியவர்களின் மொத்த எண்ணிக்கை சதவீதம், அண்மித்து 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது,” என்றார்.

இலக்கு வைக்கப்பட்ட வலைத் தளங்களை அணுகுவதை தடுக்க பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கூகுள் நடவடிக்கையின் அளவும் மற்றும் பாதிப்பும் உறுதிப்படுத்துகின்றன. WSWS மற்றும் மேலே பட்டியலில் குறிப்பிடப்பட்ட ஏனைய 12 வலைத் தளங்கள், கூகுள் மதிப்பீட்டாளர்களால் நேரடியாக ஒதுக்கப்பட்டிருப்பதும் (flagging), முடக்கப்பட்டிருப்பதும் (blackballing) இதில் உள்ளடங்கும். இத்தளங்களுக்கு தரவரிசையில் பெரும் எதிர்மறை இடம் ஒதுக்கப்பட்டிருப்பதானது, இத்தளங்களின் கட்டுரைகள் பின்னுக்குத் தள்ளப்படும் அல்லது முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் சேர்ந்து, கணினிகளே மதிப்பீட்டாளர்களை போல சிந்திக்க, அதாவது, அவர்களின் முன்னுரிமைகள் மற்றும் தப்பெண்ணங்களை முன்மாதிரியாக கொள்ள, புதிய திட்டநிரல் தொழில்நுட்பம் கற்றுக்கொடுக்கிறது.

இறுதியாக, சோசலிச மற்றும் இடதுசாரி வலைத் தளங்களுடன் சம்பந்தப்பட்டுள்ள குறிப்பிட்ட சொற்பொருள்கள் (terms), சொற்கள், தொடர் வார்த்தைகள் (phrases) மற்றும் தலைப்புகளை தேர்ந்தெடுப்பது சம்பந்தமான பல கூடுதல் தவிர்ப்புமுறை நுட்பங்களும் (exclusion techniques) உள்ளன என்பதை இந்நடவடிக்கையின் துல்லியத்தன்மை உறுதியாக எடுத்துக்காட்டுகிறது.

போர், புவிசார்அரசியல், சமூக சமத்துவமின்மை மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்கள் போன்ற பிரச்சினைகளில் ஒருங்குவிந்துள்ள உலக சோசலிச வலைத் தளம், இத்தகைய தலைப்புகள் மீது கூகுள் உருவாக்கும் தேடல் முடிவுகளில் ஏன் இந்தளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை இது விளங்கப்படுத்துகிறது. வழமையான சூழலில் மிகவும் அதிகபட்சமாக பார்வையிடப்படக்கூடிய, “சோசலிசம்,” “மார்க்சிசம்,” மற்றும் "ட்ரொட்ஸ்கிசம்,” போன்ற இந்த சொற்பொருள்கள் மற்றும் தொடர் சொற்கள், மிகக்குறைவான தேடல் முடிவுகளைக் கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் இலக்கில் வைக்கப்பட்ட ஏனைய தளங்களை அணுகும் எண்ணிக்கையை முடிவாக நீக்கும் இலட்சியத்துடன், கூகுள் மதிப்பீட்டாளர்கள் அவர்களின் அல்காரிதத்தை முன்பினும் அதிக துல்லியமாக செய்ய, அவர்கள் சந்தேகிக்கும் சொற்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஒருவர் சந்தேகிக்கும் விதத்தில், இதுவொரு தொடர் நடைமுறையாக உள்ளது.

கடந்த வாரத்தின் போது WSWS ஆல் சேகரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட தகவலானது, ஜனநாயக உரிமைகளை கடுமையாக வெட்டிக்குறைப்பதில் கூகுள் நிறுவனமானது, பெருநிறுவன-அரசு சூழ்ச்சியின் மையத்தில் உள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது. பேச்சு சுதந்திரம் மீதும் மற்றும் தகவல்களை தணிக்கை செய்யாமல் அணுகுவது மீதுமான தாக்குதல், சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கு நோக்கம் கொண்டுள்ளது.

இந்த நிகழ்முறையில் கூகுளின் மையமான ஆத்திரமூட்டும் பாத்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் சிந்தனையானது இணையம் மீதான பெருநிறுவன கட்டுப்பாட்டுடன் பொருந்தாது என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

ஜனநாயக உரிமைகள் மீதான கூகுளின் தாக்குதலை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றாலும், கூகுள் அதன் தணிக்கை திட்டத்தை உடனடியாக மற்றும் ஐயத்திற்கிடமில்லா வகையில் திரும்ப பெற வேண்டுமென்று நாம் கோருகிறோம்.

கூகுளின் இணைய தணிக்கைக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரம் ஒழுங்கமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். பேச்சு சுதந்திரம் மற்றும் சிந்தனையை ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகளுக்கு எதிராக ஒரு எதிர்தாக்குதலை தொடுக்க மற்றும் பங்களிப்பு செய்ய, நாம் நமது சக்திக்கு உட்பட்டு அனைத்தும் செய்ய உத்தேசித்துள்ளோம்.

இணையம் மீதான பெருநிறுவன-அரசு தணிக்கைக்கு எதிரான போராட்டத்தில், ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பே மத்தியில் உள்ளது என்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை மற்றும் பொதுமக்களை எச்சரிக்கையூட்ட, சோசலிச, இடது மற்றும் முற்போக்கு வலைத் தளங்களை பரந்த அடிப்படையில் ஒருங்கிணைப்பதும் அவசியமாகும்.