ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Danger of India-China border war grows

இந்திய-சீன எல்லைப் போர் அபாயம் அதிகரிக்கின்றது

By K. Ratnayake
10 August 2017

ஒரு இராணுவ மோதல் தொடர்பாக அதிகரித்துவரும் எச்சரிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் மத்தியில் இமயமலை அடிவாரத்திலுள்ள ஒரு தொலைதூர மலைமுகட்டுப் பகுதியான டோக்லாம் பீடபூமி குறித்து இந்திய மற்றும் சீன துருப்புக்கள் இடையே உருவான முட்டுக்கட்டை நிலை இன்னும் தொடர்கிறது.

இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை நாட்டின் பாராளுமன்றத்தில், அதன் இராணுவம் எந்தவொரு சவாலையும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், மேலும் இந்தியா கற்றுக்கொண்ட 1962 ஆண்டு “படிப்பினைகளால்” 1965 மற்றும் 1971 ல் நடந்த போர்களில் பாகிஸ்தானுடனான அதன் வெற்றிகளால் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 1962ல் ஒரு மாதம் நீடித்த சீன-இந்திய எல்லைப் போரில் பெய்ஜிங் புது தில்லிக்கு ஒரு மூக்குடைத்தலை கொடுத்த பின்னர் அதன் துருப்புக்களை திரும்பப் பெற உத்தரவிட்டது பற்றிய ஒரு குறிப்பாக இது இருந்தது

பதட்டங்கள் அதிகரிப்பதற்கான இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரச்சனைக்குரிய அடையாளமாக, வெடிபொருட்கள், ஆயுத தளவாடங்கள் மற்றும் பிற போர் தளவாடங்கள் கொள்முதல் செய்வதை துரிதப்படுத்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (Indian Ministry of Defense –MoD) நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதியாக 200 பில்லியன் ரூபாயை ($3.1 billion) அவசரமாக கோரியுள்ளது. போரிடுவதற்கு தேவைப்படும் வெடிபொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் ஆகியவற்றிற்கான அவசர கொள்முதலை துரிதப்படுத்துவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இராணுவ தளபதிகளுக்கான துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சரத் சந்திற்கு அதிகாரம் வழங்கிய கடந்த மாத அறிவிப்பினை இது பின்பற்றுகின்றது.

சர்ச்சைக்குரிய மலைமுகட்டுப் பகுதியிலிருந்து இரு தரப்பினரும் தங்களது துருப்புக்களை திரும்பப் பெறுவதன் மூலமாக டோக்லாம் எல்லை நெருக்கடியை தணிக்க முடியுமென புது தில்லி மீண்டும் மீண்டும் பரிந்துரைத்தது.

ஆனால், சீனாவைப் பொறுத்த வரை இந்தியா தான் ஒருதலைப்பட்சமாக அதன் துருப்புக்களை திரும்பப் பெற்று முதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதில் அது பிடிவாதமாக உள்ளது.

இந்தியாவின் நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆத்திரமூட்டுவதாக உள்ளன என்று பெய்ஜிங் திரும்ப திரும்ப கூறியுள்ளது. முந்தைய எல்லை மோதல்களைப் போலல்லாமல், இந்த பிராந்தியத்தின் மீது புது தில்லி எந்தவித உரிமையையும் கொண்டிராத நிலையில் சீனத் துருப்புக்களுடன் இந்திய படையினர் மோதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சீனா மற்றும் சிறிய ஹிமாலய முடியரசான பூட்டானுக்கும் இடையிலான ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக தான் இது உள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய பீடபூமியில் சீன கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரு சாலையை விரிவுபடுத்துவதை தடுப்பதற்காகவே பூட்டானின் உரிமைக்குரிய பகுதிக்குள் தலையீடு செய்ததாக இந்தியா கூறுவதை சீனா எதிர்க்கின்றது. இந்த விடயத்தில் புது தில்லி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், மேலும் இந்தியா நீண்ட காலமாக ஒரு பாதுகாப்பாளராகப் காட்டிவரும் அதன் பிராந்தியத்திற்குள் கூறப்படும் சீனாவின் ஊடுருவல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இணைவதற்காக பூட்டான் பக்கம் சாய்ந்ததாகவும் பெய்ஜிங் வாதிடுகின்றது. கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நீடிக்கும் டோக்லாம் நிலைப்பாடு பற்றி, இன்று வரை, பூட்டான் அரசாங்கம் ஒரே ஒரு அறிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது, அதுவும் கூறப்படும் சீன தாக்குதல் முயற்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்த சமயத்தில் வெளியிடப்பட்டது.

பெய்ஜிங், அதன் பொறுமையை இழந்து வருவதாகவும், மேலும் காலவரையின்றி இந்த இக்கட்டான நிலைப்பாடு தொடர்வதை அது அனுமதிக்காது எனவும் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது.

செவ்வாயன்று, ஒரு சீன இராஜதந்திரியான வாங் வென்லி என்பவர் இந்திய பத்திரிகையாளர் பிரதிநிதிக் குழுவிடம், “இந்த தவறான பாதையை இந்தியா தொடருமானால், எங்கள் துருப்புக்களின் உயிர்களை பாதுகாக்க சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையையும் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு. எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற சமிக்ஞைகளை அனுப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

முந்தைய நாள் பிரதிநிதி குழு, பெய்ஜிங்கின் புறநகர் பகுதியிலுள்ள, சீன தாக்கும் வல்லமையை காட்டும்விதமாக மக்கள் விடுதலை இராணுவப் (People’s Liberation Army) படையினரின் முகாம் பகுதிக்கு விஜயம் செய்தது. பத்திரிகையாளர்களிடம் உரையாடிய போது, PLA இன் மூத்த தளபதி லீ, “சீன பிராந்தியத்திற்குள் ஒரு வரம்பு மீறுகையாகவே இந்திய துருப்புக்கள் செயல்பட்டுள்ளன” என்று அறிவித்தார். மேலும் அவர், “சீன வீரர்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் குறிப்பிடலாம். நான் ஒரு சிப்பாய், (சீனாவின்) பிராந்திய ஒருமைப்பாட்டை சிறந்த முறையில் பாதுகாக்க முயற்சி செய்வேன். நாங்கள் மனத்துணிவையும் உறுதிப்பாட்டையும் கொண்டுள்ளோம்” என்றும் சேர்த்துக் கூறினார்.

நேற்று, அரசுக்கு சொந்தமான China Daily பத்திரிகை, “கால அவகாசம் உள்ளபோதே புது தில்லி தன்னை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்ற தலைப்பிட்ட ஒரு தலையங்கம் வெளியிட்டதில், எல்லை பிரச்சனை பற்றிய “அமைதியான தீர்வுக்கான சாளரம்,” “மூடப்படுகிறது” என்று எச்சரித்தது. “இரண்டு படைகளுக்கு இடையே ஒரு மோதல் உருவாவதற்கான எண்ணிக்கை கணக்கீடு தொடங்கிவிட்டது,” என்பதை சீனாவின் மிகப்பெரிய ஆங்கில மொழி செய்தித்தாள் உறுதிப்படுத்தியதோடு, “மேலும், தவிர்க்க முடியாத முடிவு நிகழப்போவதை காண்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது” என்றும் தெரிவித்தது.

சீன-இந்திய உறவுகளில் உருவாகும் இந்த விரைவான மோசமடைதலுக்கு, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலுக்கு இந்தியாவின் ஆழ்ந்த ஒருங்கிணைப்புத்தான் சமீபத்தைய எல்லை மோதலுக்கும் மற்றும் வெடிப்புமிக்க உதாரணமாகவும் உள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் கீழ், இந்தியா, பென்டகனின் வழமையான பயன்பாட்டிற்கு தனது இராணுவ தளங்களையும், துறைமுகங்களையும் திறந்துவைத்துள்ளது; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது; மேலும், தென் சீனக் கடல் சச்சரவு மற்றும் வட கொரிய பிரச்சனை ஆகிய இரண்டின் மீதான வாஷிங்டனின் ஆக்கிரோஷமான நிலைப்பாடுகளை அப்படியே பிரதிபலித்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மறுசீரமைப்பில் இருந்து எழுச்சி பெற்ற முதலாளித்துவ தன்னலக்குழுவிற்காக பேசுகின்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, சீனாவை சுற்றி வளைத்து, அடிபணியச் செய்வதற்கான அமெரிக்க உந்துதலுக்கு எந்தவித முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் போர் எதிர்ப்பு உணர்வுளுக்கு எந்தவொரு முறையீட்டையும் விடுக்க இயல்பாகவே தகமையற்றதாக உள்ளது, மேலும், போர்நாடும் தேசியவாதத்தை தூண்டிவிடுகின்ற போது, வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டை தேட முனைவது மற்றும் தனது சொந்த இராணுவவாத கொள்கையை அதிகரித்தளவில் கடைபிடிப்பது என இரண்டிற்கும் மத்தியில் இது ஊசலாடுகின்றது.

பெருகி வரும் போர் அபாயத்திற்கான ஒரு கூடுதல் சமிக்ஞையாக, இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்த ஒரு நேர்காணலில், இந்தியாவில் பிறந்த பொருளாதார வல்லுநரும், பிரிட்டிஷ் தொழிலாளருமான பீர் மேக்னாத் தேசாய், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு ஆதரவாக வரும் என்று அவரது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகின்ற போதும், உடனடியாக நேரவிருக்கும் சீன-இந்திய போர் குறித்து எச்சரித்தார்.

“இந்த முறை நாம் மிக விரைவில் சீனாவுடனான ஒரு முழு அளவிலான யுத்தத்தில் நிலைப்போம் என்பது மிகவும் சாத்தியமானது என்றே நான் நினைக்கிறேன்” என்று தேசாய் India Asia News Agency (IANS) க்கு தெரிவித்தார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க தாக்குதலில் இந்தியாவின் தோற்றம் ஒரு “முன்னணி நிலை” வகிப்பதாக கூறப்படுவதை வேண்டுமென்றே புறக்கணிக்கின்ற அதே வேளையில், தேசாய், இமயமலை மற்றும் தென் சீனக் கடல் இரண்டு விவகாரங்களிலும் சீனாவை ஒரு ஆக்கிரமிப்பாளராக சித்தரிக்க முயன்றார்.

இந்திய அரசாங்கம் மற்றும் ஆளும் வர்க்க வட்டாரங்களுடன் நீண்ட காலம் சுற்றி வந்துகொண்டிருக்கும் தேசாய், ஒரு போர் டோக்லாம் பீடபூமிக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, ஆனால் “அதற்கு பதிலாக வட இமயமலை முழுவதும், எல்லா இடங்களில் இருந்தும் தொடங்கும்” என்று தெரிவித்தார். அத்தகையதொரு போரை “கட்டுப்படுத்த இயலாது” என்று அவர் எச்சரித்தார், ஆனால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உடனான இந்தியாவின் “பாதுகாப்பு ஒத்துழைப்பு,” “பயனுள்ளதானதாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும் அவர், “அமெரிக்காவின் உதவியும், ஆதரவும் இல்லாமல் இந்தியாவால் சீனாவை எதிர்த்து நிற்க முடியாது. அதேபோல, இந்தியாவின் உதவியின்றி சீனாவை எதிர்த்து அமெரிக்காவால் நிற்க முடியாது. இந்த உறவில் உள்ள ஒத்த தன்மை அது தான்” என்று தொடர்ந்து கூறினார்.

ஜூன் 18 அன்று, வெள்ளை மாளிகையில் மோடி ட்ரம்பை சந்தித்த அதே நாளில்தான் டோக்லாமிற்காக இந்திய துருப்புக்கள் தலையீடு செய்ததுடன், சீன கட்டுமானத் தொழிலாளர்களை அவர்களது சாலை கட்டமைப்பை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியது. அந்த கூட்டத்தின் முடிவில் அவர்கள் இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய பங்காண்மை” ஐ மேலும் விரிவுபடுத்த உறுதியளித்தனர்.

தேசாயின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல, ஒரு சிறிய எல்லைப் போராக தொடங்கும் ஒரு போர் கூட விரைவாக அதிகரித்து அமெரிக்கா மற்றும் பிற சக்திகளையும் விரைவாக போருக்குள் இழுக்கலாம். உண்மையில், பிஜேபி அரசாங்கமும், இந்திய உயரடுக்கினரும் அமெரிக்க ஆதரவைப் பெறுவதில் முனைவுடன் இருப்பதோடு, ஆணுஆயுத சக்திகளிடையேயான ஒரு பூகோள மோதலை விரைவில் அதிகரிக்கச் செய்யும் ஒரு மோதலுக்கான வாய்ப்பையும் உயர்த்துகின்றனர்.

அத்தகையதொரு பேரழிவு தவிர்க்கப்பட்டாலும், மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒரு போர் ஒரு எல்லைப் போராக மட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு இது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

அத்தகைய போர், அதன் விளைவு என்னவாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்தை மட்டுமே வலுப்படுத்தும்.

ஒரு சீன “வெற்றி” என்பது, சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ வகை கூட்டணியில் இந்திய முதலாளித்துவம் அதன் இடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு காரணமாக மட்டுமே அமையும். மேலும், மறு ஆயுதமயமாக்கம் மற்றும் போர் குறித்த அவர்களது திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் இமயமலை நிகழ்வுகளை பயன்படுத்தும்.

இந்த நிகழ்வில் சீனா தோல்வியுற்று பாதிப்படைந்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவிற்கு எதிரான அதன் பொறுப்பற்ற இராணுவ-மூலோபாய தாக்குதலை தீவிரப்படுத்தும் வாய்ப்பைப் பற்றிக்கொள்ளும். இதற்கிடையில், மோடி அரசாங்கம், 1962 இன் “அவமானத்தை” மாற்றுவதில் இருந்து, இந்தியாவின் அண்டை நாடுகளை மிரட்டி தெற்கு ஆசியாவின் மேலாதிக்க சக்தியாக தன்னை அங்கீகரிப்பதற்கான அதன் முயற்சிகளை முடுக்கிவிடும், மேலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் வகையில் போர்வெறி தேசியவாத உணர்வு சூழலை தூண்டிவிட்டு, இந்திய அரசியலை மேலும் வலதுபக்கமாக மோசமடையச் செய்யும்.