ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The world on the brink

உலகம் முடிவின் விளிம்பில் உள்ளது

The World Socialist Web Site Editorial Board
12 August 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவுக்கு எதிராக, தொடர்ந்து அசாதாரண ஆத்திரமூட்டல் மற்றும் பொறுப்பற்ற அச்சுறுத்தலை இடைவிடாது பேணிவரும் நிலையில், உலகம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும் அணுஆயுத போரின் விளிம்பை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்புவியில் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ பலத்திற்கு பொறுப்பான ஒரு மனிதரிடம் இருந்து இதுபோன்ற போர்நாடும் வசனங்கள் வருவது, எத்தருணத்திலும் அணுஆயுத போர் வெடிக்கலாம் என அதிகரித்த அதிர்ச்சியையும் மற்றும் பயத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

B-1 ரக மூலோபாய குண்டுவீசிகளின் புகைப்படங்களுடன், கொரியாவில் அவற்றின் "இன்றிரவு போரை" நடத்த இந்த மூலோபாய குண்டுவீசிகள் தயாராக இருப்பதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகம் வெளியிட்ட ஒரு சேதியை பின்தொடர்ந்து, ட்ரம்ப் நேற்று காலை அவரது ட்வீட் சேதியில், “வடகொரியா முட்டாள்தனமாக நடந்து கொண்டால்,” இராணுவ நடவடிக்கை இப்போது "தேர்ந்தெடுக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக"  குறிப்பிட்டார்.

அதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு பின்னர், “வாய்வீச்சை தீவிரப்படுத்துவதாக" ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்த விமர்சனத்தைக் கண்டிக்கும் வகையில், “நான் என்ன கூறினேனோ அந்நிலைமையின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன், நான் என்ன நினைத்தேனோ அதையே நான் கூறினேன்,” என்று அறிவித்தார். வட கொரிய தலைவர் கிம் ஜொங்-யுன் இன்னும் ஒரேயொரு அச்சுறுத்தல் விடுத்தாலும் சரி, “அதற்காக அவர் உண்மையிலேயே வருத்தப்படவேண்டியிருக்கும்” என்று எச்சரித்து, அமெரிக்க ஜனாதிபதி அவரை மீண்டும் அச்சுறுத்தினார்.

உலக மக்கள் மீது முன்பினும் அதிக அச்சுறுத்தலுடன் போர் அபாயம் அதிகரித்து வந்தாலும், இது வெறுமனே ஒரு அறிக்கை போர் தான், ஏதோவொரு விதத்தில் இது இந்த வீழ்ச்சியிலிருந்து பின்னுக்கு வந்துவிடும் என்று கருதுவதும், அல்லது குறைந்தபட்சம் நம்புவதும், இயல்பானதே. ஆனால் முகத்திற்கு முன்னுள்ள யதார்த்தத்தைப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

இப்போதைய நிலைமை உலகம் அணுஆயுத போருக்கு மிக நெருக்கத்தில் வந்திருந்த 1962 கியூப ஏவுகணை நெருக்கடியுடன், ஒப்பிடப்பட்டு வருகின்றது. ஆனால் அமெரிக்க தலைவரும் சரி ரஷ்ய தலைவரும் சரி அப்போது ஒரு அணுஆயுத தாக்குதலை கட்டவிழ்த்துவிட விரும்பவில்லை என்பதால் அந்த பதட்டமும் அபாயகரமான மோதலும் இறுதியில் தீர்க்கப்பட்டு, அணுஆயுத தளவாடங்கள் திரும்ப பெறப்பட்டன.

இதையே இன்றைக்கும் கூற முடியாது. குறைந்தபட்சம் ஒருபுறம், ட்ரம்ப் நிர்வாகம், “உலகம் ஒருபோதும் பார்த்திராததைப் போன்ற ஆத்திரம் மற்றும் சீற்றத்துடன்" மற்றொரு தரப்பை சுற்றி வளைக்க ஆயத்தமாகி தயாராக நிற்கிறது. அனைத்திற்கும் மேலாக, விரும்பியோ அல்லது விருப்பமில்லாமலோ, ட்ரம்ப் பொறுப்பற்ற விதத்தில் வட கொரியாவை ஒரு மூர்க்கமான இராணுவ நகர்வுக்குள் சீண்டிவிட்டு கொண்டிருக்கிறார்.

அமெரிக்கா பேரம்பேசிய ஒரு தீர்வை அல்லது ஏதோவொரு விதமான முழுமையான வெட்கக்கேடான அடிபணிவை அது விரும்புகிறது என்று கூறுவதைதவிர, ட்ரம்ப் இதுவரையில் வட கொரிய தலைவர் கிம் இற்கு வேறொரு நம்பிக்கையும் உறுதியளிக்கவில்லை. அதிகரித்தளவில் மோதலுக்கான சாத்தியக்கூறு தவிர்க்கவியலாததாக தெரிகின்ற நிலையில், இராணுவ தர்க்கமே அதிகரித்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பெரிதும் ஸ்திரமற்ற பியொங்யாங் ஆட்சி, ஒரு பாரிய அமெரிக்க தாக்குதல் உடனடியாக நிகழக்கூடுமென நம்புகின்றபட்சத்தில், பதிலடி கொடுப்பதற்கான அதன் தகைமை முழுமையாக அழிக்கப்படாமல் இருக்க அதன் சொந்த முன்கூட்டிய தாக்குதலைத் தொடங்க முடிவெடுக்கலாம்.

ட்ரம்ப் நிர்வாகம் அதன் பொறுப்பற்றத்தன்மையோடு, வட கொரியாவுக்கு எதிராக ஒரு போரைக் கட்டவிழ்த்து விடக்கூடிய அலட்சியத்துடன் மற்றும் அவமரியாதையுடன் முன்நகர்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு-தெற்கு எல்லையின் இருதரப்பிலும் மில்லியன் கணக்கான உயிர்களை விலை கொடுத்த, 1950-1953 கொரிய போரைப் போலில்லாமல், ஒரு புதிய மோதலானது கொரிய தீபகற்பத்திற்குள்ளேயே மட்டுப்பட்டு இருக்குமென கருதவியலாது.

அணுஆயுத போர் அச்சுறுத்தல் வெறுமனே வெள்ளை மாளிகையில் உள்ள ஒரு பாசிசவாத பைத்தியக்காரரின் விளைவல்ல, மாறாக இது அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியால் எரியூட்டப்பட்ட அளப்பரிய புவி-அரசியல் பதட்டங்களில் இருந்து எழுகின்றது. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான தடையாக கருதப்படும் சீனாவுக்கு சவால் விடுக்க, அவசியமானால் அதனுடன் போருக்குள் செல்ல, அமெரிக்காவிற்கு அழுத்தமளித்து வரும் வாஷிங்டனில் உள்ள இராணுவ மற்றும் அரசியல் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளால் ட்ரம்ப் ஆதரிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் அதன் வரலாற்று பொருளாதார வீழ்ச்சியைக் கடந்து வருவதற்கு அதன் இராணுவ பலத்தைப் பிரயோகிக்க முனைந்த நிலையில், மத்தியக் கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கால் நூற்றாண்டு கால தொடர்ச்சியான போர்களால் தயாரிக்கப்பட்ட அரசியல் சூழலின் விளைவே, இப்போதைய இந்த நெருக்கடியாகும். அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச அரங்கில் இராணுவ நடவடிக்கை மூலமாக தீர்க்க முடியும் என்பது, அமெரிக்க ஆளும் வட்டாரங்களின் நடைமுறையளவிலான நம்பிக்கை சாசனமாக மாறியுள்ளது.

வட கொரியாவுக்கு எதிரான போருக்கு அடித்தளம் ஒபாமா நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது, அது சீனாவுக்கு எதிராக அதன் "ஆசிய முன்னிலையின்" பாகமாக இந்தோ-பசிபிக் எங்கிலும் மிகப்பெரியளவில் இராணுவ ஆயத்தப்படுத்தலை அங்கீகரித்தது. அமெரிக்க இராணுவம், அதன் விமானப்படை மற்றும் கப்பற்படையின் 60 சதவீதத்துடன், ஆசியாவில் இப்போது அதன் அதிநவீன ஆயுதங்களை நிலைநிறுத்தி உள்ளது மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் புதிய இராணுவ தளங்களுக்கான உடன்படிக்கைகளைப் பெற்றுள்ளது.

தென் கொரியாவில் இருந்தும் அத்துடன் அதன் ஜப்பான் மற்றும் குவாம் இராணுவத்தளங்களின் பல படைப்பிரிவுகளில் இருந்தும் 28,000 க்கும் அதிகமான விமானப்படை, கடற்படை, கப்பற்படை மற்றும் சிறப்பு நடவடிக்கை படையினரை பென்டகனால் உடனடியாக அழைத்துக் கொள்ள முடியும். அனைத்திற்கும் மேலாக, வட கொரியாவுடனான ஒரு போர் சம்பவத்தில், அமெரிக்கா அதன் 625,000 சிப்பாய்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 3,100,000 பேர் ஆகியோருடன் சேர்ந்து, தென் கொரிய இராணுவம் மீது செயல்படுத்தும் கட்டுப்பாட்டையும் ஏற்கக்கூடும்.

கொரிய தீபகற்பம் மீதான எந்தவொரு போரும் பெரும் அபாயங்களைச் சீனாவிற்கு மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுக்கும் நிலைநிறுத்துகிறது, ஏனெனில் இவ்விரு நாடுகளுமே வட கொரியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றகரமான தான்தோன்றித்தனம், கடந்த நூற்றாண்டு முழுவதிலும் ஓர் அபாயகரமான வெடிப்புப்புள்ளியாக இருந்துள்ள ஒரு இடத்தில், போரைத் தொடங்குவதற்கு அது தயாராக உள்ளது என்ற உண்மையால் அடிக்கோடிடப்படுகிறது.

சீனா மற்றும் ரஷ்யாவின் சொந்த பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்தும் வகையில் அவற்றின் பின்புறத்தில் அமெரிக்கா ஒரு போர் வெடிப்பை தொடங்குகையில் அவை வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருக்கும் என்று கருத முடியாது. வட கொரியா மீது கடுமையான புதிய தடையாணைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பெய்ஜிங்கும் மாஸ்கோவும் சமீபத்தில் தான் வாக்களித்திருந்தன என்ற நிலையில், இந்த வாரம் ட்ரம்பின் போர்நாடும் வேட்கையை அவை ஒரு காட்டிக்கொடுப்பாக மட்டுமே கருதும்.

முதல் கொரிய போரில் அமெரிக்க துருப்புகள் சீனாவின் எல்லையை நெருங்கிய போது, அது அப்போரில் தலையீடு செய்தது, ஆகவே மீண்டும் அது அதையே செய்யக்கூடும். அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு தலையங்கம், சீன ஆட்சியின் மிகவும் இராணுவவாத பிரிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பெய்ஜிங் அதன் நலன்களைப் பாதுகாக்க "உறுதியான கரத்துடன் விடையிறுக்க" வேண்டியிருப்பதாக வலியுறுத்தியது. முதல் தாக்குதலை வட கொரியா தொடங்கினால் சீனா நடுநிலையோடு இருக்க வேண்டுமென அது வலியுறுத்திய போதினும், “அமெரிக்காவும் தென் கொரியாவும் தாக்குதல்களை நடத்தி, வட கொரிய ஆட்சியைத் தூக்கியெறிய முயன்றால்… அவர்கள் அவ்வாறு செய்வதை சீன தடுக்கும்,” என்று எச்சரித்தது.

கொரிய தீபகற்பத்தின் இந்த உடனடி நெருக்கடியை, குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது தணிப்பதற்கான ஒரு வழியும் பரிசீலிக்கப்படும் என்பதை ஒதுக்கிவிட முடியாது. அணுஆயுத பயன்பாடு மீதான முந்தைய புரிந்துணர்வுகளுக்கு அமெரிக்கா இனியும் கட்டுப்படாது என்பதையும், அது அணுஆயுத போர் தொடுக்க விரும்புகிறது என்பதையும் அது தெளிவுபடுத்திவிட்டது—இந்த விடயத்தில் ஒரு வறிய, பின்தங்கிய மற்றும் பலவீனமான ஒரு இராணுவ எதிரிக்கு எதிராக நடக்கும். உலகெங்கிலும், போட்டியாளர்களும் கூட்டாளிகளும் அவர்களின் அத்தியாவசிய நலன்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கேற்ப, அவர்கள் தமது மூலோபாய மற்றும் இராணுவ திட்டமிடலை மாற்ற நிர்பந்திக்கப்படுவார்கள்.

இச்சூழலில், மனிதயினம் இப்போது முகங்கொடுக்கும் இந்த நெருக்கடிக்கு, அமெரிக்காவிலும், ஆசியா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பாகமாக அரசியல் புரிதலும் தயாரிப்பும் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய அபாயமாகும். ட்ரம்பிடம் இருந்து வெளிப்பட்டு கொண்டிருக்கும் கொடூரமான அச்சுறுத்தல்கள் பெரும் மனக்கவலையை, அச்சம் மற்றும் கோபத்தைத் தூண்டிவிட்டுள்ளன என்றாலும், இந்த போர் அபாயத்தை முடிவுக்குக் கொண்டு வர, தொழிலாளர்களிடம் அவர்களது சொந்த அரசியல் மூலோபாயம் மற்றும் கட்சி இல்லை. சோசலிச கோட்பாடுகளின் அடித்தளத்தில் அமைந்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை கொடுப்பதற்கு அவசியமான பாரிய புரட்சிகர கட்சிகளாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதே இப்போது அவசியமாகும்.