ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The missile alert in Hawaii

Thirty-eight minutes of chaos

ஹவாயில் ஏவுகணை எச்சரிக்கை

முப்பத்தெட்டு நிமிட குழப்பம்

Patrick Martin
15 January 2018

ஹவாய் மீது ஒரு தொலைதூர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக சனிக்கிழமை வந்த ஒரு பொய் செய்தி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வீடுகளை விட்டு வெளியேற செய்தது, பலரும் அணுஆயுத தாக்குதலில் சாம்பலாவதற்கு முன்னதாக வாழ்வதற்கு ஒருசில நிமிடங்களே இருப்பதாக நம்பினர். நெடுஞ்சாலை சுரங்கங்களிலும், அடித்தள வாகன நிறுத்தங்கள் மற்றும் அடுக்குமாடிகளின் அடித்தளங்களிலும் மக்கள் தஞ்சம் புக முனைந்தனர், தங்களின் குழந்தைகளை சாக்கடை நுழைவாயில் வழியாக இன்னும் கீழே இருத்தினர். தங்களின் அன்புக்குரியவர்களுடன் பேசும் கடைசி தொலைபேசி அழைப்பாக இருக்கலாம் என்று மக்கள் கருதியதால், அங்கே மனதை உருக்கும் உரையாடல்கள் நிகழ்ந்தன.

ஹவாய் அரசின் அவசரகால மேலாண்மை முகமை வெளியிட்ட அந்த எச்சரிக்கை, சங்கிலி தொடர் போன்ற அத்தீவு எங்கிலும் பெரும்பாலான கைத்தொலைபேசிகளுக்கு ஒரு உறுதியான சேதி அனுப்பியது: அவசர எச்சரிக்கை: ஹவாய் க்கு தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தல் உள்ளது. உடனடியாக பதுங்குமிடங்களுக்குச் செல்லவும். இதுவொரு ஒத்திகை அல்ல.” போர் சம்பவத்தின் போது ஊடகங்கள், இராணுவ சேவைக்கு கொண்டு வரப்பட வேண்டுமென்ற நீண்டகால ஏற்பாடுகளின் கீழ், அந்த எச்சரிக்கை உடனடியாக உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களால் மறு ஒளி/ஒலிபரப்பு செய்யப்பட்டது.     

ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வழமையாக மாறும் பணிநேர மாற்ற நடைமுறையின் பயிற்சியின்போது, ஒரு அவசரகாலபணி தொழிலாளரால் தவறான பொத்தான் அழுத்தப்பட்டதன் விளைவாக இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரம்ப் நிர்வாகம், இதை தேசிய இராணுவப் படைகளுக்கு சம்பந்தமில்லாத ஒரு "அரசு ஒத்திகை" சம்பவமாக குறைத்துக் காட்டியது, அமெரிக்க ஊடகங்களோ அதையொரு தற்செயலான விபத்து என்பதாக உதறி தள்ளின.  

இந்த தற்செயலான விபத்து என்று கூறப்படுவது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் உண்மையான விபரங்கள் பொதுமக்களுக்கு ஒருபோதும் கொண்டு வரப்படாமலேயே போகலாம். ஆனால் ஏற்கனவே தெரிய வந்திருப்பவை முக்கியமான அரசியல் பிரச்சினைகளை எழுப்புகின்றன.

ஒரு அவசரகால மேலாண்மை தொழில்நுட்ப வல்லுனர் தவறான பொத்தானை அழுத்திவிட்டார் என்றால், இந்த பயிற்சியே ஒருசில வாரங்களுக்கு முன்னர் தான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, அவர் புதிய மற்றும் பழக்கமில்லாத சாதனத்தைக் கையாண்டிருக்கலாம். ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் வட கொரியாவுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஹவாய் மீதான ஒரு சாத்தியமான அணுஆயுத ஏவுகணை தாக்குதலுக்கு மாநில அதிகாரிகள் அங்கே உசாரான தயாரிப்புகள் செய்துள்ளனர். கடந்த ஏப்ரலில் அம்மாநில சட்டமன்றம், பனிப்போர் சகாப்தத்தின் சிதைந்த பதுங்குமிடங்களைப் புதுப்பிப்பதற்கு அழைப்பு விடுத்தது, மற்றும் வான்வழி தாக்குதலின் போது பயன்படுத்தப்படும் ஹவாயின் எச்சரிக்கை ஒலியெழுப்பிகள் 70 க்கும் கூடுதலான ஆண்டுகளின் பின்னர் முதல்முறையாக கடந்த மாதம் பரிசோதிக்கப்பட்டன.

வேறு சூழ்நிலைகளாக இருந்திருந்தால், அவசரகால எச்சரிக்கை ஒலியெழுப்பிகளை ஒலிக்கச் செய்யாத இந்த எச்சரிக்கை, மக்களால் உடனடியாக ஒரு தவறானதாக கருதப்பட்டு மற்றும் உதாசீனப்படுத்தப்பட்டும் இருந்திருக்கலாம். ஆனால் வட கொரியாவுக்கு எதிராக ஜனாதிபதி ட்ரம்பின் "நெருப்பு கக்கும் சீற்றத்தால்" மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டதற்கு பின்னர் மற்றும் அமெரிக்க பிராந்தியம், குறிப்பாக ஹவாய் மாநிலம், வட கொரிய அணுஆயுத தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பின்னர், இன்றைய நிலைமைகளின் கீழ் அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது.

கடந்த வாரம் மட்டும், முப்படைகளது தலைமை தளபதிகளின் முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற அட்மிரல் மைக்கேல் முல்லென் தேசிய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்குக் கூறுகையில், உலகம் "என் பார்வையில், நாம் ஒருபோதும் பார்த்திராத அளவுக்கு, வட கொரியாவுடன் மற்றும் அப்பிராந்தியத்தில் ஓர் அணுஆயுத போரின் நெருக்கத்தில் உள்ளது,” என்றார். ட்ரம்ப் அவரே கூட, தனது "அணுஆயுத பொத்தான்" அளவு குறித்து கூறுகையில் “அவரைக் காட்டிலும் மிகப் பெரியதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமாகும், எனது பொத்தான் வேலை செய்யும்!” என்று பெருமைபீற்றி, வட கொரிய தலைவர் கிம் யொங்-யுன் ஐ இடித்துரைத்தார்.

ஹவாய் மக்கள் மாநில அரசின் எச்சரிக்கை பெற்றபோது, ட்ரம்ப் எச்சரித்த போர் உண்மையில் தொடங்கி விட்டது போலும் என்று கருதினர்.

உள்ளூர் நேரப்படி காலை 8:07 மணிக்கு அந்த எச்சரிக்கை வந்த நேரத்திற்கும், அதை இரத்து செய்து உத்தியோகப்பூர்வ சேதி வந்த நேரத்திற்கும் இடையிலான 38 நிமிடங்கள், அனேகமாக ஹவாய் சம்பவத்தின் மிகவும் கவலைக்குரிய தருணமாகும்.

மாநில அதிகாரிகள் வெளியிட்ட அச்சம்பவத்தின் காலக்கிரமமான தகவல்களின்படி, அந்த எச்சரிக்கை அளிக்கப்பட்டு வெறும் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர், பேர்ல் துறைமுகத்தை (Pearl Harbor) தலைமையிடமாக கொண்ட அமெரிக்க பசிபிக் கட்டளையகம் அங்கே ஏந்த ஏவுகணையும் ஏவப்படவில்லை என்று காலை 8:10 க்கு மாநில அவசர சேவைக்கு தகவல் அளித்தது. அந்த அவசரகால முகமை உடனடியாக ஹோனோலுலு (Honolulu) பொலிஸ் துறைக்கு மறுஉத்தரவாதங்களை அனுப்பியது. அம்முகமை அந்த எச்சரிக்கையை காலை 8:13 க்கு இரத்து செய்து, காலை 8:20 க்கு அதன் பகிரங்கமான பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் கணக்குகளில் ஒரு செய்தியைப் பிரசுரித்தது. ஆனால் ஆரம்ப எச்சரிக்கையைப் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு காலை 8:45 வரையில் எந்த சேதியும் அனுப்பப்படவில்லை.

அரசு அதிகாரிகள் இந்த தாமதத்திற்கான எந்த காரணத்தையும் இதுவரையில் வழங்கவில்லை. ஆனால் ஒரு பத்திரிகை விபரம் சுட்டிக்காட்டுகிறது. அம்மாநிலத்தின் அவசர முகமை செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ரபோசாவை மேற்கோளிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிடுகையில், “அந்த எச்சரிக்கையை இரத்து செய்ய 38 நிமிடங்கள் ஆயின ஏனென்றால்… எந்த பிரச்சினையும் இல்லை என்ற சேதியை அனுப்பவும் மற்றும் அதுவொரு தவறுதலான எச்சரிக்கை என்ற சேதியை அனுப்ப மக்களுக்கான எச்சரிக்கையூட்டும் அமைப்புமுறையைப் பயன்படுத்துவதற்கும், மத்திய அவசரகால மேலாண்மை முகமையிடம் இருந்து அம்முகமை அனுமதி பெற வேண்டி இருந்தது,” என்று எழுதியது.

ஒருவேளை பேரிடர் ஏற்பட்டால் மக்களின் விடையிறுப்பு எவ்வாறிருக்குமென சோதிப்பதற்கான சந்தர்ப்பத்தை அதை பயன்படுத்துவதற்காக, மத்திய அரசாங்கம் வேண்டுமென்றே அந்த எச்சரிக்கையை திரும்ப பெற காலம் தாழ்த்தியது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஹவாய் எச்சரிக்கையின் உலகளாவிய தாக்கம் குறித்து எந்த பத்திரிகையிலும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. அமெரிக்க மாநிலம் ஒன்றில் தொலைதூர ஏவுகணை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று உலகெங்கிலும் ஒளிபரப்பான அறிவிப்புக்கு ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவில் என்ன விடையிறுப்பு இருந்தது? வாஷிங்டன், பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவுக்கு இடையே தொடர்பு கொள்ளப்பட்டதா? பியொங்யாங்கிற்கு எதிராக அமெரிக்க அணுஆயுத பதிலடி கொடுப்பதற்கான தயாரிப்புக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதா? இந்த நாடுகளின் அணுஆயுத படைகள் உடனடி நடவடிக்கைக்கு தயாராயினவா?

இன்னும் பிற கேள்விகளும் உள்ளன. மக்களுக்கான அவசரகால மேலாண்மை முகமையில் ஏற்பட்டதற்கு பதிலாக, இராணுவ கட்டளையகத்தில் இதுபோன்றவொரு "பிழை" ஏற்பட்டிருந்தால், அமெரிக்க மண்ணில் தாக்குதல் என்று கூறி "பதிலடி" கொடுக்க வட கொரியா மீது அமெரிக்க ஏவுகணைகளைச் செலுத்த எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? ரஷ்யாவிலோ அல்லது வட கொரியாவிலோ இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதுபோன்றவொரு எச்சரிக்கைக்கு அமெரிக்க விடையிறுப்பு என்னவாக இருந்திருக்கும்?

ஓர் அணுஆயுத போரின் ஆரம்ப நிமிடங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை ஹவாய் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் ஊடகங்களின் எல்லா உளறல்களுக்கும் இடையே, ஏவுகணை வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியானது உடனடியாக சமூகத்தை பீதியூட்டி, பொதுவான ஓர் உடைவுக்கு இட்டுச் செல்லும். ஒரு பனிப்புயலைக் கையாள முடியாதளவில் உள்கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடு, ஓர் அணுஆயுத தாக்குதலை அரிதாகவே தாக்குப் பிடிக்க முடியும்.

அனைத்திற்கும் மேலாக, அணுஆயுத போர் அபாயம் நிஜமானது மற்றும் அதிகரித்து வருகிறது என்பதையே ஹவாயில் 38 நிமிட பீதி ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்த அபாயம் வெறுமனே ஜனாதிபதி ட்ரம்பின் தனிப்பட்ட பொறுப்பற்றத்தனம் மற்றும் பேரினவாத இராணுவவாதத்தின் துணைவிளைவல்ல. 2016 இல் ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், இராணுவ நெருக்கடியின் இடம் வேண்டுமானால் வட கொரியாவுக்கு பதிலாக ஒருவேளை சிரியா அல்லது உக்ரேன் என்று வேறு ஏதாவதாக இருந்திருக்கலாம், ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் நீண்டகால பொருளாதார மற்றும் மூலோபாய வீழ்ச்சியை இராணுவ படைகளிடம் தஞ்சமடைந்து ஈடுகட்டுவதென்ற அதன் முனைவு இருந்திருக்கும். 

ஜனாதிபதி ஒபாமாதான், உலகின் மிகவும் அச்சமூட்டும் அமெரிக்க அணுஆயுத போர் தளவாடங்களைத் தொடர்ந்து புதுப்பிப்பதற்காக 1.3 ட்ரில்லியன் டாலருக்கு ஒப்புதல் வழங்கினார். ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் அதன் அனைத்து முயற்சிகளையும் ஒருங்குவித்துள்ள ஜனநாயகக் கட்சி, உடனடியாக திட்டநிரலில் அணுஆயுதப் போரை கொண்டு வரக்கூடிய, மாஸ்கோவுடனான ஓர் அமெரிக்க இராணுவ மோதலுக்கான அரசியல் சூழலை உருவாக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹவாயில் ஜனவரி 13 ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாகும். வெள்ளை மாளிகை, அல்லது ஊடக பிரச்சாரங்களால் என்னதான் உத்தரவாதங்கள் வழங்கப்பட்டாலும், உலகெங்கிலுமான மக்களோ போர் சம்பந்தமான கேள்வியை மிகவும் வேறு விதத்தில் பார்ப்பார்கள். முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியே போர் அபாயத்தின் உந்து சக்தி என்ற புரிதலின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதே அவசர அவசியமாகும். இலாப நோக்கு அமைப்புமுறையை அழித்து, உலகளவில் ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே ஓர் அணுஆயுத பேரழிவைத் தடுக்க முடியும்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Hawaii to modernize nuclear fallout shelters
[24 April 2017]

அணுஆயுத யுத்தத்திற்கு நீங்கள் தயாரா?
[30 July 2014]