ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

මහින්ද රාජපක්ෂ කන්ඩායම වර්ගවාදය උසිගැන්වීමට පලාත්පාලන මැතිවරනය යොදා ගනී

இலங்கை உள்ளூராட்சி மன்ற தேர்தலை மஹிந்த இராஜபக்ஷ குழு இனவாதத்தை கிளறிவிடுவதற்குப் பயன்படுத்துகிறது

By W.A. Sunil
18 January 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தனது அரசியல் குழுவை வழிநடத்திக்கொண்டு மீண்டும் அரசியல் அடித்தளம் ஒன்றை கட்டியெழுப்பிக்கொள்வதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆவேசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக முதலைக் கண்ணீர் வடித்துக்கொண்டு தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிடுவது அவரது பிரச்சாரத்தின் விஷமத்தனமான ஆயுதமாக உள்ளது.

முன்னர் கூட்டு எதிர்க் கட்சியாக இருந்து, இப்போது பொதுஜன முன்னணி என்ற பெயரில் அமைத்துக்கொண்டுள்ள புதிய கட்சிக்கு இராஜபக்ஷ தலைமை வகிக்கின்றார். சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மற்றும் அது தலைமை கொடுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்தும் பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் முன்னணியில் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு அல்லது தனித்தேனும் ஆட்சியில் மீண்டும் அமர்ந்துகொள்வதே இராஜபக்ஷவின் இலக்காகும்.

அவரது ஆட்சிக் காலத்தில் கொடூரமாக முடிவுக்கு வந்த தமிழர்-விரோத இனவாத யுத்தம், வாழ்க்கை நிலைமைகளை நசுக்கப்பட்டமை, சர்வதேச நாணய நிதித்தின் கட்டளைகளை அமுல்படுத்தியமை மற்றும் ஜனநாயக உரிமைகளை அபகரித்தமை சம்பந்தமாக நாடு பூராவும் பரவிய வெகுஜன அதிருப்தியின் காரணமாக, 2015 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார். சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக கூடிய சக்திகள், “நல்லாட்சியை” ஏற்படுத்துவதாக கூச்சலிட்டு இந்த வெகுஜன எதிர்ப்பை அவர் பக்கம் திசைதிருப்பி விட்டது.

எனினும் மூன்று ஆண்டுகளின் முடிவில், போலி தேர்தல் வாக்குறுதிகள் ஒரு பக்கம் இருக்க, இராஜபக்ஷ நிறுத்திய இடத்தில் இருந்து முன்சென்று, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி பொருளாதார சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதனால் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக, தொழிலாளர், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் புதிய சுற்று எழுச்சி வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த எதிர்ப்பை திசை திருப்பி சுரண்டிக்கொள்வதற்கே இராஜபக்ஷ முயற்சிக்கின்றார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அவர் தலைமை வகிக்கும் பொதுஜன முன்னணியை வெற்றிபெறச்செய்யுமாறு ஜனவரி 14 அன்று பாணந்துறை நகரில் நடத்திய கூட்டத்தில் இராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். “இந்த அரசாங்கம் மிகவும் பலவீனமான நிலைமையில் உள்ளது. அரசாங்கத்தில் இருக்கின்ற இரு தரப்பினரும் மோதிக்கொள்கின்றனர். மோதிக்கொள்ளும் அரசாங்கத்துக்குள் நாடு வளர்ச்சியடையாது” என அவர் கூறினார். அரசாங்கத்திற்குள் மோதல் சம்பந்தமாக இராஜபக்ஷ ஆற்றிய உரை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அனுப்பிய ஒரு செய்தியாகும். அதாவது, அவரின் கீழ் பெரும் வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கொள்கைகளை அமுல்படுத்தும் “சக்திவாய்ந்த அரசாங்கத்தை” அமைத்துக்கொள்ள முடியும் என்பதாகும்.

சிக்கன திட்டங்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகள் வளர்ச்சியடைந்து வருகின்ற சூழ்நிலையில், அரசாங்கத்தில் இருந்து தூரவிலகி நிற்பதற்கு சிறிசேன முயற்சிக்கின்றார். மறுபக்கம், ஜனாதிபதியை அலட்சியம் செய்து தாம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது. இந்த நிலைமையின் கீழேயே, இராஜபக்ஷ குறிப்பிடுகின்ற அரசாங்கத்திற்குள்ளான மோதல் வெளிப்படையாக அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த இரண்டுமே பொய்யாகும். இருவரும் சேர்ந்தே இந்த தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர்.

தனது கைகளை பலப்படுத்திக்கொள்வதற்காக தனது கட்சியில் இருந்து விலகி இருக்கும் இராஜபக்ஷவுடன் சமரசம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கு சிறிசேன கடந்த நவம்பரில் முயற்சி ஒன்றை மேற்கொண்டார். அவ்வாறு செய்வதெனில் முதலில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் இருந்து பிரிய வேண்டும் என இராஜபக்ஷ கேட்டதனால் அந்த முயற்சி தோல்வி கண்டது. இராஜபக்ஷ தனது பேரினவாத பிரச்சாரத்தை உக்கிரமாக்கினார்.

உத்தேச புதிய அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முதலிடத்தை அகற்றவும் நாட்டை பிளவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது என்றும், “போர் வீரர்கள்” என்றழைக்கப்படும் யுத்தத்தை வென்ற இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டி அவர் நாடு பூராவும் பிரச்சாரம் செய்கின்றார். கடவத்த நகரில் ஜனவரி 6 நடத்திய அத்தகைய ஒரு பொதுஜன முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “ஈழத்தை நோக்கி செல்கின்ற, நாட்டை இரண்டாகப் பிளக்கும் அரசியலமைப்புக்கு எதிரான ஒரு மக்கள் கருத்துக் கணிப்பாக உள்ளூரட்சி மன்ற தேர்தலைப் பயன்படுத்துமாறு“ இராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டார். “இந்த நாட்டை நேசிக்கும் அனைவரும், இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த நாட்டை காத்துக்கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

“இளைஞர்கள் உயிரைக் கொடுத்து காத்துக்கொண்ட நாடாக” அவர் கூறியது, இராணுவம் கொடூரமாக முன்னெடுத்த இனவாத போரை, புலிகளை தோற்கடித்து முடிவுக்கு கொண்டு வந்ததையே ஆகும். சிங்கள இனவாதத்தை கிளறிவிடுவதற்காக தன்னைப் போலவே சிங்கள இனவாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும். சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முதலிடம் கொடுக்கும், ஒடுக்குமுறை சட்டங்களை மேலும் பலப்படுத்தும் அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதாக பௌத்த கோவில்களுக்குச் சென்று சத்தியம் செய்து வருகின்ற சூழ்நிலையிலேயே அரசாங்கம் நாட்டைப் பிளவுபடுத்துவதாக இராஜபக்ஷ கதை கட்டுகின்றார்.

முதலாளித்துவ வர்க்கம் தாம் உக்கிரமான நெருக்கடியில் மூழ்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை பிளவுபடுத்தி தமது ஆட்சியை பாதுகாத்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம் இந்த நச்சுத்தனமான பிரச்சாரத்தை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றது. இராஜபக்ஷவின் பிரச்சாரத்தின் குறிக்கோள், வாழ்க்கை நிலைமகள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு தொடுக்கப்படும் தாக்குதல்கள் காரணமாக வளர்ச்சி கண்டுவரும் வெகுஜன எதிர்ப்பு, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக திரும்பாமல் அதை தடம்புரளச் செய்து, அதிகாரத்திற்கு வந்து தொழிலாள வர்க்கத்தை நசுக்கி, இனவாதத்தில் மூழ்கிப்போன கடும் வலதுசாரி இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கே ஆகும்.

தமது பிற்போக்கு ஸ்தாபகத்தையும் வரப்பிரசாதங்களையும் பாதுகாத்துக்கொள்வதில் அக்கறை காட்டும் பௌத்த பிக்குகள், முன்னாள் ஜனாதிபதியின் இந்தப் பிரச்சாரத்தை கிளறிவிடுவதற்கு அணிதிரண்டுள்ளனர். அதிதீவிரவாத தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவிதுறு ஹெல உறுமய, பொதுபல சேனா மற்றும் சிஹல ரவய போன்ற பாசிச குணாம்சம் கொண்ட அமைப்புகள் அவருக்கு ஆதரவளிக்கின்றன. முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் தயான் ஜயதிலக்க போன்றவர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவை முன்னணியில் வைத்துக்கொண்டு அமைத்துள்ள இனவாதிகளின் அமைப்பான கல்வியாளர்களின் மன்றம் எனப்படுவது, இராஜபக்ஷவை ஊதிப் பெரிதாக்குவதற்கு உருவாக்கிக்கொண்ட மற்றொரு அமைப்பாகும்.

விலைவாசி உயர்வு, வரி அதிகரிப்பு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் விற்கப்படுவது போன்றவை பற்றி இராஜபக்ஷ ஆற்றும் போலி-மக்கள் சார்பு பேச்சுக்கள், அவரது வலதுசாரி பிரச்சாரத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பது பொதுமக்கள் சம்பந்தமாக எந்தவொரு அனுதாபம் அல்லது அவை சம்பந்தமான எதிர்ப்பினால் அல்ல. 2005 முதல் 2014 கடைசி வரை இருந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை திட்டத்தை உறுதியாக அமுல்படுத்தியது.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தை தூண்டிவிட்டு முன்னெடுத்த இனவாத தூண்டுதலின் பிரதான இலக்கு, தொழிலாள வர்க்கத்தின் மீது நெருக்கடியின் சுமைகளைத் திணிப்பதே ஆகும். புலி "பயங்கரவாதிகளுக்கு" ஆதரவளிப்பதாக தொழிலாளர்களின் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய அவரது ஆட்சி, ஆட்சி கவிழும் வரை, இராணுவ-பொலிஸ் அடக்குமுறையை மேற்கொண்டு அவற்றை அடக்கி, சம்பளம் அதிகரிக்க விடாமல் பார்த்துக்கொண்டது. 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், இந்தத் தாக்குதல்கள் "பொருளாதாரப் போர்" என்ற பெயரின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.

அரசாங்கத்துக்கும் இராஜபக்ஷ தலைமைத்துவம் வகிக்கும் குழுவுக்கும் இடையில், தந்திரோபாய வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இராஜபக்ஷ ஆட்சியின் கீழ் சலுகை பெற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் சில பிரிவுகள், தாம் தற்போதைய ஆட்சியின் கீழ் ஓரங்கட்டப்பட்டுள்ளதனால், சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சம்பந்தமாக முணுமுணுத்துக்கொண்டிருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கட்டளைகளை நடைமுறைப்படுத்துவது அல்லது ஏகாதிபத்திய சக்திகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வது சம்பந்தாக அவர்களுக்கு இடையில் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது.

இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்பட்ட "நல்லாட்சி" பிரச்சாரத்தின் பின்னணியில் இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா தலையிட்டது. அது அவரது ஜனநயாக விரோத ஆட்சிக்கு எதிரான தலையீடு அல்ல. மாறாக வாஷிங்டன் சீனாவிற்கு எதிரான இராஜதந்திர மற்றும் இராணுவ தயாரிப்புகளை மேற்கொள்ளும் நிலையில், இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த உறவை முறித்து இலங்கையை மூலோபாய திட்டத்திற்குள் கொண்டு வருவதற்கான தலையீடே ஆகும்.

இராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தின் நெருக்கடி அம்பலத்துக்கு வரும் பல்வேறு விடயங்களைப் பற்றிக்கொண்டு, தான் ஆட்சியில் இருந்தபோது அத்தகைய நெருக்கடிகள் இருந்தது இல்லை என்று ஊடகங்களுக்கு அடுத்தடுத்து அறிக்கை விடுகின்றார். அதில் ஒன்று, தனது ஆட்சியின் போது கடன் நெருக்கடி ஏற்படவில்லை என்றும் திருப்பிச் செலுத்தும் திட்டத்துடனேயே கடன் பெற்றதாகவும் கூறி வெளியிட்டுள்ள அறிக்கையாகும்.

2005ல் அவரது அரசாங்கம் ஆரம்பித்த போது, இலங்கை வெளிநாட்டுக் கடன் 956 பில்லியன் ரூபாவாக இருந்தது. 2014ல் அவரது ஆட்சி முடிவுக்கு வந்த போது, அது 3113 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. சிறிசேன அரசாங்கத்தின் கீழ் 2016ம் ஆண்டின் இறுதியில் அது 4045 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. யுத்தத்துக்காக பிரமாண்டமானளவு நிதி செலவிடப்பட்டதுடன் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தமை உட்பட 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சியால் ஆழமடைந்துவரும் உலக நெருக்கடியின் விளைவே இலங்கை நெருக்கடியில் வெளிப்படுகின்றது. பிரமாண்டமான கடன் சுமையை மக்கள் மீது திணிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதையே இராஜபக்ஷவும் சிறிசேன-விக்ரமசிங்கவும் செய்தனர். எந்த முதலாளித்துவ ஆட்சியின் கீழும் இந்த உலக நெருக்கடியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள தாக்குதல்களை அமுல்படுத்துவது தவிர வேறு எந்த வேலைத்திட்டமும் இருக்க முடியாது.

தொழிற்சங்கங்களின் குழி பறிப்பு, நாசவேலை மற்றும் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறை இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களாக தலை தூக்கிய தொழிலாளர்களின் போராட்டங்கள், கிராமப்புற ஏழை மற்றும் மாணவர்களின் போராட்டம், தீவிரமான சமூக வெடிப்புக்கான நிலைமையைக் காட்டுகிறது. சமாளிக்க முடியாத பொருளாதார நெருக்கடி முதலாளித்துவ வர்க்கத்தின் தலையை மீறிச் சென்றுள்ளது.

எதேச்சதிகார ஆட்சி முறைக்கு மாறுவதன் மூலமே ஆளும் வர்க்கம் இதை எதிர்கொள்ளத் தயாராகின்றது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியின் பின்னால் இதற்கே தயாராகி வருகின்றது.

அரசாங்கத்தின் பலவீனத்தை கணக்கிடுவதன் மூலம் இராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவர முயலும் வலதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்பும் வேலைகள், சர்வாதிகார ஆட்சிக்கு தனது தகைமையை காட்சிப்படுத்தியவாறே முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் வளர்ந்துவரும் அரசியல் நெருக்கடியினுள் தலைநீட்டும் ஆபத்துக்களை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சித்திக்கும் தட்டினர் கவனத்தில் எடுக்கவேண்டியது அவசரத் தேவையாகும். பார்க்க: இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சிக்கன நடவடிக்கைக்கும் யுத்தத்துக்கும் எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரியுங்கள்! தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்காக போராடுவோம்!