ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK Labour leader Jeremy Corbyn slithers toward sellout

ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சித் தலைவரான ஜெர்மி கோர்பினின் உறுதியற்ற நிலைப்பாடு

By Chris Marsden
1 March 2018

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முகம்கொடுக்கின்ற அரசியல் நெருக்கடியின் ஆழமானது, தொழிற் கட்சித் தலைவரான ஜெர்மி கோர்பின் பிரெக்ஸிட் தொடர்பாக திங்களன்று வழங்கிய முக்கிய உரைக்கு பிரதான வணிக அமைப்புகள் பொதுவாக வரவேற்றிருக்கும் பதிலிறுப்பினால் எடுத்துக்காட்டப்படுகின்றது.

பிரதமர் தெரசா மே இன்னும் எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும் என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதன் மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுங்க ஒன்றியத்திற்கு (customs union) முனைவதற்கு கோர்பின் வாக்குறுதியளித்தமை, பழைமைவாத கன்சர்வேட்டிவ் கட்சியின் “கடும்-பிரெக்ஸிட்” (“hard-Brexit”) பிரிவின் மேலாதிக்கத்திற்கு எதிராக செயல்படுவதற்கு சந்தர்ப்பங்களை வழங்குவதாக பாராட்டப்பட்டது. இது ஒற்றை ஐரோப்பிய சந்தைக்கு, சுங்கவரி இல்லாத அணுகலை அனுமதிக்கின்ற ஒரு உடன்பாடு பேசித்தீர்க்கப்படுவதையும், ஒரு ஏற்கத்தக்க பிரெக்ஸிட் உடன்பாடு எட்டப்படுவதற்கான மேயின் முயற்சிகள் தோல்விகாணும் பட்சத்தில் பிரெக்ஸிட்டில் இருந்து பின்வாங்குவதையும் கூட இது சாத்தியமாக்கக் கூடும் என்பதாக நம்பப்படுகிறது.

கன்சர்வேட்டிவ்களை ஒரு “கூடுதல் உணர்திறனுடனான பிரெக்ஸிட்”டை பின்பற்றுவதற்கு தள்ளும் சாத்தியத்தை முன்நிறுத்தியதன் மூலம் “தேசிய நலனுக்கு” சேவையாற்றியதற்காக கோர்பினின் “சுங்க ஒன்றியம் குறித்த வரவேற்கத்தக்க திருப்பத்தினை” ஃபைனான்சியல் டைம்ஸ் பாராட்டியது.

“ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு நெருக்கமான பொருளாதார உறவை தொடர்வதன் மூலமாக வேலைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்களை பாதுகாப்பதை முக்கியமாக காட்டும்” ஒரு “சுங்க ஒன்றியத்தை நோக்கிய தொழிற் கட்சித் தலைவரின் உறுதிப்பாட்டை” பிரிட்டிஷ் தொழிற்துறை கூட்டமைப்பின் பொது இயக்குநரான கரோலின் ஃபேர்பேரன் பாராட்டினார். இயக்குநர்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மார்ட்டின் பேசுகையில், “சுங்க ஒன்றியத்தை தொடர்ச்சியாக ஆதரவளிப்பதை மேசையின் மீது வைக்கின்ற எதிர்க்கட்சியின் ஆலோசனை மொழிவைக் கேட்டு பல வணிகங்கள், குறிப்பாக உற்பத்தியாளர்கள், மகிழ்ச்சி கொள்வார்கள்” என்று சேர்த்துக் கொண்டார்.

இத்தகைய சக்திகளிடம் இருந்து கோர்பினுக்கு அளிக்கப்படும் வரவேற்பு, அவரது வேலைத்திட்டத்தின் வணிக-ஆதரவு மற்றும் தொழிலாள-வர்க்க விரோத தன்மை குறித்த ஒர் எச்சரிக்கையாகும். அவரது பேச்சை கவனமாக செவிமடுத்தால், ஆழமடைந்து செல்கின்ற டோரி நெருக்கடி ஒரு பொதுத் தேர்தலை துரிதப்படுத்தக் கூடிய நிலைமைகளின் கீழ், வருங்காலத்தின் எந்தவொரு தொழிற் கட்சி அரசாங்கமும் ஆற்றப் போகும் பாத்திரத்தைக் குறித்த ஒரு மதிப்பீட்டை வழங்குவதாக அது இருக்கிறது.

வலது-சாரி ஊடகங்கள் பிரெக்ஸிட் வாக்களிப்பை “காட்டிக்கொடுத்தமை”க்காக கோர்பின் மீது சுமத்தும் கண்டனங்கள் நிரம்பியதாக இருக்கின்றன. ஆயினும், கோர்பின் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டமானது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினாலும் விலகாவிட்டாலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு காட்டிக்கொடுப்பாகவே இருக்கிறது.

கோர்பினின் முக்கியமான அழைப்பானது, செயலிழந்து போயிருப்பதும் மற்றும் தமது குறுகிய சுயநலத்தால் பிரிட்டிஷ் மூலதனத்தை அதன் முக்கிய சர்வதேச சந்தையான ஐரோப்பாவில் இருந்து துண்டிக்கின்ற அபாயத்தை முன்நிறுத்துகிற துணிகர-நிதி மேலாளர்கள் மற்றும் ஊகவணிகர்களின் ஒரு அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற அதன் வலது-சாரி பகுதியிடம் கட்டுண்டு கிடப்பதும், ஆழமான பிளவு கண்டிருப்பதுமான கன்சர்வேடிவ் நிர்வாகத்திற்கான ஒரு சாத்தியமான மாற்றாக தொழிற் கட்சியை ஏற்றுக் கொள்வதற்கு ஆளும் வட்டாரங்களுக்கு விடுக்கப்பட்டதாக இருந்தது.

வணிக நலன்களுக்கு தொழிற் கட்சி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு என்பது ”ஏனைய முக்கிய பொருளாதாரங்களைவிட உற்பத்தித் திறன் அபாயகரமாகப் பின்தங்குகிற நிலையை” முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவது என்பதே பொருளாகும். மற்றும் நிதிநிலைப் பற்றாக்குறையை (வரவுக்கும் செலவுக்கும் இடையிலானது) முடிவுக்குக் கொண்டுவரத் தவறியமைக்காக டோரிக்களை விமர்சனம் செய்தார். இது “2015 இல் அகற்றப்படுவதாக இருந்தது, பின் 2016, பின் 2017, அதன்பின் 2020 முடிவிற்கு கொண்டுவரப்பட இலுப்பதாக கூறப்பட்டது. இப்போது 2025க்கு தள்ளப்பட்டு விட்டது”. கோர்பின் என்னதான் மாறாக சொன்னாலும், “பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவது” என்பதன் அர்த்தம் சிக்கன நடவடிக்கைகளும் சமூக வெட்டுகளும் ஆழப்படுத்தப்பட்டாக வேண்டும் என்பதாகும்.

பிரெக்ஸிட்டுக்கு தொழிற் கட்சி ஆதரவளிப்பதை கோர்பினின் பேச்சு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது, அதேநேரத்தில் ஒற்றை ஐரோப்பிய சந்தைக்கும் மற்றும் சுங்க ஒன்றியத்தில் உருவடிவம் கொடுக்கப்பட்டுள்ள சுங்கவரியற்ற வர்த்தகத்திற்குமான அணுகலைப் பாதுகாக்கிற ஒரு “நெருக்கமான” பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய (post-Brexit) உறவுக்கு முனைவதற்கும் அவர் வாக்குறுதியளித்தார். ஐக்கிய இராச்சியம் ”ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு சுங்க ஒன்றியத்திலும் மற்றும் ஒற்றை சந்தையிலும் தொடர” எதிர்பார்க்கின்ற ஒரு இடைமருவல் காலகட்டத்தின் பின்னர் “அதற்கென பிரத்தியேகமாய் முன்கூட்டி ஒதுக்கப்பட்டிருக்கின்ற, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்ற ஒரு உறவை” தொழிற்கட்சி விரும்பியது. பிரிட்டன் “நமது தேசிய நலன் அடிப்படையில் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தை நடத்த இயலுகின்ற” வழிவகையுடன் “ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தின் பயன்களை” தொடர்ந்து பெறுகின்ற ஒரு இறுதி ஒப்பந்தத்தை அது விரும்பியது.

தொழிற் கட்சியானது “வேலைகளுக்கும், உரிமைகளுக்கும் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்கும் நீடித்த சேதத்தை உண்டுபண்ணக் கூடிய எந்த டோரி உடன்பாட்டையும் ஆதரிக்காது”, அத்துடன் “இறுதி ஒப்பந்தத்தில் ஒரு அர்த்தமுள்ள வாக்களிப்பை நாடாளுமன்றத்திற்கு உத்தரவாதமளிக்கும்” என்று கூறியதன் மூலம் பிந்தையதொரு நாளில் பிரெக்ஸிட் பின்வாங்கப்படுவதற்கான சாத்தியத்திற்கான வாய்ப்பை அவர் திறந்து வைத்தார்.

இந்த அடிப்படையில், “சித்தாந்த கற்பனைக்காட்சிகளுக்கு மேலாக மக்களின் நலன்களை அமர்த்துவதற்கு தயாரிப்புடன் இருக்கின்ற அத்தனை கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு புதிய ஐக்கிய இராச்சிய சுங்க ஒன்றியத்திற்கான தெரிவை —இது வருங்கால வர்த்தக ஒப்பந்தங்களில் நமக்கு கருத்தை தெரிவிக்கும் உரிமையை வழங்கும்— ஆதரிப்பதில் எங்களுடன் இணைந்து கொள்வதற்கு” தேசிய ஐக்கியத்திற்கான ஒரு அசாதாரண விண்ணப்பம் செய்தார்.

இந்த முதலாளித்துவ-ஆதரவு முன்னோக்கானது, ஒரு புதிய நிதானப்பட்ட இலண்டன் மாநகரமும் மற்றும் பெருவணிகங்களும், குறைந்தபட்சம் வார்த்தையளவிலேனும், சற்று அதிகமான வரிவிதிப்பு, தேசிய சுகாதார சேவைக்கு கூடுதல் நிதியாதாரம் மற்றும் சமூக சமத்துவமின்மையைக் கையாளுவது ஆகியவற்றின் பலன்களை பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய பிரிட்டனுக்கான அத்தியாவசியத் திட்டநிரலாக ஏற்கின்ற பட்சத்தில், வர்க்கங்களுக்கிடையிலான ஒரு புதிய சமூக இணக்கத்தை தொழிற் கட்சி கொண்டுவர இயலும் என்பதான திட்டவட்டத்தை மையமாகக் கொண்டதாய் இருக்கிறது.

அவரது உரையின் பெரும் அம்சங்கள், 2016 கருத்துவாக்கெடுப்பு பிரச்சாரத்தின் சமயத்தில், தொழிற் கட்சியின் தொழிலாள-வர்க்க அடித்தளத்திற்கு விண்ணப்பம் செய்வது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பை ஒரு தேசியவாத திசையில் செலுத்துவது ஆகிய நோக்கங்களுடன் ஸ்ராலினிச பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியாலும் போலி-இடது குழுக்களாலும் முன்னெடுக்கப்பட்ட “இடது பிரெக்ஸிட்” வார்த்தைஜாலத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன.

ஸ்ராலினிசத்துடன் தொடர்புபட்டதான வர்க்கங்கள்-கலந்த, மக்கள் முன்னணி தேசியவாதம், மற்றும் அதன் தொழிற் கட்சியின் ஊடாக “சோசலிசத்துக்கான பிரிட்டிஷ் பாதை” ஆகியவற்றை கோர்பின் நீண்டகாலமாய் தழுவி வந்திருக்கிறார். 1980களில் ரோனி பென்னின் மாற்று பொருளாதார மூலோபாயத்தின் —ஐரோப்பிய ஒன்றிய கொள்கை விவகாரத்தில் அவரது முக்கியமான ஸ்ராலினிச ஆலோசகர்களான சீமஸ் மெல்ன் மற்றும் ஆண்ட்ரூ முர்ரே ஆகியோரால் இது மிகப்பெரும் கலப்படமான விதத்தில் முன்வைக்கப்படுகிறது— ஒரு ஆதரவாளராக அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. கோர்பினின் உரையை Morning Star “லெக்ஸிட் [Left Brexit இடது பிரெக்ஸிட்]” யதார்த்தமாகுதல் என்று கூறி பாராட்டியது, ”இது விடயத்தில் கோர்பின் அவரது நாடாளுமன்ற சகாக்கள் பலரை விடவும் பல வீதிகள் முன்னால் நிற்கிறார்” என்றது.

கோர்பின் முன்வைக்கும் சீர்திருத்தங்கள் உழைக்கும் மக்கள் முகம்கொடுக்கும் சமூகக் கொடும்நிலைகளின் மட்டத்திற்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு நீர்க்கஞ்சியாக இருக்கின்றன, ஆயினும் அதுவும் கூட அரசியல் முகப்பூச்சு மட்டுமே. பெருவணிகத்தின் நலன்களின் எந்த உண்மையான தாக்குதலுக்கும் அவசியமாயிருப்பது வர்க்கப் போராட்டமே அன்றி, வர்க்க சமரசம் அல்ல.

கோர்பின் விடுக்கும் தார்மீக விண்ணப்பத்திற்கான பதிலிறுப்பாக, இழிவான தனது செல்வத்தை விட்டுக்கொடுப்பதற்கான எந்த எண்ணமும் ஆளும் உயரடுக்கிற்கு இல்லை. ஃபைனான்சியல் டைம்ஸ் சுங்க ஒன்றியம் குறித்த கோர்பினின் நிலைப்பாட்டிற்காக அவரைப் பாராட்டினாலும் கூட, கோர்பின் “பாரிய தேசியமயமாக்கங்களை ஆதரிக்கிறார், அத்துடன் அதிகாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் பவுண்டின் வீழ்ச்சிநிலைக்கும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்” இவ்வாறாக, “பிரெக்ஸிட்டின் மோசமான பின்விளைவுகள் அத்தனையையும் காட்டிலும் ஒரு மிகப்பெரும் அபாயத்தை ஐக்கிய இராச்சியத்தின் வளர்ச்சி வாய்ப்புவளங்களுக்கு” முன்நிறுத்துகிறார் என்று எச்சரித்ததன் மூலம் ரூபர்ட் முர்டோக்கின் சன் போன்ற கடும் பிரெக்ஸிட் ஆதரவு ஊடகங்களுடன் தன்னை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது.

மிக அடிப்படையாக, சோவியத் ஒன்றியத்தின் பொறிவினால் மிகத் தீர்மானகரமாக ஊர்ஜிதம் செய்யப்பட்டதைப் போல, நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் அதிகரித்துச் செல்கின்ற வர்த்தக மற்றும் இராணுவ மோதல்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றதான ஒரு உலகளாவிய பொருளாதாரத்தில், தன்னிறைவு தேசிய சீர்திருத்தவாத பொருளாதாரக் கொள்கையின் எந்த வடிவத்தையும் பின்பற்றுவதற்கான எந்தவிதமான சாத்தியமும் கிடையாது. அப்படிச் செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் கூட, பிரிட்டனில் ஆளும் உயரடுக்கிடம் இருந்து மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்தும் பொருளாதார மற்றும் அரசியல் சதிவேலைகளது ஒரு நச்சுப் பிரச்சாரத்தை எதிர்கொள்ளும்.

கோர்பினின் ”லெக்ஸிட்” பதிப்பு பிரிட்டன் உலக சந்தையைச் சார்ந்திருக்கின்ற யதார்த்தத்தை அங்கீகரிக்கிறது, ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின் பார்வையில் இருந்து மட்டுமே அதனை இது செய்கிறது. ஒருதடவையும் கூட கோர்பின் ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை நோக்கிப் பேசியதே இல்லை. மாறாக, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரதான கருவியான ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய ஒரு நோக்குநிலையை “தொழிலாளர் இயக்கம் மற்றும் நமது நாட்டின் மிகச்சிறந்த சர்வதேசியவாத பாரம்பரியங்களின்” ஒரு வெளிப்பாடாக அவர் சித்தரிக்கிறார். ஐக்கிய இராச்சியத்தின் ஏற்றுமதியில் 44 சதவீதத்திற்கு இலக்கிடமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதே கோர்பினின் ஒரே கவலையாக இருக்கிறது.

ஒரு முக்கியமானதொரு பத்தியில், கோர்பின், ஒரு மினி கார் உற்பத்தியின் போது, எவ்வாறு மூன்றுமுறை கால்வாய் கடந்து பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்திலுமாக மூன்று இடத்திலும் உற்பத்திசெய்யப்படுகின்றது என்பதைக் குறித்து பேசினார். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேசிய தன்மையின் இந்த எடுத்துக்காட்டானது, “பிரிட்டனின் மிகவும் அடையாளப்பெருமையுடைய தயாரிப்புப்பொருட்களில் ஒன்று” எவ்வாறு “ஒரு இணைப்பு இடையூறற்ற, ஒன்றுடன் ஒன்று பிணைந்த விநியோகச் சங்கிலியை” நம்பியிருக்கிறது என்பதை மட்டுமே காட்டுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு ”நெருக்கமான” கூட்டணி, “நமது தொழிற்துறைப் பிரிவுகளை ஆதரிப்பதற்கும், தொழிலாளர்களையும் மற்றும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கும், அத்துடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்குமான” ஒரு வழிவகை என்று அவர் திட்டவட்டம் செய்தார்.

“ஊதியங்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இன்று குறைவாக இருக்கின்ற, எட்டு ஆண்டுகால பழமைவாத சிக்கன நடவடிக்கைகளின்” மற்றும் “உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை தளரச்செய்யும் ஒரு சுழல்வட்டத்திற்குள் நெருக்குகின்ற” அரசாங்கத்தின் பிரெக்ஸிட் திட்டநிரலின் துன்பகரமான பாதிப்புகளை கோர்பின் பட்டியலிட்டது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருப்பதான சான்றிதழை வழங்குவதாக இருந்தது.

ஆயினும், கடந்த தசாப்தத்தை ஊதியங்களிலும் வேலைநிலைமைகளிலும் பாரிய வெட்டுக்களைத் திணிப்பதில் செலவிட்டிருந்த அத்துடன் பொது சேவை வசதிகளின் மிகப் பெரும் பகுதிகளை அகற்றி விட்டிருந்த ஒரு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை குறித்து அவர் பேசிக் கொண்டிருந்தார்.

குறிப்பாக, ஒரு சிக்கன நடவடிக்கை-எதிர்ப்பு திட்டநிரலை முன்னெடுப்பதாக அவர் கூறிக் கொள்கின்ற நிலையில், சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவத்தைத் தொடர்வதற்கான விலையாக, சிக்கன நடவடிக்கைகளை நிராகரிப்பது என்ற  இதேபோன்ற வாக்குறுதிகளை எவ்வாறு காட்டிக் கொடுத்தது என்பதைக் குறித்த எந்தவிதமான குறிப்பையும் அவர் கூறவில்லை.

கோர்பின் இல்லையென்பது போல நாடகமாடினாலும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ”நிலவுகின்ற நிபந்தனைகளின் படி” இரண்டாண்டு கால இடைமருவல் உடன்பாடு என்பது சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வது என்றே அர்த்தமளிப்பதாகும். தொழிலாளர்களுக்கு அளித்த சிக்கன நடவடிக்கை எதிர்ப்பு வாக்குறுதிகள் மற்றும் பிரிட்டிஷ் மூலதனத்தின் தேவைகள் இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு தெரிவு எப்போது மேற்கொள்ளப்பட்டாலும், அதில் வெற்றி பெறப் போவது ஒன்று மட்டுமே என்பதை இது ஊர்ஜிதம் செய்வதாய் இருக்கிறது.

ஐரோப்பியக் கோட்டையுடன் தொடர்புடைய புலம்பெயர்-விரோதக் கொள்கைகளுக்கும் இதேபோன்றதொரு ஈனச்சாக்குப்போக்கு முன்வைக்கப்பட்டது.

உலகெங்கும் 65 மில்லியன் அகதிகள் “மோதலுக்கும், கொடுங்கோன்மைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், சமூக பொறிவுகளுக்கும் மற்றும் காலநிலைப் பேரிடர்களுக்கும் தப்பி” வரும் நிலைதான் உலகின் மூன்றாவது பெரிய வலித்துயரமாக கோர்பின் அடையாளம் கண்டார். ஆனால் “மக்களைக் கடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து” புலம்பெயர்வோரை ஆபிரிக்காவிலேயே சிக்கியிருக்க செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் செய்கின்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுதான் இதற்கான அவரது பதிலாக இருந்தது. மத்திய தரைக்கடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடல்பகுதி நடவடிக்கையான ஆபரேஷன் ஷோஃபியாவை (Operation Sophia) பாராட்டிய அவர், பிரிட்டனின் தேசிய கடற்படை “நிர்க்கதியான மக்கள்.... புகலிடத்திற்காய் ஏங்கி தத்தளித்து மூழ்குவதை” நிறுத்துவதற்கான ஒரு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறிக் கொண்டார்.

புலம்பெயர்வோர்-விரோத நடவடிக்கைகளுக்கான கோர்பினின் ஆதரவு, முழுக்க அவரது உள்நாட்டுக் கொள்கைகளுடன் பொருந்தி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரது ஆதரவு சமீபத்தில் வந்ததல்ல — 2016 இல் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆயினும் அங்கத்துவம் மீதான அவரது “ஐயுறவு”, ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் மோசமடைய செய்வதற்கு கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மலிவு உழைப்பை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழிவகையாக இதனைச் சித்தரித்த இடது Brexit பிரச்சாரகர்களின் புலம்பெயர்-விரோத வாதத்துடன் பிணைந்ததாக இருந்தது. கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர், கோர்பின் துணிச்சலாய் அறிவிக்கும் சுதந்திரம் பெற்றிருப்பதாக உணர்கிறார், “நமது குடியேற்ற முறை மாறும், இடம்பெயரும் சுதந்திரமானது, நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும்போது, ஒரு உண்மைப் பிரகடனமாக, முடிவுக்கு வந்துவிடும்.”

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளைப் பராமரிப்பதன் மீதான தனது வலியுறுத்தலுக்கு வலுவூட்டுவதற்காக, “அமெரிக்கா அல்லது சீனாவுடனான ஒப்பந்தங்கள்” ”ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நமது வர்த்தக அண்டை நாடுகளுடனான வர்த்தகத்திலான கணிசமான இழப்பை ஈடுசெய்யமுடியாது” என்கிறபோது “ஐரோப்பாவுடனான நமது வர்த்தக தொடர்புகளை பலவீனப்படுத்துவதில் மிக ஆர்வமாக இருப்பவர்களை” கோர்பின் இகழ்ந்துரைத்தார். ஐக்கிய இராச்சியத்தை “ட்ரம்ப்பின் அமெரிக்கா”வின் வரிசையில் நிறுத்துவதானது “மேலதிக தனியார்மயமாக்கங்களது ஒரு வெள்ளத்துக்கு கதவு திறந்து விடும்” அத்துடன் “பிரிட்டிஷ் மக்கள் குளோரின் ஏற்றப்பட்ட கோழிக்கறியை சாப்பிடும் நிலைக்கு” தள்ளும் என்று அவர் கூறினார்.

இத்தகையதொரு நிலைப்பாடு உணர்த்துவது என்ன? ஐரோப்பிய ஒருங்கிணைப்பு என்னும் பிரான்ஸ்-ஜேர்மன் திட்டத்திற்கு கோர்பின் மாற்றப்பட்டு விட்டிருக்கவில்லை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகள் பிரிட்டனின் தேசிய நலன்களுக்கு முரண்படும் இடங்களில் அவற்றை எதிர்க்கவிருப்பதை அவர் தெளிவாக்குகிறார். மாறாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒரு பிரதிநிதியாக, ஐரோப்பாவிலும் அதனைக் கடந்தும் எந்த வர்த்தக மற்றும் அரசியல் கூட்டணிகள், வளர்த்தெடுப்பதற்கு மிக அவசியமானவையாக இருக்கின்றன என்பதை அவர் ஏற்கனவே கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய கோட்பாடற்ற பரிசீலனைகள், “வேலையிடத்திலான இன்றியமையாத பாதுகாப்புகள் மற்றும் உரிமைகள் விடயத்தில் பாதாளத்தை நோக்கிய போட்டி”யைத் தூண்டுவதற்கு காரணமாவதாக அவர் குறைகூறுகின்ற அதே வர்த்தக மோதல்களுக்குள் மட்டுமே பிரிட்டிஷ் தொழிலாளர்களைத் தள்ளும். உலக மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்திய சக்திகளின் போட்டியானது நேட்டோ சக்திகள் அனைத்தும் ரஷ்யாவுடன் சீனாவுடனும் போரிடுகின்ற அபாயம் பெருகுவதை அதிகரித்திருக்கின்ற நிலைமைகளின் கீழ் அவர் இவ்வாறு செய்வதென்பது இன்னும் அபாயகரமானதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கோர்பினுக்கு ஆதரவு கிட்டுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று போரை எதிர்ப்பதாக காட்டிய அவரது வரலாறு ஆகும். ஆனால் அவரது உரையானது ”ஒருதலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை மற்றும் தலையீட்டை பயன்படுத்துவதற்கும்” மற்றும் வருங்காலத்திலான “ஆட்சி மாற்றப் போர்களுக்குமான” எதிர்ப்பை “ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டுழைப்பில்” தங்கியிருக்க செய்கின்றார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காட்டிலும் ஐரோப்பிய ஒன்றியம் ஓரளவு குறைந்த அளவு இராணுவவாதமுடையதாக இருப்பதான பிரமைகளின் மீது கோர்பின் தங்கியிருக்கிறார். ஆனால் ஜேர்மனியும், பிரான்சும் மற்ற பெரும் சக்திகளும் ஆயுதப் போட்டியில் வெறித்தனமாக ஈடுபட்டு வருவதோடு, உலக செல்வாக்கில் நேட்டோவுடன் போட்டி போடுவதற்காக ஒரு ஐரோப்பியப் படையையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அந்நாட்டின் இராணுவ நிதி ஒதுக்கீட்டில் திகைப்பூட்டும் 35 சதவீத அதிகரிப்பை அறிவித்திருப்பதோடு, கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்தார், சிரியா மீது குண்டுவீசுவதற்கும் மிரட்டினார். ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வெளியுறவு விவகார அமைச்சர் சிக்மார் காப்ரியேல், ஐரோப்பா “உலகெங்கிலும் இணைந்தவொரு சக்தியை திரட்டி முன்நிறுத்துவது” அவசியமாக இருக்கிறது, அது இராணுவ வழிவகை இல்லாமல் முடியாது, “ஏனென்றால் மாமிச உண்ணிகளின் ஒரு உலகத்தில் ஒரேயொரு சைவப் பிராணியாக, நமக்கு அது பெரும் கடினமான காரியமாக இருக்கும்” என்று அறிவித்தார்.

தொழிலாள வர்க்கமானது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தைத் தொடர்ந்து பராமரிப்பதை, அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவத்தை மீண்டும் தொடர்வதை மையமாகக் கொண்ட ஒரு “இடது பிரெக்ஸிட்” மூலமாக, ஒரு தேசியவாத அடிப்படையில் தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

2016 கருத்துவாக்கெடுப்பு பிரச்சாரத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும், அதிலிருந்து விலக வேண்டும் ஆகிய இரண்டு முகாம்களுமே முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளின் நலன்களையே முன்நிறுத்திக் கொண்டிருந்தன என்பதை எச்சரித்து, சோசலிச சமத்துவக் கட்சி, அந்த கருத்துவாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு அழைப்பு விடுத்தது. பொருளாதார மந்தம் மற்றும் இராணுவவாதமும் போரும் அதிகரித்துச் செல்வது ஆகிய நிலைமைகளின் கீழ் தனது ஐரோப்பிய மற்றும் சர்வதேசிய போட்டியாளர்களுக்கு எதிராய் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நலன்களை எவ்வாறு சிறந்த வகையில் பாதுகாக்கலாம் என்பதிலேயே அந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பேதங்கள் அமைந்திருந்தன.

தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளில் இருந்தும் அரசியல் சுயாதீனத்தை பராமரிக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது, வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாத்தும் இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராகவும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கு ஆதரவாகவும் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டத்தை முன்வைத்தது. அந்த அழைப்பு, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருக்கின்ற எமது தோழர்கள் மற்றும் சக-சிந்தனையாளர்களின் தலைமையின் கீழ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுமையிலும் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக மீண்டும் ஆயுதபாணியாவதற்கும் மறுநோக்குநிலை பெறுவதற்குமான அடிப்படையை அமைத்துத் தந்தது.