ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

For Committees of Action _ Not the People’s Front

மக்கள் முன்னணி வேண்டாம் - நடவடிக்கை குழுக்களுக்காக போராடுவோம்

November 26, 1935
By Leon Trotsky

“மக்கள் முன்னணி” (People's Front) என்பது, ரடிக்கல் கட்சி மற்றும் அதேவகையிலான சிறிய பயனற்ற கட்சிகளின் வடிவத்தில், ஏகாதிபத்திய முதலாளித்துவத்துடன் பாட்டாளி வர்க்கம் கூட்டணி சேர்வதைக் குறித்து நிற்கிறது. இந்தக் கூட்டணி நாடாளுமன்ற வட்டங்களுக்கும் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலான வட்டங்களுக்கும் இரண்டுக்குமாய் விரிவு காண்கிறது. இரண்டு வட்டங்களிலுமே ரடிக்கல் கட்சியானது தனக்கு மட்டும் முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை பாதுகாத்து வைத்துக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாட்டு சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை முரட்டுத்தனமாய் திணிக்கிறது.

ரடிக்கல் கட்சியே கூட சிதைவுக்கு ஆட்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதன் ஆதரவாளர்கள் அதிலிருந்து விலகி வலதுக்கும் இடதுக்கும் சாரிசாரியாய் செல்வதற்கான கூடுதல் சான்றினை ஒவ்வொரு புதிய தேர்தலும் வழங்குகின்றது. இன்னொரு பக்கத்திலோ, ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி இல்லாததால் சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வலிமையாக வளர்ந்து வருகின்றன. குட்டிமுதலாளி வர்க்கம் உட்பட உழைக்கும் மக்களின் பொதுவான போக்கு, இடது நோக்கி இருப்பது மிகத் தெளிவாய் இருக்கிறது. அதேபோல் தொழிலாளர்களது கட்சிகளின் தலைவர்களது நோக்குநிலையும் வலது நோக்கி என்பதை, பார்த்தாலே புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கிறது. வெகுஜனங்கள் தங்களது வாக்குகளின் மூலமும், போராட்டத்தின் மூலமும், ரடிக்கல் கட்சியை விரட்டியடிக்கத் தலைப்படும் சமயத்தில், ஐக்கிய முன்னணியின் (United Front) தலைவர்களோ, அதற்கு நேரெதிராய், அதனைக் காப்பாற்ற பிரயத்தனப்படுகின்றனர். ஒரு “சோசலிச” வேலைத்திட்ட அடிப்படையின் மீது பரந்துபட்ட தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அந்த நம்பிக்கையின் பெருவாரியான பகுதியினை, அந்த பரந்துபட்ட தொழிலாளர்கள் முற்றுமுதலாய் கொஞ்சம் கூட நம்பிக்கை வைக்காத ரடிக்கல் கட்சியிடம் மனமுவந்து ஒப்படைக்க இந்த தொழிலாளர் கட்சிகளின் தலைவர்கள் சென்றார்கள்.

“மக்கள் முன்னணி” அதன் இப்போதைய வேடத்தில் தொழிலாளர் ஜனநாயகத்தை மட்டுமல்லாது உத்தியோகபூர்வ அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தையும் கூட வெட்கமின்றி காலால் மிதித்துக் கொண்டிருக்கிறது. ரடிக்கல் கட்சி வாக்காளர்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களின் போராட்டத்தில், எனவே மக்கள் முன்னணியில், பங்கேற்பதில்லை. அப்படியிருந்தும் ரடிக்கல் கட்சியானது இந்த முன்னணியில் சமமான இடத்தை மட்டுமன்றி சிறப்புரிமையான ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறது; தொழிலாளர்களது கட்சிகள் தங்களது செயல்பாட்டை, ரடிக்கல் கட்சியின் வேலைத்திட்ட மட்டத்திற்கு கட்டுப்படுத்திக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த சிந்தனை l’Humanité சிடுமூஞ்சிகளால் மிகவும் உரத்த குரலில் முன்னெடுக்கப்படுகிறது.

மக்கள் முன்னணியில் ரடிக்கல் கட்சியினர் பெற்றிருக்கும் சிறப்புரிமையான இடத்தை சமீபத்திய செனட் தேர்தல்கள் சிறப்பான தெளிவுடன் வெளிச்சமிட்டுள்ளன. தொழிலாளர்களின் வசத்தில் இருந்த பல தொகுதிகளையும் பாட்டாளி-வர்க்கமல்லாத கட்சிகளுக்கு சாதகமாக தாங்கள் விட்டுக் கொடுத்ததான உண்மையை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பகிரங்கமாய் பெருமையடித்துக் கொண்டனர். சொத்துக்கான தகுதியை முதலாளித்துவ வர்க்கத்திற்கு சாதகமாக, ஐக்கிய முன்னணி பகுதியாக மறுஸ்தாபகம் செய்தது என்பதுதான் இதன் எளிமையான அர்த்தம் ஆகும்.

நேரடியான மற்றும் உடனடியான போராட்டத்திற்கான ஒரு அமைப்பாகத்தான் “முன்னணி” என்பது அது சிந்திக்கப்பட்டபோது இருந்தது. போராட்டப் பிரச்சினை என வருகையில், ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளித்துவ வர்க்கத்தின் பத்து பேருக்கு, அவர்கள் மக்கள் முன்னணியுடன் ஒட்டியிருப்பவர்களாயிருந்தாலும், சமம். முன்னணியின் புரட்சிகரப் போராட்ட வலிமையின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், தேர்தல் ரீதியான சிறப்புரிமைகள் எல்லாம் தொழிலாளர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே அன்றி ரடிக்கல் கட்சியைச் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு அல்ல. ஆனால் சாரத்தில், சிறப்புரிமைகள் என்பதற்கே இங்கு இடமில்லை. மக்கள் முன்னணி ”ஜனநாயக”த்தைப் பாதுகாப்பதற்கு நோக்கம் கொண்டிருக்கிறதா? அப்படியானால் அது தன் சொந்த படிநிலைகளில் அதனை செயலுறுத்துவதில் இருந்து தொடங்கட்டும். அதன் அர்த்தம் என்னவெனில், மக்கள் முன்னணியின் தலைமையானது போராடும் வெகுஜனங்களின் விருப்பத்தின் நேரடியான மற்றும் உடனடியான பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.

எவ்வாறு? வெகு எளிது: தேர்தல்கள் மூலமாக. பாசிசத்திற்கு, லவாலின் போனபார்டிச ஆட்சிக்கு, ஏகாதிபத்தியவாதிகளின் போர் சதிக்கு, மற்றும் ஒடுக்குமுறை மற்றும் வன்முறையின் அனைத்து பிற வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தில் உடன்நின்று போராடுவதற்கான உரிமையை பாட்டாளி வர்க்கம் யாருக்கும் மறுக்கவில்லை. வர்க்க-நனவுள்ள தொழிலாளர்கள் தமது கூட்டாளிகளாக இருப்பவர்களிடம் அல்லது இருக்கத்தக்கவர்களிடம் வைக்கின்ற ஒரே கோரிக்கை என்னவென்றால் அவர்கள் செயலில் இறங்கிப் போராட வேண்டும் என்பதுதான். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் போராட்டத்தில் உண்மையாக பங்கேற்றிருக்கின்ற அத்துடன் பொதுப்பட்ட ஒழுங்கிற்கு ஆட்பட தயாராய் இருக்கின்ற மக்களின் ஒவ்வொரு குழுவும் மக்கள் முன்னணியின் தலைமையில் செல்வாக்கு செலுத்துவதற்கு சம உரிமை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு நகரம், மாவட்டம், தொழிற்சாலை, படைவீடு மற்றும் கிராமத்தில் ஒரு சமயத்தில் மக்கள் முன்னணிக்கு ஆதரவாக இருப்பவர்களில் இருந்து ஒவ்வொரு இருநூறு, ஐநூறு அல்லது ஆயிரம் பேரும் போராட்ட நடவடிக்கைகளின் சமயத்தில் பிராந்திய நடவடிக்கைக் குழுவிற்கான தங்களது பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் அதன் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டவர்களாவர். கம்யூனிச அகிலத்தின் கடைசி காங்கிரஸ், டிமிட்ரோவ் அறிக்கை மீதான தனது தீர்மானத்தில், தேர்ந்தெடுக்கப்படுகின்ற நடவடிக்கை குழுக்கள் மக்கள் முன்னணிக்கான வெகுஜன ஆதரவைக் காட்டுகின்றன என்று கூறி, அந்தக் குழுக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது. உண்மையில் அந்த மொத்த தீர்மானத்திலும் இருந்த ஒரே முற்போக்கான சிந்தனை இது மட்டும் தான். ஆனால் துல்லியமாக அக்காரணத்தினாலேயே ஸ்ராலினிஸ்டுகள் அதனை நடைமுறைப்படுத்த எதனையும் செய்வதில்லை. முதலாளித்துவத்துடன் கூட்டு முறிந்து போகும் அச்சத்தில் எதனையும் அவர்கள் செய்வதற்குத் துணியவில்லை.

நிச்சயமாக, குழுக்களின் தேர்தல்களில் தொழிலாளர்கள் மட்டுமன்றி அரசு ஊழியர்கள், நிர்வாகிகள், முன்னாள் படைவீரர்கள், கலைஞர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு விவசாயிகளும் கூட பங்கேற்க இயலும். இவ்வாறாக குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டப் பணிகளுடன் நெருக்கமான இசைவில் நடவடிக்கை குழுக்கள் செயல்படுகின்றன. ஆனால் அவை தொழிலாளர் அதிகாரத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலிருக்கும் கூட்டை சிக்கலின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன. இதனிடையே, மக்கள் முன்னணி அதன் இப்போதைய வடிவத்தில், பாட்டாளி வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுரண்டுவோருக்கும் (சீர்திருத்தவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகள்) குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல்ரீதியாக சுரண்டுவோருக்கும் (ரடிக்கல் கட்சியினர்) இடையேயான வர்க்க ஒத்துழைப்புக்கான அமைப்பாக இருக்கிறதே அன்றி அதைத் தாண்டி எதுவுமில்லை. நடவடிக்கைக் குழுக்கள் உண்மையான வெகுஜன தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுவதானது முதலாளித்துவ இடைத்தரகர்களை (ரடிக்கல் கட்சியினர்) மக்கள் முன்னணியின் பொறுப்புகளில் இருந்து தானாகவே வெளியேற்றி விடும், இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து உத்தரவிடப்படும் கிரிமினல் கொள்கை சுக்குநூறாய் நொருக்கப்பட்டு விடும்.

ஆயினும், ஒரு நிர்ணயித்த தினத்தில் நேரத்தில் அனைத்து பாட்டாளி வர்க்க மற்றும் குட்டிமுதலாளித்துவ வெகுஜனங்களையும் அழைத்து, கொடுக்கப்பட்ட ஒரு சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கைக் குழுக்களைத் தேர்வு செய்வது சாத்தியம் என்று நினைத்தால் அது பிழையாகி விடும். இத்தகையதொரு அணுகுமுறை முழுக்க அதிகாரத்துவவயப்பட்டதாய் இருக்கும் என்பதோடு அதனாலேயே எவ்வித பலனுமற்றதாகிப் போய்விடும். தொழிலாளர்கள் தாங்களே நடவடிக்கைகளின் ஒரு பகுதியில் பங்கேற்று புரட்சிகரத் தலைமையின் அவசியத்தை உணரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்களால் நடவடிக்கை குழுவினைத் தேர்வு செய்ய முடியும். இங்கே முன்நிற்கும் பிரச்சினை, அனைத்து மற்றும் ஒவ்வொரு மக்களது உத்தியோகபூர்வ ஜனநாயக பிரதிநிதித்துவமும் இருக்கிறதா என்பதல்ல மாறாக போராடும் வெகுஜனங்களின் புரட்சிகரப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதுதான். நடவடிக்கை குழு என்பது போராட்டத்திற்கான ஒரு எந்திரம். நடவடிக்கை குழு உருவாக்கத்தை நோக்கி உழைப்பவர்களின் எந்த அடுக்கு ஈர்க்கப்படும் என்பதை முன்னரே ஊகித்துக் கொண்டிருப்பது அர்த்தமில்லாதது: போராடும் வெகுஜனங்களிலான பிரிப்புக் கோடுகள் போராட்டத்தின் போக்கிலேயே ஸ்தாபிக்கப் பெறும்.

பிரான்சில் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், வெகுஜனங்களின் புரட்சிகர ஆற்றல் எல்லாம், துலோன், பிரெஸ்ட், மற்றும் லிமோஜ் போன்ற தனிமைப்பட்ட வெடிப்புகளாக விரயப்படுத்தப்பட்டு, உத்வேகம்குறைகின்ற நிலைக்கு பாதை வகுத்து விடும். இப்போதைய சூழ்நிலையில் மக்கள் முன்னணி அரசாங்கத்திடம் இருந்து மேலிருந்தான ஆசி தங்களுக்குக் கிட்டும்வரை வெகுஜனங்களை அணிதிரட்டாமலே வைத்திருப்பது என்பது சாத்தியமே என்று சிந்திப்பது நனவுடன் துரோகம் செய்பவர்களாலோ அல்லது மண்டையில் களிமண் கொண்ட நம்பிக்கையற்றவர்களாலோ தான் இயலும். இப்போதைய சூழ்நிலையில் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், வீதி மோதல்கள், நேரடிக் கிளர்ச்சிகள் ஆகியவை முழுக்க முழுக்க தவிர்க்கவியலாதவை ஆகும். பாட்டாளி வர்க்கக் கட்சியின் பணி இந்த இயக்கங்களை தடுப்பதோ அல்லது முடக்குவதோ அல்ல மாறாக அவற்றை ஒன்றிணைப்பதும் சாத்தியமான மிகப்பெரும் சக்தியை அவற்றில் உள்ளிடுவதுமே ஆகும்.

எல்லாவற்றுக்கும் மேல் சீர்திருத்தவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் ரடிக்கல் கட்சியினரை பயமுறுத்தக் கூடாது என்று அஞ்சுகின்றனர். ஐக்கிய முன்னணி எந்திரம் வெகுஜனங்களின் ஆங்காங்கான இயக்கங்களின் விடயத்தில் ஒழுங்கமைவுக் குலைப்பாளரின் பாத்திரத்தை நன்கு நனவுடனே ஆற்றுகிறது. இந்த எந்திரத்தின் மீது வெகுஜனங்கள் காறி உமிழாமல் காப்பதற்கே மார்சோ பிவேர் வகை “இடதுகள்” சேவை செய்கின்றனர். போராடும் வெகுஜனங்களுக்கு, இத்தருணத்திற்குரிய அவசியப்பாடுகளை பூர்த்தி செய்கின்ற ஒரு எந்திரத்தை போராட்ட நிகழ்ச்சிப்போக்கிலேயே உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம் மட்டுமே இந்த சூழ்நிலை காப்பாற்றப்பட முடியும். சரியாக இந்த தேவையையே நடவடிக்கை குழுக்கள் நோக்கமாக கொண்டுள்ளன. துலோன் மற்றும் பிரெஸ்ட் போராட்ட சமயத்தில், தொழிலாளர்களுக்கு ஒரு பிராந்திய போராடும் அமைப்பை உருவாக்குவதற்கு அழைப்பு விடப்பட்டிருந்தால் அவர்கள் எந்த தயக்கமும் இன்றி அதனை உருவாக்கியிருப்பார்கள். லிமோஜில் குருதிகொட்டும் தாக்குதல் நடந்த அடுத்த நாளிலேயே, தொழிலாளர்களும் குட்டிமுதலாளித்துவத்தின் ஒரு கணிசமான பகுதியும் இந்த குருதி கொட்டிய நிகழ்வுகளை விசாரணை செய்யவும் வருங்காலத்தில் அவை நடைபெறாமல் தடுக்கவும் ஒரு தேர்ந்தெடுத்த குழுவை உருவாக்குவதற்கு தாங்கள் தயாராய் இருப்பதை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த ஆண்டு கோடையில் இராணுவத்தினர் வசிப்பிடங்களில் இராணுவ சேவைக்கால நீட்டிப்பை எதிர்த்து நடந்த இயக்கத்தின் போது இத்தகையதொரு பாதை ஆலோசிக்கப்பட்டிருந்தால் இராணுவத்தினர் எந்த இழுபறியும் இன்றி பட்டாலியன், ரெஜிமெண்ட், மற்றும் காரிசன் நடவடிக்கைக் குழுக்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள். அநேக சந்தர்ப்பங்களில் பிராந்திய அளவிலும் சில சமயங்களில் தேசிய அளவிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் ஒவ்வொரு படியிலும் எழுகின்றன, தொடர்ந்து எழும். இந்த வகையான சந்தர்ப்பம் ஒன்றினைக் கூட தவற விடுவதை தவிர்ப்பதுதான் நமது பணியாகும். கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரங்களின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே சாதனமாக நடவடிக்கை குழுவின் முக்கியத்துவத்தை தெளிவாய் புரிந்து வைத்திருப்பதுதான் இதற்கான முதல் நிபந்தனை ஆகும்.

அப்படியானால் நடவடிக்கை குழுக்கள் என்பவை கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான பிரதியீடுகள் என்று கூறுவதுதான் இதன் அர்த்தமா? இந்த வகையில் கேள்வியை வைப்பதே மடத்தனமானது. வெகுஜனங்கள் தங்கள் அனைத்து சிந்தனைகள், பாரம்பரியங்கள், குழுவாக்கங்கள் மற்றும் அமைப்புகளுடனும் தான் போராட்டத்திற்குள் நுழைகிறார்கள். கட்சிகள் தொடர்ந்து இருக்கும் போராடும். நடவடிக்கை குழுக்களின் தேர்தல்களின் போது ஒவ்வொரு கட்சியும் இயல்பாகவே தங்களது சொந்த ஆதரவாளர்களை தேர்வு செய்யவே தலைப்படும். ஒரு பெரும்பான்மையின் மூலமாக நடவடிக்கை குழுக்கள் முடிவுகளை எடுக்கும் (கட்சி மற்றும் கன்னை குழுவாக்கங்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில்). கட்சிகளைப் பொறுத்தவரை, நடவடிக்கை குழுக்களை ஒரு புரட்சிகரப் பாராளுமன்றம் என்று அழைக்கலாம்: கட்சிகள் விலக்கி வைக்கப்படுவதில்லை -அதற்கு நேரெதிராய் அவை அவசியமான வகையில் முன்னெதிர்பார்க்கப்படுகின்றன- அதேசமயத்தில் அவை நடவடிக்கைகளில் சோதிக்கப்படுகின்றன, அத்துடன் வெகுஜனங்கள் இற்றுப் போன கட்சிகளின் செல்வாக்கில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கற்றுக் கொள்கிறார்கள்.

அப்படியானால், நடவடிக்கைக் குழுக்கள் என்பவை வெறுமனே சோவியத்துகள் தான் என்று அர்த்தமா? குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் நடவடிக்கைக் குழுக்கள் தங்களை சோவியத்துகளாக உருமாற்றிக் கொள்ள முடியும். ஆயினும், நடவடிக்கைக் குழுக்களை இந்தப் பெயரில் அழைப்பது பிழையாகி விடும். இன்று, 1935ல், சோவியத்துக்கள் என்ற வார்த்தையுடன் ஏற்கனவே கைப்பற்றியிருக்கும் அதிகாரம் குறித்த கருத்தாக்கத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவே வெகுஜனங்கள் பழக்கப்பட்டுள்ளனர்; ஆனால் இன்றைய பிரான்ஸ் இதிலிருந்து கணிசமாய் அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. ரஷ்ய சோவியத்துகள் தங்களது ஆரம்ப கட்டங்களில் அவை பின்னாளில் ஆனதில் சிறிதளவும் கூட இருக்கவில்லை, அந்த நாட்களில் அவை பெரும்பாலும் தொழிலாளர்கள் குழுக்கள் அல்லது வேலைநிறுத்தக் குழுக்கள் என்ற மத்தியமான பெயரில் தான் அழைக்கப்பட்டன. பிரான்சின் உழைக்கும் மக்களை ஒரு தற்காப்பு போராட்டத்தில் ஒன்றுபடுத்துவதும் இதன்மூலம் எதிர்வரும் தாக்குதல்களில் தங்களது சொந்த ஆற்றல் குறித்த நனவை அவர்களுக்கு புகட்டுவதும் இப்போதைய கட்டத்தில் நடவடிக்கை குழுக்கள் கொண்டுள்ள கடமைகளாகும். உண்மையான சோவியத்துகளின் புள்ளி வரை விடயங்கள் செல்லுமா என்பது, பிரான்சில் நிலவும் தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலை, இறுதியான புரட்சிகர முடிவுகளாய் கட்டவிழுமா என்பதைப் பொறுத்தது. இது நிச்சயமாக புரட்சிகர முன்னணிப்படையின் விருப்பத்தை மட்டும் சார்ந்ததல்ல மாறாக ஏராளமான புற நிலைமைகளையும் சார்ந்தது; எப்படியாயினும், இன்று மக்கள்’ முன்னணி என்ற முட்டுக்கட்டைக்கு முகம்கொடுத்து நிற்கின்ற வெகுஜன இயக்கமானது நடவடிக்கைக் குழுக்கள் இன்றி முன்னால் செல்ல முடியாது.

தொழிலாளர் போர்ப்படையை உருவாக்குவது, தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குவது, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்வது ஆகிய பணிகள் எல்லாம், போராடும் வெகுஜனங்கள் தமது அதிகாரம் படைத்த அங்கங்களின் மூலம் தாங்களாகவே இந்த வேலைகளை எடுத்துச் செய்யவில்லை என்றால் வெறும் காகிதத்தில் மட்டும் தான் இருந்து கொண்டிருக்கும். போராட்டத்தில் பிறக்கின்ற நடவடிக்கை குழுக்கள் மட்டுமே போராளிகளை ஆயிரக்கணக்கில் இன்றி பத்தாயிரக்கணக்கில் கொண்ட ஒரு உண்மையான போர்ப்படையை  உறுதியளிக்க முடியும். நாட்டின் மிக முக்கியமான மையங்களைத் தழுவி அமைந்திருக்கும் நடவடிக்கைக் குழுக்கள் மட்டுமே போராட்டத்தின் இன்னும் தீர்மானகரமான வழிமுறைகளுக்கு உருமாறுவதற்கான தருணத்தை தெரிவுசெய்ய முடியும், அப்போராட்டத்தின் தலைமை நியாயமான வகையில் அவற்றினுடையதாக அமைந்திருக்கும்.

மேலே வரையப்பட்ட முன்மொழிவுகளில் இருந்து, பிரான்சில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகரவாதிகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கான ஏராளமான முடிவுகள் பிறக்கின்றன. முதன்மையான முடிவு Gauche Révolutionnaire [புரட்சிகர இடது] என்று அழைக்கப்படும் ஒன்றின் விடயத்தையும் தொடுகிறது. இந்தக் குழுவாக்கம், புரட்சிகர வெகுஜனங்களின் இயக்கத்தை ஆளும் நியதிகளை கொஞ்சம் கூட புரிந்துகொண்டிராத தன்மையை குணாதிசயமாகக் கொண்டது. மத்தியவாதிகள் எவ்வளவு தான் “வெகுஜனங்கள்” குறித்துப் பிதற்றினாலும், அவர்கள் எப்போதும் சீர்திருத்த எந்திரத்தை நோக்கியே தங்களை நோக்குநிலை அமைத்துக் கொள்கின்றனர். மார்சோ பிவேர் ஏதேனும் ஒரு புரட்சிகர முழக்கத்தை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு, அதனை “அமைப்பு ஒற்றுமை” என்னும் அருவமான கோட்பாட்டிற்கு அடிபணியச் செய்கிறார், அது நடைமுறையில் புரட்சிகரவாதிகளுக்கு எதிராக தேசப்பற்றுவாதிகளுடன் ஒற்றுமை என்பதாகத் திரும்புகிறது. ஒன்றுபட்ட சமூக-தேசப்பற்று எந்திரங்களின் எதிர்ப்பை நொருக்குவதென்பது வெகுஜனங்களுக்கு வாழ்வா சாவா என்ற கேள்வியாக வந்து நிற்கின்ற அந்த சரியான தருணத்தில், இடது மத்தியவாதிகளோ, புரட்சிகரப் போராட்டத்தின் நலன்களுக்கும் மேலான முற்றுமுதலான ஒரு “நன்மை”யாக இந்த எந்திரங்களின் ”ஒற்றுமை”யைக் கருதுகின்றனர்.

சமூக தேசப்பற்றுவாதிகளின் துரோகத் தலைமையில் இருந்து வெகுஜனங்களை விடுவிக்கும் அவசியத்தை முற்றுமுழுதாக புரிந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே நடவடிக்கை குழுக்கள் கட்டப்படுவதாக இருக்கும். அவ்வாறிருக்க, பிவேர் சிரோம்ஸ்கியை பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் புளூமைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், அவரோ தோரஸுடன் சேர்த்து ஏரியோவை பிடித்துக் கொண்டிருக்கிறார், அவர் லவாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். பிவேர், மக்கள் முன்னணியின் அமைப்புமுறைக்குள் நுழைகிறார் (சென்ற தேசியக் குழு கூட்டத்தில் புளூமின் அவமானகரமான தீர்மானத்திற்கு ஆதரவாய் அவர் வாக்களித்தார் என்றால் காரணமில்லாமல் இல்லை), மக்கள் முன்னணி லவாலின் போனபார்டிச ஆட்சிக்குள் ஒரு பிரிவாய் நுழைகிறது. போனபார்டிச ஆட்சியின் வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது. எதிர்வரும் தீர்மானகரமான காலகட்டம் மொத்தத்தின் பாதையிலும் மக்கள் முன்னணியின் தலைமையானது (ஏரியோ- புளூம் - கஷான் – தோரஸ் – சிரோம்ஸ்கி - பிவேர்) தனது பாதத்தை ஊன்றி தொடர்ந்து நிற்பதில் வெற்றிபெறுமானால், அப்போது போனபார்டிச ஆட்சியானது தவிர்க்கவியலாமல் பாசிச ஆட்சிக்கு வழிவிடும். நடப்பில் உள்ள தலைமையின் கலைப்புத்தான், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான நிபந்தனையாகும். இந்த நிலைமைகளில் “ஐக்கியம்” என்ற முழக்கம் முட்டாள்தனம் மட்டுமல்ல ஒரு குற்றமும் கூட. பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச சங்கத்தின் முகவர்களுடன் எந்த ஐக்கியமும் கிடையாது. திட்டமிட்டு துரோகமிழைக்கும் அவர்களது தலைமைக்கு எதிராக புரட்சிகரமான நடவடிக்கை குழுக்களை முன்நிறுத்துவது அவசியமாகும். மார்சோ பிவேர் ஐ தலைமையில் கொண்டு Gauche Révolutionnaire என்று அழைக்கப்படுவதானதின் எதிர்ப்புரட்சிகர கொள்கைகளை தாட்சண்யமின்றி அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டும்தான் இந்த குழுக்களை கட்டுவது சாத்தியமாக முடியும். இந்த விடயத்தில் நம்முடைய பொறுப்பாளர்களிடையே பிரமைகள் அல்லது சந்தேகங்களுக்கு நிச்சயமாக எந்த இடமும் இல்லை.