ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Middle East teeters on brink of region-wide war after US withdrawal from Iran deal

ஈரான் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா பின்வாங்கிய பின்னர், மத்திய கிழக்கு பிராந்தியந்தழுவிய போரின் விளிம்பில் தள்ளாடி கொண்டிருக்கிறது

By Jordan Shilton
10 May 2018

ஈரானிய அணு உடன்படிக்கையிலிருந்து விலகுவதென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்கிழமை எடுத்த முடிவு, விரைவிலேயே பிராந்திய சக்திகளை உள்ளீர்க்கக்கூடிய ஒரு பேரழிவுகரமான பிராந்திய மோதலின் விளிம்புக்கு மத்திய கிழக்கை தள்ளியுள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பு வந்து ஒரு சில நிமிடங்களில், இஸ்ரேலிய போர் விமானங்கள் டமாஸ்கஸிற்கு நெருக்கமான ஓர் அரசாங்க தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த சிரிய வான் எல்லையை மீறின. இந்த தாக்குதல்களில், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு ஆதரவாக அந்நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய இராணுவத்தினரில் குறைந்தபட்சம் ஏழு பேர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய குண்டுகள் கோலன் குன்றுகளிலிருந்து சிரிய இராணுவ நிலைகள் மீது வீசப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், நிலைமை புதனன்று இரவு இன்னும் அதிகமாக தீவிரமடைந்தது. வடக்கில் இருந்து ராக்கெட் சைரன் ஒலியும், குண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டது. கோலன் பிராந்திய கவுன்சில் தகவல்படி, ராக்கெட் தாக்குதலில் அப்பிராந்தியத்தின் பல நகரங்கள் இலக்கில் வைக்கப்பட்டிருந்தன.

கோலனில் உள்ள இஸ்ரேலிய இராணுவ எல்லைச் சாவடிகளில் 20 ராக்கெட் வீசியதாக ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் படையினரைக் குற்றஞ்சாட்டி, இஸ்ரேலிய இராணுவம் வியாழனன்று அதிகாலை ஓர் அறிக்கை வெளியிட்டது. ஏவப்பட்ட பல ஏவுகணைகளை இடைமறித்து விட்டதாகவும், எந்த காயமும் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

சிரிய அரசு செய்தி நிறுவனம் SANA இன் தகவல்படி, குற்றஞ்சாட்டப்பட்ட ஈரானிய தாக்குதல் என்பதற்கு அடுத்து உடனடியாக, வியாழனன்று அதிகாலை டமாஸ்கஸ் அருகிலுள்ள இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசத் தொடங்கியிருந்தன. இதை எழுதி கொண்டிருக்கும் வரையில், இந்த விமான தாக்குதல்களின் அளவும், அவை ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்ததா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

ஏப்ரலில் ஒன்பது ஈரானியர்கள் கொல்லப்பட்ட T4 விமானத்தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் இஸ்ரேலைத் தாக்க தயாராகி வருகிறது என்ற ஆதாரமற்ற வாதத்துடன் டெல் அவிவ் செவ்வாய் கிழமை விமானத் தாக்குதலை நியாயப்படுத்தியது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் கண்கூடாகவே அபத்தமாக உள்ளன, ஏனெனில் ஈரான் அணுசக்தி உடன்படிக்கை மீது ட்ரம்ப் அவரின் முடிவை அறிவிக்க இருக்கின்ற நிலையில் முதலில் ஈரான் ஒரு தாக்குதலைத் தொடங்கி, அதிலிருந்து எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை.

இஸ்ரேலிய தாக்குதல் நெருக்கமாக அமெரிக்காவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என்பதையே ஒவ்வொன்றும் சுட்டிக் காட்டுகின்றன. ஞாயியன்று, இஸ்ரேலிய ஊடகங்கள் இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக ஆராயாத குற்றச்சாட்டுக்களை ஒலி/ஒளிபரப்ப தொடங்கின. பின்னர் செவ்வாயன்று, சிஎன்என் அறிவிக்கையில், குற்றஞ்சாட்டப்படும் ஈரானிய தாக்குதலுக்கான தயாரிப்புகள் குறித்து பென்டகன் கவலை வெளியிட்டதாக அறிவித்தது.

இந்த வெளிச்சத்தில், ட்ரம்பின் முடிவு குறித்து முன்கூட்டியே அறியத்தரப்பட்ட பென்ஜமின் நெத்தனியாகுவின் வலதுசாரி அரசாங்கம், ஒரு பரந்த இராணுவ தாக்குதலுக்கு சாக்குபோக்காக சேவையாற்றுவதற்கு ஈரானிடம் இருந்து ஒரு விடையிறுப்பைத் தூண்டும் நோக்கில், அமெரிக்க அறிவிப்புக்கு பொருந்தும் விதத்தில் சிரிய விமானத்தளம் மீது ஆக்ரோஷமான தாக்குதலைத் திட்டமிட்டது என்பது ஏறக்குறைய முழு நிச்சயமாக உள்ளது.

இந்த விமானத் தாக்குதல் இஸ்ரேலில் ஒரு போர்க் காய்ச்சலை முடுக்கிவிடும் ஒரு பிரச்சாரத்துடன் சேர்ந்திருந்தது. இரகசியமான ஈரானிய தாக்குதல் குறித்த செய்திகளுக்கு இடையே, அந்த இராணுவம் வடக்கில் இஸ்ரேலின் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு கவசத்தைக் கையாள கூடுதல் ஏவுகணை குண்டுகளை நிலைநிறுத்தி இருப்பதாக தெரிவித்தது, அதேவேளையில் டெல் அவிவ் இல் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசு பணியாளர்கள் முன் அனுமதியின்றி கோலன் குன்றுகளுக்கு பயணிப்பதற்கு தடைவிதித்தது.

சிரியாவில் உள்ள ஈரானியர்களை இஸ்ரேல் தொடர்ந்து இலக்கு வைப்பதற்கு ரஷ்யாவின் ஏற்பிசைவைப் பெற நெத்தனியாகு மாஸ்கோ பயணித்திருந்த போது, அங்கிருந்து பேசுகையில், அவர் முற்றும் முரணாக தெஹ்ரான் ஆட்சியை நாஜிக்களுடன் ஒப்பிட்டார். “ஈரானிய ஆக்ரோஷத்திலிருந்து" இஸ்ரேல் "தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு" அதற்கு உரிமை இருப்பதாக ஆக்ரோஷமாக வலியுறுத்திய அவர், ஈரானிய படைகள் ஒரு தாக்குதலுக்காக இராணுவ இடங்களுக்கு துருப்புகளையும் பேராபத்தான ஆயுதங்களையும் நகர்த்துவதற்கு சிரியாவை தளமாக பயன்படுத்தி வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்.

செவ்வாய்கிழமை விமானத் தாக்குதல், வரவிருப்பதற்கான வெறுமனே ஒரு முன்மாதிரி தான் என்பதை அடிக்கோடிடும் வகையில், ஓர் இஸ்ரேலிய அரசு பாதுகாப்பு அதிகாரி Haaretz க்கு கூறுகையில், “சிரியாவில் ஈரானிய ஏவுகணைகள் மீதான தாக்குதல்கள் பெருங்கடலில் விழுந்த ஒரு துளி தான். இது அப்பகுதிக்கு கொண்டு வரப்படும் ஏவுகணைகளை மற்றும் பிற தளவாடங்களை தடுத்துவிடாது என்பதையும் கூட இராணுவம் புரிந்து வைத்துள்ளது, அவ்வாறு நடந்து வருவதையே நாம் பார்த்து வருகிறோம்,” என்றார்.

ஈரானிய உடன்படிக்கையை ட்ரம்ப் கைவிட்டமை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரிசையான நீண்டகால பொறுப்பற்ற நடவடிக்கைகளின் சமீபத்தியது மட்டுமே ஆகும், இவை மத்திய கிழக்கு எங்கிலும் ஓர் இராணுவ மோதலைத் தூண்டுவதற்கு அந்த ஸ்திரமற்ற யூதவாத ஆட்சிக்குத் துணிவளித்துள்ளன.

சிரியாவுக்குள் ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு, பெப்ரவரி தொடக்கத்தில் டெர் எஜ்ஜார் மாகாணத்தில் டஜன் கணக்கான ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்ட, அசாத்-ஆதரவு படைகள் மீதான அமெரிக்க விமானத் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும், இஸ்ரேல், டஜன் கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்ட இந்த செவ்வாய்கிழமை தாக்குதல் உட்பட குறைந்தபட்சம் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் சிரியாவுக்குள் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரானுடன் அதன் போருக்குத் தயாரிப்பு செய்து வரும் நிலையில், வாஷிங்டன் தாக்குதலுக்குள் இறங்க இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. சிரியாவில், இஸ்லாமியவாத "கிளர்ச்சியாளர்களுடன்" கூட்டு சேர்ந்து கொண்டு, அமெரிக்கா கடந்த ஏழாண்டுகளாக ஈரானிய-ஆதரவிலான அசாத் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கு முனைந்துள்ளது, இந்த நிகழ்ச்சிப்போக்கில் நூறாயிரக் கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், தெஹ்ரானில் இருந்து டமாஸ்கஸிற்கு ஒரு தரைப்பாலத்தைத் திறந்து வைப்பதற்கான ஈரான் முயற்சிகளைத் தடுப்பதில் அமெரிக்கப் படைகள் ஒருமுனைப்பட்டுள்ளன. இதுவரையில், அமெரிக்க விமானப்படை பலமும் தரைப்படைகளும் ஈராக்கிய எல்லைக்கருகே சிரியாவின் கிழக்கில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருப்பதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தன—இந்த பகுதியும் அந்நாட்டின் பெரும்பான்மை எண்ணெய் வளங்கள் நிறைந்த பகுதியாகும்.

எரிசக்தி வளம் நிறைந்த மத்திய கிழக்கில் கட்டுப்பாட்டை கொள்வதற்கான அதன் முனைவில், அணுஆயுதங்களைக் கொண்டு போரிடும் ஒரு மோதலைத் தூண்டிவிடும் அபாயம் உள்ள போதும் கூட, வாஷிங்டன், சிரியாவில் ரஷ்யாவை எதிர்க்க தீர்மானமாக உள்ளது.

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வாஷிங்டன் விலகுவதை அறிவிக்கும் செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகை உரையில், ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போர் திட்டங்கள் வெகுவாக முன்னேறியிருப்பதைத் தெளிவுபடுத்தினார். அந்நாட்டிற்கு எதிராக உயர்ந்த மட்டத்திலான பொருளாதார தடையாணைகள் திணிக்கப்படும் என்று அறிவித்த அவர், இந்த மோதலின் தீவிரப்பாட்டில் அடுத்த கட்டம் இராணுவப் படைகளை உள்ளடக்கி இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த உண்மை குறித்து ட்ரம்ப் நன்கறிந்துள்ளார் என்பதை அவர் உரையின் தொனியே தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் கடந்த கால் நூற்றாண்டாக நடைமுறையளவில் தடையற்ற போர் தொடுத்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி, தெஹ்ரானை உலகில் முன்னணி "பயங்கரவாதத்தைப் பரப்பும் அரசாக" கண்டிக்கிறார். வழமையாக ஒரு போரின் போது எதிரி நாடுகளுக்காக ஒதுக்கப்படும் வார்த்தைகளில், ட்ரம்ப் மத்திய கிழக்கு எங்கிலும் தெஹ்ரானின் "தீங்கான மற்றும் வஞ்சகமான" செல்வாக்கிற்கு எதிராக ஆத்திரத்தைக் கக்கினார்.

அது அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால், "மிகவும் கடுமையான விளைவுகளைச்" சந்திக்குமென எச்சரித்து, புதனன்று, ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக போர்வெறியூட்டும் அச்சுறுத்தலை வெளியிட்டார்.

இந்நிலைமைகளின் கீழ், தெஹ்ரானில் உள்ள முதலாளித்துவ-மதகுருமார் ஆட்சி, ஓர் ஆழ்ந்த நெருக்கடியை முகங்கொடுத்து, திருப்பி தாக்குவதே அதற்கிருக்கும் ஒரே வழி என்று தீர்மானித்துவிடலாம். பலம் வாய்ந்த புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைவர் உட்பட கடும் போக்கில் உள்ள கன்னையின் பிரதிநிதிகள் ஏற்கனவே அணுசக்தி உடன்படிக்கை உயிரிழந்துவிட்டதாக பிரகடனப்படுத்தி இருப்பதுடன், வாஷிங்டன் இல்லாமலேயே அந்த உடன்படிக்கையை மீட்டுயிர்ப்பிக்கலாம் என்ற ஐரோப்பிய சக்திகளின் கூற்றுக்களையும் நிராகரித்துள்ளன.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு மோதல் மிகவும் உடனடியான போராக முன்நிற்கின்ற அதேவேளையில், ஈரான் உடன்படிக்கையை ட்ரம்ப் முறித்திருப்பது ஏற்கனவே வெடிப்பார்ந்துள்ள அப்பிராந்தியத்தை மேற்கொண்டும் ஸ்திரமின்மைப்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கு அப்பாற்பட்டு, பாரசீக வளைகுடாவில் ஈரானிய செல்வாக்கிற்கு கடும் விரோதமாக உள்ள இரண்டு நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிடம் இருந்து ட்ரம்பின் அறிவிப்பு ஒப்புதல்களைப் பெற்றுள்ளது.

ட்ரம்ப் கடந்த மே மாத உரை ஒன்றில், அப்பிராந்தியம் எங்கிலும் ஈரானிய-விரோத கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் முன்னணி பாத்திரம் வகிக்குமாறு சவூதி அரேபியாவுக்கு அழைப்புவிடுத்தார். ஒபாமா விட்டுச் சென்றதை பின்தொடர்ந்து வரும் அவர் நிர்வாகம், யேமனில் படுகொலை குண்டுவீச்சுக்களைத் தொடர சவூதி போர் விமானங்களுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் மற்றும் உளவுத்தகவல்களை வழங்கியுள்ளது, அவற்றில் பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் அறிவிப்புக்கு வெறும் ஒருசில நாட்களுக்கு முன்னதாக தான், அமெரிக்க சிறப்பு படைகள் டிசம்பர் 2017 இல் இருந்து யேமனில் செயல்பட்டு வருவதாக வெளியானது.

ட்ரம்பின் ஈரான் அறிவிப்பை அடுத்து எண்ணெய் விலை 77 டாலராக உயர்ந்த நிலையில், விலைகளை ஸ்திரப்படுத்த எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து UAE உடன் கலந்தாலோசிக்க இருப்பதாக சவூதி அரேபியர்கள் அறிவித்தனர், இந்நடவடிக்கை ஈரான் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

புதனன்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ஏவுகணைகள் வீசியதைச் சாதகமாக்கி, சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜூபியர் அத்தாக்குதலுக்கு ஈரான் மீது பழிசுமத்தினார், அது "போர் பிரகடனத்திற்கு" ஒத்ததென அவர் அறிவித்தார். “இதற்கு" ஈரான் தான் "கணக்கில் வைக்கப்பட" வேண்டும் என்றவர் அச்சுறுத்தும் தொனியில் அறிவித்தார். “இதற்கு விடையிறுக்க நாங்கள் சரியான நேரத்தை சரியான வழியைக் காண்போம் … நாங்கள் என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் நேரடியான இராணுவ மோதலைத் தவிர்க்க முயல்வோம், ஆனால் இதுபோன்ற ஈரானின் நடவடிக்கை தொடரக்கூடாது,” என்றார்.

தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால், ரியாத் அணுஆயுதங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என்றும் அல்-ஜூபியர் சூளுரைத்தார்.