ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The fraud of Mélenchon’s call for a Franco-Russian alliance against war

போருக்கு எதிரான ஒரு பிரான்ஸ்-ரஷ்ய கூட்டணிக்கான மெலோன்சோனின் அழைப்பின் மோசடி

By Alex Lantier and Kumaran Ira
15 May 2018

சென்ற வாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணு ஒப்பந்தத்தை இரத்து செய்ததும், சிரியாவில் இருந்த ஈரானியப் படைகள் மீது இஸ்ரேல் திரும்பதிரும்ப  குண்டுவீசிய  நிலையில், அடிபணியா பிரான்ஸ் (LFI) தலைவரான ஜோன்-லூக் மெலோன்சோன் மூன்றுநாள் பயணமாக மாஸ்கோவுக்கு விஜயம் செய்தார். ஈரானுக்கு எதிரான ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை விமர்சனம் செய்த அவர், பாரிஸுக்கும் மாஸ்கோவுக்கும் இடையில் ஒரு அமெரிக்க-விரோதக் கூட்டணி உருவாக்க அழைப்பு விடுத்தார்.

இது தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் ஒரு பிற்போக்குத்தனமான, தேசியவாத முன்னோக்கு ஆகும். அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் வெடித்த நிலையில், சென்ற மாதத்தில் சிரியா மீதான நேட்டோவின் ஏவுகணைத் தாக்குதல் ரஷ்ய மற்றும் மத்திய கிழக்கின் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தொழிலாளர்களிடமும் எதிர்ப்பைத் தூண்டியது. அப்படியிருந்தும் போருக்கு எதிரான எதிர்ப்பில் பிரெஞ்சு மற்றும் ரஷ்யத் தொழிலாளர்கள் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேருவதற்கு அழைப்பு விடுவதற்கு மாறாக அவர்களுக்கு எதிராய் புதிய இராணுவக் கூட்டணிகளைக் கட்டியெழுப்புவதன் மீது கவனம் குவிக்க மெலோன்சோன் அழைப்பு விடுத்தார்.

ஈரானுடன் சேர்ந்து சிரியாவில் நேட்டோ-ஆதரவு இஸ்லாமிய கெரில்லாக்களை எதிர்த்து சண்டையிட்டு வருகின்ற ரஷ்யாவை மெலோன்சோன் தழுவிக் கொண்டார். “நான் முழுமையாக அமெரிக்கக் கூட்டணிக்கு எதிரானவன், நேட்டோவை விட்டு விலகுவதையே நான் விரும்புகிறேன்” என்று மாஸ்கோவிற்கு பயணிப்பதற்கு முன்பாக அவர் கூறினார். “இந்தப் பிராந்தியத்தில் ஈரான், இஸ்ரேல், சவுதி அரேபியா, துருக்கி ஆகியவற்றின் இடையே மிகப் பெரும் வன்முறை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாடுகளில் சில ரஷ்யாவுடன் பொதுவான எல்லைகளைக் கொண்டிருக்கின்றன, உலகம் கறுப்போ அல்லது  வெள்ளையானதோ அல்ல என்பதை நாம் காட்டியாக வேண்டும்.”

மாஸ்கோவில் மெலோன்சோன், ரஷ்யாவுடனான தனது நட்பை பிரகடனம் செய்தார், ரஷ்ய இராணுவத்தின் உயர் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தினர் மற்றும் ரஷ்யாவில் உள்ள பிரெஞ்சு முதலீட்டாளர்கள் ஆகியோரை அவர் சந்தித்ததுடன், LFI மற்றும் சேர்ஜி உடால்ட்ஸோவ் (Sergei Udaltsov) இன் ஸ்ராலினிச இடது முன்னணி உள்ளிட்டவை கொண்ட ஒரு “போர்-எதிர்ப்பு” கூட்டணிக்காய் செயற்பட்டார். 1945 இல் நாஜி ஜேர்மனியை சோவியத் ஒன்றியம் வெற்றி கண்டதை நினைவுகூரும் மே 9 அன்றான இராணுவ அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்ற அவர், பிரெஞ்சு தேசிய வண்ணங்களைக் கொண்ட ஒரு மூவண்ண தோள் பட்டை அணிந்திருந்தார். அவர் ஊடகங்களிடம் கூறினார், “‘ரஷ்யர்கள் நமது நண்பர்கள்’ என்பதைச் சொல்வது என்ற ஒரு போர்க்குணமிக்க நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.”

ரஷ்யாவுடன் நல்லுறவுகளுக்கு மெலோன்சோன் விடுத்த அழைப்புகள் அமெரிக்காவுக்கு அல்லது ஜேர்மனிக்குப் பொருந்தாது. மாறாக, “கிழக்கு ஜேர்மனியின் இணைப்புக்குப் பின்னர், மோசமான பழக்கங்கள் மீண்டும் திரும்பியிருக்கின்ற” ஜேர்மனியின் செல்வாக்கு ஐரோப்பாவில் பெருகுவதை அவர் கண்டனம் செய்தார்.

போருக்கான உந்துதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அதற்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது மட்டுமேயாகும்; சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கும் போருக்கும் அமெரிக்க மற்றும் ஜேர்மன் தொழிலாளர்கள் மத்தியில் இருக்கின்ற எதிர்ப்பை உதாசீனம் செய்து விட்டு, அமெரிக்க-தலைமையிலான போர்கள் அல்லது ஜேர்மனி-தலைமையிலான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மீது மெலோன்சோன் செய்கின்ற விமர்சனங்கள் பிற்போக்குத்தனமானவையாகும். வாஷிங்டன் அல்லது ஜேர்மனிக்கு எதிராக ஒரு கூட்டணியில் பாரிஸையும் மாஸ்கோவையும் ஒன்றுபடுத்துவதில் எந்தவிதமான முற்போக்கான உள்ளடக்கமும் இருக்கப் போவதில்லை. 1914 இல் முதலாம் உலகப் போராக வெடித்த ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒரு முக்கிய அம்சமாக இருந்த 1891 இன் பிரான்ஸ்-ரஷ்யா கூட்டணியைப் போலவே, இதுவும் புதிய போர்களைத் தூண்ட அச்சுறுத்துகின்ற பெரும்சக்திகளுக்கு இடையிலான மோதல்களை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.

நேட்டோ மீதான இத்தகைய விமர்சனங்களை தீவிரமயமானவை போல காட்டுவதற்கு மெலோன்சோன் முயற்சி செய்தாலும் கூட, ஆளும் வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை கிளர்ச்சி கொள்ளச்செய்கின்ற விவாதங்களையே அவை எதிரொலிக்கின்றன. ஈரான் ஒப்பந்தத்தை ட்ரம்ப் இரத்து செய்ததில் கோபமடைந்துள்ள ஐரோப்பிய ஊடகங்களது பிரிவுகள், அட்லாண்டிக்-கடந்த கூட்டணி இறந்து விட்டதா என்று கேள்வியெழுப்புகின்றன. எதிர்காலத்தில் ஐரோப்பியர்கள் “தங்களுக்காக தாமே” சண்டையிட வேண்டியிருக்கும் என்று ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் அறிவித்திருக்கிறார், ட்ரம்பே கூட நேட்டோவை “காலாவதியானது” என்று அழைத்தார்.

மெலோன்சோனின் ஊதிப்பெருக்கிய வாய்ச்சவடால் ஒருபக்கம் இருந்தாலும், உடால்ட்ஸோவ் மற்றும் ரஷ்யா மீது அவர் அன்புகாட்டுவது, ஈரானை அமெரிக்க-இஸ்ரேல் போர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கோ அல்லது மத்திய கிழக்கை மறுபங்கீடு செய்ய பெரும்சக்திகள் விழைவதைத் தடுத்து நிறுத்துவதற்கோ ஒரு கூட்டணியைக் கட்டியெழுப்பும் ஒரு “போர்க்குணமிக்கச செயல்” அல்ல. மாறாக பாரிஸ் மற்றும் மாஸ்கோவின் -இவை இரண்டுமே ட்ரம்ப்புடன் ஒரு இணக்கத்திற்காய் எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றன- சிடுமூஞ்சித்தனமான மற்றும் கோழைத்தனமான கொள்கைகளுக்கு ஒரு “இடது” முகமூடியை இது வழங்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவும், ஈரான் அதன் அணுத் திட்டத்திற்கு மறுதொடக்கமளிப்பதில் இருந்து, இவ்வாறாக அவற்றின் நலன்களுக்கு எதிராய் கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான ஒரு சாக்கினை ட்ரம்புக்கு வழங்குவதில் இருந்து, அதற்கு ஊக்கம்குன்றச் செய்கின்ற வகையில், சிரியாவில் ஈரானியப் படைகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை அவை ஆதரிக்கும் என்பதை சமிக்கை செய்திருக்கின்றன. இஸ்ரேல் அதன் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னர், இஸ்ரேலின் “தற்காப்பை” ஆதரிக்கின்ற அறிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய சக்திகளிடம் இருந்து பெற்றுக் கொண்டது. அத்துடன் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தைகளுக்காக மாஸ்கோ சென்றார். நடக்கவிருக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறித்து ஈரானை எச்சரிக்காததன் மூலமாக, கிரெம்ளின் எந்தத் தரப்பின் பக்கம் நிற்கிறது என்பதை அது தெளிவாக்கியது.

இந்த பிற்போக்குத்தனமான சூதுவேலைகளுக்கு LFI அல்லது இடது முன்னணியிடம் இருந்து எந்த கண்டனமும் வரவில்லை. மாறாக, ஸ்பெயினின் பொடேமோஸ் (Podemos), போர்ச்சுகலின் இடது தொகுப்பு (Left Bloc), மற்றும் டென்மார்க்கின் சிவப்பு-பச்சை கூட்டணி (RGA) போன்ற ஐரோப்பாவெங்கிலுமான ஜனரஞ்சகக் கட்சிகளுடனான ஒரு கூட்டணிக்கு அவை விண்ணப்பம் செய்தன. மிக உயரிய தேசிய அளவிலான மற்றும் பிராந்திய அளவிலான பதவிகளை ஏற்கனவே கொண்டிருக்கும் ஜனரஞ்சகக் கட்சிகளது இத்தகைய ஒரு கூட்டணியானது திடீரென்று போரை எதிர்ப்பனவாய் திருப்பம் காண முடியும் என்பதான பிரமைகளைத் தூண்டும் விதத்தில், மெலோன்சோனின் விஜயத்தின் சமயத்தில், இடது முன்னணி “புதிய உலகப் போரை தடுப்போம்!” என்ற தலைப்புடனான ஒரு அறிக்கையை விடுத்தது.

ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் இரத்து செய்ததை கண்டனம் செய்வதுடன் அந்த அறிக்கை தொடங்கியது. அது எச்சரித்தது, இது “ஈரானியர்களை நோக்கிய மனிதத்தன்மையற்ற செயல் மட்டுமன்று, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் பொருளாதார நலன்களையும் இது பாதிக்கிறது, ‘உலகத் தலைவர்கள்’ பேச விரும்புகின்ற நீதியின் கோட்பாடுகளுக்கும் இது முரண்பட்டதாய் இருக்கிறது... இவை அனைத்தும் ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான முரண்பாடுகள் துரிதமாகவும் கட்டுப்பாடற்றும் வளர்ச்சி காண்பதையும் உலக முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடியையும் பிரதிபலிக்கிறது. மூலதனம் மறுபடியும் சகோதர யுத்தங்களின் இறைச்சி அரவைஎந்திரத்தை நோக்கி மனிதர்களைத் தள்ளுகிறது.”

கிரெம்ளினில் இருந்து “ஒரு புதிய ஏகாதிபத்தியப் படுகொலை கட்டவிழ்த்து விடப்படுவதற்கு எதிரான ஒரு கோட்பாடான மற்றும் கடுமையான நிலைப்பாட்டை” ஒருவர் எதிர்பார்க்க முடியவில்லை என்பது குறித்து புலம்பிய அந்த அறிக்கை, மாறாக, “அரசாங்கங்களின் தலைவர்களை கருத்தில்கொள்ளாது மக்களின் ஒற்றுமைக்கு” அழைப்பு விடுத்தது. “இன்று அது எத்தனை சாத்தியமற்றதாகத் தென்பட்டாலும் கூட, அனைத்து நாடுகளிலும் உள்ள அத்தனை முற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான ஒற்றுமையைச் சார்ந்திருக்கின்ற ஒரு உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை நாம் கட்டியெழுப்பியாக வேண்டும்.”

உடால்ட்ஸோவ் ஆல் முன்மொழியப்பட்டிருக்கும் இந்த கட்சிகளது கூட்டணியானது போருக்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்ப முனைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு பொறியாகும். உலக சோசலிச வலைத் தளத்தைப் பிரசுரிக்கின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேசிய, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் உடால்ட்ஸோவ் மற்றும் மெலோன்சோன், அரசியல் ஸ்தாபகத்தின் நீண்டகால இணைப்புகளாக இருந்து வருகின்ற போர்-ஆதரவுக் கட்சிகளுக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கீழ்ப்படியச் செய்வதற்காய் நோக்கம் கொண்டிருக்கின்றனர்.

ஆலோசனையளிக்கப்படும் இந்தக் கூட்டணியில் இடம்பெறும் மேற்கு ஐரோப்பியக் கட்சிகள் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஏகாதிபத்திய-ஆதரவுக் கட்சிகள் ஆகும், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதை ஆதரித்த பெரும் ஸ்ராலினிசக் கன்னைகளை உள்ளடக்கியிருக்கும் இக்கட்சிகள் போரை ஆதரித்த ஒரு நெடிய வரலாற்றினைக் கொண்டிருக்கின்றன. பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் கட்டாய இராணுவச் சேவைக்கான சட்டத்தை மீண்டும் கொண்டுவரத் திட்டமிடுவதில் LFI தலைமை கொடுத்துக் கொண்டிருக்கிறது, அதனை எதிர்ப்பு குறைந்ததாக ஆக்குகின்ற முயற்சியில் “ஒரு இராணுவ உள்ளடக்கத்தை கொண்ட சகலருக்குமான தேசிய சேவை” என்று புனைபெயர் கொடுத்து அதனை அழைக்கிறது.

2011 லிபியாவிலான நேட்டோவின் போரை Podemos மற்றும் RGA ஆதரிக்கின்றன, இதனை மெலோன்சோனும் வழிமொழிந்தார். RGA இன் ஒரு முன்னிலை உறுப்பினரான பேர்ட்டில் விடெற் (Bertil Videt), ஒரு இழிபுகழ் பெற்ற கட்டுரையில், அந்தப் போரை எதிர்த்தவர்களை “ஏகாதிபத்திய மூர்க்கத்தனங்களுக்கு எப்போதும் எதிர்ப்பானவர்களாய் இருப்பது” என்ற வறட்டுப்பிடிவாதம் கொண்டவர்கள் என விமர்சனம் செய்தார். ஆனால் மறுபக்கத்தில் RGA அவ்வாறானதல்ல என்றார். Podemos, ஸ்பெயினின் படையதிகாரிகளில் இருந்து பரவலாக தமக்கு அணிதிரட்டிக் கொண்டிருந்த நிலையில், லிபியப் போரில் ஸ்பெயினின் இராணுவப் படை நடவடிக்கைகளது தலைவராக இருந்த தளபதி ஜோஸே ரோட்ரிக்கேஸ் ஐ ஒரு முன்னணி அங்கத்தவர் ஆக்கியது.

உடால்ட்ஸோவைப் பொறுத்தவரை, ரஷ்யாவில் அணிதிரளும் எதிர்ப்பை ரஷ்ய அரசியல் ஸ்தாபகத்திற்கு ஏற்புடைய திசைகளில் மாற்றி விடுவது தான் அவரது பிரதான அக்கறையாக இருக்கிறது. ரஷ்ய அரசு மற்றும் ஆளும் உயரடுக்கின் கன்னைகளுடன் அவருக்குள்ள நெருக்கமான தொடர்புகளின் ஒரு அறிகுறியாக, இடது முன்னணியின் அறிக்கையானது Gazpromக்கு சொந்தமான Moscow Echo வானொலியின் -ரஷ்ய தாராளவாத எதிரணியின் ஊதுகுழலான இது அரசு எரிசக்தி நிறுவனமான- வலைத் தளத்தில் மறுபதிவிடப்பட்டது.

ஸ்ராலினிசத்திற்கு ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட மாற்றையும், 1991 இல் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை ஸ்ராலினிசம் மீட்சி செய்ததன் மீதான ICFI இன் ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தையும் ஆய்வுசெய்யாமல் ரஷ்யா மற்றும் ஐரோப்பாவில் போருக்கு எதிராய் அபிவிருத்தி காணுகின்ற எதிர்ப்புக்கான எந்த ஒரு உருப்படியான முன்னோக்கும் கிடையாது. ட்ரொட்ஸ்கி எச்சரித்த சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பு ரஷ்யாவில் தொழிற்துறை நிலைகுலைவையும் சமூகப் பிற்போக்குத்தனத்தையும் மட்டும் தூண்டியிருக்கவில்லை என்பது முன்னெப்போதினும் தெளிவாய் இருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளைத் தாண்டி அழிவுகரமான புவியரசியல் பின்விளைவுகளை அது கொண்டிருந்தது.

நேட்டோவுக்கான பிரதான இராணுவ எதிர்ப்பலம் உருக்குலைந்தமையானது, மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு கொண்டதும் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியதுமான ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான 1991 வளைகுடாப் போர் தொடங்கி, தீவிரப்பட்டுச் செல்கின்ற ஏகாதிபத்தியப் போர்களது ஒரு சகாப்தத்தைத் திறந்து விட்டது. ஈராக்கிலான தொடர்ச்சியான போர்களும், ஆப்கானிஸ்தானிலான மூன்று தசாப்த காலப் போரும், லிபியா, சிரியா மற்றும் ஏமனிலான போர்களும் ஒட்டுமொத்த சமூகங்களையும் நொருக்கிப் போட்டன. அணுத் திட்ட விடயத்தில் ஈரான் முழு சரணாகதி அடைய வேண்டும் என்று வாஷிங்டன் கோரி வருகின்ற நிலையில், இன்னும் பெரியதான ஒரு போர் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு தீவிரப்படலின் வளர்ச்சி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. போருக்கு எதிரான போராட்டமானது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழான போல்ஷிவிக்குகளின் தலைமையில் அக்டோபர் புரட்சியில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் தனது மிக உயரிய வெளிப்பாட்டைக் கண்ட, ரஷ்ய மற்றும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் ஆகச் சிறந்த புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குத் திரும்புவதை அவசியமாக்குகிறது. ஆனால், மெலோன்சோன் மற்றும் உடால்ட்ஸோவ் அத்தகையதொரு போராட்டத்திற்கு ஆலோசனையளிக்கவில்லை, மாறாக எதிர்ப்பை குட்டி-முதலாளித்துவ, போர்-ஆதரவுக் கட்சிகளின் பின்னால் திருப்புவதன் மூலமாக நனவுடன் அதனை மூச்சுத்திணறடிப்பதற்கே முயற்சி செய்கின்றனர்.

குறிப்பாக மெலோன்சோன், ட்ரொட்ஸ்கி குறித்து பேசுவதன் மூலமாக ஒரு தீவிரமயமானவராக தன்னைக் காட்டிக் கொண்டு கடந்து போவதில் பிடிவாதமாக இருக்கின்ற அதேநேரத்தில், ட்ரொட்ஸ்கியின் அரசியலுக்கு தனது சொந்த குரோதம் குறித்து நன்கு அறிந்து வைத்துமிருக்கிறார். அவரது பயணத்தின் போது மாஸ்கோவிலான இராணுவ அணிவகுப்பின் சமயத்தில் பின்வரும் காட்சியை Le Monde செய்தி அளித்தது: “மெலோன்சோனுக்கு சோவியத்தின் இராணுவப் பதக்கம் ஒன்று வழங்கப்பட்டது. ‘நன்றி சார்’ என்றார் அவர், பின் உடனே சுதாரித்துக் கொண்டு, ‘நன்றி, தோழர், சார்’ என்றார். சுற்றிலும் சிரிப்பெழுந்ததைக் கண்ட அவர் மேலும் சேர்த்துக் கொண்டார், “செம்படையின் ஸ்தாபகரது (அதாவது, ட்ரொட்ஸ்கி) சிந்தனைகளது அடிப்படையிலேயே எனது வாழ்க்கையை நான் தொடங்கினேன்” என்றார்.

ட்ரொட்ஸ்கி குறித்து கூறுவதில் இவ்வாறான அபத்தமானவிதத்தில் விருப்பம்காட்டுவதென்பது ஒரு மோசடியாகும். 1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு உடனடிப் பிந்தைய காலத்தில் அரசியலுக்கு வந்த மெலோன்சோன், OCI (Organisation communiste internationaliste), ICFI மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட பின்னர் அதில் இணைந்தார். பெருவணிக சோசலிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்புகின்ற OCI இன் திவாலடைந்த முன்னோக்கின் மீது செயல்பட்ட மெலோன்சோன் 1976 இல் PS இல் இணைந்தார்; PS இன் ஒரு செனட்டராக, அமைச்சராக, மற்றும் PS இன் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனுக்கு உதவியாளராக என ஒரு நெடிய தொழில் வாழ்க்கையை அவர் கொண்டிருந்தார்.

கிரெம்ளினுடனான மெலோன்சோனின் இப்போதைய குலாவல்கள் எல்லாம் இருந்தாலும், PS இன் கீழ் பிரெஞ்சு ஏகாதிபத்தியமானது, சோவியத் ஒன்றியத்தைக் குறிவைத்து ஐரோப்பாவில் அமெரிக்க ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டதை ஆதரித்தமை, யூரோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஊக்குவித்தமை, மற்றும் 1991 வளைகுடாப் போரில் இணைந்தமை என பொதுவாக ஒரு ரஷ்ய-விரோதக் கொள்கையையே பின்பற்றியது.

சென்ற வாரத்தில் ரஷ்யாவில் இருந்த சமயத்தில் மெலோன்சோன், ஒரு முன்னணி முதலாளித்துவ அரசியல்வாதியாக சோவியத் ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் அவர் செய்த பயணங்களை நினைவுகூர்ந்தார். 1988 நவம்பரில் “முதன்முறையாக மித்திரோனுடன், Baikonur இல் இருந்து Jean-Loup Chrétien (பிரெஞ்சு விண்வெளிப்பயண வீரர்) கிளம்புவதை காணச் சென்ற”தை அவர் சுட்டிக்காட்டினார். இரண்டாவது தடவை பயணத்தின் தேதியை மறந்து விட்டதாக மெலோன்சோன் கூறினாலும், அது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய சமயம் என்பது புலப்பட்டதாக இருந்தது, அச்சமயத்தில் “என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக” அவர் கோர்பச்சேவை சந்தித்தார்.

இத்தகைய அரசியல்வாதிகளின் இராணுவ மற்றும் இராஜதந்திர சூழ்ச்சி வேலைகள் போருக்கு எதிரான ஒற்றுமையில் மனிதகுலத்தை அணிதிரட்டாது, மாறாக முதலாளித்துவத்திற்கும் போருக்கான அதன் முனைப்பிற்கும் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிச் செல்லும் எதிர்ப்பினை முடக்குவதற்கே பங்களிக்கும்.