ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සුලු ධනපති ජාතිකවාදයට එරෙහිව ජාත්‍යන්තර සමාජවාදය සඳහා අරගලය

சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவின் கடைசி விரிவுரை

குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராக சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம்

21 August 2018

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அதன் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் விரிவுரை தொடரில் கடைசி விரிவுரை, "குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராக சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம்" என்னும் தலைப்பின் கீழ்  கொழும்பு பொரளையில் உள்ள என்.எம் பெரேரா நிலையத்தில் ஆகஸ்ட் 30 அன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது

1964ல் லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டு செய்த மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு எதிராக முன்னெடுத்த போராட்டத்திலேயே, சோ.ச.க. முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) 1968ல் அமைக்கப்பட்டது. குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான போராட்டம், ஆரம்பத்தில் இருந்தே, பு.க.க./சோ.ச.க. சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தையும் அதன் தலைமையின் கீழ் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்ட முன்னெடுத்த போராட்டத்தின் பிரதான அம்சமாக இருந்தது.

1964ல் ல.ச.ச.க. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை காட்டிக்கொடுத்ததன் விளைவாக, கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட ஏனைய உழைக்கும் மக்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தும் கிடைக்காமல் போன நிலைமையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குட்டி முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கு வழி திறந்துவிட்பட்டது. பு.க.க., தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைத்துவத்தை கட்டியெழுப்பும் போராட்டத்தின் இன்றியமையாத ஒரு அங்கமாக, இந்த அமைப்புக்கள் முன்னெடுத்த தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமன குட்டி முதலாளித்துவ அரசியலை அம்பலப்படுத்தும் தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டத்தை நடத்தியது.

ஆரம்பத்தில் இருந்தே பு.க.க., 1987ல் காலமாகும் வரை அதன் பொதுச் செயலாளராக இருந்த கீர்த்தி பாலசூரியவினால் 1970ல் எழுதப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற நூலை, அந்தப் போராட்டத்தின் பிரதான கருவியாக கொண்டிருந்தது. மேலும், 1971ல் கிராமப்புற இளைஞர்களை அடித்தளமாகக் கொண்டு ஜே.வி.பி. முன்னெடுத்த கிளர்ச்சியை சாக்குப் போக்காகப் பயன்படுத்திய அப்போதிருந்த முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க.-ல.ச.ச.க.-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அரசாங்கம், ஜே.வி.பி.க்கும் பொதுவில் கிராமப்புற இளைஞர்களுக்கும் எதிராக முன்னெடுத்த மிலேச்சத்தனமான இரத்தக்களரி அடக்குமுறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டும் கொள்கை ரீதியான போராட்டத்திற்கு பு.க.க. முன்நடவடிக்கை எடுத்திருந்தது.

ஜே.வி.பி. பிந்தைய காலத்தில், அதாவது 1988-89 காலகட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வெளிப்படையான ஒரு பாசிச இயக்கமாக நாற்றமெடுத்து, 2000களின் ஆரம்பத்தில் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக மாற்றம் பெற்ற போது, இந்த குட்டி முதலாளித்துவ அமைப்பைப் பற்றி பு.க.க./சோ.ச.க. செய்த அரசியல் மற்றும் தத்துவார்த்த பகுப்பாய்வு சக்திவாய்ந்த முறையில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத போரின் செயலூக்கமான பிரச்சாரகர்களாக ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. முதலாளித்துவ கட்சிகளுடன் வெளிப்படையாக கூட்டுச் சேர்ந்து முன்னெடுத்த பிற்போக்கு அரசியல் காரணமாக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் ஜே.வி.பி. மோசமாக அதிருப்திக்கு உள்ளானது. இந்த நிலையில், அதில் இருந்து பிரிந்த ஒரு குழுவினால் 2012ல் ஸ்தாபிக்கப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.)  அதன் குட்டி முதலாளித்துவ தேசியவாத அடிப்படைகளில் இருந்து எந்த வகையிலும் வேறுபடவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் 30 இடம்பெறவுள்ள விரிவுரையில், குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும் பு.க.க./சோ.ச.க. முன்னெடுத்த ஐந்து ஆண்டுகால போராட்டத்தை கலந்துரையாடி, இன்று தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் அதில் எடுத்துக்கொள்ள வேண்டிய அரசியல் படிப்பினைகளைப் பற்றி ஆராயப்படும். இந்த நிகழ்வில் பங்கேற்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.