ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Twenty-five years after Oslo, a deepening catastrophe for the Palestinians

ஒஸ்லோ உடன்படிக்கைகளின் இருபத்தியைந்து ஆண்டுகளின் பின்னர், பாலஸ்தீன மக்களின் பெருகிச் செல்லும் பேரழிவு

By Bill Van Auken
14 September 2018

பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவரான யாசர் அராபத்தும் இஸ்ரேலின் பிரதமரான யிட்சக் ராபினும் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் முன்னிலையில் நடந்த ஒரு சந்திப்பில் ஒஸ்லோ உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் 25 ஆண்டாவது நிறைவுதினத்தை கடந்த வியாழன் குறித்துநிற்கிறது.

இஸ்ரேலுக்கும் ஒரு பாலஸ்தீன அரசுக்கும் இடையிலான எல்லைகள், சட்டவிரோத யூதக் குடியேற்றங்களின் எதிர்காலம், ஜெருசலேமின் அந்தஸ்து மற்றும் பாலஸ்தீன அகதிகள் நாடுதிரும்பும் உரிமை போன்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய விதத்தில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் ஒரு அமைதிப்பேச்சுவார்த்தை மூலமான ஒரு உடன்பாடு எட்டப்படுவதில் முடியக் கூடிய ஒரு “அமைதி நிகழ்முறை”க்கு இந்த உடன்படிக்கைகள் தொடக்கமளிக்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது.

1967 இல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் ஒரு பாலஸ்தீன தேசிய பகுதியை உருவாக்குவதன் வழியிலான “இரண்டு-அரசு தீர்வு” மூலமாக எட்டப்படும் என்பதாக கூறி, “சுய-நிர்ணயத்திற்கு பாலஸ்தீன மக்கள் கொண்டிருக்கும் உரிமை”யை அடைவதற்கான ஒரு பாதையாக இந்த உடன்பாடு ஊக்குவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுதினமானது, இஸ்ரேலிலும் சரி ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியங்களிலும் சரி அபூர்வமாகவே அனுசரிக்கப்பட்டது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள அமெரிக்கன் காலனி ஹோட்டலில் இந்த உடன்பாட்டை ஆதரித்திருந்த பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரையாற்றிய ஒரு சிறு கூட்டம் கோபமான இளம் பாலஸ்தீன போராட்டக்காரர்களது ஒரு குழுவினால் விரட்டியடிக்கப்பட்டது.

இஸ்ரேலிய ஊடகங்களின் சில பிரிவுகள், அமைதி நிகழ்முறையாக சொல்லப்பட்டதன் “தவறவிடப்பட்ட வாய்ப்புகள்” குறித்து புலம்பிய, அதேசமயத்தில் பழியை இருதரப்புக்குமாய் சமமாய் பகிர்ந்தளித்த கட்டுரைகளை வெளியிட்டன. ஆனால் உண்மையில், ஒஸ்லோ அது எதற்கு நோக்கம் கொண்டிருந்ததோ, கடந்த கால் நூற்றாண்டு காலத்தின்போதான இஸ்ரேலின் இடைவிடாத மூர்க்கத்தனத்திற்கு ஒரு மறைப்பை வழங்குவது என்ற அந்த நோக்கத்திற்கு துல்லியமாக சேவைசெய்தது.

இஸ்ரேல் அரசுக்குள்ளாக இருக்கின்ற மிகவும் வலது-சாரிக் கூறுகளால் வெட்கமற்று தீர்மானிக்கப்படுவதாக இருக்கின்ற ஒரு கொள்கையை மூர்க்கத்துடன் பின்பற்றுவதன் மூலமாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த ஆண்டுதினத்தை அனுசரித்திருக்கின்றனர். பாலஸ்தீன மக்கள் தமது அத்தனை கோரிக்கைகளையும் உரிமைகளையும் சந்தேகத்திற்கு இடமற்ற விதத்தில் பாலஸ்தீன அதிகாரிகளை கைவிடச் செய்ய நிர்ப்பந்திப்பதற்காய் இந்த தினம் அர்ப்பணிக்கப்படுகிறது. இதைத்தான் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “நூற்றாண்டின் சிறந்த உடன்பாடு” என விபரித்தார்.

திங்களன்று, ட்ரம்ப் வாஷிங்டனில் இருக்கும் பிரகடனப்படுத்தப்படாத PLO தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டார். பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் இஸ்ரேலிய ஆட்சிக்கு ஆதரவாகவும் பாலஸ்தீன மக்களை அடிபணியச் செய்வதற்காக அவர்களை பட்டினி போடுவதற்கும் வாஷிங்டனால் எடுக்கப்பட்டு வந்திருக்கும் தீவிரப்பட்ட மற்றும் மிகவும் தண்டணைமிக்க நடவடிக்கைகளின் ஒரு வரிசையை அடியொற்றி இது வருகிறது.

முந்தைய அமெரிக்கக் கொள்கையையும் அத்தோடு பாலஸ்தீனர்கள் ஜெருசலேம் நகரத்துக்கு உரிமை கொண்டாடுவதையும் மறுதலிக்கின்ற விதத்தில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து அங்கே மாற்றியதும் இவற்றில் அடங்கும். இதனிடையே, வெளியுறவுத்துறை, பாலஸ்தீனப் பிராந்தியங்களை பற்றிக் குறிப்பிடுகையில் “ஆக்கிரமிக்கப்பட்ட” என்ற வார்த்தையை கைவிட்டுவிட்டது.

மிக முக்கியமாய் வாஷிங்டன், மேற்குக்கரை, காசா மற்றும் அரபு உலகின் அகதிகள் முகாமில் இருக்கும் வறுமைப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் உதவியை துண்டித்திருக்கிறது, அதேவேளையில் பாலஸ்தீன அகதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுகின்ற ஐ.நா. முகமையான UNRWA ஆகியோரின் இருப்பையே அது மறுதலித்திருக்கிறது. UNRWAக்கு சென்ற ஆண்டில் 350 மில்லியன் டாலர்களாய் இருந்த நிதிஉதவி மொத்தத்தையும் அமெரிக்கா அகற்றி விட்டிருப்பதோடு, USAID மூலமாக வழங்கப்பட்டு வந்த 200 மில்லியன் டாலர் உதவியையும் அகற்றி விட்டிருக்கிறது; குறிப்பாக சில்லறைத்தனமானதும் பழிவாங்கும்தன்மையுடையதுமான ஒரு நடவடிக்கையில், ஜெருசலேத்தில் பிரதானமாக பாலஸ்தீன மக்களுக்கு சேவை செய்துவந்த ஆறு மருத்துவமனைகளுக்கு முன்பு கொடுக்கப்பட்டு வந்த 25 மில்லியன் டாலர் உதவியை முடிவுக்குக் கொண்டுவரவிருப்பதாகவும் அது அறிவித்தது. இதன் விளைவுகள் மக்கள் பட்டினி கிடப்பதிலும், குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதிலும், நோயாளிகள் உயிரிழப்பதிலுமாய் உணரப்படவிருக்கிறது.

பேச்சுவார்த்தைகள் மேலும் மேலும் அதிகமாய் இலக்கற்றதாகி ஒரு தசாப்தத்திற்கு முன்பேயும் கூட திரும்பவியலாமல் முறிந்து விட்டிருந்தது என்றபோதும், கிளிண்டன் நிர்வாகம் தொடங்கி அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்களால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்ற “அமைதி நிகழ்ச்சிப்போக்கு” என்ற தேய்ந்துபோன முகப்பு அலங்காரத்தையும் ட்ரம்ப் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்.

வாஷிங்டனின் நிபந்தனையற்ற ஆதரவுடன், நெத்தனியாகுவின் அரசாங்கம் சமீபத்தில், அரசின் அத்தனை குடிமக்களுக்குமான சமத்துவத்தின் உத்தியோகபூர்வ அங்கீகரிப்பை கைவிட்டு இனப்பாகுபாட்டை அரசியல்சட்டக் கோட்பாட்டின் மட்டத்திற்கு உயர்த்தும் வகையில், இஸ்ரேல் “யூத மக்களின் ஒரு தேசிய-அரசு” என்று அறிவிக்கின்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.

அராபத், ராபின் மற்றும் கிளிண்டன் வெள்ளை மாளிகையின் ரோஜாத் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்ததற்குப் பிந்தைய கால்நூற்றாண்டு காலத்தில், பாலஸ்தீனிய மக்களுக்கான நிலைமைகள் கூர்மையாக மோசமடைந்திருக்கின்றன. இதனிடையே, இஸ்ரேல், வாஷிங்டனின் ஆதரவுடன், “அமைதி நிகழ்ச்சிபோக்கு” என்று சொல்லப்பட்டதை, முன்னெப்போதினும் மிகப்பெரும் அளவில் பாலஸ்தீன நிலத்தை கைப்பற்றுவதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் குடியேற்றங்களை பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கும், அத்துடன் இனப்பாகுபாட்டு அரசுக்கு நிகரான ஒன்றை வலுப்படுத்துவதற்குமான ஒரு மூடுதிரையாக பயன்படுத்திக் கொண்டது.

மேற்குக் கரை குடியேற்றங்களில் வாழும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 1990களின் இறுதியில் கிட்டத்தட்ட இரட்டிப்பானது. இப்போது அவர்களின் எண்ணிக்கை 1993 இல் இருந்ததைக் காட்டிலும் மும்மடங்காகி இருக்கிறது, கிட்டத்தட்ட 700,000 பேர் மேற்குக் கரையில் வாழ்கின்றனர், இன்னுமொரு 200,000 பேர் கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய நிலமாக இருந்திருந்ததில் வாழ்கின்றனர்.

இந்த “களத்திலுள்ள உண்மைகளுக்கு” துணையளிப்பாய், மேற்குக்கரை பகுதியை காசாவில் இருந்தும் ஜெருசலேமில் இருந்தும் இஸ்ரேலிய இராணுவத்தைக் கொண்டு பிரித்துவைத்திருப்பதும், அத்துடன் மேற்குக்கரையையுமே கூட சுவர்கள், பாதுகாப்பு சாலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய சோதனைச்சாவடிகளைக் கொண்டு தொடர்ச்சியற்ற பந்துஸ்தான்களது ஒரு தொகுப்பாய் வகுந்து வைத்திருப்பதும் இருக்கின்றன.

இஸ்லாமிய ஹமாஸ் அரசாங்கத்தால் ஆளப்படுகின்ற காசாவில், 11 ஆண்டுகால “பொருளாதார முற்றுகை”க்குப் பின்னரான நிலைமைகளை, ஒரு ஐ.நா. முகமை விடுத்த ஒரு புதிய அறிக்கை பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளில் சொல்வதானால், “பேரழிவுகரமானதாக” இருக்கின்றன. ஆயிரக்கணக்கான உயிர்களையும் அடிப்படை உள்கட்டமைப்பையும் அழித்திருக்கின்ற தொடர்ச்சியான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களும் இந்த முற்றுகையில் அடங்கும்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையால் திணிக்கப்பட்ட பொருளாதார மூச்சுத்திணறல், அத்துடன் சர்வதேச உதவியிலான கூர்மையான வெட்டு —ட்ரம்ப் நிர்வாகத்தால் பாரிய வெட்டுகள் திணிக்கப்படுவதற்கு வெகு முன்பே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் இது 10க்கும் அதிகமான சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது— ஆகிய இரண்டும் இந்த நிலைமைகளுக்கு காரணமாய் இருந்ததாக ஐ.நா. அபிவிருத்தி முகமையான UNCTAD தெரிவித்தது.

காசா துண்டுப்பகுதியில் வாழும் மக்கள், “ஆழமான துன்பங்களுடனும் உதவியைச் சார்ந்தும் வாழுகின்ற ஒரு மனிதப் பிரிவாக குறைக்கப்பட்டு விட்டிருக்கின்றன” என்று அந்த அறிக்கை தெரிவித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிராந்தியங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உலகின் மிக அதிகமானவையாக —ஒட்டுமொத்தமாய் 27 சதவீதத்திற்கு அதிகமாகவும் காசாவில் சுமார் 44 சதவீதமாகவும் இருக்கிறது— இருப்பதாக அது குறிப்பிட்டது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் 30 வயதுக்குக் கீழ்ப்பட்ட பாலஸ்தீனதீனர்களில் பாதிப்பேருக்கு வேலைவாய்ப்பில்லை.

உத்தரவுகளின் மூலமாக ஆட்சிசெய்கின்ற ஒரு தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியான மஹ்மூத் அப்பாஸின் தலைமையிலான பாலஸ்தீன அதிகாரம் (PA) என்று அறியப்படுகின்ற அரக்கன் தான் ஒஸ்லோ உடன்பாடுகளில் இருந்து பிறந்திருந்த ஒரே தாக்குப்பிடித்து நிற்கின்ற உருவாக்கமாகும். PA, உதவிகளாக வரும் கங்காணிப் பணவருவாய் மூலமாக பாலஸ்தீன முதலாளித்துவத்தின் ஒரு சிறு அடுக்கை வளப்படுத்தியிருக்கின்ற அதேநேரத்தில் இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பேரில் மேற்குக்கரையில் உள்ள மக்களைக் கண்காணிப்பதற்காக சேவைசெய்கிறது. பாதுகாப்பு படைகளுக்கும் மக்கள்தொகை எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம் இந்தப் பிராந்தியத்தில் தான் உலகின் வேறெந்த பகுதியை விடவும் அதிகமாய் இருக்கிறது என்பதுடன், அங்கே சிறைச்சாலைகள், பள்ளிகளை விடவும் மிகத் துரிதமான ஒரு வேகத்தில் கட்டப்படுகின்றன.

வாஷிங்டனில் இருந்த PLO அலுவலகத்தை மூடியும் மனிதாபிமான உதவிகளைத் துண்டித்தும் ட்ரம்ப் தனது தெள்ளத்தெளிவான சமிக்கைகளை அளித்து விட்டபோதும் கூட, PA இன் இராணுவமயமாக்கப்பட்ட போலிசுக்கான அமெரிக்க நிதி உதவி இடையூறில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, இந்த மாதத்தின் ஆரம்பத்தில் PA இன் பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகளின் ஒரு பிரதிநிதிக்குழு சிஐஏ உடன் பேச்சுவார்த்தைகள் நடத்த வாஷிங்டனுக்கு பயணம் செய்தது.

ஒஸ்லோ உடன்படிக்கைகளை நோக்கிய PLO இன் பாதையில், நோர்வேயால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இரகசிய பேச்சுவார்த்தைகளது ஒரு வரிசையும், PLO பயங்கரவாதத்தை கைவிட்டுவிட்டதாகவும் “மத்திய கிழக்கு மோதலில் சம்பந்தப்பட்ட அத்தனை கட்சிகளும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் இருப்பதற்கு கொண்டிருக்கும் உரிமையை அங்கீகரிப்பதாக”வும் 1988 இல் ஜெனீவாவில் அராபத் பகிரங்கமாக அறிவித்ததும் அடங்கும்.

இன்னும் மேலே போய் இஸ்ரேலை அங்கீகரிக்கச் சொல்லி மேற்கு ஊடகங்களால் அழுத்தமளிக்கப்பட்ட போது, அராபத் கடுமை பொங்க பதிலளித்தார், “போதும் அது போதும். என்ன என்னை ஆடை அவிழ்க்கும் நடனமாடச் சொல்கிறீர்களா? அது உகந்ததாக இருக்காது.”

ஆடை அவிழ்க்கும் நடனம் இறுதியில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளை மாளிகையின் புல்தரையில் பூர்த்தியானது.

PLO போராளிகளது தீரமும் சுய-தியாகமும் மத்திய கிழக்கு முழுமையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்து வந்திருந்தது. என்றபோதும், PLO, இறுதியில் ஒரு நாடுகடந்து வாழ்ந்த பாலஸ்தீன முதலாளித்துவத்தின் தேசியவாத அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதும், அரபுத் தொழிலாள வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு உண்மையான விண்ணப்பம் செய்வதற்கு இயலாததாகவும் விருப்பமற்றிருந்ததுமான ஒரு இயக்கமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான் மற்றும் பிறவெங்கிலும் இருந்த பிற்போக்கான ஆட்சிகளை —பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் துன்புறுத்தியதில் அவை ஒத்துழைத்தன என்பதோடு ஜோர்டானில் பாலஸ்தீனர்கள் மீதான 1970 “கறுப்பு செப்டம்பர்” படுகொலை, மற்றும் 1975 இல் கராண்டினா மற்றும் டெல் அல் சாதார் முகாம்களில் இருந்த பாலஸ்தீனியர்கள் மீதான லெபனானிய ஃபலஞ்சிஸ்ட் படுகொலையில் சிரியா உடந்தையாக இருந்தமை ஆகியவை உள்ளிட அவர்களுக்கு எதிரான நேரடியான தாக்குதல்களை அவை நடத்தின என்கிறபோதும்— அது சார்ந்திருந்தது.

இறுதியில், ஏகாதிபத்தியத்திற்கு PLO சரணடைந்ததற்கும் எந்த மக்களை விடுதலை செய்யப் போவதாக அது கூறியதோ அந்த மக்களையே ஒடுக்குவதற்கான ஒரு வெளிப்பட்ட சாதனமாக அது உருமாறியதற்கும் —2004 இல் அராபத் பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டமை பின் அவரது விளக்கப்படாத மரணம் ஆகியவையும் இதில் அடங்கும்— பிரிக்கமுடியாத ஒரு தர்க்கம் அங்கே இருந்தது. அதன் பரிணாமவளர்ச்சியானது, தென் ஆபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், நிகராகுவாவில் சாண்டிநிஸ்டாஸ், எல் சல்வடாரில் FMLN மற்றும் பிற உள்ளிட, ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமாக தேசிய விடுதலைக்கு வாக்குறுதியளித்த மற்ற இயக்கங்கள் பயணித்த மிகத் தேய்ந்து போன ஒரு பாதையையே பின்பற்றி வந்திருந்தது.

PLO, பல்வேறு அரபு ஆட்சிகளுக்கு இடையிலான தந்திரஉத்திகளைக் கொண்டும், வாஷிங்டனுக்கும் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கும் இடையிலான பனிப் போரை சுரண்டிக் கொள்வதன் மூலமாகவும் தனது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்து வந்திருந்தது. தியாகம், மனச்சாட்சியை விற்கும் இந்த பேரத்தின் (Faustian bargain) பகுதியாக, அரபு அரசுகளுக்குள்ளான வர்க்கப் போராட்டத்தின் விடயத்தில் வெளிப்படையாக நடுநிலையாக இருந்தது.

உற்பத்தியின் முன்னினும் அதிகரித்த உலகளாவிய ஒருங்கிணைப்பின் அடிப்படையில் உலக முதலாளித்துவத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றங்கள் PLO சார்ந்திருந்த அந்த சக்திகளை பலவீனப்படுத்திய நிலையில், 1980களின் இறுதிக்குள்ளாக, இந்த பேரத்திற்கான பிரதிபலன்கள் நிலுவையில் விடப்பட்டன. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சியை நோக்கியும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை நோக்கியுமான திருப்பம், தேசியவாத அரபு ஆட்சிகளாக சொல்லப்பட்டவை முன்னெப்போதினும் நெருக்கமாய் ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்கத் திரும்பியதுடன் கைகோர்த்து நடந்தது.

பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குள்ளும் கூட, இந்த நிகழ்ச்சிபோக்கானது முதல் பாலஸ்தீனக் கிளர்ச்சி (intifada) உடன் இணைந்து நிகழ்ந்தது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெடித்த சுயாதீனமானதும் தன்னெழுச்சியானதுமான கிளர்ச்சியானது, கீழிருந்தான ஒரு போராட்டம் சுதந்திர முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் தனது திட்டத்தை அச்சுறுத்தும் என அஞ்சிய PLO வின் தலைமையை எதிர்த்தும் வெடித்திருந்தது.

ஒஸ்லோ உடன்படிக்கைகளுக்கு 25 ஆண்டுகளின் பின்னர், இந்த தேசியவாத திட்டம் முகம்கொடுக்கின்ற மறுக்கமுடியாத முட்டுக்கட்டை நிலையும் மற்றும் சீரழிவும், லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு மிகசமீப ஊர்ஜிதப்படுத்தலை வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளில், ஒரு முந்தைய வரலாற்றுக் காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புபட்டதாய் இருந்திருந்த ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகள், ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக புரட்சிகரமாய் அணிதிரட்டப்படுவதன் மூலமாக மட்டுமே சாதிக்கப்பட முடியும்.

பாலஸ்தீன மக்களின் விடுதலை, ஒரு “இரண்டு-அரசு தீர்வு”க்கான ஏகாதிபத்திய மத்தியஸ்தத்திலான பேச்சுவார்த்தைகளின் மூலமாக ஒருபோதும் அடையப்படப் போவது கிடையாது. பல தசாப்த கால ஒடுக்குமுறை, வறுமை மற்றும் வன்முறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதானது, உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டும் ஒரு போராட்டத்தின் பகுதியாக மத்திய கிழக்கின் ஒரு சோசலிச ஒன்றியத்துக்கான போராட்டத்தில் யூத மற்றும் அரபுத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே எட்டப்பட முடியும்.

ஆசிரியரின் பரிந்துரை:

யசார் அரஃபாத்: 1929-2004 [PDF]

[12 November 2004]

ரமல்லாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அராபத்திற்கு இரங்கல்

[13 November 2004]