World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Right wing violence in Germany and the government's response

ஜேர்மனியில் நாசிகளின் தாக்குதலும் அரசாங்கத்தின் பிரச்சாரமும்

By Peter Schwarz
11 August 2000

Use this version to print

கடந்த பத்து நாட்களாக வெளிநாட்டவர்களுக்கு எதிரான பயங்கரவாதம் ஜேர்மனியில் அரசியல் விவாதத்திற்குரிய விடயமாகியுள்ளது. இதுவரை மூடிமறைக்கப்பட்டு அல்லது சிறிய விடயமாகக் கருதப்பட்டது திடீரென கவனத்திற்குரிய மத்திய புள்ளியாகியுள்ளது. பத்திரிகைகளில் ஒரு தொகை தலையங்கக்கட்டுரைகள், விமர்சனங்கள், இந்நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளுடன் வெளிவந்துள்ளதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவ்விடயம் தொடர்பான விசேட ஒளிபரப்புக்களை செய்தன. முன்னர் உள்ளூர் பத்திரிகைகளில் ஒரு சிறுகுறிப்பாக அல்லது குறிப்பிடப்படாதிருந்தவை தற்போது ஜேர்மன் முழுவதும் நிகழும் சம்பவங்கள் தொடர்பாக செய்தி வெளிவிடுகின்றன.

இவ்வகையில் ஜேர்மன் மறு இணைப்பிற்கு பின்னர் பரவலான வெளிநாட்டவர்களுக்கு எதிரான முழு அளவிலான நடவடிக்கைகள் தெளிவாகியுள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் நாசிகளின் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் 5,223 யூத எதிர்ப்பு, வெளிநாட்டவர்களுக்கு எதிரானதும் வலதுசாரிகளின் தாக்குதல் முறையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இது நாளொன்றிற்கு 30 தாக்குதல்களாகும். அறிவிக்கப்படாத தாக்குதல்கள் தொடர்பாக ஊகம் செய்யவே முடியும்.

முன்னைய கிழக்கு ஜேர்மன் பிரதேசங்களில் சில இடங்கள் வலதுசாரி குண்டர்களினால் நாளாந்தம் பயங்கரவாதத்திற்கு உள்ளாகின்றது. கறுத்த, மஞ்சள் தோல் நிறம் கொண்டவர்கள், வீடற்றவர்கள், மாற்றுக்கருத்துடையவர்களை போன்ற வெளித்தோற்றமுடையோர் தெருக்களில் தனியாகப் போவதை தவிர்த்துக்கொள்வதுடன் இரவு நேரங்களில் புகையிரத நிலையங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் விரும்பப்படாத இடங்களை தவிர்த்து கொள்வது நன்மையானது எனக்கருதுகின்றனர். கிழக்கு பிரதேசங்களில் ஒழுங்கான ஜேர்மன் குடும்பத்தை உருவாக்க இயலாமையுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கணவனற்ற தாய்மார்கள் கூட தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

மேற்குப் பகுதிகளில் வெளிநாட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது குறிப்பிட்டளவு குறைவாகவே உள்ளது. ஆனால் இங்கு கூட எதையும் கருத்தில் எடுக்காத காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்காட்டும் நவ பாசிசக்குழுக்கள் இயங்குகின்றன. இது சோலிங்கன், மோல்ன் ஆகிய இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தீ வைப்புக்களால் இரு குடும்பங்கள் உயிரிழந்ததன் மூலம் 1992 இலிருந்து தெளிவாகியுள்ளது. இரண்டு கிழமைக்கு முன்னர் வேயர்கான் என்ற இடத்தில் நடந்த கிரனைட் குண்டு வெடிப்பில் 9 வெளிநாட்டவர்கள் உயிராபத்தான முறையில் காயமடைந்தது இப்பயங்கரவாதம் ஒரு புதிய மட்டத்தை அடைந்திருப்பதையே காட்டுகின்றது. இதுவரை இதுதொடர்பான சூத்திரதாரிகள் உறுதிசெய்யப்படாத போதும் ரஷ்யாவிலிருந்து குடிவந்த யூதர்களே தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதால் இதற்கான பின்னணியில் நவபாசிசவாதிகளே இருக்கலாம் என அரச வழக்குத்தொடுனர் ஊகிக்கின்றனர்.

பாசிச இயக்கத்தின் அளவு

பாசிச பயங்கரவாதத்தின் அளவு ஒன்றும் புதிதல்ல, எப்படியிருந்தபோதும் தொலைத்தொடர்பு சாதனங்களும் அரசியல்வாதிகளும் காலம் சென்றே இதை "கண்டுபிடித்துள்ளனர்". அரசியல் அமைப்பின் பாதுகாப்பிற்கான அமைச்சின் தகவல்களை நம்பினால் அதன்படி கடந்த இரு வருடங்களில் வலதுசாரித் தாக்குதல்களினதும் குற்றச்செயல்களினதும் மொத்த அளவு மாறாதுள்ளது அல்லது சிறிதளவு குறைந்துள்ளது. 1998 இலேயே இறுதியாக இக்கணிப்பீடு வெளிவிடப்பட்டது. இதன்படி வலதுசாரிப் பின்னணியை கொண்ட தாக்குதல்களின் அளவு 708 ஆகும். இது ஆகக்கூடியளவு தாக்குதல்கள் நடந்த வருடமான 1992 உடன் ஒப்பிடுகையில் அரைவாசியாகும். இத்துடன் அரசியலமைப்பிற்கு விரோதமெனக் குறிப்பிடப்பட்ட அமைப்புக்களால் பாவிக்கப்பட்ட பிரச்சார குற்றச்செயல்களின் அளவான 11,000 குற்றச்செயல்களும் மேலதிகமாக வருகின்றன.

இங்கு மாற்றமடைந்துள்ளது என்னவெனில் வலதுசாரிகளின் அமைப்பு வடிவமாகும். 1980 இலிருந்து மொத்தமாக 20 வலதுசாரி அமைப்புக்கள் அரசால் தடைசெய்யப்பட்டு கலைக்கப்பட்டது. இதில் அதிகமானது 90 ம் ஆண்டுகளின் முதல் அரைப்பகுதியில் நிகழ்ந்தது. இது ஒழுங்கமைக்கப்பட்ட நவபாசிசவாதிகளை தற்காலிகமாக பின்னடையச்செய்தது. இதேவேளை மொட்டைத் தலையர்களின் இசைக்குழுக்கள் பாரியளவில் வளர்ச்சியடைந்தது. இனவாத, யூத எதிர்ப்பு குழுக்களின் இசைநிகழ்ச்சிகள் நவ நாசிசவாதிகளின் கூடுமிடமாகியது. இப்படியான இசைநிகழ்ச்சிகளின் அளவு 1993 இல் 30 ஆகவிருந்தது 1998 இல் 128 ஆக பாரிய வளர்ச்சி கண்டது. வலதுசாரி இசைத்தட்டுக்கள், நாடாக்கள் பாரியளவில் பரப்பப்பட்டுள்ளது. 1997 ம் ஆண்டு பொலிசார் நாடளவிலான தேடுதல்களின் மூலம் சட்டவிரோத உள்ளடக்கங்களை கொண்ட 45,000 இசைத்தட்டுக்களை கைப்பற்றினர்.

இவ்வலதுசாரிகள் "இணைந்த தோழமையை" [Freie Kameradschaften (free associations).] புதிதாக ஒழுங்கமைத்தனர். இதற்கு ஒரு மத்தியப்படுத்தப்பட்ட கட்டமைப்பு இல்லாதிருந்தது. ஆனால் வலைத்தளங்களூடாகவும் ஏனைய தொலைத் தொடா்புகளூடாகவும் நெருக்கமாக இணைந்திருந்தனர். தற்போது அரசியலமைப்பு பாதுகாப்புக்குழு இப்படியான 150 அமைப்புக்களை கணக்கெடுத்துள்ளது. இவற்றில் கூடியவை Niedersachsen, Mecklenburg-Vorpommern, Sachsen-Anhalt, Berlin, Brandenburg ஆகிய மாநிலங்களில் இயங்குகின்றன. இப்படியான அமைபுக்களில் 2,200 இலிருந்து 2,400 பேர் வரையிலான நவ நாசிகள் இயங்குவதாக அரசியலமைப்பு பாதுகாப்புக்குழு மதிப்பிட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சியும் [NPD] அதன் இளைஞர் அமைப்பான இளம்தேசிய ஜனநாயகவாதிகளுமான [JN] உம் "இணைந்த தோழமையை" [Freien Kameradschaften] மத்தியிலிருந்து ஒழுங்கமைக்க ஆரம்பித்துள்ளன. ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சியும் [NPD] இவ்வகையில் பல ஊர்வலங்களை ஒழுங்கு செய்துள்ளது. இதில் கூடுதலாக நவ நாசிகளே கலந்துகொள்கின்றனர். இந்த வருட ஆரம்பத்தில் Brandenburg கோட்டை வாசலினூடாக ஊர்வலம் நடாத்தப்போவதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

தேசிய ஜனநாயகக் கட்சி 1964 ம் ஆண்டு நிறுவப்பட்டதுடன் 70 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஆச்சரியப்படத்தக்க, குறுகிய தேர்தல் வெற்றிகளை அடைந்தது. வெகுவிரைவில் அவர்களது அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் ஆளுமையும் குறைந்ததுடன் இக் கிழடுதட்டிய கட்சி கூடுதலாக நாசி அரசாங்கத்தை புகழ்ந்துரைப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

Brandenburg ஐ சேர்ந்த Udo Voigt ஐ தலைவராக தெரிவு செய்ததன் மூலம் தேசிய ஜனநாயகக் கட்சி நான்கு வருடங்களுக்கு முன்னர் தனது பாதையை மாற்றிக்கொண்டது. அவர்கள் தங்களது வேலைகளை ஜேர்மனின் புதிய மாநிலங்களில் கவனத்தை செலுத்தி அங்கு புதிய, கூடுதலாக இளைய கட்சி அங்கத்தவர்களை அணிதிரட்டிக்கொண்டனர். தற்போது கூடுதலான அங்கத்தவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 6,000 தேசிய ஜனநாயகக்கட்சியின் அங்கத்தவர்களில் 1,000 பேர் Sachsen-Anhalt ஐ சேர்ந்தவர்கள். இங்கு இக்கட்சி பல உள்ளூராட்சி சபை அங்கத்தவர்களை கொண்டிருக்கின்றது.

கொள்கை ரீதியில் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் [DDR] கலைப்பினால் உருவாகிய சமூகவிளைவின் கசப்புக்களை சாதகமாக்கிக் கொள்ள தேசிய ஜனநாயகக் கட்சி முயல்கின்றது. அவர்கள் ஒரு "ஜேர்மன்-மக்கள் சோசலிசத்திற்காக" போராடுவதாக கூறுவதுடன் முதலாளித்துவ எதிர்ப்பு, "பூகோளமயமாக்குதலுக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பின் கட்டளைக்கும் எதிரான" மேற்கு ஐரோப்பிய எதிர்ப்பு கோசங்களையும் முன்வைக்கின்றனர். கிழக்கிலிருந்து வரும் ஒரு சில கட்சித் தலைவர்கள் ஜேர்மன் குடியரசிற்கு எதிராக ஜேர்மன் ஜனநாயக குடியரசு சிறந்த அரசென கூறுகின்றனர். தற்போது கட்சியின் சிந்தனையாளர்களில் வரலாற்று சடத்துவவியலுக்கான முன்னால் ஜேர்மன் ஜனநாயக குடியரசின் உயர்பாடசாலை ஆசிரியரான Michael Nier உம் ஒருவராவர்.

அரசியலமைப்பு பாதுகாப்புக்குழுவின் தகவல்கள் தெளிவற்றும், சரியான முறையில் வரையறுப்பு செய்யப்படாதிருந்த போதும் கூட, அது தீவிர வலதுசாரிகள் பாரிய அமைப்பாக இல்லாதிருந்தாலும் ஒரு தீவிர சிறுபான்மை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

அரசியலமைப்பு பாதுகாப்புக்குழு "நவ நாசிகளுக்கும் பயங்கரவாதத்திற்கு தயாரான தீவிர வலதுசாரிகளுக்கும்" இடையே வித்தியாசப்படுத்திய போதிலும் முதலாவது குழுவில் 2,400 பேரும் இரண்டாவது குழுவில் 8,200 பேர் இருப்பதாகவும் கணக்கிட்டுள்ளது. இவ்விரண்டாவது குழுவில் "தீவிர வலதுசாரி மொட்டைத் தலையர்கள்" அடங்குகின்றனர். இதைவிட தேசிய ஜனநாயகக் கட்சியின் 6,000 அங்கத்தவர்கள், ஜேர்மன் மக்கள் குழுவினதும் [DVU] ஜேர்மன் குடியரசுக் கட்சியினதும் [REP] 15,000 அங்கத்தவர்கள் உள்ளடங்கலான 18,000 பேர் இன்னும் உள்ளடங்குகின்றனர். ஜேர்மன் மக்கள் குழுவும் ஜேர்மன் குடியரசுக் கட்சியும் தேர்தல்களின் போதே வெளிப்பட்டாலும் 1998 மாநிலத் தேர்தல்களில் Sachsen-Anhalt இல் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஜேர்மன் மக்கள் குழு [DVU] 13% வாக்குகளை பெற்றது.

சமுதாயத்தில் சில பிரிவுகளில் இவ் வலதுசாரிகள் ஆளுமை செலுத்துகின்றனர். முக்கியமாக கிழக்கு ஜேர்மனியில் பாடசாலைகள் நாளாந்தம் இவ் வலதுசாரிகளின் பயங்கரவாதத்திற்கு உள்ளாகின்றன. இவர்களுக்கு அடிபணியாத மாணவர்கள் தமது உயிருக்கு அஞ்ச வேண்டிய நிலைமைக்கு உள்ளாகின்றனர். Brandenburg மாநிலத்தில் 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுள் எடுக்கப்பட்ட கணிப்பீடு ஒன்று 30% ஆன மாணவர்கள் வலதுதீவிரவாத கருத்துக்களுக்கு ஆதரவை கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

வலதுசாரிகளுக்கு எதிராக பகிரங்கமாக எவராவது இயங்கினால் அவர் கொலை எச்சரிக்கையை எதிர்நோக்க வேண்டி இருப்பதுடன், பொலிசாரிடமிருந்து பாதுகாப்பையும் எதிர்பார்க்க முடியாது. தொழிற்சங்கவாதி ஒருவர் நவ நாசிகளுக்கு எதிரான பிரசுரம் ஒன்றை வெளிவிட்டதற்காக பகிரங்கமாகவே கொலைப் பயமுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது நாடுமுழுக்க பரவலாக தெரிந்தவிடயமாகும். இவர் நாசிகளுக்கு ஆத்திரமூட்டியதால் அது அவரது சொந்த தவறு என அம்மாநிலத்திற்கான சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உள்நாட்டமைச்சர் கூறியுள்ளார். இது ஒரு தனியான நிகழ்வல்ல. சில நகரங்களில் சிறிய வலதுசாரிக் குழுக்கள் ஆட்சி செலுத்துவது ஆச்சரியப்பட கூடியதொன்றல்ல.

அரசியல் வாதிகளின் பதில்

நீண்டகாலமாக வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக மெளனம் சாதித்த, மூடிமறைத்த அல்லது சிறிய விடயம் எனக்கூறிய அரசாங்கத்தினதும் கட்சியின்களினதும் பிரதிநிதிகள் தற்போது வலதுசாரிகளுக்கு எதிராக அரச அமைப்புக்களை பலப்படுத்த கோரிக்கை விடுகின்றனர்.

ஜேர்மன் பிரதமர் ஷ்ரோடர் தனது கோடைகால விடுமுறையின் மத்தியில் மத்திய, மாநில அரசாங்கங்கள் வெளிநாட்டவர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், இதற்கு கடுமையான பொலிசாரும், கடுமையான நீதியமைப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார். உள்நாட்டமைச்சரான ஷிலி வலதுசாரிகளுக்கு எதிராக ஜேர்மன் எல்லை பாதுகாப்புபடையை ஈடுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். எதிர்கட்சியான CDU ஊர்வலங்களுக்கான உரிமையை கட்டுப்படுத்தும் சட்டத்திருத்தத்தை கொண்டுவர முன்மொழிந்ததுடன், Bayern மாநில அரசு தேசிய ஜனநாயகக் கட்சியை தடை செய்யவும் இளைஞர்கள் குற்றச்சட்டத்தை கடுமையாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. வலைத்தளம் மீதான தணிக்கைகள் தொடர்பாக மீண்டும் கலந்துரையாடப்படுகின்றது.

அரசைப்பலப்படுத்த பசுமைக்கட்சி [Green] உரத்த குரலில் அழைப்பு விடுகின்றது. இக்கட்சியை சேர்ந்த வெளிநாட்டமைச்சரான Fisher நியூயோர்க்கின் நகர பிதாவான Rudolph Giuliani இன் புகழ்பெற்ற கோரிக்கையான "எந்தவித தயவும் காட்டக்கூடாது" என்பதை துணைக்கு அழைத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பமைச்சரான Trittin "தாராளவாதம் முடிவுக்கு வந்துள்ளது" என அழைப்புவிட்டு தேசிய ஜனநாயகக் கட்சியை தடை செய்யும் கோரிக்கையுடன் இணந்து கொண்டுள்ள முதலாவது அமைச்சராவார். அவர் மேலும் "பல பசுமைக்கட்சி அங்கத்தவர்கள் பதட்டமடைய ஆரம்பித்த போதும் நாம் ஒடுக்குமுறை என்ற சொல்லை பிரயோகிக்க வேண்டியுள்ளது" என தெரிவித்தார்.

இந்த கோரிக்கையுடன் ஜனநாயக உரிமையும், அது தொடர்பான கொள்கைகளும் இல்லாது போகின்றன. வலதுசாரிகளின் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இப்படியான நடவடிக்கைகள் வெளிப்படையாகவே பயனற்றவையாகும். ஜேர்மனியைப்போல வேறு எந்தவொரு நாட்டிலும் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக கூடியளவும் பரந்ததுமான சட்டங்கள் இல்லை. பாசிச சின்னத்தை வெளிக்காட்டுவதும், தனிவரலாற்று ஆய்வு நோக்குடன் கூட கிட்லரின் "எனது போராட்டம்" [Mein Kampf] என்ற புத்தகத்தை வெளிவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 1980 இலிருந்து 20 வலதுசாரி இயக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளது போல், இப்படியான நடவடிக்கைகளும் நவீன பாசிசவாதிகளின் வளர்ச்சியை தடைசெய்யவில்லை. பாசிச பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கான விளைநிலத்தை இப்படியான அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அணுகப்போவதில்லை.

வலதுசாரிகளின் விளைநிலம்

அதிகரித்துவரும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தன்மைக்கும் சமூக நிலைமையின் வீழ்ச்சிக்கும் இடையிலான தொடர்பை பல புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நவநாசிகளின் ஆதிக்கம் கூடிய இடங்களில் வேலையற்றோர் விகிதம் 20% ற்கும் மேலாக உள்ளது. இதைக் கருத்தில் எடுத்தால் கூட மக்களிடையே அதிகரித்துவரும் அவநம்பிக்கை வலதுசாரி வழியைத் தேடுவதற்கு காரணம் என்ன என்பதை விளங்கப்படுத்த முடியாது. இந்நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த, சமூக ரீதியான தீர்வு சாத்தியமில்லை என்பதும் ஒவ்வொருவருக்கு எதிராக ஒவ்வொருவர் போராட வேண்டும் என்ற நோக்கமும், தேசியவாதம் பகிரங்கமாகவே அங்கீகரிக்கப்படுவதுமான அவசியமாக ஒரு வெளிப்படையான சூழ்நிலை இப்படியான வளர்ச்சிக்கு தேவையாகும்.

தற்போதைய அரசாங்கத்தினதும், முன்னைய அரசாங்கத்தினதும் முழு அரசியலும் இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது. ஜேர்மன் மறு இணைப்பு சந்தையின் புகழ்ச்சியையும், தனி மனிதர் செல்வந்தராவதையும் உருவாக்கியதுடன் சமூக கேள்விகளுக்கு அரசு பதிலளிப்பதை நிராகரித்தது. அன்றிலிருந்து ஒரு தொடர் சமூக வெட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் மில்லியன் கணக்கான வேலைத்தலங்கள் அழிக்கப்பட்டன. ஒருங்கிணைந்த ஜேர்மனி உலக அரசியலுள் மீண்டும் தலையிட்டதுடன் இறுதியாக தேசிய நலன்கள் மீண்டும் தீவிரமாக பாதுகாக்கப்படுகின்றது என்ற அழைப்பின் கீழ் கொசவோவில் முதலாவது இராணுவத் தலையீட்டில் ஈடுபட்டது. நாசிகளின் வாசகமான "நான் ஜேர்மனியனாக இருப்பதில் பெருமைப்படுகின்றேன்" என்பது இதற்கு வெகுதூரத்தில் இல்லை.

தற்போதைய நிலைமைகளுக்கான அரசின் பொறுப்பு அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டில் தெளிவாகியது. 1992 இல் அகதிகளின் விடுதிகளும், வெளிநாட்டவர்களின் வீடுகளும் எரிந்து கொண்டிருக்கையில் இப்பெரிய கட்சிகள் அகதிகள் உரிமையை கட்டுப்படுத்துவதில் ஒன்றாக ஈடுபட்டிருந்தன.

வெளிநாட்டவர்களை பேஸ்போல் [Baseball] மட்டைகளால் மொட்டைத் தலையர்கள் தாக்குவது அரசாங்கம் நாளாந்தம் நடைமுறைப்படுத்துவதை அவர்களின் முட்டாள் தனமான பாஷையில் வெளிப்படுத்துவதாகும். அடைக்கலம் கோருவோர்களை மனிதாபிமானமற்ற முறையில் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்புவதும், மாதக்கணக்கில் நாடுகடத்தும் சிறைகளில் அடைத்துவைப்பதும், அடிப்படை ஜனநாயக சமூக உரிமைகள் பறிக்கப்படுவதும் அரசாங்கத்தினது உத்தியோகபூர்வ ஆசீர்வாதத்துடனாகும். ஆனால் வலதுசாரிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

அரசைப்பலப்படுத்தல்

அரசியல்வாதிகளும் தொலைத்தொடர்பு சாதனங்களும் திடீரென வலதுசாரிகளின் பயங்கரவாதம் தொடர்பாக மூர்க்கமாக பிரதிபலிப்பது வெளிநாட்டவர்களின் தலைவிதி தொடர்பான கவலையால் அல்ல மாறாக சர்வதேச ரீதியில் ஜேர்மனியின் மதிப்புத் தொடர்பாக ஆகும். யூத எதிர்ப்பு பயங்கரவாதம் தொடர்பான செய்திகளும் நவநாசிகளின் ஊர்வலங்கள் தொடர்பான படங்களும் உலக ரீதியில் தன்னை ஒரு பெரிய சக்தியாக பலப்படுத்த முயலும் ஜேர்மனியின் நிலைமைக்கும், உலகம் முழுக்க தங்களது நலன்களை வெளிப்படுத்தும் ஒரு அரசுக்கு இது மிகவும் சாதகமற்றதொன்றாகும். இத்துடன் Green Card ஒழுங்கின் கீழ் சர்வதேச கணனி நிபுணர்கள் விண்ணப்பிப்பதை ஜேர்மனியில் தமது உயிருக்கு அவர்கள் அஞ்ச வேண்டியிருக்கும் என்ற நிலைமை மிகவும் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது.

வலதுசாரிகளின் தீவிர பிரதிபலிப்பு நீண்டகாலமாக இது அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு அல்லது முன்மொழியப்பட்டிருந்தமையும் இது தற்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டதுமான ஒரு வளர்ச்சியையே காட்டுகின்றது. அரசாங்கம் இறுதியாக வேண்டுவது என்னவெனில் தற்போது அவர்கள் நடைமுறைப்படுத்தும் வரி, ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ஊடாக ஒரு தொடர் சமூக வெட்டுக்களை முன்னெடுக்கும் நிலைமையின் கீழ் இதை திசைதிருப்ப வலதுசாரிகளுக்கு எதிரான பரந்த சமூகரீதியான அணிதிரட்டலை செய்ய முயல்கின்றது.

"வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டம்" அரசைப்பலப்படுத்தலின் ஊடாக செய்ய முயல்வதற்கான அடிப்படைக் காரணம் இதுதான். உண்மையில் வலதுசாரிகளுக்கு முடிவுகட்டுவது என்று விரும்பினால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களான வெளிநாட்டவர்கள் மீதான தற்போதைய பாதகமான தன்மைகளை இல்லாது ஒழிப்பதுடன் அகதி அந்தஸ்துக்கான உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதை விரும்பவில்லை. அவர்களுக்கு தற்போது மிக அவசியமானது என்னவெனில் வலதுசாரிகளுக்கு எதிராக மட்டுமல்லாது பரந்துபட்ட மக்கள் மத்தியிலிருந்து எதிர்காலத்தில் எழப்போகும் எதிர்ப்பில் இருந்தும் அரச அதிகார அமைப்பை பாதுகாத்தலாகும்.

கட்சியை தடைசெய்வது, ஜனநாயக உரிமைகள் மீதான கட்டுப்பாடு, அரச தணிக்கையை தீவிரமாக்கல் போன்றவை இதனுடன் தொடர்புபடுத்தியே விமர்சிக்கப்டவேண்டும். வலதுசாரிகளுக்கு எதிராக இப்படியான நடவடிக்கைகள் எந்த விளைவுகளையும் அல்லது ஒரு குறுகிய கால விளைவுகளையே கொண்டிருக்கும். இது ஒரு முன் உதாரணமாக ஜனநாயகம் மீதான கட்டுப்பாட்டிற்கும், நீண்டகால நோக்கில் தவிர்க்கமுடியாதவாறு பரந்துபட்ட மக்கள் மீதே தாக்குதல் நடாத்துவதற்கு பயன்படுத்தப்படும். இந்த வழிமுறைகளால் வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்தை செய்வதனூடாக அரசை மீண்டும் வலதுபக்கம் நோக்கி செல்லவைப்பதுடன் இறுதியில் இது வலதுசாரிகளை பலப்படுத்தும்.

வலதுசாரி பயங்கரவாதத்திற்கும் அதன் அபாயத்திற்கும் எதிராக பயனளிக்கும் முறையில் போராட வேண்டுமானால் பரந்துபட்ட மக்கள் இதனுள் உள்ளிழுக்கப்பட வேண்டும். இதற்கு வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டம் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இவ்வகையில்தான் தற்போதைய நிலைமைகளுக்குள் அனைத்தையும் இழந்து ஐயுறவாதத்திற்கு உள்ளாகியிருப்போருக்கு மீண்டும் நம்பிக்கையை வழங்குவதுடன், வலதுசாரிகளின் அடித்தளம் இல்லாது ஒழிக்கப்படும் ஒரு சமுதாய சூழ்நிலை தோன்றும்.