World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Conditions deteriorate for Tamil masses in Jaffna

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் நிலைமை மோசமடைகிறது

By our own correspondent
16 August 2000

Use this version to print

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான எஸ்.சஞ்ஜீவன் இலங்கை ஆயுதப்படைகளினால் ஜூலை 13ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாடசாலை மாணவர்கள் ஜூலை 18ம் திகதியில் இருந்து மூன்று நாட்கள் பாடசாலைகளை பகிஷ்கரித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்ற ஒரு கிழைமையின் பின்னர் ரீ.ஆர்.விஜயகுலநாதன் என்ற 26 வயது இளைஞன் ஆயுதப் படைகளால் கரணவாயில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு மூன்று நாட்களின் பின்னர் (ஜூலை 23) அல்வாயைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி அரசாங்கப் படைகளால் மாலி சந்தியில் உள்ள படையினரின் முகாமில் பாலியல் வல்லுறவுக்கு பலியாக்கப்பட்டார்.

சஞ்சீவனின் இறுதி ஊர்வலத்தில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதோடு ஊர்வலத்தை சஞ்ஜீவனின் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வழியாக இட்டுச் செல்லவும் முயன்றனர். ஆனால் ஆயுதப் படைகள் இம்முயற்சியை தடுத்து நிறுத்தியதோடு ஊர்வலத்தை வேறு வழியில் திசை திருப்பிவிட்டனர். இறுதிச் சடங்கின் மறுநாள் பாடசாலை பகிஷ்கரிப்பு ஆரம்பமாகியது. பொதுஜன முன்னணியின் ஆயுதப் படைகள் மாணவர்களைப் பயமுறுத்தும் வகையில் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டதோடு, சஞ்ஜீவன் ஒரு விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் ஒரு சில நாட்களுக்குள் பலாலியில் அமைந்துள்ள இராணுவ உயர் பீடம், கீழிறங்கி வந்து சஞ்ஜீவனின் கொலை பற்றிய விசாரணையை நடாத்த உத்தரவிட்டது. அத்தோடு பரந்த அளவிலான எதிர்ப்பு இயக்கம் காரணமாக இராணுவம் பாடசாலை பகிஷ்கரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறிக் கைது செய்த இரண்டு மாணவர்களையும் விடுதலை செய்யத் தள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இராணுவ நடவடிக்கைகளில் ஒரு தேக்க நிலை தற்சமயம் காணப்பட்ட போதிலும் குடாநாடு பூராவும் ஒரு மாபெரும் பதட்டம் நிலவுகின்றது. ஏப்பிரல், மே மாத சண்டைகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேறி அகதிகள் முகாம்களிலும் தற்காலிகக் குடிசைகளிலும் வசிக்கத் தள்ளப்பட்டனர்.

அரசாங்கப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடும் மோதுதலுக்கு முகம் கொடுக்க நேரிட்ட தென்மராட்சி சாவகச்சேரி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் உள்ள அரியாலை, கொழும்புத்துறை, பாஷையூர், குருநகர் பகுதிகள் அரசாங்கப் படைகளின் தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களின் இலக்காக விளங்குகின்றன. பிரதேச சபைகள், தபால் கந்தோர், கல்வித் திணைக்களம் (கொத்தணி) பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கி கிளைகளும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களும் வடமராட்சி போன்ற "பாதுகாப்பான இடங்களுக்கு" இடம் பெயர நேரிட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து வந்த பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த யுத்த அழிவுகள் காரணமாக 900 மில்லியன் ரூபாக்கள் நஷ்டம் அடைந்துள்ளன.

சுமார் 100,000 மக்கள் வலிகாமத்துக்கும் (காங்கேசந்துறை, மானிப்பாய் தேர்தல் தொகுதிகள்) வடமராட்சிக்கும் (பருத்தித்துறை) இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் சுமார் 45,000 பேர் பாடசாலைகளிலும் வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் அடைக்கலம் புகுந்தனர். ஏனையோர் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இடங்களைத் தேடத் தள்ளப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணச் செயலக புனர்வாழ்வு பிரிவின்படி வலிகாமத்திலும் வடமராட்சியிலும் 1400 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளில் சிலர் 1995, 96ம் ஆண்டுகால கசப்பான அனுபவங்களிடையேயும் வன்னிக்கு இடம்பெயரத் தள்ளப்பட்டுள்ளனர். இக்காலப் பகுதியில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து 400,000 க்கும் அதிகமான மக்கள் வன்னிக்கு இடம்பெயர நெருக்கப்பட்டது தெரிந்ததே.

அனைத்துலக அரச சார்பற்ற அமைப்புக்களால் (NGO) வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை அவசியங்களும் முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகின்றது. அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டுக் கமிட்டி இதையிட்டு யாழ்ப்பாண அரசாங்க அதிபரிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. ஏனெனில் முகாம்களில் இடம்பெயர்ந்தவர்களில் 10 வீதமானவர்களே தங்கியுள்ளனர். இதன்படி 90 வீதத்துக்கும் அதிகமான அகதிகளுக்கு பங்கீட்டுப் பொருட்கள் கிடைக்காது போகின்றது.

அகதிகள் முகாம்களில் பெரும் நெருக்கடி காணப்படுவதால் சின்னமுத்து, வயிற்றோட்டம், கொப்பளிப்பான் மற்றும் தொற்று நோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாக யாழ் மாவட்ட சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். யாழ் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தகவல்களின்படி போதுமான கழிவறைகள் இல்லாமையும் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக் குறையாலும் தொற்று நோய்கள் பரந்த அளவில் வெடிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. எம்மிடம் போதிய சுகாதார அதிகாரிகள் இல்லை. எமக்கு 12 டாக்டர்கள் அவசியம். ஆனால் தற்சமயம் இருவர் மட்டுமே கடமையில் ஈடுபட்டுள்ளனர். குளிர்ச்சாதனப் பெட்டிகளின் பற்றாக்குறையினால் அவசியமான மருந்து வகைகளை பாதுகாத்து வைக்கும் சாத்தியம் இல்லாது போயுள்ளது. ஜெனரேட்டர்கள் இருந்தபோதும் எண்ணெய் இல்லை" என்றார்.

நுளம்புகளை ஒழிக்க அடிக்கப்படும் மலத்தியோன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இந்த ஆண்டு விநியோகிக்கப்படவில்லை. கொழும்பு அதிகாரிகளுக்கு இதையிட்டு பல தடவைகள் முறைப்பாடு செய்த போதும் மலத்தியோன் வந்து சேரவில்லை. இதன் விளைவாக செப்டம்பர், அக்டோபரில் மலேரியா அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையானது இலங்கையில் சகல குழந்தைகளும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை, வடக்கிலும் கிழக்கிலும் 900,000 குழந்தைகள் கல்வி, உணவு, உறைவிடம் இல்லாமலும் மறைமுகமான காயங்களுக்கும் உள்ளாகியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்பிரல் 22ல் விடுதலைப் புலிகள் ஆனையிறவு முகாமை கைப்பற்றியதில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தெற்கேயுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. அத்தோடு யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் புனித பட்றிக் கல்லூரி, புனித மரியாள் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி, புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, புனித ஜோசப் வித்தியாலயம் என்பன இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே ஆண்டு ஜூலை 31ம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த (உயர் தரம்) பரீட்சைக்கு தோற்றும் 9000 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயின்ற திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற வெளிமாவட்ட மாணவர்கள் அங்கிருந்து கப்பலில் வெளியேறும் நிலை ஏற்பட்டது.

முகாம்களில் தங்கியுள்ள பலரை நாம் பேட்டி கண்டோம். இந்த யுத்த காலத்தில் அவர்கள் பல தடவை இடம்பெயர்ந்து உள்ளனர். ஒரு தையல் தொழிலாளி கூறியதாவது: "அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதுதல்கள் அரியாலையில் மே 9ம் திகதி ஆரம்பித்தது. அன்று இரவு நாம் தூங்க முடியாது போய்விட்டது. அடுத்த நாள் காலை நாம் அரியாலையில் இருந்து வெளியேறினோம். நான் எனது தையல் இயந்திரத்தையும் மற்றும் பொருட்களையும் அப்புறப்படுத்த முடியாது போய்விட்டது. நாம் தற்சமயம் வேலை செய்யவும் முடியாது வீட்டுக்குத் திரும்பவும் முடியாது. நான் வேலை தேடி 15 தையல் கடைகளில் ஏறி இறங்கி விட்டேன். ஆனால் அவர்கள் வேலை வழங்க மறுத்துவிட்டனர். நாம் எப்படி வாழ்வது"?

முகாமில் தங்கியுள்ள ஒரு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவன் பின்வருமாறு தெரிவித்தார்: "நான் அரியாலையில் வசித்து வந்தேன். க.பொ.த.(உயர் தரம்) பரீட்சைக்கு படித்து வந்தேன். கடந்த மே மாதத்தில் இருந்து நாம் படிக்க முடியாது போய்விட்டது. எனது பாடக் குறிப்பு கொப்பிகள் எல்லாம் வீட்டில் கிடக்கிறது. என்னிடம் பாடசாலை சீருடை கிடையாது. ஆதலால் பாடசாலைக்கு ஒரு பழைய உடுப்புடனேயே செல்ல நேரிட்டுள்ளது. இந்த யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே நாம் படிக்கக் கூடியதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்".

அதே முகாமில் தங்கியுள்ள மற்றொரு அகதி கூறியதாவது: "நான் ஒரு மீன்பிடித் தொழிலாளி. எனக்கு 8 குழந்தைகள். மே 15ம் திகதி விடுதலைப் புலிகளின் ஷெல் குருநகரில் விழுந்து வெடித்தது. இதனால் எமக்குத் தெரிந்தவர்கள் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதனால் நாம் அங்கிருந்து வெளியேறினோம். அரசாங்கம் வழங்கும் அற்ப சொற்ப நிவாரணத்துடன் எம்மால் வாழ்க்கையை ஓட்ட முடியாது. அரசாங்கம் வழங்கும் பங்கீட்டுப் பொருட்கள் 15 நாட்களுக்குத் தன்னும் போதாது."

பொதுஜன முன்னணி அரசாங்கம் புதிய இராணுவத் தளபாடங்களை இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், செக் குடியரசு, ரஷ்யா, இந்தியா முதலான நாடுகளிடம் இருந்து தொடர்ந்து கொள்வனவு செய்கின்றது. இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே புதிய மோதுதல்கள் எக்கணமும் ஆரம்பிக்கும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது. இதனால் குடாநாட்டு தமிழ் மக்களின் நிலைமை மேலும் மோசமாகும்.