World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Sri Lankan Peoples Alliance regime turns to Sinhala chauvinists

இலங்கை பொதுஜன முன்னணி அரசாங்கம் சிங்கள சோவினிஸ்டுகள் பக்கம் திரும்பியுள்ளது

By Sarath Kumara and K. Ratnayake
18 August 2000

Use this version to print

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம், அதனது அரசியலமைப்பு சீர்திருத்தப் பொதியை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அது இரண்டு தோணியில் கால்வைக்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்றது. இந்த அரசியல் பொதி தமிழ் மக்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலான கடந்த 17 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொணர்வதை இலக்காகக் கொண்டு இருந்தது.

ஒரு புறத்தில் இது அரசியலமைப்பு திருத்த மசோதாவை வாபஸ் பெறத் தள்ளிய இனவாத பெளத்த பிக்குகளதும் சிங்கள சோவினிச குழுக்களதும் பிரச்சார இயக்கத்தை குற்றம் சாட்டுகிறது. மறுபுறத்தில் இது ஒரு புதிய யோசனைகளைக் கொண்ட மசோதாவை அறிமுகம் செய்வதன் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொணரும்படி கோரும் இந்தியா, மேற்கத்தைய வல்லரசுகளையும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றது.

சிங்கள சோவினிஸ்டுகளுக்கு ஆதரவு தரும் ஒரு பெரும் நடவடிக்கையாக குமாரதுங்க நோய்வாய்ப்பட்ட தனது 84 வயது தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அந்த இடத்துக்கு தமது நீண்ட கால சகாவான ரத்னசிரி விக்கிரமநாயக்காவை நியமனம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான அரசாங்க அறிக்கைகளின்படி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தாமாகவே பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் ஜனாதிபதி குமாரதுங்கவின் தம்பியான அனுர பண்டாரநாயக்க (ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்) தாயார் பதவி விலகும்படி நெருக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த மாற்றத்துக்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட தில்லுமுல்லுகள் என்னவாக இருந்த போதிலும் விக்கிரமநாயக்க பெளத்த பிக்குகளுடனும் சிங்கள அமைப்புக்களுடனும் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளின் காரணமாகவே இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பொதுஜன முன்னணி கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளியாவார். 1994ல் சந்திரிகா குமாரதுங்க தமது தாயாரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து வெளியேற நெருக்கிய வேளையில் இவர் முக்கிய புள்ளியாக விளங்கினார். இது ஒரு புதிய கூட்டணியை அமைத்ததோடு அதே ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் யூ.என்.பி.யின் இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டது.

பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நிகழ்த்திய தமது கன்னிப் பேச்சில் விக்கிரமநாயக்க, "வடக்கு-கிழக்கில் ஒரு தனிநாடு கோரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடரும். "ஜனநாயகமும் பயங்கரவாதமும் கைகோர்த்துச் செல்லமுடியாது" என குறிப்பிட்டார். "ஆதலால் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரேவழி யுத்தம் மட்டுமே. எவ்வாறெனினும் சிறுபான்மையினருக்கு ஏதும் குறைபாடுகள் இருக்குமேயானால் நாம் அவற்றுக்கு தீர்வு காணவேண்டும்".

புதிய பிரதமரின் முதலாவது நடவடிக்கைகளில் ஒன்றாக முன்னணி பெளத்த பீடாதிபதிகளை தரிசிக்கும் விஜயம் விளங்கியது. அவர்களை சந்திப்பதில் விக்கிரமநாயக்கவுக்கு எதுவித பிரச்சினையும் இருக்கவில்லை. இந்தப் பீடாதிபதிகள் அரசியலமைப்பு பொதிக்கு எதிரான தமது பிரச்சார இயக்கத்தின் உச்சக் கட்டத்தில் இவர்கள் ஜனாதிபதியை சந்திக்க மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இந்தப் பெளத்த பிக்குகளை இந்த மசோதாவுக்கான திருத்தங்களை முன்வைக்கும்படி கோரி அழைப்பு விடுக்கையில் விக்கிரமநாயக்க கூறியதாவது: "நாம் இந்த அரசியலமைப்பு வரைவின் ஒவ்வொரு பந்திக்கும், சரத்துக்கும், வரிக்கு வரியும் மகாநாயக தேரர்களின் கருத்துக்களை வேண்டுகின்றோம். அப்போது அவர்கள் நாம் எங்கே தவறு இழைத்துள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டி திருத்த முடியும்". அத்தோடு விக்கிரமநாயக்க தமது தலைமையில் இந்த (அரசியலமைப்பு) சீர்திருத்த யோசனைகளில் "பிரச்சினைக்குரிய பகுதிகளை மீளாய்வு செய்யும்" ஒரு அமைச்சரவை உப- குழுவையும் நியமனம் செய்தார்.

பிரதமர் பதவியை பொறுப்பேற்றதன் மூலம் விக்கிரமநாயக்கா நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள சோவினிச அரசியலில் ஈடுபாடு கொண்ட தமது வரலாற்றையும் தம்முடன் சேர்த்துக் கொண்டுள்ளார்.

விக்கிரமநாயக்க 1960 மார்ச்சில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் (MEP) ஒரு முக்கிய அங்கத்தவராக போட்டியிட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். இக்கட்சி சிங்கள பெளத்தர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொண்டது. 1962ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்த இவர் 1970-77 கூட்டரசாங்க காலப்பகுதியில் பிரதி அமைச்சர், அமைச்சர் பதவிகளை வகித்தார். 1977ல் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

1977 பொதுத் தேர்தலை தொடர்ந்து ஸ்ரீ.ல.சு.க. எட்டு எம்.பீ. க்களை மட்டும் கொண்ட ஒல்லியாகிப் போன வேளையிலும் அதனது அன்றைய பாராளுமன்ற தலைவர் அனுர பண்டாரநாயக்க யூ.என்.பி.பக்கம் சாய்ந்து வந்த வேளையிலும் சந்திரிகா குமாரதுங்கவும் அவரது கணவரும் ஒரு தீவிரவாத வேஷம் போட்டுக் கொண்டனர். தொழிற்சங்கங்களை அணிதிரட்டவும் யூ.என்.பி.க்கு எதிரான பிரச்சாரத்துக்கும் அழைப்பு விடுத்தனர். விக்கிரமநாயக்க ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து பிரிந்து ஸ்ரீலங்கா மக்கள் கட்சியை அமைப்பதில் ஈடுபட்டார். குமாரதுங்கவுடன் சேர்ந்து அவர் 1993ல் மீண்டும் ஸ்ரீ.ல.சு.க. வுக்கு திரும்பினார்.

சிங்கள சோவினிஸ்டுகளின் அக்கறைக்குரிய முக்கிய விடயங்களில் ஒன்றான அதிகாரப் பகிர்வு பொதியின் உத்தேச காணிக் கொள்கை தொடர்பாக விக்கிரமநாயக கருத்து வேறுபாடுகள் கொண்டவராக காட்டிக் கொண்டார். ஆனால் மத்திய அரசாங்கம் காணிகள் மீதான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதை உத்தரவாதம் செய்யும் விதத்தில் கொள்கை திருத்தம் செய்யப்பட்ட போது அவர் இதற்கு ஆதரவு வழங்கினார்.

இந்த அரசியல் தீர்வுப் பொதியை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டாம் எனவும் அங்ஙனம் செய்தால் அதற்கு எதிரான ஒரு முழுப் பிரச்சார இயக்கத்தில் இறங்குவோம் எனவும் சிங்கள-பெளத்த சக்திகள் எச்சரிக்கை செய்ததைத் தொடர்ந்து குமாரதுங்க சிங்கள- பெளத்த சக்திகளுடனான உறவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நான்கு பெளத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்ததோடு இந்த மசோதா தமிழ் சிறுபான்மையினர்களுக்கு வசதிவாய்ப்புக்க்களை வழங்குவதால் அவர்கள் இதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தினர்.

ஆனால் குமாரதுங்க இந்தியாவுடன் சேர்ந்து பெரும் மேற்கத்தைய நாடுகளிடமிருந்து வந்த கோரிக்கைகளுக்கும் (யுத்தத்துக்கு ஒரு தீர்வுகாணும்படி) முகம் கொடுத்துள்ளார். இது ஆகஸ்ட் 11ம் திகதி தேசிய தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி வழங்கிய 1-1/2 மணித்தியால சிறப்புப் பேட்டியில் பிரதிபலித்தது. அதில் அவர் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

குமாரதுங்க "சிங்கள உறுமய கட்சி போன்ற இனவாதிகள்" தனக்கு எதிராக சேறை வாரி அடிக்கும் முயற்சியில் வீதியில் இறங்கியுள்ளதாக" கண்டனம் செய்ததோடு "இராணுவ எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிரப்ப அவசியமான 20,000 ஆட்களை திரட்ட தங்களது உழைப்பை "இனவாதிகளும் பிக்குகளும்" செலவிடுவார்களா எனவும் சவால் செய்தார்.

"இந்த பிக்குகள் சம்பளங்களை அரைவாசியாக வெட்டவும் சகல அபிவிருத்தி திட்டங்களை நிறுத்தவும் அடுத்து வரும் 2- 1/2 வருடங்களுக்கு எந்த ஒரு புதிய தொழில் வாய்ப்பும் வழங்காது இருக்கவும் சகல பணத்தையும் யுத்தத்துக்கு திருப்பி பணியை முடித்து வைக்கவும் என்னுடனும் எனது அமைச்சர்களுடனும் சேர வேண்டும்" எனவும் அவர் பிரகடனம் செய்தார். அத்தோடு அவர் "இன்னும் சில வருடத்தில் மற்றொரு பிரபாகரன் (LTTE) வருவார்" என எச்சரிக்கை செய்ததோடு "எமக்கு ஒரு தீர்வு வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

சிங்கள பெளத்த அமைப்புக்களில் சில ஏற்கனவே ஜனாதிபதியின் சவாலை ஏற்றுக்கொள்ள தமது உஜார் நிலையை காட்டிக் கொண்டுள்ளன. சோவினிச சக்திகளை தாக்கும் அதே வேளையில் குமாரதுங்க தாம் "சிங்கள பெளத்தர்களின் இதயம்" என தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு கூறிவைக்கப் பெரிதும் சிரமப்பட்டார்.

இந்தத் தொலைக்காட்சி பேட்டியின் போது ஜனாதிபதி அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனமை அரசாங்கத்துக்கு ஒரு பின்னடைவாகும் என்பதை ஒப்புக் கொண்டார். மேற்கத்தைய வல்லரசுகளும் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களும் இரு கட்சிகளும் தமது போட்டியை நிறுத்தி ஒரு "இணக்கப்பாட்டுக்கு" வர வேண்டும் என்ற கோரிக்கைகளின் எதிரில் யூ.என்.பி. பொதுஜன முன்னணியை ஏமாற்றி விட்டதாக அவர் தெரிவித்தார். அக்டோபரில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தனது அரசாங்கம் ஆட்சிக்கு வருமேயானால் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக குமாரதுங்க தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அவசியமான 2/3 பங்கு பெரும்பான்மை ஆசனங்களை பராளுமன்றத்தில் பொதுஜன முன்னணி கைப்பற்றாது, சிறுபான்மை பலத்தை பெறுமிடத்து அது பாராளுமன்றத்தை ஒரு "அரசியலமைப்பு நிர்ணய சபை" யாக மாற்றும் எனவும், அங்கு சாதாரண பெரும்பான்மையே அவசியம் எனவும், அதன் மூலம் மாற்றங்களை நடைமுறைக்கிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தப் பாணியிலான ஜனநாயக விரோத திருகுதாளங்களை இதற்கு முன்னரும் கண்டுள்ளது. 1972ல் ஆட்சிக்கு வந்த கூட்டரசாங்கம் -தொழிலாளர் வர்க்க கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில்- பாராளுமன்றத்துக்கு வெளியே "அரசியலமைப்பு நிர்ணய சபை" என்ற பெயரில் கூடி சிங்களத்தை அரச மொழியாகவும் பெளத்தத்தை அரச மதமாகவும் ஸ்தாபிதம் செய்யும் ஒரு இனவாத அரசியலமைப்புத் திட்டத்தை தயாரித்தது.

குமாரதுங்க தனது தேர்தல் வெற்றிக்கான சாத்தியங்களை வீங்கச் செய்யும் பொருட்டு சிங்கள இனவாத சக்திகளுக்கு அழைப்பு விடும் அதே வேளையில் யூ.என்.பி.யும் கூட சிங்கள சோவினிச அலையில் ஏறி மீண்டும் ஆட்சிக்கு வரத் தருணம் பார்த்துக் கொண்டுள்ளது. இக்கட்சி 18 வாரங்கள் அரசியலமைப்பு சீர்திருத்த பொதி மீதான கலந்துரையாடல்களில் பொதுஜன முன்னணியுடன் பங்கு கொண்ட போதிலும் இந்த யோசனைகளுக்கும் தமக்கும் உரிமை கிடையாது எனக் கூறியது. அத்தோடு யூ.என்.பி. தற்சமயம் ஜே.வி.பி. (JVP), தாய்நாட்டை பாதுகாக்கும் அமைப்பு, சிங்கள உறுமய கட்சி (SHP) போன்ற பெளத்த, சிங்கள அதிதீவிரவாத அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து பிரச்சாரம் நடாத்த அவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பிரச்சாரத்தை சுற்றி வளைக்கும் விதத்தில் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் ஏப்பிரல் கடைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்ட சில பகுதிகளைத் தன்னும் இராணுவத் தாக்குதல்களை உக்கிரம் அடையச் செய்வதன் மூலம் திரும்பவும் கைப்பற்ற முயற்சிக்கின்றது. கடந்த வாரம் பொதுஜன முன்னணி 2800 கோடி ரூபா (356 மில்லியன் டாலர்) உபமான்ய மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் முழு (பாதுகாப்பு) வரவு செலவு திட்டத் தொகை 10300 கோடி ரூபாவாகியுள்ளது. இது வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட சமயம் ஒதுக்கீடு செய்யப்பட்ட (5200 கோடி) தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கானதாகும். எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் அரசாங்கம் அரைடசின் கிபீர் ஜெட் விமானங்களையும் 24 எம்.ஐ. ஹெலிகொப்டர்களையும், துப்பாக்கி படகுகளையும் தருவிப்பதன் மூலம் ஆயுதப் படைகளை பலப்படுத்த உள்ளது.

இந்த இராணுவச் செலவீனங்களை நிதியீட்டம் செய்ய அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மேலும் வெட்டிச் சாய்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே முக்கிய பண்டங்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல் நெருக்கடியில் இந்திய அரசாங்கம் மற்றொரு காரணியாக விளங்குகின்றது. இந்தியா மேற்கத்தைய பெரும் வல்லரசுகளுடன் சேர்ந்து ஒரு தனித் தமிழ் அரசு அமைக்கப்படுவதை எதிர்த்துள்ளது. முழுத் துணைக்கண்டத்திலும் இது ஏற்படுத்தக்கூடிய ஸ்திரமற்ற நிலையை கருத்தில் கொண்டே இங்ஙனம் செய்துள்ளது. இந்திய வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் பொதுஜன முன்னணியின் அதிகாரப் பகிர்வு பொதிக்கு ஆதரவான செய்திகளையும் ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிட்டுள்ளன. அத்தோடு கொழும்பில் வெளியான தகவல்களின்படி இந்தியன் உயர் ஸ்தானிகராலயம் தமிழர் விடுதலைக் கூட்டணியை அரசியல் பொதிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி "வேண்டியது".

அரசியல் தீர்வு பொதி, நெருக்கடிக்கு எதுவிதமான தீர்வையும் காணவில்லை. மாறாக இது தமிழ், தமிழ் பேசும் முஸ்லீம்கள், சிங்கள நிர்வாகப் பிராந்தியங்களை ஸ்தாபிதம் செய்வதன் மூலம் இனக்குழு பிளவுகளை உருவாக்கும். அத்தகைய ஒரு அமைப்பு முறையானது, இனக்குழு பதட்ட நிலைமைகளை மேலும் அதிகரிக்கவும் தமது 'பிரித்தாளும்' கொள்கையை பிறிதோர் வடிவில் முன்னெடுக்கவும் ஆளும் வர்க்கங்களினால் பயன்படுத்தப்படும்.

மேலும் விக்கிரமநாயக்காவை பிரதமராக நியமனம் செய்தமை குமாரதுங்க சிங்கள சோவினிஸ்டுகளையும், இனவாத பெளத்த பிக்குகளையும் பலப்படுத்தச் செயற்படுவதை காட்டுகின்றது.

அதிகாரப் பகிர்வு அடியோடு குடை சாய்ந்து போனமையானது காலனித்துவ ஆட்சிக்கு பின்னைய இலங்கையின் முழு வரலாற்றில் இருந்தும் தலையெடுக்கும் படிப்பினைகளை சுட்டிக்காட்டுகிறது: முதலாளித்துவமும் அதன் கட்சிகளும் பெரும் முதலாளித்துவ நாடுகளுடன் சேர்ந்து இன, இனக்குழு பிளவுகளை தீர்த்து வைப்பதற்கு இலாயக்கற்றவை. மாறாக அவை இதன் ஒவ்வொரு திருப்பத்திலும் இதை உக்கிரமாக்க தொழிற்படுகின்றன.

இதற்கான தீர்வு, தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மூலம் வெகுஜனங்களின் -சிங்கள, தமிழ் மக்களின்- அவசியங்களையும் ஜனநாயக அபிலாசைகளையும் இட்டு நிரப்புவதன் மூலம் மட்டுமே கிட்டும்.