World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Sri Lankan Socialist Equality Party to contest general election

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றது

Socialist Equality Party Statement
23 August 2000

Use thsi version to print

நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (Socialist Equality Party) அக்டோபர் 10ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு பெரும் தொழிலாளர் வர்க்க மையமான கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது. முக்கிய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் "இடதுசாரி" எனப்படும் அரசியல் அமைப்புக்களுக்கும் எதிராக சோ.ச.க. சிங்கள, தமிழ் தொழிலாளர்களையும், ஒடுக்கப்படும் மக்களையும், இளைஞர்களையும், புத்திஜீவிகளையும் ஒன்றிணைக்கவும், 17 வருட கால இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகட்டவும், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், தீவில் உக்கிரம் கண்டுள்ள சமூகப் பிரிச்சினைகளுக்கு (வேலையின்மை, வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி, கல்வி, சுகாதார சேவைகளின் அவஸ்த்தை) தீர்வு காணவும் ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்கும்.

உத்தியோகபூர்வமான முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியென்ற முறையில் சோ.ச.க. முதற்தடவையாக கொழும்பு மாவட்டத்துக்கு 23 வேட்பாளர் பட்டியலை சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் தலைமையில் முன்வைக்கின்றது.

சோ.ச.க.வுக்கு உத்தியோகபூர்வமான அங்கீகாரம், அது ஸ்தாபிதம் செய்யப்பட்டு 32 ஆண்டுகளின் பின்னரும் அந்த உரிமையை பெற்றுக்கொள்ள தொடுத்த ஒரு நீண்ட பிரச்சார இயக்கத்தின் பின்னருமே கிட்டியது. இதன் மூலம் சோ.ச.க. இலவசத் தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்புகளுக்கான வசதிகளைப் பெற்றுள்ளது. இதனால் முன்னர் ஒரு போதும் இல்லாத விதத்தில் அது தனது கொள்கைகளை பரந்த தட்டினருக்கு முன்வைக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்தத் தேர்தல், தீவின் யுத்தத்துக்கு பின்னைய வரலாற்றின் ஒரு தீர்க்கமான கால கட்டத்தில் இடம் பெறுகின்றது. தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழருக்கென ஒரு தனி நாட்டுக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கடந்த ஏப்பிரலில் இருந்து ஒரு தொடர்ச்சியான தோல்விகளுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து இலங்கை அரசு ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

17 வருட கால உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டுவது எப்படி என்பது தேர்தலின் ஒரு மையப் பிரச்சினையாக விளங்கும். ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கமும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இனவாதிகள் மீதும் பெளத்த குழுக்கள் மீதும் சாய்ந்து வருகின்றன. இதன் மூலம் சிங்கள சோவினிசத்தை தூண்டிவிடவும் மக்கள் முகம் கொடுக்கும் நிஜ பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்யவும் இவை பார்க்கின்றன. பொதுஜன முன்னணி, யூ.என்.பி. இரண்டும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் வடக்கு-கிழக்கில் பிராந்திய சபைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை கையளிக்கும் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு வழங்கின. இனக்குழு அடிப்படையில் பிராந்தியங்களை கூறு போடும் திட்டமானது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாறாக பதட்ட நிலையை மேலும் அதிகரிப்பதோடு பல்வேறு மாகாணங்களிலும் சிறுபான்மை சனத்தொகையின் 'இனக்குழு சுத்திகரிப்புக்கான' கதவுகளை மட்டுமே திறந்துவிடும்.

பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் ஏதே ஒரு வடிவிலான அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒரு உடன்பாட்டைச் செய்துகொள்ளவும், தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஓரங்கட்டவும், அதன் மூலம் பெரும் மேற்கத்தைய வல்லரசுகளதும், இந்தியாவினதும் யுத்தத்துக்கு முடிவு கட்டும் இலங்கையின் பெரும் வர்த்தக நிறுவனங்களது ஒரு பகுதியனரதும் கோரிக்கைளை இட்டு நிரப்ப முடியும் என நம்புகின்றன. இதே சமயம் இந்த இரண்டு கட்சிகளும் "யுத்தத்தை ஒரு நிஜமான முடிவுக்கு" கொணரும்படி கோரும் சிங்கள சோவினிச அமைப்புகளது ஆதரவையும் நாடி நிற்கின்றன.

இரு முக்கிய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அவற்றின் சோவினிசக் கூட்டுகளுக்கும் எதிராக சோ.ச.க. சிங்கள, தமிழ், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பதிலீடான சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றது. ஒரு முற்போக்கான அடிப்படையில் யுத்தத்துக்கு முடிவுகட்டுகின்றதும் பெரும்பான்மையினரான சாதாரண மக்களின் ஜனநாயக, சமூக அபிலாசைகளை இட்டுநிரப்புவதற்குமான ஒரே வழி அதுவே.

பொதுஜன முன்னணி தலைவி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு இத் தேர்தலானது இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அவர் வாபஸ் பெறத் தள்ளப்பட்ட அதிகாரப் பகிர்வு மீதான அரசியலமைப்பு பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கான 2/3 பங்கு பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கான ஒரு போட்டியாகும். அதைச் சாதிக்க முடியாது போய் ஆட்சிக்கு தெரிவு செய்யப்படுமிடத்து பொதுஜன முன்னணி ஒரு சாதாரண பெரும்பான்மையின் மூலம் இந்தப் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு "அரசியலமைப்பு நிர்ணய சபை"யாக பாராளுமன்றம் மாற்றப்படும்.

யூ.என்.பி. பாராளுமன்றத்தில் பொதுஜன முன்னணியின் அதிகாரப் பகிர்வு பொதியை ஆதரிக்க மறுத்துவிட்ட நிலைமையில் அது ஒரு தீர்வை முன்வைக்கும்படி அனைத்துலக, உள்நாட்டு சக்திகளின் நெருக்குவாரத்துக்கு உள்ளாகியது. எவ்வாறெனினும் அதுவும் கூட இந்த சிங்கள சோவினிஸ்டுகளின் ஆதரவை கவர முயற்சிக்கின்றது. இந்த இரட்டை பாதை கொள்கையானது இதனை "தாய்நாட்டை காக்கும் தேசிய இயக்கம்" போன்ற இனவாத அமைப்புகளுடன் வெளிவெளியாக இணைந்து, பொதுஜன முன்னணியின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் அதே வேளையில் யுத்தத்துக்கு ஒரு அரசியல் ரீதியான ஒரு தீர்வைக் காண ஏனைய கட்சிகளின் உடன்பாட்டுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

கடந்த 12 மாத காலத்தினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈட்டிய இராணுவ வெற்றிகள் பாசிச, இனவாத அமைப்புகளிடமிருந்து ஒரு வெறிபிடித்த பிரதிபலிப்புகளை வெளிக் கக்கியது. ஜனதா விமுக்தி பெரமுன (JVP) சமீபகாலத்தில் அது கடைப்பிடித்த ஜனநாயக, சோசலிச வாயடிப்புகளையும் கைவிட்டது. அது 1980 களின் கடைப்பகுதியில் முன்னெடுத்த "தாயகம் காப்போம்" போன்ற சுலோகத்தை புதுப்பித்துக் கொண்டது. இச்சுலோகத்தின் கீழேயே ஜே.வி.பி. தொழிற்சங்கவாதிகள், தொழிலாளர்கள், ஏனைய அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிரான பாசிச பாணியிலான கொலைகளை நடாத்தியது.

யூ.என்.பி, பொதுஜன முன்னணி, ஜே.வி.பி.யில் இருந்து ஓட்டம் பிடித்த சக்திகள், சிங்கள உறுமய கட்சியை (Sinhala Heritage Party) அமைக்க ஒன்றிணைந்தன. இவை ஒரு "நிஜ யுத்தத்தை" கோரும் பிரச்சாரத்தில் வீதியில் இறங்கியுள்ளன. இந்த இனவாத அமைப்புக்கள் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு ஜனநாயக உரிமையையும் வழங்குவதை எதிர்க்கின்றன. இவர்கள் தமிழர்கள் பலாத்காரமான முறையில் சிங்கள பெளத்த அரசுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தற்போதைய அரசியல் நெருக்கடி சமீப காலத்தில் பொதுஜன முன்னணி அரசாங்கம் முகம் கொடுத்த இராணுவத் தோல்விகளால் மட்டும் ஏற்படும் ஒன்றல்ல. இது அரை நூற்றாண்டுக்கு மேலாக முதலாளித்துவ கட்சிகளினால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளின் உச்சக் கட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. 1948ல் பிரித்தானிய காலனித்துவ எஜமானர்கள் அதிகாரத்தை கையளித்த நாளில் இருந்து இலங்கை முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தையிட்டும் விவசாயிகளையிட்டும் அச்சம் கொண்டிருந்தது.

இதைத் தொடர்ந்து இம்மக்களை இன, இனக்குழு அடிப்படையில் பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு, சிங்கள பெளத்த சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோவினிசக் கொள்கையைக் கடைப்பிடித்தது.

1948ல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை, தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழித்ததேயாகும். இதைத் தொடர்ந்து 1956ல் சிங்களம் மட்டும் சட்டம் இயற்றப்பட்டது. 1972ல் பெளத்தம் அரச மதமாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.

ஆனால் முதலாளித்துவத்தின் "பிரித்தாளும்" வேலைத்திட்டம், 1950 களில் சிங்கள, தமிழ் வெகுஜனங்களை ஒன்றிணைக்கும் தனது சோசலிச வேலைத்திட்டத்தை சமசமாஜக் கட்சி (LSSP) வேகமாக கைவிட்டிராத நிலையில் ஒரு போதுமே முன்நோக்கிச் சென்றிருக்க முடியாது. இதன் உச்சக் கட்டமாக 1964ல் ஒரு கூட்டரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து கொள்வதென எடுத்த முடிவு விளங்கியது.

லங்கா சமசமாஜக் கட்சியின் இக்காட்டிக் கொடுப்பானது ஒரு புறத்தில் தமிழ் தொழிலாளர் வர்க்கம், மத்தியதர வர்க்கத்தினரிடையே தேசியவாத, பிரிவினைவாத போக்குகள் வளர்ச்சி காணவும் மறு புறத்தில் சிங்கள சோவினிசம் உக்கிரம் அடையவும் இட்டுச் சென்றது. லங்கா சமசமாஜக் கட்சியின் மாஜி. சோசலிஸ்டுகள் இதைத் தூண்டும் முக்கிய புள்ளிகளிடையே இப்போது இருந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வந்த இந்த பாகுபாடுகள் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத அமைப்புகளை -குறிப்பாக விடுதலைப் புலிகள்- தலையெடுக்கச் செய்தபோது, கொழும்பு யூ.என்.பி. ஆட்சியாளர்களின் பதிலானது 1983ல் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை தொடுப்பதாக விளங்கியது. சோவினிச தமிழர் எதிர்ப்பு வெறியானது தெற்கில் தீர்க்கமான மாற்றங்களை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. யூ.என்.பி. ஆட்சியாளர்கள் அதிகாரம் மிக்க ஒரு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையையும் ஸ்தாபிதம் செய்து, தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தினை தாக்கினர். முன்னைய தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை கைவிட்டு விட்டு பொருளாதாரத்தினுள் அனைத்துலக மூலதனம் ஊடுருவுவதற்கான பாதையைத் திறந்து விட்டனர்.

எவ்வளவுக்கு எவ்வளவு அவர்களது கொள்கைகள் பரந்த வெகுஜனங்களின் அவசியங்களுடனும் நலன்களுடனும் மோதிக் கொண்டதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ ஆட்சியாளர்கள் (பொதுஜன முன்னணி, யூ.என்.பி. இரண்டும்) தமிழர்களதும் சிங்களவர்களதும் இரத்தத்தை ஒரே விதத்தில் பெருக்கெடுக்கச் செய்தனர். வடக்கிலும் கிழக்கிலும் கொலைக் களங்களில் 60,000 பேர் இறந்துள்ளதாகவும் தெற்கில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அகதிகளாக நேரிட்டது. இவர்களில் 90 வீதமானவர்கள் மரணத்துக்கும் தொற்று நோய்களுக்கும், பட்டினிக்கும், கொலைக்கும் முகம் கொடுத்த வண்ணம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டுள்ளனர். இதே சமயம் 500,000 மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர்.

ஆயிரக் கணக்கான கிராமப்புற வேலையற்ற இளைஞர்கள் யுத்தத்தில் பீரங்கி குண்டுகளாக பயன்படுத்தப்பட்டனர். 1994ல் பொதுஜன முன்னணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாழ்க்கைச் செலவு சுட்டெண் 1066 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. சமூக துருவப்படுத்தல் ஆழம் கண்டுள்ளது. 1996, 97ம் ஆண்டின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின்படி சனத்தொகையில் வறியவர்களான 40 வீதத்தினர் தேசிய வருமானத்தில் 15.30 சதவீதத்தையே பெறுகின்றனர். இதே சமயம் செல்வந்தர்களான 20 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 49.90 வீதத்தை அனுபவிக்கின்றனர். 1970-72 ல் வறியவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியன்களாக இருந்தது. 1996 97 ல் இது 8.6 மில்லியன்களாக அதிகரித்தது. ஒரு நாளைக்கு 22 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இது உலகிலேயே உயர்ந்த புள்ளியாகும். இப்புள்ளிவிபரங்கள் முதலாளித்துவ ஆட்சியின் சமூகத் தாக்கங்களின் ஒரு துளி மட்டுமே.

கடந்த மூன்று மாதங்களுள் மட்டும் பொதுஜன முன்னணி பாதுகாப்பு செலவீனங்களை (48 மில்லியன்களால்) இரண்டு மடங்காக்கியுள்ளது. இதே சமயம் வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணை 115 புள்ளிகளால் அதிகரிக்கச் செய்துள்ளது. நாடு ஒரு "யுத்த நிலைமைக்கு" கொணரப்பட்டது அதிகரித்த அளவிலான அவசரகாலச் சட்ட விதிகள் ஜனநாயக உரிமைகளை தாக்கின. வெகுஜனத் தொடர்பு சாதனங்களின் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதோடு வெகுஜனப் போராட்டங்கள் தடை செய்யப்பட்டன.

அத்தோடு பொதுஜன முன்னணி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தினதும்- உலக வங்கியினதும் அடுத்த கட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக பரந்த அளவிலான போராட்டங்கள் வெடிக்கும் என்பதையிட்டு அச்சம் கொண்டுள்ளது. இதன் கீழ் இன்று அரசுடமையாக உள்ள மின்சாரம், நீர், தபால் சேவைகள், அரச வங்கிகள், கிராமப்புறத்தில் உள்ள பொஸ்பேட் (Phosphate) போன்ற இயற்கை வளங்கள் தனியார் மூலதனத்துக்கு திறந்துவிடப்படும்.

எவ்வாறெனினும் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அத்தோடு தொழிற்சங்க அதிகாரத்துவங்களதும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளதும் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்வது என்பது முடியாத காரியமாகும்.

லங்கா சமசமாஜக் கட்சியும் இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளன. 1994ல் ஆட்சியில் இருந்த யூ.என்.பி. அரசாங்கமும் பரந்தளவிலான எதிர்ப்புக்கு முகம் கொடுத்த வேளையில் இக்கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஒரு முதலாளித்துவ மாற்றீடு அரசாங்கமாக பொதுஜன முன்னணி அரசாங்கத்தை அமைக்க முன்வந்தன. இவர்கள் பொதுஜன முன்னணி யுத்தத்தை நடாத்த ஆதரவளித்ததோடு நாட்டை அவசரகால பிரகடனங்களுடன் கூடிய ஒரு யுத்த நிலைமையிலும் இருத்தினர். இவ்விரு கட்சிகளும் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதை இலக்காகக் கொண்ட பொதுஜன முன்னணியின் அதிகாரப் பகிர்வு பொதிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கின.

விலைவாசி உயர்வுக்கும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் பேரிலான அதிகாரத்துவங்களின் குரோதத்தை தொகுத்துக் கட்டும் விதத்தில் லங்கா சமசமாஜக் கட்சியினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறியதாவது: "ஒரு நாட்டுக்கு யுத்த நிலைமையை ஈடு செய்யக்கூடிய ஒரு "யுத்தப் பொருளாதாரம்" இல்லாமல் ஒரு "யுத்த நிலைமை" இருக்க முடியாது என்பதே உண்மையாகும்" எனப் பிரகடனம் செய்தது.

இந்த நிலைமையில் சோ.ச.க.வும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை எதிர்த்து வந்துள்ளன. தொழிலாளர் வர்க்க ஐக்கியத்துக்காக சகல வடிவிலான இனவாதத்தையும் சோவினிசத்தையும் அவை எதிர்த்துப் போராடின. இந்தக் கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டுக்காக போராடுகையில், சோ.ச.க. வடக்கு-கிழக்கில் ஒரு முதலாளித்துவ குட்டியரசை அமைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதக் கொள்கையையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளது. இது தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளை அடைவதற்கான ஒரு வேலைத்திட்டம் அல்ல. மாறாக இது தமிழ் பேசும் தொழிலாளர்களை அவர்களின் சிங்களம் பேசும் சகோதர, சகோதரிகளில் இருந்து பிரித்து வைப்பதை இலக்காகக் கொண்ட ஒரு முதலாளித்துவக் கொள்கையாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள், மேற்கத்தைய வல்லரசுகளும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவும் தமது பிரிவினைவாத வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு, கொழும்பு ஆட்சியாளர்கள் தமிழ் மேல்தட்டினருக்கு அதிக அளவிலான அதிகாரத்தை வழங்கத் தயாரானால் இரத்தம் தோய்ந்த கொழும்பு ஆட்சியாளர்களுடன் ஒத்துழைக்கும் தமது தயார் நிலையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. அது ஒரு தனிநாட்டு வேலைத்திட்டமாக இருந்தாலும் சரி அல்லது அதிகாரப் பகிர்வு எனப்படுவதாக இருந்தாலும் சரி தமிழ் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பேணிக் காக்கப் போவதில்லை. மாறாக அது சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் இரண்டினதும் கரங்களைப் பலப்படுத்துவதாகவே விளங்கும்.

லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் பொதுஜன முன்னணியில் சேர்ந்த வேளையில் "இடது" நவசமசமாஜக் கட்சி (NSSP) முதலாளித்துவ ஆட்சியை பேணுவதற்கு தனது பங்களிப்பை நல்ல முறையில் செய்யும் பொருட்டு அதற்கு வெளியில் நின்று கொண்டது. 1994ல் இக்கட்சி பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொணர ஆதரவளித்தது. குமாரதுங்க யுத்தத்துக்கு முடிவு கட்டுவார்; சமாதானத்தை ஏற்படுத்துவார்; யூ.என்.பி. ஆட்சியில் பிடுங்கிக் கொள்ளப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீள வழங்குவார் என்பன போன்ற நப்பாசைகளை ந.ச.ச.க. வளர்த்தது.

நவசமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத பண்பு அது 1995-1997வரை பொதுஜன முன்னணியின் அரசியல் தீர்வுப் பொதியை தேசிய ஒடுக்குமுறைக்கான தீர்வாகக் காட்டி, ஆதரவு வழங்கியதன் மூலம் வெளிப்பட்டது. அன்றில் இருந்து ந.ச.ச.க. தனியான தமிழர் "தாயகம்" கோரிக்கைக்கு ஆதரவு காட்டி வந்த அதே வேளையில் தமிழர் விரோத சிங்கள சோவினிஸ்டுகளான ஜே.வி.பி.யுடனும் கூட்டுச் சேர்ந்து கொண்டது. எவ்வாறெனினும் ந.ச.ச.க. அதனது சகல நெழிவு சுழிவுகளுக்கிடையேயும் ஒரு உறுதியான கயிற்றையும் பற்றிக் கொண்டிருந்தது: அது தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான கொள்கையை எதிர்த்தது.

வெகுஜனங்கள் முதலாளித்துவக் கட்சிகளாலும் அவற்றின் "இடதுசாரி" ஆதரவாளர்களாலும் சிருஷ்டிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு பாதையை சோசலிச சமத்துவக் கட்சி வேலைத்திட்டம் மட்டுமே வழங்கும்.

மூன்று தூண்கள்

சோ.ச.க. மூன்று தூண்களில் நின்று கொண்டுள்ளது: அனைத்துலக வாதம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம், சோசலிச கொள்கைகள்.

 

* சோசலிச சமத்துவக் கட்சி யுத்தத்தை நிறுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கப் படைகளை வடக்கு-கிழக்கில் இருந்து வாபஸ்பெறும்படி கோருகின்றது. பேரழிவு மிக்க யுத்தத்துக்கு ஒரு ரூபாயோ அல்லது ஒரு ஆளோ வழங்கப்படக் கூடாது என நாம் கூறுகின்றோம். இந்த யுத்தம் தொழிலாளர்களதோ அல்லது ஏழைகளதோ யுத்தம், அல்ல. இந்த யுத்தம் ஆளும் வர்க்கத்தால் சிருஷ்டிக்கப்பட்டு, பொதுமக்கள் மீது சகிக்க முடியாத சுமைகளைத் திணிப்பதன் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

* அரசியலமைப்பு சட்டத்தை வரையும் பணிகள் வெகுஜனங்களின் பிரதிநிதிகளால் செய்யப்பட வேண்டுமேயன்றி ஒரு சில செல்வந்தர்களால் அல்ல. இப்போது 1948லும் 1972லும் 1978லும் போல் பொதுஜன முன்னணியும் அரசியல் பெரும் புள்ளிகளும் மக்கள் அறியாத-தெரியாத விதத்தில் மற்றொரு அரசியலமைப்பு சட்டத்தை திணிக்க முயற்சிக்கின்றார்கள். இந்த திருகுதாளங்களுக்கு எதிராக சோ.ச.க. மக்களின் சுயாதீனமான அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியலமைப்பு பற்றி கலந்துரையாடவும், நிறைவேற்றவும் வெகுஜனங்களின் மத்தியில் இருந்து ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பேராளர்களை கொண்ட ஒரு நிஜமான அரசியலமைப்பு நிர்ணய சபையை கூட்ட வேடுண்டும் எனக் கோருகின்றது.

* இலாப அமைப்பின் கீழ் தொழிலாளர், ஏழைகளின் சமூக நிலைமைகளை முன்னேற்ற முடியாது. உண்மையில் அவர்கள் இன்னும் மோசமான சுரண்டல்களுக்கு முகம் கொடுப்பர். தொழிலாளர்களாலும் ஏழைகளாலும் மட்டுமே தொழில், வேலை நிலைமைகள் வாழ்க்கைத் தரம், இலவச கல்வி, இலவச சுகாதார சேவைக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்துப் போராட முடியும். மக்களது அவசியங்களையும் சோசலிசக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மறுசீரமைப்பு கொள்கையை முன்வைக்கவும் அதன் பேரில் அனைத்துலக ரீதியில் அணிதிரட்டலில் ஈடுபடவும் அதனாலேயே முடியும். பெருந்தோட்டக் கைத்தொழில்கள் உட்பட அனைத்து பெரும் வர்த்தகங்களும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏனைய சகல காணிகளதும் உடமை உழவருக்கே சொந்தமாக வேண்டும்.

ஜனநாயக உரிமைகளுக்கும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்குமான போராட்டம், இந்தியத் துணைக் கண்டத்திலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களுடன், சிங்கள-தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்தை வேண்டி நிற்கின்றது. தொழிலாளர் வர்க்கத்தின் முன்னோக்கானது ஒரு ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுகளுக்கான (ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் தலைமையிலான) போராட்டமாக விளங்க வேண்டும். இது இந்திய துணைக்கண்ட சோசலிச ஐக்கிய அரசுகளின் ஒரு பாகமாக விளங்கும்.

பொதுஜன முன்னணி, யூ.என்.பி. இரண்டினதும் ஆட்சியின் கீழான யுத்தம், அடக்குமுறை சமூக நிலைமைகளின் வீழ்ச்சிக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகளின் பகுதியினர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். எவ்வாறெனினும் இந்த ஆத்திரமும் வெறுப்பும் மட்டும் போதுமானது அல்ல. இது ஒரு மாற்றீடு முன்நோக்குக்காகப் போராடும் பாதையில் வழி நடாத்தப்பட வேண்டும். இது முதலாளித்துவக் கட்சிகளாலும் "இடதுசாரி" சந்தர்ப்பவாதிகளாலும், சோவினிஸ்டுகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட பிற்போக்கு அரசியல் மூடுபனியை குடைந்து செல்ல வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சோசலிச அடிப்படைக் கொள்கைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சாதனையை ஸ்தாபிதம் செய்துள்ளது. அது 1940பதுகளில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் கீழ் ஸ்தாபிதம் செய்யப்பட்ட அனைத்துலகவாத பாரம்பரியங்களை அத்திவாரமாகக் கொண்டுள்ளது.

அனைத்துலக முன்னோக்கின் அடிப்படையில் போராடும் சோ.ச.க. வின் பணிகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (International Committee of the Fourth International) உலக சோசலிச வலைத் தளமும் உலகத் தொழிலாள வர்க்கத்தினுள்ளே ஒரு அனைத்துலக சோசலிச கலாச்சாரத்தை புத்துயிரளிக்கச் செய்யும் நாளாந்த பணிகள் மூலம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

சோ.ச.க. அதனது அனைத்துலக சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகளுக்கு கல்வி புகட்டுவதை இலக்காகக் கொண்ட ஒரு உக்கிரமான அரசியல், கோட்பாட்டு பணிகளை இந்த பிரச்சார இயக்கத்தின் போது நடாத்த தயாராகிவருகின்றது. இந்த தேர்தல் பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்க சோ.ச.க. ரூபா: 500,000 தேர்தல் நிதியை திரட்டவுள்ளது. சோ.ச.க. தனது ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் இந்த நிதிக்கு பங்களிப்புச் செய்யும்படியும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும்படியும் வேண்டுகின்றது. இது முழுத் தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிர்காலத்துக்கான பாதையைக் காட்டும்.