ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Resolution of the Renegade Majority to the LSSP Congress

1964 ஜூன் 6-7 லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டிற்கு ஓடுகாலி பெரும்பான்மையின் தீர்மானம்

June 6-7, 1964

அரசியல் தீர்மானம்

ஐக்கிய இடது முன்னணி (United Left Front - ULF) இன் உருவாக்கம் 1963 இன் ஒரு மிகச்சிறந்த அரசியல் நிகழ்வாகும். அதனை கொண்டுவருவதில் இரண்டு காரணிகள் உதவின. ஒருபக்கத்தில், நாடெங்கிலும் நடந்த மிகப்பல உள்ளூராட்சி அரசாங்கத் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) பெற்ற வெற்றிகளின் மூலம் அந்தக் கட்சியின் பலம் சீராக பெருகிச் சென்று கொண்டிருந்தது வெளிப்பட்டது. முன்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) க்கு ஆதரவளித்து வந்த பதின்மவயதினர் மற்றும் ஏனையோர்கள் வலது நோக்கி நகர்கின்றதான ஒரு கவனத்திற்குரிய போக்கும் அங்கு இருந்தது. மறுபக்கத்தில், UNP இன் பலம் பெருகும் நிலைக்கு முகம்கொடுத்த நிலையில், வலுப்படுகின்ற பிற்போக்கு வலது என்ற பெருகிச் செல்லும் ஆபத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடுவதற்கு முற்போக்காளர்களின் தரப்பிலான வெளிப்பட்டதொரு ஆர்வமும் அங்கு இருந்தது. மூன்று இடது கட்சிகளும் பெட்ரோல் பிரச்சினையில் ஒரு பிரச்சாரத்தை தொடக்கியபோது, முற்போக்காளர்களின் இந்த விருப்பம் மிகத் தெளிவாக முன்னால் கொண்டுவரப்பட்டிருந்தது.

நாட்டில் வலது நோக்கிய நகர்வு என்பது, நாட்டின் அத்தனை தரப்பு மக்களையும் சூழ்ந்திருந்த நெருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியதன் ஒரு விளைபொருளாய் இருந்தது. பொருட்களின் பற்றாக்குறைக்கு இட்டுச் செல்கின்ற வகையில் பொதுவான பொருளாதார நிலைமை மோசமடைந்ததையும், விலைவாசியிலான அசாதாரணமான ஏற்றத்தையும் UNP தனக்கு அனுகூலமாக்கிக் கொண்டது. SLFP அரசாங்கத்தின் மீதான தாக்குதல், பொதுவாக இடதுகள் மீதும் குறிப்பாக இப்போதைய அரசாங்கம் உருப்பெறுவதற்கு பொறுப்பானதாய் இருந்த LSSP இன் மீதுமான ஒரு தாக்குதலுடன் இணைந்திருந்தது. அநேக இடது கட்சிகள் எதிர்பார்த்திராத ஒரு விதத்தில், அத்தனை வகையான சிறு முதலாளிகள் மற்றும் வணிகர்களும் பெருகும் பொருளாதார ஸ்திரமின்மையில் இருந்தும் அதிகரிக்கும் பணவீக்கத்தில் இருந்தும் வெளியேவருவதற்கான ஒரேவழி என தெரிவித்து UNP இன் மிக நனவான பிரச்சாரகர்களாக ஆயினர்.

நீண்டநெடிய பேரப்பேச்சுகளுக்குப் பின்னரும் கட்சியின் சில பகுதிகளில் இருந்துவரும் அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஐக்கிய இடது முன்னணி (ULF) உருவாக்கப்பட்டது. ULF க்கு கிடைத்த மிகச்சிறந்த வரவேற்பானது, பிற்போக்குத்தன ஆபத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு அமைப்பாக ULF இன் மதிப்பு மற்றும் பயன் குறித்த ஐயங்களை கலைப்பதற்கு உதவியது. UNP க்கு எதிரான ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் திறம்படைத்த ஒரேயொரு மாற்றுசக்தியாக ULF முன்நிறுத்தப்படத் தொடங்கியது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள SLFP அங்கத்தவர்கள், பிற்போக்கு அலையை தடுத்துநிறுத்த வருகின்ற சக்தியாக ULF ஐ கருதத் தொடங்கினர்.

துரதிர்ஷ்டவசமாக, நாட்டில் உள்ள முற்போக்காளர்கள் அனைவரது இந்த அணிதிரட்டலின் முழுமையான பயன்களை எட்டுவதற்கு ULF ஆல் இயலவில்லை. எமது சொந்த அணியினிர், பொதுவில் ULF இன் மீது தாக்கியமை ஒரு பின்னடைவு தரும் விளைவைக் கொண்டிருந்தது. MEP யும் திரு. பிலிப் குணவர்த்தனவும் ULF ஐ அமைப்புரீதியாக முன்தள்ளுவதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவில்லை. என்றாலும், ULF நாட்டில் தொடர்ந்து ஒரு நற்பிம்பத்தை உருவாக்கியது, அத்துடன் SLFP இன் சாமானிய காரியாளர்களுக்கு உற்சாகமளிப்பதிலும் வெற்றிகண்டது என்பது உண்மையாக இருந்தபோதிலும், அது ஆக முடிந்திருக்கக் கூடிய அளவுக்கு பயனுள்ளதாக ஆகவில்லை. ULF இன் உருவாக்கத்திற்கு முன்பு நன்கு காணக்கூடியதாக இருந்த வலது நோக்கிய பாய்வை தடுத்துநிறுத்துவதில் அது வெற்றிபெற்றது.

நாடாளுமன்றம் தள்ளிவைக்கப்பட்டதுடன் மார்ச் 8 அன்று பிரதான அரசியல் நெருக்கடி மேற்பரப்புக்கு வந்தது. SLFP அரசாங்கம் நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு எண்ணிக்கையில் மிகப் பலவீனமானதாக இருந்தது. பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி, அமைச்சர்கள் கையாளும் திறன் கொண்டிராத ஒரு கட்டத்தை எட்டியிருந்தது. அவர்களது திறமையின்மையும் நல்லமுறையில் செய்வதற்கான பயிற்சித் திறனின்மையும் அம்பலப்பட்டு நின்றன. வெளிப்படையாக, நாடு முகம்கொடுத்த பிரச்சினைகள் அவர்களது தீர்க்கும் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. நடுப்பாதையின் முடிவு எட்டப்பட்டு விட்டிருந்தது. இந்த நிலைமையில் SLFP இன் சாமானியக் காரியாளர்களுக்கும் சரி SLFP அரசாங்கத்திற்கும் சரி, ULF உம் அதன் தெளிவான வேலைத்திட்டமும் உதாசீனப்படுத்த முடியாத ஒரு சக்திவாய்ந்த காரணியாக தனித்து தெரிந்தன.

இந்த திருப்புமுனைப் புள்ளியில் ஒரு மூச்சுவிடும் இடைவெளியைப் பெற்றிருந்த பிரதமருக்கு மூன்று வெவ்வேறு பாதைகள் முன்நின்றன (அ) வலதுடன் ஒரு கூட்டணி; (ஆ) சர்வாதிகார நோக்கங்களது சாத்தியங்களுக்கு இட்டுச்செல்லும் வகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பது; (இ) இடதுடன் ஒரு கூட்டணி. பலத்த பரிசீலனைக்குப் பின்னர் அவர் வலதுடனான கூட்டணியையும் நிராகரித்து விட்டார், நாடாளுமன்றத்தைக் கலைப்பதையும் நிராகரித்து விட்டார். ஐயத்திற்கிடமின்றி அவர் முற்போக்குசக்திகளுடன் இடதுநோக்கி நகர்வதற்கும் நாட்டை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளுக்கு இடது கொள்கைகளின் வழியில் ஒரு தீர்வைக் காண்பதற்கும் முடிவெடுத்தார். 1964 மார்ச் முடிவில் நுவரெலியாவில் அவர் ஆற்றிய உரையில் இது அபரிமிதமான அளவுக்கு தெளிவாக்கப்பட்டிருந்தது.

இந்த முடிவை மனதில் கொண்டு, ULF உடன் அவர் பேச்சுவார்த்தைகளைத் தொடக்கினார், அவருடன் நட்புஅடிப்படையிலான ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, ULF, தோழர் N.M. பெரேராவுக்கு அதிகாரமளித்திருந்தது. இந்த நாடாளுமன்றத்தின் எஞ்சிய காலகட்டத்திற்கு அமல்படுத்துவதற்கான ஒரு குறுகிய-கால வேலைத்திட்டத்தின் மீது கணிசமான அளவுக்கு உடன்பாடு இருப்பதை விவாதங்கள் காட்டின. அவரது கட்சி செயற்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட உத்தரவுக்கு ஏற்ப, ஐக்கிய இடது முன்னணி (ULF) உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க தான் தயாராய் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமைச்சரவை இலாகாக்களின் ஒதுக்கீட்டில் LSSPக்கு முன்னுரிமை அளிக்கப்பட இருக்கிறது.

இந்த ஏற்பாட்டின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) உடன் கூட்டணி என்பது வர்க்க ஒத்துழைப்பு ஆகுமா? இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி (UNP) என்பது, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கட்சி என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். SLFP தீவிரப்பட்ட குட்டி முதலாளித்துவம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் ஒரு கட்சியாகும். அதன் தலைமைக்கு நிலப்பிரபுத்துவ தொடர்புகள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாலும், 1960 ஜூலை முதலாக பின்பற்றப்பட்டு வருகின்ற கொள்கையில் இருந்து பார்க்கும்போது, அரசாங்கத்தின் மீதான பிரதான அழுத்தம் கீழ் நடுத்தர வர்க்கத்திடம் இருந்தும் ஓரளவுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்தும் தான் வந்திருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. சொல்லப் போனால், SLFP 1956 முதல் 1960 வரை இருந்திருந்த மிகப் பிற்போக்கான கூறுகளில் கொஞ்சத்தை ஓரங்கட்டி விட்டிருக்கிறது, அத்துடன் ஒரு இடைநிலைக் கட்சியாக, அது சிலசமயம் வலது நோக்கி நகர்வதும், சிலசமயம் இடது நோக்கி நகர்வதுமாய் ஊசலாடி வந்திருக்கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த உந்துதல் சீராக இடதுநோக்கியே இருந்து வந்திருக்கிறது. இந்த குணாம்சப்படுத்தல் சரியானதல்ல என்று சொல்வோமேயானால், 1956 முதலாக அக்கட்சி நடத்தி வந்திருக்கும் தேசியமயமாக்கத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் விளக்குவது கடினம் என்றாகி விடும். பேருந்து போக்குவரத்தை, துறைமுகத்தை, தனியார் பள்ளிகளை, காப்பீடை அது கையகப்படுத்தியிருக்கிறது. மருத்துவ சேவையில் தனியார் பயிற்சியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மக்கள் வங்கியை (People's Bank) ஸ்தாபித்திருப்பதோடு இலங்கை வங்கியையும் கையகப்படுத்தி இருக்கிறது. இவை அனைத்தையும் அத்துடன் எல்லாவற்றுக்கும் மேல் பெட்ரோலையும், இது பொறுப்பில் எடுத்திருக்கிறது. அது ஏகாதிபத்திய சக்திக்கும் முதலாளித்துவ சக்திக்கும் ஒரு நேரடியான அடியாக இருக்கிறது. இந்த நடவடிக்கைகளது ஒட்டுமொத்த விளைவானது, பொருளாதாரத்தின் முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாக ஒரு தீவிரமான திசைதிருப்பலாக இருக்க வேண்டும். SLFP அரசாங்கமும் அதற்கு முன்பு MEP அரசாங்கமும் இந்த நாட்டில் ஏகாதிபத்திய அடித்தளங்களை அகற்றுவதன் மூலமாக, ஒரு தேசியப் போராட்டத்தை இந்நாட்டில் நடத்தியிருக்கின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலியார் முறையில் (headman system) மறுசீரமைப்பு நடைபெற்றிருக்கிறது. தேசிய கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஒரு கணிசமான ஊக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வலுவாகக் காலூன்றியிருந்த கத்தோலிக்க திருச்சபை பலவீனப்படுத்தப்பட்டு, புத்த பாரம்பரியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் அவற்றுக்கு உரிய இடமளிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மனிதனுக்கு, நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஒரு இடம் என்ற, நூற்றாண்டுகள் கால ஏகாதிபத்திய மேலாதிக்கத்திடம் அவனுக்கு மறுக்கப்பட்டிருந்த ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. மே தினத்தை ஒரு ஊதியத்துடனான பொது விடுமுறை நாளாக்குவது உள்ளிட்ட ஏராளமான மேம்பாட்டு நடவடிக்கைகளின் பயன்களை தொழிலாளர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

இந்த மாற்றங்களின் ஒட்டுமொத்த விளைவை கணக்கில் கொண்டு பார்த்தால், SLFP ஒரு முதலாளித்துவக் கட்சி அல்ல என்பது மிக வெளிப்படையாக இருக்கிறது. முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாக அது வேலைசெய்கிறது என்பதால், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கட்சியாக அது இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. நாட்டின் விவசாயிகளிடம் இருந்தும் கீழ் நடுத்தர வர்க்கக் கூறுகளிடம் இருந்துமே பிரதான ஆதரவைப் பெறுகின்ற ஒரு மத்தியவாதக் கட்சியாக அதன் அடிப்படையான தன்மையில் எந்த மாற்றமுமில்லை. LSSP போன்ற தொழிலாள வர்க்கக் கட்சியாலும் மற்றும் SLFP இன் ஒரு கூட்டணி அரசாங்கத்தினாலும் அதன் வர்க்கத் தன்மையை இன்னும் அதிகமாக மாற்றமுடியும். அத்தகையதொரு கூட்டு, SLFP இன் முற்போக்கான உள்ளடக்கத்தை அதிகரித்து அதனை ஒரு கூடுதல் திட்டவட்டமான இடதுநோக்கி நகரும் அரசாங்கமாக ஆக்கும். இப்போது சிந்திக்கப்படுகின்ற வேலைத்திட்ட கூட்டணியில் இது கூடுதல் முக்கியத்துவமளிக்கப்படுவதாக ஆகி சோசலிசப் பாதைகளிலான ஒரு கூடுதல் செல்வாக்கை செலுத்தும்.

அரசாங்கத்தின் உள்நாட்டுக் கொள்கையிலான முற்போக்கான தன்மை, அது பின்பற்றி வந்திருக்கும் வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலித்து வந்திருந்தது. 1956 முதலாக, ஏகாதிபத்திய முகாமின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சோசலிச நாடுகளுடனான தூதரகத் தொடர்புகளின் ஸ்தாபகம் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. மேற்கு ஜேர்மனியிடம் இருந்து எந்த உதவியும் கிட்டாது என்ற அச்சுறுத்தலையும் மீறி, கிழக்கு ஜேர்மனிக்கு அது தூதரக அந்தஸ்தை வழங்கியிருக்கிறது. சோசலிச முகாமைச் சேர்ந்த நாடுகளுடன் ஏராளமான பொருளாதார மற்றும் கலாச்சார உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. யூகோஸ்லாவியா போன்று ஒரு கண்டிப்பான அணி-சேரா கொள்கையைப் பின்பற்றி, நாட்டின் சுதந்திரத்தினை அவமதிப்பதாகவும் மரியாதைக் குறைப்பதாகவுமாய் இருக்கின்ற நிபந்தனைகளின் பேரில் அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கின்ற உதவியை நிராகரிப்பதற்கும் அது தயங்கவில்லை.

உடனடி முன்னோக்குகள்

மேற்கூறியவாறாக சிந்திக்கப்படுகின்ற SLFP உடனான ஒரு கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் பொதுவாக பரந்த மக்களையும் செயலூக்கம் பெறச் செய்வதை சாத்தியமாக்கும். நமக்கிருக்கும் 12 மாத காலத்தில் சில குறிப்பிட்ட நடவடிக்கைப் பாதைகள் மீது கவனம் குவிப்பது மட்டுமே சாத்தியமாக முடியும். வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு விடயத்தில் ஒரு பாராட்டத்தக்க நற்பெயர் பெறுவதில் கட்சி கவனம் குவிக்க வேண்டும். கறுப்புச் சந்தையையும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கலையும் தகர்ப்பதற்கும் அதன்மூலமாக அத்தியாவசியப் பொருட்களது விலைகளைக் குறைப்பதற்குமான ஒரு திறம்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தீவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குழுக்களை கட்டியெழுப்புவதில் உதவுவதில் நமது அத்தனை இளைஞர் கழகங்களும் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளும் முன்னிலையில் நிற்க வேண்டியது அவசியமானதாகும். இந்த குழுக்களுக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்படும் என்பதோடு இந்த பணிகளை மேற்கொள்வதில் அவற்றுக்கு போலிசின் உதவியும் இருக்கும்.

அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் ஊழலையும் திட்டமிட்டு குழிபறிக்கும் நடவடிக்கைகளையும் குறைப்பதிலும் கட்சி அதேஅளவுக்கு கவனம்குவிக்க வேண்டும். இதில் நமது தொழிற்சங்க அமைப்புகள் ஒரு முக்கியமான பாத்திரத்தினை வகிக்க வேண்டியிருக்கும். அத்தனை வேலையிடங்களிலும் அரசாங்கத் துறைகளிலும் அமைக்கப்படவிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களில் அவர்கள் தலைமை ஏற்க வேண்டும்.

நெல் விளைநிலச் சட்டத்தை (Paddy Lands Act) திறம்பட அமலாக்குவதற்காக விவசாய அமைப்புகளைக் கட்டியெழுப்புவதிலும் ஒரு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்திலும் நமது இளைஞர் கழகங்கள் ஒரு முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டியிருக்கும்.

இந்த மூன்று நடவடிக்கை வழிகளில் கவனம் குவிப்பதன் மூலமாக, அரசாங்கத்தின் செயல்பாட்டில் தொழிலாள வர்க்கம் மற்றும் பொதுவான பரந்த வெகுஜனங்கள் இரண்டு பேரையும் செயலூக்கத்துடன் பங்குபெறும்படி நம்மால் கொண்டுவர முடியும். ஒரு உண்மையான அர்த்தத்தில், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என்ற இந்த இரண்டு பிரதான சக்திகளும், செயல்படுவதற்கான சாத்தியமான மற்றும் படைப்புத்திறன்மிக்க செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். அவர்கள் ஒரு ஒழுங்குபட்ட விதத்தில் அவர்களது வர்க்க எதிரிக்கு எதிராக நிலைநிறுத்தப்பட, அவசியமாயிருக்கும் அரசு எந்திரத்தின் அதிகாரமும் சக்தியும் அவர்களது போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும். ஒரு புதிய நோக்கமும் ஒரு புதிய ஊக்கமும் உருவாக்கப்பட்டு அது ஒட்டுமொத்த இயக்கத்தையும் முன்னால் எடுத்துச் செல்லும். பயனற்ற விமர்சனங்கள் சாத்தியமான நடவடிக்கைகளுக்கு வழிவிடும், ஒட்டுமொத்த இடது இயக்கமும் ஒரு புதிய நோக்கத்தைக் காணும். இந்த 12 மாத காலகட்டத்தின் முடிவில், சோசலிசப் பாதையில் ஒரு புதிய சமூகத்தை நோக்கி முன்நகர்வதற்கான உறுதியான அடித்தளம் இடப்பட்டிருப்பதைக் காணவியலும்.

இதற்குத் தக்கபடி, ULF மற்றும் SLFP இடையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குகின்ற ஒரு கண்ணோட்டத்தில் SLFP அரசாங்கத்துடன் கட்சியின் புதிய மத்திய குழு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்த கட்சி மாநாடு கேட்டுக்கொள்கிறது. அத்தகைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமாயின், LSSP மற்றும் SLFP இடையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான ஒரு உடன்பாட்டில் நுழைவதற்கு மத்திய குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய ஒரு கூட்டணி அரசாங்கம், LSSP விடயத்தில் பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

1. இணைக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருக்கும் குறைந்தது 10 அம்சங்களையாவது கொண்டிருக்கக் கூடிய ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டம்

2. LSSPக்கு மூன்று அமைச்சர்கள்

3. இந்த மூன்று அமைச்சர்களுக்கு பின்வரும் இலாகாக்கள் கொடுக்கப்பட வேண்டும்.

(அ) நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு

(ஆ) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக அமைச்சு

(இ) தேசியமயமாக்கப்பட்ட சேவைகள் அமைச்சு

அமலாக்க நடவடிக்கைகள்

1. இலங்கையில் பதிவு செய்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் அத்துடன் இங்கு வசிக்கின்ற அத்தனை பேரும் தமது வங்கிக் கணக்கினை இலங்கை வங்கி மற்றும்/அல்லது மக்கள் வங்கியில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். (பி.கு. பலவகை கணக்குகளது மாற்றம் ஒரே சமயத்திலானதாக இல்லாத வண்ணம் ஏற்பாடு செய்யப்படலாம்).

2. முகமை நிறுவனங்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

3. இலங்கையில் இருந்து மூலதனத்தை, ஈவுத்தொகைகளை மற்றும் இலாபங்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் இன்னும் அதிகமாய் விதிக்கப்பட வேண்டும்.

4. வேலைக்கு இடைஞ்சல் தரக்கூடிய அல்லது திறமையற்றவர்களாக இருக்கின்ற அல்லது அரசாங்க வேலையை முன்னெடுத்து செய்வதில் வேண்டுமென்றே ஒத்துழைப்பு அளிக்காமல் இருக்கின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதை சாத்தியமாக்குகின்ற வகையிலான புதிய நிர்வாக விதிமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும்.

5. (அ) ஒவ்வொரு பயன்பாட்டு சேவையின் பொது நிறுவனத்திலும் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தொழிலாளர்’ குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய குழுக்கள் அத்தனை மட்டங்களிலுமான நிர்வாகத்துடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். விரயத்தையும், திறமையின்மையும், ஊழலையும் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட அதிகாரங்களும் அத்துடன் இந்த நிறுவனங்களது வேலைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அளிப்பதற்கான உரிமையும் அவற்றுக்கு இருக்க வேண்டும்.

(ஆ) அரசாங்கத்தின் அத்தனை துறைகளிலும் அத்துடன் உள்ளூர் அரசாங்க சேவை போன்ற பாதி-அரசாங்க ஸ்தாபனங்களது துறைகளிலும் நிர்வாக விதிமுறைகளின் மூலமாக கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய குழுக்களுக்கு திறமையின்மையையும் திட்டமிட்டு குழிபறிப்பதையும் தடுத்து நிறுத்துவதற்கும் அத்துடன் பொதுமக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் வேலையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் அளிப்பதற்கும் அதிகாரங்கள் இருக்க வேண்டும்.

(இ) ஒவ்வொரு கண்காணிப்பு குழு அல்லது உள்ளூர் அமைப்பிலும் விநியோக வர்த்தகத்தை சோதிப்பதற்கான சட்ட அதிகாரங்கள் கொண்ட, அதன்மூலமாக பதுக்கலையும், கறுப்பு சந்தையையும் மற்றும் ஊழலையும் எதிர்த்துப் போராட உதவுகின்ற மக்கள் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

6. (அ) அரசு வர்த்தக நிறுவனமானது அத்தனை அத்தியாவசிய இறக்குமதிகளையும் கையிலெடுக்க வேண்டும் அத்துடன் அது தனது நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுமதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

(ஆ) கூட்டுறவு மொத்தவிற்பனை ஸ்தாபனம் தான் மொத்த விநியோகத்திற்கான ஏகபோக உரிமை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலமாகவே குறிப்பாக ஆடைகள், கட்டுமானப் பொருட்கள், மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் துணைப்பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவை விநியோகிக்கப்பட வேண்டும்.

(இ) சில்லறை விநியோகமானது கூட்டுறவுக் கடைகள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை மூலமாக நடைபெற வேண்டும். அவசியப்படும் இடங்களில், தனியான அரசு சில்லறை விநியோகக் கடைகள் திறக்கப்பட வேண்டும்.

(ஈ) ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளுக்கும் சட்டப்படி அதிகப்பட்ச மொத்தவிற்பனை மற்றும் சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

7. பொருளாதாரத் திட்டமிடல் எந்திரம், கூடுதல் திறம்பட்டதாக ஆக்கப்பட வேண்டும் அத்துடன் பொருளாதாரத் திட்டங்களை தயாரிப்பதில் மற்றும் எடுத்துச் செல்வதில் தொழிற்சங்கங்களையும் பொதுவாக மக்களையும் ஈடுபடுத்துவதற்கு உரிய வழிவகைகள் வகுக்கப்பட வேண்டும்.

8. இலஞ்சம், ஊழல், கறுப்புச் சந்தை, பதுக்கல் மற்றும் இதுபோன்ற மற்ற சமூக-விரோத குற்றங்களது வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். இலஞ்சம் அல்லது ஊழல் வழக்கில் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்படுபவர்கள் சிறையிலடைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும், அத்துடன் கொள்ளை இலாபம் மற்றும் பதுக்கல் ஆகியவற்றுக்கான சட்டரீதியான தண்டனை மேம்படுத்தப்பட வேண்டும்.

9. தனியார் முதலாளித்துவ நிறுவனங்கள் மூலமான தினசரிச் செய்தி ஏகபோகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

10. (அ) உழவருக்கு அவர்களது விளைபொருளுக்கான முழு மதிப்பும் கிட்டுவதை உறுதி செய்கின்ற வகையில் பொதுவிலைமுறை (GPS) தூய்மையாக்கப்பட வேண்டும்.

(ஆ) மக்கள் வங்கியின் சேவைகள், நேரடியாகவோ அல்லது குறிப்பிட்ட கூட்டுறவு கழகங்களை அதன் துணை-முகவர்களாக ஆக்கிக் கொண்டோ கிராமப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். கிராமப்புற கடன் நிவாரணத்திற்கான ஒரு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

(இ) நெல் விளைநிலச் சட்டம் (The Paddy Lands Act) காலனித் திட்டத்தில் இருப்பவை உள்ளிட்ட அத்தனை விளைநிலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக வேண்டும்.

(ஈ) ஜமீன்தார்கள் பயிர்வளர்ப்பு கமிட்டிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

வாடகை உரிமை தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலான நிலங்களை கையகப்படுத்தி மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான அதிகாரம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அதிகாரங்கள் இந்தக் குழுக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

N.M. Perera, D.G. William, H. Siddhartha Thero (Rev.), D.W. Wijesooriya, J. Wanigatunga, Cyril Perera, Gilbert Pieris, Hector Fernando,B.A.U. Lewis, Alwis, G.P.Perera, Vivien Goonewardene, Jack Kotalawela, Nimal Horana, D.W.J. Perera, Chandra Gunasekera, Cholmondley Goonewardene, Wilfred Senanayake, Rajapaksa, Batuwandara Gunawardene, Anil Moonesinghe.