World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்திய உபகண்டம்

A socialist strategy to oppose war on the Indian subcontinent

இந்திய துணைக்கண்டத்தில் போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

Statement of the WSWS Editorial Board
31 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் போருக்கான உந்தலை உலக சோசலிச வலைதளம் ஐயத்துக்கிடமின்றி கண்டனம் செய்கின்றது. அணுகுண்டை கொண்டுள்ள இருநாடுகளும் இராணுவ விரோதங்களின் விளிம்பில் நிற்கின்றன, இது துணைக் கண்டத்தில், பிராந்தியத்தில் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழிவுகரமான பிரதிவிளைவுகளைக் கொண்டுள்ளது.

பத்து இலட்சத்துக்கும் அதிகமான துருப்புக்கள் முழுமையாக ஆயுதம் தரித்தவண்ணம் நூற்றுக் கணக்கான டாங்கிகள், கனரக குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களுடன் 2,800 கிலோ மீற்றர் நீளமுள்ள எல்லையில் உச்சக்கட்ட உஷார் நிலையில் ஒன்றை ஒன்று எதிர் கொள்கின்றன. 1947ல் பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினை மூலமாக இந்தியாவும் பாக்கிஸ்தானும் உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் இதுவே மிகப் பெரிய அளவிலான இராணுவ அணிதிரட்டல் ஆகும். இருநாடுகளும் ஏற்கனவே மூன்று போர்களை- 1947, 1965 மற்றும் 1971லும்- நடத்தி உள்ளன. இப்போது ஒவ்வொன்றும் அணு ஆயுத ஆலைகளையும் அவற்றை ஏவுவதற்கு வழிகளையும் கொண்டுள்ளன.

மோதலுக்கான உடனடிக் காரணமாக காஷ்மீர் தொடர்பான நீண்டகால பிரச்சினை இருந்த போதிலும், ஸ்திரமின்மைக்கான பிரதான காரணி, அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் புஷ் நிர்வாகம் எடுத்துவரும் முரட்டுத்தனமான செயல்களேயாகும். "பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோளப் போர்" என வாஷிங்டன் செய்த பிரகடனமும், அதை அடுத்து ஆப்கானிஸ்தான் மீது அதன் ஆக்கிரமிப்பும் இப்பிராந்தியத்தில் இருந்து வந்த உறவுகளைக் குழப்பத்தில் மூழ்கடித்தன, ஆழமாக வேரூன்றி இருந்த பகைமைகளைத் தூண்டி விட்டன, அத்துடன் ஆளும் தட்டுக்கள் வலியத் தாக்கும் தன்மையுடன் இராணுவ முயற்சிகளை எடுத்து அவர்களின் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்ற ஊக்கமளிக்கின்றன.

இந்தியா உடனடியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதன் பகையாளியான பாக்கிஸ்தானுடன் உள்ள பழைய கணக்குகளைத் தீர்க்க முயல்கிறது. அக்டோபர் 1ல் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் சட்டசபைக் கட்டிடத்தின் மீது இஸ்லாமிய போராளிகள் நடத்திய தாக்குதலானது "பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள போரில்" காஷ்மீரையும் சேர்ப்பதற்கும் பாக்கிஸ்தானை "பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக" பெயர் சூட்டும்படியும் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயியை அமெரிக்காவுக்கு அறைகூவல் விடத் தூண்டியது. அச் சமயத்தில் புதுதில்லி, இராணுவ பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்க வாஷிங்டன் கடும் அழுத்தம் கொடுத்தது, ஏனென்றால் காஷ்மீர் தொடர்பான ஒரு போரானது ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்பு செய்ய அது செய்துவரும் சொந்த தயாரிப்புகளை பலவீனப்படுத்திவிடும் என அஞ்சியது. அந்த ஆக்கிரமிப்பானது பாக்கிஸ்தான் இராணுவத்தின் செயலூக்கமான ஆதரவில் தங்கி இருந்தது.

எவ்வாறாயினும், வாஜ்பாய் மற்றும் பாக்கிஸ்தானின் இராணுவ பலம் வாய்ந்த ஜெனரல் பெர்வெஸ் முஷாரப் இருவருக்கும் காஷ்மீர் தொடர்பாக பதட்டங்களை ஒருவழிப்பாதையில் எடுத்துச்செல்லும் ஒரு நலன் இருக்கிறது- அது உள்நாட்டில் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், அவர்கள் இழந்து வரும் ஆதரவு தளங்களை தக்கவைப்பதற்குமாகும். ஒரு தொடரான தேர்தல் தோல்விகளை நிறுத்தவும் அவர்களது உடைந்துபோன ஆளும் கூட்டணியைப் பலப்படுத்தவும் இந்தியப் பிரதமரும் அவரது இந்து பேரினவாத பாரதிய ஜனதாக் கட்சியும் வெறிகொண்டு செயல்பட்டன. முஷாரப் அவரது இராணுவ ஆட்சியின் பிரதான ஆதரவுத் தளமாக இருந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை நசுக்க வேண்டும் மற்றும் தலிபானுடன் அவருக்குள்ள அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்துவது பாக்கிஸ்தானில் முஷாரப்புக்கு இல்லாதிருக்கும் அரசியல் சட்டப்படியான நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது. அதேசமயம் வாஜ்பாய் மற்றும் முஷாரப் ஒவ்வொருவரும் நம்புவது என்னவென்றால் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகள் அவர்களுக்கு ஆதரவாக பெரும்சக்திகளை தலையீடு செய்ய நிர்ப்பந்திக்கும் என்று. இறுதி விளைவு முழு அளவிலான போராக இருந்தாலும் கூட இராணுவ பந்தயத்தை முன்னெடுப்பதன் மூலம் அவை இழப்பதற்கு எதுவும் இல்லை என இரண்டு பக்கமும் நம்புகிறது.

டிசம்பர்13ல் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டது, அப்போதுதான் புதுதில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றத்தை ஆயுதம் தரித்த காஷ்மீர் போராளிக்குழு ஒன்று தாக்கியது. வாஜ்பாய் அரசாங்கம் உடனடியாக இத்தாக்குதலைப் பயன்படுத்தி- வெள்ளை மாளிகையின் வெளிப்படையான சம்மதத்துடனோ அல்லது இல்லாமலோ - அதன் சொந்த "பயங்கரவாதத்துக்கு எதிரான போரை" முன்னெடுத்தது. இந்திய ஆயுதப்படைகளின் நான்கில் மூன்றுபகுதி பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு நகர்த்தப்பட்டன, அவ்வாறே பாக்கிஸ்தானும் செயல்பட அது நிர்ப்பந்தித்தது. அப்போதிருந்து இரண்டு இராணுவங்களும் எல்லைப் பகுதிகளில் குழிகளைத் தோண்டின. கடைசியாக மே14ல் நடந்த சம்பவத்தில் காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது இஸ்லாமியப் போராளிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர், இது இரண்டு நாடுகளையும் விளிம்பு முனைக்குக் கொண்டுவரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

கடந்த இருவாரங்களாக வாஜ்பாய் மீண்டும் கூறிவருவது என்னவென்றால் அவரது அரசாங்கம் பொறுமை இழந்து வருகிறது, அத்துடன் இந்தியா பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் என்பதாகும். எந்த ஒரு இந்தியத் தாக்குதலுக்கும் பாக்கிஸ்தான் "முழு பலத்துடன் பதிலடி கொடுக்கும்" என முஷாரப் திங்கட்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சி உரையில் வலியுறுத்தினார். அந்த உரை அதிருப்தி அளிக்கிறது மற்றும் அபாயகரமானது..... போர் முழக்கம்" என்று அதற்கு இந்தியாவின் பெயரளவிலான பதிலைக் கூறிய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த்சிங் "சர்வதேச பயங்கரவாதத்தின் பிரதான மையம் பாக்கிஸ்தானில் உள்ளது" என பிரகடனம் செய்தார்.

இந்தியா பாக்கிஸ்தான் தூதுவரை வெளியேற்றியது, அதன் இராணுவ ஆணையகத்தை ஒருங்குபடுத்தியது, பாக்கிஸ்தானுக்கு அண்மையிலுள்ள அரபிக்கடலில் அதன் கப்பல் படையை பலப்படுத்தியது. பாக்கிஸ்தான் நெருக்கடிகால சேமப்படையை அழைத்தது, அதன் நகரங்களை உஷார்நிலையில் நிறுத்தியது, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அதன் துருப்புக்களைத் திரும்ப அழைத்தது மற்றும் ஆத்திரமூட்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரைப் பிரிக்கும் கட்டுப்பாடு எல்லைக்குக் குறுக்கே பலத்த தொடரான மோட்டார் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களினால் வீடுகள் அழிக்கப்பட்டன, எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயப்படுத்தப்பட்டனர், 25,000க்கும் அதிகமான காஷ்மீரி மக்கள் தப்பி ஓடினார்கள்.

அணுகுண்டு யுத்த அபாயம்

ஒரு அணுகுண்டு யுத்தம் வெடிப்பது சாத்தியமில்லை என்று நம்புவது தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு அபாயகரமான மடமையாக இருக்கும். "ஒரு வரம்புக்கு உட்பட்ட போருக்கான" சாத்தியங்கள் பற்றிய ஊகங்களை ஏற்படுத்துவதன் மூலமாக பொதுமக்களின் அச்சங்களை இல்லாமல் செய்யும் முயற்சியில் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர் - அந்தப் போர் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் என்று குற்றம் சாட்டப்படுவனவற்றின் மீதான தாக்குதல்களுடன் மட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், எந்த ஒரு மோதலும் அதன் சொந்த இராணுவ மற்றும் அரசியல் இயக்க ஆற்றலை கொண்டதாக இருக்கும். அதிக பலம் வாய்ந்த வழக்கமான படைகளுடன் மோதலை எதிர்கொள்ளும் முஷாரப், தோல்வியைத் தவிர்ப்பதற்காக பாக்கிஸ்தான் - அணு ஆயுதங்கள் உள்பட "முழு பலத்தை" பயன்படுத்தும் என்று அச்சுறுத்துவதை நிஜமாக்கும்படி நிர்ப்ந்திக்கப்படலாம்.

இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்காவிலுள்ள இராணுவ சிந்தனைக் கூடங்களில் ஒரு அணுகுண்டு யுத்தத்தில் "வெல்வது" யார் என கணிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் பிரம்மாண்டமான இராணுவத் தயாரிப்புக்கள் நடக்கும்போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் பாக்கிஸ்தான் முதலில் அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவது பற்றி எச்சரித்தார்: "நம்மால் ஒரு தாக்குதலுக்குத் தாக்குப் பிடித்து பின்னர் திருப்பித்தாக்க முடியும். பாக்கிஸ்தானோ இல்லாமல் போய்விடும்." ஒரு அணுகுண்டுப் போரில் "உயிர் பிழைப்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றி இந்தவாரம் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை பெண்டகன் மூலங்களை ஆதாரம் காட்டி தெளிவுபடுத்தியது. ஒரு நடுநிலையான மதிப்பீட்டின்படி உடனடியாக ஒருகோடி இருபது இலட்சம் பேர் வரையில் அதில் இறப்பார்கள் மற்றும் மேலதிகமாக 70 இலட்சம் பேர் கடுமையாகக் காயப்படுவார்கள். அமெரிக்க அதிகாரிகள் கூறுவதன்படி ஒரு "மிக வரம்புக்குட்பட்ட அணுகுண்டுப் போர்" அழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும். ஆசியா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் நிரம்பிப்போகும். கதிரியக்கம் கலந்த மாசுக்காற்று பஞ்சம் மற்றும் நோய்களை சமாளிக்க வெளிநாட்டு உதவி குறிப்பாக அமெரிக்க உதவி தேவைப்படும்."

பெரும் வல்லரசுகளின் தற்போதைய இராஜதந்திர சூழ்ச்சி நடவடிக்கைகளில் தொழிலாள வர்க்கம் நம்பிக்கை எதுவும் வைக்க முடியாது. தற்போதைய பதட்டங்களுக்கு, எண்ணெய் ஊற்றி விட்ட புஷ் நிர்வாகம், குறைந்த பட்சம் வெளிப்படையாக இப்போது குற்றத்தைத் தூண்டிவிடுபவர்களான இரண்டு பேரையும் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் இது வேகமாக மாற முடியும். கோடிக்கணக்கான மக்களின் மீது எந்த ஒரு இராணுவ மோதலும் ஏற்படுத்தக்கூடிய அழிவுகரமான தாக்கத்தை வைத்து வாஷிங்டனின் அணுகுமுறை நிர்ணயிக்கப்படுவதில்லை, மாறாக அதன் சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

இரு நாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் கட்சிகளின் மீதும் எந்த நம்பிக்கையையும் வைக்க முடியாது. அவர்கள் அனைவருமே தேசியவாதம் மற்றும் பேரினவாத சேற்றில் ஆழமாக மூழ்கி, யுத்தத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அவர்களின் "சொந்த" அரசாங்கத்துக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர்.

இந்தியாவில் சிலவாரங்களுக்கு முன்னர் குஜராத்தில் நடைபெற்ற இனவாத வன்முறைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளைப் பயன்படுத்தி பி.ஜே.பி. தலைமையிலான அரசாங்கக்தை கண்டனம் செய்வதில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சி, வாஜ்பாயியின் பாகிஸ்தானுக்கு எதிரான யுத்த நிலைப்பாடுகளை ஆதரிக்கின்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியும், உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபனத்துக்கு அடிவருடுவதற்கு மேலதிகமாக எதையும் வெளிப்படுத்தவில்லை.

பாகிஸ்தானில், முஷாரப் விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ள போதிலும், அதுவும் அவரால் ஒரு யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கு முடியுமா? என்றக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டவையாகும். 29 கட்சிகளைக் கொண்ட பிரதான எதிர் கூட்டணி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், முஷராப்புக்கு "தற்போது தேசிய பாதுகாப்புக்கு தொடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கவும் பாகிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்கவும் அவசியமான பண்பாட்டு ரீதியிலான அதிகாரம் இல்லை" எனக் குறிப்பிட்டதோடு இராணுவத்தை ஆட்சியிலிருந்து விலகுமாறு நெருக்கியது.

வரலாற்று வேர்கள்

இன்றைய மோதலின் மையத்தில் இருப்பது அனைத்து தீர்க்கப்படாத முரண்பாடுகள்தான், அவற்றின் மீதுதான் இந்தியா-பாக்கிஸ்தான் என்ற தனி தேசிய அரசுகள் நிறுவப்பட்டன. அதாவது காஷ்மீர் தொடர்பாக இந்த இருநாடுகளும் மோதலுக்கு வருவது கோடிட்டுக்காட்டுவது என்னவென்றால், 1947ல் பிரிட்டிஷ் இந்தியா ஒரு முஸ்லிம் பாக்கிஸ்தான் என்றும் இந்து ஆதிக்கம் உள்ள இந்தியா என்றும் பிரிவினை செய்யப்பட்டதன் உள்ளார்ந்த பிற்போக்குத் தன்மையேயாகும். இந்தத் துண்டாடல் துணைக் கண்டத்தை முழுமையாக செயற்கையான எல்லைகளின் வழியில் பிரித்தது. அது தேசிய சிறுபான்மை மற்றும் மொழிக்குழுக்களை ஊடுருவி வெட்டியது, அதன் மூலம் எதிர்கால மோதல்களுக்கும் போர்களுக்குமான அடித்தளத்தை நாட்டியது. வன்முறை தொடக்கத்திலிருந்தே பிரிவினையின் பகுதியாக இருந்தது: அதனைத் தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இலட்சக் கணக்கானோர் அவர்களின் இடங்களில் இருந்து அகற்றப்பட்டு அவர்களது வீடுகளை விட்டுத் தப்பிச் செல்லும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த துயரத்திற்கு - ஜனநாயக மத சார்பற்றவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் காந்தி மற்றும் நேரு தலைமையிலான இந்திய காங்கிரஸ் உட்பட -இந்திய முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பகுதியும் பொறுப்பாக இருக்கின்றது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் திட்டங்களை அல்லது ஒரு தனியான பாக்கிஸ்தான் நாட்டைக் கோரும் முஸ்லிம் லீக்கை சவால் செய்ய எந்த தலைவரும் தயாராக இருக்கவில்லை. ஏனென்றால் வெகுஜன காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டி விடுவதன் மூலமாக முழுமையாகவே ஆளும் நிறுவனத்தின் வர்க்க நலன்கள் அபாயத்துக்குள்ளாகும் என அஞ்சினார்கள். ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (BLPI) அன்றைய பிரபல தலைவரான கொல்வின் ஆர்.டி.சில்வா 1948ல் கல்கத்தாவில் ஆற்றிய உரையின்போது, "இந்தியாவின் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் மட்டுமே ஏற்கனவே தயாராக இருந்ததாக காரணம் காட்டப்படுகிறது, ஆனால் அது அடிப்படையில் லீக்கின் அரசியல் காரணமாக அல்ல, காங்கிரசின் அரசியல் காரணமாகவே ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தொடர்பான காங்கிரசின் அரசியல் போராட்ட அல்ல, அது உடன்பாட்டுக்கான அரசியல் ஆகும். அத்துடன் உடன்பாட்டுக்கான அரசியல் தவிர்க்க முடியாதபடி பிரிவினைவாத அரசியலுக்கு தீனி போட்டது. அதேபோல் அதற்கான முன்முயற்சியைக்கூட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் விட்டுவிட்டது. இந்திய பிரிவினையானது கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களின் தலைகளுக்கு மேலாகவும், அவர்களுக்கு எதிராகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் இந்திய முதலாளித்துவம் செய்து கொண்ட சரணாகதி உடன்பாட்டின் விளைவாகும்" என குறிப்பிட்டார்.

அந்த உடன்பாட்டின் ஒரு விளைபொருளாகத்தான் காஷ்மீரின் புரையோடி சீழ்கொண்ட நிலை உள்ளது. அது தேசிய முதலாளித்துவத்தின் அனைத்து பகுதிகளின் ஜனநாயக விரோத தன்மைக்கும் துணைக் கண்டத்தை கொள்ளை நோய்போல் பீடித்திருக்கும் நீடித்த சமூக அரசியல் பிரச்சினைகள் எவற்றையும் தீர்ப்பதற்கான அவர்களின் ஆற்றலின்மைக்கும் ஒரு பலமான சான்றாக இருக்கிறது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டுமே மூலோபாயநிலை கொண்டிருந்த காஷ்மீர் சமஸ்தானத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான பேராவல்களை கொண்டிருந்தன. ஆனால் பிரிவினை என்ற கட்டமைப்பினுள் அங்கே அதன் அந்தஸ்திற்கு சாதாரணமான எந்த அமைதியான அல்லது ஜனநாயக ரீதியான தீர்வும் இருக்கவில்லை.

பாக்கிஸ்தான் ஒரு தெளிவான வகுப்புவாத அடிப்படையில் உரிமை கோருகிறது. அதாவது காஷ்மீரில் இருக்கும் குறிப்பிடத்தக்க இந்து மற்றும் புத்த மத சிறுபான்மையினருக்கு என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அங்கு முஸ்லிம் பெரும்பான்மை இருக்கவேண்டும் என்பதாகும். எவ்வாறாயினும் காஷ்மீர் ஆட்சியாளர் ஒரு இந்து மகாராஜாவாக இருந்தார். அவர் தொடக்கத்தில் ஒரு தனி சுதந்திர காஷ்மீரை பிரகடனம் செய்ய விருப்பப்பட்டார். பாக்கிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் அவரது முஸ்லிம் குடிமக்கள் ஈடுபட்டிருந்த ஒரு கிளர்ச்சியை எதிர்கொண்ட நிலையில், இந்த சமஸ்தானம் இந்தியாவுடன் பெயரளவில் இணைந்து கொண்டது. நேரு இரண்டு கரங்களுடன் இணைப்புக்கான கருவியைப் பிடித்துக் கொண்டார். அத்துடன் சிலநாட்களுக்குள்ளேயே அந்த அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் எந்த எதிர்ப்பையும் பலவந்தமாக நசுக்கவும் சிறீநகருக்கு இந்தியத் துருப்புக்கள் வான்வழியாக அனுப்பப்பட்டன. இவ்வாறாக "ஜனநாயக" மற்றும் "மதச்சார்பற்ற" இந்திய தலைவர்களின் காஷ்மீர் மீதான உரிமைகோரல்கள், ஒரு பிரிட்டிஷ் ஆதரவு கொடுங்கோன்மை மகாராஜாவினால் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதத் துண்டிலும் வன்முறையான இராணுவ ஆக்கிரமிப்பிலும்தான் தங்கி இருக்கிறது.

ஐந்து பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியத் துணைக் கண்டத்தில் அபாயகரமாக வெடிக்கும் சாத்தியமுள்ள வெளிச்சப்புள்ளியாக காஷ்மீர் இருந்து வருகிறது. 1947 போரின் விளைவாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரை பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலிருந்து பிரிக்கும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு உருவானது. அடுத்தடுத்து வரும் இந்திய அரசாங்கங்கள் நிஜமான ஜனநாயக உரிமைகள் மற்றும் தரமான வாழ்க்கைத் தரங்களுக்கான காஷ்மீர் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற திறனற்றவை என்பது நிரூபிக்கப்பட்டது. பொதுவாக அதிருப்திக்கு அடக்குமுறை மூலம் புதுதில்லி பதிலளித்தது, அதன் மூலமாக ஆழமான விரோதத்தையும் வெறுப்பையும் சேமித்தது, அவற்றினை பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் 1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் பயன்படுத்தின.

குளிர் யுத்த முடிவு

இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள், குறிப்பிட்ட மட்டத்துக்கு குளிர் யுத்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. தீர்க்கமான கட்டங்களில், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ தங்களின் கூட்டாளிகளை - இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை - எல்லைத் தகராறில் ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளல் இரு வல்லரசுகளையும் சம்பந்தப்படுத்தும் எந்தவிதமான பிராந்திய யுத்தத்தையும் தடுப்பதற்கு - கட்டுப்படுத்தினர். கடந்த 30 ஆண்டுகளில், போருக்குப் பிந்தைய ஒழுங்கு முற்போக்கான முறையில் சிக்கல் அகற்றப்படுவதாக, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு அதிகரித்த அளவில் பிடித்தபிடியை உறுதிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

பாக்கிஸ்தானின் இராணுவ சாதனம் அதன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெருமளவில் வாஷிங்டனுக்கு கடப்பாடுடையதாக கொண்டு இருக்கிறது. ஒன்றில் வெளிப்படையான அல்லது தந்திரமான அமெரிக்க ஆதரவை அனுபவித்துவரும் இராணுவ சர்வாதிகாரிகளின் நீண்ட வரிசையில் முஷாரப் அண்மையில் வந்தவராவார். 1950களில் இருந்து, அமெரிக்கா பாக்கிஸ்தான் இராணுவத்தை இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு அரணாக, குறிப்பாக இந்தியாவிற்கு எதிராக மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் அதன் உறவுக்கு எதிராக ஆதரித்து வந்தது. 1971ல், வாஷிங்டன் பாக்கிஸ்தானிய இராணுவ பலவான் யாகியா கான் க்கு, அப்பொழுது கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்ததில் (இப்பொழுது பங்களாதேஷ்) விடுதலைக்கான பரந்த மக்கள் இயக்கத்தை நசுக்கலில், மற்றும் பாக்கிஸ்தானின் இந்தியாவுடனான அடுத்த யுத்தத்தில் ஆதரவளித்தது.

இப் பிராந்தியம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் எழுச்சிக்கான பொறுப்பு நேரடியாக அமெரிக்காவுக்கு உடைமையாகிறது. 1979ன் இறுதியில், ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்புக்குப் பின்னர், வாஷிங்டன் பாக்கிஸ்தானிய இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியா-உல்-ஹக்கை, பெரும் சி.ஐ.ஏ நடவடிக்கையில் பங்காளியாக சேர்த்துக் கொண்டது. சோவியத் ஒன்றியத்தைக் கீழறுக்கும் வழிமுறையாக ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் எதிர்ப்பு முஜாஹைதின் குழுக்களுக்கு நிதி அளித்து, பயிற்சி கொடுத்து ஆயுதபாணி ஆக்க பில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டன. காஷ்மீரில் இப்போது செயல்படும் இந்திய எதிர்ப்புப் போராளிக் குழுக்களில் பல, அதேபோல ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா, தலிபான் தலைவர்கள் மற்றும் பாக்கிஸ்தானுக்குள் உள்ள ஏனைய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் தங்களின் மூலத் தோற்றத்தை இந்தக் காலகட்டத்தில் அடையாளப்படுத்துகின்றன.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள ஆளும் செல்வந்தத் தட்டால் வகுப்புவாதம் தூண்டிவிடப்பட்டது சாதாரண மக்களின் தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் ஈடுபடுத்திக்கொள்ள அவர்களின் இயலாமையிலிருந்து முளைவிடுகிறது. இந்தியாவில் இந்து வெறித்தனமும் மற்றும் பாக்கிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதமும் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் என்றுமில்லா வகையில் அதிகரித்துவரும் பெரும் இடைவெளியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புதற்கு மற்றும் அவர்களின் அதிருப்தியை திசைதிருப்புவதற்கு பயனுள்ள அரசியல் கருவியாக ஆனது. இந்த நிகழ்ச்சிப்போக்கானது, இரு நாடுகளும் பன்னாட்டு நிதியத்தின் தனியார்மயமாக்கல், மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார சீர்குலைத்தல் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியபோது 1990ல் விரைவு படுத்தப்பட்டது. இந்து மேலாதிக்க பி.ஜே.பி-ஆல் தலைமை தாங்கப்படும் இந்திய அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களிடம் தொடர்பு கொண்ட பாக்கிஸ்தானிய இராணுவ சர்வாதிகாரம் துணைக் கண்டத்தில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் கொண்டு வந்திருந்த முட்டுச்சந்தின் மிகவும் முன்னேறிய வெளிப்பாடாகும்.

சோவியத் ஒன்றியத்தின் மறைவு பிராந்தியம் முழுவதும் இருந்த மூலோபாய சமநிலையை மாற்றியது. பெரும் வல்லரசுகளைப் பொறுத்தவரையில் முன்னர் கிடைக்காத எண்ணெய் மற்றும் வாயு சேர்ம இருப்புக்களை கட்டுப்படுத்துவதற்கும் சுரண்டுவதற்குமான பெரும் புதிய வாய்ப்புக்கள் திறந்து விடப்பட்டன. இந்தியத் துணைக் கண்டத்தில் முன்னைய சோவியத், மத்திய ஆசியாவுக்கு உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் போன்றவை நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு உள்ள தளமாக பிரதான முக்கியத்துவத்தை எடுக்கத் தொடங்கின.

மத்திய ஆசியாவில் ஏகாதிபத்தியத் தலையீடுகள் உள்நாட்டு ஸ்திரமின்மை மற்றும் அடிப்படைவாதத்தின் எழுச்சி இவை அனைத்துமே இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களை அதிகப்படுத்தின. 1998ல் இரு நாடுகளுமே போட்டி அணுகுண்டு சோதனைகளை நடத்தின. மற்றும் 1999ல் காஷ்மீரின் மூலோபாய கார்கில் மலைகள் தொடர்பாக சிறிய போர் ஒன்று வெடித்தது. அது முழு அளவிலான மோதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இந்தியாவுடன் ஒரு நெருக்கமான கூட்டை வாஷிங்டன் ஏற்படுத்தியது, கார்கிலில் ஊடுருவிய இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு அது பாக்கிஸ்தானை நிர்ப்பந்தித்தது. பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பிற்கு சங்கடத்தை ஏற்படுத்திய பின்வாங்கல், 1999 அக்டோபரில் முஷாரப்பை ஆட்சிக்குக் கொண்டு வந்த இராணுவ சதியை தூண்டுவதற்கான பிரதான காரணியாக இருந்தது.

கடந்த மூன்று வருடங்களில் அமெரிக்கா இந்தியாவுடனான அதன் உறவை செம்மைப்படுத்தியது. அது அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் ஆரம்பமாகி புஷ் நிர்வாகத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, இந்தியாவை அதன் பிரகடனப்படுத்தப்பட்ட "மூலோபாயப் போட்டியாளர்" ஆன சீனாவுக்கு ஒரு முக்கியமான எதிர் சக்தியாகக் கருதுகின்றது. தொடர்ந்து பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவும் இந்தியாவும் உயர்மட்ட உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன, கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் கப்பற்படை ரோந்துகளை நடத்துகின்றன. அத்துடன் முக்கியமான பொருளாதார இணைப்புக்களை வளர்த்துக் கொள்கின்றன. இந்து பேரினவாத பா.ஜ.க அரசாங்கத்தில் இருக்கையில் அரசியல் பின்விளைவுகள் பற்றி சொரணையற்ற அலட்சியத்துடன் இந்தியா பிராந்திய வல்லரசு மற்றும் போலீஸ்காரன் பாத்திரம் வகிப்பதற்காக வாஷிங்டன் அதனைக் கட்டி எழுப்புகின்றது.

செய்தி ஊடகம் வாஷிங்டனின் புதிய நோக்குநிலைக்கு கீழ்ப்படிந்தது. இளம் காஷ்மீரி முஸ்லிம்கள் ஆயுதங்களைத் தூக்குவதற்கு வழிவகுத்த மோசமான சமூக நிலைமைகள், அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒடுக்குமுறை இந்திய ஆட்சி பற்றியும் எந்தக் கேள்விகளும் எழுப்பப்படவில்லை. ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கண்டனம் செய்யும் அதேவேளையில், புதுதில்லியில் ஆட்சியில் இருக்கும் இந்து வெறியர்களை "ஜனநாயகவாதிகள்" என ஆரத்தழுவுகின்றனர். "அகன்ற பாரதத்திலிருந்து" விரட்டப்பட வேண்டிய அல்லது அடக்கப்பட வேண்டிய ஒன்பதாம் நூற்றாண்டு ஆக்கிரமிப்பாளர்கள் என முஸ்லிம்களைக் கருதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற பாசிச இந்து குழுக்களுடன் அவர்களுக்குள்ள தொடர்புகள் பற்றி கண்களை மூடிக் கொள்கின்றனர்.

ஒரு சோசலிச மூலோபாயம்

செப்டம்பர்11ம் திகதிக்கு முன்னரே இந்திய உபகண்டத்தின் பொருளாதார, அரசியல், சமூக நெருக்கடிகள் ஒரு உயர்ந்த குமுறும் நிலையை அடைந்திருந்தது. ''பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தினுள்'' அதனை இட்டுச்சென்றதன் மூலம் புஷ் நிர்வாகம் அணுவாயுத யுத்தத்திற்கான திரியை மூட்டியுள்ளது.

அக்டோபர் 9, 2001 தனது ஆசிரிய தலையங்கத்தில் உலக சோசலிச வலைத்தளம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது. ''அமெரிக்க இராணுவ வாதத்தின் எழுச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அதனால் விளையும் அழிவின் அளவு மிகவும் அதிகமானதாகின்றது. தற்போது அது உலகத்தின் பாரிய சக்திகளின் மறைமுகமான செல்வாக்கிற்கான பிரதேசத்தில் ஒரு பாரிய விளைவுகளை உருவாக்கக் கூடிய நடவடிக்கையை தூண்டியுள்ளது. அதற்கும் மேலாக இப்பிரதேசம் அணுவாயுதங்களை சண்டைக்கு தயாராக வைத்திருக்கும் சமூக, அரசியல், இன, மத பதட்டங்களை கொண்ட மோசமான ஏழ்மையான பகுதியாகும்''.

அணுவாயுதங்களை கொண்ட இரண்டு நாடுகளுக்கியிலான முழு அளவிலான யுத்தம் உருவாக்கும் விளைவுகளை இட்டு சாதாரண உழைக்கும் மக்கள் மிகவும் பயங்கொண்டுள்ளனர். இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் செய்தி ஸ்தாபனங்களின் தொடர்ச்சியான இனவாத பிரச்சாரத்தின் மத்தியிலும் யுத்தத்திற்கு எதிர்ப்பு ஏற்கனவே வெளிப்பட தொடங்கியுள்ளது.

அதிகரித்துவரும் யுத்த அபாயத்தை வெற்றிகொள்வதற்காக இரண்டு நாட்டினது தொழிலாள வர்க்கமும் சகலவிதமான தேசியவாதத்தையும், இனவாதத்தையும், முற்றாக நிராகரிக்கும் தன்மையை மையமாக கொண்ட ஒரு புதிய மூலோபாய முன்னோக்கை நோக்கி திரும்பவேண்டியுள்ளது. பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் மற்றும் ஆப்கானிஸ்தானிலும், நேபாளத்திலும், பங்களாதேஷிலும், பூட்டானிலும், பர்மாவிலும் சிறீலங்காவிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரேவிதமான வர்க்க நலன்களையும், பொதுவான வர்க்க எதிரியையும் கொண்டுள்ளனர். 1947 இன் பிரிவினையின் துயரம் தோய்ந்த நிகழ்வால் உருவாகியுள்ள நூறு ஆயிரக்கணக்கானோரின் ஏழ்மையும், தேசிய முதலாளித்துவத்தின் இயலாமையும் 50 வருடங்களுக்கு மேலாக உண்மையான சமூக, பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்த அடிப்படை ஜனநாயகக் கடமைகளை முன்னெடுக்க இயலாதுள்ளது.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் தேசிய எல்லைகள் என்பது பிரிட்டிஷ் காலனித்துவத்தினரிடமிருந்து இந்திய, பாகிஸ்தான் தலைவர்களால் மரியாதையுடன் ஏற்கப்பட்ட நஞ்சுகிண்மேயன்றி வேறொன்றுமில்லை. உலக வரைபடத்தில் அவர்களின் விருப்பப்படி வரையப்பட்ட கோடுகள் இந்தியாவிலும் பங்களாதேஷிலும் உள்ள வங்காளி மக்களை பிரிப்பதற்கானதும், இந்தியாவிலும் சிறீலங்காவிலும் உள்ள தமிழ்மக்களையும், இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் உள்ள காஸ்மீரிய மற்றும் பஞ்சாபிய மக்களையும் பிரிக்கும் எல்லைகளானது.

தீர்க்கமுடியாதது போல் தோன்றும் இப்பிரச்சனைகளுக்கும், துணைக்கண்டத்திலுள்ள இன, மொழி, மத பிரிவுகளுக்கு காரணமாக உள்ள பிரச்சனைக்கான பதில் இப்பிரதேசத்தை ஒரு தொடர் சுதந்திரமான நாடுகளாக பால்க்கன்மயப்படுத்துவதல்ல. அப்படியான தீர்வு மேலும் வன்முறையையும், மோதல்களையும் தூண்டிவிடுவதுடன், ஒவ்வொரு ஆளும் குழுவினரும் தமது எதிராளிகளுக்கு எதிராக ஏதாவது ஒரு முக்கிய சக்திகளின் ஆதரவை நாடுவதாகவே இருக்கும்.

இதற்கு மாறாக, இதற்கான தீர்வு தற்போதுள்ள சகல எல்லைகளை இல்லாதொழிப்பதிலும், துணைக்கண்டத்தின் பாரிய வளங்களை திட்டமிட்டபடி சகலரினதும் தேவைகளுக்காக பாவிப்பதிலுமே தங்கியுள்ளது. இக்கடமை இப்பிரதேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரு பொதுவான, ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு அணிதிரட்டி ஒடுக்குமுறை ஆட்சிக்கு முடிவுகட்டி சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை கட்டியமைக்கும் பணியை செய்யக்கூடிய ஒரேயொரு சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் மீது வீழ்ந்துள்ளது. இந்திய துணைக்கண்டத்திற்கான ஐக்கிய சோசலிச அரசுகளை அமைப்பதற்கான ஒரு புதிய புரட்சிகர அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதே உலக சோசலிச வலைத்தளத்தாலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும் முன்வைக்கப்படும் சோசலிச, சர்வதேச முன்னோக்காகும்.

See Also :

பாக்கிஸ்தானுடனான மோதலை இந்தியா தொடர்ந்து எரியூட்டி வளர்க்கிறது

பேச்சுவார்த்தைகளுக்கான பாக்கிஸ்தானிய வேண்டுகோளை இந்தியா நிராகரிக்கிறது

இந்தியாவும் பாக்கிஸ்தானும் யுத்தத்தின் வாயிலில்

இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் இந்தோ-பாக்கிஸ்தான் யுத்தத்திற்கான அபாயத்தை கூட்டியுள்ளது

Top of page