World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு

அத்தியாயம் 8 : பின்னோக்காளர்களின்''மூன்று பொருள் விளக்கங்கள்"

Use this version to print | Send this link by email | Email the author

யுத்த வருடங்களைப் பற்றிக் கையாளும் பொழுது, (நான்காம் அகிலத்தின்) ''ஜரோப்பிய பகுதிகள் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளாது ஒதுங்கியிருந்தன" போன்ற பதங்களை பண்டா பயன்படுத்துகின்றார். நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் படிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் மத்தியில், அதைப் பற்றி ஒரு வெறுப்பு மனப்பான்மையை திட்டமிட்டு தூண்டிவிட இவை அவரால் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை, நான்காம் அகிலம் "ஜனநாயக'' ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டத்திற்குக் கீழ்படியவிட மறுத்ததும், எதிர்ப்பு இயக்கங்கள் சம்பந்தமாக ஒரு கோட்பாட்டு ரீதியான நிலைப்பாட்டை வகுத்து கொண்டதும் போன்ற அதனது உறுதிப்பாட்டை, பண்டாவால் ஒரு பொய்யான குற்றச்சாட்டாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது: ட்ரொட்ஸ்கிஸ்டுகள், எப்பொழுதும் போல அரசியல் கோழைகள், அவர்கள் "பங்கு கொள்ளாது ஒதுங்கியிருந்தனர்!" அனைத்துலகக் குழுவைப் புதைக்க மற்றொரு காரணம்! ட்ரொட்ஸ்கிசம் ஒழிக !

இரண்டாம் உலக யுத்த எதிர்ப்பு இயக்கங்கள் சம்பந்தமாக, நான்காம் அகலத்தினுள் இருந்த கருத்து வேறுபாட்டின் வரலாற்றுத் தோற்றுவாய்களைக் கண்டறிய பண்டா எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பது அதிசயமானதொன்றல்ல. அவர் இதை ஒத்த விமர்சனங்களை 1940 ம் ஆண்டுகளில் யார் கிளப்பியது என்பதை ஆராயவோ, அல்லது அப்படியான விமர்சனங்களுடன் இணைந்துள்ள அரசியல் நிலைப்பாடுகளைக் கூர்ந்து படிக்கவோ, எந்த ஒரு அக்கறையும் காட்டவில்லை.

இதற்குப் பதிலாக பண்டா, கோல்ட்மன் - மொறோ கன்னைக்கு [faction] எதிராகக் கனன் தொடுத்த போராட்டத்தை நன்கு ஆராயாமல், இது ஒரு (ஏமாற்று) ''பிறிதிடமிருப்பு வாதம்" [alibi] மேலும் வசதியான முறையில் இது செய்முறைவாதத்தின் [pragmatism] மிக மோசமான தரப்புக்கு சறிக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்தாமல் இருந்தது'' என்று கூறுகின்றார். ஜேப்படித் திருடன், திருடிய இடத்திலிருந்து தப்பத் துடிப்பது போல, பண்டாவும் உடனடியாக அவ் இடத்தை விட்டு நகருகின்றார். ஏன் இந்த அவசரம்? அவர் கூறிய இந்த இரண்டாம் பட்சமான [offhand] கூற்று, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவமும் இல்லாத சில்லறையான காலப் பகுதியைப் பற்றிப் பேசப்படுகின்றது என்பதையே தெரிவிக்கிறது.

ஆனால் நிலமை எவ்வகையிலும் அதுவல்ல. பிலிக்ஸ் மொறோ (Felix Morrow) மற்றும் அல்பேட் கோல்ட்மனுக்கு (Albert Goldman) எதிராகக் கனன் நடத்திய போராட்டம், 1939 - 40 களில், லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் சோசலிசத் தொழிலாளர் கட்சி, சட்மன், (Shachtman) பேர்ண்ஹாம் (Burnham) மற்றும் அபேண் (Abern) போன்ற குட்டிமுதலாளித்துவ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியையும், மற்றும் அதன் ஆழமான போராட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மொறோ - கோல்ட்மன் சிறுபான்மைக் கன்னைக்கு எதிரான போராட்டமானது, இறுதியில் நான்காம் அகிலம் முழுவதிலும் குட்டி முதலாளித்துவ மற்றும் வலதுசாரிப் பகுதிகளுக்கு எதிரான சர்வதேச ரீதியான போராட்டத்தின் வடிவத்தைப் பெற்றது.

பண்டா இப்போராட்டத்தை மழுப்பி, அதை வெறுமனே "பிறிதிடமிருப்பு வாதம்" [alibi] என்றும் வசதியாகக் கவனத்தை வேறு வழியில் திருப்பும் முயற்சி" என்றும் கூறுவது, இரு அம்சங்களில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

முதலாவதாக அது, மீண்டும் ஒருமுறை பண்டா நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் பற்றியும் அதன் உட்கட்சிப் போராட்டங்களைப் பற்றியும் அவர் கொண்டுள்ள கருத்துருவானது [conception] முற்று முழுதாக அகநிலை ரீதியானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் இருந்த போக்குகளுக்கு [tendencies] இடையிலான போராட்டங்களுக்கும், உலக முதலாளித்துவ நெருக்கடியின் வளர்ச்சிக்கும் மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையே, மூடப்பட்டிருக்கும் புறநிலை ரீதியான உறவை அகற்றித் திறந்து காட்ட ஆற்றலற்றவராவார். நான்காம் அகிலத்தினுள் உள்ள தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, புறநிலை ரீதியாக நிலவும் சமூக உறவுகளின் முரண்பட்ட முறையிலான பிரதிபலிப்பாகக் கூர்ந்தாராய்வதற்குப் பதிலாக, பண்டா அவற்றை நல்லவை, கெட்டவை மற்றும் அவலட்சணமானவை என்றுதான் பார்க்கிறார்.

இரண்டாவதாக, மொறோ, கோல்ட்மன் மற்றும் அவர்களது சர்வதேச பரிவாரங்களுக்கு எதிரான போராட்டத்தில் எழுந்த பிரச்சனைகளை ஆராய்ந்தால், இப்பொழுது பண்டா நான்காம் அகிலத்திற்கு எதிராகச் சுமத்தும் குற்றச்சாட்டுகளின் மூதாதையர் மரபின் பிற்போக்கு அரசியல் மற்றும் தத்துவம் அம்பலப்படுத்தப்படுகின்றது. நாம் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியபடி, பண்டா பழைய திருத்தல்வாத துண்டுகளையும், துணுக்குகளையும் கையாளும் ஒரு திரட்டுவாதிதான், [eclectic] ஆனால் இவற்றிற்கு, திருப்திப்படுத்தப்பட்ட முறையில் அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளாலும் நீண்ட காலத்திற்கு முன்னரே, - தற்போது தெரியவந்துள்ளபடி மைக்கல் பண்டாவைத்தவிர- பதிலளிக்கப்பட்டு விட்டது.

நான்காம் அகிலம், உத்தியோகபூர்வமான எதிர்ப்பு இயக்கங்கள் சம்பந்தமாக கொண்டிருந்த மனப்பான்மையைப் [attitude] பற்றிய விமர்சனங்களை மட்டுமல்லாது, பண்டா, யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் இருந்த நிலையைப் பற்றியும் குற்றம் சாட்டுகிறார், அதாவது நான்காம் அகிலம் முழுவதும் -''ட்ரொட்ஸ்கியின் இயங்கியல் ஆற்றலும் மற்றும் கூரிய தொலைநோக்கும் இல்லாத நிலைமையில் - முழுமையாகக் குழப்பம் அடைந்திருந்தது. ஏனென்றால் கனன் போன்ற முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிசத்தை மூடபக்தியுடன் முடிந்த முடிவுவாதமாக்கி [dogmatism] விட்டிருந்தனர்", என்று கூறும் பிலிக்ஸ் மொரோவின் வாதங்களையே பண்டா மீண்டும் கூறுகின்றார்.

பிலிக்ஸ் மொறோ, 1946 இல், நான்காம் அகிலத்தின் கடை [terminal] நெருக்கடியின் ஊற்றுக்கால் என அவர் கருதியதை இவ்வாறு விளக்கினார்:

நைந்துபோன சூத்திரங்களைப் பைத்தியக்காரத்தனமாக பற்றிக் கொள்ளுதல்தான் - நமக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடுகளின் ஊற்றுக் காலாகும். தோழர் கனன் இதைத்தான் நமது "மாறா வேலைத்திட்டம்" என்று அழைக்கின்றார். இதுதான் கருத்து வேறுபாட்டின் மையமாக உள்ளது. கனனுக்கும் அவரைப் பின் பற்றுபவர்களுக்கும் வேலைத்திட்டத்தின் மேல் கரடு முரடான கரங்கள் படக் கூடாது; அது புனிதமானது, அது மீறக் கூடாதது.....

கருத்து வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதற்கு மையமாக இருப்பது ட்ரொட்ஸ்கியின் மரணம் உருவாக்கியுள்ள நிலைமையைப் புரிந்து கொள்ளுதலாகும். ட்ரொட்ஸ்கியின் மரணம், விரைவாகவோ அல்லது பின்னரோ, அது நான்காம் அகிலத்தின் அரசியல் நெருக்கடிக்கு இட்டுச் செல்வதுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நாம் இன்று எதிர் கொள்ளுகின்றோம் - அனைத்துலக அளவிலான ஒரு அரசியல் நெருக்கடி, இது ட்ரொடஸ்கியின் மறைவுடன் பிணைக்கப்பட்டுள்ள இடைவெளியாக இருப்பதால், இதை தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது கூட்டாகவோ, எவராலும் நிறைவு செய்ய முடியாது.1

கனனின் "மாறா வேலைத் திட்டத்தை"ப் பற்றி மொறோவின் தூற்றல் - அல்லது ட்ரொட்ஸ்கிசத்தை மூடபக்தியுடன் முடிந்த முடிவுவாதமாக்கல்" என்று பண்டா கூறுவதும் - நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை கவிழ்த்துவிட எடுக்கும் முயற்சியாகும். இந்த இரு அணுகு முறைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, மேலோட்டமானதோ அல்லது தற்செயலானதோ அல்ல. நான்காம் அகிலத்தின் குட்டி முதலாளித்துவ எதிராளிகள் தரித்துவந்த தத்துவார்த்த உடை, தலைமுறை தலைமுறையாக கைமாறி வழிவந்த அதே பழைய கையளிப்புகளேயாகும். இருந்த பொழுதும், திருத்தல்வாதிகளின் ஒவ்வொரு புதிய தலைமுறையும் - 1940 முதல் சட்மனிலிருந்து 1986 இல் பண்டாவரை, முழு நெடுங்கிலும் - ட்ரொட்ஸ்கிசத்தின் மரண ரீதியான குறைபாட்டை [fatal flaw] மீண்டும் புதிதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகத் தம்மை தாமே அளவுக்கு மீறிப் புகழ்ந்து வந்துள்ளனர்.

மொறோ - கோல்ட்மன் கன்னைக்கும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக நான்காம் அகிலத்தினுள் தொடுக்கப்பட்ட போராட்டத்தின் தோற்றுவாயை நாம் மீளாய்வு [review] செய்வோமாக. இது பண்டாவின் அன்பிற்குரிய கிராண்டிசோ முனிசையும் (Grandizo Munis) மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை அன்று கொண்டிருந்த பிரிட்டிஷ் பகுதியின் ஜொக் ஹஸ்ரனையும் (Jock Haston) உள்ளடக்கும்.

பேர்ண்ஹாம், சட்மன் மற்றும் அபேணிற்கும் எதிராக ட்ரொட்ஸ்கியும், சோசலிசத் தொழிலாளர் கட்சியும் தொடுத்த போராட்டமானது, சோசலிசத் தொழிலாளர் கட்சியை மார்க்சிசப் பாட்டாளி வர்க்க கட்சியாக உருமாற்றம் செய்யும் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப் போராட்டம், தொழிலாள வர்க்கத்திற்கு அன்னியவர்களாக இருந்த, மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தினுள் அமெரிக்கா சேரும் தறுவாயில் புரட்சிகர முன்னணியின் மேல் ஏகாதிபத்தியம் கொண்டுவந்த வர்க்க அழுத்தத்திற்கு அடிபணிந்த, குட்டி முதலாளித்துவ பிரச்சாரவாதிகளுடன் சோசலிசத் தொழிலாளர் கட்சி செய்த ஒரு தீர்க்கமான முறிவைக் குறித்தது.

1940 ஏப்பிரல் பிளவிற்கு பின் ஒரு மாதத்திலும் சிறிது அதிகமான காலத்தின் பின், சிறுபான்மையினரின் தத்துவார்த்த தலைவரான ஜேம்ஸ் பேர்ண்ஹாம் (James Burnham) இயங்கியல் ஜடவாதத்திற்குத் [dialectical materilism] தனது எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, அவர் ஜனநாயக ஏகாதிபத்தியத்திய பிற்போக்கின் முகாமிற்கு விட்டோடினார். தன்னைத் தொழிலாளர் கட்சி என்று அழைத்துக் கொண்ட சட்மனின் குழு, நான்காம் அகிலம் சோவியத் ஒன்றியத்தைத் தொழிலாளர் அரசு என்று பண்புருப்படுத்தியதை [characterization] நிராகரித்த வண்ணம் ஏகாதிபத்திய தாக்குதலக்கு எதிராக அதைப் பாதுகாக்க மறுத்த வண்ணம், தொடர்ந்தும் தன்னையும் ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது.

சட்மனின் ஓடுகாலித்தனத்திற்கு, பரந்த குட்டி முதலாளித்துவ தட்டினரின் ஐயுறவுவாதம் அடிப்படையாக [skepticism] விளங்கியது, இத் தட்டு, பாட்டாளி வர்க்கத் தோல்விகளின் தாக்கங்களின் கீழும், சோவியத் அதிகாரத்துவத்தின் வெளித்தோற்ற பலத்தின் கீழும், மற்றும் யுத்தத்தின் பயங்கரத்திற்கும் முன்னால், சோசலிசப் புரட்சிக்கான முன்நோக்கில் எல்லா நம்பிக்கையையும் இழந்தது. ட்ரொட்ஸ்கி விளக்கியது போல:

போலி மார்க்சிசத்தின் பல்வேறு வகையான நம்பிக்கை இழந்த மற்றும் திகிலடைந்த பிரதிநிதிகள் அனைவரும் ஆரம்பிப்பது... "பாட்டாளி வர்க்கம் அதன் புரட்சிகர குறிக்கோளை நிறைவேற்ற ஆற்றல் அற்றிருப்பது, அதன் தலைமையின் திவாலில் "பிரதிபலிக்கின்றது" என்ற கற்பிதத்தில் இருந்தேயாகும். ஆனால் நமது எதிர்ப்பாளர்களில் எவருமே இவ் விடயத்தைப் பற்றி தெளிவாக கூறவில்லை, ஆனால் - அதிதீவிர இடதுசாரிகள், இடைநிலைவாதிகள், அனாகிஸ்டுகள் போன்ற இவ் அனைவரும், ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளைப் பற்றியும் எதையும் கூறவில்லை - அனைவரும் தோல்விகளின் பொறுப்பைத் தமது தோள்களில் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு மாற்றி விடுகின்றனர். இவர்களில் எவரும் திட்டவட்டமாக எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கமானது சோசலிசக் கவிழ்ப்பைச் செய்ய ஆற்றல் உள்ளதாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை.2

அரசியல், தத்துவம் மற்றும் இயக்க அமைப்பு என்பனவற்றின் நிலைப்பாட்டில் இருந்து, சட்மனுடனான பிளவு தீர்க்கமானதாக இருந்த பொழுதும், இது சட்மனின் சீரழிவு மற்றும் காட்டிக் கொடுப்புகளை உண்டாக்கிய சமூக அழுத்தங்கள் ஓய்ந்துவிட்டன என்றோ, அல்லது நான்காம் அகிலமானது தனது அணியிலுள்ள குட்டி முதலாளித்துவப் பகுதியினருடன் மிகத் தெளிவான முறையில் முறித்துக் கொண்டு விட்டது என்றோ, அர்த்தப்படுத்தாது. முதலாளித்துவம் இருக்கும்வரை மற்றும் சோசலிசப் புரட்சிக்குப் பின்னால் உடனடியாகத்தன்னும், திருத்தல்வாதத்திற்கு எதிரான ஒரு "இறுதிப் போராட்டம்" முடிவு பெற்று விடாது. யுத்த வெடிப்பும், அதன் தரைமட்டமாக்கும் தாக்கமும் போன்ற பலவிதமான எண்ணிலடங்கா நிலமைகள் நான்காம் அகிலத்தினுள் புதிய வேறுபாடுகளை உருவாக்கியது.

நான்காம் அகிலத்தினுள், புதிய திருத்தல்வாதப் போக்குகள் பற்றிய மிக ஆரம்ப அறிகுறிகள், இவை "அரசியல் நிலமை மற்றும் அரசியல் பணிகள் பற்றிய மூன்று பொருள் விளக்கங்கள் (theses)" என்று தலைப்பிடப்பட்ட ஒரு பத்திரத்தைக் குடிபெயர்ந்த ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1942 இல் வெளியிட்டதுடன் தோன்றின. இந்தப் பத்திரத்தில் முன் வைக்கப்பட்ட நிலைப்பாடு, குட்டி முதலாளித்துவ ஐயுறவுவாதம் தவிர்க்க முடியாது ஒரு அரசியல் முட்டுச் சந்திற்கு இட்டுச் செல்லும் என 1939 இல் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கையை மீண்டும் நினைவு படுத்தியது:

"தோல்விகளுக்கான காரணி, இது பாட்டாளி வர்க்கத்தின் சமூகப் பண்புகளிலேயே வேர் ஊன்றியுள்ளது என்பதை உண்மை என நாம் ஒப்புக் கொள்வோமாயின், அப்பொழுது நாம் நவீன சமுதாயத்தின் நிலை எந்த ஒரு நம்பிக்கைக்கும் இடம் தரவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்".3

ஏறக்குறைய இந்த நிலைபாட்டிற்கே, "மூன்று பொருள் விளக்கங்களின்" ஆசிரியர்கள் அவர்களது "பின்னோக்கிய வளர்ச்சி" (retrogression) எனும் தத்துவத்துடன் வந்து சேர்ந்தார்கள். ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி மற்றும் நாசிகள் ஐரோப்பாவைக் கைப்பற்றியது, இவை மீண்டும் மாற்றமுடியாதவை என்று நம்பிய IKD (ஜேர்மன் சர்வதேசக் கம்யூனிஸ்டுகள்) யின் "பின்னோக்காளர்கள்", ("retrogressionists") சோசலிசம் எனும் முன்னோக்கு அதன் எதிர்காலத்திற்கான வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது என்று முடிவு செய்து கொண்டார்கள். யுத்தம் தசாப்தங்களுக்குத் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்களது தோல்வி மனப்பான்மை, [pessimism] அதன் இறுதி ஊழ்வினையின் அளவுகளை எட்டியது. "ஒருவர் எங்கு பார்த்தாலும், அழிவும், அழுகிக் கெட்டுப் போதலும், மேலும் அச்சப்படும் மட்டத்திற்கு அராஜகமும்தான் உள்ளன. இவை கலாச்சாரத்தின் கதிக்கு முடிவின் முத்திரையைப் பதிக்கின்றன",4 என்று அவர்கள் எழுதினார்கள்

ஹிட்லரிசம், இது அழுகிப் போகும் முதலாளித்துவத்தின் விளைபயன் அல்ல, ஆனால் ஒரு புதிய சமூக அமைப்பினுடைய பிறப்பின் அடையாளமாகும். சிறைக் கூடங்கள், யூதர்கள் வாழும் புதிய பகுதிகள், பலாத்காரமாக வேலை வாங்கல், ஒதுக்கி வைக்கும் குடியேற்றப் பகுதிகள், ஏன் யுத்தக் கைதிகளின் முகாம்கள் கூட, இவை எல்லாம் புதிய அடிமை சமுதாயம் நோக்கிய வளர்ச்சியுடன் கூடச் சேர்ந்த ஒரு புதிய பொருளாதாரச் சுரண்டலாகும். இது மனித இனத்தின் மிகவும் ஒரு கணிசமான பகுதியினருடைய நிரந்தரமான கதி என முடிவிடப்பட்டுள்ளது." 5

வர்க்கப் போராட்டதைப் பற்றிய பழைய கருத்துருக்கள் எல்லாம் செல்லாதனவாகியுள்ளன. ''அரசியல் நிலமை,... எல்லாவற்றிற்கும் மேலாகத், தொழிலாள வர்க்க கட்சிகளையும் மற்றும் பாசிசமல்லாத முதலாளித்துவக் கட்சிகளையும் அழித்தொழித்துள்ளன. ஒரு குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர, சுதந்திரமான மரபு ரீதியான முதலாளித்துவவாதிகள் அல்லது பாட்டாளிவர்க்க அரசியல் அல்லது தொழிலாளர் இயக்கம் என்பன தொடர்ந்தும் இல்லை... அத்துடன் "தேசிய" முதலாளித்துவ வர்க்கமும் மேலும் மேலும் நசுக்கப்பட்டு வருகின்றது... எனவே இப்படியான நிலமைகளின் கீழ், வளர்ந்துவரும் துன்பங்களிற்கு எதிரான எதிர்ப்புகளுக்கு, வேறு ஒரு வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்." 6

இந்தப் புதிய இயக்கமானது, "அனைத்து வர்க்கங்கள் மற்றும் தட்டுக்களைக்" கொண்டுள்ளதாக, ஐரோப்பாவின் "தேசிய விடுதலைக்காக" ஐக்கியப் பட்டதாக இருக்க வேண்டும். முதலாளித்துவத்தைத் தூக்கி வீசுவது பற்றிய பேச்சுகள் எல்லாம் பொருளற்றன. அடிப்படையில் ஒரு ஜனநாயகப் புரட்சிக்குச் சமமானதாக உள்ள இடைப்பட்ட கட்டம் ஒன்றில்லாமல் பாசிசத்திலிருந்து சோசலிசத்திற்கு இடை மருவுவது என்பது வெறும் கற்பனையானதாக இருந்து வருகின்றது. 7

1942 இன் இறுதியில், ஸ்டாலின்கிராட்டில் ஹிட்லரின் தோல்வி - ஜேர்மன் பாசிசத்தின் முடிவின் ஆரம்பத்தை அடையாளப் படுத்தியது - இது "மூன்று பொருள் விளக்கங்களின்", முடிவுபெறா யுத்தம் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நீடித்த மேலாதிக்கம், என்றமைந்த தத்துவக் கூற்றைத் தகர்த்தது. பின்னோக்காளர்கள் தமது பழைய தத்துவத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் சோசலிசப் புரட்சி முன்னோக்கை மேலும் ஆணித்தரமாக நிராகரிக்கும் தத்துவமாக மறு ஆய்வு செய்து மாற்றியமைத்துக் கொண்டார்கள்.

1944 ல் வெளிவந்த "முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா அல்லது சோசலிசமா'' என்று தலைப்பிடப்பட்ட புதிய பத்திரம் ஒன்றில் அவர்கள், "நவீன அடிமை அரசு நோக்கிய வளர்ச்சியானது, ஒரு உலக இயல் நிகழ்வாகும், இது முதலாளித்துவம் அழுகிப் போதலில் இருந்து எழுகின்றது", 8 என்று அவர்கள் வாதிட்டனர்.

மனித இனத்தின் அபிவிருத்தி, நூற்றாண்டுகளுக்கு இல்லாவிட்டாலும் பல தலைமுறைகளுக்குப் பின்நோக்கி வீசப்பட்டுள்ளது. இது தொழிலாள வர்க்கத்தின் முன், சோசலிச அபிவிருத்திக்கான ஒரு முன்நிபந்தனையாக, தேசிய விடுதலையை மீண்டும் கைப்பற்றும் பணியை முன் வைத்துள்ளது, என்று அவர்கள் மேலும் வாதிட்டார்கள். பின் நோக்கிய அபிவிருத்தியானது,

ஒரு சமுதாயத்தின் கோர அழிவிற்கான மரணத்தை தற்காத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் எம்மை ஈடுபடுத்தி உள்ளோம். இச் சமுதாயம் வரலாற்றின் எதிர்த் திசையில், அதாவது மத்திய காலத்தின் ''புராதன திரட்சி'' (primitive accumulation) சகாப்தத்திற்கு, அதாவது முப்பது வருட யுத்தத்திற்கு மற்றும் முதலாளித்துவ புரட்சி போன்ற பலவற்றிற்குமாக பயணம் செய்ய இருக்கிறது. அக் காலத்தில் காலாவதியாகிப்போன பொருளாதார வடிவத்தை ஒழித்துக்கட்டி சுயாதீனமான தேசியங்களை வென்று கொள்வதற்கான கேள்வியாக அவை இருந்தன, - இப்பொழுது சுதந்திரத்தை ஒழித்துக் கட்டி மத்திய காலத்துக் காட்டுமிராண்டி நிலைக்குச் சமுதாயத்தைத் தள்ளிவிடுவது பற்றிய பிரச்சனையாகும்...

சோசலிசம்... இது கடந்த காலத்தினுள் உறிஞ்சப் பட்டுள்ளது... பாட்டாளி வர்க்கம் முன்பிருந்தது போல, மறுபடியும் ஒழுங்கற்ற நிலையில், மக்கள் திரளாக இருக்கிறது. அது உதித்த பொழுதும், உருவுற்ற பொழுதும் கொண்டிருந்த பண்புகளை அது இழந்து விட்டது. 9

பின்னோக்காளர்களின் வரலாற்று உள்ளடக்கம், கீழ்கண்டவாறு நெறிப்படுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது, அதாவது ''அடிமை முறையில் இருந்து, அடிமைத்தனம், தேசிய சுதந்திரமின்மை, தொழிற்துறையில் தங்கியிருத்தலும் பின்தங்கிய நிலையும் என்பதில் இருந்து தொழிற்துறையில் பின்தங்கிய நிலையும் அவற்றில் தங்கியிருத்தலும், தேசிய சுதந்திரமின்மை, அடிமைத்தனம், அடிமையாகி போதல் என்பதாகும்.'' 10

எந்த ஒரு போலியான தளரா நம்பிக்கைக்கும் [optimism] இடம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக IKD யின் தத்துவவாதிகள், "பின்னோக்கிய வளர்ச்சியின் ஆரம்பத்தை, ரஷ்யாவில் வெற்றியீட்டிய அக்டோபர் புரட்சியில் மிகவும் ஆணித்தரமாக நிலை நாட்டியுள்ளோம் என பெருமையுடன் பிரகடனப்படுத்தினார்கள். எனவே நாம் அந்த வெற்றியீட்டிய அக்டோபர் புரட்சி, இது உள் முரண்பாட்டை கொண்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட புரட்சியாகவும், மேலும் இது எதிர்ப்புரட்சியாக உருமாறும் என்பதாலும், பின்னோக்கிய வளர்ச்சி இதனுடன் ஒத்துழைக்காது எனக் கருதிக் கொள்கிறது.'' 11

ஜேர்மன் பாசிசத்திற்குப் பதிலாகப் பின்னோக்காளர்கள், பிரபஞ்ச ரீதியான "அடிமை அரசின்" உடமையாளன் என்ற பங்கை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு உரித்தாக்கினார்கள். இப்பொழுது சமுதாயத்தில் உள்ள அடிப்படையான மோதல், தேசங்கள் தமது சுதந்திரத்தை அடைவதற்கான போராட்டமாகும்.

ஐரோப்பா தன்னை ஒரு "சோசலிச அரசாக" ஐக்கியப் படுத்துவதற்கு முன்னர், அது முதலில் தன்னைச் சுதந்திர மற்றும் சுய ஆதிபத்தியம் (Autonomous ststes) உள்ள அரசுகளாக மீண்டும் தம்மை பிரித்துக் கொள்ள வேண்டும். எனவே பிளவுபடுத்தப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, தூக்கி வீசப்பட்ட மக்களும் மற்றும் பாட்டாளி வர்க்கமும் பின்னர் தம்மை ஒரு தேசிய இனமாக அமைத்துக் கொள்வது என்பது முற்று முழுதாக அவர்களது பிரச்சனையாகும் ....

மிக நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனை எதுவென்றால் - நூற்றாண்டு காலமாகத் தொழிற்துறை முதலாளித்துவம் மற்றும் விஞ்ஞான சோசலிசம் ஆகியவற்றின் வசந்த காலத்திய பழைய பிரச்சனையாகும் - அதாவது, தேசிய விடுதலைக்கும், தொழிலாளர் இயக்கத்தை தொடங்குவதற்கும் (ரஷ்யாவையும் சேர்த்து) இன்றியமையாத முன் நிபந்தனை எதுவென்றால் அரசியல் சுதந்திரத்தைக் கைப்பற்றுவதும் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுமாகும். 12

சோசலிஸ்டுகள் ஏற்றுக் கொள்ள வேண்டியது எதுவென்றால்,

பின்னோக்கிய இயக்கம் மிகப் பெரிய அளவில், முழு முதலாளித்துவமும் முன்னேறி வளர்ந்த வரலாறு மற்றும் அதன் வராலாற்றுக்கு முந்தைய காலப் பகுதியில் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் நெருக்கி சுருக்கியுள்ளது.... முதலாளித்துவத்தின் மற்றும் சோசலிசத்தின் உலக நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு இன்றியமையாததாக உள்ள சம்பிரதாய ரீதியான வழிவகைகளை பின்னோக்கிய ரீதியில் (Retrogressively) முன்வைக்கிறது. - இந்த வழிவகைகளைப் பெற்றுக் கொள்ள புரட்சியாளர்கள் தமது கரங்களை மட்டும் நீட்ட வேண்டியுள்ளது - இதற்கு பெயர்தான் சுதந்திரம். இதன் மூலம் நாம் கூறுவது யாதெனில்: தேசியப் பிரச்சனையானது மிகவும் ஓர் வரலாற்று ரீதியான இடைக் கதை, (Episodes) இது இன்றியமையாதவாறு, தொழிலாளர் இயக்கத்தையும், சோசலிசப் புரட்சியையும் மறுபடியும் அமைப்பதற்கான ஒரு மூலோபாய ரீதியான இடைமருவு புள்ளியாக உள்ளது. எனவே மிக இன்றியமையாததாக இருக்கும் இவ் வரலாற்று ரீதியான இடைக் கதையைப் புரியாதவர்கள் மற்றும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள், இவர்கள் மார்க்சிசம் - லெனினிசத்தைப் பற்றி எதையும் புரியாதவர்களாகும். 13

பின்னோக்காளர்கள், இவ்வாறான தமது சித்திரவதை முன்னோக்கின் (tortured perspective) வழியாக, அவர்கள் அடிப்படை மார்க்சிசக் கருத்துருவான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை அதன் நிலை மறுத்தலுக்கும், "மக்கள் முன்னணிவாத" வர்க்க ஒத்துழைப்பிற்குமான புதியதொரு நியாயம் கற்பித்தலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஐரோப்பாவில் 1942 - 45 களில் நிலவிய சூழ்நிலமைகளின் கீழ், தொழிலாளர்கள் இயக்கத்தை இது முழுமையாக முதலாளித்துவ வர்க்கம் வழி நடத்தும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு கீழ்ப்பட்ட நிலைக்குக் கொண்டுவருது என்று அர்த்தப் படுத்தியது: "புரட்சியாளர்கள் ஒன்றில் இந்த இயக்கங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அழிக்க வேண்டும் அல்லது அவர்கள் முற்று முழுதாக அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.'' 14

IKD எனும் பின்னோக்காளர்களால், ஓர் புதிய தேசிய ஜனநாயகப் புரட்சியின் சகாப்தம், இது தீர்வு காண்பதற்கான முன்னோக்காக தோன்றியுள்ளாகவும், இதில் தொழிலாள வர்க்கமானது எதிர்ப்பு இயக்கத்தின் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்களைப் பின் தொடர்வதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கு இல்லை எனவும் வலியுறுத்தப்பட்டது. எனவே, "முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனத்தில் என்றாலும் சரி அல்லது மூன்று பொருள் விளக்கங்களில் அல்லது வேறு எங்கென்றாலும் சரி, ''பாட்டாளி வர்க்க'' புரட்சிகர சாத்தியக் கூறுகள் போன்றவற்றில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்ற உண்மை சிந்தனையைத் தூண்டி விடுவதற்கு ஒரு நல்ல அடித்தளத்தைக் கொடுத்துள்ளது. நாம் எழுதியவற்றில், இகழ்ச்சி மற்றும் வெறுப்பைத் தவிர இந்த நான்காம் [அகிலத்தின்] புரட்சிக் குப்பையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூடக் கண்டுபிடிக்க முடியாது." 15

பின்னோக்காளர்களின் முன்னோக்கானது வெளிச்சத்திற்கு வந்த கணத்திலிருந்தே, சோசலிசத் தொழிலாளர் கட்சியினால் அது எதிர்க்கப்பட்டதோடு கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட்டது. சோசலிசத் தொழிலாளர் கட்சி, 1942 ம் ஆண்டு, கட்சித் தீர்மானம் ஒன்றில் விடுத்த எச்சரிக்கையில் :

உத்தியோக பூர்வமான தேசப்பற்று, இது சுரண்டல்காரர்களின் வர்க்க நலன்களை மறைப்பதற்கான வெறும் முகமூடியாக, சேவை செய்கின்றது. பிரெஞ்சு முதலாளித்துவம், ஹிட்லருக்கு சரணாகதியடைந்தமை போன்ற சம்பவம் இதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

பிரஞ்சு மக்களின் அபிலாசைகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் தேசிய விடுதலை என்பன மிகவும் பிரமாண்டமான புரட்சிகர விளை பயன்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாசிச விரோத உணர்வுகள், இவை ஏகாதிபத்தியத்தின் பயன்பாடுகளுக்காக தவறாக பயன்படுத்தப்பட முடியும். இவ்வாறு, இவற்றை தவறாக பயன்படுத்தும் ஒரு இயக்கம், முதலாளித்துவ தேசியவாதத்தின் முழக்கங்கள் மற்றும் அதன் தலைமையின் கீழ் செல்லுவது என்பது தவிர்க்கப்பட முடியாததொன்றாகும். ஏகாதிபத்திய "ஜனநாயக" கொள்ளைக் கூட்டத்தினர், தம்மிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடமையை பாசிசக் கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்து மீட்டுக் கொள்வதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர்.

அவர்கள் இதைத்தான், தேசிய விடுதலை என்று அர்த்தப் படுத்துகின்றார்கள். பரந்த மக்களின் நலன்கள் பிரமாண்டமான அளவு வேறுபட்டவை. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் பணி என்னவென்றால், கிளர்ந்தெழும் இயக்கத்தின் தலைமையில் தம்மை நிறுத்திவைத்து, ஐரோப்பாவை சோசலிசப் போராட்டத்தில் மறு ஒழுங்கமைப்பதை நோக்கி வழி நடத்த வேண்டும். இப் போராட்டத்தில், அவர்களது கூட்டினர், ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களை சூழவுள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினரும் அல்ல, மாறாக ஜேர்மனியின் தொழிலாளர்களாகும்... புரட்சிகரப் போராட்டத்தின் மையமானதும் மற்றும் ஐக்கியப் படுத்துவதுமான முழக்கம் யாதெனில், "ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள்" என்பதாகும். மற்றைய அனைத்து விதமான கோரிக்கைகளும் இம் முழக்கத்திற்கு கீழே கீழ்படுத்தப்படல் வேண்டும். 16

கருத்து வேறுபாட்டின் நோக்கு நிலை மற்றும் அவற்றின் விளைபயன்கள் என்பன விரிவடைந்தன. IKD பின்னோக்காளர்களின், உலக நோக்கை அரவணைத்துக் கொண்டது வேறு யாருமல்ல, சட்மனும் (Shachtman) அவரது தொழிலாளர் கட்சியுமாகும், அவர் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் இராணுவக் கொள்கையை, "வெறி கொண்ட சமூகத் தன்மையின்" ஒரு வடிவம் என்று கண்டனம் செய்தார். அது சோசலிசத் தொழிலாளர் கட்சியின், ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற முழக்கத்தைப் ''படு மோசமான அருவவாதம் [abstractionism] மற்றும் முடிந்த ஒரு முடிவுவாதம் [dogmatism]" என்று தூற்றியது... பரந்த மக்கள், "ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை" ஒரு யதார்த்த ரீதியான முழக்கமாக பார்ப்பதற்கு முன்னர், அவர்கள் ஐயப்பாடின்றி தம்வசம், சுதந்திரமான தேசிய அரசுகளை வைத்திருக்க விரும்புகின்றார்கள்." 17

சட்மனுடைய செய்முறைவாதமானது (Impressionism) எதிர்பார்த்தபடி மிகவும் மோசமான அரசியல் விளை பயன்களை உண்டு பண்ணியது. நிஜமான ஜனநாயகப் பணிகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கும் ஆசியாவில், முதலாளித்துவ சியாங் கே ஷேக்கிற்கு எந்த ஒரு ஆதரவும் கொடுக்க முடியாது என்ற அடிப்படையில், ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சீன மக்கள் தொடுத்து வந்த தேசியப் போராட்டத்தை தொழிலாளர் கட்சி எதிர்த்தது. ஆனால், நீண்ட காலத்திற்கு முன்னரே, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமை பெற்ற ஐரோப்பாவில், ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நாடுகளில் பிற்போக்குத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்குப் பாட்டாளி வர்க்கம் கீழ்ப்படுத்தப் படவேண்டும் என்று சட்மன் வலியுறுத்தினார்.

சட்மன், இயல்பாகவே, உத்தியோக பூர்வமான எதிர்ப்பு இயக்கங்களில் தம்மை முற்று முழுதாகப் புதைத்துக் கொண்டு அவற்றின் முதலாளித்துவ வேலைத் திட்டங்களுக்குத் இயைந்து போகின்றவர்களாக்கிக் கொள்ள மறுத்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளை தூற்றினார். "நான்காம் அகிலத்தின் பகுதிகள்... அரசியல் ரீதியில் மலடானவை என்று நிரூபணமாயிற்று... [ஏனென்றால் அவை] இந்தப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் மைய இலக்கான, தேசிய விடுதலையின், மிக ஆர்வம் மிக்க, மற்றும் சளையாத வீரர்களாக மாறத் தவறினார்கள்."18 சோசலிசத் தொழிலாளர் கட்சி, சட்மனின் நிலைப்பாட்டைப் பற்றிய அதன் ஆய்வில், ட்ரொட்கிஸ்டுகள், நாசிகளுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொள்ளலாமா அல்லது இல்லையா என்பதல்ல நிஜமான பிரச்சனை என்பதைத் தெளிவு படுத்தியது.

புரட்சியாளர்கள் எல்லா இயக்கங்களிலும், அவை பரந்துபட்ட பண்பைப் [character] பெறும் பொழுது, அவற்றில் பங்கு கொள்ளுகின்றார்கள், ஆனால் அவர்கள், தமது சொந்தப் புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முறைகளின் [methods] மூலம்தான் செயற்படுகிறார்கள். இருந்த பொழுதும், தொழிலாளர் கட்சியின் தீர்மானமோ, இந்த மக்கள் முன்னணிகளுடன் ஒரு அரசியல் ரீதியான ஐக்கியத்திற்கும், மக்கள் முன்னணி இயக்கங்களில் ஒரு மக்கள் முன்னணியாளனாகப் பங்கு கொள்ளவும், அழைப்பை விடுத்தது. தொழிலாளர் கட்சியின் நம்பிக்கைக்குரிய IKD அறிவுரையாளர்கள், இந்த இயக்கங்கள், "நிபந்தனையின்றி ஆதரிக்கப்பட வேண்டியவை", என்று எழுதியுள்ளனர். நமக்கும் சட்மன் வாதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டின் கருப்பொருள் [nub] இதுவேயாகும். 19

ஒரு சில வருடங்களுக்கு முன்னர்தான், ட்ரொட்ஸ்கி செய்முறைவாத (Impressionism) தன்மையின் விளைவு, இது தத்துவார்த்த சிந்தனையின் சிதைவு என்று எச்சரித்திருந்தார், இது IKD யின் பத்திரங்களில் மிக ஸ்தூலமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இப் பத்திரங்களின் ஆசிரியர்கள், மிகப் பெரும் வரலாற்றுச் சம்பவங்களின் தாக்கங்களின் கீழ், அடியோடு அப்படியே அள்ளிச் செல்லப்பட்டு தலை கீழாக நிறுத்தப் பட்டுள்ளார்கள்.

ஏறக்குறைய ஊடுருவ முடியாத சிக்கல் மிக்க உரைநடை, மற்றும் படிப்புப் புலமையைப் பகட்டாகக் காட்டுவதற்கான பகட்டுச் சொற்கள் என்பன கையாளப்பட்ட பொழுதும், IKD யின் தத்துவார்த்த முறைப்படுத்திக் [theoretical formulations] கூறல்கள், சாராம்சத்தில் அகநிலை ரீதியான கட்டமைப்பாகவும், அரசியல் அபிவிருத்திகளை அவற்றின் தோற்றங்களின் மேற்பரப்பிலும் மற்றும் ஒரு தலைப்பட்சமாக பார்க்கும் வரலாற்று எறிவுத் தெறிவுகளே [historical projections] அன்றி, அவை வேறு ஒன்றும் அல்ல. இந்த செய்முறைவாத [impressionist method] தன்மையின் வர்க்க உள்ளடக்கம், அதனது அரசியல் முடிவுகளின் மூலம் தவிர்க்கப்பட முடியாதவாறு அதனை அம்பலப்படுத்திக் கொண்டது. மேலும் இந்த முடிவுகள், முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு சரணாகதியடைய வேண்டும் என்று வாதிட்டன. இதன் மூலமாக அது ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் காட்டிக்கொடுப்புகளுக்கு உதவி செய்தது.

மாறா பண்புடைய இச் செய்முறைவாதிகள், தாம் விளக்குவதாக கூறிக் கொள்ளும் அந்த வரலாற்றுப் போக்கு [historical process] நிஜமாகவே நடைமுறையில் அபிவிருத்தி அடைந்த பொழுது, அவர்கள் அது சம்பந்தமாக குருடர்களாக இருந்தார்கள். 1943 ல் இருந்து, கண்டம் முழுவதுமே, பாட்டாளி வர்க்கம் முன் சென்று கொண்டிருந்தது.

சோவியத் ஒன்றியத்தால், நாசிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட வியப்பூட்டும் சமூக சக்தியினால், எழுச்சி ஊட்டப்பட்ட தொழிலாள வர்க்கம், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அதன் முதலாளித்துவ கூட்டு நாடுகளுக்கு எதிராகவும் வல்லமை மிக்க எதிர்த் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தது. குறிப்பாகப் பிரான்சில், இத்தாலியில், மற்றும் கிரீசில், ஆயுதம் ஏந்திய பரந்த மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பமும், மேலும் அவர்கள் அதை கைப்பற்றிக் கொள்ளவும் இருந்தார்கள். இப் போராட்டங்கள், ஸ்டாலினிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் சோவியத் அதிகாரத்துவத்திற்கும், ஆங்கிலோ - அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கும் இடையில், கிரீஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சி முறையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளைத் தமது அடிப்படையாகக் கொண்டிருந்தனர்.

குறிப்புகள்:

1. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உட்கட்சி வெளியீடு, தொகுதி 8, எண் 8, ஜூலை 1946, பக்கங்கள் 28 - 29.

2.லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தைப் பாதுகாக்க ( லண்டன் : நியூ பாக் வெளியீடுகள், 1971), பக்கம் 15.

3. அதே நூல், அதே பக்கம்.

4.சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உட்கட்சி வெளியீடு, தொகுதி 8, எண் 10, ஆகஸ்ட் 1946, பக்கம் 15.

5.அதே வெளியீடு, அதே பக்கம்.

6.அதே வெளியீடு, அதே பக்கம்.

7.அதே வெளியீடு, அதே பக்கம்.

8.ஜெர்மனியின் சர்வதேசக் கம்யூனிஸ்ட்டுகள், "முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் அல்லது சோசலிசம்" புதிய அகிலம், பிற் சேர்க்கை, அக்டோபர் 1944, பக்கம் 331.

9.அதே வெளியீடு,பக்கங்கள் 333-34.

10.அதே வெளியீடு,பக்கம் 333.

11.அதே வெளியீடு,பக்கம் 334.

12.அதேவெளியீடு,பக்கம்340.

13.அதே வெளியீடு, அதே பக்கம்.

14.சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உட்கட்சி வெளியீடு, தொகுதி 8, எண் 10, ஆகஸ்ட் 1946, பக்கம் 16.

15..அதே வெளியீடு, அதே பக்கம்.

16.அதே வெளியீடு,பக்கங்கள் 16 - 17.

17.அதே வெளியீடு,பக்கம் 18.

18.அதே வெளியீடு,பக்கம் 19.

19.அதே வெளியீடு, அதே பக்கம்.

Top of page