World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Arctic sea ice at record low due to global warming

ஆர்க்டிக் கடல் உறைபனிக்கட்டி இதுவரை இல்லாத அளவிற்கு உலக வெப்பத்தால் குறைந்த அளவில் உள்ளது

By Mark Rainer
25 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

கொலோரடோ பல்கலைக் கழகத்தில், அமெரிக்க அரசாங்க நிதியில் இயங்கும் ஆய்வு மையமான தேசிய வெண்பனி மற்றும் உறைபனிக்கட்டித் தகவல் மையம் (National Snow and Ice Data Center -NSIDC), இந்த வாரம் இதுகாறும் இல்லாத அளவிற்கு ஆர்ட்டிக் கடல் பகுதியில் உறைபனிக்கட்டியின் பரப்பு குறைந்துவிட்டது என்றும் கோடை உருகும் காலத்திற்கு இன்னமும் அவகசாம் இருக்கும்போதே இப்படி நேர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆர்ட்டிக் கடல் உறைபனி பரப்பு ஆர்ட்டிக் சமுத்திரத்ததில் குறைந்தது 15 சதவிகிதமாவது உறைபனிக்கட்டியினால் நிறைந்த பகுதி என விளக்கப்படுகிறது.

இந்த வாரம் கடல் உறைபனிக்கட்டிப் பரப்பு 492 மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்குக் குறைந்து விட்டது; இது முந்தைய மிகக் குறைவாகப் பதிவான 2005 செப்டம்பர் அளவை விட 400,000 சதுர கிலோமீட்டர்கள் குறைவாகும். இந்த ஆண்டில் மிகக் குறைந்த பட்ச அளவை அடைவதற்கு முன், இன்னும் ஒரு மாதத்திற்கு ஆர்ட்டிக் கடல் பனிக்கட்டி உருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கைக் கோளில் இருந்து அளவிடக்கூடிய சாத்தியம் கிடைத்த ஆர்ட்டிக் கடலின் உறைபனிக்கட்டி பரப்பு 1979ல் இருந்து தோராயமாக ஒவ்வொரு தசாப்தமும் 10 சதவிகிதம் குறைந்து வருகிறது. இது ஒரு சுழற்சி முறை என்றாலும்கூட, குளிர் மாதங்களில் உறைபனிக் கட்டி பெருகும், கோடை மாதங்களில் சுருங்கும் -- மொத்தத்தில் காணப்படும் கீழ்நோக்கிய போக்கு உச்ச பட்சம் மற்றும் குறைந்த பட்சம் இரண்டிலும் காணப்படுகிறது.

NSIDC கருத்தின்படி, இக்கோடையில் பனிக்கட்டி உருகுதல் வீதமானது மிக விரைவாக நடந்துள்ளது; ஜூன், ஜூலை மாதங்களில் நாள் ஒன்றுக்கு 210,000 சதுர கிலோமீட்டர்கள் குறைந்தது; இது செயற்கைக்கோள் வழி பதிவு செய்யப்பட்ட அளவில், முன்னோடியில்லாத விகிதம் ஆகும். வழக்கத்திற்கு மாறாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வானம் தெளிவாக இருந்ததும் கூடுதலான சூரிய வெப்ப சக்திக்கு வழிவகுத்து உருகும் நிகழ்வுப்போக்கை விரைவுபடுத்தியது.

உலக வெப்பத்தினால் தோற்றுவிக்கப்பட்ட தட்பவெப்ப நிலையும் ஒரு முக்கியமான காரணியாகும். ஆர்ட்டிக் பகுதி 1960 மற்றும் 1970 களில் தட்பவெட்ப நிலை குறைவாக இருந்தபோது சராசரி 1 முதல் 2 பாகைகள் வரை உஷ்ணமாயிற்று. இதைத் தவிர, ஆர்ட்டிக் பகுதியில் வெப்பமாவது என்பது சமீபத்திய தசாப்தங்களில் உலக சராசரியை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளது.

துருவப் பகுதி கடல் உறைபனிக்கட்டி பூமியின் தட்பவெப்ப நிலையில் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. வெண்பனியினாலும் உறைபனியினாலும் மூடப்பட்டிருக்கும் பூமியின் மேற்பரப்பு கூடுதலான சூரிய வெப்பக் கதிர்வீச்சுக்களை பிரதிபலித்து, அதையொட்டி குளிர்ச்சி கொடுக்கும் விளைவை அளிக்கும். கடல் உறைபனிக்கட்டி கிட்டத்தட்ட சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சை 50 முதல் 70 சதவிகிதம் பிரதிபலிக்கும்; ஆனால் திறந்தவெளி நீரோ 6 சதவிகிதத்தைத்தான் பிரதிபலிக்கும். புதிய வெண்பனி கிட்டத்தட்ட சூரிய கதிரியக்கத்தின் 90 சதவிகிதத்தைப் பிரதிபலிக்கும்.

ஒரு மேற்பரப்பின் பிரதிபலிக்கும் தன்மை 'ஆல்பிடோ' என்று அழைக்கப்படுகிறது; துருவப் பகுதி உறைபனிக்கட்டி பனிக்கட்டி-ஆல்பிடோ பரிமாற்றத்தில் பங்கு கொள்கிறது. தட்பவெப்ப நிலை உயர்ந்து, கடல் பனிக்கட்டி உருகும் சூழ்நிலையில் இருண்ட கீழுள்ள தண்ணீர் வெளிப்படும். இது பூமி இன்னும் கூடுதலான சூரிய கதிரியக்கத்தை உள்வாங்க உதவும்; அதையொட்டி தட்பவெப்ப நிலைகள் உயர்வு என்பது ஏற்படும். தட்பவெப்ப நிலைகள் வீழ்ச்சியுறும் நேரங்களில், கூடுதலான கடல் பனிக்கட்டி அமையும்; அது பூமியின் மேற்பகுதிக்கு கூடுதலான ஆல்பிடோவை கொடுக்கும்; அதையொட்டி கூடுதலான குளிர்ச்சி ஏற்பட வழிபிறக்கும். இரண்டுமே முற்போக்கு பரிமாற்றத்தின் உதாரணங்கள் ஆகும்; ஒவ்வொன்றிலும் துருவப் பகுதி உறைபனிக்கட்டி வெப்பம் அல்லது குளிர் வழிவகையை அதிகப்படுத்துகிறது.

ஆர்ட்டிக் கடல் பனிக்கட்டி விரைவில் "முனைக் கட்டத்தை" அடையும் அல்லது அடைந்துவிட்டது என்று பல விஞ்ஞானிகள் இப்பொழுது நம்புகின்றனர்; இதன்படி கடலின் பனிக்கட்டி உருகும் தன்மையை அடைந்துவிட்டது, அது தொடர்ந்து விரைவில் அவ்வாறு உருகும், அதாவது கடல் பனிக்கட்டி முற்றிலும் மறைந்துவிடக்கூடிய வரை அவ்வாறு நிகழும். NSIDC யில் ஒரு விஞ்ஞானியான Mark Serreze அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கோடைகால கடல் பனிக்கட்டி முற்றிலும் உருகுவது என்பது 2030க்குள் எந்த நேரமும் ஏற்படலாம் என்று கூறியுள்ளார். இது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (Intergovernmental Panel on Climate Change) IPCC எதிர்பார்த்துக் கூறியுள்ள 2050ல் இருந்து 2100 க்குள் அவ்வாறு நேரும் எனக் கூறப்பட்ட காலத்தைவிட சீக்கிரமாகும்.

இவ்வாண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் NSIDC மற்றும் National Center for Atmospheric Research (NCAR) இரண்டும் IPCC யினால் பயன்படுத்தப்பட்ட முன்மாதிரிகள் மிகவும் குறைந்த கணிப்பு கொடுப்பதாக கண்டறிந்துள்ளன. IPCC கொடுத்துள்ள தட்பவெப்ப அறிக்கையில் உள்ள 18 முன்மாதிரிகளில் எதிர்பார்க்கப்படும் விரைவு வேகத்தைவிட சரிவு விகிதம் இன்னும் விரைவாகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். IPCC இன் முன்மாதிரிகள், கார்பன் டையாக்சைட் மற்றும் பிற சுற்றுச்சூழலில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உலகம் வெப்பமாதலின் விளைவை குறைத்து மதிப்பிடுகின்றன மற்றும் கடல் உறைபனிக்கட்டியின் அடர்த்தியை மிகை மதிப்பீடு செய்கின்றன என்று விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர்.

கொலராடோ பல்கலைக் கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆர்ட்டிக்கடல் உறைபனிக்கட்டி காலத்தை மதிப்பீடு செய்வதற்கான பணியில் ஆர்ட்டிக் கடல் உறைபனிக்கட்டி உருவாதல், நகருதல் மற்றும் உருகுதல் பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளனர். செயற்கைக் கோள்களில் இருந்து பெறப்படும் தகவல்கள், மிதவைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆர்ட்டிக்கில் இருக்கும் மிகப் பழைய உறைபனிக்கட்டிகளை காலத்தால் பிந்தைய இளைய, மெல்லிய உறை பனிக்கட்டி பதிலீடு செய்கின்றன, மற்றும் உருகுவதற்கு அதிகம் ஏதுவாக உள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர். NSIDC ஊகத்தின்படி 1970 களில் இளைய புதிய பனிக்கட்டிக்கு மாற்றம் பெறுவது நிகழ்ந்தது; மேலும் பழைய கடல் உறைபனிக்கட்டி ஆர்ட்டிக் பகுதியில் கோடை காலத்தில் கடல் உறைபனிக்கட்டியின் உறுதியை தக்க வைக்க இன்றியமையாதது என்றும் கூறுகின்றனர்.

ஆர்ட்டிக் கடல் உறைபனிக்கட்டியின் வீழ்ச்சி என்பது பூகோளந்தழுவிய தாக்கங்களை கொண்டுள்ளது. உலக வெப்பமயமாதலை ஊக்கப்படுத்துவதை தவிர, பனிக்கட்டி உருகுதல் இன்னும் கூடுதலான வகையில் ஆர்க்டிக் கடலில் புதிய நீர் வரவை அறிமுகப்படுத்தும்; இதையொட்டி பூகோளந்தழுவிய முறையில் பெருங்கடல் நீரோட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். பனிக்கட்டி மேல் முகடு அகற்றப்படுவது என்பது வெப்பம், வாயுக்கள் ஆகியவை மாறிக் கொள்ளுவதிலும் காற்று மண்டலத்திற்கும் பெருங்கடலுக்கும் இடையேயுள்ள இயங்குவிசையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

கடல் உறைபனிக்கட்டியின் அழிவு என்பது, பல கடல்வாழ் மற்றும் நில விலங்குகள் அழியும் என்றும் பொருளாகும்; மேலும் கூடுதலான அளவிற்கு ஆர்ட்டிக் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெருகிய அழுத்தமும் ஏற்படும். உருகும் கடல் பனிக்கட்டி வசந்த காலத்தில் phytoplkanktom blooms என்று கூறப்படும் ஊட்டச் சந்து மிகுந்த சூழலுக்கு வகை செய்கிறது. Phytoplankton என்பது கடல் உணவு வகையில் மிக அடிப்படையான பொருள் ஆகும்; முக்கியமான கார்பன் டையாக்சைடை அகற்றும் பணியையும் சுற்றுச் சூழலில் ஆக்சிஜன் நிலவுவதற்கும் இது வழிவகை செய்யும். கடல் பனிக்கட்டி துருவக் கரடிகள், சீல்கள் மற்றும் வால்ரஸ்கள் ஆகியவை வாழும் இடமும் ஆகும்.

ஆர்ட்டிக்கில் நிலப்பகுதியை உரிமை கொள்ள நினைக்கும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆர்ட்டிக் பனிக்கட்டி உருகுதல் எந்த அளவிற்கு சுற்றுச் சூழலை பாதிக்கும் என்பது பெரும் கவலை தரக்கூடிய காரணமாக காணப்படவில்லை. மாறாக, அது ஒரு பெரிய வாய்ப்பாக, இதுகாறும் எடுக்கப்படாத எண்ணெய், எரிபொருள் இருப்புக்களின் ஆதாரமாகவும், இதுவரை செல்ல முடியாமல் இருந்த கடல்வழிகள் பயன்படுத்தப்பட முடியும் என்றும் நினைக்கின்றன.

சமீபத்திய விஞ்ஞான அறிக்கைககளுடன் சேர்த்து, உறைபனிக்கட்டியின் பரப்பு பற்றிய இந்தப் புதிய தகவல்கள், உலக வெப்பமயமாதல் என்பது முன்பு நினைத்ததைவிட மிகவிரைவாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பின் முக்கியத்துவம், உலகின் மக்கள் தொகை மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழலியலுக்கு இது முன்னிறுத்தும் ஆபத்து ஆகிய இப்போக்கை பின்னோக்கி திருப்பித் தடுக்கக்கூடிய முறை பற்றி உலக அரசாங்கங்கள் எந்த தீவிர நடவடிக்கையையும் எடுக்கத் திராணியற்று இருப்பதை மிகத்தெளிவாக புலப்படுத்துகின்றன.