சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military brutally attack Tamil people in Jaffna

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை கொடூரமாகத் தாக்கியது

By Subash Somachandran
1 September 2011

 use this version to print | Send feedback

ஆகஸ்ட் 22 அன்று வடக்கில் யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை கிராமத்தினுள் மர்ம மனிதர்கள் ஊடுருவியமை தொடர்பாக ஏற்பட்ட பத்தட்ட நிலைமைகளை அடுத்து, அன்றிரவு கிராமத்தவதர்களை இலங்கை இராணுவம் கொடூரமாகத் தாக்கியது. 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் பொது மக்கள் மீது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரதான தாக்குதல் இதுவாகும்.                                                                                                                                                                                          

திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் நாவாந்துறையில் சில மர்ம மனிதர்களை விரட்டிச் சென்ற கிராம மக்கள், அவர்கள் சிறிய இராணுவ முகாமை நோக்கி ஓடுவlதைக் கண்டனர். அவர்கள் முகாமுக்குள் ஓடினர் என்று மக்கள் கூறியதை அதிகாரிகள் மறுக்கவே படையினருக்கும் மக்களுக்கும் இடையில் பதட்ட நிலைமை மோலோங்கியது. முகாமுக்கு அருகில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதோடு அவர்கள் சிவில் உடையில் இருந்த சில சிப்பாய்களை ஏற்றி செல்ல முனைந்த ஒரு இராணுவ வாகனத்தை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததாக நேரில் கண்ட ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.  

மக்களை விரட்ட இராணுவம் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. படையினர் பொலிசாரின் உதவியுடன் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து மக்களை அடித்து கலைத்தனர்.

அன்று நள்ளிரவு நூற்றுக்கணக்கான படையினரால் நாவாந்துறை சுற்றி வளைக்கப்பட்டது. சிப்பாய்கள் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே வீட்டுக் கதவுகளை உடைத்து ஆண்களை இழுத்துச் சென்றனர். இந்த சுற்றி வளைப்பு, யுத்த காலத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை வழிமுறைகளை நினைவூட்டியது. ஆண்கள் இழுத்துச் செல்லும்போது தடுத்த மனைவிமார், தாய்மார் மற்றும் பிள்ளைகளும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார்கள்.

பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டு  அதிகாலை 3.00 மணிவரை தாக்கப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பாரிசவாதம் மற்றும் முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். சிலர் ஆடைகள் கலைக்கப்பட்டு தாக்கப்பட்டனர். பாலதுரை சகாயராசா அவரது தாயாரின் முன்னிலையிலேயே நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டனர்

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸ் கைதின் கீழ் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன், 22 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், பலருக்கு உள் காயங்களும் மற்றும் தலையில் காயங்களும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கிப் பிடிகள், சப்பாத்துகள், வயர்கள் மற்றும் இரும்புக் கம்பிகளாலும் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களாக கிராமங்கள், நகரங்கள் மற்றும் தோட்டப்புறங்கள், சில சமயம் வீடுகளுக்குள்ளும் மர்ம மனிதர்கள் நுழைவதனால் நாடு பூராவும் பரந்தளவான பீதி காணப்படும் நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நபர்கள் குறிப்பாக பெண்களை கூரிய நகங்களால் அல்லது பிளேடுகளால் காயப்படுத்திவிட்டு ஓடிவிடுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேரில் கண்டவர்களின்படி, இவர்களில் சிலர் முகமூடி அணிந்துள்ளனர், சிலர் தாம் அகப்படாமல் இருப்பதற்காக உடலில் கிறீஸ் பூசிக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் அவர்களை கிறஸ் பூதங்கள் என்று அழைக்கத் தொடங்கினர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், மக்கள் வதந்திகளை நம்புவதாக கூறி அவர்கள் அதை ஓரங்கட்டினர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மாவட்டங்களில் பெருந்தோட்டப் பிரதேசங்களிலேயே மக்கள் இத்தகைய மர்ம மனிதர்களை கண்டுள்ளனர். இத்தகைய மனிதர்களை பிடிக்க மக்கள் முற்படும் போது, அவர்களில் சிலர் அருகில் உள்ள இராணுவ முகாமுக்கு அல்லது பொலிஸ் நிலையத்துக்குள் தப்பி ஓடுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இத்தகைய சம்வங்களில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதோடு ஏனைய இடங்களிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

நாவாந்துறையில் நடந்த தாக்குதலின் பின்னர், இராணுவம் மற்றும் பொலிஸ் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டத்தை இரு நாட்களுக்கு அமுல்படுத்தியதோடு கனரக ஆயுதங்கள் ஏந்திய படையினர் நிலைகொண்டிருந்தனர். சந்தைகள் இயங்கவில்லை, கடைகள் மூடப்பட்டிருந்ததோடு மீனவர்கள் வீட்டிலேயே இருந்துவிட்டனர். மக்கள் வீதிகளில் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அநேகமான கிராமத்தவர்கள் உறவினர்களையும் அயலவர்களையும் பார்க்க ஆஸ்பத்திரியில் கூடியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பல சம்பவங்களில் பதட்ட நிலைமைகளை உருவாக்குவதில் இராணுவத்தின் உடந்தை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேதினம் இரவு, யாழ்ப்பாணத்தில் ஆலங்கடை பிரதேசத்தில் ஒரு வீட்டினுள் நுழைந்த மர்ம மனிதனை கிராமவாசிகள் பிடித்தனர். அவர் தன்னை இராணுவப் புலனாய்வுத்துறையை சேர்ந்தவர் எனக் கூறினார். வெள்ளை வான் ஒன்றில் வந்த படையினர், அவரை ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடமிருந்து காப்பாற்றிச் சென்றதோடு எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர். மூன்று நபர்கள் முகத்தை துணியால் கட்டி மூடிக்கொண்டு நுழைந்ததை அடுத்து இதே போன்ற பதட்ட நிலைமை கரவெட்டி, பொலிகண்டி மற்றும் கரகத்தான்புலம் கிராமங்களிலும் ஏற்பட்டது.

புரூன் என்ற மெக்கானிக்கின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு உட் காயங்களும் ஏற்பட்டுள்ளன. துப்பாக்கிச் சத்தங்களும் மக்களின் அவலக் குரலும் எனக்கு கேட்டது. ஏதோ ஆபத்து நடக்கின்றது என நான் உணரும் போதே, எனது வீட்டுக் கதவுகள் உடைக்கப்பட்டன. அவர்கள் என்னையும் எனது மைத்துனரையும் கைது செய்து கண்மூடித்தனமாக தாக்கினர். அவர்கள் கதறி அழுத பெண்களை பொருட்டாக மதிக்காமல் அவர்களையும் தாக்கினர். எனது மைத்துனரின் இரு கைகளும் முறிந்துள்ளன. பல சிப்பாய்கள் என்னை மைதானத்திலும் வைத்து அடித்தனர், என அவர் நமது வலைத் தளத்துக்குத் தெரிவித்தார்.

நான்கு நாட்களின் பின்னர் பாதிக்கப்பட்டவர்களில் 91 பேர் வெள்ளிக் கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். சரீரப் பிணைப் பணமாக அவர்கள் ரூபா 5,000 கட்ட வேண்டியிருந்தது. எவ்வாறெனினும், அவர்கள் வாரம் ஒரு முறை பொலிஸ் நிலையத்துக்கு வந்த செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றம் விதித்தது. இன்னமும் ஆஸ்பத்திரியில் உள்ள 10 பேரை செப்டெம்பர் 6 வரை தடுத்து வைத்திருக்க உத்திரவிடப்பட்டுள்ளது.

அவர்களுக்கு பிணை வழங்க மறுத்த பொலிசார், அவர்கள் அரச சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அரசாங்கத்துக்கு எதிராக யுத்தம் செய்ய மக்களை அணிதிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டினர். பாதிக்கப்பட்டவர்களுக்காக முப்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் வாதாடினர்.

ஆகஸ்ட் 23 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், இந்த மர்ம மனிதர்கள் இராணுவத்தினரே என்பதற்கு போதிய ஆதாரங்கள் மக்களிடம் உள்ளது என வலியுறுத்தினார். இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள கிளிநொச்சியில் பாரதிபுரத்தில் இரு ஆயுதபாணிகள் ஆடைகளின்றி வீடுகளுக்குள் நுழைந்ததாகவும் மக்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது இராணுவத்தினர் அவர்களை பாதுகாத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிதரனுக்கு பதிலளித்த அமைச்சரவை அமைச்சர் தினேஷ் குணவர்தன, மர்ம மனிதர்கள் இராணுவத்தினராக இருந்தால் அவர்களது பெயர்களைக் கூறுங்கள் என கேலிக்கூத்தாக கேட்டார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம், இத்தகைய செய்திகளை ஊடகங்களே பரப்புகின்றன என குற்றஞ்சாட்டினார்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. இந்தப் பிரதேசங்களில் இன்னமும் சோதனை நிலையங்களும் காவல் நிலையங்களும் சிறிய முகாங்களும் இயங்கிவருகின்றன.

இதே போன்று ஏனைய இடங்களிலும் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்து, பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ இராணுவத்தின் கொடூரத் தாக்குதலை ஊக்குவித்து எச்சரிக்கை கருத்துக்களை வெளியிட்டார். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்பவர்களுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரித்தார்.

நாவாந்துறை சம்பவத்தின் பின்னர் அவர் காத்திரமாக பேசினார். “‘கிறீஸ் பூதங்கள் பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் பயங்கரவாத குழுக்களாகவே கருதப்படுவர் என அவர் அறிவித்தார். இராணுவ முகாங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மஹிந்த ஹதுருசிங்க மேலும் முன் சென்றார். சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த பொல்லுகள், கற்கள், வாள், கத்திகள், மணல் மற்றும் பெற்றோல் நிரப்பிய போத்தல்களுடன் ஆயுதபாணிகளாக இருக்கும் எவரும் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கு கருணை காட்டப்படமாட்டாது, என அவர் எச்சரித்தார். எவரும் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு, அதிருப்தி கண்ட யுத்த கூச்சல்காரர்களின் இரகசிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம், என அவர் மேலும் தெரிவித்தார். இதன் அர்த்தம், இராணுவத்தின் அல்லது பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் மக்கள் பயங்கரவாதிகளாக நசுக்கப்படுவார்கள் என்பதாகும்.

த ஐலண்ட் பத்திரிகை ஆர்ப்பாட்டக்காரர்களை புலிகள் என சித்தரிப்பதன் மூலம் இனவாதத்தை கிளறிவிட இந்தப் பிரச்சினையை பற்றிக்கொண்டது. யாழ்ப்பாணப் படைப் பிரிவின் மீது நடத்தப்பட்ட பொங்கு தமிழ் முறையிலான தாக்குதலை இராணுவம் தோற்கடித்தது தாக்குதல்காரர்கள் மத்தியில் மாணவர்களும் இருந்தனர், என அது ஆகஸ்ட் 23 வெளியிட்ட செய்திக்கு தலைப்பிட்டுள்ளது. புலிகள் வடக்கு மற்றும் கிழக்கில் சில பாகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய ஒரு சட்டத்தரணி: இந்த கிறீஸ் பூதங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவையே. அவர்கள் மக்களை தாக்குவதோடு பின்னர் அவர்கள் மீது குற்றஞ்சாட்ட முயற்சிப்பதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த முறையிலேயே நசுக்கப்படுவார்கள் எனவும் காட்ட முயற்சிக்கின்றனர். இந்த கிறீஸ் பூதங்கள் என்றழைக்கப்படுபவர்களால் ஆதாரங்கள் எதுவும் இன்றி அரசியல் எதிரிகளும் கூட கொல்லப்பட முடியும், என்றார்.

மர்ம நபர்கள் இராணுவத்தால் அனுப்பப்படாவிட்டால் அவர்கள் ஏன் முகாங்களுக்குள் ஓடவேண்டும் என ஒரு பெண் கேட்டார். அரசாங்கம் எங்களை நிம்மதியாக வாழ விடவில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த அரசாங்க அமைச்சர்களிடம் நாங்கள் எங்களது பிரச்சினைகளை தெரிவித்தோம். அவர்கள் இப்போது மௌனமாக இருக்கின்றனர். நாவாந்துறையில் இருந்து 100 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அநேகமானவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போனால் கைது செய்யப்படுவோம் என்ற பீதியினால் காயங்களுடன் வீட்டிலேயே இருந்துவிட்டனர்.

ஜனநாயக உரிமைகளை நசுக்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு, யுத்த அழிவு மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கும்  எதிராக தமிழர்கள் மத்தியில் சீற்றம் அதிகரிக்கின்ற நிலையில், அவர்களை பயமுறுத்தி அச்சுறுத்தி வைப்பதற்காக இத்தகைய சம்பவங்களை இராணுவமும் அரசாங்கமும் உருவாக்கிவிடுவதாகவே தோன்றுகிறது.