சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Jaffna University students arrested

இலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது

By our correspondents
4 December 2012

use this version to print | Send feedback

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் நால்வர் கடந்த மாத கடைசியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இழிபுகழ்பெற்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வட இலங்கை நகரில் கைது செய்யப்பட்ட இந்த நால்வரில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் செயலாளர் பீ. தர்ஷானந், கலைப் பீட மாணவர் சங்கத் தலைவர் கே. ஜெயமேஜயன் மற்றும் விஞ்ஞான பீட மாணவர் சங்கத் தலைவர் எஸ். சொலமன் ஆகியோரும் அடங்குவர்.

அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கம் (ஸ்ரீ டெலோ) எனப்படும் அரசாங்க சார்பு துணைப்படைக் குழுவொன்று, பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள தனது அலுவலகத்தின் மீது நவம்பர் 29 அன்று விடியற் காலை சுமார் 3.30 மணியளவில் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கொடுத்த புகாரை சாக்குப் போக்காகப் பயன்படுத்தியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெலோ 1970களின் கடைப்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ் பிரிவினைவாத குழுக்களில் ஒன்றாக இருந்துவந்த போதிலும், அதன் தலைவர் சிறீ சபாரட்னம் உட்பட அதன் அநேகமான உறுப்பினர்கள், 1986ல் இயக்க மோதல்களின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். டெலோவில் எஞ்சியவர்கள் முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொண்ட அதே வேளை, ஸ்ரீ டெலோ என்ற ஒரு புதிய அமைப்பு, நேரடியாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக தலைநீட்டியுள்ளது.

விசாரிக்கப்படும் நான்கு மாணவர்களது பெயர்களும், குண்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் அவர்களை தொடர்புபடுத்துவதற்காக எந்த ஆதாரமும் இன்றி இந்த போலி புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஸ்ரீ டெலோ அலுவலகத்தைச் சூழ உள்ள மக்கள், தமக்கு குண்டு வெடித்த சத்தம் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்தக் கைதுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஒரு தொகை பொலிஸ் மற்றும் இராணுவ ஆத்திரமூட்டல்களை அடுத்தே நடந்துள்ளன. நவம்பர் 27 அன்று, ஆயுதமேந்திய பொலிஸ், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் பல்கலைக்கழகத்தைச் சுற்றி திரட்டப்பட்டிருந்தனர். அன்று மாலை, கொழும்பு ஆட்சியுடனான போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக புலிகள் பாரம்பரியமாக அறிவித்துக்கொண்ட "மாவீரர் தினத்தைக்," குறிக்கும் முகமாக, ஒரு சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் விளக்கேற்ற தயாரான போது, படையினர் அவர்களைத் தாக்கினர்.

பின்னர் மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்த அவர்கள், மாணவிகளின் அறைகளை அலங்கோலப்படுத்தியதோடு, அவர்களுடைய அலுமாரியை உடைத்து திறந்து அவர்களின் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களை வெளியே வீசினர். ஆதரவற்ற மாணவிகள் பீதியில் கதறி அழுதனர்.

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தமிழ் தினசரி பத்தரிகையான உதயன், சம்பவ இடத்திற்கு சென்றிருந்த அதன் ஆசிரியர் டி. பிரேமானந் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான இ. சரவணபவன் மீதும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகவும் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது கல்லெறிந்தததாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. கமராவை பறிக்க முனைந்த, முகத்தை கருப்பு துணியால் மூடியிருந்த இரு குண்டர்களிடம் இருந்து பிரேமானந் அதைக் காப்பாற்றிக்கொண்டார். "சிவில் உடையில் இருந்த இராணுவத்தினர், ஆசிரியர் டி. பிரேமானந்தை சட்டைக் கழுத்தில் பிடித்து சுவரோடு சார்த்தி குத்தினர்," என சரவணபவன் பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை மறுத்த யாழ்ப்பாண இராணுவத் தளபதி மஹிந்த ஹதுருசிங்க, அந்த பாராளுமன்ற உறுப்பினர் "இராணுவத்துக்கு எதிராக வதந்தியை பரப்ப பணம் பெற்றுள்ளார்," எனக் கூறினார். மாணவர்கள் "எங்கள் மீது கற்களையும் போத்தல்களையும் எறிவதைத் தடுக்க மட்டுமே இராணுவத்தினர் செயற்பட்டுள்ளனர்" என அவர் கூறிக்கொண்டார்.

சுமார் 400 நிராயுதபாணி பல்கலைக்கழக மாணவர்கள், முந்தைய நாள் இராணுவ மற்றும் போலீஸ் தாக்குதலை எதிர்த்து, சுலோகங்களை ஏந்தி, பிரதான வாயிலில் இருந்து விஞ்ஞான பீடத்தை நோக்கி ஊர்வலம் செல்ல முனைந்த போது, பொலிசும் இராணுவமும் அவர்களைத் தாக்கியது. நூற்றுக்கணக்கான கலகத் தடுப்பு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரும் ஊர்வலத்தைத் தடுத்தனர்.

பி.பி.சி மற்றும் ஏஜன்சி-பிரான்ஸ் பிரஸ் வெளியிட்ட புகைப்படங்கள், ஓடும் போது நிலத்தில் விழுந்த ஒரு மாணவரை கலக தடுப்பு பொலிஸ் அடிப்பதை காட்டுகின்றன. பி.பி.சி. தமிழ் சேவை வெளியிட்ட ஒரு புகைப்படம், பொலிஸ் மற்றும் இராணுவ சிப்பாய்கள் இரண்டு மாணவர்களை சுவர் மூலைக்குள் தள்ளி இயந்திர துப்பாக்கிகள் சகிதம் அவர்களை அச்சுறுத்துவதை காட்டுகிறது.

ஒரு காயமடைந்த மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: "பொலிஸ் எந்த எச்சரிக்கையும் இன்றி எங்களை தாக்கியது. நாம் அமைதியாகக் கூட இங்கே எமது எதிர்ப்பை வெளிப்படுத்த உரிமை இல்லை. அவர்கள் தடிகள், துப்பாக்கிகள் மற்றும் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்துக்கொண்டு எங்களை அடித்தனர். மருத்துவமனையிலும் கூட எங்களை கடத்திச்செல்வதாக இராணுவப் புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தினார்." இந்த அச்சுறுத்தல்களால் பீதியடைந்த, மருத்துவமனையில் இருந்த அனைத்து மாணவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

எதிர்ப்புக்கு அடையாளமாக மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்திருந்தாலும், ஆயுதமேந்திய பாதுகாப்பு படைகள் வளாகத்தைச் சூழவுள்ள வீதிகளைத் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளன. இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நுழைவாயில்கள், சந்திகள் மற்றும் வீதிகளில் காவலில் இருப்பதோடு சுற்றியுள்ள பகுதியில் இராணுவ வாகனங்கள் ரோந்து செல்கின்றன.

இந்த சம்பவங்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கை, 2009ல் புலிகளின் தோல்வியின் பின்னரான மூன்றரை ஆண்டுகளாக ஆளும் அடக்குமுறை இராணுவ ஆட்சியினை கோடிட்டுக் காட்டுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் கீழ் செயல்படுத்தப்படும் தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன சீற்றத்தையிட்டு அரசாங்கம் அச்சமடைந்திருப்பதையும் இந்த தாக்குதல் சுட்டிக் காட்டுகிறது. மாணவர்களின் போராட்டத்தின் மீதான அடக்குமுறை, குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான கல்வியை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்துடன் பிணைந்துள்ளது.

ஒரு கலைப் பீட மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசும்போது: "மக்களுக்கு இலங்கையில் எந்த அரசியல் உரிமையும் இல்லை. பல்கலைக்கழக மாணவர்கள் முன்பு தாக்குதல்களுக்கு உள்ளாகிய போது பல அமைப்புகள், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இராணுவ தளபதிகள் கூட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் இந்த தாக்குதல்களுக்கு முடிவே இல்லை. அரசாங்கமே இந்த தாக்குதல்களுக்கு முழு பொறுப்பாகும் அதே வேளை, வேறு யாராவது நம்மை பாதுகாக்க இருப்பதாக நாம் நம்பவில்லை," என்றார்.

அநேக மாணவர்களுக்கு, கூட்டமைப்பு உட்பட எந்த அரசியல் கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என அந்த இளைஞன் தெரிவித்தார். "கூட்டமைப்பு எங்களை ஏமாற்றுவதற்கு தேசியவாதம் பேசும் அதே வேளை, அதன் நோக்கம் கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதே," என அவர் தெரிவித்தார்.

முன்னர் புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயல்பட்டு வந்த கூட்டமைப்பு, வெளிப்படையாக கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்தைப் பெற முயல்கிறது. புலிகளின் பிரிவினைவாத முன்னோக்கை போலவே, கூட்டமைப்பின் அரசியல் சூழ்ச்சிகளும், உழைக்கும் மக்களின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கவே முயற்சிக்கின்றது. புலிகளின் இராணுவ தோல்வியானது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ குட்டி அரசை நிறுவுவதற்கு, இந்தியாவினதும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளதும் ஆதரவை பெற முயற்சிப்பதிலேயே சார்ந்திருக்கும் அதன் முன்னோக்கின் அரசியல் வங்குரோத்தின் நேரடி விளைவே ஆகும்.

தெற்காசிய சோசலிச குடியரசுகளின் பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க, மக்களின் அனைத்து ஒடுக்கப்பட்ட தட்டினருக்கும் தலைமை வகிக்கும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டம் மட்டுமே, சிறுபான்மை சமூகங்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே வழி என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.