சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-Cuban rapprochement: The lessons of history

அமெரிக்க-கியூப நல்லிணக்கம்: வரலாற்று படிப்பினைகள்

Bill Van Auken and David North
19 December 2014

Use this version to printSend feedback

அமெரிக்க-கியூப உறவுகளை "சீரமைக்க" பராக் ஒபாமா மற்றும் ராவுல் காஸ்டிரோவினால் புதனன்று ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்களாலும், அதைப் போலவே பிரதான பெருநிறுவனங்களாலும் ஒரு திருப்புமுனையாக வரவேற்கப்பட்டுள்ளன.

பிரேசிலிய ஜனாதிபதி தில்மா ரௌசெஃப் அமெரிக்க-கியூப தூதரக உறவுகள் மீண்டும் திறந்துவிடுவதற்கும் மற்றும் அத்தீவில் அமெரிக்க மூலதனம் பெரிதும் ஊடுருவுவதை சுலபமாக்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை "நாகரீகத்தின் மாற்றமாக" அறிவித்தார். வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலா மடூரோ, இவரது அரசாங்கம் வெகு சமீபத்தில்தான் ஒரு புதிய சுற்று அமெரிக்க தடைகளால் காயப்பட்டுள்ள நிலையில், அவர் அறிவித்தார், "நாம் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சைகையை, ஒரு தைரியமான சைகையை, வரலாற்றுரீதியில் அவசியமான சைகையை (gesture) அங்கீகரிக்க வேண்டியவர்களாக உள்ளோம்."

இதற்கிடையே, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் புதனன்று அறிவித்தது, "ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து வேளாண்துறை வியாபார ஜாம்பவான் கார்ஜில் இன்க் வரையில், மரச்சாமான்கள் விற்பனை நிறுவனம் ஈதன் ஆலென் இன்டீரியர்ஸ் இன்க் வரையில் அமெரிக்க நிறுவனங்களும், கியூபாவுடன் தூதரக உறவுகளை மீளமைக்கும் மற்றும் 54 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் தடைகளை தளர்த்தத் தொடங்கும் அதன் நகர்வுகளையும், வெள்ளை மாளிகை புதனன்று அறிவித்திருப்பதை வரவேற்றன."

ஹவானாவும் வாஷிங்டனும் உடன்பட்டுள்ள நடவடிக்கைகள் அமெக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசமான ஒரு புதிய காலகட்டத்தை தொடங்கி வைக்குமென்ற நம்பிக்கையை இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ தலைவர்கள் உறுதியுடன் வெளிப்படுத்திய அதேவேளையில், அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களோ, ஹவானா அரசாங்கத்தால் மலிவு-கூலி கியூப தொழிலாளர்கள் வழங்கப்பட்டு, காவல் காக்கப்படுவதிலிருந்து பெரும் இலாபங்களை அறுவடை செய்ய இருக்கும் வாய்ப்பின் மீது வாயில் எச்சில் ஊற நின்று கொண்டிருக்கின்றன.

கியூப சந்தையை அணுகுவதற்கு, வர்த்தக சபை மற்றும் அமெரிக்க உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பிலிருந்து வந்த முறையீடுகள், ஒபாமாவின் முடிவில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கியூப புரட்சியால் கொண்டு வரப்பட்ட தீவிர சீர்திருத்தங்களில் எஞ்சியிருப்பதைக் கட்டவிழ்த்துவிட, பொருளாதாரத் தடைகளை விட அமெரிக்க டாலர்களை வெள்ளமென பாரியளவில் உட்புகுத்துவது மிக அதிகமாகவே வேலை செய்யும், அதேவேளையில் 1959க்கு முன்னர் மேலோங்கி இருந்த ஒரு வகைப்பட்ட நவகாலனித்துவ உறவுகளை மீட்டமைத்து, ஹவானாவில் இன்னும் வளைந்து கொடுக்கின்ற ஓர் ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வரவும் உதவும்.

அதன் பங்கிற்கு காஸ்ட்ரோ ஆட்சியோ, கியூப தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து முதலாளித்துவ அபிவிருத்தி மூலமாக ஆளும் அடுக்கின் தனிச்சலுகைகளை பேணிக் கொண்டே, அதன் ஆட்சியை அழியாமல் காப்பாற்றுவதற்கும், சீனாவைப் போன்றவொரு வழியை பின்தொடர்வதற்கும், அதன் நீண்டகால ஏகாதிபத்திய விரோதியை நோக்கி எடுக்கப்பட்ட திருப்பத்தை ஒரு வழிவகையாக பார்க்கிறது.

அமெரிக்க-கியூப நல்லிணக்கத்தின் வரலாற்று குணாம்சம் குறித்த ஊடகங்களின் அனைத்து பரவசங்களுக்கு இடையே, கியூப ஆட்சியின் மற்றும் அதை அதிகாரத்தில் அமர்த்திய புரட்சியின் இயல்பைக் குறித்து இந்த மாற்றம் எதை வெளிப்படுத்துகிறது என்பதன் மீது அங்கே குறிப்பிடத்தக்க எந்த பரிசீலனையும் இருக்கவில்லை. வியாழனன்று அதன் பலமான தலையங்கத்தில் நியூ யோர்க் டைம்ஸ் எழுதியதைப் போல, கியூபாவுக்கு ஒரு புதிய "மாற்றம் மிகுந்த சகாப்தம்" தொடங்குகிறது என்பதுடன், தெளிவாக ஒரு இருப்புநிலை அறிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது, உலக தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் அதன் புரட்சிகர தலைமைக்கும் அதி முக்கிய கேள்வியாகும். தொழிலாள வர்க்கம், குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம், காஸ்ட்ரோயிசத்தின் இயல்பு பற்றிய குழப்பத்தில் ஒரு பெரும் விலை கொடுத்தது, அவற்றில் பெரும்பாலானவை நான்காம் அகிலத்திற்குள் எழுந்த ஒரு திருத்தல்வாத போக்கான பப்லோவாதத்தால் தூண்டிவிடப்பட்டதாகும்.

இந்த பப்லோவாத போக்கு, இலத்தீன் அமெரிக்காவில் இடது தேசியவாதிகளுடனும், ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் ஏனைய குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினரோடும் சேர்ந்து கொண்டு, ஒரு தேசியவாத கெரில்லா இயக்கத்தின் தலைவராக பிடல் காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்திருப்பது சோசலிசத்திற்கு ஒரு புதிய பாதையை, அதாவது புரட்சிகர மார்க்சிச கட்சிகளைக் கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை (இங்கே தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான மற்றும் சுயாதீனமான தலையீடு குறித்து கூற வேண்டியதே இல்லை) என்றவொரு பாதையை திறந்து விட்டிருப்பதாக பிரகடனப்படுத்தியது.

ஐரோப்பாவில் ஏர்னெஸ்ட் மண்டேலை மற்றும் அமெரிக்காவில் (சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி தலைவர்) ஜோசப் ஹன்சனைப் பிரதான தத்துவவியலாளர்களாக கொண்ட பப்லோவாத அமைப்புகளின் கருத்துப்படி, காஸ்ட்ரோ தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டதை ஒரு "தொழிலாளர் அரசாக" பிரகடனப்படுத்த, மொத்தத்தில் கியூபாவில் சொத்துக்களை தேசியமயமாக்குவதே தேவைப்பட்டது. ஹவானா ஆட்சி குறித்த இந்த எளிமையான மற்றும் முற்றிலும் மார்க்சிசம்-அற்ற ஆய்வை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு விமர்சித்தபோது, அது வெறுப்புடனும், போலித்தனத்துடனும் கியூப புரட்சியின் ஓர் எதிரியாக குற்றஞ்சாட்டப்பட்டது.

காஸ்ட்ரோயிசத்தைக் குறித்த பப்லோவாத புகழ்ச்சிகளின் அரசியல் தாக்கங்கள், கியூபாவையும் கடந்து விரிவடைவதைக் குறித்து அனைத்துலகக் குழு எச்சரித்தது. அது மார்க்ஸ் வரையில் பின்னோக்கிச் சென்று சோசலிச புரட்சியின் ஒட்டுமொத்த வரலாற்று மற்றும் தத்துவார்த்த கருத்துருக்களுடன் முற்று முழுவதுமாக உடைத்துக் கொள்வதைப் பிரதிநிதித்துவம் செய்தது.

கைதுறக்கப்பட்டிருந்தது என்னவென்றால் மார்க்சின் கீழ் முதலாம் அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படை தத்துவமாகும், அதாவது "தொழிலாளர்களின் விடுதலை தொழிலாளர்களினது பணி ஆகும்." அதற்கு மாறாக, காஸ்ட்ரோ அதிகாரத்திற்கு வந்திருப்பது சோசலிச புரட்சியை " முனை மழுங்கிய கருவிகளின்" வழிவகைகளைக் கொண்டும் அதாவது ஒரு மார்க்சிச புரட்சிகர கட்சியில்லாமலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான மற்றும் நனவுபூர்வமான பங்களிப்பு சுத்தமாக இல்லாமலேயேஎட்ட முடியுமென்பதை நிரூபித்ததாக அந்த திருத்தல்வாத போக்கு வாதிட்டது. அது வாதிட்டது: விவசாயிகளை அடித்தளத்தில் கொண்ட ஆயுதமேந்திய தேசியவாத கொரில்லா படைகளின் தலைவர்கள் அந்த நிகழ்ச்சிப்போக்கில் "இயல்பான மார்க்சிஸ்டுகளாக" எழுச்சி பெறுகையில் அது போதுமானதாக இருக்கும். அதில் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் முனைப்பற்ற பார்வையாளர்களாக புறக்கணிக்கப்படுவார்கள்.

கியூப புரட்சிக்கு நீண்டகாலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி, குட்டி-முதலாளித்துவ சக்திகளால் செய்யப்படும் தேசியமயமாக்கல்களை சாதுர்யமாக சோசலிசப் புரட்சியாக அடையாளப்படுத்துவதை விளக்கமாக நிராகரித்திருந்தார். 1939இல் கிரெம்ளின் ஆட்சி (ஹிட்லர் உடனான கூட்டணியுடன்) போலாந்து மீதான அதன் படையெடுப்பின் போக்கில், அது செய்திருந்த சொத்து பறிமுதல்களுக்கு பதிலளித்து ட்ரொட்ஸ்கி எழுதினார்: "நமது பிரதான அரசியல் அளவுகோல் இந்த அல்லது அந்த பகுதியின் சொத்துக்களைக் கைமாற்றுவதல்ல, இவற்றின் முக்கியத்துவம் அவற்றிற்குள்ளேயே எவ்வளவோ தங்கியிருக்கலாம், ஆனால் மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நனவையும், ஒழுங்கமைப்பையும் மாற்றுவதும், முந்தைய வெற்றிகளை பாதுகாப்பதற்கு மற்றும் புதிய வெற்றிகளை சேர்த்துக் கொள்வதற்கு அவர்களின் தகைமையை உயர்த்துவதுமே ஆகும்."

அனைத்துலகக் குழு எச்சரித்தது, பப்லோவாத நிலைப்பாட்டின் சாரம் 1) சோசலிசப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் முன்னணி மற்றும் மைய பாத்திரத்தை நிராகரிப்பதும்; மற்றும் 2) அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தேவைப்படும் நனவை தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி செய்ய ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டியெழுப்புவதன் தேவையை மறுப்பதும் ஆகும். அனைத்திற்கும் மேலாக, பப்லோவாதிகள் வாதிட்டதைப் போல அதுபோன்றவொரு கட்சி கியூபாவில் தேவையில்லை என்றால், பின் உலகின் வேறெந்த இடத்தில் அது ஏன் அவசியப்படும்?

அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகள் முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டன. காஸ்ட்ரோயிசம் சோசலிசப் புரட்சிக்கு புதிய முன்மாதிரியாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த முன்னோக்கு, பப்லோவாதிகள் கெரில்லாக்களை ஊக்குவித்த இலத்தீன் அமெரிக்காவில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்காக போராடுவதை கைவிடுமாறும், அதற்கு மாறாக கிராமப்புறங்களில் "ஆயுதமேந்திய போராட்டத்திற்கு" "நுட்பமான தயாரிப்புகளுக்குள்" அவர்களை இறக்கிக் கொள்ளுமாறும் அப்பிராந்தியத்தில் இருந்த அவர்களின் சொந்த ஆதரவாளர்களுக்கே அறிவுறுத்தினார்கள்.

துன்பியலான விளைவுகள் மூன்று மடங்கு இருந்தன. மிகவும் தீவிரமயப்பட்ட இளைஞர் பிரிவுகளும், அத்துடன் இளம் தொழிலாளர்களும், ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அதிகாரத்துவங்களின் எதிர்புரட்சிகர பிடியில் சிக்குப்பட உதவியாக, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைக்கான போராட்டத்திலிருந்து திருப்பி விடப்பட்டனர். இந்த இளைஞர்களே கூட இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ அரசுகளின் இராணுவ படைகளுடன் சமநிலையற்ற மற்றும் தற்கொலை படைக்குள் வீசப்பட்டனர், அது ஆயிரக் கணக்கானவர்களின் மரணத்திற்கு இட்டுச் சென்றது. மேலும் ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்களை திணிப்பதற்கும் மற்றும் உழைக்கும் மக்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்குவதற்கும் சாக்காக, தோல்வியடைந்த கொரில்லா சாகசங்கள் இராணுவத்தால் பற்றிக் கொள்ளப்பட்டன.

இந்த முன்னோக்கிற்கு பலியானவர்களில் காஸ்ட்ரோவின் மிக நெருங்கிய ஆயுதப்படை தோழர் சே குவேராவும் ஒருவராவார். கியூபா ஆட்சியின் துரிதமான அதிகாரத்துவமயமாக்கலால் நம்பிக்கையிழந்து, அவர் பொலிவியாவில் அவரது உயிர்பறிக்கும் சாகசத்தை மேற்கொண்டார். சக்திவாய்ந்த பொலிவிய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறனைப் புறக்கணித்து, குவேரா அங்கே மிகவும் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட விவசாயத்துறை பிரிவுகளிடையே ஒரு கெரில்லா இராணுவத்தை உருவாக்க முனைந்தார். தனிமைப்படுத்தப்பட்டும் பட்டினி கிடந்தும், குவேரா பொலிவிய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, அக்டோபர் 1967இல் தூக்கிலிடப்பட்டார். குவேராவின் தலைவிதி காஸ்ட்ரோயிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் பேரழிவுகரமான விளைவுகளுக்கு ஒரு துயரகரமான முன்னறிவிப்பாக இருந்தது.

இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் எழுந்த ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர மேலெழுச்சியின் தோல்வியே ஒட்டுமொத்த விளைவாக இருந்தது, 1968இல் இருந்து 1975 வரையில் சர்வதேச அளவில் மேலோங்கியிருந்த தீவிர புரட்சிகர நெருக்கடிகள் மற்றும் வர்க்க போராட்டங்களின் ஒரு காலகட்டத்தில், ஏகாதிபத்தியம் தப்பிப் பிழைப்பதற்கு உதவுவதில் இலத்தீன் அமெரிக்கா அதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த ஒட்டுமொத்த முன்னோக்கிற்கும் எதிராக சமரசமின்றி போராடியது. அது வலியுறுத்துகையில், காஸ்ட்ரோயிசம் சோசலிசத்திற்கு ஏதோவொரு புதிய பாதையைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக அது மிகத் தீவிர முதலாளித்துவ தேசியவாதத்தின் மாற்றுருக்களில் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்தது, அவ்வித மாற்றுருக்கள் 1960களில் பல முன்னாள் காலனித்துவ நாடுகளில் அதிகாரத்திற்கு வந்திருந்தன. அத்தகைய பல ஆட்சிகள் பரந்துபட்ட தேசியமயமாக்கல்களை நடத்தி வந்தன என்று விளங்கப்படுத்தியது.

காஸ்ட்ரோவின் கொள்கைகள் கியூப சமூகத்தின் அடிப்படை வரலாற்று பிரச்சினைகளை அதாவது பின்தங்கிய நிலைமை மற்றும் சார்ந்திருக்கும் நிலையை தீர்க்கவில்லை, அவை சோவியத் மானியங்கள் மீதும் அதற்கடுத்து வெனிசூலாவிலிருந்து மலிவு எண்ணெய் அளிக்கப்பட்டதன் மீதும் மட்டுமே வரையப்பட்டிருந்தன.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீது தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொண்டு அனைத்துலகக் குழு வலியுறுத்துகையில், காலனித்துவ மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்க தலைமையின் கீழ் அதிகாரத்தைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் புரட்சியை நீட்டிப்பதன் மூலமாக மட்டுமே வென்றெடுக்க முடியுமென வலியுறுத்தியது. இந்த முன்னோக்கிலிருந்து வரும் பிரதான பணி என்னவென்றால், தொழிலாளர்களை முதலாளித்துவ தேசியவாதத்திற்கு அடிபணிய வைக்க முனையும் அனைத்து போக்குகளின் பிடியிலிருந்தும் உடைத்துக் கொள்ள செய்ய, ஒரு சளைக்காத போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர கட்சிகளைக் கட்டியெழுப்புவதாகும்.

கியூப புரட்சிக்கு பிந்தைய ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளில், காஸ்ட்ரோ ஆட்சியின் போக்கு ICFIஆல் போராடப்பட்ட முன்னோக்கை முற்றிலுமாக நிரூபித்துள்ளது, அது இன்று ஒவ்வொரு துளியிலும் கியூபாவிலும், இலத்தீன் அமெரிக்காவிலும் ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவிலும் அத்தியாவசியமாக தங்கியுள்ளது.

வாஷிங்டன் மற்றும் ஹவானாவிற்கு இடையிலான நல்லிணக்கம், அத்தீவில் ஏற்கனவே உள்ள சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் வர்க்க பதட்டங்களின் வேகமான அதிகரிப்பையும், அத்துடன் புரட்சியின் வெற்றியில் எஞ்சியிருப்பதை ஒரேசீராக அழிக்கும் பல தொடர்ச்சியான எதிர்-சீர்திருத்தங்களையும் துரிதப்படுத்த மட்டுமே சேவை செய்யும்.

கியூப தொழிலாளர்கள், இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள அவர்களின் சமதரப்பினரைப் போலவே, புரட்சிகர போராட்ட பாதைக்குள் தவிர்க்கவியலாது தள்ளப்படுவர். அத்தகைய போராட்டங்களுக்கு முக்கிய தயாரிப்பாக இருக்க வேண்டியது, காஸ்ட்ரோயிசம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் நீண்டகால அனுபவத்திலிருந்து கசப்பான படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் புதிய சுயாதீனமான புரட்சிகர கட்சிகளை, அதாவது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளை கட்டுவதாகும்.

ஆசிரியர் பரிந்துரை:

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்