சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Seventy years since the defeat of Hitler’s Third Reich

ஹிட்லரின் மூன்றாம் குடியரசு தோல்விக்குப் பிந்தைய எழுபது ஆண்டுகள்

Fred Williams
9 May 2015

Use this version to printSend feedback

இரண்டாம் உலகப் போரை ஐரோப்பிய அரங்கில் முடிவிற்கு கொண்டுவந்த நாஜி ஜேர்மனி மீதான வெற்றி மாஸ்கோவில் இன்று ஒரு பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கொண்டாடப்படும். அப்போரில் சோவியத் ஒன்றியத்துடன் கூட்டணியிலிருந்த நாடுகளின் உலக தலைவர்கள் பலர் அந்த விழாவைப் புறக்கணித்திருப்பதோடு, ரஷ்யாவிற்கு வெளியே அந்த  நிகழ்வு குறித்து மிக சிறியளவிலேயே கவனம் செலுத்தப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொள்ளமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது, அதேபோல பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனும். ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மே 10 அன்று ஒரு மலர்வளையம் வைக்க மாஸ்கோவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள், ஐரோப்பாவில் பாசிசத்தை தோற்கடிப்பதில் சோவியத் தொழிலாள வர்க்கம் ஆற்றிய முக்கிய பாத்திரத்தை, அதுவும் குறிப்பாக ஒரு தீவிரமான ரஷ்ய-விரோத நடவடிக்கையின் பாகமாக அவை பாசிசவாத சக்திகளை ஊக்குவித்தும், கூட்டு சேர்த்தும் வருகின்ற நிலைமைகளின் கீழ் ஏற்றுக்கொள்ள விருப்பமற்று உள்ளன.

சோவியத் மக்களின் அந்த மாபெரும் தியாகம் இல்லாமல் நாஜி ஜேர்மனியின் தோல்வி சாத்தியமாகி இராது என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். துல்லியமான எண்ணிக்கை ஒருபோதும் தெரியவில்லை என்றபோதினும், நாஜி படைகளைத் தோற்கடிப்பதில் சுமார் 27 மில்லியன் சோவியத் மக்கள் உயிரிழந்தனர். அநேகமாக ஒவ்வொரு சோவித் குடும்பத்திலும் ஒருவரோ அல்லது ஒருவருக்கு மேற்பட்டவரோ உயிரிழந்தார். ஆயிரக்கணக்கான கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன, பல பிரதான நகரங்கள் இடிபாடுகளாக ஆகிப்போயின.

தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற பிற்போக்குத்தனமான மற்றும் தேசியவாத தத்துவத்தில் வேரூன்றியிருந்த சோவியத் ஒன்றியமும் மற்றும் மூன்றாம் அகிலத்தின் ஸ்ராலினிச தலைமை, ஜூன் 22, 1941இல் நாஜி படையெடுப்புக்கு முன்னதாக சோவியத் ஆயுத படைகளைத் தயார் செய்யாதிருந்தமை மற்றும் போரின் வெடிப்பு இரண்டிற்கும் பாரிய பொறுப்புக்களை பகிர்ந்துகொள்கின்றன.

அனைத்திற்கும் முதலாவதாக, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகிய இரண்டு பிரதான கட்சிகளில் இருந்த ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த தவறியமையே ஜனவரி 1933 இல் ஹிட்லரை அதிகாரத்திற்கு வர அனுமதித்தது. மூன்றாம் அகிலம் சமூக ஜனநாயகக் கட்சியை "சமூக-பாசிசவாதிகள்" என்றும், அவர்களை நாஜிக்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது (அவர்கள் எதிரெதிரானவர்கள் அல்லர், மாறாக இரட்டையர்கள்”) என்றும் குற்றஞ்சாட்டியது, அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி "ஹிட்லருக்குப் பின்னர், நாங்களே" என்ற முழக்கத்தை முன்னெடுத்தது.

சில மாதங்களுக்குப் பின்னர் ஹிட்லர் வீழ்ச்சி அடைவார் என்று கூறி அது குற்றகரமாக ஜேர்மன் தொழிலாளர்களை நிராயுதபாணியாக்கியது. பெப்ரவரியில் ஜேர்மன் நாடாளுமன்றம் நெருப்பிடப்பட்ட (Reichstag fire) பின்னர், ஹிட்லர், தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைந்த எதிர்ப்பை நசுக்க அசாதாரண சட்டங்களைப் பிரயோகித்தார். நாஜி ஆட்சிக்கு முதலில் பலியானவர்களில் சமூக ஜனநாயக, கம்யூனிச மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் உள்ளடங்கி இருந்தனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டனர் அல்லது வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்

அதற்கடுத்த பிரதான அடி, ஸ்ராலினின் பாரிய பயங்கரமாகும்(Great Terror). அது அக்டோபர் புரட்சியில் உயிர்பிழைத்திருந்த தலைவர்களில் ஏறக்குறைய அனைவரையும் 1936-38 இல் பூண்டோடு அழித்தது. 1937இல் செம்படையினுள்ளான களையெடுப்பும் அதில் உள்ளடங்கும். அதிலிருந்த 30-40,000 அதிகாரிகள் கொல்லப்பட்டு முக்கியமாக இது, எதிர்வரவிருந்த போருக்கு முன்னரே இராணுவத்தின் தலைமையை அழித்தது. உள்நாட்டு போரில் மதிப்பில்லா அனுபவத்தைக் கொண்டிருந்த மற்றும் தசாப்தங்களாக நவீன இராணுவ மூலோபாயத்தை அபிவிருத்தி செய்திருந்த ருக்காஷெவ்ஸ்கி, யாகியர், ஐடமான், கோர்க் மற்றும் பிரிமாகோவ்  (Tukhachevsky, Yakir, Eideman, Kork ,Primakov) போன்ற அதிகாரிகள், சித்திரவதை செய்யப்பட்டு மே 1937 இல் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1941 இல் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், ஹிட்லரின் 1941 படையெடுப்பின் ஆரம்ப பேரழிவு கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டிருக்கும்.        

இதற்கு அடுத்ததாக, ஸ்பெயின் உள்நாட்டு போரின் போது ஸ்ராலின் மக்கள் முன்னணி கொள்கைகளை கடைப்பிடித்தார். அந்நடவடிக்கைகளினூடாக கம்யூனிஸ்ட் கட்சி, ஹிட்லர் மற்றும் முசோலினியால் ஆதரிக்கப்பட்ட பிராங்கோவின் பலாஞ்சிஸ்ட் (Falangist) படைகளுக்கு எதிராக "ஏகாதிபத்திய ஜனநாயகங்களுடன்" கூட்டணிகளைப் பேணும் பொருட்டு, சோசலிச புரட்சியின் குரல்வளையை நசுக்கியது. நிகழவிருந்த ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் தோல்வி, உலக போர் அடிவானத்தில் எழுகையில் அதனை நடைமுறையில் உத்தரவாதப்படுத்தியது.

பின்னர், சர்வதேச தொழிலாள இயக்கத்திலிருந்த பலருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், ஸ்ராலின் ஆகஸ்ட் 23, 1939 இல் ஹிட்லருடன் வலிந்து-தாக்காத உடன்படிக்கையில் (a pact of nonaggression) கையெழுத்திட்டார். மக்கள் முன்னணி காலகட்டத்தின் போது கண்டனம் செய்யப்பட்ட அதே பாசிச கட்சிகள் இப்போது நம்பத்தகுந்த கூட்டாளிகளாக அரவணைக்கப்பட்டன. இது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவில் தீவிர நோக்குநிலை குழப்பத்திற்கு காரணமானது.  

1929இல் சோவியத் ஒன்றியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்த, செம்படையின் ஸ்தாபகரும் மற்றும் அக்டோபர் புரட்சியில் லெனினுடன் துணை-தலைவராக இருந்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கி, 1930கள் முழுவதிலும் நடந்த இத்தகைய சம்பவங்களின் மிகவும் துல்லியமான பகுப்பாய்வாளராக விளங்கினார். ஹிட்லர் பதவிக்கு வரும் வரையில் மற்றும், பதவிக்கு வந்த பின்னரும் கூட, மூன்றாம் அகிலம் அதன் கொள்கைகளை பாதுகாத்த போதுதான், ட்ரொட்ஸ்கி சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய புரட்சிகர கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டமைத்தார்.

அக்டோபர் புரட்சியின் சமூக வெற்றிகளை பாதுகாத்துக் கொண்டே, ட்ரொட்ஸ்கி உலக சோசலிச புரட்சியை முன்னெடுப்பதில் ஓர் இன்றியமையா அம்சமாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை அரசியல்ரீதியில் தூக்கியெறிய அழைப்புவிடுத்தார். வேகமாக மீள்ஆயுதமேந்தும் ஜேர்மனியுடன் சாத்தியமான போரில், சோவியத் ஒன்றியத்தின் ஆற்றல்மிக்க பலத்தைக் குறித்து 1934 இல் அவரது மதிப்பீடு தீர்க்கதரிசனமாய் இருந்தது

உண்மைகளை உள்ளவாறே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்: போரை விதிவிலக்காக விடமுடியாது என்பது மட்டுமல்ல, மாறாக அது ஏறத்தாழ தவிர்க்கமுடியாததும் ஆகியுள்ளது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக, 1905இல் இருந்து, ஏற்ற-இறக்கங்களோடு தொடர்ந்து கொண்டிருக்கும் ரஷ்ய புரட்சியின் ஓட்டம், போரின் பாதைக்குள் திருப்பப்பட்டால், அது ஒரு பயங்கரமான மற்றும் அனைத்தையும் மூழ்கடித்துவிடும் படையாக கட்டவிழும் என்பதை வரலாற்று புத்தகத்தைப் படிக்க முடிந்தவர்களாலும், படிக்க விருப்பமுடையவர்களாலும் முன்கூட்டியே புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கைக்கு இட்டுச் சென்ற ஆறு ஆண்டுகளில், ஜேர்மனியுடன் ஸ்ராலின் ஒரு சமரசத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்தார். செப்டம்பர் 1, 1939 இல் ஹிட்லர் போலாந்து மீது படையெடுத்தபோது, “வலிந்து-தாக்காத" உடன்படிக்கையின் இரகசிய விதிமுறைகள் வெளியில் அறியப்படவில்லை. ஆனால் போலந்தை ஜேர்மனி உடன் சேர்ந்து பங்கிட்டு கொள்ளும் வகையில், செப்டம்பர் 17 இல், சோவியத் ஒன்றியம் கிழக்கிலிருந்து போலந்து மீது படையெடுத்தது. பால்டிக் அரசுகள் (லாத்வியா, லித்துவேனியா மற்றும் எஸ்தோனியா) மீதும், அத்துடன் ருமேனியாவின் சில பகுதிகளிலும் சோவியத் ஆக்கிரமிப்பை அனுமதிப்பது என்பது அந்த உடன்படிக்கையின் வரையறைகளில் உள்ளடங்கி இருந்தன. நவம்பர் 1939 இல், ஸ்ராலின் இரத்தக்களரியான "குளிர்கால போரில்" (Winter War) பின்லாந்து மீது படையெடுத்தார், மிகப்பெரிய மனித விலைசெலுத்தலுடன் அது பின்லாந்தின் சில பகுதிகளை இணைத்துக் கொள்ள இட்டுச் சென்றது.

சோவியத் ஒன்றியம் மீதான ஹிட்லரின் படையெடுப்புக்கு முந்தைய 22 மாதங்களின் போது, ஸ்ராலின் ஜேர்மனிக்கு மூலப் பொருட்களையும் மற்றும் உணவுபண்டங்களையும் வினியோகித்தார். அது கணிசமான அளவிற்கு மேற்கு ஐரோப்பாவில் நாஜி போர் முயற்சிகளுக்கு உதவின.

போலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஏனைய இடங்களிலும் ஹிட்லரது குண்டுமழையால் ஆரம்ப வெற்றிகள் கிடைத்த போதும், ட்ரொட்ஸ்கி வலியுறுத்துகையில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவைக் கைப்பற்ற முயற்சிப்பதன் மூலமாக அதன் முரண்பாடுகளைத் தீர்க்க முடியாது என்று வலியுறுத்தினார். ஹிட்லர் தவிர்க்கவியலாமல் சோவியத் ஒன்றியத்தின் மீது தாக்குதல் நடத்த கிழக்கை நோக்கி திரும்புவார் என்பதையும் அவர் விளக்கினார். வரலாற்றில் அதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராத அளவில் அந்த போர் விரிவடைந்து பரவுகையில், அப்போர் கொண்டு வரக்கூடிய புரட்சிகர மேலெழுச்சிகளில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் உயிர்பிழைக்க முடியாது என்பதிலும் ட்ரொட்ஸ்கி நம்பிக்கையோடு இருந்தார். இத்தகைய நிலைமைகளின் கீழ் தான், அவர், சோசலிச புரட்சியின் ஒரு புதிய சுற்றுக்கு நான்காம் அகிலம் தலைமை கொடுப்பதற்கான சாத்தியக்கூறை முன்கணித்தார்.

ஹிட்லரை விட அதிகமாக ட்ரொட்ஸ்கியைக் குறித்து அஞ்சிய ஸ்ராலின், அவரைப் படுகொலை செய்ய தீவிர நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். உலக கவனமே பிரிட்டன் போர் மீது ஒருமுகப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1940 இல் ட்ரொட்ஸ்கியை கொல்வதில் ராமொன் மெக்காடர் வெற்றி கண்டார்.

இதற்கிடையே ஹிட்லர் பார்பரோஸ்சா (Barbarossa) நடவடிக்கைக்கு, அதாவது சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுப்பதற்கு தயாரிப்பு செய்யுமாறு அவரது தளபதிகளுக்கு உத்தரவிட்டார். ஜூன் 22, 1941 இல், 3,000 டாங்கிகள் மற்றும் ஒரு பலம் வாய்ந்த விமானப்படையுடன், 3.6 மில்லியனுக்கும் அதிகமான துருப்புகள் எல்லையோரங்களில் குவிக்கப்பட்டனர். போரின் முதல் ஆறு மாதங்களுக்குள், மூன்று மில்லியன் சோவியத் துருப்புகள் பிடிக்கப்பட்டன, அவர்களில் இரண்டு மில்லியன் பேர் போர் கைதிகளாக, ஜனவரி 1942க்குள் பட்டினியிலேயே இறந்து போயிருக்கக்கூடும்.

சோவியத் கைதிகளைப் பட்டினிப்போடுவது என்பது ஹிட்லரின் உள்நோக்கம் கொண்ட "பொதுவான கிழக்கு திட்டத்தின்" (General Plan East) பாகமாக இருந்தது. யூரல் மலைப்பகுதிகள் வரையில் சோவியத் ஒன்றியம் மொத்தத்தையும் ஆக்கிரமிப்பதும், அதேவேளையில் புதிதாக வெற்றிகொண்ட  "உயிர்வாழும் பிரதேசங்களை" ஆரிய குடிமக்களை கொண்டு மீள்குடியமர்வு செய்வதும் அந்த போரின் நோக்கமாக இருந்தது. அந்த நிர்மூலமாக்கும் போரில்" பழங்குடியின மக்கள் கொல்லப்படுவார்கள்; சண்டையில் ஒரேயடியாக கொல்லப்படாதவர்கள் அடிமை உழைப்பாளிகளாக பயன்படுத்தப்பட்டு, கொலைப்படைகளால் கொல்லப்படுவார்கள், அல்லது பட்டினியில் உயிரிழக்க விடப்படுவார்கள்.

நாஜி ஆட்சி மூர்க்கமான கம்யூனிச-விரோத போக்கில் இருந்தது. ஹிட்லர் அவரே "யூத போல்ஷிவிசத்தின்" அழிப்பை, பிரிக்க முடியாதவாறு ஒட்டுமொத்த ஐரோப்பிய யூதர்களின் அழிப்புடன் தவிர்க்கமுடியாதபடி இணைந்திருப்பதாக கண்டார். அப்போரில் நாஜிக்கள் கொன்ற ஆறு மில்லியன் யூதர்களில், மில்லியன் கணக்கானவர்கள் சோவியத் ஒன்றியம் மீதான படையெடுப்பின் போது படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.

மேற்கு ஐரோப்பாவில் கிடைத்த துரிதமான வெற்றிகளின் காரணமாக அதீத-தன்னம்பிக்கை கொண்ட ஹிட்லர், ஆறே வாரங்களில் சோவியத் ஒன்றியத்தை துண்டாட முடியுமென எதிர்பார்த்தார். லெனின்கிராட், மாஸ்கோ மற்றும் ஸ்ராலின்கிராட்டை நோக்கி அவரது படைகள் மும்முனைகளில் பாய்ந்த போது, அவை எதிர்பாராதளவிற்கு கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. நம்பமுடியாதளவிற்கு அவர்களது பெரும் இழப்பிற்கு இடையிலும், சோவியத் துருப்புகள் பாசிச படையெடுப்பாளர்களைத் தோற்கடிக்க மூர்க்கமாக போராடினர். ஜேர்மன் ஆயுதபடைகள் ரஷ்யாவின் உட்பகுதிகளுக்குள் முன்னேறிய போது, சோவியத் தொழில்துறையின் மிகப்பெரும் பகுதிகள் ஆலைகளைக் கலைத்துவிட்டு, மத்திய ஆசியா மற்றும் சைபீரியாவிற்கு நகர்ந்தன. இதில் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் தியாகங்கள் உள்ளடங்கி இருந்தன. 1943 வாக்கில், சோவியத் ஒன்றியத்தின் மத்தியப்படுத்தப்பட்ட பொருளாதாரம் (centralized economy), அதன் ஸ்ராலினிச திரித்தல்களுக்கு இடையிலும், ஜேர்மன் போர் எந்திரத்தை விட அதிகமாக உற்பத்தி செய்து வந்தது.

காட்டுமிராண்டித்தனமான ஐந்து மாதகால ஸ்ராலின்கிராட் போர், பெப்ரவரி 1943 இல் ஹிட்லர் துருப்புகளின் படுதோல்வியுடன் முடிந்தது. 1943 இல் பாரிய குர்ஸ்க் போரும் (Battle of Kursk) நடந்தது. அதில் 3 மில்லியன் சிப்பாய்களும் ஆயிரக் கணக்கான டாங்கிகளும் ஈடுபட்டன. சோவியத் துருப்புகள் 1944 இன் இறுதியில் ஜேர்மனியை எட்டின. பேர்லின் போரின் போது, ஏப்ரல் 30, 1945 இல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். நாஜி ஆட்சியின் ஒட்டுமொத்த சரணடைவும், மாஸ்கோ நேரப்படி மே 9 நள்ளிரவுக்குப் பின்னர் வந்தது.

போருக்குப் பின்னர், ஸ்ராலினிச ஆட்சி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய அதன் பிரதான ஏகாதிபத்திய கூட்டாளிகளுடன் சமாதான சகவாழ்வு கொள்கையைப் பின்பற்றியது. தெஹ்ரான், யால்டா மற்றும் போட்ஸ்டாம் கூட்டங்களில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில், கிழக்கு ஐரோப்பா சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு மண்டலமாக மாறியது, அதேவேளையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் கிரீஸில் இருந்த நாஜிக்களுக்கு எதிரான எதிர்ப்புக்கு பெரிதும் தலைமை கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அங்கே புரட்சிகளை ஒடுக்கின.

அனைத்தினும் மேலாக, போரின் போது அவர்கள் சகித்து கொண்டிருந்த ஸ்ராலினிச ஆட்சி சற்றே தளர்ந்துகொடுக்குமென சோவியத் மக்களில் பலர் எதிர்பார்த்தனர், ஆனால் மறுகட்டமைப்பின் வலிநிறைந்த அந்த காலக்கட்டத்தின் போது மிகச் சிறியளவே தளர்வு இருந்தது. “மேற்குசார்பானவர்களுக்கு எதிரான" (anti-cosmopolitan) நடவடிக்கை மற்றும் மருத்துவர்களின் சதித்திட்டம் (Doctors’ Plot) ஆகியவற்றின் போது ஸ்ராலினின் தேசியவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத கொள்கைகள் அசுரத்தனமான வடிவங்களை ஏற்றன. அரசே-ஊக்கப்படுத்திய இத்தகைய யூதவிரோத நடவடிக்கைகள் மார்ச் 1953 இல் ஸ்ராலின் இறந்த பின்னர் வேகமாக நிறுத்தப்பட்டன.

பாசிச ஜேர்மனி மீதான வெற்றிக்கு பிந்தைய ஏழு தசாப்தங்கள், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஸ்ராலினின் வழிதோன்றல்களால் நடத்தப்பட்ட சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ மீட்சியைக் கண்டுள்ளது. முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் ஒரு ஊழல்மிகுந்த, சர்வாதிகார பிரதிநிதியாக விளாடிமீர் புட்டின், ஸ்ராலினைப் பெருமைப்படுத்துவது உட்பட அவரது சொந்த அதிதீவிர தேசியவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவு திரட்டுவதற்கு மே 9 தேதி கொண்டாட்டத்தைப் பயன்படுத்த முயன்று வருகிறார். ஆனால் செஞ்சதுக்கத்தில் அணிவகுக்கும் இராணுவ படைகள், இப்போது அக்டோபர் புரட்சியால் அமைக்கப்பட்ட முற்போக்கான சமூக அடித்தளத்தில் தங்கியிருக்கவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினது காட்டிக்கொடுப்பின் இறுதி நடவடிக்கையிலிருந்தும் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிலிருந்தும் மற்றும் முதலாளித்துவ அடித்தளத்திலான உலக பொருளாதாரத்திற்குள் அதன் மீள்இணைப்பிலிருந்தும் இலாபமீட்டிய பில்லியனர்களைப் புட்டனின் ஆட்சி பிரதிநிதித்துவம் செய்கிறது.

பாசிசம் மீது ரஷ்யா வெற்றி கொண்டதைக் குறித்த நினைவுவிழாக்களை ஏகாதிபத்திய சக்திகள் புறக்கணிக்கின்றன என்றால், பெரிதும் அது ஏனென்றால், இன்று அவை பின்பற்றும் பல கொள்கைகள் நாஜிக்கள் பின்பற்றியவற்றுடன் ஒத்திருக்கின்ற என்ற உண்மையினால் ஆகும். உண்மையில், உக்ரேனில், அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியம், இரண்டாம் உலக போரின் போது நாஜி ஆட்சியுடன் ஒத்துழைத்த உக்ரேனிய தேசியவாதிகளின் வழிவந்த பாசிச சக்திகளுடன் இணைந்துள்ளன.

அமெரிக்கா திட்டமிட்டு வேண்டுமென்றே ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டிவிட்டு வருகிறது. அமெரிக்கா தலைமையிலான மற்றும் ரஷ்யாவை நோக்கி திருப்பிவிடப்பட்ட பெப்ரவரி 2014 இன் உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து அப்பிராந்தியம் முழுவதும் தீவிர இராணுமயமாக்கல் நடந்துள்ளது. உண்மையில், மாஸ்கோவில் நினைவுவிழா நடத்தப்படுகின்ற அதேவேளையில், நேட்டோ படைகளால் நடத்தப்பட்டு வருகின்ற இராணுவ ஒத்திகைகளோ ரஷ்யாவின் எல்லையிலிருந்து வெகு தூரத்தில் நடக்கவில்லை.

அதன் பங்கிற்கு, உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்த ஜேர்மன் ஆளும் வர்க்கமும், கடந்தகால குற்றங்களைப் போலவே எதிர்காலத்தில் செய்வதற்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு, கடந்தகால குற்றங்களை மூடிமறைக்க முயன்று வருகிறது. ஜேர்மன் கல்வியாளர்கள் ஹிட்லர் ஆட்சியின் குற்றங்களைக் குறைத்துக்காட்டவும், நாஜிசத்தை போல்ஷிவிக் புரட்சிக்கு விடையிறுப்பாக நியாயப்படுத்தவும் முயன்று வருகின்றனர்.

ஐரோப்பாவில் இரண்டாம் உலக போர் முடிந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும், அக்கண்டமும் மற்றும் உண்மையில் முழுஉலகமே கட்டுப்பாடில்லா இராணுவவாதத்தின் மீள்எழுச்சியை எதிர்கொள்கிறது. ஐரோப்பாவில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் நடைமுறையில் நிலவுலகின் ஒவ்வொரு மூலையிலும் புதிய ஏகாதிபத்திய போரைத் தடுப்பதற்கு ஒரே வழி, ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீது சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது மட்டுமே ஆகும்.