ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The 2016 elections: American democracy in shambles

2016 தேர்தல்கள்: குழப்ப நிலையில் அமெரிக்க ஜனநாயகம்

Joseph Kishore
21 October 2016

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான புதன்கிழமை இறுதி விவாதத்திற்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் நவம்பர் 8 தேர்தல் முடிவுகளை அவர் அங்கீகரிக்கப் போவதில்லை என்று கூறிய கருத்துக்கள் மீது பரபரப்பாக குரல் எழுப்பியுள்ளன.

"இத்தேர்தல் முடிவை முழுமையாக ஏற்று கொள்வீர்களா" என்று விவாத ஒருங்கிணைப்பாளர் Fox News இன் கிறிஸ் வாலஸ் வினவியதும், அவர் "அந்நேரம் பார்த்துக் கொள்ளலாம்" என்றும், “உங்களை ஆவலில் வைத்திருப்பேன்" என்றும் பதிலளித்தார். வியாழனன்று ட்ரம்ப் அவர் கருத்துக்களில் இருந்து சற்றே இறங்கி வந்து, "தெளிவான தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்வதாக" அவர் கூறினார். இருந்தபோதினும் கிளிண்டன் "இதுவரை பதவிக்குப் போட்டியிட்டவர்களிலேயே மிகவும் மோசடியான மற்றும் நேர்மையற்ற நபர்" என்று வாதிட்ட அவர், தொடர்ந்து கூறுகையில், “கேள்விக்குரிய முடிவு ஏற்பட்டால் சட்டபூர்வ சவாலைப் பதிவு செய்யும் அல்லது முன்நிறுத்தும்" உரிமை அவருக்கு இருப்பதாக தெரிவித்தார்.

அந்த விவாதத்தில் டரம்ப் இன் கருத்துக்கள், இந்த தேர்தல் கிளிண்டனுக்கு சார்பாக ஊடகங்களால் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்ற முந்தைய கருத்துக்களின் வரிசையில் இருக்கின்றன, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் குறிபாக நகர்புற மையங்களில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக வாக்கிடுவதாக அவை தெளிவாக இனவாத தொனியைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறை மீதான சமூக கோபத்தை மற்றும் எதிர்ப்பை ஒரு தீவிர வலதுசாரி திசையில் திருப்பும் முயற்சியில், அவர் தேர்தல்களுக்குப் பின்னர் அபிவிருத்தியடையும் நிலைமைகளுக்காக அவரது முறையீடுகளை நிலைநிறுத்துகிறார்.

அமெரிக்க ஜனநாயகத்தின் பன்முகத்தன்மையை அசுத்தப்படுத்துவதாக ட்ரம்ப் மீதான ஒரேமாதிரியான கண்டனமே, ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் மேலாதிக்கம் கொண்ட பிரிவுகளிடமிருந்து வரும் விடையிறுப்பாக உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகையில், “உள்நாட்டு போர் முடிந்த பின்னர் வாக்காளர்களின் விருப்பத்தை மதித்தமை அதிகாரம் சமாதானமான முறையில் கைமாற்ற அனுமதித்துள்ளது, அது இந்நாட்டின் மீது உலகை பொறாமை கொள்ளச் செய்துள்ளது,” என்றது. ட்ரம்ப், “அமெரிக்க வாக்காளர்களின் புத்திஜீவிதத்தை அவமதிப்பதிலிருந்து அமெரிக்க ஜனநாயகத்தையே அவமதிக்க" திரும்பி உள்ளார் எனவும் நியூ யோர்க் டைம்ஸ் சேர்த்துக் கொண்டது.

குடியரசு கட்சி செனட்டரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன் மெக்கெய்ன் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஒரு தேர்தலில் வெற்றியாளரை ஏற்றுக் கொள்வது "அமெரிக்க மக்களின் விருப்பத்தை மதிக்கும் நடவடிக்கையாகும், இம்மதிப்பை அளிக்க வேண்டியது ஒவ்வொரு அமெரிக்க தலைவரின் முதல் கடமையாகும்,” என்றார். மேலும் துணை ஜனாதிபதி ஜோ பைடென், உணர்ச்சிபூர்வ சீற்றத்தின் கவசம் தரித்து, வியாழனன்று வழங்கிய ஓர் உரையில் கூறுகையில், “நீங்கள் கேள்வி எழுப்புவீர்களாயின், ஒரு ஜனநாயக தேர்தல் முடிவு தீர்மானிக்கப்பட்டு விட்டது என நீங்கள் வலியுறுத்துவீர்களாயின், நாம் ஒரு ஜனநாயக அமைப்புமுறையைக் கொண்டிருக்கிறோமா என்ற அடிப்படை கருத்தின் மீதே நீங்கள் தாக்குதல் நடத்துகிறீர்கள்,” என்றார்.

பத்திரிகை தலையங்க குழுக்கள் முன்னணி அரசியல்வாதிகளிடம் இருந்து வரும் இத்தகைய அறிக்கைகளில் பாசாங்குத்தனத்தின் துர்நாற்றம் வீசுகிறது. அவர்கள் ஒரு பதட்டத்தையும் வெளிப்படுத்துகிறார்கள், அதன் விளைவுகள் திரு. ட்ரம்ப் இன் கருத்துக்களையும் கடந்து விரிகிறது. ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், பரந்த பெரும்பான்மை மக்களால் அதிகரித்தளவில் செல்லுபடியாக ஒன்றாக பார்க்கப்படும் ஓர் அமைப்புமுறையை பாதுகாக்க முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வரலாற்று நிலைப்புள்ளியிலிருந்து பார்த்தால், 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரையில் அமெரிக்காவின் ஒவ்வொரு தேர்தலும் "தீர்மானிக்கப்பட்டு" இருந்தது, அது வரையில் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் வாக்களிக்கவே தடுக்கப்பட்டிருந்தார்கள் என்பதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். 1920 இல் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. வாக்குரிமை வரிகள், ஜிம் கிரோவ் பிரிவினை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் மூலமாக தெற்கில் அமைப்புரீதியிலேயே ஆபிரிக்க அமெரிக்கர்களின் உரிமைபறிப்பு, 1960 களின் மத்தியில் கடுமையான சமூக போராட்டங்களின் துணைவிளைவாக அக்காலக்கட்டத்தில் தான் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 1971 இல் தான், ஓட்டுரிமை தகுதி வயது 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. அதுவரையில், இளைஞர்களால் வாக்களிக்க முடியாததால் தலைமை தளபதியின் கட்டளையின் பேரில் போர்களில் போரிட்டு இறக்க கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

கடந்த நான்கு தசாப்தங்களாக, சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சியுடன் சேர்ந்து, ஜனநாயக ஆட்சி வடிவங்கள் அமைப்புரீதியிலான தாக்குதலின் கீழ் உள்ளன. 1998 மற்றும் 1999 இல் பாலியல் முறைகேட்டில் பில் கிளிண்டன் மீது களங்கம் கற்பிக்கும் பிரச்சாரத்துடன் ஒரு திருப்புமுனை வந்தது, அதை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டது. ட்ரம்ப் இன் கருத்துக்கள் மீதான தற்போதைய விவாதங்களில் குறைந்தபட்சம் 2000 தேர்தல் குறிப்பிடப்படுவதைப் பொறுத்த வரையில், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வசம் தேர்தலை ஒப்படைப்பதென்ற உச்ச நீதிமன்ற முடிவை ஏற்றுக்கொள்வதில் அல் கோர் இன் "நடைமுறையை மதிக்கும்" பண்பை தான் பாராட்ட வேண்டும்.

உண்மையில் புளோரிடாவின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் எடுத்த 5-4 முடிவானது, வெகுஜனங்களின் வாக்குகளை மற்றும், சகல வாக்குகளும் நியாயமாக எண்ணப்பட்டிருந்தால், வெகுஜன வாக்குகளை இழந்திருந்த ஒரு தனிநபரை பதவியில் நியமித்தது. இந்த ஜனநாயக கேலிக்கூத்தில் விளைந்த விளைவுகளில் ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசியலமைப்புரீதியிலான உரிமை அமெரிக்க மக்களுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மோசடி, ஒரு மாகாண நீதிமன்றத்தின் பின் அறையில் நடக்கவில்லை, மாறாக அந்நாட்டின் உயர்மட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

டிசம்பர் 2000 க்கு முன்னரே, புஷ் vs கோர் என்ற முடிவு வருவதற்கு முன்கூட்டியே, உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் குறிப்பிடுகையில், “பாரம்பரிய முதலாளித்துவ ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை உடைப்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தளவிற்கு தயாராகி உள்ளது,” என்பதை இந்த முடிவு வெளிப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இறுதியில், உச்சநீதிமன்றத்தின் அப்பட்டமான அரசியல் நடவடிக்கை ஜனநாயக கட்சி மற்றும் கோரிடம் இருந்தோ, அல்லது ஒட்டுமொத்தமாக ஊடங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்தோ எந்த கடுமையான எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. அந்நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் எழுதியவாறே, இறுதி முடிவு, "ஜனாதிபதி தேர்தல் மீதான ஒரு ஜனநாயக நீதிமுறைக்கு ஆளும் உயரடுக்குகளுக்குள் எந்த முக்கிய மதிப்பும் இல்லை என்பதை அம்பலப்படுத்தியது.”

கடந்த ஒன்றரை தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் ஆளும் வர்க்கம் அதன் நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயகம் மீதான அதன் அலட்சியத்தை எடுத்துக்காட்டியுள்ளது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து, புஷ் மற்றும் பின்னர் ஒபாமாவின் கீழ், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பது பெருமளவிலான ஜனநாயக-விரோத நடவடிக்கைகளைக் கொண்டு, அதாவது தேசிய பாதுகாப்பு சட்டம்; உத்தரவாணையின்றி பாரிய உளவுபார்ப்பு; வழக்கு விசாரணையின்றி காலவரையின்றி சிறையிலடைப்பது; சித்திரவதை மற்றும் "அசாதாரணரீதியில் வேறுநாட்டிடம் ஒப்படைத்தல்"; அமெரிக்க பிரஜைகள் உள்ளடங்கலாக, டிரோன் படுகொலை; இராணுவத்தை அதிகரித்தளவில் உள்நாட்டில் பயன்படுத்துவதை மேற்பார்வை செய்யும் ஓர் இராணுவ நீதித்துறையான உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வடக்கு கட்டளையக துறையை ஸ்தாபித்தமை ஆகியவற்றால் நியாயப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொலை செய்யும் இராணுவமயப்பட்ட பொலிஸ் படையையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் நடைமுறையைப் பொறுத்த வரையில், உச்சநீதிமன்ற முடிவுகள் வாக்குரிமை சட்டத்தைப் பலவீனப்படுத்தி உள்ளதுடன், வறிய, முதிய மற்றும் சிறுபான்மை வாக்காளர்களது வாக்குரிமையைப் பறிக்கும் நோக்கில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளை அவசியப்படுத்தும் மாநில சட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. முந்தைய சிறிய சிறிய குற்றங்களுக்காக (வாக்களிக்க தகுதியுடைய ஒவ்வொரு 40 வாக்காளர்களில் ஒருவர்) சுமார் 6 மில்லியன் குடிமக்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். 2010 இல் Citizens United என்ற முடிவு, பெருவணிகங்கள் வேட்பாளர்களுக்கும் மற்றும் அவர்களது அரசியல் நடவடிக்கை குழுக்களுக்கும் நிதி வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களை நிர்மூலமாக்கியது. 2016 இல் 7 பில்லியன் டாலருக்கும் அதிகமாக, தொகுத்து கூறுவதானால், 2012 இல் செலவிடப்பட்டதை விட இரண்டு மடங்கு செலவிடப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம்-கட்சி வேட்பாளர்களது பெயர்கள் வாக்குச்சீட்டில் தெரிவதிலிருந்து அவர்களைத் தடுக்க, பத்து நூறாயிரக் கணக்கான கையெழுத்துக்களை அவர்கள் சேகரிக்க வேண்டும் என்ற அவசியப்பாடுகள் உள்ளடங்கலாக, சகலமும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊடகங்களோ, உத்தியோகப்பூர்வ "விவாதம்" பாதுகாப்பாக ஆளும் வர்க்கத்திற்கு ஏற்புடைய குறுகிய கட்டமைப்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேலை செய்கின்றன.

“அமெரிக்க ஜனநாயகம்" என்பது நிதியியல் செல்வந்த தட்டு மற்றும் இராணுவத்தால் கட்டுப்படுத்தப்படும் இரண்டு கட்சிகளால் மேற்பார்வை செய்யப்படும் வெறும் கூடாக உள்ளது. "மாற்றத்தை நீங்கள் நம்பலாம்" என்று வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த ஒபாமா நிர்வாகத்துடனான அனுபவம், மில்லியன் கணக்கானவர்களது வாக்குகள் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் மீது எந்த பாதிப்பும் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த சீரழிவானது, கிளிண்டன் பரம்பரையின் வழிவந்த ஒரு மில்லியனருக்கும் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி நட்சத்திரமும் ஊகவணிக நில/கட்டிட விற்பனைத்துறையின் ஒரு பில்லியனருக்கும் இடையிலான ஒரு போட்டியாக, 2016 தேர்தலில் முதிர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது.

ட்ரம்ப அவரே கூட ஒரு நோய்பீடித்த சமூக மற்றும் அரசியல் அமைப்புமுறையின் விளைபொருளாக, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இன் தகுதிவாய்ந்த வழிதோன்றலாக உள்ளார். கிளிண்டனைப் பொறுத்த வரையில், அதே நோயின் வெறுமனே மற்றொரு வெளிப்பாடாவார், அவர் ஒரு நீண்ட மற்றும் கேடுகெட்ட வரலாறைக் கொண்டுள்ள மக்கார்த்தியிச மழுப்பல்களுடன் சேர்ந்து, அவர் கணவருக்கு எதிராக குடியரசு கட்யினரால் பயன்படுத்தப்பட்ட அதே முறைகேடு-வாய்சவுடால்களின் அடிப்படையில் அவரது பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்..

வோல் ஸ்ட்ரீட் உடனான கிளிண்டனின் தொடர்புகளை அம்பலப்படுத்தும் கசியவிடப்பட்ட மின்னஞ்சல்களைக் குறித்த எந்தவித கேள்விக்கும் ஜனநாயகவாதிகளின் பாகத்திலிருந்து வரும் விடையிறுப்பு என்னவென்றால் அதெல்லாம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் கைவேலை என்று முற்றிலும் ஆதாரமற்ற கூற்றுகளை நோக்கி விடயத்தை மாற்றிவிடுவதாக உள்ளது. அவர் தேர்தலை சட்டப்பூர்வமானதாக ஏற்றுக் கொள்ள போவதில்லை என்று ட்ரம்ப் கூறுகின்ற வேளையில், கிளிண்டன் தோற்கடிக்கப்பட்டால் தேர்தல் நடைமுறைகளில் ரஷ்யா குறுக்கீடு செய்ததனால் தான் இவ்வாறு நடந்ததென ஜனநாயக கட்சியினர் அறிவிப்பார்கள்.

இந்த ஒட்டுமொத்த நிகழ்முறைக்குப் பின்னால், அடிப்படை பிரச்சினைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன அல்லது உதறிவிடப்படுகின்றன. அமெரிக்க "ஜனநாயகத்தின்" யதார்த்தத்தை ஒருவேளை இந்த உண்மையைக் கொண்டு தொகுத்துக் கூறலாம், அதாவது நவம்பர் 8 க்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவம் மத்தியக் கிழக்கில் ஒரு பாரிய இராணுவ தீவிரப்பாட்டைத் தொடங்கியுள்ளது, மேலும் கொள்கையை மக்கள் தீர்மானிப்பதற்கு தேர்தல்களே பிரதான வழிவகையாக கூறப்படுகின்ற நிலையில், அந்த தீவிரப்பாட்டின் விளைவுகளைக் குறித்து தேர்தலில் எந்த குறிப்பிடத்தக்க விவாதமும் இல்லை.

இந்த ஜனநாயக நெருக்கடியானது, வெளிநாட்டில் போர் மற்றும் உள்நாட்டில் சிக்கனத் திட்ட கொள்கையை முன்னெடுக்க தீர்மானகரமாக உள்ள ஆளும் வர்க்கத்தால் மேற்பார்வை செய்யப்படுகின்ற அமெரிக்க முதலாளித்துவத்தினது சீரழிவின் விளைபொருளாகும்—அதுபோன்றவொரு கொள்கைக்கு ஜனநாயக ஆட்சி வடிவங்கள் மீது இன்னும் அதிகமான தாக்குதல்கள் தேவைப்படுகின்றன. நவம்பர் 8 இல் என்ன நடந்தாலும், அது எதையும் தீர்க்கப் போவதில்லை என்பதோடு ஒரு நீடித்த அரசியல் நெருக்கடிக்கு மட்டுமே களம் அமைக்கும், அதை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.