ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

දෙමල ජාතිකවාදියෝ ක්ලින්ටන්ගේ ජයග‍්‍රහනය පතා පූජා පවත්වති

தமிழ் தேசியவாதிகள் கிளிண்டனின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர்

By Saman Gunadasa 
11 November 2016

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரனதும் தலைமையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் வெற்றிக்காக பிரார்த்தித்து நவம்பர் 3 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலில் 1,000 தேங்காய்களை உடைத்தும், புனித மேரி தேவாலயத்தில் ஆயிரம் மெழுகு வர்த்திகளை ஏற்றியும் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

இப்போதைய நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுமார் 1,000 தளங்களில் நூறாயிரக்கணக்கிலான படையினர்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்ற உண்மை நிலையிலும், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான தனது போர்வெறி பிரச்சாரத்தை ஏககாலத்தில் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையிலும், சிரியாவில் “பறக்கத் தடை விதிக்கப்பட்ட வலயம்” அமைக்க ஹிலாரி கிளிண்டன், தனது ஆதரவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ள நிலையிலும், தமிழ் தேசியவாதிகள் எந்தவித தயக்கமுமின்றி போர் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளருக்கு தமது ஆதரவை வளங்குகின்றனர்.

“இலங்கையில் தமிழர்கள்" எனப் பெயரிடப்பட்டிருந்த பதாகை ஒன்றில், "ஹிலாரி கிளிண்டனுக்காக எங்கள் பிரார்த்தனை" என்ற வாசகத்தோடு இவர்கள் இந்த பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.

“கிளிண்டனுக்கான தமிழர்கள்” என்ற பெயரில் அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அமைப்பின் பங்குதாரர்களாகவே ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு வெற்றி கிட்டுவதற்காக சிவாஜிலிங்கமும், அனந்தி. சசிதரனும் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சிவாஜிலிங்கம் கருத்துதெரிவிக்கையில், "இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் ஹிலாரியின் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.  ஹிலாரியின் வெற்றி இலங்கையில் சிறுப்பான்மையினராக உள்ள தமிழ் மக்களுக்கு மிக முக்கியமானது. இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவின் தலையீடு முக்கியம்" அதனாலேயே தாம் இந்த பிரார்த்தனையை ஏற்பாடு செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் தலையீட்டினால் மட்டுமே ஒரு அரசியல் தீர்வை பெற முடியும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என சிவாஜிலிங்கம் கூறுவது முழுப்பொய்யாகும். மாறாக ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சசிதரன், சிவாஜிலிங்கம் போன்ற கூட்டமைப்பு தலைவர்களே இத்தகையதொரு அரசியல் வேலைத்திட்டத்தோடு, அமெரிக்க ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். "அரசியல் தீர்வாக" இவர்கள் சூத்திரப்படுத்தியிருப்பது, தமிழ் முதலாளிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை சுரண்டுவதற்கு கொழும்பு ஆட்சியாளர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவதையே ஆகும்.

வாஷிங்டன் தலையிட்டு, கொழும்பு அரசாங்கம் தமக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கும் கூட்டமைப்பு தலைவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்காக அது நடத்தும் போர்களுக்கும், போர்த்தயாரிப்புகளுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, அவர்கள் அமெரிக்க சார்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு பூரண ஆதரவை வழங்குகின்றனர்.

அமெரிக்கா, தமிழ் மக்களின் “ஜனநாயக உரிமைகள்” பற்றி கவலை கொண்டுள்ளது என சிவாஜிலிங்கம், சசிதரன் உள்ளிட்ட கூட்டமைப்பு தலைவர்கள் கூறுவது இன்னுமொரு பொய்யாகும். அமெரிக்காவிலும், அதேபோல தான் ஆக்கிரமித்த நாடுகளிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஜனநாயக உரிமைகளை அழித்தொழித்ததே கடந்த இரண்டரை தசாப்தங்களாக அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அரசியல் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. கொழும்பு அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த போருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் வாஷிங்டனின் முழு ஆதரவை கொடுத்திருந்தது.

2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கித் தள்ளி, இலங்கையை சீனாவிற்கு எதிரான போர் திட்டத்துடன் கட்டிப்போடுவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒபாமா நிர்வாகத்தின் 2008 முதல் 2012 வரை அதன் வெளிவிவகாரச் செயலரான ஹிலாரி கிளின்டனுடனும் நெருக்கமாக செயற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக, இறுதி இராணுவத் தாக்குதலின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு, 2009 இலேயே ஒபாமா நிர்வாகத்தின் வெளிவிவகாரச் செயலரான ஹில்லாரி கிளிண்டன் நடவடிக்கை எடுத்திருந்தார். போர்க் குற்றங்கள் அல்லது மனித உரிமைகள் சம்பந்தமாக அவருக்கு கவலை இருந்ததால் அவர் அப்படிச் செய்யவில்லை. சீனாவின் எழுச்சியை நிறுத்துவதற்காக அதை தனது புவி அரசியல் ஆதிக்கத்திற்கு அடிபணியச் செய்ய தீர்மானித்த வாஷிங்டன், பெய்ஜிங்கை தனிமைப்படுத்தப்படுத்துவதன் பேரில் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர தாக்குதலில், உள்நாட்டு யுத்தவேளையில் இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த உறவுகளை தகர்த்து, இலங்கையை தனது சுற்றுப்பாதையில் வைத்துக்கொள்வது அவசியமாக பார்க்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி, இலங்கையிலும் உலகம் முழுவதும், தமிழ் தேசியவாதிகளின் அமைப்புக்கள், மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு, வாஷிங்டன் ஊக்குவித்த மோசடி பிரச்சாரத்துடன் ஒரேயடியாக அணிதிரண்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியமானது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய உலகின் பிரதான சக்தி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கிளின்டன், போர்க் குற்றங்கள் தொடர்பாக பேர்போனவர் என்பதையும் அவர்கள் நன்கு அறிவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமெரிக்காவுடன் சேர்ந்து இன்னும் முன்னோக்கி நகர்ந்து, இராஜபக்ஷ அரசாங்கத்தை நீக்கி, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக அமர்த்தும் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முற்றிலும் ஆதரவு கொடுத்தது. சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், சீனவில் இருந்து தூர விலகுவதற்கான வெளியுறவுக் கொள்கையை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார். அதற்கு பிரதியுபகாரமாக, போர் குற்றங்களை மூடி மறைக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் ஒரு தீர்மானம் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. வாஷிங்டனின் இந்த நடவடிக்கைகளுக்கு, தமிழ் தேசியவாதிகள் முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

தமிழ் முதலாளித்துவ தலைவர்கள், இலங்கையில் மட்டுமன்றி உலக அளவிலும் தொழிலாளர்களும் ஏழைகளும் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகளை முழுமையாக மூடி மறைக்கின்றனர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், பாசிச வாய்ச்சவடால் விட்டு ஆட்சிக்கு வர முயற்சிக்கும் கோடீஸ்வரர். ட்ரம்ப் போலவே ஊழல் நிறைந்த, ஆனாலும் அரசியல் ஸ்தாபகம், இராணுவம் மற்றும் வங்கியாளர்களில் கணிசமான பகுதியினரின் ஆதரவைப் பெற்ற கிளின்டன், ரஷ்யாவுக்கு எதிரான ஆத்திரமூட்டலை தூண்டிவிடுவதை பிரச்சாரத்தின் மையத்திற்கு கொண்டுவந்தார். இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும், மூன்றாம் உலக போர் ஆபத்தை துரிதப்படுத்தும் இராணுவ ஆத்திரமூட்டல் உக்கிரமடையும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் எரியும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அன்றி, மாறாக, நெருக்கடி மிக்க முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாத்து, உழைக்கும் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை திணிக்கவும் உலகப் போர் ஆபத்துத்துக்குள் தள்ளிவிடுவதற்கும் நன்கு அறிந்து சேவையாற்றும் பங்குதாரர்களாகவே, தமிழ் தேசியவாதிகள் இவ்வாறு ஏகாதிபத்திய பூகோள அரசியல் நலன்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலைமையில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், யாழ் பொது நூலக உணவக மண்டபத்தில், நவம்பர் 20 அன்று மாலை, "ஏகாதிபத்திய போரும் தமிழ் தேசியவாதமும் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் நடத்தும் கூட்டம் மிகவும் முக்கியமானது. தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட புத்திஜீவிகளை கூட்டத்தில் பங்கேற்குமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.