ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A reply to Tamil-nationalist slanders against the World Socialist Web Site
An Open Letter to TamilNet

உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான தமிழ்-தேசியவாதிகளின் அவதூறுகளுக்கு ஒரு பதில்

TamilNet க்கு ஒரு பகிரங்கக் கடிதம்

By K. Nesan and V. Gnana
17 February 2016
TamilNet ஆசிரியர்களுக்கு,

“தமிழர்களும் மூன்றாம் உலகப் போரும்” என்ற தலைப்பில் உங்கள் பத்திரிகையில் வெளியாகியிருந்த கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிராக கூறப்பட்டிருந்த அடிப்படையற்ற அவதூறுகளை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி உலக சோசலிச வலைத் தளத்தின் சார்பாக நாங்கள் இதை எழுதுகின்றோம். கொழும்பில் இருக்கும் இனவாத-சிங்கள-தலைமையிலான அரசாங்கம் இனப்படுகொலை நடத்துவதற்கு வசதியாக உலக சோசலிச வலைத் தளம் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்து வேலைசெய்வதாக நீங்கள் கூறியிருப்பது ஒரு அவலட்சணமான இட்டுக்கட்டல் என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.

“ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினையை திசைதிருப்பவும் மட்டுப்படுத்தவுமான ஒரே புள்ளியில் முழுமையாகக் கவனத்தை குவிப்பதற்காக அத்தனை பக்கங்களில் இருந்தும் முகாமைகள் அவசர அவசரமாய் நிலைநிறுத்தப்படுகின்றன என்றால், கொழும்பை மையமாகக் கொண்ட இனப்படுகொலை அமைப்பை வலுப்படுத்தி, அதன்மூலமாக, வரவிருக்கும் போரில் அதனையும் அதன் இராணுவத்தையும் பயன்படுத்துவதற்கு அல்லது பிராந்தியத்தில் காலடி எடுத்து வைப்பதற்கான நோக்கத்துடன் ஆகும்” என்று உங்கள் கட்டுரை கூறுகிறது.

நீங்கள் “பல தசாப்தங்களாக, அமெரிக்காவின் நலன்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த கொழும்பு மையமான ஒரு இனப்படுகொலை அரசுக்கு எதிர்மறையாக வசதி செய்து தந்து கொண்டிருந்தவர்களை” தாக்குகின்றீர்கள். நீங்கள் ”ஈழத் தமிழர்கள் தங்களது தேச உரிமைகோரலைக் கைவிட வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளமும், மூன்றாம் உலகப் போருக்கான பெருநிறுவன ஏகாதிபத்தியங்களும் இவை இரண்டுமே கோருகின்றன என்றால், அங்கே கண்டிப்பாய் ஏதோ கோளாறு இருந்தாக வேண்டும்” என்று தொடர்கின்றீர்கள்.

உங்கள் ஆய்வில் இருக்கும் “கோளாறு” என்னவென்றால் தமிழ் தேசியவாதக் கட்சிகள் கொழும்பு ஆட்சிக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் வழங்கும் ஒத்துழைப்பை மூடிமறைப்பதற்காக உலக சோசலிச வலைத் தளத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் நீங்கள் உருவாக்கும் அவதூறான கலப்பாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தினை பிரசுரிக்கின்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதனது இலங்கைப் பிரிவான, சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றின் நிலைச்சான்று நன்கறியப்பட்டதாகும். ஏகாதிபத்தியம் மற்றும் கொழும்பு ஆட்சிக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் சளைப்பில்லாத எதிர்ப்பையும், தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை அது சமரசமின்றி பாதுகாத்து நிற்பதையும் உங்களது முந்தைய கட்டுரைகளில் நீங்களே ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டிருந்தீர்கள்.

மாசி மாதம் 2009ல் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கே. ரத்னாயக்காவின் அறிக்கையினை சாரப்படுத்தி உங்களது கட்டுரையில் நீங்கள் தெரிவித்தீர்கள்: ”இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியை சேர்ந்த கட்டுரையாசிரியரின் எண்ணங்கள், அவை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை “தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக” பார்க்கின்ற போதிலும் கூட, பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை மட்டுமே கருத்தில் கொள்கின்ற சக்திகளின் மூலம் போர் எவ்வாறு இலங்கையின் மீது திணிக்கப்படுகிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. ….. ஒரு தொழிலாள வர்க்க அணுகுமுறைக்கும், போரின் மூல காரணமான இலாப நோக்கு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இந்தக் கட்டுரையாசிரியர் ஆலோசனை சொல்கிறார்.”

என்ன அதற்குப்பின் மாற்றம் கண்டிருப்பது என்றால், சோசலிச சமத்துவக் கட்சியினதும், உலக சோசலிச வலைத் தளத்தினதும் நிலைப்பாடு அல்ல. 2009 மே மாதத்தில் தமிழ்-பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், நீங்கள் பாதுகாக்கின்ற தமிழ் தேசியவாதக் கட்சிகள் ஏகாதிபத்தியத்திடம் சரணாகதி அடைந்து, நீங்கள் “கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு இனப்படுகொலை அரசு” என்று அழைப்பதுடன் இணைந்து கொண்டுள்ளன. அமெரிக்க ஆதரவு ஆட்சிமாற்ற நடவடிக்கையானது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவை அதிகாரத்தில் அமர்த்திய ஆண்டில் இருந்து கொழும்புக்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய கருவிகளாக அவர்கள் உருவெடுத்திருக்கின்றனர்.

நீங்களும் தமிழ் தேசிய வாதக் கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் முதலாளித்துவ நலன்களில் இருந்து சோசலிச சமத்துவ கட்சியினை ஒரு வர்க்க பெரும் பிளவு பிரிக்கின்றது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலின் போது, ஆட்சியிலிருந்த மகிந்த இராஜபக்ஷ, அமெரிக்காவின் வேட்பாளரான சிறிசேன இருவரையுமே இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்த்தது. ஆனால் மறுபக்கத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்போ, முல்லைத்தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகளது போராளிகள் மீதும் இறுதிக்கட்ட படுகொலை நடத்தப்பட்டபோது இராஜபக்ஷவின் போர் அமைச்சராக செயல்பட்ட சிறிசேனவுக்கு வாக்களிப்பதற்கு அழைப்பு விடுத்தது.

அமெரிக்காவின் சிறிசேன ஆதரவு வாய்வீச்சை எதிரொலித்து, தமிழ் தேசிய கூடமைப்பு ”ஜனநாயக மதிப்பீடுகள், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விழுமியங்களுக்காக” போராடுவதாகக் கூறி சிறிசேனாவை உத்தியோகபூர்வமாக ஆதரித்தது. அதன் தலைவரான இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு சந்தேகமும் இன்றி “மைத்ரிபால சிறிசேன நாட்டை ஒரேதேசமாகக் கொண்டு வருவார் என்று நாங்கள் கருதுகிறோம்.” என்று அறிவித்தார். சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தின்” பகுதியாக, சீனாவுடன் இராஜபக்ஷ அபிவிருத்தி செய்திருந்த உறவுகளை துண்டிக்கின்ற பொறுப்பு அளிக்கப்பட்டிருந்த, கொழும்பில் இருந்த வாஷிங்டனின் ஆளுக்கு கூட்டமைப்பு அளித்த ஆதரவிற்குப் பின்னால், சிறு தமிழ் தேசியவாதக் குழுவாக்கங்கள் அனைத்தும் தங்களை அணிவகுத்துக் கொண்டன.

கூட்டமைப்பின் கீழ்ப்படிவுக்கு வெகுமதியாய் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பரிந்துரைக்கப்பட்டார். கூட்டமைப்பு சிறிசேனவின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளையும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க அவர் மறுத்ததையும் ஆதரித்தனர். சிறிசேனவை ஆதரிப்பதற்கான தமது சூழ்ச்சிகளில், கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தங்களது சொந்த ஆதரவாளர்களுக்கு எதிராக சித்திரவதை பயன்படுத்தப்பட்டதையும் கூட மூடிமறைத்தனர். பாதிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு வெளியில் அனுப்பி வைப்பதன் மூலம் அரசாங்கத்தின் கரங்களில் அவர்கள் கொடுமையாக நடத்தப்பட்ட செய்தி வெளிவராமல் தடுத்தனர்.

கொழும்பு ஆட்சியின் மற்றும் தமிழ் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகளுக்கு “இடது” முலாம் பூசுவதற்கான உங்கள் முயற்சிகள் தகர்ந்தது கொண்டிருக்கின்றன. அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்கள் சிறிசேனவின் சிக்கன நடவடிக்கை திட்டத்திற்கு எதிராக எழுந்திருக்கின்றன. உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான உங்கள் தாக்குதல் பிரசுரமாகிய சில நாட்களுக்கு முன்னர்தான், காணாமல் போன தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள முயற்சித்த தமிழ் மக்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சம்பந்தனும் மற்ற கூட்டமைப்பு நிர்வாகிகளும் கிளிநொச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் தலையிடுவதற்கு போலீஸாரை வரவழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சிறிசேன மற்றும் அவரது தமிழ் தேசியவாதக் கூட்டாளிகளது பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் அதிகரித்துச் செல்கின்ற கோபத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கடினமாக பிரயத்தனப்படுகிறீர்கள், அத்துடன் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் போட்டியின் காரணத்தால் முன்வைக்கப்படுகின்ற உலகப் போரின் அபாயம் குறித்தும் உங்களுக்குத் தெரியும்.

உலகப் போர் அபாயத்தைக் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்ச்சியாக எச்சரித்து வந்திருக்கிறது என்பதோடு, சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தின் அடிப்படையில் உலகப் போரைத் தடுப்பதற்கான ஒரு உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும் போராடி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, உக்ரேன் மற்றும் பால்கன்களிலான ஏகாதிபத்தியப் போர்களையும் மற்றும் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தை” யும் அது எதிர்த்து வந்திருக்கிறது. “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அதன் அறிக்கை, அணுஆயுதப் போரின் அபாயத்தைக் குறிப்பிட்டு பின்வருமாறு அறிவிக்கிறது: “சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தலையிடவில்லை என்றால் இன்னுமொரு ஏகாதிபத்திய இரத்தஆறு சாத்தியம் மட்டுமல்ல, தவிர்க்கமுடியாததும் ஆகும்.”

மறு பக்கத்தில் உங்கள் நிலைப்பாடோ, முற்றிலும் முரண்பாடான, ஏகாதிபத்தியத்தியம் வீசியெறியும் ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக அதன் சேவகர்களாக வேலை செய்கின்ற தமிழ் தேசியவாதிகளது மூலோபாயத்தை பாதுகாக்கும் பிற்போக்குத்தனமாக இருக்கின்றது. பெரும் சக்திகளின் அரசுகளுக்கு இடையிலான மோதலின் அபாயத்தை சாவகாசமாக நிராகரிக்கும் நீங்கள், “பெருநிறுவனங்களின் ஏகாதிபத்தியம்” மூன்றாவது உலகப் போர் உண்மையில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று என்று திட்டவட்டம் செய்து, இறுதியில் தமிழர்களின் ”உலகளாவிய அணிதிரட்டலுக்கு” அழைப்பு விடுக்கிறீர்கள்.

“முதல் இரண்டு உலகப் போர்கள், பிராந்தியம் மற்றும் ஆதாரவளங்களுக்கான போட்டியில் சக்திகளிடையே சண்டையிடப்பட்டது என்றால், மூன்றாம் உலகப் போர் பல வகைகளிலும் மாறுபட்டதாகும். .... மக்களின் அரசாங்கங்கள் இல்லை மாறாக பெருநிறுவனங்களின் ஏகாதிபத்தியம் தான் இருக்கிறது. உலகின் குறிப்பிட்ட பகுதிகளை நோக்கி விகிதாசார பொருத்தமற்ற நோக்குநிலை கொண்டிருக்கக் கூடிய பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் என்றழைக்கப்படுகின்ற ஸ்தாபகங்களைக் கட்டுப்படுத்துகின்றன. வடிவம்பெற்றிருக்கும் அத்தனை ஸ்தாபகங்களும் உலகெங்குமான மக்களுக்கு எதிராய் மூன்றாம் உலகப் போரை நடத்துவதில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்களுக்கு எதிராய் ஒரு போரைத் தொடுப்பதில், அணு ஆயுதங்களைப் பற்றிக் கவலை கொள்வதற்கு அங்கே ‘அச்சமேதும் மிச்சம்’ இல்லை” என்று நீங்கள் எழுதுகிறீர்கள்.

போர் அபாயத்தை மறுப்பதற்கான வெற்று வார்த்தைகளின் மாயவித்தையாக இது இருக்கிறது. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான முதலாளிகளது உலகளாவிய தாக்குதலை, இலங்கையில் இதைச் செய்ய தமிழ் தேசியவாதக் குழுக்கள் இப்போது உதவிக் கொண்டிருப்பதை ஒரு “உலகப் போர்” என்று சொல்லிக் கடந்து செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்கள். ஆயினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தமிழ் தேசியவாதிகளது கூட்டானது மிக நிதர்சனமான உலகப் போராக இருக்கக் கூடிய ஒன்றுக்கு மேடையமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய போர்கள் அல்லது, பிராந்தியங்களை மற்றும் எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கைவளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான பினாமி மோதல்கள் தொடர்வது மட்டுமல்ல; மாலி மற்றும் லிபியா தொடங்கி ஏமன், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் அத்தோடு உக்ரேன் வரையிலும் உலகத்தின் பெரும்பகுதியை அவை சூழ்ந்து விட்டிருக்கின்றன. இப்போது அவை அணுஆயுதம் கொண்ட பகைவர்களுக்கு இடையிலான அதாவது, ஒருபக்கத்தில் ஏகாதிபத்திய சக்திகள் மறுபக்கத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையிலான போராக அதிகரித்துச் செல்ல அச்சுறுத்துகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் இருக்கக் கூடிய உயர்நிலை அதிகாரிகள் அனைவருமே அணுஆயுதப் போரின் சாத்தியத்தைக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்திய சக்திகளது மூர்க்கமான கொள்கையால் உலகப் போரின் அபாயம் எழுந்துள்ளமையானது, தமிழ் தேசியவாதத்தின் திவால்நிலையில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது. தமிழ் முதலாளித்துவம், நீங்கள் ஆங்கில குரலாக சேவை செய்து வந்த விடுதலைப் புலிகள் உட்பட இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்தான ஆதரவைப் பெறுவதில்தான் தனது முன்னோக்கை எப்போதும் அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள், தமிழர்கள் அல்லாதோரினை இனச்சுத்திகரிப்பு செய்த பகுதிகளில் பிரத்தியோகமான கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான இராணுவ அதிகாரத்தினை பயன்படுத்துவதை தனது முன்னோக்காக கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் கொழும்புக்கும் இடையிலான ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை ஏகாதிபத்திய சக்திகள் ஆதரிக்கும்படி செய்து விடலாம் என்று அது நம்பிக் கொண்டிருந்தது. “பயங்கரவாதத்தின் மீதான போரை” அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்புகளை விடுதலைப் புலிகள் ஒருபோதும் விமர்சித்து கிடையாது, மாறாக ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளுக்கு, குறிப்பாக அமெரிக்க, இந்திய ஆதரவுக்கு விண்ணப்பிப்பதன் மீதே தனது ஒட்டுமொத்த கொள்கைக்கும் அது அடித்தளம் அமைத்துக் கொண்டது.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகள், கொழும்பு ஆட்சியில் ஏகாதிபத்திய ஆதரவைப் பெற்றிருந்த புள்ளிகளை நோக்கி வெளிப்படையாக தகவமைத்துக் கொண்டனர். முதலில் அவர்கள் தளபதி சரத் பொன்சேகாவை தழுவிக் கொண்டனர். முல்லைத்தீவில் அப்பாவித் தமிழ்மக்கள் மீதும் விடுதலைப் புலிகளது போராளிகள் மீதும் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட படுகொலையின் போது அவர் தான் தளபதியாக இருந்தார் என்றபோதும், 2010 ஜனாதிபதித் தேர்தலில் அவரே அமெரிக்க ஆதரவு வேட்பாளராக இருந்தார். அதன்பின் சென்ற ஆண்டில் சிறிசேனவை சுற்றி ஏற்பாடான ஆட்சி-மாற்றத்திற்கான அமெரிக்க ஆதரவுப் பிரச்சாரத்தை தழுவிக் கொண்டனர்.

ஏகாதிபத்தியத்திற்கும் தமிழ் முதலாளித்துவத்திற்கும் இடையிலான ஒரு பொது மூலோபாயத்தை வகுப்பதற்கு இன்னும் கூட நீங்கள் முனைந்து கொண்டிருக்கிறீர்கள். கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவான தமிழ் மக்கள் பேரவையினை (TPC) நோக்கி, ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகளை திருத்துவதற்கேற்ற உடன்பாடுகளை எட்ட ஆலோசனையளிக்கிறீர்கள்: “சக்திகளை வழிக்குக் கொண்டுவருவதற்கு உலகளாவ அணிதிரட்டுவதை நோக்கி TPC இன் தரப்பில் இருந்து எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் முழுமனதுடன் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால் TPC க்காக காத்திருக்காமல் உலகத் தமிழர்கள் யதார்த்தங்களுக்கு விழித்துக் கொள்ள வேண்டும். …. உலகத் தமிழர்கள் மூன்றாம் உலகப் போரின் கூட்டாளிகளில் இருந்து சுயாதீனமாய் தங்களது சொந்த வேலைத்திட்டத்தை கொண்டிருந்தாக வேண்டும்.”

தமிழர்களை “உலகளாவ அணிதிரட்டுவதற்கான” உங்களின் முன்மொழிவு ஒரு சுயாதீனமான மூலோபாயம் இல்லை, மாறாக தமிழ் தொழிலாளர்களை பிற தேசியங்களை சேர்ந்த தமது வர்க்க சகோதர, சகோதரிகளிடம் இருந்து துண்டிக்க வடிவமைக்கப்பட்டிருக்கின்ற ஒரு சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிப்பொறியே ஆகும். அதன் நாசகரமான விளைவுகளுக்கு போரின் இறுதி மாதங்களில் தமிழ் தேசியவாதிகளால் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உதாரணம் காட்டுகின்றன. முல்லைத்தீவில் தமிழ் மக்களைப் படுகொலை செய்யக்கூடாது என கொழும்புக்கு உத்தரவிடும்படி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கும், ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெலுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கும், மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கும் அவர்கள் வைத்த கையாலாகாத்தனமான கோரிக்கைகள் செவிடர் காதில் சங்கு ஊதியதாய் ஆகின.

ஏகாதிபத்தியத்திற்கு வைத்த இத்தகைய விண்ணப்பங்கள் அனைத்தும் முல்லைத்தீவு படுகொலையை தடுக்கத் தவறின என்பதற்கு பின்னரும், அதே திவாலான கொள்கையையே, மூன்றாம் உலகப் போரை நோக்கிய முனைப்பை நிறுத்துவதற்கு என்று சொல்லி நீங்கள் முன்வைக்கிறீர்கள். சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் போருக்கு எதிரான ஒரு இயக்கம் எழுந்து விடாமல் தடுப்பதும், கொழும்புடனும் ஏகாதிபத்திய சக்திகளுடனும் பேரம்பேச வசதிசெய்து தருவதும்தான், 2009 இல் போலவே, இப்போதும், இந்தச் சூழ்ச்சியின் பிரதான நோக்கமாக இருக்கிறது.

சிங்கள விரோத இனவெறியையும், வரலாற்றுப் பொய்களையும் உதவியாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கும் ஏகாதிபத்தியத்திற்கான அதன் எதிர்ப்பை ஒடுக்குவதற்குமே நீங்கள் முனைகிறீர்கள்.

தமிழர்களை மட்டும் உலகளாவ அணிதிரட்ட அழைப்பதற்கு நியாயம் கற்பிப்பதற்காக நீங்கள் எழுதுகிறீர்கள்: “ஐரோப்பிய காலனித்துவம் முதலில் அமைப்புமுறை-உருக்குலைந்திருந்த தென் இந்திய தமிழர்களை கொத்தடிமைக் கூலிகளாக கொண்டு சென்றது. அதன்பின், அமெரிக்க தலைமையிலான மேற்குலகும் மற்றும் பிரிட்டிஷ் இராஜ்ஜியத்திற்கு அடுத்து வந்தவர்களும் கூட்டாளிகளாய் நடத்திய பல தசாப்த கால இனப்படுகொலை, நவீன முறையில் அடிமைப்பட்ட ஈழத்தமிழர்களின் புலம்பெயர்ந்த அகதிகள் சமூகத்தை உருவாக்கியது. உலகின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் அரசு அற்றவர்களாய் ஆயினர். சிங்கள தேசம் இத்தகைய நிகழ்வுகளின் வழி ஒருபோதும் பயணிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.”

தமிழ் மக்கள் மட்டும் தான் ஒடுக்கப்பட்டார்கள், சிங்கள மக்கள் ஒடுக்கப்படவில்லை என்பதான கூற்று ஒரு பிற்போக்குத்தனமான பொய்மைப்படுத்தலாகும். இலங்கையின் அத்தனை தொழிலாளர்களும் மற்றும் கடும் உழைப்பை மேற்கொண்டு வாழும் மக்களும் முதலில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தாலும், 1948 இற்கு பின்னர் சம்பிரதாயமாக சுதந்திரமடைந்த இலங்கை அரசினாலும் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர். சிங்கள மக்களும் ஒடுக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் மறுப்பதன் பின்னால், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துகின்ற நோக்கமும் ஏகாதிபத்தியத்திற்கான அதன் எதிர்ப்பை மழுங்கடிக்கின்ற நோக்கமுமே இருக்கின்றன.

கொழும்பில் இருந்த ஆட்சியை விடுதலைப் புலிகளுக்கு நேரெதிராய் நிறுத்திய இலங்கையின் உள்நாட்டுப் போரானது, இறுதி ஆய்வில் தொழிலாளர்களையும் கிராமப்புற இளைஞர்களையும் இனரீதியாகப் பிளவுபடுத்தி அவர்களை நசுக்குவதற்கு நோக்கம் கொண்டிருந்த இலங்கை முதலாளித்துவத்தின் அத்தனை கன்னைகளது ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியே ஆகும்.

கொழும்பு ஆட்சி, தமிழ் மக்களை பாரபட்சப்படுத்தி அவர்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரைத் தொடுத்த அதேசமயத்தில், சிங்களத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது போராட்டங்களையும் அது தயவுதாட்சண்யமற்று ஒடுக்கியது. 1971 இல் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையில் கிராமப்புற இளைஞர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது பல பத்தாயிரக்கணக்கிலான சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சுதந்திர சந்தைக் கொள்கைகளுக்கு எதிரான 1980 பொது வேலைநிறுத்தத்தின் போது 100,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் மொத்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதன் பின்னர் 1989ல் இன்னொரு படுகொலையையும் கொழும்பு நடத்தியது. அதில் கொல்லப்பட்ட 60,000 பேரில் பெரும்பான்மையானோர் சிங்கள கிராமப்புற இளைஞர்களாவர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் எதிரான போராட்டத்தில் இந்திய துணைக்கண்டமெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற முன்னோக்கின் அடிப்படையில், சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான கொழும்பு ஆட்சியின் அரசியல் குற்றங்களை தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான உங்களது அவதூறுகள், தடுப்பரண்களின் மறுபக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் நேரெதிர் தரப்புடன் நீங்கள் நிற்பதையே மீண்டும் ஒருமுறை உறுதி செய்கின்றது.

தங்கள் உண்மையுள்ள

க.நேசன்

வ. ஞானா