ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The real issues in the 2016 US elections

2016 அமெரிக்க தேர்தலில் உள்ள நிஜமான பிரச்சினைகள்

Patrick Martin
15 August 2016

தேர்தல் நாளுக்கு வெறும் 12 வாரங்களே உள்ள நிலையில், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டனும், டோனால்ட் ட்ரம்பும் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரி பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் ட்ரம்பும் கிளிண்டனும் அவர்களின் பிரச்சாரவாதிகளால் பொருளாதார கொள்கை மீதான பிரதான உரைகள் என்று கூறப்படும் உரைகளை வழங்கினார்கள். அவர்கள் அமெரிக்க முதலாளித்துவ அரசியலைக் குணாம்சப்படுத்தும் சொல்லாடல்கள் மற்றும் வலதுசாரி உதிரித்திட்டங்களைக் கடந்து செல்லவில்லை. செல்வந்தர்களுக்கு இன்னும் அதிக வரி குறைப்புகளுக்கு ட்ரம்ப் அழைப்புவிடுத்தார். அமெரிக்க வரலாற்றிலேயே உழைக்கும் மக்களிடமிருந்து பணக்காரர்களுக்கு செல்வவளத்தின் மிகப்பெரிய மறுபகிர்வை மேற்பார்வை செய்துள்ள ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளது ஒரு தொடர்ச்சிக்கு கிளிண்டன் அழைப்பு விடுத்தார்.

சனியன்று மில்வாக்கியில் நடந்த ஒரு புதிய பொலிஸ் படுகொலை அந்நகரில் பரந்த சீற்றத்தை மற்றும் குழப்பங்களைத் தூண்டியது. பொலிஸின் வன்முறை மற்றும் மூர்க்கத்தனம் மீதான எந்தவொரு விமர்சனத்திற்கும் எதிராக, ட்ரம்ப், பொலிஸ் இன் பாதுகாவலரைப் போல பிரச்சாரம் செய்கிறார். கிளிண்டன் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் செல்வவளங்களுக்கு முன்னிலை பாதுகாவலர்களான பொலிஸின் வர்க்கப் பாத்திரத்தை மூடிமறைத்து, அச்சம்பவத்தை தனித்த இனரீதியிலான பிரச்சினையாக சித்தரிக்கிறார்.

அதிகரித்துவரும் ஏகாதிபத்திய போர் அச்சுறுத்துதலைப் பொறுத்த வரையில், திங்களன்று ட்ரம்ப் இன்னும் அதிக அமெரிக்க துருப்புகள் மற்றும் போர்விமானங்களை மத்திய கிழக்கில் நிலைநிறுத்துவதற்கான அவரது திட்டங்களை விவரித்தார். கிளிண்டன் ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு கருவியென வலதிலிருந்து தாக்கி, ஓர் ஆக்ரோஷமான "முப்படைகளின் தலைமைத் தளபதியாக" அவரது நன்மதிப்புகளின் மீது அவர் பிரச்சாரத்தை ஒருங்குவித்துள்ளார்.

இதில் இராணுவ-உளவுத்துறை அமைப்பிடம் இருந்து முன்னொருபோதும் இல்லாதவாறான தலையீட்டால் கிளிண்டன் ஆதரிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் தளபதிகளும், அட்மிரல்களும் மற்றும் உளவாளிகளும் இந்த முன்னாள் வெளியுறவுத்துறை செயலருக்கு அவர்களது ஆதரவை அறிவித்துள்ளனர் மற்றும் அப்பெண்மணியின் நன்மதிப்புகளை தேசிய-பாதுகாப்பு அரசின் ஒரு நம்பகமான பிரதிநிதியாக உறுதிப்படுத்துகின்றனர். குடியரசுக் கட்சியின் மைக்கல் ஹேடன், ஜனநாயகக் கட்சியின் லியோன் பானெட்டா மற்றும் "கட்சிசாராத" மைக்கேல் மோர் ஆகிய மூன்று முன்னாள் சிஐஏ தலைவர்கள் கடந்த வாரம் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி கிளிண்டனின் தகுதிகளை வலியுறுத்தினார்கள்.

அதிகரித்த எண்ணிக்கையிலான குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், பெரும்பாலும் கிளிண்டனின் வெளியுறவு கொள்கை "அனுபவம்" மற்றும் அவரின் போர்நாடும் கண்ணோட்டங்களை மேற்கோளிட்டும், 2002 ஈராக் போரை ஆதரித்து அவர் வாக்களித்தமை வரை பின்னோக்கி சென்றும் பல சந்தர்ப்பங்களில் கிளிண்டனுக்காக அவர்களின் ஆதரவையும், ட்ரம்புக்கு அவர்களின் எதிர்ப்பையும் அறிவித்துள்ளனர்.

பெருநிறுவன கட்டுப்பாட்டிலான இருகட்சி முறையானது, புலம்பெயர்ந்தோரைப் பாரியளவில் கைதுசெய்ய, நாட்டில் நுழையும் முஸ்லீம்கள் மீது தடைவிதிக்க, அமெரிக்க இராணுவத்தைப் பாரியளவில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தும் பாசிசவாத பில்லியனர் ட்ரம்புக்கும், இராணுவவாதம் மற்றும் அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையே போர் முனைவை அறிவுறுத்தும் அரசியல் ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவனங்களது நடைமுறையில் இருப்பதன் வெளிப்பாடாக உள்ள கிளிண்டனுக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அமெரிக்க மக்கள் முன் வைத்துள்ளது.

ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறைக்கும், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையே அங்கே ஒரு பரந்த இடைவெளி அதிகரித்து வருகிறது. ட்ரம்பும் கிளிண்டனும் நவீன வரலாறில் மக்கள் மிகவும் விரும்பாத இரண்டு பிரதான கட்சி வேட்பாளர்களாவார், இதில் ட்ரம்ப் அண்ணளவில் 70 சதவீத மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கருதப்படுகிறது, அதேவேளையில் கிளிண்டன் மீதான விருப்பமின்மை (unfavorability) விகிதம் 55 சதவீதமாக இருக்கிறது. ஞாயிறன்று முதல் பக்க செய்தி அறிக்கை ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட், இளைஞர்களைப் பொறுத்தமட்டில் இன்றியமையாத விதத்தில் கிளிண்டன் அல்லது ட்ரம்ப் ஐ தேர்ந்தெடுப்பதை "ஒரு நகைச்சுவையாக உணர்கிறார்கள்” என குறிப்பிட்டது.

அந்த அறிக்கைக்காக நேர்காணல் செய்யப்பட்ட டஜன் கணக்கான இளம் வாக்காளர்கள் ட்ரம்ப் மீது மனக்குமுறலை வெளிப்படுத்திய அதேவேளையில், கிளிண்டனுக்கு எந்த உற்சாகமான வரவேற்பும் காட்டவில்லை, இந்த வளர்ச்சியை போஸ்ட் "அச்சுறுத்தலானது" என்று குறிப்பிடுகிறது. 2008 ஒபாமா பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்த பிரமைகள் எல்லாம் மறைந்துவிட்டன. போஸ்ட் கருத்துப்படி, அப்பெண்மணி மற்றும் ட்ரம்ப் இருவர் குறித்தும் பேசிய பலரும் அழுத்தமாக கடுமையான வார்த்தைகளைப் பேசினர், அவையாவன: அசகாய வில்லன் (Super villain). துஷ்டர். பச்சோந்தி. இனவாதி. குற்றவாளி. தன்னலவெறி. சுயமோகம். வெறிபிடித்த சமூக விரோதி. பொய்யர். வாய்கூசாமல் … பயங்கரமான பொய் கூறுகிறார். நேர்மையற்றவர். ஏமாற்றமாக இருக்கிறது. அபாயகரமானது. பேரழிவுகரமானது” என்று இருந்தது. எந்த வார்த்தை எந்த வேட்பாளருக்கு பிரயோகிக்கப்பட்டது என்று கூறப்படவில்லை என்றாலும் பெரும்பாலானவை இருவருக்குமே சம அளவில் பொருந்தும்.

இத்தகைய இளம் வாக்காளர்களில் பலர் பேர்னி சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்தை ஆதரித்தார்கள், ஆனால் அவரது அரசியல் புரட்சியானது, உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்ததைப் போலவே, எதிர்ப்புணர்வை ஜனநாயகக் கட்சியின் முட்டுச்சந்துக்குள் திருப்பிவிடுவதை நோக்கமாக கொண்ட ஒரு எரிச்சலூட்டும் மோசடி என்பது நிரூபணமாகி உள்ளது.

Post-ABC கருத்துக்கணிப்புகளுக்குக் கூறிய இளம் வாக்காளர்களில் கால்வாசி பேர், அவர்கள் மூன்றாவது கட்சி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க இருப்பதாக தெரிவித்தனர். USA Today இல் வெளியான வேறொரு ஆய்வில், 35 வயதிற்கு குறைந்த வாக்காளர்களிடையே ட்ரம்புக்கான ஆதரவு வெறும் 20 சதவீதம் மட்டுமே இருந்தது, இது வரலாற்றளவில் ஒரு பிரதான கட்சி வேட்பாளருக்கான மிகக் குறைந்த விகிதமாகும், இத்துடன் இன்னும் அதிகமான இளம் வாக்காளர்கள் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் இருக்க அல்லது குடியரசு கட்சியினரைத் தவிர ஒரு மூன்றாவது கட்சியை ஆதரிக்க திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட “மூன்றாம் கட்சிகள்” இரண்டும், அதாவது சுதந்திரவாதிகளும் (Libertarians) மற்றும் பசுமை கட்சியும், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினருக்கு எந்த மாற்றீட்டையும் முன்வைக்கவில்லை. சுதந்திரவாதிகள் குடியரசு கட்சியினரை விட கூட முதலாளித்துவத்தின் மிக அதீத "சுதந்திர சந்தை" பதிப்பை தழுவியுள்ளனர், அதேவேளையில் பசுமை கட்சியினர் பெருளாதார தேசியவாதத்துடன் சிறியளவிலான சீர்திருத்த முன்மொழிவுகளையும் மற்றும் நுகர்வைக் குறைப்பதற்கான பிற்போக்குத்தனமான அழைப்புகளையும் கலந்து, இலாபகர அமைப்புமுறையைப் பாதுகாக்கின்றனர். பசுமை கட்சியினர் ஆட்சிக்கு வந்திருந்த இடங்களில், அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்ட போர் மற்றும் சிக்கனத் திட்டங்களை ஆதரித்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) அதன் வேட்பாளர்களான ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஜெர்ரி வையிட் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் நைல்ஸ் நிமுத் முன்வைக்கும் ஒரேயொரு பிரச்சாரம் மட்டுமே தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு நிஜமான மாற்றீட்டை வழங்குகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மூன்று அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சோசலிச முன்னோக்கை முன்வைக்கிறது:

1) அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்ப்போம்! மூன்றாம் உலக போர் முனைவை நிறுத்துவோம்!

நமது பிரச்சாரம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்கள் மீதான கிளிண்டன், ட்ரம்ப், ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருநிறுவன ஊடங்கங்களது மௌனமான சதியை உடைத்துக் கொண்டிருக்கிறது. ஈராக், லிபியா, சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், 2001 க்குப் பின்னர் அமெரிக்கா தொடங்கிய போர்களில் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர் அல்லது அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய பிராந்திய போர்கள் உலகளாவிய மோதலுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்ற அதேவேளையில் வாஷிங்டன் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கத்திய ஐரோப்பாவில் ரஷ்யாவை எதிர்க்கவும் மற்றும் தொலைதூர கிழக்கில் சீனாவை எதிர்க்கவும் தயாரிப்பு செய்து வருகிறது. சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கான அடித்தளங்களைக் கட்டமைக்க முயன்று வருகிறது. 

2) வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவோம்!

மிகப்பெரும் செல்வந்தர்கள் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஒரு அமைப்புமுறையை ஒழிக்க சோசலிச சமத்துவக் கட்சி (SEP) போராடி வருகிறது. ஒரு கண்ணியமான சம்பளமளிக்கும் வேலை, தரமான கல்வி, மலிவான வீட்டுவசதி, அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு, கௌரவமான ஓய்வூதியம் மற்றும் கலாச்சாரத்தை அணுகுவது உட்பட அடிப்படை சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செல்வவளத்தைப் பரந்தளவில் மறுபகிர்வு செய்ய நாம் அழைப்புவிடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவத்தைச் சீர்திருத்த அல்ல, மாறாக அதை இல்லாதொழித்து சோசலிசத்தைக் கொண்டு அதை பிரதியீடு செய்யும் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது.

3) ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! அரசு உளவு வேலைகள் மற்றும் பொலிஸ் வன்முறை கூடாது!

பேர்ணி சாண்டர்ஸ் பிரச்சாரத்திற்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, அமெரிக்காவில் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சி அமெரிக்க ஆளும் உயரடுக்கை பீதியூட்டி உள்ளது. அது அமெரிக்காவில் சமூக எதிர்ப்பின் பாரிய ஒடுக்குமுறைக்கான அதன் தயாரிப்புகளை அதிகரித்து வரும் அதேவேளையில் தொழிலாளர்களை இனம், பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலை சார்ந்து பிளவுபடுத்துவதற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் போலி-இடது அனுதாபிகளைச் சார்ந்துள்ளது.

நவம்பரில் என்ன நடந்தாலும், உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் ஆழ்ந்த அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய அரசாங்கத்தின் இந்த கடந்த வார ஆத்திரமூட்டல்களில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, தேர்தல்களுக்கு முன்னரே கூட ஒரு புதிய போர் வெடிக்கலாம். உலகளாவிய மத்திய வங்கிகளது முடிவில்லா சுதந்திர பணக்கொள்கையே செயலிழந்து போயிருப்பதற்கான அதிகரித்த அறிகுறிகளுடன், உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. உலகெங்கிலுமான தொழிலாளர்கள் சிக்கன திட்டங்களுக்கு எதிராக மற்றும் பெருமந்த நிலைமைக்குப் பிந்தைய மிக அதிகபட்ச சமூக சமத்துவமின்மை மட்டங்களுக்கு எதிராக திரும்பவும் போராட தொடங்கி வருகிறார்கள்.

உலகெங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்கள் ஐக்கியப்படுத்தப்பட்டு, முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கியெறிந்து சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்குரிய, அதாவது சமூக தேவையை பூர்த்தி செய்வதன் அடிப்படையிலான ஒரு உலகளாவிய பொருளாதார திட்டமிடல் அமைப்புமுறையை ஸ்தாபிப்பதற்குரிய ஒரு நனவுபூர்வமான அரசியல் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

இந்த போராட்டத்திற்கு அவசியமான அரசியல் தலைமையைக் கட்டமைக்கவே, சோசலிச சமத்துவக் கட்சி 2016 தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இப்போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு நாம் நமது எல்லா வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக, சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து நமது போராட்டத்தை ஆதரிக்க முடிவெடுங்கள். 

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

The national security state and the US elections
[9 August 2016]

சிக்கனத் திட்டம் மற்றும் போருக்கு ஆதரவான கட்சிகளுக்கு எதிரான ஒரு சோசலிச மாற்றீடுக்காக!
[30 July 2016]