ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

An interview with LO’s Arlette Laguiller: “We’re happy [the trade unions] are waking up”

லூற் ஊவ்றியேர் இன் ஆர்லெட் லாகியே உடன் ஒரு நேர்காணல்: “தொழிற்சங்கங்கள் விழித்துக் கொண்டதில் மகிழ்ச்சியடைகிறோம்”

By Francis Dubois and Alex Lantier
9 April 2016

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மையமாகக் கொண்டு பிரான்சில் அபிவிருத்தி காண்கின்ற அரசியல் எதிர்ப்பானது, சோசலிஸ்ட் கட்சியும் [PS] பல தசாப்தங்களாக “இடது” என்றும் கூறி வந்திருக்கின்ற பல அமைப்புகளுக்கு எதிரான ஒரு இயக்கமாக நாளுக்குநாள் அபிவிருத்தி காண்கிறது.

நான்காண்டு காலமாக சோசலிஸ்ட் கட்சி [PS] இன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுக்கு எதிரான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு எதனையுமே செய்திராத தொழிற்சங்கங்கள், ஆர்ப்பாட்டங்களும் வேலைநிறுத்தங்களும் தங்களது கட்டுப்பாட்டுக்கு வெளியில் சென்றுவிடுமோ என்று அஞ்சுகின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு புறமும் அரசியல் ஸ்தாபகமும் தொழிற்சங்கங்களும் மறுபுறமுமாக நிற்கையில், பிரித்து நிற்கும் இடைவெளியானது முன்னெப்போதினும் விரிந்து சென்று கொண்டிருக்கிறது.

LO ஐ (Lutte Ouvrière —தொழிலாளர் போராட்டம்) “அதி இடது” அமைப்பாகவே பிரெஞ்சு ஊடகங்கள் கூறி வருகின்ற வேளையில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து உடைத்துக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் தொழிலாள வர்க்கத்தில் எழுந்து விடாமல் தடுப்பதற்கே அது பல தசாப்த காலமாய் வேலை செய்து வந்திருக்கிறது. சோசலிஸ்ட் கட்சியின் ஒரு பாதுகாவலராகவும் உத்தியோகபூர்வ அரசியல் எந்திரத்தின் ஒரு முக்கியமான பாகமாகவும் இருந்து வருகின்ற தனது பாத்திரத்தை மூடிமறைப்பதற்கு பிரயத்தனம் செய்கின்ற LO, சோசலிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு இயக்கம் எழுவதைக் கண்டு மிரட்சி அடைகிறது.

இப்போது, PS க்கான வெகுஜன எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்கங்களுக்கான பரந்த அதிருப்தியின் மத்தியில், இந்த ஒட்டுமொத்த அரசியல் பொறிமுறையும் உறைந்து செயலற்றதாக ஆகத் தொடங்குகிறது. 1974 முதல் 2007 வரை ஆறு தேர்தல்களில் LO இன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த ஆர்லெட் லாகியே (Arlette Laguiller), 2013 மார்ச் 31 அன்று பாரிஸில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் சமயத்தில் அளித்த ஒரு நேர்காணலில் இது எடுத்துக்காட்டப்படுகிறது. ஏறக்குறைய அரசியல் திவால்நிலையின் ஒரு வெளிப்பட்ட ஒப்புதலாக அது இருக்கிறது.

************

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் குறித்த LO இன் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட போது லாகியே கூறினார், “அதை எதிர்ப்பதற்குத்தான் நாங்கள் இங்கே நிற்கிறோம்; மார்ச் 9 முதலாகவே அடிப்படையாக நாங்கள் வீதிகளில் தான் நின்றிருந்திருக்கிறோம். ... முதலாளிகளுக்கு என்ன வேண்டுமோ, அது ஒரு வலிமையான எழுச்சியை தூண்டும் என்ற காரணத்தால் [ஹாலண்டுக்கு முந்தைய கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா] சார்க்கோசி எதைச் செய்ய துணியாமலிருந்தாரோ அதனை ஹாலண்ட் செய்து கொண்டிருக்கிறார். Medef வணிகக் கூட்டமைப்பு, மற்றும் [Medef தலைவரான பியர்] கட்டாஸ் ஆகிய வணிக மேலிடங்களிலிருந்தான உத்தரவுகளை ஹாலண்ட் கையிலெடுத்திருக்கிறார். நமக்கு இதுவரை தெரிந்திருக்கக் கூடிய அத்தனை அரசாங்கங்களையும் போலவே அவரும், இறுதியில், வணிக உயரதிகாரிகளுக்கே சேவைசெய்கிறார்.”

உ.சோ.வ.த: இந்த உள்ளடக்கத்தில், PS உடனான அரசியல் கூட்டணிகளின் விடயத்தில் LO தனது நிலையை மறுபரிசீலனை செய்கிறதா அல்லது ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கிறதா, PS மற்றும் வலது-சாரி கட்சிகளுக்கு இடையில் ஒரு தெளிவான வித்தியாசம் இருப்பதாக வலியுறுத்திய ஜனாதிபதி தேர்தலின் போதான தனது முடிவுகளை மறுசிந்தனை செய்கிறதா?

ஆர்லெட் லாகியே: இதோ பாருங்கள், PS வலது-சாரி கொள்கைகளை கொண்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆதலாலே வலதை விடவும் PS கொஞ்சம் குறைவான மோசம் என்று நாங்கள் சொல்லி விடுவதில்லை. அது உண்மையல்ல... வேலைவாய்ப்பின்மையின் அதிகரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள், வேலைநீக்கங்களை சட்டவிரோதமாக்குவதற்கு அது எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. PSA [பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம், முன்னதாய் PSA Peugeot Citroën] இல் வேலைநீக்கங்களை தான் விரும்பவில்லை என்று ஹாலண்ட் கூறிக் கொண்டிருந்த போதிலும் கூட, அவற்றைத் தடுப்பதற்கு அவர் எதனையும் செய்யவில்லை. ஆகவே தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் சொந்த வேட்பாளராய் நத்தலி ஆர்த்தோ (Nathalie Arthaud) நின்றார்.

உ.சோ.வ.த: நான்கு ஆண்டுகளாய் தொழிற்சங்கங்கள் ஹாலண்டுக்கு எந்த எதிர்ப்பையும் ஒழுங்கமைத்திருக்கவில்லையே என்ற உண்மை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆர்லெட் லாகியே: ஆம், இப்போது தொழிலாளர் சட்ட சீர்திருத்த விடயத்தில் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி, ஏனென்றால் இப்போது வரைக்கும் நிறைய கடும் அடிகளின் சமயத்தில் அங்கே எந்த எதிர்வினையும் உண்மையில் இல்லாமல் இருந்தது என்பதே உண்மையாக இருக்கிறது.

உ.சோ.வ.த: இதனை எப்படி நீங்கள் விளக்குகிறீர்கள்? ஏனென்றால் CGT [பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு] தொழிற்சங்கம் மீது LO பெருமளவில் தங்கியிருந்து வந்திருக்கிறது.

ஆர்லெட் லாகியே: இல்லை, நாங்கள் CGT அல்லது வேறு எந்த தொழிற்சங்க கூட்டமைப்புகளின் மீதும் நம்பியிருந்திருக்கவில்லை. CGT இல் இருக்கும் எங்கள் உறுப்பினர்களை பொறுத்தவரை, அவர்கள் கள மட்டத்தில் இருக்கின்றனர், அவர்களது வேலையிடங்களில் விடயங்கள் முன்னேறுவதை அவர்கள் உறுதி செய்கிறார்கள், ஆனால் நிறுவனங்களில் தொழிற்சங்க வேலையை செய்கின்ற எங்கள் உறுப்பினர்கள் எந்த தொழிற்சங்கத்தின் சார்பு நிலையையும் எடுப்பதில்லை. ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டாக நீங்கள் இருக்கும்போது குறைந்தபட்சம் தொழிற்சங்க வேலையில் ஈடுபடுவதென்பது இயல்பானதே.

உ.சோ.வ.த: தொழிற்சங்க கூட்டமைப்புகள் போன்ற அமைப்புகளுடன் நீங்கள் நெருங்கி வேலை செய்கிறீர்கள் என்ற வகையில், இவை 95 சதவீதம் அரசாலும் பெருநிறுவனங்களாலுமே நிதியாதாரமளிக்கப்படுகின்றன என்ற உண்மையில் நீங்கள் புரிந்து கொள்வது என்ன?

ஆர்லெட் லாகியே: இதோ பாருங்கள், நிதியாதாரத்தை ஒரு பிரச்சினையாக நான் கருதவில்லை. கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஒவ்வொரு அமைப்புமே அவற்றின் உறுப்பினர்களது பங்களிப்புகள் மூலமாக நிதியாதாரமளிக்கப்பட்டால் ஆரோக்கியமான விடயமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால் இங்கே நாம்...

உ.சோ.வ.த: தொழிலாள வர்க்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சமூக பிளவு குறித்து எப்படி விளக்குகிறீர்கள்?

ஆர்லெட் லாகியே: நிறைய போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டன என்று நினைக்கிறேன். போராட்டங்கள் வெற்றி பெறாத நிலையிலேயே இறுதியில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப நெருக்குதலளித்த விடயத்தில் நிறைய தொழிலாளர்கள் கோபமாக இருக்கின்றனர். அதனால் அந்த அத்தனை கோபமும் இருக்கிறது, அதேநேரத்தில் நிறுவனங்களில் தொழிற்சங்க போராட்டம் அத்தனை சுலபமாக இல்லாத ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதும் உண்மை தான், ஏனென்றால் தொழிலக மேலதிகாரிகள் சூழ்ச்சி செய்கின்றனர், தங்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியக் கூடிய தொழிற்சங்கங்களை அவர்களே உருவாக்கவும் கூட செய்கின்றனர்.

உ.சோ.வ.த: நீங்கள் 2002 [ஜனாதிபதித் தேர்தலில்] இல், பப்லோயிச புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் லம்பேர்ட்டிச தொழிலாளர் கட்சியுடன் [Lambertiste Workers Party] சேர்ந்து மொத்தமாய் 3 மில்லியன் வாக்குகள் பெற்றீர்கள். அப்படியிருக்க தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த இயக்கத்தை கட்டியெழுப்ப உங்களுக்கு சுலபமாக இருக்கவில்லை என்பதை எப்படி விளக்குகிறீர்கள்?

ஆர்லெட் லாகியே: 2002 இல் நான் 5.7 சதவீத வாக்குகள் பெற்றேன், [LCR வேட்பாளர் ஒலிவியே] பெசன்ஸெநோ 4.3 சதவீத வாக்குகள் பெற்றார். நாங்கள் கிட்டத்தட்ட 10 சதவீத வாக்குகள் பெற்றோம். வாக்காளர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர் அளித்த ஒரு தேர்தல் சமிக்கையாக அது இருந்தது, ஆனாலும் அதன் அர்த்தம், எங்களது சிந்தனைகளுக்கான, இந்த அல்லது இன்னொரு அமைப்புக்கான முழுமையான ஆதரவு என்பதில்லை. அதன்பின் நாங்கள் தொடர்ந்து வளர்ச்சி காண்பதை எட்ட முடியவில்லை, அந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அத்தனை...அவ்வளவே....ஒரு வாக்கு என்பது அமைப்புகளைக் கட்டுவதிலான அதே விடயம் அல்ல.

பிரெஞ்சு வெளியுறவுக் கொள்கை குறித்துக் கேட்டபோது, லாகியே, “இந்த நிலைமைகளில் நேர்காணல் செய்வது அத்தனை சிறந்ததல்ல. தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் குறித்த உங்களது கேள்விகளுக்கு நான் பதிலளித்து விட்டேன்” என்று கூறி உடனே நேர்காணலை முடித்துக் கொண்டார்.

************

உலக அரங்கில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பாத்திரம் குறித்தும் அதன் வெளியுறவுக் கொள்கையுடன் LO கொண்டிருக்கக் கூடிய அரசியல் மற்றும் நிதி உறவுகள் என்னவாயினும் அவை குறித்துமான கேள்விகளுக்கு பதிலளிப்பதிலான தயக்கத்தைக் குறித்து லாகியே விளக்கவில்லை. ஆனால் அவரது பதிலானது, LO என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட விழைகின்ற ஒரு மார்க்சிச அமைப்பு அல்ல, மாறாக பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் போர்கள் மற்றும் சர்வதேசக் குற்றங்களின் விடயத்தில் ஆமோதிப்பான ஒரு மவுனத்தையே பெரும்பாலும் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு தேசியவாத அமைப்பு என்பதைத் தெளிவாக்கி விடுகிறது.

பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்ட “சீர்திருத்தத்தை” அமல்படுத்த முனைகின்ற சக்திகள் உள்ளிட்ட பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலில், LO இன் நெருக்கமான தொடர்பை மறுப்பது முன்னெப்போதையும்விட கடினமாகி இருக்கிறது. பெருவணிகங்களால் விலைக்கு வாங்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்ற தொழிற்சங்கங்களில் LO வேலைசெய்கிறது என்பதையோ அல்லது சோசலிஸ்ட் கட்சியுடன் LO நெருங்கிய உறவு கொண்டுள்ளது என்பதையோ ஆர்லெட் லாகியே மறுக்க முனையவில்லை. PS உடனான அதன் தேர்தல் கூட்டணிகள், குறிப்பாக 2008 நகராட்சி தேர்தல்களில், நன்கறிந்ததாகும். இத்தகைய உறவுகளது அரசியல் முக்கியத்துவம் குறித்த கேள்வியை மழுப்புவதற்காக, நத்தலி ஆர்த்தோ தான் LO இன் ஜனாதிபதி வேட்பாளர் என்ற நொண்டிச்சாட்டுடன் ஒரு திட்டவட்டத்தைக் காட்டுவதன் மூலமாக லாகியே முயற்சி செய்தார்.

ஆர்த்தோவின் பாத்திரமே கூட, LO மற்றும் PSக்கு இடையில் நிலவுகின்ற நெருக்கமான உறவுகளையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2012 இல், அவர் LO இன் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்த சமயத்தில், தனது ஆதரவாளர்கள் இறுதிச் சுற்றில் PS இன் வேட்பாளரான ஹாலண்டுக்கு வாக்களிப்பதே தனக்கு விருப்பமானதாக இருக்கும், ஏனென்றால் அவர் போட்டியாளரான சார்க்கோசியை விடவும் குறைவாகவே “பணக்காரர்களின் ஜனாதிபதி”யாக இருப்பார் என்று அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார்.

2012 மே மாதத்தில், ஆர்த்தோ எழுதினார்: "செல்வந்தர்களின் ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசிக்கு எந்த நனவுள்ள தொழிலாளரும் வாக்களிக்க முடியாது என்பது வெளிப்படை. இந்த மனிதர் தனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதிலும் முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்களின் விசுவாசமான சேவகராகவே நடந்து கொண்டார். எனக்கு வாக்களித்தவர்களில் சிலர், தொழிலாளர்களின் வெளிப்படையான எதிரிக்கும், போலியான ஒரு நண்பருக்கும் இடையிலான நஞ்சான தெரிவுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில், வாக்களிக்க மாட்டார்கள் அல்லது செல்லாத வாக்கினை அளிப்பார்கள். மற்றவர்கள், சார்க்கோசியை அகற்றுவதற்காக, ஹாலண்டுக்கு வாக்களிப்பார்கள்.”

தொழிலாளர்களது போராட்டங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்த விடயத்திலான லாகியே இன் கருத்துக்கள் நேர்மையற்றவை, ஏனென்றால் அவர் விமர்சனம் செய்ததாகக் காட்டிக் கொள்கின்ற காட்டிக்கொடுப்புகள் உண்மையில் LOவினால் தான் நடத்தப்பட்டன.

Aulnay-sous-Bois இல் இருந்த PSA தொழிற்சாலைப் போராட்டத்தை விளிம்புக்குத் தள்ளியவர் வேறு யாருமல்ல, முன்னிலை LO உறுப்பினரும், Aulnay இல் CGT இன் பிரதிநிதியாகவும் செய்தித்தொடர்பாளராகவும் இருந்தவரும், Arthaud இன் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் முன்நின்றவருமான ஜோன்-பியர் மேர்சியே (Jean-Pierre Mercier) தான். CGT, Aulnay தொழிற்சாலை மூடலுக்கு எதிரான போராட்டத்தை தனிமைப்படுத்தி, தொழிற்சாலையைக் காப்பாற்ற தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அணிதிரட்டுவதைத் தடுத்து, PS மற்றும் PSA அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு அனுமதித்த போது, அதற்கு மேர்சியே உதவிசெய்தார்.

நிதிப் பிரபுத்துவங்களால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளாக LO உறுப்பினர்கள் வேலைசெய்வது ”இயல்பானது”, அதாவது LO பாதுகாக்கின்ற நலன்கள் மீது எந்த குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் கொண்டிருக்காது என்கிறார் ஆர்லெட் லாகியே. ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போலி-இடதுகளில் இருக்கக் கூடிய குட்டி-முதலாளித்துவ செயல்பாட்டாளர்களின் கண்ணோட்டத்தை இந்த மனோபாவம் உண்மையாகப் பிரதிபலிக்கிறது.

2002 ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் அதில் லியோனல் ஜோஸ்பனின் PS அரசாங்கத்திற்கு எதிராக தெளிவான வாக்களிப்பு கிட்டியது குறித்தும் -இறுதிச் சுற்றில் அவர் அகற்றப்பட்டு கன்சர்வேட்டிவ் [ஜாக் சிராக்] மற்றும் நவ-பாசிச [ஜோன்-மரி லு பென்] இடையில் இறுதிச் சுற்று வாக்களிப்பு நடைபெற அது இட்டுச் சென்றது- லாகியே தெரிவித்த கருத்துக்கள் ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதைக் குறித்த விடயத்தில் LO இன் அவநம்பிக்கையான மற்றும் குரோதமான மனோபாவத்தை தெளிவாக்குகிறது.

வாக்காளர்கள் அவர்களிடம் “ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக” முன்நிறுத்தப்பட்டவர்களுக்கு 10 சதவீத வாக்குகளை அளித்திருந்தார்கள் என்ற உண்மைக்கு அவர் காட்டும் அலட்சியமே LO மீதான கண்டனத்துக்குரியதாக இருக்கிறது. சர்வதேச அளவில் ஈராக் மீது அமெரிக்கா தொடுக்கவிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்ததற்கு மத்தியில், ஜனாதிபதி பதவிக்கான இறுதிச் சுற்றில் ஒரு நவ-பாசிச வேட்பாளர் இடம்பெற்றதற்கு எதிராய் பிரான்சில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்ற நிலைமைகளின் கீழ், ‘அச்சமயம் எதுவும் செய்திருக்க சாத்தியமில்லை’ என லாகியே சொல்வதைப் போல சொல்வதென்பது, அரசியல் சூழ்நிலையை நம்பிக்கையற்றதாக கூறிக் கைகழுவுவதற்கு ஒப்பானதாகும். சொல்லப் போனால், LO இன் வாக்காளர்கள் அதன் சிந்தனைகளுடன் அடையாளப்பட்டுக் கொள்ளவில்லை என்றால், அதற்குக் காரணம் அவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு வெகுதூரம் இடப்பக்கத்தில் இருக்கின்றார்கள் என்பதால் தான்.

முதலாளித்துவத்திற்கும், ஏகாதிபத்தியப் போருக்கும் மற்றும் போலிஸ்-அரசின் ஆட்சி வடிவங்களுக்கும் எதிராய் செலுத்தப்படக் கூடியதாகவும், PS அரசாங்கத்துடனும், தொழிற்சங்கங்களுடனும் மற்றும் அவற்றின் போலி-இடது கூட்டாளிகளுடனும் மோதலுக்கு வந்துசேரத்தக்கதாகவுமான ஒரு இயக்கம் தொழிலாள வர்க்கத்தில் எழுகின்றதைக் காட்டிலும் மிரட்சிக்குரியதாக இந்த அமைப்புக்கு வேறொன்றும் இருக்கவில்லை. அந்த இயக்கத்தின் வரவிருக்கும் அபிவிருத்திகள், LO தொழிலாளர்களுக்கு எதிராக தடுப்பரண்களின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பதை தவிர்க்கவியலாமல் காட்டியே தீரும்.

ஆசிரியர்களின் பரிந்துரைகள்:

Lutte Ouvrière தலைவர் ஆர்லட் லாகியேயுடன் ஒரு நேர்காணலும் பீட்டர் சுவார்ட்ஸால் வழங்கப்பட்ட குறிப்பும்

[10 May 2002]