ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වසර එකහමාරක සිය පාලනය ගැන ජනාධිපති සිරිසේනගේ රැවටිලිකාර යුක්තිකරනය

இலங்கை: ஒன்றரை ஆண்டுகால ஆட்சியைப் பற்றிய ஜனாதிபதி சிறிசேனவின் ஏமாற்று நியாயப்படுத்தல்

Pradeep Ramanayake
30 June 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது ஒன்றரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் பெற்றுக்கொண்டதாக கூறிக்கொள்ளும் போலி வெற்றியைப் பற்றி ஒரு தொகை வாய்ச்சவடால்களை விடுத்துக்கொண்டிருக்கின்றார். தொழிலாளர்களின் கண்களுக்கு மண் தூவுவதை இலக்காகக் கொண்ட இந்த அறிக்கையில் கபடத்தனமும் மோசடியும் நிறைந்துள்ளது.

ஜூன் 12 அன்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி சிறிசேனவின் இந்த ஏமாற்று குறிக்கோள்கள் வெளிப்பட்டது. செவ்வியின் தொடக்கத்திலேயே, தான் ஆட்சிக்கு வந்த முதல் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள விதத்தை பற்றி தாங்கள் திருப்தியடைகின்றீர்களா என்ற கேள்விக்கான பதிலாக, தனது ஆட்சிக்காலத்தில் வெற்றிகண்டதாக கூறும் விடயங்கள் சிலவற்றின்படி தன்னால் மகிழ்ச்சியடைய முடியும் என அவர் கூறினார்.

தனது வெற்றியைப் பற்றி தூக்கிப் பிடிக்கும் விடயங்களில் அவர், இலங்கைக்கு சர்வதேச சமூகத்திடம் வெற்றிகொண்ட “வரவேற்பையே” மிகவும் உயர்வாகக் கூறினார். அவர் கூறியதாவது: “நான் பொறுப்பெடுத்தது வேறு இனத்தவர்களால் வெறுக்கப்பட்ட ஒரு நட்டையே ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நான் அந்த மோசமான நிலைமையை மறுபக்கம் திருப்பியிருக்கின்றேன்.

சீனா மற்றும் ரஷ்யாவை சுற்றிவளைப்பதை இலக்காகக் கொண்ட “ஆசியாவில் முன்னிலை” வேலைத்திட்டத்தின் கீழ் வாஷிங்டனின் அனுசரணையிலான ஆட்சி மாற்றத்தில் 2015 ஜனவரி 8 அன்று சிறிசேன ஆட்சிக்கு வந்தார். தான் “சர்வதேசத்தை வெற்றிகொண்டதாக” கூறும் வாய்ச்சவடாலை இப்போது மக்கள் முன்னிலையில் கட்டவிழ்த்துவிடும் சிறிசேன, தான் ஆட்சிக்கு வந்த நாள் முதலே, மக்களுக்கு தெரியாமல் செய்திருக்கின்ற நடவடிக்கை எதுவெனில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு ஏகாதிபத்திய சக்திகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள புவியரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையை முழுமையாக கட்டிப்போடுவதே ஆகும். சிறிசேன ஆர்வத்துடன் மிகைப்படுத்தும் “சர்வதேச ஒத்துழைப்பு” அதற்காக அவருக்கு கிடைக்கும் கைமாறு ஆகும்.

உண்மையை மூடி மறைப்பதற்கு சிறிசேன அத்தகைய முயற்சியை மேற்கொண்டாலும், சீனாவுக்கு எதிரான பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கும் அமெரிக்க முயற்சிகளுக்கு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் கூட்டுச் சேர்வதை புரிந்துகொள்வதற்கு “இலங்கையின் ஜனநாயகத்தை நோக்கிய மாற்றம்: இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் புதிய யுகம்” என்ற தலைப்பில் ஆசிய கற்கை மத்திய நிலையத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லீஸா கேர்டீஸ் என்பவரால் ஜூன் இரண்டாம் வாரத்தில் முன்வைத்த நீண்ட அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை பரீட்சித்துப் பார்ப்பதே போதுமானது. இந்த அமைப்பு, அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்துடன் பிணைந்துள்ள சிந்தனைக் குழாம்களில் ஒன்றாகும்.

அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது: “சீனாவின் எழுச்சியுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகியிருக்கும், பூகோளரீதியில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவுக்கும் இடையிலான கடற்பாதையின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள இலங்கையுடனான அமெரிக்காவின் நெருக்கமான உறவுகளுக்கு இந்த ஜனநாயக சீர்திருத்தங்கள் இடமளித்துள்ளன”.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஒருவர் இலங்கைக்கு வராமல் இருந்த பத்து ஆண்டு கால இடைவெளிக்கு முடிவு கட்டி, அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி தொடக்கம், சமந்தா பவர், நிசா பிஷ்வால் உட்பட அமெரிக்க சிரேஷ்ட இராஜதந்திர அதிகரிகள் பலர் இலங்கைக்குள் தமது வேலைத்திட்டத்தின் வெற்றியை மேற்பார்வை செய்வதற்கும், அவசியமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அடிக்கடி இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரதும் கருத்துக்கள், இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள “மாற்றத்தை” வளர்க்கவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான யோசனைகளை முன்வைப்பதாகவே உள்ளன.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்களில், வெளிப்படையாகத் தெரியக்கூடிய நெகிழ்வை பெற்றுக்கொண்டமை தான் பெற்ற முக்கியமான வெற்றியாக சிறிசேன மிகைப்படுத்திக் காட்டுகின்றார். அவர், “போர் குற்றங்கள் சம்பந்தமாக எழுந்த கூச்சல்கள் தணிந்துபோயுள்ளன” என உத்வேகத்துடன் கூறுகின்றார்.

போர் குற்றங்கள் தொடர்பாக செய்துள்ள இந்த நெகிழ்வு, தனது சமநிலையான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக தோன்றிய “இலங்கையில் இருந்து தொலைவில் இருந்த நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் அமைப்புடனுமான புதிய சிநேகிதத்தினால்” ஏற்பட்டது என பேட்டியில் சித்தரிக்க மேற்கொள்ளும் முயற்சி முற்றிலும் மோசடியானதாகும். சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உறவுகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவினால் போர்க் குற்றச்சாட்டுக்கள் வஞ்சகத்தனமாக பயன்படுத்தப்பட்டதோடு, இராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து கவிழ்த்த பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் தமது வேலைத் திட்டத்துடன் சிறந்த முறையில் உடன்பட்டு இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்ச்சாட்டுக்களை சுருட்டிக்கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டு சம்பந்தமாக சிறிசேனவும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர். இராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து 2014 கடைப்பகுதியில் வெளியேறும் வரை, அதில் முக்கிய அமைச்சராக இருந்த ஜனாதிபதி சிறிசேன, போரின் கடைசி வாரத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டிருந்தார். அவ்வாறு போர் அழிவின் இரத்தக் கறைகளை பூசிக்கொண்டுள்ள போதிலும், தான் இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வந்த தேவ தூதனாக சிறிசேன தன்னை சித்தரித்துக்கொள்கின்றார்.

எவ்வாறெனினும், சிறிசேனவின் ஜனாதிபதி பதவிக் காலத்துக்குள் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்றுவதற்காக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. போர் வெற்றி என சொல்லப்படுவதன் ஏழாவது ஆண்டை கொண்டாடுவதற்காக நடந்த கூட்டத்தில், அதற்கு மாறாக அவர், “இனத்தின் நன்மைக்காக, தாய் நாட்டின் நன்மைக்காக முப்படைகளையும் பலப்படுத்துவதாக” அவர் தெரிவித்தார்.

பிரதானமாக, பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறை வழிமுறைகளை உழைக்கும் மக்களுக்கு எதிராக மேலும் மேலும் பயன்படுத்துவதற்காகவே இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையற்ற பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட பகுதியினர் மத்தியில் இருந்து தோன்றும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு, அரசாங்கம் இந்த வழிமுறைகளை நன்கு பயன்படுத்துகின்ற விதத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் காணக்கூடியதாக இருந்தது.

சிறிசேன அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்துக்குள், புதிய சுற்று ஜனநாயக விரோத தாக்குதல்களை முன்னெடுத்தமைக்கு உரிமையாளராக இருந்தாலும், சிறிசேனவைப் பொறுத்தளவில் அது ஜனநாயகத்தை மீள ஸ்தாபிப்பதற்கான தனது அரசின் முயற்சிகள் பலன் தந்த காலகட்டமாகும். பேட்டியில் சிறிசேன கூறுவது போல், பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தமானது “ஜனநாயகத்தின் பெரும் வெற்றியாகும்”. எனினும், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை தூக்கியெறியும் ஜனரஞ்சகமான வாக்குறுதியை சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், அதில் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்கள் சிலவற்றை சேர்த்து போலி மிகைப்படுத்தியமையே உண்மையில் நடந்தது.

சர்வதேச ஒத்துழைப்பு, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான பூச்சாண்டி கதைகள் ஒருபுறம் இருக்க, மக்களின் வாழ்கை நிலைமையை உயர்த்துவது சம்பந்தமாக எந்தவொரு கருத்தும் முழு பேட்டியிலும் சிறிசேனவின் வாயில் இருந்து வரவில்லை. தனது ஆட்சிக் காலத்தில், தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் நெருக்கடியான வாழ்க்கை நிலைமைகளுக்குள் மேலும் மேலும் மூழ்கிக்கொண்டிருப்பதை கபடத்தனமாக மூடி மறைக்கும் சிறிசேன, அதைப் பற்றிய தனது தலைமையிலான அரசாங்கத்தின் இழிவான அலட்சியத்தையே காட்சிப்படுத்தியுள்ளார்.

பேட்டியின் முடிவில், அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு சம்பந்தமாக அரசாங்கத்தின் மீது மக்கள் குற்றம் சாட்டுவது பற்றி தங்களது நிலைப்பாடு என்ன என கேட்ட போது, முன்னைய அரசாங்கத்தினால் உயர்த்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் தொகையே அதற்கு காரணம் என்று புலம்பிய சிறிசேன, மக்களின் குற்றச்சாட்டு சரியானது என்றும் அது சம்பந்தமாக மக்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த கருத்து முற்றிலும் மோசடியானதாகும். சிறிசேன கூறும் இந்த “உடனடி நிவாரணத்தை” அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கு மாறாக, மேலும் மேலும் வெளிநாட்டுக் கட்னகளைப் பெறுவதற்கான தகமையை பெற்றுக்கொள்வதன் பேரில், சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் சிக்கன நடவடிக்கைகளை தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சுமத்துவதையே அவர் செய்துள்ளார். பிரமாண்டமான வட் வரிகள் உட்பட தாக்குதல்கள் மூலம் இப்போதே அரசாங்கம் அதற்கு அடியெடுத்து வைத்துள்ளது.

மக்களுக்கு சலுகை கொடுப்பதற்காக எந்தவொரு திட்டமிடலும் அரசாங்கத்திடம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலாவ பிரதேசத்தில் ஆயுதக் களஞ்சியம் வெடித்தமை போன்ற அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களை அது இழிவான முறையில் அலட்சியம் செய்துள்ளது.

எப்படியாவது இராஜபக்ஷவை தோற்கடிப்பதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற மாயையை பரப்பி சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு சேவை செய்த பகுதியினர் மத்தியில் சிலர், சிறிசேனவின் ஜனநாயக-விரோத ஆட்சியை நியாயப்படுத்தி, அவர் பின்பற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நேரடியாக அணிதிரண்டுள்ளனர். நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன அதில் முன்னணியிலேயே இருக்கின்றார்.

மேற்குறிப்பிட்ட மாயையை பரப்பி, சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு முண்டுகொடுத்த மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பீ.), முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகளும் பிரஜைகள் சக்தி போன்ற சிவில் அமைப்புகளும் தாம் எதிர்பார்த்த மாற்றம் இடம்பெறவில்லை என்ற வெற்றுக் கூச்சல்களைப் போட்டு, மக்களுக்கு அடுத்தடுத்து சீர்திருத்தவாத பொறிகளை பிரேரித்து வருகின்றன.

ஜனாதிபதி தேர்தலின் உள்ளர்த்தங்களை தெளிவுபடுத்தி, உலக சோசலிச வலைத் தளம் 2015 ஜனவரி 12 அன்று பின்வருமாறு எச்சரித்தது.

“நாட்டின் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சிறிசேன ஆட்சிக்கு வந்ததில் கிடைக்கப் போகும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சுபீட்சம் ஒன்றும் கிடையாது. நாடு சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் சூழ்ச்சிகளின் இன்னொரு அங்கமாக ஆகும். மோசமாகி வரும் பூகோள பொருளாதார வீழ்ச்சி நிலைமைகளின் மத்தியில், உள்நாட்டு போர் நடந்த 26 ஆண்டு காலத்துக்குள் திணிக்கப்பட்ட மற்றும் இராஜபக்ஷவால் விரிவாக்கப்பட்ட ஒடுக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்தி வாழ்க்கை நிலைமைகள் மீது மேலும் மேலும் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படும்”.

சிறிசேனவால் தனது ஆட்சிக்கு நியாயத் தன்மையை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மேற்குறிப்பிட்ட பகுப்பாய்வு நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமைக்கு எதிரான தாக்குதல்களை உக்கிரமாக்கி, உலகத்தை மேலும் அழிவுகரமான உலக போர் அபாயத்துக்குள் இழுத்துப் போடும் அமெரிக்காவின் போர் திட்டங்களுடன் நாட்டை கட்டிப்போடுவதை மேலும் உயர்ந்த மட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது.

சிங்கள இனவாத்தை அடிப்படையாகக் கொண்ட இராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஒத்துழைக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியோ அல்லது சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ஏதாவதொரு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய ஜே.வி.பீ. மற்றும் ஏனைய போலி இடது குழுக்களும், இந்த சிக்கல்களுக்கு எந்தவொரு முற்போக்கான தீர்வையும் வழங்கவில்லை. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) பக்கம் திரும்பி, அரசாங்கத்திற்கும் அதே போல் முழு முதலாளித்துவ முறைமைக்குமே எதிராக சர்வதேச சோசலிச முன்நோக்குக்காக போராடுவது அவசியமாகும்.