ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“ආදායම් බෙදාගැනීමේ” වතු සමාගම් සැලැස්ම වටවංගුවෙන් ගෙනඒමේ කුමන්ත‍්‍රනයක්

“இலாபத்தை பங்கிடும்” தோட்ட கம்பனிகளின் திட்டத்தை குறுக்குவழியில் கொண்டுவருவதற்கு சூழ்ச்சி

W.A. Sunil
6 July 2016

தற்போது நிலவும் நாளாந்த சம்பள முறையை முழுமையாக நீக்கி உற்பத்தியின் அடிப்படையிலான “இலாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்” சம்பள முறையை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்பினால் அமுல்படுத்த முடியாத சூழ்நிலையில், அதை எதிர்காலத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் இலக்குடன் இரட்டைமுக சம்பள முறையை தோட்டக் கம்பனிகள் முன்மொழிகின்றன.

முன்மொழியப்பட்டுள்ள இரட்டைமுக முறையின் படி, மாதத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்யும் நாட்களில் 12 நாட்களுக்கு நாளாந்த சம்பளத்தை வழங்கும் அதேவேளை, மாதத்தில் அவர் பறிக்கும் கொழுந்தின் அளவுக்கு ஏற்ற பணம் அந்த சம்பளத்திற்கு சேர்க்கப்படும்.

அதன்படி, தொழிற்சங்கங்களுடன் புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்பார்க்கின்றன. இது, திட்டமிடப்பட்டுள்ள புதிய சம்பள சூத்திரத்தை தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களின் காதில் பூச்சுற்றும் நடவடிக்கை ஊடாக, குத்தகை விவசாயிகள் முறைக்கு சமமான “இலாபத்தினைப் பங்கிட்டு கொள்ளும்” சம்பள முறையை அமுலுக்கு கொண்டு வருவதற்கான ஒரு திட்டமாகும்.

முன்னர் முன்வைத்த “இலாபத்தைக் பங்கிட்டுக் கொள்ளல்” முறையை தொழிற்சங்கங்கள் நிராகரித்தமை தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறு இந்த இரட்டைமுக சம்பள முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக குறிப்பிடுகின்றது. “தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி செய்யும் உலகின் ஏனைய நாடுகளைப் போன்று, சம்பளத்தை முழுமையாக உற்பத்தியுடன் தொடர்புபடுத்த நாங்கள் விரும்பிய போதிலும், குறைந்தபட்சம் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தற்காலிக தீர்வினை ஏற்படுத்துவதற்கு முடிந்த அளவு நாங்கள் செயற்பட்டுள்ளோம். இந்த (இரட்டைமுக) சம்பள முறை, எதிர்காலத்தில் முழுமையாக உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட சம்பள முறையை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இடுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள் இந்த திட்டத்தை நிராகரிக்கவில்லை. மாறாக, தொழிலாளர்கள் மத்தியில் அதற்கு எதிராக வளர்ச்சிபெறும் பாரிய எதிர்ப்பினால் ஏற்படக் கூடிய சமூக வெடிப்பைப் பற்றிய பீதியினாலேயே சங்கங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன.

கடந்த 5 வருடங்களுக்குள் தேயிலை இறப்பர் விலை சரிபாதியாக வீழச்சியடைந்துள்ள சூழ்நிலையில், தொழிலளார்களின் சம்பளம் 20 வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு ஒரு கிலோ தேயிலையின் உற்பத்திச் செலவு 72 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தோட்டக் கம்பனிகளின் சங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. சம்பள உயர்வு சதவீதத்தினை பெரிதாக சுட்டிக் காட்டிய போதிலும் 2010ல் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளம், ரூபா 405 மாத்திரமே. தற்போதைய சம்பளம் 620ரூபா ஆகும். வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும்போது தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் கடந்த 5 வருடங்களில் 215 ரூபாயே அதிகரித்துள்ளது. புள்ளிவிபரக் கணீப்பீட்டு திணைக்களத்தின் அறிக்கையின் படி, 2010 டிசம்பர் மாதம் 147.2 ஆக இருந்த வாழ்க்கைச் செலவு புள்ளி, 2015 டிசம்பர் மாதம் 185.2 ஆக, 43 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்துக்கோ தோட்டக் கம்பனிகளுக்கோ தொழிலாளர்களின் வாழ்க்கை நிலமையின் நெருக்கடி தொடர்பாக துளியளவேனும் அக்கறை கிடையாது. அவர்களுடைய முக்கிய குறிக்கோளாக இருப்பது, உழைப்புச் சுரண்டலுக்கூடாக உலகச் சந்தையில் போட்டிக்கு முகம்கொடுத்து இலாபத்தினைப் பாதுகாத்துக் கொள்ளவதாகும்.

இந்தப் புதிய முறையின் கீழ், தேயிலைக் கொழுந்து பறிப்பதற்கான கொடுப்பனவு விகிதம் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பதாக பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம் குறிப்பிடுகின்றது. அத்தோடு இந்த முறையின் ஊடாக தேயிலை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளின் தொழிலாளர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அது கூறுகின்றது. இது முழுப் பொய்யாகும். தேயிலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பிரதான இரண்டு நாடுகளான ஹென்யா மற்றும் இந்தியாவில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை இலங்கை தோட்டத் தொழிலாளர்களது நிலைமையை விட படுமோசமானதாகும்.

வட மற்றும் தென் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 2 டாலர் மற்றும் 4 டாலர் ஆகும். அப்படியாயின் அது இலங்கை நாணயத்தில் 295.75 மற்றும் 591.50 ரூபா ஆகும்

பல்தேசிய கம்பனிகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டிருக்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த றூ பிரைஸ் (True Price) மற்றும் ஐ.டி.எச். நிறுவனமும் இணைந்து அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, ஹென்யாவில் குத்தகை அடிப்படையில் தேயிலை கொய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளியின் வருடாந்த வருமானம் 1080 பவுண்டுகளாகும் (215234.77 இலங்கை ரூபாய்களாகும்). நிரந்தரமாக வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் சம்பளம் 1340 பவுண்டுகளாகும். அவர்களுடைய மாதாந்த சம்பளம் இலங்கை நாணயப்படி முறையே 17,936 மற்றும் 22,254 ரூபாய்க்களாகும். அப்படியாயின் அவர்களுக்கு வாழ்வதற்குத் தேவையான வருமானத்தில், முறையே 62 சதவீதம் மற்றும் 72 சதவீதத்தையும் மாத்திரமே பெற்றுக் கொள்ளக் கூடியாதாக உள்ளது. இந்த வருமானத்தினைத் தேடிக் கொள்வதற்கு அவர்கள் இலங்கைத் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தைவிட 2 மடங்கு பறிக்க வேண்டியுள்ளது. அப்படியாயின் 48 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும்.

தேயிலை கொய்வதற்காக 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரத்தால் இதுவரையில் ஹென்யவில் 80,000 பேருக்கு வேலை இல்லாமல் போயுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தோட்டக் கம்பனிகளும், பெருந்தோட்ட உரிமையாளர் சங்கமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, இலாபத்தினை சுரண்டிக்கொள்ளும் மிக கொடூரமான நிலமைகளை இந்நாட்டு தோட்டத் தொழிலாளர்கள் மீதும் அமுல்படுத்த வேண்டும் என்பதையே ஆகும்.

விலையும் ஏற்றுமதியும் வீழ்ச்சியுறுவதற்கு ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியே காரணமாகும். நெருக்கடியின் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கங்களினால், இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்யும், பிரதானமாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அபவிருத்தியடைந்து வரும் பொருளாதார அரசியல் ஸ்திரமற்ற நிலமையினால், தேயிலையின் தேவை வீழ்ச்சியுற்றுள்ளது. அத்தோடு உலகச் சந்தையில் தமது பங்கினை அதிகரித்துக் கொள்வதற்கும், இருப்பதைப் பாதுகாத்துக் கொளவதற்கும் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையில் போட்டி அதிகரித்துள்ளது. இலங்கையின் தேயிலை தொழிற் துறையின் நெருக்கடிக்கும், இலாப வீழ்ச்சிக்கும், காரணமான இந்த நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்புக் கூறவோ அல்லது அதன் பாதிப்பை சுமக்கவோ தேவையில்லை. ஆனால் தோட்டக் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் அரசும் முழுமையாக அதனைத் தொழிலாளர்கள் மீது சுமத்த முனைகின்றன.

இலங்கைத் தொழிலாளர்களால் காங்கிரஸ் (இ.தொ.கா), வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி சார்பு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் ஜனநாக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம் (NEW), மலையக மக்கள் முன்னணி ஆகியவை உள்ளடங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட சகல தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான போராட்டம் ஒன்று ஏற்படுவதை நனவாக தடுத்து, கம்பனிகளின் திட்டத்தினை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்கு கம்பனிகளினுடனும் அரசுடனும் இணைந்து சூழ்ச்சியில் ஈடுப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களும், அரசில் அங்கம் வகித்து அமைச்சர்களாக இருந்து வரப் பிரசாதங்களை அனுபவிக்கின்றார்கள்.

இ.தொ.கா.வை அரசில் இணைத்துக் கொள்வது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தொழிலாளர்கள் மீது கம்பனிகளின் திட்டத்தினை சுமத்துவதற்காக, தொழிலாளர்களின் போராட்டங்களை திசை திருப்பி தவிடு பொடியாக்குவதன் பேரில் தமது பங்களிப்பினை செய்வதற்கு அது தயாராகவே இருக்கின்றது.

தொழிற்சங்கங்களும் அரசும் இணைந்து தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தினை 100 ரூபாவால் அதிகரிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாகவும் அவ்வாறு அதிகரிக்கப்பட்ட சம்பளம் ஏப்ரல் மாத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு வழங்ப்போவதாகவும், தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்க வங்கிகளில் இருந்த கடன் வழங்குவதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்தது. இது, சம்பள அதிகரிப்பு கிடைக்காமையினாலும் வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும், தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அபவிருத்தியடைந்து வரும் கோபத்தையும் பரந்த அமைதியற்ற நிலமையையும் தணிப்பதற்காக, அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மேற்கொண்ட பாரிய வஞ்சகமாகும். பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, உற்பத்தியின் அடிப்படையிலான சம்பள முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி கம்பனிகளுடன் இணைந்து செயற்படும்.