ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan SEP and IYSSE hold picket to demand freedom of Maruti Suzuki workers

இலங்கை சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரி மறியல் போராட்டம் நடத்தின

By our correspondents 
1 April 2017

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.இ.) அமைப்பும், இந்திய மாநிலமொன்றில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் 13 பேர் சோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கொழும்பு நகர மத்தியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தின.

சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ மறியல் போராட்டமானது இந்தியா, தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான சோடிப்பு வழக்குக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் பேரில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ள சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதம், வட இந்திய மாநிலமான ஹரியானாவில் ஒரு நீதிமன்றம், இந்த 13 தொழிலாளர்களை, நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் தீயில் மூச்சடைத்து மரணித்தமைக்கு குற்றவாளியாக கண்ட போதிலும், தொழிலாளர்களுக்கும் தீ வைப்புக்கும் இடையே எந்த தொடர்பையும் வழக்கு நிரூபிக்கவில்லை. மற்றும், போலீஸ், சட்டவிரோதமாக ஜப்பானிய வாகன கம்பனியின் நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களுக்கு எதிரான சாட்சிகளை ஜோடித்து உருவாக்கியது என்பதை நீதிபதியே தனது தீர்ப்பில் ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டார்.

சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ இன் மறியல் போராட்டம்

13 பேரில் பன்னிரண்டு பேர் புதிதாக நிறுவப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். ஹரியானா, மனேசரில் உள்ள மாருதி சுசுகி கார் ஆலையின் தொழிலாளர்கள், அரசாங்க அங்கீகாரம் பெற்ற, நிறுவன-சார்பு தொழிற்சங்கம் ஒன்றுக்கு எதிரான ஒரு கசப்பான போராட்டத்தின் மூலமே MSWU சங்கத்தை ஸ்தாபித்திருந்தனர்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆதரவாளர்களுமாக நேற்றைய மறியலில் சுமார் நூறுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தமிழ் பேசும் ஆதரவாளர்களின் கணிசமானளவு பிரதிநிதிகள் யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வடக்கில் இருந்து கொழும்புக்கு, மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு தங்கள் ஆதரவைக் காட்ட வந்திருந்தனர். மத்திய மலையகப் பிரதேசத்தில் இருந்து தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களும் மறியலில் பங்குபற்றியிருந்தனர்.

கொழும்பின் மிகப்பெரிய கோட்டை இரயில் நிலையத்திற்கு வெளியே இந்த மறியல் நடைபெற்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்ததுடன் வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் அல்லது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்தது. மறியல் போராட்டத்தின் முன்னரும் பின்னரும், சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆதரவாளர்கள், மாருதி சுசுகி தொழிலாளர்களின் விடுதலையை வெல்வதற்காக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை பலத்தையும் சுயாதீன அரசியல் வலிமையையும் அணிதிரட்டுமாறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் அழைப்பு விடுத்து வெளியிட்ட அறிக்கையின் பிரதிகளை விநியோகித்தனர். அவர்கள், மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான கம்பனி-அரச வேட்டையின் முக்கியத்துவம் மற்றும் அது எப்படி உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு உதாரணமாக அமைகின்றது என்பவை பற்றி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினர்.

போராட்டக்காரர்கள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் "சோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்" என்ற பதாதையை காட்சிப்படுத்தினர். "மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலை தோற்கடி" "சர்வதேச தொழிலாளர்களின் ஒற்றுமையை கட்டியெழுப்பு,” “ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்களுக்கு எதிராக சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடு,” “சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சர்வதேச சோசலிசத்திற்காக போராடுவோம்,” “தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியங்களுக்காக,” “தொழிலாளர் வர்க்க புரட்சிகர கட்சியை கட்டியெழுப்பு,” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் அவர்கள் சுமந்திருந்தனர்.

போராட்டக்காரர்கள், சோடிப்பு வழக்கில் சிக்கியுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு, என்று கோஷமெழுப்பினர் -2,300க்கும் மேற்பட்ட போராளிக் குணம்கொண்ட தொழிலாளர்கள் 2012ல் வேலை நிக்கம் செய்யப்பட்டு வேறு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மறியல் நடத்தியவர்கள், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் போர் திட்டங்களையும், பூகோள முதலாளித்துவ கும்பல் பேரினவாதத்தை கிளறிவிடுவதையும், அரச அடக்குமுறையை நாடுவதையும், வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்தனர். அத்துடன் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுத்தனர்.


சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா

சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ மறியல் போராட்டம் பற்றி, பகிரங்கமாக உலக சோசலிச வலைத் தளம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. போலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும், தலையிடவில்லை. அத்தகைய தலையீடு பிரதேசத்தை கடந்துகொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பை தூண்டிவிடும் என அவர்கள் விழிப்படைந்திருந்தனர்.

சோ.ச.க.யின் ஊடக அறிவிப்புக்கு பிரதிபலிப்பாக, முன்னணி தனியார் தொலைக் காட்சியான சிரச டி.வி. மற்றும் தமிழ் தினசரி வீரகேசரியும் சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. மறியல் போராட்டத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களை அனுப்பியிருந்தன. சிரச டி.வி. நிருபர், சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர்கள் பானி விஜேசிறிவர்தன, எம். தேவராஜா ஆகியோரிடம் தமிழ் மற்றும் சிங்களத்தில் வீடியோ பேட்டிகளை பதிவு செய்தார்.

சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ உறுப்பினர்கள், மறியலின் போது, மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடங்கியுள்ள இணையவழி மனுவில் கையெழுத்திடுவதற்கான வசதியையும் செய்து, குறிப்பிடத்தக்க ஆதரவையும் வென்றனர்.

நிகழ்வின் முடிவில், சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர்களான, W.A. சுனில் மற்றும் தேவராஜாவும் முறையே சிங்களம் மற்றும் தமிழில் சுருக்கமாக உரையாற்றினார். மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான சோடிப்பு வழக்கானது கம்பனி நிர்வாகம், போலீஸ், நீதித்துறை அதிகாரிகள், அப்போதைய ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசு உட்பட அரசியல் ஸ்தாபனமும் சேர்ந்து செய்த ஒரு கூட்டு சதியின் விளைவே என அவர்கள் விளக்கினர். இந்த பன்னாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் கொத்தடிமை வேலை நிலைமைகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமே "தொழிலாளர்கள் செய்த 'குற்றம்" என சுனில் அறிவித்தார்.

சோ.ச.க. பேச்சாளர்கள், மாருதி சுசுகி நிர்வாகம் ஜூலை 18, 2012 அன்று தொழிலாளர்களுக்கு எதிரான ஓர் ஆத்திரமூட்டலை எப்படி ஏற்பாடு செய்தது, தொழிற்சாலையில் வைத்து அவர்களைத் தாக்க எவ்வாறு குண்டர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டனர் என்பதை விளக்கினர். இந்த குழப்பத்தின் மத்தியில், மர்மமான முறையில் தீ பரவி, அவனிஷ் குமார் தேவ் என்ற நிறுவனத்தின் மனித வள மேலாளர் மரணமடைந்தார். "தீ வைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு அனுதாபியாக தெரிந்த மேலாளரின் மரணத்துக்கு 13 தொழிலாளர்கள் குற்றம்சாட்டப்பட்டு, சோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என தேவராஜா விளக்கினார்.


இளைஞர்கள் கையெழுத்திடுகின்றனர்

பேச்சாளர்கள், மாருதி சுசுகி தொழிலாளர்களின் வழக்கு விசாரணையே ஒரு கேலிக்கூத்து என விளக்கினர். அரசு தரப்பு சாட்சியங்கள் தாம் குற்றம்சாட்டியவர்களை தாமே அடையாளம் காட்டத் தவறியமை, தொழிலாளர்களுக்கு சார்பான ஆதராங்களை அரசின் பக்கம் திருப்பிவிட்டு நீதிபதி மீண்டும் மீண்டும் சட்டத்தை குழப்பியமை போன்ற விடயங்களை அவர்கள் சுட்டிக் காட்டினர். "தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பு தெளிவாக அரசியல் தூண்டுகோலைக் கொண்டது" என சுனில் அறிவித்தார். "இரக்கமற்ற சுரண்டல் நிலைமைகள் மற்றும் கொத்தடிமை முறை மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவோம் என்று அந்நிய முதலீட்டாளர்களுக்கு மோடியும் அவரது (பா.ஜ.க.) அரசாங்கமும் ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளன. மறுபுறம், வறிய மட்டத்திலான ஊதியங்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறை சம்பந்தமான எந்தவொரு சவாலையும் அரசாங்கம் கொடூரமாக ஒடுக்கிவிடும் என முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான சோடிப்பு வழக்கு, ஒரு தனியான இந்திய சம்பவம் அல்ல என்று விளக்கிய தேவராஜா, "இது உலகளவில் உலக முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் நெருக்கடி நிலைமைகளின் கீழ், முதலாளித்துவத்தால் செயல்படுத்தப்பட்டுவரும் சமூக எதிர் புரட்சியின் பகுதியாகும்," என்றார்.

அமெரிக்காவில் புதிய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவினதும், தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்கவினதும் அரசாங்கத்தின் கீழ், இலங்கை ஆளும் உயரடுக்கு, உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை துடைத்துக்கட்ட மேற்கொள்ளும் தாக்குதல்களை பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினர். "இத்தகைய தாக்குதல்கள் தோற்கடிப்பதற்கான ஒரே வழி தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மட்டுமே," என அவர்கள் அறிவித்தனர்.

அவர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மாருதி சுசுகி தொழிலாளர்களின் விடுதலைக்காக தொடங்கப்பட்டுள்ள சர்வதேச பாதுகாப்பு பிரச்சார இயக்கத்துக்கு ஆதரவு வழங்குவதோடு இந்த இன்றியமையா பிரச்சாரத்தை மேம்படுத்த கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 4 அன்று, மாலை 4 மணிக்கு சோ.ச.க. / ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.