ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The rift between Germany and America: A “watershed” moment

ஜேர்மனி அமெரிக்கா இடையிலான விரிசல்: ஒரு “திருப்புமுனை” தருணம்

Nick Beams
29 May 2017

வார இறுதியில் நடந்த G7 உச்சிமாநாடு அமெரிக்காவுக்கும் முக்கிய ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான பகிரங்கமான விரிசலுடன் முடிவடைந்தது. ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல், போருக்குப் பிந்திய ஸ்திரநிலைக்கு அடிப்படையை வழங்கியிருந்த அட்லாண்டிக் கடந்த கூட்டணி முடிந்து விட்டதாக அறிவிக்காத குறைதான்.

ஞாயிறன்று முனிச் பீர் கூடார பிரச்சார பேரணி ஒன்றில் உரையாற்றிய மேர்க்கெல் கூறினார்: “நாம் முழுமையாக மற்றவர்களை சார்ந்திருந்த காலம் குறிப்பிட்ட மட்டத்திற்கு முடிந்து போய்விட்டது —கடந்த சில நாட்களில் அதை நான் அனுபவத்தில் கண்டேன். ஐரோப்பியர்களாகிய நாம் நமது தலைவிதியை நமது சொந்தக் கரங்களில் எடுத்தாக வேண்டும்.”

அமெரிக்காவுடனான பகிரங்கமான மோதல்களைக் கண்ட உச்சிமாநாடு முடிவடைந்த ஒரு நாளின் பின்னர் மேர்க்கெல் பேசிக் கொண்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புரூசெல்ஸில் நடந்த ஒரு கூட்டத்தில், நேட்டோவின் உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்படும்போது அதற்கு மற்றவை உதவிசெய்வதை கடமையாக்கும் நேட்டோ உடன்படிக்கையின் ஐந்தாவது ஷரத்துக்கு உறுதிப்பாட்டை மறுஉறுதி செய்ய மறுத்ததை அடுத்து இந்த விரிசல் தோன்றியிருந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த ஒரு நேட்டோ கூட்டத்தில், கூட்டணிக்கு ஐரோப்பியர்கள் “செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதில்லை” என்று ட்ரம்ப் சிறுமைப்படுத்தினார்.

G7 இல் மிகவும் வெளிப்படையான மோதல், காலநிலை தொடர்பான 2015 பாரிஸ் உடன்படிக்கை வழிமொழியப்பட்டதன் மீது மையம் கொண்டிருந்தது, இது அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் அநீதியானது என்பதாக ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய மற்ற ஆறு உறுப்புநாடுகள் பின்வாங்க மறுத்து விட்டன. இதன் விளைவாக, உச்சிமாநாட்டின் செய்திக்குறிப்பு குறிப்பாக அமெரிக்காவின் ஆட்சேபங்களை பதிவுசெய்தது, அது கூறியது: “அமெரிக்கா காலநிலை மற்றும் பாரிஸ் உடன்படிக்கை தொடர்பான தனது கொள்கைகளை மீளாய்வு செய்யும் நிகழ்முறையில் இருப்பதால் இந்த விடயங்களில் கருத்தொற்றுமையில் இணைகின்ற ஒரு நிலையில் அது இல்லை.”

முந்தைய ஜி7 கூட்டங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தன, எட்டப்பட்ட முடிவுகளுக்கு பல்வேறு பொருள்விளக்கங்கள் அளிக்கப்பட்டன என்ற அதேநேரத்தில், பங்குபெற்ற நாடுகள் இறுதி செய்தியளிப்பில் தமது கருத்துபேதங்களை ஓரங்கட்டி வைத்து விட முடிந்திருந்தது. இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை.

மோதல்கள் மற்ற பகுதிகளுக்கும் நீண்டன. உச்சிமாநாடு நடக்கும் முன்பாகவே, உச்சிமாநாட்டை நடத்திய நாடான இத்தாலி, அகதிகளின் உரிமைகள் குறித்து உதட்டளவில் குறிப்பிடுவதற்கு முயன்றதையும் கூட அமெரிக்கா தடுத்து விட்டது.

வர்த்தகம் மற்றொரு பிரச்சினைக்குரிய விடயமாக இருந்தது. G20, G7 நிதியமைச்சர்களது கூட்டம், மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் IMF அதன் கூட்டங்களில் விடுத்திருந்த அறிக்கைகளில் இருந்து “பாதுகாப்புவாதத்தை எதிர்ப்பதற்கான” தேவை குறித்த குறிப்புகளை அமெரிக்கா அகற்றச் செய்திருந்தது.

”முறையற்ற அத்தனை வர்த்தக பழக்கங்களுக்கும் எதிராக உறுதியாக நிற்கின்ற அதேநேரத்தில், நமது சந்தைகளை திறந்து வைத்திருப்பதற்கும் பாதுகாப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்குமான” உறுதிப்பாட்டை ஜி7 இன் செய்திக்குறிப்பு உறுதிசெய்தது. ஆயினும் “பாதுகாப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவது” என்பதைச் சேர்ப்பதன் மூலம் அமெரிக்கா சிறிது பின்வாங்கும் என்று ஐரோப்பிய அரசியல்வாதிகள் கொண்டிருந்த எந்த நம்பிக்கைகளும் குறுகிய காலமே உயிர்வாழ்ந்தது என்பது நிரூபணமாயின.

கூட்டத்திற்குப் பின்னர் உடனடியாக, “முறையற்ற வர்த்தகப் பழக்கங்கள்” என்பதை ட்ரம்ப் பிடித்துக் கொண்டார். வரிசையாய் அவர் போட்ட ட்வீட்களில், “ஒரு உண்மையான சமமான களத்தை உருவாக்கியளிக்கும்” பொருட்டு “வர்த்தக முறைகேட்டுப் பழக்கங்கள் அனைத்தையும் அகற்று”கின்ற வாசகங்களை அடிக்கோடிட்டுக் காட்டி வர்த்தகம் தொடர்பான “பெரும் முடிவுகளுக்கு” அவர் பாராட்டு வாசித்தார், “பாதுகாப்புவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான” தேவை குறித்து அவர் குறிப்பிடவும் கூட இல்லை.

இந்த வார ஆரம்பத்தில், ஐரோப்பிய அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்தில் ட்ரம்ப் ஜேர்மனியை “மோசம், படுமோசம்” என்று விவரித்ததாக Spiegel Online தெரிவித்தது. அவர் மேலும் கூறினார்: “அவர்கள் அமெரிக்காவில் விற்கும் மில்லியன் கணக்கான கார்களைப் பாருங்கள். கொடுமை. நாங்கள் அதனை நிறுத்துவோம்.”

காலநிலை உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேர்க்கெல் “மிகவும் திருப்தியளிப்பதாக” விபரித்தார், அதன்பின் முனிச்சில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் விலகிக் கொண்டதன் விரிந்த தாக்கங்கள் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் ஆகியவற்றை சுருங்க விவரித்தார்.

“அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் அத்துடன் ரஷ்யா உள்ளிட்ட நமது மற்ற அண்டை நாடுகள் ஆகியவற்றுடன் நாம் நட்புறவு கொண்டிருக்கும் அவசியம் இருக்கிறது” என்றார் அவர். அவ்வாறிருந்தபோதிலும் கூட, “நமது சொந்த எதிர்காலத்திற்காக நாமே தான் போராடியாக வேண்டும்” என்று அவர் தொடர்ந்தார்.

இந்த வார்த்தைகள், அடோல்ஃப் ஹிட்லரின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தை நினைவுகூரக் கூடியவிதமாய் முனிச் பீர் கூடார பிரச்சார பேரணி ஒன்றில் கூறப்பட்டன என்ற உண்மையானது அந்த வார்த்தைகளுக்கு மேலும் முக்கியத்துவம் சேர்ப்பதாக அமைகிறது.

மேர்க்கெலின் கருத்துகளது வரலாற்றுரீதியான தாக்கங்கள் ஏராளமான பின்னூட்டங்களில் உணரப்பட்டதாய் இருந்தன.

வெளியுறவுகளுக்கான அமெரிக்க கவுன்சிலின் தலைவரான ரிச்சார்ட் ஹாஸ் அவை முக்கியமான “திருப்புமுனை” வார்த்தைகள் என்று ஒரு ட்விட்டர் செய்தியில் கூறினார். இந்த காட்சியானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் “அமெரிக்கா தவிர்க்க முனைந்து வந்திருந்ததாகும்” என்றார் அவர்.

ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான மற்றும் சர்வதேச விவகார துறையில் பேராசிரியராக இருக்கும் ஹென்றி ஃபாரல், மேர்கெலின் கருத்துக்கள் “அரசியல் வாய்வீச்சில் ஒரு பிரம்மாண்டமான மாற்றத்தை” குறிப்பதாய் இருந்ததாக வாஷிங்டன் போஸ்டில் குறிப்பிட்டார். பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “சிறப்பான உறவு” கூடுதல் பொது பிரபலம் பெற்றிருந்த அதேநேரத்தில், “ஜேர்மனி-அமெரிக்க உறவு கூடுதல் முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது என்று சொல்லலாம்”.

“முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் போல ஐரோப்பிய அமைதிக்கு ஒரு அச்சுறுத்தலாக ஆவதில் இருந்து ஜேர்மனியை தடுக்கின்ற விதமான ஒரு சர்வதேச கட்டமைப்பில் ஜேர்மனியைக் கொண்டுவருவது” நேட்டோவின் நோக்கங்களில் ஒன்றாய் இருந்ததாக ஃபாரல் எழுதினார். “ரஷ்யர்களை வெளியில் நிறுத்துவதும், அமெரிக்கர்களை உள்ளே கொண்டுவருவதும், ஜேர்மனியர்களை அடக்கி வைத்திருப்பதும்” கூட்டணியின் நோக்கமாய் இருந்ததாக நேட்டோவின் முதல் பொதுச் செயலரான ஹேஸ்டிங்க்ஸ் இஸ்மே கூறிய வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்தார். இப்போது, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் எந்த சமயத்தைக் காட்டிலும் கூடுதல் சுயாதீனமான ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கு ஜேர்மனி முனைந்து கொண்டிருக்கிறது.

ட்ரம்ப்பின் “முரட்டுத்தனமான” நடத்தையாக கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் விபரிக்கப்படுவது தான் ஜி7 விரிசலுக்கான உடனடிக் காரணமாக இருந்தது. அவருடைய நடவடிக்கைகள் முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் இடையில் ஆழமடையும் பதட்டங்களின் மிகசமீபத்திய, அத்துடன் மிகவும் வரைபடரீதியான வெளிப்பாடு மட்டுமேயாகும்.

2003 ஈராக் படையெடுப்பின் சமயத்தில், மத்திய கிழக்கில் தனது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கணக்கிட்டு இராணுவ நடவடிக்கையை ஜேர்மனி எதிர்த்தது. அதற்குப் பதிலிறுப்பாய், அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பீல்ட், “பழைய ஐரோப்பா” என்று அவர் அழைத்த ஜேர்மனியின் செல்வாக்கு பகுதியாக இருந்ததற்கும், “புதிய ஐரோப்பா” என்ற அமெரிக்காவை நோக்கி கூடுதலாய் சாய்வு கொண்ட கிழக்கு ஐரோப்பிய அரசுகளுக்கும் இடையில் பேதம்பிரித்துக் காட்டினார்.

அட்லாண்டிக் கடந்த கூட்டணி தொடர்ந்தும் பராமரிக்கப்பட்ட அதேநேரத்தில், இந்த பிளவுகள் கடந்த தசாப்தத்தின் போது தீவிரப்பட்டு வந்திருக்கின்றன. அமெரிக்காவின் நாசகரமான சர்வதேச பாத்திரம் குறித்து ஜேர்மன் அரசியல் வட்டாரங்களுக்குள் விமர்சனம் பெருகியதோடு உலக அரங்கில் ஜேர்மனி தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கான அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு -இங்கு ஜேர்மனி கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டிருக்கிறது-, சீனா -ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் ஒரே இணைப்பு ஒரே பாதை திட்டத்தில் இருந்து அனுகூலம் பெறுவதற்கு ஜேர்மனி எதிர்பார்க்கிறது-, மற்றும் ரஷ்யா ஆகியவற்றை சூழ்ந்து இந்த கருத்துவேறுபாடுகள் அமைந்துள்ளன.

2016 பிப்ரவரியில், சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அதன் அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது ஒரு புதிய ஏகாதிபத்திய உலகப் போரின் அபாயத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு அழைப்பு விடுத்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் “சர்வதேச போர் திட்டமிடலின் கட்டுப்பாடு அறை”யாக இருந்தது என்பதையும், அதன் நடவடிக்கைகள் “ஒரு உலக அமைப்புமுறையாக முதலாளித்துவத்தின் சமாளிக்கவியலாத நெருக்கடியின் மிகக் குவிப்பான வெளிப்பாடாக” மட்டுமே இருந்தன என்பதையும் அது குறிப்பிட்டுக் காட்டியது.

இதே உள்புற மற்றும் வெளிப்புற முரண்பாடுகளுக்கு முகம்கொடுக்கின்ற ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியங்களும், இதற்குச் சளைக்காத வேட்டையாடல் நோக்கங்களையே பின்பற்றுவதாக அந்த அறிக்கை விளக்கியது. “உலக பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரமானது உலகளாவிய அளவில் மறுபங்கீடு செய்யப்படுவதற்கான ஒரு ஆவேசமான யுத்தமாக சிறியதாகியிருக்கக்கூடிய ஒன்றில் தமக்கான பங்கை பத்திரப்படுத்திக் கொள்வதற்காய் அத்தனை நாடுகளும் அமெரிக்காவின் எல்லைமீறலை சுரண்டிக் கொள்வதற்கு முனைந்து கொண்டிருக்கின்றன.”

ஜி7 உச்சிமாநாட்டிலான விரிசல்கள் எடுத்துக்காட்டுவதைப் போல, பெரும் சக்திகளுக்கு இடையிலான பிளவுகள் அதிகரித்திருக்கின்றன என்பதோடு இந்த யுத்தம் அநேகமாக தீவிரமடைய மட்டுமே போகிறது.