ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සමාගම්වල කප්පාදුව පිලිගන්නා ලෙස වතු සමිති කම්කරුවන්ට බල කරයි

கம்பனிகள் வேலை நிலமைகளை வெட்டுவதை ஏற்றுக் கொளுமாறு இலங்கை தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை நிர்பந்திக்கின்றன

M. Thevarajah
14 June 2017

 இலங்கையில் களனிவெலி பெருந்தோட்டக் கம்பனி, தொழிற்சங்கங்களின் நேரடி ஆதரவுடன், புதிய வருமான-பங்கீட்டு திட்டத்தை பட்டல்கலை தோட்டத்தின் மூன்று பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம், தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளை அழித்து அவர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றுவதை இலக்காகக் கொண்டதாகும்.


பட்டல்கல தோட்டத்தின் லயன் வீடுகளுக்கு முன்னால் தற்காலிக சமையலறைகள்

உலக சந்தையில் போட்டி அதிகரிக்கின்ற நிலமையிலும் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியடைகின்ற நிலமையிலும் தமது இலாபத்தை அதிகரிகப்பதற்காக பெருந் தோட்டக் கம்பனிகள் சிலகாலமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி வந்தன. இந்த புதிய சீரழிவு திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் தமது கூலித் தொழிலாளி என்ற ஸ்தானத்தை இழப்பதுடன் ஓய்வு ஊதிய திட்டம் ஊழியர் சேமலாப நிதி, வீடு மற்றும் சிறிய மருத்துவ வசதிகள் போன்ற தற்போது அணுபவித்து வரும் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளையும் படிப்படியாக இழப்பர்.

கடந்த வருடம் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி, அடுத்த இரண்டு வருடகாலத்தில் கம்பனிகள் எல்லா தோட்டங்களிலும் இத்திட்டத்தை அமுல்படுத்த தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்காவின் அரசாங்கம், பெருந் தோட்டக் கம்பனிகளின் புதிய திட்டத்திற்கு முழுமையாக ஆதரவு கொடுக்கின்றது.

மத்திய மலையக மாவட்டத்தின் டிக்கோயாவில் உள்ள பட்டல்கல தோட்ட நிர்வாகம், ஏப்ரலில் இத்திட்டத்தை ஆரம்பித்தது. இத்தோட்டம் மேற் பிரிவு, கீழ் பிரிவு மற்றும் ஹட்லி பிரிவு என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இங்கு 240 தொழிலாள்கள் வரையில் வேலை செய்கின்றார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் தற்காலிக தொழிலாளர்கள். புதிய திட்டத்தை எஞ்சிய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கும் எதிர்பார்ப்புடன் மூன்று பிரிவுகளிலும் சில பாகங்கள் “பரீட்சாத்த அடிப்படையில்” தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, மேல் பிரிவில் ஒவ்வொருவருக்கும் 1000 தேயிலைச் செடிகளைக் கொண்ட நிலப்பகுதி 120 தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொழிலாளிக்கும் கம்பனிக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்பொழுது  ஞாயிற்றுக்கிழமையில் மாத்திரம் இந்த ஒதுக்கப்பட்ட பகுதியில் அவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ள அதேநேரம், ஏனைய ஆறு நாட்கள் மீதமுள்ள தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும். கம்பனி படிப்படியாக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியில் வேலை செய்யும் நாட்களை அதிகரித்து, நாள் சம்பள முறையை முழுமையாக  ஒழிப்பதற்கு எதிர்பாற்கின்றது.

உடன்படிக்கையில் தொழிலாளர்கள் “ஒப்பந்தக்காரர்களாக” பெயரிடப்பட்டுள்ளார்கள். ஓப்பந்தக்காரர் என்று அழைக்கப்படும் தொழிலாளி துப்பரவு செய்தல், தேயிலைச் செடிகளை பிடுங்குதல், நாட்டுதல், கவாத்து வெட்டுதல், கான் வெட்டுதல், மட்டப்படுத்தல்  ஆகிய வேலைகளை செய்து நிலத்தைப் பராமரிக்க வேண்டும். உரம் மற்றும் கிருமி நாசினிகள் கம்பனிகளினால் வழங்கப்படும். அதற்குரிய பணம் அவர்கள் நிலத்தில் இருந்து பெறும் மாத வருமானத்திலிருந்து கழிக்கப்படும். “ஒப்பந்தக்காரர்களுக்காக வேலை செய்யும்” அலுவலக ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிக்கான கொடுப்பனவு உட்பட அவர்களின் ஊதியமும் ஒப்பந்தக்காரர்களின் மாத வருமானத்திலிருந்து கழிக்கப்படும்.

ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்து, கம்பனியின் தொழிற்ச்சாலைக்கே விற்கப்பட வேண்டும், மூன்றாம் தரப்பினருக்கு கொடுக்கமுடியாது.

ஒப்பந்தக்காரர் தமது நிலப்பகுதியில் தொழிலாளர்களை வேலைக்கு அமத்த முடியும், ஆனால் அதற்கு கம்பனியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். தேயிலை கொழுந்தின் விலையை அதன் தரத்தின் அடிப்படையில் கம்பனியே தீர்மானிக்கும். ஏப்ரல் மாதத்தில் ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 58 ரூபா கொடுக்கப்பட்ட போதிலும், மே மாதத்தில் அது 51 ருபாவாக குறைக்கப்பட்டது என தொழிலாளர்கள் கூறினார்கள். எவ்வாறெனினும், நிர்வாகம் எதிர்காலத்தில் தேயிலை கொழுந்து தரமானதாக இல்லை என்று கூறியவாறு விலையை 25 ரூபாய் மட்டத்திற்கு குறைக்க கூடும், என தொழிலாளர்கள் மத்தியில் ஊகம் இருக்கின்றது. ஒப்பந்தத்தில் உள்ள அடுத்த நிபந்தனை, ஒப்பந்தக்காரர் கம்பனி எதிர்பார்க்கும் தரமான தேயிலைக் கொழுந்தை விநியோகிக்கத் தவறினால், ஒருமாத அறிவித்தலின் கீழ் நிலப்பகுதி மீண்டும் கம்பனியால் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததாக தொழிலாளர்கள் கூறினார்கள். ஆனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் வேலையை இழக்கவேண்டிவரும் என தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களை பயமுறுத்தி அவர்களை கையெழுத்திட வற்புறுத்தியுள்ளார்கள்.

ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தோ.கா), பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), வி. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற் சங்களின் கிளைகள் இங்கு உள்ளன. தொண்டமான் முன்னய இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சராக இருந்துள்ளார். அவர் இப்பொழுது சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவுகொடுக்கின்றார். திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் தற்போதய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர்.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவில்லை, மாறாக கம்பனிகளின் நலன்களையே பாதுகாக்கின்றன. கடந்த வருடம் 1000 ரூபாய் நாட் சம்பளம் கோரி தொழிலாளர்கள் நடாத்திய போராட்டத்துக்கு இந்த தொழிற்சங்கங்கள் குழிபறித்தன. உற்பத்திதிறனை அதிகரிப்பதற்கு எதிரான போராட்டங்களையும் தொழிற்சங்கங்கள் குழப்பின. தொழிலாளருக்கு தெரியாமல், வருமான பங்கீட்டு முறையை ஏற்றுக் கொண்டு, 50 ரூபாய் என்ற அற்ப சம்பள உயர்வுக்கு தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஏனைய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் போட்டி அதிரிக்கும் நிலமையின் கீழும் ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதன் விளைவாக நுகர்வோரின் கேள்வி வீழ்ச்சியடைகின்ற நிலமையின் கீழும், கம்பனிகள் சுரண்டலை அதிகரித்துள்ளன.

மே மாத ஆரம்பத்தில் வெளியாகிய மத்திய வங்கியின் வெளிப்புற செயல்திறன் ஆய்வின்வின் படி, பிரதான இறக்குமதி நாடுகளான ரஷ்யா, துருக்கி மற்றும் மத்தி கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலையின் கேள்வி தொடர்ச்சியாக வலுவிழந்து வருவதுடன் முன்னய வருடத்துடன் ஒப்பிடுகையில்  2017 ஜனவரியில்  12.5 வீதம், அதாவது 99.4 மில்லியன் அமெரிக்க டாலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.

புதிய திட்டம், குறைந்த சம்பளம் மற்றும் தொழிற்சங்களின் வகிபாகங்களுக்கும் எதிராக  தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்து வருகின்றது. பட்டல்கல தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு கூறியதாவது: “நான் உட்பட சில பெண் தொழிலாளர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம், ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் நாங்கள் அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் தொழிலை இழக்க வேண்டிவரும் என பயமுறுத்தினார்கள். பெரும்பான்மையான ஆண் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள் ஆனால் சில பெண் தொழிலாளர்கள் இன்னும் கையெழுத்திடவில்லை”.

20 வருடத்திற்கு மேலாக தோட்டத்தில் வேலை செய்யும் அவர், இந்த புதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் தமது தொழில் மற்றும் ஏனய உரிமைகளை இழக்கவேண்டிவரும் என்பதை புரிந்துகொள்ள முடியும், என்றார்.

ஐந்து வருடங்களாக தற்காலிக தொழிலாளியாக வேலை செய்வதாகவும் நிர்வாகம் அவரை நிரந்தரமாக்க மறுப்பதாகவும் மற்றுமொரு தொழிலாளி கூறினார். “எங்களுக்கு 1000 தேயிலை செடிகள் வழங்கப்பட்டுள்ளதன. எனது கணவர் தோட்டத்தில் வேலை செய்வதில்லை. கொழும்பில் வேலை செய்கின்றார். எனக்கு வழங்கிய நிலப்பகுதியை என்னால் தனிய பராமரிக்கமுடியாது. ஏனெனில் துப்பரவாக்குதல் உட்பட சகல வேலைகளும் நாங்கள்தான் செய்ய வேண்டும். சில குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலிருந்து மாலை வரை இந்த நிலப்பகுதியில் உழைக்கின்றன. அவர்களுக்கு ஓய்வே கிடைப்பதில்லை”.

தொழிலாளர்கள் தமது இலக்கான 18 கிலோ தேயிலை கொழுந்தை பறித்தால் மாத்திரமே 730 ரூபாய் நாட் சம்பளம் கிடைக்கும் என அவர் கூறினார். “அப்படியில்லாவிட்டால் உற்பத்தி திறன் கொடுப்பனவு 140 ருபாய் கிடைக்காது. வரட்சி காலத்தில் அந்த இலக்கை அடைவது மிகவும் கடினம். எல்லா தொழிற்சங்களும் சம்பளப் பிரச்சனையில் எங்களை காட்டிக் கொடுத்து இப்பொழுது இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நேரடியாக ஆதரவு கொடுக்கின்றன”.

ஹட்லி டிவிசனில் எல்லாத் தொழிலாளர்களுக்கும் தேயிலைச் செடிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோட்டத்தில் வசிக்கும் சிறிய வியாபாரி ஒருவர் தோட்டத்தில் 5 ஹெக்டயர்கள் கொடுக்கப்பட்டுள்ள அதேநேரம், தோட்டத்தில் வேலை செய்யாத மேலும் இரண்டு பேர், முறையே 2 மற்றும் 1 ஹெக்டயர் கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களை “ஒப்பந்தக்கார்ரர்களாக” மாற்றுதல் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு நிலங்களை கொடுப்பது உட்பட இந்த எல்லா மாற்றங்களும், தோட்டங்களை சிறு துண்டுகளாக கலைக்கும் நடவடிக்கையில் கம்பனிகள் ஈடுபட்டுள்ளதை காட்டுகின்றன. சிறுதோட்ட உரிமையாளர் முறை உற்பத்தியை அதிரிக்கவும் செலவை குறைக்கவும் வசதியானது என தோட்டக் கம்பனிகள் மேற்கோள் காட்டியுள்ளன. எனினும், வேறுபாடு என்னவெனில், புதிய திட்டத்தின் கீழ் தேயிலை செடிகளைப் பராமரிக்க நிலம் ஒதுக்கப்பட்டவர்களுக்கு நிலம் சொந்தமில்லை. நிலத்தின் முழு உரிமையாளரும் கம்பனியாகும். கம்பனிகள் எப்போதும் “சுமைகளை” தொழிலாளர்களின் மேல் சுமத்துவதற்கான வழியையே தேடுகின்றன.

கம்பனி பராமரிப்பின் கீழும் தோட்டத் தொழிலாளர்கள் வறுமை மட்டத்திலேயே வாழ்கின்றார்கள். பட்டல்கல தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான வீட்டு வசதிகிடையாது. பலர் தற்காலிக வீட்டிலேயே வாழ்கின்றார்கள். தொழிலாளர்களின் அரைவாசிப்பேருக்கு மலசல கூட மற்றும் தண்ணீர் வசதி கிடையாது. சில தொழிலாளர்கள் தண்ணீர் வசதிக்காக தமது ஊழியர் சேமலாப நிதியில் 30,000 ரூபாய் கடன் எடுத்து செலவு செய்துள்ளார்கள்.

இத்தகைய சமூக மற்றும் வாழ்க்கை நிலமைகள் எல்லா தோட்டங்களிலும் மேலோங்குகின்றன. புதிய முறையின் கீழ் இத்தகைய நிலைமைகள் மோசமடையும். ஒப்பந்தக்காரர்கள் என்ற புதிய பெயரில் குத்தகை விவசாயிகளாக மாற்றப்பட்டுள்ள தொழிலாளர்கள், நிலைமைகளை முன்னேற்றுவதற்காக போராடும் இயலுமை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படை தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கு கம்பனிகளின் தொழிற்துறை பொலிஸ்காரனாக தொழிற்படும் தொழிற்சங்களிலிருந்து சுயாதீனமாக அணிதிரள வேண்டும். ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர்கள் தமது சொந்த  நடவடிக்கை குழுவை அமைத்து போராட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும்.

இந்த தொழிலாளர்கள், ஏனைய தொழிலாளர் பிரிவினர் மத்தியிலும் மற்றும் இதேமாதிரியான தாகுதல்களை எதிர்கொள்ளும் இந்திய, கென்ய, வியட்நாம் மற்றும் தென் ஆபிரிக்க பெருந்தோட்டங்களில் வாழும் தமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகள் மத்தியிலுமே தமது ஆதரவாளர்களை தேட முடியும்.

தேயிலை பெருந்தோட்ட துறையை, இலாபம் கறக்கும் கம்பனிகளின் கையில் விட்டு வைத்தால் தொழிலாளர்களின் உரிமைகளை காக்க முடியாது என்பது தெளிவானது. உற்பத்தியை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தால் மட்டுமே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். இதனாலேயே, தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டம், சோசலிசத்திற்கான தொழிலாளர்களின் பரந்த போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவ கட்சி இந்த வேலைத்திட்டத்தையே அபிவிருத்தி செய்கின்றது.