ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s speech on Afghanistan: The military in command

ஆப்கானிஸ்தான் குறித்து ட்ரம்பின் உரை: உத்தரவிடும் அதிகாரத்தில் இராணுவம்

Joseph Kishore
23 August 2017

திங்களன்று மாலை தேசியளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில் ட்ரம்ப் வெளியிட்ட ஆப்கானிஸ்தான் குறித்த புதிய கொள்கை, பதினாறு ஆண்டுகள் தொடர்ச்சியான அமெரிக்க ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிற்கு எதிராக பகிரங்கமான மற்றும் கட்டுப்பாடற்ற இராணுவ வன்முறையின் ஒரு பிரகடனமாகும்.

புஷ் நிர்வாகம் அக்டோபர் 2001 இல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பை தொடங்கியதில் இருந்து, மிதமான மதிப்பீடுகளின்படி, 175,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற தள்ளப்பட்டுள்ளனர். புஷ், ஒபாமா மற்றும் இப்போது ட்ரம்பின் கீழ், அமெரிக்க இராணுவம்—மஜர்-ஐ-ஷரீப் இல் 800 தாலிபான் கைதிகளின் நவம்பர் 2001 படுகொலையில் இருந்து, காக்காரெக் இல் திருமண விருந்தில் 48 நபர்களின் 2002 படுகொலை, 2015 இல் குண்டூஸில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மையத்தில் 42 மருத்துவ உதவியாளர்கள் மற்றும் நோயாளிகளின் படுகொலை, மற்றும் இந்த கடந்த ஏப்ரலில் நன்கர்ஹார் மாகாணத்தில் அமெரிக்க குண்டுகளிலேயே மிகப்பெரிய அணுசக்தி-அல்லாத ஆயுதமான மிகப்பெரிய இராணுவ வான்வெடி குண்டு (MOAB) வீசியது வரையில்—எண்ணற்ற அட்டூழியங்கள் மற்றும் போர் குற்றங்களை நடத்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ கட்டளையகம் அவசியமென கோரும் எந்தளவிலான துருப்புகள் மற்றும் ஆதாரவளங்களையும் வழங்க ட்ரம்ப் வரம்பில்லா அதிகாரம் பெற்றிருப்பதால், இந்த வன்முறை இன்னும் அதிவிரைவாக தீவிரப்படுத்தப்படும். எந்தவொரு எதிர்ப்பையும் தோற்கடிக்க இராணுவத்திற்கு "அவசியமான கருவிகள் மற்றும் ஈடுபடுவதற்கான விதிமுறைகளை" அவர் வழங்கவிருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். “எதிரிக்கு எதிராக துரிதமாக மற்றும் முழுமையாக போர் நடத்துவதிலிருந்து பாதுகாப்புத்துறை செயலரை மற்றும் தளபதிகளைக் களத்தில் தடுக்கும்" நடவடிக்கைகள் மீதான சகல தடைகளும் நீக்கப்படும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆப்கான் மக்கள் மீதான முந்தைய படுகொலைகள் வரவிருப்பதோடு ஒப்பிடுகையில் ஒன்றுமில்லாமல் போகக்கூடும்.

எவ்வாறிருப்பினும் ட்ரம்பின் உரை வெறுமனே ஆப்கானிஸ்தானுடன் மட்டும் சம்பந்தமானது அல்ல. அது, நடைமுறையில், உலகம் மீதான ஒரு போர் பிரகடனமாகும். ட்ரம்ப் பாகிஸ்தானை அச்சுறுத்தியதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மற்றும் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே அதிகரித்துவரும் மோதல்களுக்கு மத்தியில் பகிரங்கமாக இந்திய பக்கம் தரப்பெடுத்தார். ஆப்கான் போர் விரிவாக்கத்திற்கு நேட்டோ நாடுகள் அதிக துருப்புகள் மற்றும் ஆதாரவளங்களை வழங்க வேண்டுமென்ற ட்ரம்பின் கோரிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் பெயரளவிற்கான கூட்டாளிகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் பிரதிபலித்தன.

நிர்வாகம், வட கொரியாவுக்கு எதிராக ஒரு முன்கூட்டிய தாக்குதலை தொடங்குவதற்கு விவாதித்து வருகின்ற நிலையில், இந்த உரை வழங்கப்பட்டது. என்ன திட்டமிடப்பட்டு வருகிறதோ அதுகுறித்த ஓர் அச்சுறுத்தலான மிரட்டலாக, ட்ரம்ப் அறிவிக்கையில், அவர் நிர்வாகத்தின் கீழ் "நமது இராணுவத்திற்கு பல பில்லியன் டாலர்கள் கூடுதலாக செலவிடப்பட்டு வருகிறது, நமது அணுஆயுத தளவாடங்கள் மற்றும் தற்காப்பு ஏவுகணைகளுக்காக செலவிடப்படும் மிகப்பெரும் தொகைகளும் இதில் உள்ளடங்கும்,” என்றார்.

சகல விதமான பகட்டாரவார பேச்சுகளுக்குப் பின்னால், ஒழுக்கச்சிதைவினதும் அச்சத்தினதும் ஒரு கலவை ட்ரம்ப் உரையில் மேலோங்கி இருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒவ்வொரு இடத்திலும் அதன் நடப்பு எதிரிகளை அல்லது சாத்தியமான எதிரிகளைக் காண்கிறது. அதிக குண்டுகள் வீசுவதன் மூலமாக மற்றும் அதிக மக்களைக் கொல்வதன் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதிகரித்துவரும் அதன் பொருளாதார, சமூக மற்றும் புவிஅரசியல் நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்ற கருத்தில் பெருங்குழப்பத்தின் அம்சம் நிறைந்துள்ளது.

இந்த பிரமையானது அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் இருந்து மத்திய கிழக்கு எங்கிலும், வட ஆபிரிக்காவில் மற்றும் அதற்கு அப்பாலும் 25 ஆண்டுகால முடிவில்லா போர்களில் ஒரு தோல்வி மாற்றி ஒரு தோல்வியையே உருவாக்கி உள்ளது. அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் இரத்தந்தோய்ந்த வன்முறை மூலமாக ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதில் தோல்வியடைந்துள்ளன என்பதும் இதில் உள்ளடங்கும். அமெரிக்க ஏகாதிபத்தியம், அதிகரித்தளவில், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி போன்ற அதன் மிகப்பெரிய போட்டியாளர்கள் மீது அதன் ஒருமுனைப்பைத் திருப்பி வருகிறது.

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வடிவத்தில், அமெரிக்காவிற்குள்ளேயே அது அதன் மிகப்பெரிய எதிரியை எதிர்கொண்டுள்ளது என்பது குறித்தும் ஆளும் வர்க்கம் நன்குணர்ந்துள்ளது.

ட்ரம்பின் உரை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு ஜனாதிபதி-இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஒத்த அதன் வலியுறுத்தலாக இருந்தது. என்ன திட்டமிடப்பட்டு வருகிறது, எத்தனை துருப்புகள் அனுப்பப்படுவார்கள் அல்லது எத்தனை காலத்திற்கு அவர்கள் அங்கே இருப்பார்கள் என்பது குறித்து எதுவும் அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியதில்லை என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி ஒரு கொள்கையாகவே தாங்கிப்பிடித்திருந்தார். வெளிவேஷத்திற்கு கூட காங்கிரஸின் மேற்பார்வையோ அல்லது ஒப்புதலோ இல்லாமல், எல்லா முடிவுகளும் இராணுவத்தால் எடுக்கப்பட உள்ளன. ட்ரம்ப் அவர் உரையை அமெரிக்க மக்களுக்கு வழங்கவில்லை, மாறாக படை சீருடை அணிந்த சிப்பாய்களுக்கும் மற்றும் இராணுவ ஒழுக்கசீலர்களுக்குமே வழங்கினார்.

ட்ரம்ப் உரையின் மிக குறிப்பிடத்தக்க வசனங்கள் ஆரம்பத்திலேயே இடம்பெற்றிருந்தன. ஒரு பிளவுபட்ட தேசத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இன்றியமையா சக்தியாக இராணுவத்தின் மீது துதிப்பாடலை வழங்கினார். இராணுவம், “முற்றிலும் செம்மையான நல்லிணக்கத்திற்கு" ஒரு கருவியாகும் என்றவர் அறிவித்தார். “ஒரு தேசமாக எதை நாம் அடிக்கடி மறக்கிறோம் என்பது சிப்பாய்களுக்குப் புரியும்,” என்றார். “நமது வெளிநாட்டு போர்களில் சண்டையிட நாம் அனுப்பும் இளைஞர்களும் பெண்களும், நாட்டுக்குள்ளேயே சண்டையில்லா ஒரு நாட்டிற்குத் திரும்ப வேண்டியவர்கள்,” என்றார்.

சார்லட்வில் சம்பவங்கள் இக்கருத்துக்களின் உடனடி உள்ளடக்கமாக இருந்தன. இராணுவம் "இனம், பாரம்பரிய பழக்கவழக்கம், அறிநெறிகள் மற்றும் நிறம் என ஒவ்வொரு போக்கையும் கடந்து நிற்கிறது" என்ற ட்ரம்பின் பிரகடனம், சார்லட்வில் பாசிச அட்டூழியம் குறித்து உயர்மட்ட தளபதிகளின் போலி-ஜனநாயக கருத்துக்களை ஏற்றிருந்தது. நவ-நாஜிக்களுக்கு ட்ரம்பின் பகிரங்க அனுதாபங்கள் மீது ஏற்படும் விளைவுகள் குறித்து கவலை கொண்டுள்ள இராணுவ உயரதிகாரிகள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் “ஜனநாயகம்" மற்றும் "சுதந்திரத்திற்கான" போர்களாக முன்னிறுத்தப்படும் அமெரிக்க பெருநிறுவன உயரடுக்கின் சார்பாக சிறந்த முறையில் ஆக்கிரமிப்பு போர்களை நடத்துவதற்காக, தங்களை அக்கருத்துக்களில் இருந்து தூர நிறுத்திக் கொள்ள கடமைப்பட்டவர்களாக உணர்ந்தனர்.

ட்ரம்பின் அறிக்கைகள் ஆழ்ந்த வஞ்சக உள்நோக்கங்களைக் கொண்டுள்ளன. அவை இராணுவத்தை, ஓர் உடைந்த நாட்டை ஒன்றிணைப்பவராக, கட்டமைப்பு மற்றும் ஒழுக்கத்திற்கான—ஒடுக்குமுறைக்கான ஒரு சக்தியாக சித்தரிக்கிறது. அமெரிக்காவிற்குள் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் மோதல் நிலைமைகளின் கீழ், அவர் உரையானது, வெளிநாடுகளில் போர் தொடுப்பதில் இராணுவத்தின் மத்திய பாத்திரம் குறித்த ஒரு பிரகடனம் மட்டுமல்ல, மாறாக உள்நாட்டினுள் ஒழுங்கைப் பேணுவதற்குமான அறிவிப்பும் ஆகும்.

பாதுகாப்புத்துறை செயலராக ஓய்வூ பெற்ற தளபதி ஜேம்ஸ் மாட்டிஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியில் இருக்கும் தளபதி எச். ஆர். மெக்மாஸ்டர், மற்றும் முதலில் உள்நாட்டு பாதுகாப்பு செயலராகவும் இப்போது வெள்ளை மாளிகை தலைமை தளபதியாகவும் ஓய்வூ பெற்ற தளபதி ஜோன் கெல்லி ஆகியோரின் வடிவில், இராணுவம், ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான அரசு எந்திரத்தின் கட்டுப்பாட்டை நேரடியாக கொண்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அடியிலிருக்கும் நோய்க்கு ட்ரம்ப் நிர்வாகம் ஒரு காரணமல்ல, மாறாக ஓர் அறிகுறியாகும். முடிவில்லா போரும் மற்றும் நான்கு தசாப்தங்களாக சமூக எதிர்புரட்சியும் அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அடித்தளங்களை அடியோடு அரித்துள்ளன. உயர்மட்ட தளபதிகள் அரசியல் கொள்கை வகுப்பாளர்களாக செயல்படுகின்றனர். நிதியியல் செல்வந்த தட்டுக்களுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்துள்ள அவர்கள், ஊடக மற்றும் அரசியல் ஸ்தாபகத்தில் அனைவராலும் புகழப்படுகின்றனர். சமூக அமைதியின்மைக்கு பீதியுற்று, ஆளும் வர்க்கம் உளவுத்துறை முகமைகளின் உதவியோடு, ஆயுதமேந்தியவர்களின் அதன் அமைப்புகளை —இராணுவம் மற்றும் பொலிஸை— நோக்கி திரும்புகின்றது.

இராணுவத்தின் செல்வாக்கை எதிர்ப்பதற்குப் பதிலாக, ஜனநாயகக் கட்சியில் உள்ள ட்ரம்ப் விமர்சகர்கள் அவர்களால் ட்ரம்ப் நிர்வாகத்தை ஸ்திரப்படுத்தி, அதை நிர்பந்தித்து ஒபாமா நிர்வாகத்தின் ரஷ்யாவை நோக்கிய மோதல் கொள்கையை தொடரவும் மற்றும் தீவிரப்படுத்தவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் கெல்லி, மாட்டிஸ் மற்றும் மெக்மாஸ்டர் பக்கம் திரும்பி உள்ளனர். மாட்டிஸ் மற்றும் கெல்லி இராஜினாமா செய்ய வேண்டுமா என்று வாரயிறுதியில் கேட்கப்பட்ட போது, ஒபாமாவின் உள்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜெஹ் ஜோன்சன், பரஸ்பர நல்லுணர்வை வெளிப்படுத்தினார். “நிச்சயமாக இல்லை… கப்பலை சரியாக திசைதிருப்ப நமக்கு ஜோன் கெல்லி, ஜிம் மாட்டிஸ், எச். ஆர். மெக்மாஸ்டர் போன்றவர்கள் அவசியப்படுகிறார்கள்,” என்றார்.

கடந்த வாரம் ட்ரம்பின் பாசிசவாத தலைமை மூலோபாயவாதி ஸ்டீபன் பானனின் பதவிநீக்கத்தில் போய் முடிந்த, வாஷிங்டனில் நடந்து வரும் அரசியல் சண்டையின் முடிவு, ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது இராணுவம் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் நேரடி மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதாக இருக்கும். திங்கட்கிழமை உரையானது, அரசியல் சக்திகளின் இந்த திருப்பத்தில் ட்ரம்பின் பாகத்தில் வழங்கப்பட்ட ஒப்புதலாக இருந்தது.

ட்ரம்ப் உடனான அவர்களின் மோதலில், ஜனநாயகக் கட்சியினரும் அவர்களது அரசியல் கூட்டாளிகளும், மிக முக்கிய பிரச்சினைகளான சமூக சமத்துவமின்மை, வறுமை, போர் ஆகியவற்றுடன், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு மிக ஆழ்ந்த அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இராணுவ-தொழில்துறை-நிதியியல் கூட்டின் அதிகாரம் முன்பில்லாதளவில் அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளை, முடிவின்றி தொடர்ச்சியாக வெவ்வேறு பிரச்சினைகளுக்குள் புதைத்துவிட செயற்பட்டு வருகின்றன.

முன்பினும் அதிக இராணுவ வன்முறைக்கு ட்ரம்ப் பொறுப்பேற்பதற்கு விடையிறுப்பாக, ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமானது, ஆளும் வர்க்கம் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையை மற்றும் அவர்களது சகல அமைப்புகள் மற்றும் பயிலகங்களுக்கு எதிர்ப்பாக சர்வதேச அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரை:

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்
[18 February 2016]