ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s UN tirade and the logic of imperialism

ட்ரம்பின் ஐ.நா. வெறிப்பேச்சும், ஏகாதிபத்தியத்தின் தர்க்கமும்

Bill Van Auken
22 September 2017

ஏகாதிபத்தியம் "கண்ணைக் கட்டிக் கொண்டு ஒரு பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது,” என்று 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். இக்கருத்துக்கள் வெளியாகி வெறும் ஓராண்டுக்குள், ஹிட்லர் பெரிதும் நிராயுதபாணியான போலாந்துக்கு எதிராக அவரது இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, இராண்டாம் ஏகாதிபத்திய உலகப் போர் பிரளயத்தை இயக்கத்திற்கு கொணர்ந்தார்.

ஜேர்மனியில் மூன்றாம் குடியரசு நாட்களின் பின்னர் செவியுற்றிராத வார்த்தைகளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு இன அழிப்பு போரைத் தொடங்க பகிரங்கமாக அச்சுறுத்தி பேசிய வெறிப்பேச்சுக்களுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கியின் அந்த வார்த்தைகள் மீண்டும் பொருத்தமான தன்மையை பெற்றுள்ளன.

ஒரு பைத்தியக்காரரின் பிதற்றல்கள் தவிர அதற்கு கூடுதலாக வேறொன்றுமில்லை என்றிருந்திருந்தால், வட கொரியாவை "முற்றிலுமாக அழிக்க" ட்ரம்பின் அச்சுறுத்தல் மக்கள் ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகம் எங்கிலும் கண்டன கூச்சலைச் சந்தித்திருக்கும். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் மற்றும் அதன் பிரதான ஊடக பெருநிறுவனங்களுக்குள் நிலவும் மிதமான விடையிறுப்புத்தான் மலைப்பூட்டுகிறது. குறிப்பாக அந்த உரை எதிர்கொண்ட விமர்சனங்களின் விதத்தை பார்க்கையில், அவை ட்ரம்பின் மிகவும் மிதமிஞ்சிய விகாரமான வாய்சவடால் என்று மழுப்புவதாகவோ அல்லது அவரது தலையீட்டின் தந்திரோபாய பொருத்தம் பற்றி கேள்வி எழுப்புவதாகவோ உள்ளன.

வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் இந்தாண்டு முழுவதும் ஓயாது தீவிரமடைந்து வந்துள்ளன. ஆனால் இதுவரையில் ஒரு போரின் விளைவுகள் குறித்து அங்கே எந்தவிதமான ஆழ்ந்த உத்தியோகபூர்வ பொது விவாதமும் நடக்கவில்லை. இப்பிரச்சினை மீது காங்கிரஸில் விவாதம் நடத்தப்படவில்லை, செனட் கேள்வி நேரத்தை வெளிப்படையாக மற்றும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென்ற அழைப்பும் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்க அரசின் போர்வெறி மீது தயவுதாட்சண்யமற்ற வெளிப்படையான எந்த கண்டனமும் இல்லை.

அமெரிக்க இராணுவமும் அதனுடன் தொடர்புபட்ட சிந்தனை குழாம்களளும் செய்துள்ள ஆய்வுகள் உள்ளன, அவை அமெரிக்கா-வட கொரியா போரால் ஏற்படும் பயங்கரங்கள் மீது திகிலூட்டும் அறிகுறிகளை வழங்குகின்றன. “ஆணுஆயுதமில்லா போரில் ஒரு மில்லியன் பேராவது உயிரிழப்பார்கள்", அதேவேளையில் ஏதேனும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவைப்பொறுத்து இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற மதிப்பீடுகளை பிரிட்டிஷ் நாளிதழ் டெலிகிராப் மேற்கோளிடுகிறது.

கொரியாவிற்கான அமெரிக்க படை நடவடிக்கைகளுக்கான தலைமை தளபதியின் துணை உதவியாளராக சேவையாற்றிய ஓய்வூபெற்ற தளபதி ரோப் கிவன்ஸ் எழுதுகையில், “ஒவ்வொரு நாள் தாக்குதலில் நாங்கள் வடக்கில் 20,000 இழப்புக்களை ஏற்படுத்துவோம்,” வட கொரியா "முதல் ஒருசில நாட்களுக்குள் சியோலில் நாளொன்றுக்கு 20,000 பேரை பாதிப்புக்குடபடுத்தும்,” என்றார். “மத்திய கிழக்கில் கடந்த 16 ஆண்டுகால நமது செயலூக்கமான தாக்குதலுடன் ஒப்பிட்டால்" கொல்லப்படுவோர் மற்றும் ஊனமடைவோரின் எண்ணிக்கை மில்லியன்களில் இருக்கும் என்றவர் எச்சரிக்கிறார்.

போரின் முதல் கட்டத்தில் மட்டுமே சியோலில் 10,000 உயிரிழப்புகள் மற்றும் தென் கொரியா முழுவதிலும் ஒரு மில்லியன் உயிரிழப்புகள் என்ற மதிப்பீடுகளை உள்ளடக்கிய கட்டுரை ஒன்றை நியூ யோர்க்கர் வெளியிட்டது, “தீபகற்பத்தின் அழிவு நாசகரமாக இருக்கும், மிகவும் நாசகரமாக இருக்கும் ...மேலும் அமெரிக்காவும் சீனாவும் போருக்குள் இழுக்கப்பட்டால், அது எப்படி முடிவடையும் என்று எவராலும் சொல்ல முடியாது,” என்று எச்சரித்த ஓய்வூபெற்ற அமெரிக்க இராணுவ தளபதியின் எச்சரிக்கையை அது மேற்கோளிட்டது.

அக்கட்டுரை வாஷிங்டனில் உள்ள மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச பயிலக அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் Mark Fitzpatrick ஐ மேற்கோளிட செல்கிறது. வட கொரிய ஆட்சியின் ஒரு தோல்வியுமே கூட ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் எதிர்கொண்ட எதுவொன்றையும் விஞ்சுமளவுக்கு, அமெரிக்க இராணுவத்திற்கு எதிரான ஒரு நீடித்த கிளர்ச்சிக்கான நிலைமைகளை மட்டுமே உருவாக்கும் என்றவர் எச்சரிக்கிறார்.

வட கொரியாவுக்கு எதிரான ஒரு போரால் கட்டவிழும் சூறாவளி அமெரிக்காவை உலகளவில் தனிமைப்படுத்தும். அந்நாட்டிற்குள்ளேயேயும் உலகெங்கிலும் அது மக்கள் குமுறலின் ஓர் அலையைக் கட்டவிழ்த்துவிடும். ஆனால் இவ்வாறிருப்பினும், நிதிய-பெருநிறுவன செல்வந்த தட்டுக்களும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் ஈவிரக்கமின்றி கண்மூடித்தனத்துடன் தங்களின் இராணுவவாத திட்டநிரலையே பின்தொடர்கின்றனர்.

அமெரிக்காவின் B-1B அணுகுண்டுவீசிகள் மற்றும் F-35 போர்விமானங்கள் இராணுவத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிக்கருகே குண்டுகள் வீசியதுடன், கொரிய தீபகற்பத்தின் மீது இப்போதும் மிக ஆத்திரமூட்டும் இராணுவ பயிற்சிகளை அது மேற்கொண்டுள்ள சூழலில் தான் ஈரான் மற்றும் வெனிசூலாவுக்கு எதிராக மூர்க்கமான அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய ட்ரம்பின் உரை வந்துள்ளது. ஐரோப்பாவில், நேட்டோவும் ரஷ்யாவும் ஒரேநேரத்தில் பரஸ்பர விரோதத்துடன் போர் ஒத்திகைகளை நடத்தி வருகின்றன, அதேவேளையில் சிரியாவில், வாஷிங்டனின் பினாமி சக்திகளும் அவர்களின் அமெரிக்க சிறப்பு செயல்பாடுகளைக் கையாள்பவர்களும் கிழக்கு பாலைவன பகுதியான Deir Ezzor இல் ரஷ்ய சிறப்பு படைகள் ஆதரிக்கும் சிரிய இராணுவத்துடன் ஓர் ஆயுத மோதலின் விளிம்பில் உள்ளனர்.

இப்போதைய கேள்வி, ஒரு புதிய உலகப் போர் நடக்குமா, அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா என்பதல்ல மாறாக எண்ணற்ற உலகளாவிய மோதல்களில் எது அதற்கு தூண்டுதலாக இருக்கப் போகிறது என்பது தான் கேள்வியாக உள்ளது.

போர் அபாயமானது டொனால்ட் ட்ரம்பின் நோய்ப்பட்ட மூளையிலிருந்து எழவில்லை, மாறாக அது உற்பத்தி சக்திகளின் தனியார் சொத்துடைமை மற்றும் உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாக பிரிந்துள்ள அடிப்படையில், நெருக்கடியில் சிக்கிய ஓர் அமைப்புமுறையான உலக முதலாளித்துவத்தினதும் மற்றும் அமெரிக்காவினதும் நெருக்கடியின் தர்க்கத்திலிருந்து எழுகிறது.

ட்ரம்பின் இனப் படுகொலை அச்சுறுத்தல்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நீடித்த பரிணாமத்தினது இறுதி விளைவாகும். அது 1945 இல் அணுகுண்டுகள் வீசி ஹிரோஷிமா-நாகசாகி மக்களை எரித்து சாம்பலாக்கியதன் மூலமாக மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக தன்னை அறிவித்துக் கொண்டது. அதற்கடுத்து அது வட கொரியா மற்றும் வியட்நாமில் நிலைகுலைக்கும் வன்முறை போர்களைத் தொடுத்தது, அதில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் ஒரு கால் நூற்றாண்டில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் ஒருபோல பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அமெரிக்க ஆளும் வர்க்கம், அதன் வீழ்ச்சி அடைந்துவந்த பொருளாதார நிலைமையை ஆயுத பலத்தைக் கொண்டு சரிகட்ட முனைந்த நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசுகள் நடைமுறையளவில் இடைவிடாத போர்களில் ஈடுபட்டு வந்துள்ளன. இந்த மூலோபாயம், ஆப்கானிஸ்தானில் இருந்து லிபியா மற்றும் சிரியா வரையில், மானக்கேடான தொடர் தோல்விகளையே உருவாக்கி உள்ளது.

ஆனால் அமெரிக்க இராணுவவாதத்தின் அடுத்தடுத்த தோல்விகள், முன்பினும் அதிகமாக போருக்கான தூண்டுதல்களை மட்டுமே விரைவுபடுத்தின என்பதோடு, வறிய மற்றும் பெரிதும் நிராயுதபாணியான நாடுகள் மீதான பென்டகனின் பார்வை, வாஷிங்டனின் பிரதான பிராந்திய மற்றும் உலகளாவிய போட்டி நாடுகள் மீது முன்பினும் அதிகமாக திரும்பியுள்ளது. இதில் ஜேர்மனி போன்ற இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய நீண்டகால கூட்டாளிகளும் உள்ளடங்கும், அமெரிக்காவுடனான இவற்றின் உறவுகள் அதிகரித்தளவில் சச்சரவுக்கு உள்ளாகி உள்ளது.

இன்று தீர்க்கமான கேள்வி, போருக்கு எதிரான ஓர் இயக்கத்தின் அபிவிருத்தியில் தொழிலாள வர்க்கத்தின் தலையீடாகும்.

சென்ற வாரத்தின் அச்சுறுத்தலான அபிவிருத்திகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) பெப்ரவரி 2016 இல் வழங்கிய சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் அறிக்கையை உறுதியாக ஊர்ஜிதப்படுத்துகிறது. “ஒட்டுமொத்த உலகமும் விரிந்து சென்று கொண்டிருக்கும் ஓர் ஏகாதிபத்திய வன்முறை சுழலுக்குள் மேலும் மேலும் இழுக்கப்பட்டு வருகிறது,” என்று எச்சரித்த அந்த அறிக்கை, ஒரு புதிய பாரிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான கோட்பாட்டுரீதியிலான அரசியல் அடித்தளத்தை விவரித்தது.

இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை காரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூகத்தின் அனைத்து முற்போக்கு கூறுபாடுகளையும் தன் பின்னால் அணிதிரட்டிய அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரள்வே, போரைத் தடுப்பதற்கான அத்தகைய இயக்கத்திற்கு அவசியமாகிறது.