ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

පැෆරල් සංවිධානය පලාත්පාලන මැතිවරනය තුල මැදිහත්වීමට පොලිසියට උඩගෙඩි දෙයි

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பஃபரல் அமைப்பு பொலிசின் தலையீட்டுக்கு முண்டுகொடுக்கின்றது

By D.A. Anjana
8 January 2018

தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களிடம் பொலிஸ் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோருவதற்கு திட்டமிட்டிருப்பதாக சுதந்திர மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (People’s Action for Free and Fair Election-PAFFE) அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஊழல் நிறைந்த தனிநபர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காக என்பது இதற்கு சாக்குப் போக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை குற்றச்சாட்டுக்கள் உள்ள கணிசமான எண்ணிக்கையினர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இப்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் அத்தகையவர்கள் போட்டியிடுகின்ற நிலையில், வாக்காளர்களுக்கு மாற்றீட்டைத் தேர்வு செய்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறுகின்றார். அதனால் குற்றச்சாட்டுக்கள் அல்லாத ஊழலுக்கு உடந்தையில்லா நபர்கள் தேர்தலில் போட்யிடும் முறையாக, தேர்தலுக்கு வேட்பாளர்களாக போட்டியிட முன்வரும் போது பொலிஸ் அறிக்கைகளை வழங்குவதை கட்டாயப்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையாளர் உட்பட அரச அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடுவதாக ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இன்னொரு அடியெடுத்துவைத்து, டிசம்பர் 29 அன்று, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவைச் சந்தித்த பஃபரல் அமைப்பின் செயலாளர், இம்முறை தேர்தலில் போட்டியிடும் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் கொண்ட நபர்கள் சம்பந்தமான ஒரு அறிக்கையை அவரிடம் கொடுத்துள்ளதாக ஊடகங்களிடம் உத்வேகத்துடன் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரிடம் ஹெட்டியாராச்சி அந்த அறிக்கையை ஒப்படைக்கும் படத்துடன் அந்த அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

பஃபரல் அமைப்பின் இந்த நடவடிக்கையானது அரச ஒடுக்குமுறை இயந்திரமான பொலிசுக்கு, அரசியல் கட்சிகளுக்குள் விரலடிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். ஊழல்மிக்க மனிதர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதே அதற்கு போர்த்தப்பட்டுள்ள போர்வையகும்.

“ஊழல்மிக்க நபர்கள்” தேர்தலில் போட்டியிடுவதனால் மக்களால் மற்றீட்டைத் தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகின்றது என பஃபரல் அமைப்பு கூறும் கதை பச்சைப் பொய்யாகும். 1948ல் போலி சுதந்திரத்தில் இருந்தே “ஜனநாயகம்” மற்றும் “ஜனநாயக சோசலிசம்” என்ற பெயர்களில் முன்னெடுக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்க ஆட்சி மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கட்சிகள் அழுகிப் போயுள்ளதே உண்மையில் நடந்துள்ளது. இந்த கட்சிகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மத்தியில் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேர்வு செய்துகொள்வதற்கு மாற்றீடு கிடையாது.

இரண்டாவது விடயம், பஃபரல் அமைப்பு முதலாளித்துவ அரசுக்கு உபதேசம் செய்து, அதைப் பலப்படுத்துவதற்கு முன்வந்துள்ளது. இந்த அமைப்பு, பல்வேறு கட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சகல தரவு அறிக்கைகளையும் முதலாளித்துவ ஒடுக்குமுறை இயந்திரத்தின் கையில் சேகரித்துக்கொள்வதற்காக பொலிஸ் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தையே ஊக்குவிக்கின்றது. எந்தவொரு அரசியல் இயக்கத்துக்குள்ளும் பொலிஸ் செய்யும் தலையீட்டுக்கு தொழிலாள வர்க்கம் ஒத்துழைப்பு கொடுக்காது. அது மறுபக்கம் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சாக்குப் போக்காகப் பயன்படுத்தப்படும். முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் அதன் கட்சிகள் மற்றும் நபர்களுக்கு சட்டத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு போதுமானளவு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறியாதவர் யார்?

அரசாங்கம் சட்ட விதிகள் மற்றும் நவீன ஆயுதங்களை வழங்கி பொலிசை எல்லாப் பக்கத்திலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்ற சூழ்நிலையிலேயே பஃபரல் அமைப்பின் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை எனப்படுவது, இப்போது மிகவும் மேம்படுத்தப்பட்டு, 15 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டைகளை வழங்கும் புதிய சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, தனிநபர்கள் பற்றிய தகவல்கள் குடும்பங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்டு, தேசிய அளவில் செயற்படும் பதிவில் மற்றும் தரவு களஞ்சியத்திற்குள் உள்ளடக்கப்படுவதோடு, தனிநபர்களின் தரவுகள், ஆள் அடையாளங்கள், விரல் அடையாளங்கள் மற்றும் குருதி வகை உட்பட உள்ளடக்கப்பட்ட இலத்திரனியல் அடையாள அட்டை ஒன்று வழங்கப்படுகின்றது. “சேதமடைவதை தடுப்பதும், போலியாக பிரதியெடுப்பதையும் தடுப்பதற்காக” என இதற்கு பொலித்தீன் போர்வை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொலிசுக்கு தரவுகளை சேகரித்துக்கொள்வதற்காக, கொழும்பு உட்பட பிரதான நகரங்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு “குற்றவாளிகளையும் முடிச்சவிக்கிகளையும் ஒடுக்குவதற்கு” என்பது அதற்கு சாக்குப் போக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரச்சாரங்கள் மற்றும் அவற்றில் ஈடுபடும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படுகின்றது. அதே போல், ஊர்வலங்கள் உட்பட போராட்டங்களை படம் எடுப்பதற்காக பொலிசார் பயன்படுத்தப்படுகின்றனர். பொலிசுக்கு தேவையானபோது “அரச-எதிரிகளை” ஒடுக்குவதற்காகப் பயன்படுத்துவத்ற்கே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காலங்காலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பொலிசைப் பலப்படுத்தும் நடவடிக்கை, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிதரமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழ் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம், தமது உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் சக்திவாய்ந்த போராட்டங்கள் வளர்ச்சியடைகின்ற நிலைமையில், முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கும் பொலிஸ் ஆட்சி ஒன்றை ஸ்தாபிப்தற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பஃபரல் அமைப்பு பொலிசுக்கும் புதிய சட்டங்கள் மற்றும் பாய்ச்சல்களை ஏற்பாடு செய்வதற்கும் முண்டுகொடுத்து, இந்த பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கின்றது.

1980ல் ஜூலை வேலை நிறுத்தம் நசுக்கப்பட்டமை, 1982ல் மோசடியான மக்கள் கருத்துக் கணிப்பு மற்றும் தமிழர்-விரோத இனவாத ஆத்திரமூட்டல்களை உயர்த்தி யுத்தத்தை தொடங்கியமை உட்பட தாக்குதல்களின் காரணமாக, முதலாளித்துவ வர்க்க ஆட்சி சம்பந்தமாக மக்கள் மத்தியில் அதிருப்தி வளர்ச்சியடைந்து வந்த சூழ்நிலையியேலே, இந்த அரச சார்பற்ற அமைப்பான “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பஃபரல்)” 1987ல் ஸ்தாபிக்கப்பட்டது.

முதலாளித்துவ அமைப்பு முறையுடன் பிணைந்துள்ள கட்சிகளைத் துப்புரவு செய்து, வர்க்க ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற மாயையை பஃபரல் உட்பட அமைப்புகளால் தூக்கிப் பிடிக்கப்படுகின்றது. போலி இடதுகள் இந்த அமைப்புகளைச் சூழ நின்று இந்த மாயையை பரப்புவதற்கு செயற்படுகின்றனர். முதலாளித்துவ வர்க்க ஆட்சியை பேணுவதற்கு இன்றியமையாத சேவையையே அரச-சார்பற்ற அமைப்புகள் உலகம் பூராவும் செய்து வருகின்றன.