ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French automaker PSA colludes with unions to prepare mass job cuts

பிரெஞ்சு வாகன உற்பத்தி நிறுவனமான PSA பாரிய வேலை வெட்டுக்களுக்கான தயாரிப்பில் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுகிறது

By Alex Lantier
10 January 2017

முன்கூட்டிய ஓய்வுகள் மற்றும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஜனநாயகவிரோத தொழிற்சட்ட உத்தரவாணைகளில் வழங்கப்பட்டிருக்கும் கூட்டு ஒப்பந்த உடைப்பு (Rupture d’un contrat collectif - RCC) ஆகியவற்றை பயன்படுத்தி பாரிய வேலை வெட்டுகள் செய்வதைக் குறித்து விவாதிப்பதற்காகவும் தயாரிப்பு செய்வதற்காகவும் வாகன உற்பத்தி நிறுவனமான PSA Peugeot-Citroën நேற்று பிரான்சின் தொழிற்சங்க கூட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

பிரான்சில் 2,200 வேலைகள் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், மற்ற வேலை வெட்டுக்கள் ஐரோப்பாவெங்கிலுமான PSA இன் துணைநிறுவனங்களுக்காக திட்டமிடப்பட்டதாகவும் இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த ஆரம்பகட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. PSA இன் பிரிட்டிஷ் துணைநிறுவனமான Vauxhall இன் Ellesmere Point ஆலையில் கூடுதலாக 250 வேலைகள் வெட்டப்பட இருப்பதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது. PSA சுமார் 4,000 வேலைகளை வெட்டுவதற்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில், ஜேர்மனியில் Opel இல், ஆயிரக்கணக்கான “சுயவிருப்ப” ஓய்வுகளுக்கு உடன்பட்டதன் பின்னர், தொழிற்சங்கங்களும் நிர்வாகமும் நேற்று தொழிலாளர்களை ஆறு மாதங்களுக்கு பகுதி-நேர வேலையாகக் குறைத்தன.

2017 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், PSA குழுமம் Opel மற்றும் Vauxhall ஐ அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸிடம் இருந்து 1.9 பில்லியன் யூரோ விலைக்கு (2.3 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கி, சந்தையில் முன்னிலையில் இருக்கும் Volkswagen நிறுவனத்திற்கு சவால் விடுகின்ற ஒரு பிரம்மாண்ட அளவிலான ஐரோப்பிய கார் உற்பத்திநிறுவனத்தை உருவாக்கியது.

ஐரோப்பாவில் தொழிலாளர்களின் வேலைவேகத்தை அதிகரிப்பதற்கும், தொழிலாளர்கள் மீதான சுரண்டலை பரந்த அளவில் தீவிரப்படுத்துவதற்கும் PSA தீட்டுகின்ற திட்டங்களுக்கு எதிரான ஒரு சுயாதீனமான, சர்வதேச மற்றும் அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்கும் அவசியத்திற்கு தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மக்ரோனினதும் ஆதரவுடன், PSA, அதிக ஊதியம்பெறும் மூத்த முழுநேரத் தொழிலாளர்களின் இடத்தில் குறைந்தபட்ச ஊதியம் அளிக்கப்படுகின்ற இளைய தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு பிரதியிட்டு, தொழிலாளர் படையை மறுசீரமைக்க நோக்கம் கொண்டிருக்கிறது.

பாரிஸ் பகுதியில் இருக்கும் ஒரு PSA ஆலையில் வேலைசெய்கின்ற ஸோஃபி என்ற ஒரு இளம் தற்காலிகத் தொழிலாளியிடம் WSWS செய்தியாளர்கள் நேற்று பேசினர்: “மணிக்கு 9.96 யூரோக்கள் (11.89 டாலர்கள்) விகிதத்தில் தங்களுக்கு ஊதியமளிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார். “முழுநேரத் தொழிலாளர்கள் வேலைசெய்யும் அதே காலஅளவிற்கு நாங்களும் வேலைசெய்கிறோம். நான் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை செய்கிறேன், சிலசமயங்களில் தொழிற்சாலையில் வரச் சொன்னால் சனிக்கிழமையும் கூட வருகிறேன்.”

வாகன உற்பத்தித் துறையில் தற்காலிகத் தொழிலாளர்களை அதிகரிப்பதற்கு PSA மற்றும் மக்ரோன் போடும் திட்டங்களை அவர் விமர்சித்தார்: “அது நல்லதன்று. ஒரு முழு-நேர வேலையே பாதுகாப்பானது. தனிப்பட்ட முறையில் தற்காலிகத் தொழிலாளியாக இருப்பது எனக்கு அதிக சிரமமில்லை, ஏனென்றால் நான் பின்னாளில் வேறேதேனும் வேலை செய்வதற்கே நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வயதானவர்களுக்கு, அவர்கள் மறுபடியும் பயிற்சி பெறுவது இயலாது என்பதால், அது கடினமானதாகும்.” ஒரு தற்காலிகத் தொழிலாளியாக “நீண்டகால ஒப்பந்தம்” கிடைப்பதுதான் PSA இடம் இருந்து தன்னுடைய அதிகப்பட்ச எதிர்பார்ப்பாக இருக்கிறது என்று தெரிவித்த அவர், “ஆனால் இப்போது வேலைகள் ஒழுங்கமைக்கப்படும் விதத்தைக் கொண்டு பார்த்தால் அது சாத்தியமாகப் போவதாய் தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

மக்ரோன் பற்றிக் கூறுகையில் ஸோஃபி, “அவரைப் பற்றிய எந்த அக்கறை காட்டுவதிலும் எனக்கு விருப்பமில்லை. அவரைப் பொறுத்தவரை, முதலாளிகளுக்குத்தான் அவர் எல்லாமுமாய் இருக்கிறார், தொழிலாளர்களுக்கு ஏதுமில்லை.”

இந்த பரந்த வெகுஜன எதிர்ப்பு இருக்கின்றபோதிலும், பிரான்சிலும் மற்றும் பிறவெங்கிலும் இருக்கும் தொழிற்சங்கங்கள் PSA இன் திட்டங்களுக்கு எந்த உண்மையான எதிர்ப்பையும் முன்நிறுத்தப் போவதில்லை. 2009 பிரெஞ்சு வாகன உற்பத்தி நிறுவனங்களது பிணையெடுப்பில் இருந்து பில்லியன் கணக்கான யூரோக்களை வரிசெலுத்துவோர் நிதியிலிருந்து பெற்று முன்கண்டிராத அளவிலான இலாபங்களைக் காட்டியிருப்பதன் பின்னர், PSA, பிரான்சில் உள்ள அதன் தொழிற்சாலைகளில் ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசியாவின் பரிதாபத்திற்குரிய மட்டங்களுக்கு தள்ளுவதன் மூலமாக நிறுவனத்தின் நீண்ட-கால போட்டித்திறனை உறுதிசெய்து கொள்வதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தேசிய அடிப்படையில், பிரான்சில் இருக்கும் தொழிற்சாலைகளது இலாபமீட்டு நிலையை உறுதிசெய்கின்ற அடிப்படையில் PSAஉடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள், ஊதியங்கள் மற்றும் வேலைகளில் ஆழமான வெட்டுக்களைத் திணிக்கின்ற PSAவின் உலகளாவிய மூலோபாயத்தை எதிர்ப்பதற்கு எந்த துடிப்பான திறனுமற்று இருக்கின்றன.

இத்திட்டம், PSA இன் வேலைக் குழுவில் ஜனவரி 19 அன்று முன்வைக்கப்பட இருப்பதாகவும் பிப்ரவரியில் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், கூட்டு ஒப்பந்த உடைப்பு (RCC) க்கு தொழிற்சங்கங்களது சம்மதத்தைப் பெறுவதை —மக்ரோனின் உத்தரவாணைகளின் ஷரத்துகளின் கீழ் இது அவசியமாகும்— PSAக்கு சிரமம் உண்டாக்கப் போவதில்லை என்பதை தொழிற்சங்கங்கள் நேற்று தெளிவாக்கின. மறுசீரமைப்புத் திட்டத்துடன் தங்களுக்கு அதிகபட்சம் தந்திரோபாய பேதங்களே உள்ளதாக பல தொழிற்சங்கங்களும் சுட்டிக்காட்டின.

பிரான்சின் ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT), 1,300 தொழிலாளர்களை புதிதாக வேலைக்கு எடுப்பதற்கும் 2,200 அரசு-உதவி பெறும் இளைஞர்களை தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்களாக எடுப்பதற்கும் PSA வாக்குறுதியளித்திருப்பதை மேற்கோள் காட்டி, ஒரு உடன்பாட்டில் தனக்கு “திருப்தி” இருப்பதை அறிவித்தது. PSA வெறும் 400 முழு-நேர உற்பத்தி வேலைகளை மட்டுமே உருவாக்குகிறது என்பதில் மட்டும் தான் ”ஏமாற்றமடைந்திருப்பதாக”வும் அது கூறிக் கொண்டது.

சென்ற வாரத்தில் பிரான்சின் இரசாயனத் தொழிற்துறையில், மக்ரோனின் தொழிற்துறைக்கான உத்தரவாணைகளது ஷரத்துகளின் கீழ், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை விடவும் குறைவாக அளிக்கத்தக்க ஒரு ஒப்பந்தத்திற்கு CFDT ஒப்புதல் அளித்ததன் பின்னர் இது வந்திருந்தது.

மக்ரோனின் கூட்டு ஒப்பந்த உடைப்பு (RCC) வேலைத்திட்டம் “தொழிலாளர்களை வெளியேறச் செய்வதற்கு” மட்டுமே சேவைசெய்வதாய் இருக்கக் கூடாது என தொழிலாளர் சக்தி (Force ouvrière - FO) தொழிற்சங்கம் புகாரிட்டது. பிரான்சின் வாகன உற்பத்தி ஆலைகளில் இப்போது பரந்த எண்ணிக்கைகளில் தற்காலிக ஒப்பந்த முகமைத் தொழிலாளர்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய அது, “இவர்களில் 17 சதவீதம் பேரை” நேரடியாக பணியமர்த்துவதற்கு PSAயிடம் ஒரு அற்பத்தனமான வேண்டுகோள் வைத்தது.

2013 இல் பாரிஸின் புறநகர்ப் பகுதியான ஒல்னேயில் இருந்த PSA ஆலை மூடப்படுவதை மேற்பார்வை செய்த ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) ஐ பொறுத்தவரை, அது வாய்வீச்சளவில் வீரமானதொரு தொனியை ஒலித்தது, “PSA பில்லியன் கணக்கான யூரோக்களைக் கொண்டு வளமாக இருப்பதால்” இந்தத் திட்டம் “ஏற்கமுடியாதது” என்று அது கண்டனம் செய்தது.

ஆயினும், அடிப்படையில், CGT (இதன் பிரதிநிதியான ஜோன் பியர் மேர்சியே, குட்டி முதலாளித்துவ தொழிலாளர் போராட்டம் (Lutte ouvrière - LO) கட்சியில் ஒரு முன்னணி உறுப்பினராகவும் PSA இன் உயர்மட்ட தொழிற்சங்க நிர்வாகியாகவும் இருக்கிறார்) அதன் மிகவும் வெளிப்படையான வர்க்க-ஒத்துழைப்பு சகாக்களிடம் இருந்து எந்தவிதத்திலும் வேறுபட்டது கிடையாது.

PSA மிகப்பெரும் இலாபமீட்ட வழிசெய்திருக்கின்ற, வாகன உற்பத்தித் துறையிலான வேலைகள் மற்றும் ஊதியங்களிலான மிகப்பெரும் வெட்டுக்களை மேற்பார்வை செய்வதில் அத்தனை தொழிற்சங்கங்களுமே உதவிசெய்திருக்கின்றன. சென்ற ஆண்டில் மட்டும், PSA 1.5 பில்லியன் யூரோ (1.8 பில்லியன் டாலர்கள்) இலாபங்களை அறிவித்திருக்கிறது. ஆயினும் கூட, அருகிலிருக்கும் கிழக்கு ஐரோப்பா அல்லது வடக்கு ஆபிரிக்காவில் திறம்பட்ட வாகனத் தொழிலாளர்கள் மாதத்திற்கு 350 யூரோக்கள் (418 அமெரிக்க டாலர்கள்) அல்லது அதற்கும் குறைவான ஊதியத்திற்கு வேலைசெய்ய நிர்ப்பந்தம் பெறுகின்ற நிலையில், ஐரோப்பாவின் வசதியான நாடுகளில் அது சமீப ஆண்டுகளில் பாரிய வேலை மற்றும் ஊதிய வெட்டு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

ஒல்னே ஆலை மூடப்பட்ட 2013 முதலாக, PSA பிரான்சில் 25,000 முழு-நேர வேலைகளை வெட்டியிருக்கிறது. இது பிரான்சில் கார் உற்பத்தித் துறையில் PSA இன் முழு நேர வேலைகளின் எண்ணிக்கையை 33,000 ஆகக் குறைத்திருக்கிறது, அதேநேரம் நாட்டில் PSA இன் உற்பத்தி மட்டங்கள் 860,000 இல் இருந்து 1 மில்லியன் வாகனங்களாக அதிகரித்திருக்கிறது. PSA ஆல் பிழியப்பட்டிருக்கும் பில்லியன் கணக்கான யூரோக்களது புதிய இலாபங்கள் இந்த வேலைவேக அதிகரிப்பு மற்றும் குறைந்த ஊதிய தற்காலிகத் தொழிலாளர்களை பணியமர்த்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பிரான்சின் பல முக்கியமான வாகனத் தயாரிப்பு தொழிற்சாலைகளில், பாகங்களை ஒன்றுசேர்க்கும் வேலைத்தளங்களில் மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தற்காலிக ஒப்பந்தமுகமைத் தொழிலாளர்களாய் உள்ளனர். Flins இல் உள்ள ரெனால்ட் ஆலையில் அசெம்பிளி லைன் தொழிலாளர்களில் 84 சதவீதமும், Sochaux இல் உள்ள PSA ஆலையில் அசெம்பிளி லைன் தொழிலாளர்களில் 70 சதவீதமும் தற்காலிக முகமைத் தொழிலாளர்களாய் இருப்பதாக தொழிற்சங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி 2016 இல் L’Usine Nouvelle என்ற வணிக வலைத் தளம் தெரிவித்தது. Mulhouse இல் இருக்கும் PSA ஆலை —இங்கு உற்பத்தி மேலாளராக கொரின் ஸ்பிரியோஸ் என்ற ஒரு பெண் இருப்பதாலும் இது பெரும் அளவில் தற்காலிகத் தொழிலாளர்களை பயன்படுத்துவதாலும் வருங்கால PSA இன் ஒரு உதாரணமாதிரியாக ஊடகங்களில் பரவலாக விவரிக்கப்படுகிறது— சென்ற ஆண்டில் 800 தற்காலிகத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான திட்டங்களை அறிவித்தது.

வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய தாக்குதல்கள் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தில் பரந்த மற்றும் பெரும் வெடிப்பான எதிர்ப்பை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. இது ஏற்கனவே கிழக்கு ஐரோப்பாவெங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களின் வடிவிலும், சென்ற மாதத்தில் ருமேனியாவின் கிரையோவாவில் ஊதியங்களை வெட்டுவதற்கான தொழிற்சங்கம்—நிர்வாகம்—அரசாங்கத்தின் கூட்டுச்சதிக்கு எதிராக ஃபோர்ட் தொழிலாளர்களது ஒரு திடீர் வேலைநிறுத்தத்தின் வடிவிலும் வெளிப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டமானது மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமரசமற்ற எதிர்ப்பைக் கொண்டதாகவும், ஒரு புரட்சிகர, சோசலிச முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கின்ற ஒரு சர்வதேசப் போராட்டமாக மட்டுமே முன்செல்ல முடியும்.