ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds of thousands of industrial workers strike in Germany

ஜேர்மனியில் நூறாயிரக் கணக்கான தொழில்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்

Peter Schwarz
31 January 2018

ஜேர்மனியின் ஆளும் உயரடுக்கு, தொழிலாளர்களின் சம்பளங்களைக் குறைக்கவும், ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதற்கும் மற்றும் நாட்டை மீள்இராணுவமயப்படுத்தவும் ஒரு புதிய அரசாங்கம் அமைப்பதில் சூழ்ச்சி செய்து வருகையில், தொழிலாள வர்க்கமோ கடந்த 15 ஆண்டுகளில் இல்லாதளவில் அந்நாட்டின் மிகப்பெரிய வேலைநிறுத்த இயக்கத்தின் வடிவில் அதன் விடையிறுப்பை வழங்கி உள்ளது.

புதனன்று, ஜேர்மனியில் உலோகத்துறை மற்றும் மின்துறையைச் சேர்ந்த 65,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறார்கள். வியாழன் மற்றும் வெள்ளியன்று, இன்னும் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இதை பின்தொடர்வார்கள். டைம்லெர், பி.எம்.டபிள்யூ. மற்றும் வோல்ஸ்வாகன் நிறுவனங்கள் உட்பட நாடெங்கிலுமான 250 நிறுவனங்களில் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்திற்கு IG Metall தொழிற்சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

இந்த தொழில்துறை நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டிருப்பது, தற்போதைய ஒப்பந்த போராட்டத்தைத் தணிப்பதற்கும் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் காட்டிக்கொடுக்கும் ஒரு மோசமான சமரசத்தை எட்டுவதற்குமாக IG Metall தலைமை செய்து வரும் முயற்சிகளுக்கு இடையே வருகிறது. இப்போராட்டம், அரசாங்கம் மற்றும் முதலாளிமார்களது தசாப்த கால சமூக தாக்குதல்களுக்குப் பின்னர் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபம் மற்றும் போர்குணத்தின் வெளிப்பாடாகும்.

இந்த போராட்டத்தின் முக்கியத்துவம் ஜேர்மனியின் எல்லையைக் கடந்து செல்கிறது. ஐரோப்பா முழுவதும் மற்றும் உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள், புதிய மற்றும் மிகப் பெரிய போர்களுக்கு நிதி ஒதுக்கவும் அவற்றின் சொந்த பைகளை நிரப்பிக் கொள்ளவும், தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் சலுகைகளை அழிக்கும் மற்றும் தொழில் பாதுகாப்புகளை அகற்றும் ஒரு முனைவில் ஈடுபட்டுள்ளன.

"மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டான இந்த 2018 ஆம் ஆண்டு, அனைத்திற்கும் மேலாக, சமூக பதட்டங்களின் ஓர் அளப்பரிய தீவிரப்பாடு மற்றும் உலகெங்கிலுமான வர்க்க மோதலின் அதிகரிப்பால் குணாம்சப்படும்,” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) புத்தாண்டு ஆய்வு முடிவை ஜேர்மனியின் இந்த வேலைநிறுத்த அலை ஊர்ஜிதப்படுத்துகிறது. 

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள இன் பெயர்கள், பல ஆண்டுகளாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மீதான மூர்க்கமான தாக்குதல்களுடன் தொடர்புபட்டவையாகும். கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்லில் மில்லியன் கணக்கான தொழிலாள-வர்க்க குடும்பங்களின் வாழ்க்கையை அழித்த சிக்கன நடவடிக்கை கட்டளைகள், எல்லாவற்றிற்கும் மேலாக, பேர்லினின் முந்தைய மகா கூட்டணி அரசாங்கத்தினது வேலையாக இருந்தன. முன்னர் ஸ்ராலினிஸ்டுகள் ஆட்சியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டு தொழிலாளர்களுக்கு, மேற்கு ஐரோப்பிய கூலிகளிலிருந்து ஒரு சிறு தொகையை வழங்கி வரும், சர்வதேச பெருநிறுவனங்களுக்காக, கிழக்கு ஐரோப்பாவை ஒரு பரந்த மலிவு உழைப்பு மண்டலமாக மாற்றியமையும், ஜேர்மன் ஆளும் வர்க்க கொள்கையின் விளைவாகும்.

அதேநேரத்தில், துணைக்கருவியாக செயல்படும் அடிபணிந்த தொழிற்சங்கங்களின் உதவியோடு ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தி, அதை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்காவிட்டால், ஜேர்மன் அரசாங்கத்தால் இந்த பாத்திரம் வகித்திருக்கவே முடிந்திருக்காது. சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை கட்சி அரசாங்கத்தால் 2003 இல் நிறைவேற்றப்பட்டு, தொழில் மற்றும் நலன்புரி "சீர்திருத்தங்களை" அறிமுகப்படுத்திய ஹார்ட்ஸ் சட்டங்கள் (Hartz laws), ஒரு மிகப்பெரிய குறைவூதிய துறையை உருவாக்கியது. அதேநேரத்தில், நன்கு சம்பாதிக்கும் தொழிற்சாலை தொழிலாளர்குழு பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஒரு கூட்டம், கூலிகள் தேக்கமடைவதையும் மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகள் சீராக மோசமாக்கப்படுவதையும் உறுதிப்படுத்தி வைத்தன.

தொழிலாள வர்க்கத்தின் மீது முதுகில் சுமையை ஏற்றி அடையப் பெற்ற ஜேர்மனியின் பொருளாதார "சாதனைகளில்" இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மொத்த பணியாளர்களில் 40 சதவீதத்தினர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அவர்கள் சம்பாதித்ததை விட குறைவாக சம்பாதிக்கும் நிலையில், சமூகத்தின் உயர்மட்டத்தில் ஒரு சிறிய அடுக்கோ கட்டுப்பாடின்றி தன்னைத்தானே செழிப்பாக்கிக் கொண்டு, ஜேர்மனியை ஐரோப்பாவிலேயே மிகவும் சமநிலையற்ற நாடுகளில் ஒன்றாக விட்டு வைத்துள்ளது.  

வாகனத்துறை, உலோகத்துறை மற்றும் மின்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த அலை இத்தகைய நிலைமைகளுக்கு எதிரான கிளர்ச்சியாகும். தொழிலாளர்களிடையே கோபம் மற்றும் அவநம்பிக்கை உணர்வுகள் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளையும் கடந்து செல்கின்றன என்பதாலேயே, IG Metall தொழிற்சங்கம் 24 மணி நேர வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. 

மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரத்தன்மை அதிகரித்து வருகிறது. சேர்பியா மற்றும் ருமேனியாவில் அங்கே வாகனத்துறையில் நிலவும் பட்டினி நிலைமையிலான கூலிகளுக்கு எதிராக தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. கிரீஸில் தொழிலாள வர்க்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிரிசா அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை கட்டளைகளுக்கு எதிராக வேலைகளை நிறுத்தி போராடி உள்ளது. பிரான்சில், ஜனாதிபதி மக்ரோனின் தொழில் சந்தை "சீர்திருத்தங்களுக்கு" எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து தொடர்ச்சியான பல புகையிரத துறை வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ளது. ஜேர்மனியின் வேலைநிறுத்த இயக்கம் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களில் அவர்களுக்குத் துணிவூட்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், அரசியல்ரீதியானதாகும். அதிக கூலிகள் மற்றும் குறைந்த வேலை நேரங்களுக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்றாலும், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பழமைவாத யூனியன் கட்சிகள் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றியம்) தொழிற்சங்கங்களின் முழு ஒத்துழைப்புடன், மூன்றாவது மகா கூட்டணி ஒன்றை உருவாக்க தயாராகி வருகிறார்கள். அதுபோன்றவொரு அரசாங்கம் ஜேர்மனியிலும் ஐரோப்பா எங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை மட்டும் தீவிரப்படுத்தாது, அது அரசின் அதிகாரங்களை விரிவாக்கும் என்பதோடு, இராணுவ மீள்ஆயுதமயமாக்கம் மற்றும் போருக்கான திட்டங்களையும் தீவிரப்படுத்தும்.

அதுபோன்றவொரு அரசாங்கம் எந்த ஜனநாயக சட்டபூர்வத்தன்மையும் கொண்டிருக்காது. இந்த மகா கூட்டணிதான் நான்கு மாதங்களுக்கு முன்னர் வாக்களிக்கப்பட்டு பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டது. அந்த பொதுத் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியினர், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் கிறிஸ்துவ சமூக ஒன்றிய கட்சியினரின் வாக்குகள் 14 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன. ஒரு புதிய மகா கூட்டணி என்ற வடிவத்தில் அதே கட்சிகளைத் திரும்ப கொண்டு வரும் முயற்சியானது ஓர் அரசியல் சூழ்ச்சியாகும், அதன் நிஜமான நோக்கங்கள் மக்களிடமிருந்து மூடிமறைக்கப்பட்டு வருகின்றன.

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் உட்பட அக்கூட்டணியை ஆதரிப்பவர்கள் “ஐரோப்பாவின் ஒற்றுமை" என்றும் "பிரான்சுடன் நட்புறவு" என்றும் பிதற்றிக் கொண்டாலும், சமூக எதிர்ப்புரட்சியை ஆழமாக்குவதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பொருளாதார கூட்டணி என்பதிலிருந்து ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை அமல்படுத்தும் ஓர் இராணுவ கூட்டணியாக மாற்றுவதே அவர்களது நிஜமான குறிக்கோளாகும்.

ஜேர்மன் ஆளும் உயரடுக்கு இராணுவ செலவினங்களை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) நேட்டோ-கோரும் இரண்டு சதவீதத்திற்கு, அதாவது 60 பில்லியன் யூரோவுக்கு இரட்டிப்பாக்கி, அதிகரிப்பதை மட்டுமல்ல, மாறாக அதற்கும் அதிகமாக உயர்த்த திட்டம் தீட்டி வருகிறது. இது சமூக செலவினங்களது வெட்டுக்களால் மட்டுமே சாத்தியமாகும் என்பதால், வேலைநிறுத்த நடவடிக்கை மூலமாக உலோகத்துறை தொழிலாளர்கள் பெறும் எந்தவொரு வெற்றிகளையும் இது விரைவிலேயே ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

உலோகத்துறை மற்றும் மின்துறை தொழிலாளர்களின் தொழில்துறை நடவடிக்கையானது, புதிய தேர்தல்களுக்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். சதிகாரர்களின் ஒரு கூட்டம், இரண்டாம் உலக போர் முடிந்ததற்குப் பிந்தைய மிகவும் வலதுசாரி அரசாங்கத்தை நிறுவுவதைத் தொழிலாளர்கள் அனுமதிக்கக்கூடாது.

சமூக வெட்டுக்கள், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதுடன் இணைக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்குப் பின்னால் அணிதிரட்டுவதற்கு, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheits Partei – SGP) மட்டுமே இது போன்றவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒரே கட்சியாகும். SGP ஐரோப்பிய ஒன்றியத்தை நிராகரிப்பதுடன், ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளுக்காக போராடுகிறது. 

சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மத்திய கட்சி (Centre Party) இன் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க் ஐ (Paul von Hindenburg) சுற்றியிருந்த ஒரு கூட்டத்தால், உலக வரலாற்றில் மிகப்பெரிய மனிதயின பேரழிவைத் தூண்டிய அடோல்ஃப் ஹிட்லர் சான்சிலராக நியமிக்கப்பட்டதிலிருந்து, 85 ஆண்டுகளை இவ்வாரம் குறிக்கிறது.   

உத்தியோகபூர்வ சொல்லாடல்களுக்கு முரண்பட்டரீதியில், ஹிட்லர் மக்கள் ஆதரவு அலையால் அதிகாரத்திற்குக் வந்தவர் அல்லர். நாஜிக்கள் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தனர். நவம்பர் 1932 நாடாளுமன்ற (Reichstag) தேர்தல்களில், அவர்கள் அண்மித்து இரண்டு மில்லியன் வாக்குகளை இழந்தனர். அவர்கள் பெற்ற 33 சதவீத வாக்குகளுடன், தொழிலாளர்களின் இரண்டு கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) ஒருமித்த 37 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளுக்கும் பின்னால் அவர்கள் பின்தங்கி இருந்தனர். ஆனால் தொழிலாளர்களின் இயக்கத்தை நசுக்கவும் மற்றும் அடுத்த போருக்குத் தயாரிப்பு செய்யவும் ஜேர்மன் ஆளும் உயரடுக்கு ஹிட்லர் அவசியப்பட்டார்.        

அதுபோன்றவொரு பேழிரவு திரும்ப வராது என்று யாரும் கற்பனை செய்துவிடக் கூடாது. உலகம் விரைவாக ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்ந்து வருகிறது. பிரிட்டிஷ் பத்திரிகையான Economist இன் இவ்வார பதிப்பில், “அடுத்த போர்" என்பதே தலைப்பாக இருந்தது. அந்த பிரதான தலையங்கம் குறிப்பிடுகையில், “அளவிலும் தீவிரத்திலும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத ஒரு மோதல் மீண்டுமொருமுறை சாத்தியமானது போல் தென்படுகின்றன,” என அறிவிக்கிறது.   

ஜேர்மன் ஆளும் வட்டாரங்கள் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு இன்னும் அதிகளவில் பகிரங்கமாக தயாராகி வருகின்றன. முதல்முறையாக, ஒரு அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) ஜேர்மன் நாடாளுமன்றத்தில் (Bundestag) வந்தமர்ந்துள்ளதுடன், வரவு-செலவு திட்டக்கணக்கு குழுவின் தலைமை பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி, “ஹிட்லர் வக்கிரமானவர் அல்லர்” என்று அறிவிக்கிறார், மாணவர்களின் விமர்சனங்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகத்தாலும் ஊடகங்களாலும் அவர் பாதுகாக்கப்படுகிறார். ஹிட்லருக்காக பரிதாபம் தெரிவித்த பார்பெரோவ்ஸ்கியின் கருத்துக்களைப் பிரசுரித்த Der Spiegel வாரயிதழ் அதன் சமீபத்திய தலையங்கத்தில், “800 இறாத்தல் நிறையுள்ள கொரில்லா" ஜேர்மனி மீள்ஆயுதமாவதால், “மான்செஸ்டர் மற்றும் ரோமில், வார்சோ மற்றும் லியோனில்" ஜன்னல் கண்ணாடிகள் அதிர்கின்றன என்று பெருமைபீற்றுகிறது.

தொழிலாள வர்க்கம், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியைப் போலவே, மாற்றீடு சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதை முகங்கொடுக்கிறது. ஆளும் வர்க்கம் அதன் சமூக எதிர்புரட்சி வேலைத்திட்டத்தை திணிப்பதையும், உலகை ஒரு பேரழிவுகரமான போரில் மூழ்கடிப்பதையும் தடுப்பதற்கு, தொழிலாள வர்க்கம் இந்த முன்முயற்சியை பற்றிக்கொண்டு முதலாளித்துவத்தைத் தூக்கி வீசுவதற்காக சர்வதேச அளவில் ஒன்றிணைய வேண்டும். 

உலோகத்துறை மற்றும் மின்துறை வேலைநிறுத்தங்கள் விரிவாக்கப்பட வேண்டும். இதற்கு IG Metall தொழிற்சங்கத்திடமிருந்து முறித்துக் கொள்வது அவசியமாகும், அது வேலைநிறுத்தத்தைத் திணறடிக்க அதனால் ஆனமட்டும் ஒவ்வொன்றையும் செய்து வருகிறது. முதலாளிமார்களின் அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து இயங்கும் அத்தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் SPD இன் அங்கத்தவர்கள் என்பதோடு, ஒரு புதிய மகா கூட்டணியின் ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தை விரிவாக்குவதற்கும், பிரச்சினையை கட்டுப்பாட்டில் எடுக்கவும் ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஸ்தாபிக்கவும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இது, பிரிக்கவியலாதவாறு, ஒரு புதிய மகா கூட்டணி நிறுவப்படுவதை எதிர்த்து ஒரு சோசலிச மாற்றீட்டை முன்னெடுக்க, புதிய தேர்தல்களுக்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது.