ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සිංහල ජනයා වර්ගවාදයට ගොස් ඇතැයි කියමින් උතුරේ දෙමල සංවිධාන ජාතිවාදී උද්ඝෝෂනයක

இலங்கையில் சிங்கள மக்கள் இனவாதத்தை நாடியுள்ளதாக வடக்கில் தமிழ் அமைப்புகள் இனவாதப் பிரச்சாரம்

By Subash Somachandran and R. Shreeharan 
27 February 2018

இலங்கையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தலமையிலான ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) தென் பகுதியில் அதிக வாக்குகளையும் பெருந்தொகை சபைகளையும் வெற்றி பெற்றதை அடுத்து, தெற்கில் சிங்களப் பேரினவாதம் தலை தூக்கியுள்ளதாக கூறி, வடக்கில் தமிழ் இனவாதத்துக்கு புத்துயிரூட்டும் பிரச்சாரம் ஒன்றை தமிழ் ஊடகங்கள் மற்றும் கட்சிகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

வடக்கில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட உதயன் பத்திரிகை, பெப்பிரவரி 12 வெளியீட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியதாவது: “ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள வெற்றியானது மகிந்தவுக்கான ஆதரவு அலை தெற்கில் இன்னும் இம்மியளவும் குறையவில்லை என்ற செய்தியுடன், இலங்கையில், அதிலும் குறிப்பாக சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு கட்சி தனது அரசியல் இருப்பை நிலைப்படுத் வேண்டுமாயின், தனது வெற்றியைப் பலப்படுத்த வேண்டுமாயின் இனவாத்தினை அத்திவாரமாக கொண்டு செயற்பட வேண்டும், என்ற தகவலை வழங்கி நிற்கின்றது.” உதயன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான பத்திரிகையாகும்.

கம்பன் கழகம் என்னும் இந்துத்துவ அமைப்பின் ஏற்பாட்டில் “வடகிழக்கு சமூகப் பிரமுகர்கள்” என்போர், “அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழின நன்மைக்காக ஒன்றுபடுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கும் ஒரு அறிக்கை, ஒட்டு மொத்த சிங்கள மக்களையும் தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரிக்கின்றது. “பெரும்பான்மையான பேரினத்தார் இன்னும் தமிழ் மக்கள் மீதான தம் வெறுப்பை மாற்றவில்லை என்பதை, வெளிவந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவாக இனங்காட்டியிருக்கின்றன,” என அந்த அறிக்கை கூறுகின்றது.

இந்த அறிக்கையில் தமிழ் கலாநிதிகள், பேராசிரியர்கள், கத்தோலிக்க மற்றும் இந்து மத குருமார், பொறியிலாளர்கள் மற்றும் வைத்தியர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சாரம், தமிழ் மக்கள் மத்தியில் தேசியவாதத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னெடுக்கப்படும் பிற்போக்கு இயக்கத்தை நியாயப்படுத்தி, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்துவதை ஆழப்படுத்தவும், நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் அடித்தளத்தை சீர் செய்வதை குறிக்கோளாகக் கொண்டு முன்னெடுக்கப்படுவதாகும். தமது நலன்களின் பேரில் கொழும்பு அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்காக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுடன் உறவுகளை பலப்படுத்திக்கொள்வதற்கும் தமிழ் முதலாளித்துவ குழுக்கள் ஐக்கியப்படுவது அவசியம் என இந்த பகுதியினர் கணக்கிடுகின்றனர்.

இந்தப் பிரச்சாரத்துக்கு சமாந்தரமாக, சிங்கள இனவாத குழுக்கள், வடக்கில் பெரும்பான்மையான மக்கள் தமிழ் கட்சிகளுக்கே வாக்களித்துள்ளதை சுட்டிக்காட்டி, அவர்கள் தமிழ் இனவாதத்தில் மூழ்கிப் போயுள்ளதாக கூறுகின்றன. இந்த இரண்டும் மோசடியான கருத்துக்களாகும்.

பொதுமக்களின் ஆதரவின் காரணமாக இராஜபக்ஷ பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. அவரது ஜனநாயக-விரோத ஆட்சியை தூக்கி வீசி, மக்களின் வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளை தூக்கி நிறுத்துவதாக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதிகாரத்திற்கு வந்தனர். அந்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து விட்டு, தமது உரிமைகளை நசுக்குவதற்கு விரோதமாக எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மக்களில் பெரும் பகுதியினர் இராஜபக்ஷவின் கட்சிக்கு வாக்களித்தனர். கைவிடப்பட்ட வாக்குறுதிகளில், யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வாக்குறுதியும் அடங்கும்.

வடக்கு-கிழக்கில் அரசாங்கத்திற்கு பந்தம் பிடித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட கட்சிகள் அதிருப்திக்கு உள்ளாகியிருந்தாலும், மாற்றிடு ஒன்று இல்லாததன் காரணமாக தமிழ் மக்கள் அவற்றுக்கு வாக்களித்தனர். எவ்வாறெனினும், வாக்குகள் வீழ்ச்சி மற்றும் வேறு அமைப்புகள் தலை தூக்கியுள்ளமை மூலம் தமிழ் கட்சிகளின் நெருக்கடி வெளிப்பட்டுள்ளது.

இராஜபக்ஷ, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்கி, 2009 மே மாதம் புலிகளைத் தோற்கடித்து போரை கொடூரமாக முடிவுக்கு கொண்டு வந்தார். தமது புவி மூலோபாய திட்டங்களுக்கு குந்தகமாக இராஜபக்ஷ சீனாவுடன் கொண்டிருந்த உறவுகளில் இருந்து இலங்கையைத் துண்டிப்பதற்காக, 2015 ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் உதவியுடன் திரைமறைவில் அமெரிக்கா மேற்கொண்ட ஆட்சி மாற்ற சதியின் மூலம், சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூலம் அமெரிக்கா மேற்கொண்ட அந்த ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் கட்சிகள் முழுமையாக உதவியது, அமெரிக்க நலன்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தமது வர்க்க தேவைகளை இட்டு நிருப்பிக்கொள்வதற்கே ஆகும்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் “தமிழ் மக்களின் பிரச்சினையை அங்கீகரித்து, உலக அரங்கில் அதை ஒத்துக்கொண்டு, தீர்வு முயற்சியில் ஈடுபட்டதாக” கம்பன் கழகம் அறிவிக்கின்றது. இந்த இருவரும் “சிங்கள மக்களால் புறந்தள்ளப்பட்டுள்ளதாக” குற்றம் சாட்டும் அதேவேளை, “கடும் போக்குவாத அரசியல் அணிகள், சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று நிமிர்ந்திருக்கின்றன” என்றும் கூறுகின்றது. “இத்தேர்தல் முடிவை வைத்துக் கணிப்பிடுவதானால் அடுத்து இந்நாட்டில் அமையப் போகும் ஆட்சி இனப்பிரச்சினை தீர்வுக்குச் சார்பானதாக இருக்காது என்பதை, நிச்சயப்படுத்தலாம் போல் தெரிகிறது”, என இந்த குழு சுட்டிக் காட்டுகின்றது.

சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் “தமிழ் மக்களின் பிரச்சினையை அங்கீகரித்து,” அவற்றுக்கு தீர்வு முயற்சியில் ஈடுபட்டதாக கூறுவது முழு பொய்யாகும். அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினதும் உதவியுடன் போர்க் குற்றங்களை மூடி மறைப்பதற்கே அவர்கள் செயற்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு முழுமையாக ஒத்துழைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கில் தமிழ் மக்கள், போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை தேடித்தருமாறும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் கோரி எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருப்பர்? இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, கம்பன் கழகத்தின் பிரதிநிதிகள், சிறிசேனவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வெள்ளைப் பூசி, ஏகாதிபத்திய சார்பு ஆட்சியை பாதுகாக்கின்றனர். இந்த இருவரும் கடந்த காலத்தில் தலைவர்களாக இருந்து தமிழர் விரோத இனவாத யுத்தத்தை ஆரம்பித்து அதை முன்னெடுப்பதற்கும் தடுமாற்றம் இன்றி ஒத்துழைத்தவர்கள்.

எவ்வாறெனினும், வடக்கில் தமிழ் கட்சிகள் கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலுக்கு ஒரு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியை பிரேரிப்பதோடு, அடுத்து எந்த கட்சி கொழும்பில் ஆட்சிக்கு வந்தாலும் அதனுடன் கொடுக்கல் வாங்கலுக்கு தமது தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று வேறு ஒரு கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்னொரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்து பின்வருமாறு கூறியுள்ளார்:

“தெற்கில் ஆட்சி மாறுமா? என்னும் அளவுக்கு நிலமைகள் மாறியிருக்கிறது. இந்நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வது என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும்,”

அண்மையில் வசந்தம் தொலைக்காட்சியில் தோன்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், “தெற்கில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி தமிழர் தரப்புக்கு ஒரு ஆபத்தான சமிக்கையைக் காட்டுவதாக” கூறினார். அதே வேளை டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், “தமிழர்களுடைய பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் எந்த அரசாங்கத்திற்கும் நாம் ஆதரவு கொடுப்போம்” என்றும் அறிவித்தார்.

இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.யும், அரசாங்கம் உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்குவதைப் பற்றி முதலைக் கண்ணீர் வடித்து, மக்களின் எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்காக இனவாதத்தையும் பௌத்த பிக்குகளையும் அணிதிரட்டிக்கொண்டு தமிழர் விரோத இனவாதத்தை தூண்டிவிடும் இயக்கத்தை முன்னெடுக்கின்றனர். இதற்காக கம்பன் கழக தலைமைத்துவத்தால் வெள்ளைப் பூசப்படும் விக்கிரமசிங்க மற்றும் சிறிசேனவின் பிரதிபலிப்பு, அதை எதிர்ப்பது அல்ல. மாறாக, நாட்டை, இனத்தை மற்றும் பௌத்த மதத்தை அடியோடு பாதுகாப்பதாக கூறி தமது பிரச்சாரத்தை அவர்கள் தூக்கிப் பிடிக்கின்றனர்.

முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளுக்கு எதிராக வடக்கிலும் தெற்கிலும் தொழிலாளர்கள் ஐக்கியப்படும் நிலைமை வளர்ச்சியடைவதைப் பற்றியே இராஜபக்ஷ மற்றும் சிறிசேன-விக்கிரமசிங்க கம்பனியும் பீதியடைந்துள்ளது. தொடர்ச்சியாக எழுச்சியடையும் தொழிலாளர்களின் போராட்டங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலின் பாகமாகும். இனவாத பிரச்சாரத்தின் மூலம் இராஜபக்ஷவைப் போலவே சிறிசேன-விக்கிரமசிங்கவும் தொழிலாளர்களை இனவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்காக நீண்டகால விசமத்தனமான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

உலக முதலாளித்துவத்தின் வீழ்ச்சி ஆழமடைந்து வரும் நிலைமையின் கீழ் இலங்கையின் முதலாளித்துவ நெருக்கடி கூர்மையடைந்து வருகின்றது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் எதேச்சதிகார ஆட்சிக்கு மாறுவதற்கு தயாராகி வருகின்றது. ராஜபக்ஷ “ஸ்திரமான அரசாங்கம் வேண்டும்” என கூச்சலிட்டுக்கொண்டு தன் பக்கத்தில் ஒரு எதேச்சதிகார ஆட்சியை ஸ்தாபிப்பதற்கு இனவாதத்தை கிளறிவிடும் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்.

தமிழ் அமைப்புகளின் இனவாத பிரதிபலிப்பு, சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் பிரச்சாரத்திற்கு சமாந்தரமானதாகும். சிங்கள-தமிழ்-முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியபட்டு இனப் பேதங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் சுமைகளை திணிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராடும் புறநிலைமை அபிவிருத்தியடைவதையிட்டு சிங்கள் முதலாளித்துவத்தைப் போலவே தமிழ் முதலாளித்துவமும் பீதியடைந்துள்ளது.

போரின் முடிவுடன் வடக்கில் உள்ள கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தமிழ் முதலாளித்துவத்துக்கு ஆளும் அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதற்காக ஏகாதிபத்தியவாதிகளின் ஒத்துழைப்பை வெற்றிகொள்வதற்கும் தமிழ் மக்களை இனவாத வழியில் திசை திருப்பி விடுவதற்கும் வடக்கு முதலமைச்சரின் தலைமைத்துவத்ததின் கீழ் “தமிழ் மக்கள் பேரவை” அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, வடக்கிலும் கிழக்கிலும் எழுக தமிழ் என்ற பெயரில் பேரணிகளை நடத்தியது, தமிழ் மக்களை திசைதிருப்பும் மேற்குறிப்பிட்ட இயக்கத்தின் பாகமாகும். தெற்கில் கட்சிகள் மற்றும் அவற்றின் கைக்கூலி அமைப்புகளைப் போலவே தமிழ் அமைப்புகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. தொழிலாளர்களதும் வறியவர்களதும் நலன்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பாகுபாடுகளின் தோற்றுவாய் முதலாளித்துவ முறைமையே ஆகும். தமிழ் மற்றும் சிங்களமுமாக ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தை பிரித்து, ஒடுக்கி முதலாளித்துவ முறைமையை பேணும் வர்க்க மூலோபாயத்தின் பாகமாக, 1948ல் சுதந்திரம் என அழைக்கப்படுவதில் இருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக பாரபட்சங்களை செய்வது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலாளித்துவ முறைமைய தூக்கி வீசி சோசலிச முறைமையை ஸ்தாபிப்தன் மூலம் மட்டுமே தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பாரபட்சங்கள அகற்ற முடியும். தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்கள் உட்பட பொது மக்களின் போராட்டங்கள் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாது பிணைந்துள்ளன. அது அனைத்தலக சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாத பாகுபாடுகளை தூண்டிவிடும் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இயக்கங்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் அனைத்துலகவாத ஐக்கியத்துக்கும் சோசலிச வேலைத்திட்டத்துக்கும் முன்னெடுக்கும் போராட்டத்தையே ஒரே மாற்றீடாக இன்று மக்கள் முன் வைக்கின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, இந்த முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றை, அதாவது தெற்காசியவின் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றது.