ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

අම්පාරේ දී මුස්ලිම් ජනයාට එරෙහි සංවිධානාත්මක වාර්ගික ප‍්‍රහාරයක්

இலங்கை: அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனவாத தாக்குதல்

By Kapila Fernando 
2 March 2018

பெப்ரவரி 26 அன்று இரவு அம்பாறை நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்களப் பேரினவாத கும்பலால், முஸ்லீம்களை இலக்காகக் கொண்ட ஒரு இனவாத குண்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவு விடுதி ஒன்றில், உணவில் குழந்தை உருவாகாமல் இருப்பதற்கான மருந்து கலக்கப்பட்டுள்ளதாக கூறி ஆத்திரமூட்டல் ஒன்றைத் தூண்டிய கும்பல், முதலில் உணவகத்தை தாக்கி சேதம் ஏற்படுத்தியது. அடுத்த நாள் காலை, அருகில் உள்ள மசூதி, பல கடைகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து நாசமாக்கப்பட்டன.

தாக்குதலில் ஐந்து முஸ்லிம்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி அழைப்புகள் மூலம் குண்டர்கள் அழைக்கப்பட்டதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர். முதல் சம்பவத்திலிருந்து பிரதேசத்தில் பொலிஸ் காவலில் இருந்தாலும், தாக்குதலில் சம்பந்தபட்ட எவரையும் இதுவரை கைது செய்யவில்லை. முந்தைய சம்பவங்களில் போலவே இந்த குண்டர் கும்பல் பொலிசாரின் மெளன ஒத்துழைப்புடன் வன்முறையை முன்னெடுத்துள்ளமை தெளிவு.

அரசாங்கத்தின் தொழிற்சாலை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதூர்தீன், 27 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசும் போது, தாக்குதல் நடந்த போது அம்பாறை பொலிஸ் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் செயலில் இறங்குவதற்கு தாமதித்ததாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், தாக்குதல் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கமாறு அரசாங்கத்திடம் காத்திரமற்ற வேண்டுகோளை விடுத்தார்.

இப்போது, இராணுவம், பொலிஸ் விசேட அதிரடிப் படைகள் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸ் குழுக்கள் அம்பாறை நகருக்கு அழைக்கப்பட்டுள்ளன. உணவில் கலந்ததாக கூறப்படும் மாத்திரைகள், பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகங்கள் மற்றும் புடவைக் கடைகள் மூலம் சிங்கள இனத்தவர்களை அழிக்கும் மாத்திரைகள் மற்றும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் ஆதாரமற்ற பிரச்சாரமானது பொதுபல சேனா, சிங்க லே (சிங்க ரத்தம்) மற்றும் சிங்கள ராவய போன்ற சிங்களப் பேரினவாத பாசிச குழுக்களால் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.

தமது மக்கள் தொகையை அதிகரித்து முஸ்லிம்கள் நாட்டைப் பிடித்துக்கொள்ளப் போவதாகவும் இதனால் சிங்களவர்களுக்கு நாடு இல்லாமல் போகப் போகின்றது என்றும் இந்த அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்காத இந்த இயக்கங்கள், தெற்கில் சிங்கள மத்தியதர வர்க்க தட்டுக்கள், வணிகர்கள் மற்றும் பௌத்த துறவிகளை தளமாகக் கொண்டவை ஆகும்.

அம்பாறை சம்பவத்தில் இந்த கும்பல்கள் உடந்தையாக இருப்பதாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்றாலும், திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் வேறு வழிகளில் இடம்பெற முடியாது.

அம்பாறைத் தாக்குதலானது முஸ்லீம்களை இலக்கு வைத்த தொடர்ச்சியான வன்முறை நடவடிக்கைகளில் சமீபத்தியதாகும். கடந்த நவம்பர் 17 அன்று காலி கின்தொட பிரதேசத்தில், சிங்களம் மற்றும் முஸ்லீம் குழுக்கள் இடையில் நடந்த வாகன விபத்து சம்பந்தமான அற்ப முரண்பாட்டில், இந்த விபத்துடன் எந்த தொடர்பும் இல்லாத, பல முஸ்லீம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் கிட்டத்தட்ட 50 வீடுகள் மற்றும் வியாபார நிலையங்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டன. குண்டர்கள் மூன்று முஸ்லீம் மசூதிகளை தாக்கி, பல வாகனங்களை அழித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தினால், கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த மியான்மாரில் இருந்து வந்திருந்த ரோஹிங்கியா அகதிகள் மீது நடத்திய மிருகத்தனமான தாக்குதலில், இந்த அமைப்புகளின் மிலேச்சத்தனமான பாசிச வெறி நன்கு காட்சிப் படுத்தப்பட்டது. 7 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் அடங்கிய இந்த அகதிகள் குழுவுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்த "சிங்கள ராவய" அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன என்ற பௌத்த துறவி, இந்த குழுவினர் "அகதிகள் அல்ல, மியன்மாரில் பௌத்த துறவிகளை “வெட்டிக் கொத்தி கொலை செய்த பயங்கரவாதிகள் என்று" கொடூரமாக கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், முஸ்லிம் பள்ளிகள், கடைகள் மற்றும் வீடுகள் இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் சம்பந்தமாக பொது பல சேனா அமைப்பின் மீதே பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டது. 2014 ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், பொதுபல சேனா அமைப்பின் தலைமையில் அளுத்கம பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமுற்றனர்.

2009ல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் எழுந்த தொழிலாள வர்க்கத்தின், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களின் மத்தியில், இனவாத பதட்டங்களை தூண்டிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தை பிரித்து அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக பொதுபல சேனா உட்பட இந்த பௌத்த அதிதீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு இடமளிக்கப்பட்டது.

ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் காரணமாக வளர்ச்சியடைந்த வெகுஜன எதிர்ப்புகளை சுரண்டிக் கொண்டு, “நல்லாட்சியையும்” ஜனநாயக உரிமைகளையும் ஸ்தாபிப்பதாக கூறியே 2015ல் தற்போதைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. "சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கம்" என்பது அரசாங்கம் அதற்காகப் பயன்படுத்திக்கொண்ட மற்றொரு மோசடி ஆகும்.

தற்போதைய அரசாங்கம் அத்தகைய அனைத்து வாக்குறுதிகளையும் மீறி, இராஜபக்ஷ நிறுத்திய இடத்தில் இருந்து அந்த தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு எதிராக, தொழிலாளர்களின் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றது. புதிய சுற்று இனவாத பிளவுகளை தூண்டிவிட்டு இராணுவத்தை தெருக்களில் இறக்கி அந்த போராட்டங்களை நசுக்குவதற்கே அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் சிங்களத் தீவிரவாத கும்பல்கள் மீண்டும் சேவைக்கு இறக்கப்பட்டுள்ளன.

யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பது இந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஆகும்.

அம்பாறைத்தாக்குதலை கண்டித்து, விசேட அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என பொலிஸ் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தையும் அதே போல் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையும் தமிழர்களின் பாதுகாவலர்களாக சித்தரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் அமைப்புகள், கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றியை, சிங்கள இனவாதம் மீண்டும் தலை தூக்குவதாக கூறி, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனவாத பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

சிங்கள இனவாதம் மீண்டும் தலை தூக்குவது, இராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட வாக்குகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது எனக் கூறுவது முழுப் பொய்யாகும். 2015ல் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட இராஜபக்ஷவுக்கு, இம்முறை கிடைத்துள்ள வாக்குகள், தற்போதைய அரசாங்கத்தின் மீதான வலுவான எதிர்ப்பின் வெளிப்பாடு ஆகும்.

எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளால் ஆளும் வர்க்கத்தின் அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதோடு, அதன் மையத்தில் உள்ள வளர்ச்சிகண்டு வரும் வர்க்கப் போராட்டங்களை ஒடுக்குவது அவசர மற்றும் அத்தியாவசியமான விடயமாக ஆளும் வர்க்கத்தின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலிலேயே இனவெறி தூண்டிவிடப்படுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்ச்சியான வகுப்புவாத தாக்குதல்களை கண்டனம் செய்கின்ற சோசலிச சமத்துவக் கட்சி, இந்த இனவாத ஆத்திரமூட்டல்களின் இறுதி இலக்கு, தொழிலாள வர்க்கத்தினதும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களதும் போராட்டங்களை நசுக்குவதே, என எச்சரிக்கின்றது.