ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Full transcript: “Organizing Resistance to Internet Censorship”

முழு எழுத்துவடிவம்: “இணையத் தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்”

By the World Socialist Web Site
25 January 2018

ஜனவரி 16 அன்று நடைபெற்றஇணையத் தணிக்கைக்கு எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்என்ற பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த்தும் பங்குபெற்ற வலைக் கருத்தரங்கின் திருத்தப்பட்ட எழுத்துவடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வலைக் கருத்தரங்கின் காணொளியைக் காண இங்கே அழுத்தவும்.

Andre Damon: வணக்கம், “இணையத் தணிக்கைக்கான எதிர்ப்பை ஒழுங்கமைத்தல்” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் இணைய வழிக் கருத்தரங்கிற்கு வரவேற்கிறோம். நான் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர் ஆண்ட்ரே டேமன், இன்றைய நிகழ்விற்கு நானே தொகுப்பாளராய் இருக்கவிருக்கிறேன். இன்று நமது விருந்தினர்களாக கிறிஸ் ஹெட்ஜஸும் டேவிட் நோர்த்தும் எம்முடன் இணைந்து கொள்கிறார்கள்.

கிறிஸ் ஹெட்ஜஸ் புலிட்சர் பரிசு வென்ற பத்திரிகையாளரும், RT இன் “ஆன் காண்டாக்ட்” (“On Contact”) நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், Truthdig வலைத் தளத்திற்கு பங்களித்து வருபவருமாவார். கிறிஸ் நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் பிற முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலங்கள் ஒரு வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றியுள்ளார். Empire of Illusion: The End of Literacy and the Triumph of Spectacle; Days of Destruction, Days of Revolt; The Death of the Liberal Class, and; The Wages of Rebellion உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

உடன் பங்குபெறும் டேவிட் நோர்த் 45 ஆண்டுகளாக சர்வதேச சோசலிச இயக்கத்தில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்து வருபவராவார். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராவார். கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்ததுல் 1990-2016  மற்றும் ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் ஆகியவை அவரது பிரசுரமாகியுள்ள படைப்புகளில் அண்மையதாகும்.

இன்றைய நிகழ்வு இருபது ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றதும், அந்த அனுசரிப்பை இந்த ஆண்டு கொண்டாடுகிறதுமான உலக சோசலிச வலைத் தளத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கருத்தரங்கில் பங்குபெறும் அனைவரும் சமூக ஊடகங்களின் மூலமாக தமது நண்பர்கள், சகாக்கள், சக-தொழிலாளர்களுக்கு இந்த நிகழ்வை முடிந்த அளவு பரவலாய் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு இதனை ஆரம்பிக்கிறேன். அத்துடன் பங்கேற்கும் அனைவரும் endcensorship.org மற்றும் எங்களது முகநூல் பக்கத்தில் உள்ள விவாதப் பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிடவும் கேள்விகளைக் கேட்கவும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் தொடங்குதற்கு முன்பாய், இந்த நிகழ்வுக்கு ஆதரவாக ஏராளமான வாழ்த்துச் செய்திகள் நமக்குக் கிட்டியிருக்கின்றன, பத்திரிகையாளரும் விக்கிலீக்ஸ் ஸ்தாபகருமான ஜூலியான் அசாஞ்சிடம் இருந்தான செய்தியை வாசிப்பதுடன் நான் ஆரம்பிக்கிறேன்.

“மனிதகுலத்தின் வருங்காலம் என்பது, எந்திரங்களைக் கட்டுப்படுத்தும் மனிதர்களுக்கும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் எந்திரங்களுக்கும் இடையிலானதாக; தகவல்தொடர்பின் ஜனநாயகமயத்திற்கும் செயற்கை நுண்ணறிவால் தகவல்தொடர்பு தட்டிப்பறிக்கப்படுவதற்கும் இடையிலானதாக இருக்கிறது.

“மக்கள் தமக்கும் மற்றவர்களுக்கும் கல்வியூட்டிக் கொள்கின்ற திறனில் ஒரு புரட்சியை இணையம் கொண்டுவந்திருக்கிறது என்ற அதேவேளையில், அதனால் விளைந்திருக்கும் ஜனநாயக நிகழ்வுப்போக்கானது நிலவும் ஸ்தாபகங்களை அவற்றின் அடிஆழம் வரை உலுக்கியிருக்கிறது. இன்றிருக்கின்ற உயரடுக்குகளுடன் சமூகரீதியாகவும், அமைப்புரீதியாகவும், நிதியியல்ரீதியாகவும் ஒருங்கிணைப்பு கொண்டிருக்கும் கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அதனைப்போன்று சீனாவிலுள்ள அமைப்புகளும் கலந்துரையாடல் மீதான கட்டுப்படுத்தலை மறுஸ்தாபகம் செய்ய நகர்ந்திருக்கின்றன. இது வெறுமனே ஒரு சீர்செய்துகொள்ளும் நடவடிக்கை அல்ல. சமூகத்தின் மீது செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு செலுத்தப்படுவதாக இருக்கின்ற கண்டுபிடிக்க முடியாத பாரிய செல்வாக்கு மனிதகுலத்திற்கு ஒரு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலாய் இருக்கிறது.

“இது இன்னும் அரும்பு நிலையில் தான் உள்ளதென்ற போதிலும் போக்குகள் தெளிவாகவும் ஒரு வடிவியல் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. மனிதத் திறனெல்லைகளை விஞ்சுகின்றதான அளவு, வேகம் மற்றும் அதிகரித்துச் செல்லும் நுட்பத்துடன் இயங்குவதன் காரணத்தால், கலாச்சார மற்றும் அரசியல் நிகழ்வுபோக்குகளுக்கு வடிவம் கொடுக்க முனைகின்ற வழக்கமான முயற்சிகளில் இருந்து இந்த இயல்நிகழ்வு வேறுபடுகிறது.

“இந்த நிகழ்வுபோக்குக்கு கவனத்தை ஈர்ப்பதற்காக உலக சோசலிச வலைத் தளத்தை நான் பாராட்டுகிறேன்.”

ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும் ஆவணப் பட படைப்பாளியுமான ஜோன் பில்கெரிடம் இருந்து வந்திருக்கின்ற ஒரு செய்தியையும் நான் படித்துக்காட்ட விரும்புகிறேன், அவர் எழுதியிருக்கிறார்:

“பிரதான நீரோட்டத்தில் நீண்டகாலம் இருந்து வந்திருக்கும் ஒரு பத்திரிகையாளராக மற்றும் திரைப்படைப்பாளியாக, கிறிஸ் ஹெட்ஜஸ் மற்றும் டேவிட் நோர்த் இடையில் நடைபெறுகின்ற இந்த முக்கியமான கலந்துரையாடலுக்கு எனது ஆதரவை நான் வழங்குகிறேன்.

“ஏதோவொன்று மாறியிருக்கிறது. ஊடகங்கள் எப்போதுமே முதலாளித்துவ அதிகாரத்தின் ஒரு நெகிழ்வான நீட்சியாகவே இருந்திருக்கின்றன என்றபோதும், இப்போது அவை முழுக்க ஒருங்கிணைந்தவையாக இருக்கின்றன. தாராளவாத முதலாளித்துவம் பெருநிறுவன சர்வாதிகாரத்தின் ஒரு வடிவத்தை நோக்கி நகர்கின்ற நிலையில் ஒருகாலத்தில் பிரதான நீரோட்டத்தில் சகித்துக் கொள்ளப்பட்ட எதிர்ப்புணர்வு தலைமறைவுநிலைக்கு ஒப்பானதாய் பின்னடைந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று மாற்றமாகும், இதில் பத்திரிகையாளர்கள் தான் புதிய ஒழுங்கின் சுற்றுவரைகளைக் கண்காணிக்கிறார்கள்: குறிப்பாக கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற தாராளவாத செய்தித்தாள்களில் வெளிவரும் ரஷ்ய-விரோத வெறிக்கூச்சலும் #MeToo சதிவேட்டைகளும் இதற்கு சாட்சியமளிக்கின்றன. சுயாதீனமான செய்தியாளர்கள் பிரதான நீரோட்டத்தில் இருந்து வெளித்தள்ளப்படுகின்ற நிலையில், உலக இணைய வலை (World Wide Web) மட்டும் கவனத்திற்குரிய வெளிக்கொணரல்கள் மற்றும் சாட்சிகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு ஆகிய உண்மையான பத்திரிகைத்துறைக்குரிய இன்றியமையாத மூலாதாரமாகத் திகழ்கிறது.

“wikileaks.org, wsws.org, consortiumnews.com, globalresearch.ca, democracynow.org மற்றும் counterpunch.org போன்ற தளங்கள், கூகுள் மற்றும் பிற பெரும் நிறுவனங்களால் ‘வெறுக்கத்தக்கவை’ என்று கூறி குறிவைக்கப்படுகின்றன; கூகுள் தேடல்களில் இந்தத் தளங்களை வடிகட்டுவதும் மட்டுப்படுத்துவதும் அடிப்படை தணிக்கையாகும். இத்தளங்கள் எல்லாம் கவனம்செலுத்த தேவையற்ற ஆதாரங்கள் அன்று, மாறாக, பிரதான “ஜனநாயக” அரசியலானது வர்க்கப் போரின் அதீதத்திற்கும் இடைவிடாத போர்க்கூச்சலுக்குமாய் பின்னடைந்து விட்டிருக்கும் வேளையில், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கணிசமாக முன்னேற்றமடைந்திருக்கும் ஒரு உலகைக் குறித்து புரிந்து கொள்ள முயற்சிக்கின்ற மக்களுக்கு இன்றியமையாதவை ஆகும்.

“ரஷ்ய-சதி என்பதை போன்று, பொய்ச் செய்தி பின்னும் வக்கிரமான திட்டம், இதன் பகுதியாக இருக்கிறது. மேற்கின் தாராளவாத ஊடகங்கள் கைவிட்டு விட்ட வேலையை பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்ற ஒளிபரப்பு நிறுவனமான RT, அதற்கு ஒரு சக்திவாய்ந்த அரசாங்கத்தின் ஆதரவு இல்லாது போயிருந்தால் அது அழிக்கப்பட்டு விட்டிருக்கும். ஜூலியான் அசாஞ்ச் அசாதாரணமான தீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தாமல் விட்டிருந்தால் ஒரு சிறிய துணிச்சலான அரசாங்கத்தின் ஆதரவைப் பெறவியலாமல் போயிருந்தால் அவர் விடயத்திலும் இதைக் கூற முடியும். விடயம் அவசரமானது; குரல்கள் எழுப்பப்பட்டாக வேண்டும்! எனது சகாக்கள் அவர்களது மௌனத்தை கலைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.”

சக்திவாய்ந்த இந்த அறிக்கைகளுக்காக ஜூலியான் அசாஞ்சுக்கும் ஜோன் பில்கருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவை எழுப்புகின்ற விடயங்கள் சிலவற்றின் மீது தொடங்கலாம் என்று கருதுகிறேன். டேவிட், கடந்த ஆறு மாத காலத்தில், உலக சோசலிச வலைத் தளம் இடது-சாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் மீதான கூகுளின் தணிக்கை குறித்து விரிவாக எழுதி வந்திருக்கிறது. இது நடந்து கொண்டிருந்தது என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

டேவிட் நோர்த்: அது, நீங்கள் சொன்னதைப் போல, நாங்கள் 1998 பிப்ரவரி 14 முதலாக உலக சோசலிச வலைத் தளத்தைப் பிரசுரித்து வருகிறோம். நாங்கள் எங்களது வாசகர் எண்ணிக்கையை கவனமாகப் பின்தொடர்ந்து வந்திருக்கிறோம், அது ஆண்டுக்காண்டு, கணிசமாக வளர்ச்சியடைந்து வந்திருப்பதை கண்டிருக்கிறோம். அந்த வளர்ச்சி காலகட்டத்திற்கு ஏற்ப, பெரும் அரசியல் பங்கேற்பு காலகட்டங்களுக்கேற்ப, வித்தியாசப்படும் தான், என்றாலும் பொதுவாய் அந்த எண்ணிக்கைவளர்ச்சி மேல்நோக்கியதாகவே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, 2015, 2016 மற்றும் 17 இல், வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கையில் மிகத் துரிதமான ஒரு வளர்ச்சியை நாங்கள் கண்டோம், ஒரு நாளைக்கு அறுபது, எழுபது முதல் எண்பது ஆயிரங்கள் வரை தனிவாசகர்களை எட்டியிருக்கிறது.

மே ஆரம்பத்தில், நாளாந்திர வாசகர் எண்ணிக்கையில் ஒரு சரிவை நாங்கள் கவனிக்கத் தொடங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள், இது வெறுமனே ஒரு காலகட்டப் போக்காக இருக்கலாம் என்றும், ட்ரம்ப்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களது முதல் அலைக்குப் பின்னரான ஒரு குறிப்பிட்ட சரிவாக இருக்கலாம் என்றும் கருதினோம். ஆனால் அது ஜூன் வரையிலும் நீடித்தது, அதிலும் மிக வெடிப்பான ஒரு வேகத்தில் சரிந்து சென்றது. இது இயல்பான ஒன்று அல்ல என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களுக்கு மட்டும் தான் இந்தப் பாதிப்பா என்பதைக் காண்பதற்காக, அடிக்கடி எங்கள் வலைத் தளத்துடன் ஒப்பிடப்பட்ட Truthdig, Counterpunch போன்ற அத்துடன் Consortia News, Global Research போன்ற பிற தளங்களது புள்ளிவிவரங்களையும் ஆராயத் தொடங்கினோம். அவையும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம்.

அந்த சமயத்தில் தான், வாசகர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக என்று அறிவித்து, கூகுள் ஒரு புதிய மென்பொருள் செயல்வழிமுறையை (அல்காரிதம்) அறிமுகப்படுத்தியிருந்தது என்பது எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால் அந்த புதிய மென்பொருள் செயல்வழிமுறையானது உலக சோசலிச வலைத் தளத்திற்கான அணுகலைப் பலவீனப்படுத்துவதற்காய் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஏப்ரலுக்குப் பின்னர் எத்தனை துரிதமாக இது அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது என்பதை வரைபடம் காட்டுகிறது.

உண்மையில், ஒரு புதிய மென்பொருள் செயல்வழிமுறையானது கூகுளாலும், இதற்குப் பொறுப்பான அவர்களது தலைமை அதிகாரியான பென் கோமெஸினாலும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஏப்ரல் 25 அன்று அவர் ஒரு அறிக்கை விடுத்திருந்தார், அதன் பின்னர் தான், தேடுபொறி நுட்பங்களது பிற நிபுணர்களுடனான கலந்தாலோசனையின் பின்னரே இந்த வடிகட்டிய வீழ்ச்சி தொடங்கியதை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. அதாவது உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாசகர்களை பொதுவாக அழைத்து வந்த தேடுதல் வார்த்தைகள் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தது என்று கூறலாம்.

AD: அவற்றில் சிலவற்றைத் திரையில் காணலாம்.

DN: ஆம். இப்படியாக, ஏப்ரல் வரையில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாசகர்களைக் கொண்டுவந்த 150 பிரபலமான தேடல் வார்த்தைகளில், ஆகஸ்டுக்குள்ளாக, அவற்றில் 145 வார்த்தைகள் வலைத் தளத்திற்கு எந்த வாசகர்களையும் கொண்டுவரவில்லை. அவற்றில் சில வார்த்தைகளை நீங்கள் திரையில் பார்க்கலாம்: “சோசலிசம்”, “ரஷ்யப் புரட்சி”, ”வர்க்க மோதல்”. ஆக, அவர்கள் கூறியதைப் போல, அவர்கள் மக்களை கிளிக் செய்ய வைக்கும் தந்திர வலைத் தளங்களில் இருந்து பாதுகாக்க செய்த முயற்சியோ அல்லது அதுபோன்ற வேறெதுவுமோ இல்லை.

இதில் குறிப்பாக மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால், இளைஞர்கள் மத்தியில், தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் தீவிரப்படல் பெருகிச் செல்கின்ற ஒரு காலகட்டத்தில், அவர்கள் எதிர்ப்பின் விவரங்களைத் தேடத் தொடங்குகின்றனர், சோசலிசம், புரட்சி, “சமத்துவம்” போன்ற வார்த்தைகளில் ஆர்வம் பெறுகின்றார்கள். முன்பு உலக சோசலிச வலைத் தளத்திற்கு ஆயிரக்கணக்கில் வாசகர்களைக் கொண்டுவந்த அதே வார்த்தைகள் இப்போது எந்த வாசகரையும் கொண்டுவருவதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், WSWS க்கும் அதில் ஆர்வம் பெறுபவர்களுக்கும் இடையில் ஒரு தடித்த சுவரை சிலர் கட்டியமைத்துக் கொண்டிருந்தனர். ஒரு பாலமாக இருந்ததில் இருந்து, கூகுள் ஒரு தடுப்பரணாக, எங்கள் தளத்திற்கான அணுகலைத் தடுக்கும் ஒரு காவலாளியாக ஆகிக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில், நாங்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பிய போது, இந்த மென்பொருள் செயல்வழிமுறையானது அரசியல்ரீதியாக ஏவப்பட்டதாக அல்லாமல் ஒரு முழுமையாக தற்செயலானதாக இருக்கலாம் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் இனியும் யாரும் அவ்வாறு கூறவியலாது. உலக சோசலிச வலைத் தளத்தையும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை முன்வைக்கக் கூடிய, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான ஒரு விமர்சனரீதியான மதிப்பீட்டை முன்வைக்கக் கூடிய மற்ற தளங்களையும் ஒடுக்குவதற்கான முற்றிலும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்ற, நனவான ஒரு முயற்சியாகும் இது. ஆகவேதான் இதற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைப்பது மிகவும் இன்றியமையாததாக ஆகியிருக்கிறது.

AD: உலக சோசலிச வலைத் தளத்திற்கான தேடல் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியில் சிலவற்றை திரையில் நாம் பார்க்கலாம்.

DN: கூடுதலாய் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன். ஏப்ரல் மாதத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களில் சுமார் 45 சதவீதம் பேர் தேடல் மூலமாக வந்து கொண்டிருந்தனர். தேடுதல் வழிவகை மூலமாய் வந்துசேர்ந்தவர்களில் கணிசமான பகுதி கூகுள் மூலமானதாய் இருந்தது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில், நான் மறுபடியும் சோதித்தேன். எங்களது வாசகர்களில் 15 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கூகுள் தேடல்கள் மூலமாக வருகின்றனர். ஆகஸ்டு முதலாக, நாங்கள் எங்களது நேரடியான வாசகர்களை வளர்த்துக் கொள்ள இயன்றிருக்கிறது. எங்களது வாசகர்களில் சுமார் 50 சதவீதம் பேர் நேரடியாக உலக சோசலிச வலைத் தளத்திற்கு வருகின்றனர், ஆனால் தேடல் வார்த்தைகள் மூலமாக வந்தடைகின்ற வாசகர் எண்ணிக்கை வீழ்ச்சி காண்பது தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கிறது. சென்ற முறை நான் பார்த்தபோது, Truthdig இன் புள்ளிவிவரமும் இதையொத்ததாக இருந்தது. நீங்களும் இதே நிலைக்கே முகம் கொடுக்கிறீர்கள்.

AD: ஆம். வரிசையாக ஏராளமான இடது-சாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


டேவிட் நோர்த்தும் கிறிஸ் ஹெட்ஜஸும்

கிறிஸ் ஹெட்ஜஸ்: இது இப்போது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக இருக்கிறது. பெருநிறுவன முதலாளித்துவம், உலகமயமாக்கம், நவ-தாராளவாதம், நீங்கள் அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள், அது இப்போது நெருக்கடியில் இருக்கிறது. அது இரண்டு வழிகளில் நெருக்கடியில் இருக்கிறது. முதலாவதாய், அந்த சித்தாந்தம் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது. அரசியல் தளம் எங்கிலும் அதற்கு இனியும் எந்த மதிப்பும் இல்லாதிருக்கிறது. ஒரு பொய்யாக அது அம்பலப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே கற்பனாவாதமாக இருந்த இந்த சித்தாந்தம் அளித்த அத்தனை வாக்குறுதிகளும், நாம் ஒதுங்கி வழிவிட்டு சந்தையை ஆட்சி செய்யவிட்டால் அது ஒரு உலகளாவிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி ஜனநாயகத்தை பரவச் செய்யும் (இந்த கற்பனாவாத இலட்சியத்தை பிரபலப்படுத்தியவர்களில் தோமஸ் ஃப்ரீட்மனும் ஒருவர்) என்பதாகவே இருந்தது.

அமெரிக்காவிற்குள்ளே மட்டுமல்லாது, உலகளாவிய வகையிலான, அழிவும் நாசமும், உலகெங்கிலும், இந்தியா போன்ற நாடுகளிலும், அல்லது இங்கேயும், அல்லது எங்கெங்கிலும் கொள்ளையடிக்கும் நிதிப்பிரபுத்துவ உயரடுக்கை உருவாக்கியிருப்பதோடு மக்களின் மிகப் பெரும் பிரிவினரை அடிப்படையில் மிகையானவர்களாக அல்லது தேவையில்லாதவர்களாக ஆக்கியிருக்கிறது. இதனை உபரி-உற்பத்திசக்தி என மார்க்ஸ் அழைத்தார்.

இது, இந்த பெருநிறுவன நிதிப்பிரபுத்துவ உயரடுக்கினரை மேலும் மேலும் அசுரத்தனமான கட்டுப்பாட்டு வடிவங்களைப் பிரயோகிப்பதற்கு தள்ளியிருக்கிறது. நாம் இதனை அமெரிக்காவில் பார்க்கிறோம், அடிப்படையாக சமூகத்தின் ஒதுக்கப்படுகின்ற நிலையில் இருக்கும் சமுதாயங்கள் சிறிய போலிஸ் அரசுகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன; பெருந்திரள் எண்ணிக்கையில் சிறையிலடைப்பது, குறிப்பாக ஏழை மற்றும் கறுப்பின மற்றும் மாநிற மக்களை ஒரு குற்றவியல் வர்க்கமாக மாற்றுவதற்காக கடுங்குற்ற சட்டப்பிரிவுகளைப் பிரயோகிப்பது ஆகியவை அதிகரித்திருக்கிறது.

இரண்டாவது நெருக்கடி, ஆளும் உயரடுக்கினர் ஏன் பயப்படுகிறார்கள் என்றால், குடியரசுக் கட்சியிலும் சரி ஜனநாயகக் கட்சியிலும் சரி அவர்கள் உருவாக்கிய அரசியல் ஏமாற்றுக்களை அவர்களே காண்கின்றனர். அக்கட்சிகளின் தலைமை, அது புஷ் வம்சாவளியாக இருக்கட்டும் அல்லது கிளிண்டன் வம்சாவளியாக இருக்கட்டும், அல்லது பராக் ஒபாமாவாக இருக்கட்டும், அனைவருமே பெருநிறுவன அரசின் சேவகர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். மெதுவான வேகத்திலான பெருநிறுவன ஆட்சிக்கவிழ்ப்பு சதி -இது சரியே- குறித்து ஜோன் ரால்ஸ்டன் சால் பேசுகிறார். ஆனால் அது முடிந்து விட்டது.

இவ்வாறாக, முதலாளித்துவத்தை விமர்சிப்பவர்கள், ஏகாதிபத்தியத்தை விமர்சிப்பவர்கள், என்னைப் போன்று கட்டமைப்பை விமர்சிப்பவர்கள், ஒதுக்கப்படுகின்றனர், நியூ யோர்க் டைம்ஸ் போன்ற -அதில் நான் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்- பிரதான நீரோட்ட பிரசுரங்களில் இருந்து வெளித்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது நாம் காண்பது என்னவென்றால், அடிப்படையில், எவரும் நம்பக்கூடிய ஒரு எதிர்-வாதம் இனியும் அவர்களிடம் இல்லை. ஆகவே தான் இந்த ஒதுக்கப்படுகின்ற விமர்சனத் தளங்கள், உலக சோசலிச வலைத் தளம் முதலாளித்துவத்தின் மீதான விமர்சனங்களை அச்சிடும், தொழிலாள வர்க்கம் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக எழுந்து நிற்கும், அதைப் போன்றே இன்னும் சில தளங்களும் செய்கின்றன (இங்கே பல என்று நம்மால் சொல்ல முடியவில்லை). Counterpunch மிக நன்றாக இருக்கிறது, Alternet. இந்த விமர்சகர்கள் எல்லாம் ஆபத்தானவர்களாகவும் சாத்தியத்திறம் படைத்தவர்களாகவும் ஆளும் உயரடுக்கினர் இப்போது காண்பதால் அவர்கள் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சிலிக்கன் பள்ளத்தாக்கு பெரும் நிறுவனங்களுக்கு இந்த பாகுபாட்டை உருவாக்குவதற்கான அம்சமாக இருக்கிறது. அந்நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு அரசுடன் ஒன்றிணைந்துள்ளன. உதாரணத்திற்கு அமசனின் பெசோஸ் சிஐஏ உடன் 650 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் பெற்றிருக்கிறார். அவர்கள் கையோடு கை சேர்த்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர், இதுதான் இணைய நடுநிலையை பின்னிழுக்கின்ற அபாயமாகும்; இந்த விமர்சனங்களை இணையத்தில் இருந்து அடிப்படையாக அகற்றுவது இந்த நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக இருக்கிறது.

மக்கள் அலெக்ஸாண்டர் பேர்க்மன் எழுதிய ஒரு மிக அருமையான கட்டுரையை பார்க்குமாறு கூறுவேன். தலைப்பு ”சிந்தனை தான் விடயம்” (“The Idea is the Thing”) என்று நினைக்கிறேன். ஒரு ஆளும் சித்தாந்தம் —உதாரணத்திற்கு, ஒரு முடியாட்சியின் கீழ் மன்னர்களுக்கான புனிதமான உரிமைகள் என்பதாக வைத்துக் கொள்வோம்— இனியும் செல்லாது என்றாகின்றபோது என்ன நடக்கிறது என்பதைக் குறித்து அவர் பேசுகிறார். அந்தோனியோ கிராம்ஷி ஆளும் சித்தாந்தத்திற்கு இனியும் எந்த செல்தகைமையும் இல்லாத காலகட்டமான ஆட்சிஇடைவெளி (interregnum) குறித்துப் பேசும்போது இதையே குறிப்பிடுகிறார். மற்றும் இதுமாதிரியான ஒரு திட்டவட்டமான தெளிவில்லாத ஒரு காலகட்டம் இருக்கிறது. மக்கள் ஒரு மாற்றுப் பார்வையை இனித்தான் தெளிவாக உருவாக்கவேண்டும்.

பேர்க்மென் இது ஒரு கொதிகலனில் நீர் கொதிப்பதற்கு நிகரானதாக ஒப்பிடுகிறார், கொதிநுரை முதலில் உங்களுக்குக் கண்களுக்குத் தெரியாதிருக்கும். எல்லாம் அமைதியாக இருப்பது போல் இருக்கும். எல்லாமே அடிப்படையில் உள்ளபடியான நிலையில் இருப்பது போல் தெரியும். ஆனால் கீழே, மிக ஆபத்தான —ஆளும் உயரடுக்கினருக்கு— உள்ளோட்டங்கள் நடந்து கொண்டிருக்கும், அது வெடிக்கும்போது, அது நீராவியாகத் தெரியும், கொதிகலனில் இருந்து விசில் சத்தம் எழும்பும் என்கிறார் அவர்.

அந்த இடத்தில் தான் நாம் இப்போது நின்று கொண்டிருக்கிறோம், உயரடுக்கினருக்கும் இது தெரியும். ஆகவேதான் அவர்கள் பெருநிறுவன அரசுக்கும் பெருநிறுவன முதலாளித்துவத்திற்கும் எதிரிகளான நமக்கு எதிரான ஒரு முன்கூட்டிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

AD: நாம் வெளிப்பட இப்போது தணிக்கையின் விரிவான பொருளுக்கு கடந்து வந்திருக்கிறோம். டேவிட்டிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், உலக சோசலிச வலைத் தளம் பதிவிட்ட ஒரு முன்னோக்கில், இந்த ஆண்டு வர்க்க மோதலின் ஒரு கணிசமான தீவிரப்படலைக் காணும் என்ற கணிப்பீட்டை செய்திருந்தது. அதே நேரத்தில், நாம் எழுதியிருப்பதைப் போல, கடந்த இரண்டு வார காலத்திலேயே, இணைய சுதந்திரம் மீதான ஒரு முழுமூச்சுடனான தாக்குதலை புதுவருடம் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டிருக்கிறது. இந்த தொடர்பினைக் குறித்து நீங்கள் சிறிது கூற முடியுமா?

DN: கிறிஸ் எழுப்பியவை மிக இன்றியமையாத பிரச்சினைகள் என்று நான் கருதுகிறேன். அவர் கிராம்ஷி குறித்து பேசியிருக்கிறார். இந்த இடத்தில் நாம் நேராக மார்க்ஸ் கூறியதற்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு மே மாதத்தில் மார்க்ஸ் பிறந்த 200வது ஆண்டுதினத்தை நாம் கொண்டாடவிருக்கிறோம்; சென்ற ஆண்டில் அக்டோபர் புரட்சியின் 100வது ஆண்டை நாம் கொண்டாடினோம் — இந்த இரண்டு நிகழ்வுகளுமே மிகப் பாரிய சமகால முக்கியத்துவத்தைக் கொண்டவையாகும். அனைத்திற்கும் மேலாக, நாம் வாழும் உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் விரும்பினால், கடந்த 150 ஆண்டுகளின் பாதையில் முதலாளித்துவத்தின் மாற்றங்கள் அத்தனைக்கும், மார்க்ஸ் கண்டுபிடித்த அடிப்படை விதிகள் செல்தகைமை பெற்றவையாகத் திகழ்கின்றன. மதிப்பு குறித்த கருத்தாக்கத்தை, இலாபம் குறித்த, இலாப விகித வீழ்ச்சி குறித்த கருத்தாக்கத்தை, புரிந்துகொள்ளாமல் நாம் வாழ்கின்ற உலகத்தைப் பற்றி ஒருவரால் பேச முடியாது, அல்லது புரிந்துகொள்ள முடியாது. ...

CH: ... நவீன பொருளாதார அறிஞர்கள் அழித்து விட்டிருக்கின்ற, உழைப்பு குறித்த கருத்தாக்கத்தையும். …

DN: சரியே. முடிவில், இறுதி ஆய்வில், அத்தனை மதிப்புமே தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் இருந்துதான் பெறப்படுகிறது. தொழிலாள வர்க்கம் மறைந்து போவதற்கு —தாராளவாத மற்றும் குட்டி-முதலாளித்துவக் கல்வியறிஞர்களின் இன்னுமொரு விருப்பமான உச்சாடனமாக இது இருக்கிறது— எல்லாம் வெகு அப்பால், உலகமயமாக்கத்தின் அதே நிகழ்ச்சிப்போக்கானது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அளவையும் வீச்சையும் மிகப் பரந்த அளவில் விரிவாக்கியிருக்கிறதான ஒரு உலகத்தில் நாம் உண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

CH: உழைக்கும் ஏழைகள் என்று அவர்களை நாம் சொல்ல முடியும். அப்படித் தான் தொழிலாள வர்க்கம் குறைக்கப்பட்டு விட்டிருக்கிறது.

DN: மார்க்ஸ் அதில் ஒரு மிக முக்கியமான தனித்துவத்தைக் காட்டினார். மறுபடியும், மார்க்ஸ், மற்றும் ஏங்கெல்ஸின் மாபெரும் சாதனையாக இருந்தது என்னவென்றால், அவர்கள் தொழிலாள வர்க்கத்தை வெறுமனே சுரண்டப்படும் ஒரு வர்க்கமாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக ஒரு புரட்சிகர வர்க்கமாகவும் பார்த்தனர். அது ஏன் புரட்சிகர வர்க்கம் என்றால், இறுதி ஆய்வில், உற்பத்தியை அதுதான் இயக்குவதுடன், அத்துடன் உற்பத்தி சக்தியாகவும் இருக்கின்றது. மார்க்சின் இந்த மிக ஆரம்பகால எழுத்துக்களுக்கு திரும்பிச் சென்று பார்த்தால், அவை உண்மையில், கற்பனாவாத சோசலிசம் மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதற்கான குட்டி-முதலாளித்துவக் கருத்தாக்கங்கள் மீதான விமர்சனத்தை அவர் அபிவிருத்தி செய்துகொண்டிருந்த காலகட்டமாக இருந்தது; அவ்விடத்தில் அவர் ஒரு விஞ்ஞானபூர்வமான பகுப்பாய்வை ஸ்தாபிப்பதற்கு முனைந்திருந்தார். அவர் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை எடுத்துரைத்தது மட்டுமல்ல, வர்க்கப் போராட்டத்தின் செயல்பாடானது சோசலிசப் புரட்சிக்கும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இட்டுச் செல்கிறது, அல்லது அது நடந்தேறுவதற்கான புறநிலைமைகளை உருவாக்கியிருந்தது என்று அவர் கூறினார்.

“அவர்கள் ஏன் மிரளுகின்றனர்?” என்று கிறிஸ் சரியாக வினவினார். ஆளும் வர்க்கத்தின் உள்ளுணர்வு மிக மிக நுண்மையானதாக இருக்கிறது. பல சமயங்களில் நான் நினைப்பதுண்டு, இடதுகளிடம் இருக்கும் ஒரு பிரச்சினை என்னவென்றால் அத்தனை சிரமங்கள் மற்றும் அத்தனை பிரச்சினைகளின் (முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்த்துப் போராட முனைகின்ற எவரொருவரும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான பிரச்சினைகள் மற்றும் அபாயங்கள் குறித்து அறியாமலிருக்க முடியாது) மத்தியிலும் சூழ்நிலையில் இருக்கும் புரட்சிகர சாத்தியத்தை புரிந்து கொள்ள இயலாமலிருப்பதாகும். ஆனால் ஆளும் வர்க்கம் இந்த அபாயங்கள் குறித்தெல்லாம் மிக விழிப்புடன் இருக்க முனைகிறது. நீங்கள் சரியாகச் சொன்னீர்கள், இது ஒரு முன்கூட்டிய தாக்குதல் என்று. நாம் சொல்வது முக்கியமானவையாக இல்லை என்றால், நம்மைத் தணிக்கை செய்வதற்கான அவசியமே அங்கில்லையே.

CH: பல ஆண்டுகளாகவே, நம்மில் இந்த வகையான விமர்சனங்களை நடத்தியவர்கள் நிச்சயமாக முக்கியத்துவம் அற்றவர்களாக்கப்பட்டோம் என்பதையும் நாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆயினும் அடிப்படையில் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்கு எதுவும் ஏற்பாடு செய்யப்படாதிருந்தது. நம்மால் பரந்துபட்ட வாசகர்களை சென்றடைய முடியாது என்றிருந்தாலும், இணையத்தில் நம்மை நாம் வெளிப்படுத்திக் கொள்ள இயன்றது. அதைத்தான் இப்போது அகற்ற வேண்டும் என்று அவர்கள் முனைந்து கொண்டிருக்கின்றனர்.

மார்க்ஸ் குறித்து நீங்கள் கூறியதுடன் சற்று சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உடன் இணைந்து, தனது நம்பிக்கைகளை, தொழிற்துறை தொழிலாள வர்க்கத்தைச் சுற்றி கட்டியெழுப்பினார். நாம் இங்கு தொழிற்துறைமயம் அகற்றப்பட்ட அமெரிக்காவின் இருதயத்தான நிலத்தில் அமர்ந்திருக்கிறோம். உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களின் மூலமாக, உலகப் பெருநிறுவன நிதியப்பிரபுக்கள் தொழிற்துறை உற்பத்தியை சீனா போன்ற இடங்களுக்கு நகர்த்திச் சென்றுவிட்டிருக்கிறார்கள், அங்கே நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 1 டாலருக்கு வேலை செய்வீர்கள், ஒருநாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலைசெய்வீர்கள்; அல்லது பங்களாதேஷூக்கு, அங்கே ஒரு மணி நேரத்திற்கு 32 செண்ட்டுகளுக்கு நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பீர்கள். அடிப்படையில் அவர்கள் நம்மை 19 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கு, தொழிற்துறைப் புரட்சியின் பிறப்புக் காலத்திற்கு, தொழிலாளர்கள் கூலி-அடிமைகளாக இருந்த காலத்திற்கு, தொழிலாளர்கள் மிகத் திகிலூட்டும் நிலைமைகளின் கீழ் வேலை செய்த காலத்திற்கு நம்மை உருட்டிச் சென்று கொண்டிருக்கிறார்கள். சீனா போன்ற இடங்களில் இது அத்தனையும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சீனா, சிறை உழைப்பை விரிந்த முறையில் பயன்படுத்துகிறது, இந்த நாட்டில் ஒரு மில்லியன் சிறையிலுள்ள மக்கள் இலாப-நோக்குடனான பெருநிறுவனங்களுக்காக வேலை செய்யவேண்டியுள்ளது.

ஆக, நாம் தேசிய எல்லைகளுக்குள் சிக்கிக் கொள்ள முடியாது - உலக சோசலிச வலைத் தளம் இதனை நன்கறியும் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு பங்களாதேஷ் கொத்தடிமைத் தொழிலாளர்களிடம் ஒரு விதமான நனவைக் கொண்டுவந்து அவர்களுடன் கூட்டணிகளையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப முடியாவிடின், இந்த அமைப்புமுறையை ஒருபோதும் நம்மால் கீழிறக்க முடியாது.

இது ஒரு உலகளாவிய போராட்டமாகவும் இருந்தாக வேண்டும், எந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களது நலன்கள் நமது நலன்களாக இருக்கிறதோ அவர்களுடன் சர்வதேசத் தொடர்புகளை உருவாக்க வேண்டும், ஏனென்றால் நாம் அனைவருமே ஒரே எதிரியை எதிர்த்தே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம், இது தேசத்திற்கு அப்பாற்பட்டதாகும். வரிச்சொர்க்கங்களில் நாம் இதனைக் காண்கிறோம் — கடல்கடந்த கணக்குகளில் 4 டிரில்லியன் டாலர் இருக்கிறது என்று நினைக்கிறேன். 2017 வரி மசோதாவுக்கு முன்பே கூட, ஒரு வரி செலுத்தாமை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெனரல் எலெக்ட்ரிக், அமெரிக்க வங்கி போன்ற நிறுவனங்கள் வரி கூட செலுத்துவதில்லை.

இது ஒரு உலகளாவிய யுத்தம். இதுவே மார்க்ஸும் பழைய கம்யூனிச இயக்கமும் பற்றியிருந்த ஒன்று, நாம் அதனை மீண்டும் பற்றிக் கொள்ள வேண்டும்.

DN: இதில் மலைப்பூட்டக் கூடிய அம்சம் என்னவென்றால், அது உண்மையும் கூட, உலகில் இன்று நிலவுகின்ற புறநிலைமைகள் நேரடியாக இதற்கே இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. நாடுகடந்த பெருநிறுவனங்களின் தோற்றமும், சர்வதேச மூலதனப் பாய்வுகளும், புறநிலையாகப் பார்த்தால், தொழிலாள வர்க்கத்தை சர்வதேசமயப்படுத்தியிருக்கின்றன. விஞ்ஞானரீதியாக, இனியும் முழுமையான ஒரு தேசியப் பொருளோ, அல்லது ஒரு தேசியப் பொருளாதாரமோ கிடையாது. முதலாளித்துவத்தின் ஒருங்கிணைப்பு ஒரு உலகளாவிய ஒருங்கிணைப்புடைய தொழிலாள வர்க்கத்தை உருவாக்கியிருக்கிறது.

நாம் இப்போது வாழுகின்ற காலகட்டத்தின் மிகவும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், வர்க்கப் போராட்டமானது, புறநிலையாக, ஒரு சர்வதேச-ஒருங்கிணைப்புடனான நிகழ்ச்சிப்போக்காக கட்டவிழ இருக்கிறது. அது அபிவிருத்தி காண்பதையே நாம் கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம்.

இது உண்மையாக, மிக அடிப்படையான அர்த்தத்தில், இணையத்தின் மீதான அச்சத்தின் கீழமைந்திருப்பதற்கு செல்கிறது. அதாவது, அது வெறுமனே செய்தி பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழிவகை மட்டுமல்ல. அது சர்வதேச ஒருங்கிணைப்புக்கான சக்திவாய்ந்த சாதனமும் கூட. அதனை நமது சொந்த அனுபவங்களைக் கொண்டு நாம் பார்த்து வருகிறோம்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். ருமேனியாவில் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தம் குறித்து நாங்கள் செய்தியளித்துக் கொண்டிருந்தோம். ருமேனிய வேலைநிறுத்தம் குறித்த எங்களது கட்டுரைகள் ருமேனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன என்ற உண்மை பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது. ருமேனியாவில் இருந்து தொழிலாளர்கள் எங்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் சர்வதேச அபிவிருத்திகளை கவனத்துடன் பின்பற்றி வருகிறார்கள்.

இந்த இணையக் கருத்தரங்கு (வெபினார்) ஒரு சர்வதேச ஒளிபரப்பு. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இங்கே நடந்து கொண்டிருப்பது, ஒரு புறநிலை நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடு என்றே மிக நனவான மட்டத்தில் நான் நம்புகிறேன். புறநிலையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்றுக்குத்தான் வெளிப்பாட்டை கொடுக்க நாம் இங்கே முயன்று கொண்டிருக்கிறோம். நாம் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “உலகின் அத்தனை அரசாங்கங்களும் மிரட்சி கண்டுள்ளன” என்று எழுதினார் மார்க்ஸ். ஆம், இன்று உலகின் அத்தனை அரசாங்கங்களுமே அவற்றால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சக்தியைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன.

CH: அதனால் தான் சீனா போன்ற இடங்களிலும் இணையத் தணிக்கையை நீங்கள் காண்கிறீர்கள்; இந்தியாவில் இணையத் தணிக்கையை திணிக்க முயற்சி நடக்கிறது.

ஜூலியான் அசாஞ்ச் ஜகோப் அப்பெல்பௌம் உடன் இணைந்து எழுதிய Cyber punks புத்தகம் தான், நான் படித்த முதல், இணையத்தின் இரண்டு-முனை பண்பைக் குறித்து எடுத்து வைத்த புத்தகமாக இருந்தது. ஏனென்றால் நீங்கள் சொல்கின்ற அத்தனையும் உண்மை.

மறுபக்கத்தில், இது கண்காணிப்புக்கு, மனிதர்களின் விவரப் பக்கங்களைக் கட்டியெழுப்புவதற்கு, கலகம் செய்பவர்களைக் கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையாக இருக்கிறது. ஏனென்றால், மனிதர்கள் ஒழுங்கமைப்பதற்கு தகவல்தொடர்பின் மின்னணு வடிவங்களைப் பயன்படுத்துகிறார்கள் — அல்லது, தகவல்தொடர்பின் மின்னணு வடிவிலான தகவல்தொடர்புகள் நல்ல ஒழுங்கமைக்கும் கருவிகள் அல்ல என்றும் கூட உண்மையில் நான் சொல்லுவேன்; அவை ஒழுங்கமைப்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்கு நன்மை பயக்கக் கூடியவை.

ஒழுங்கமைப்பது நேருக்கு-நேர் பேசித்தான் செய்யப்பட வேண்டும், ஆக்கிரமிப்புப் போராட்ட இயக்கத்தில் நாம் கண்டதைப்போல, எந்த இயக்கத்திலும் நாம் காண்பதைப் போல. ஒரு திரைக்கு முன்னால் அதைச் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் வழிவகைகளை உருவாக்கலாம். ஆக்கிரமிப்புப் போராட்ட முகாம்களை அகற்றியதன் பின்னர், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அரசை நாம் கண்டோம்.

Zuccotti Park இல் ஆக்கிரமிப்புப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் விடயத்தில் இதனை நான் நேரடியாகத் தெரிந்து கொண்டேன். அதன்பின் பல வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு எந்திரம் —FBI மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை மற்றும் பிற— மிக முக்கியமான தனிமனிதர்களைக் குறிவைத்து இயங்கியது. அவர்கள் சரியான மனிதர்களையும் பிடித்தனர். ஒரு குறிப்பிட்ட உதாரணத்தை சொல்வதென்றால், செயல்பாட்டாளர்களில் ஒருவர் ஒரு கத்திரிக்கோலால் நியூயோர்க் சிட்டியின் போலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்க முயன்றதாக ஒரு குற்றச்சாட்டை கிட்டத்தட்ட அவர்கள் உருவாக்கினார்கள்.

Zuccotti இல் அவர்கள் அத்தனையையும் படமாக்கினர். அவர்கள் படமெடுத்த இடங்களில் கிரேன்களும் இருந்தன. ஆனாலும் அந்தக் காட்சிகளில் இப்படியான ஒரு சம்பவமே இல்லை, ஏனென்றால் அது இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டு அல்லவா. அவர்கள் இந்த மனிதரை ஒரு நீதிமன்றத்தின் முன்பாக இழுத்து வந்து நிறுத்தினர், ஒரு போலிஸ் அதிகாரியைத் தாக்கினால் அது ஏழு ஆண்டு தண்டனைக்குரிய குற்றம். அது கடுங்குற்ற வகையில் சேரும். அவர்கள் அவரை கோரிக்கை மனு வைக்கச் செய்தார்கள், ஐந்து ஆண்டு பரிசீலனையின் பேரிலான கடுங்குற்றம் பெறச் செய்தனர். அதாவது, அந்த ஐந்து ஆண்டுக்குள்ளாக இவர்கள் ஏதாவது செய்தால், ஏழு ஆண்டு சிறையில் தொடர நேரிடும்.

இவ்வாறாக, துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் முக்கியமானதாக இருந்த இணையத்தை, சமூக ஊடகத்தின் பொறிமுறைகளைப் பயன்படுத்தினர். இதுவே ஜூலியான் ஓரளவுக்கு எழுதியிருக்கின்ற மற்றும் பேசியிருக்கின்ற ஒன்றாகும். இணையம் ஒரு தீங்கற்ற சக்தியல்ல என்பதும் ஒரு அம்சமாக புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். நாம் —வார்த்தைகளை மென்றுமுழுங்காமல் சொல்வதென்றால்— தூக்கிவீச முயற்சி செய்கின்ற மக்களின் கரங்களில் அது இருக்கிறது. அது அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான சக்தியை வழங்குகிறது. தகவல் அமைப்புகள் முழுமையாக பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் முழுமையாகக் குவிந்திருப்பதுதான், மிக மிக அபாயகரமானதாகும்.

DN: அது நிச்சயமாக அபாயமே. ஒவ்வொரு தொழில்நுட்ப விடயத்திலுமே, முடிவில், யார் அதனைக் கட்டுப்படுத்துகிறார்கள் யார் அதனைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே அது சார்ந்ததாக இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமையைப் பார்த்தோமானால், இது போன்றதொரு விவாதம் நடக்க முடிகிறது, அதனை ஒரு சர்வதேச பார்வையாளர்கள் பின்தொடர முடிகிறது, அத்துடன் இதுபோன்ற சிந்தனைகள் முன்வைக்கப்பட முடிகிறது என்ற அந்த உண்மையே அதற்குள்ளாக ஒரு மிகப் பிரம்மாண்டமான சாத்தியவளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, தனக்குள் கொண்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இதைத் தான் நிறுத்தியாக வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

CH: சரியே.

DN: ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இணையமானது ஒவ்வொரு அரசாங்கத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிற ஒரு சக்தியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

மறுபடியும் ஒடுக்குமுறை குறித்த பிரச்சினைக்குத் திரும்புவோம்: முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டம் குறித்து உண்மையாக அக்கறை காட்டும் எவரொருவரும் அதனை அந்த அளவுக்கு அக்கறையுடன் கணக்கிலெடுத்தாக வேண்டும். ஆனால், அனுபவத்தின் விடயத்தை எடுத்துப் பார்ப்போமாயின், Zuccotti Park அனுபவம் மட்டுமல்ல, 2011 நிகழ்வுகளின் அனுபவம், அவை மிக மிக முக்கியமானவையாகும். வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கக் கோரிய நடுத்தர வர்க்க இயக்கமாக இல்லாது எகிப்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான வெகுஜன இயக்கம் இருந்தது, அங்கு அரசியல் முன்னோக்கு இல்லாமலிருந்ததும், எதற்கு எதிராகப் போராடுகிறோம் என்பது குறித்த புரிதல் இல்லாமலிருந்ததும், முஸ்லீம் சகோதரத்துவம் கட்சியின் தன்மை குறித்த குழப்பமும், இராணுவம், அரசு ஆகியவற்றின் தன்மை குறித்த குழப்பமும்தான் பிரச்சினையாக இருந்தன.

இறுதியாக, முன்னோக்கு குறித்த பிரச்சினை தான் உயிர்நாடியான பிரச்சினையாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை அமைக்கக் கூடிய ஒரு சரியான பகுப்பாய்வும் சரியான கொள்கைகளும் ஒருவரிடம் இருக்கிறதா?

அதுதான் மையமான பிரச்சினை. பிரான்சின் மே-ஜூன் நிகழ்வுக்கு 50 ஆண்டுகளுக்குப் பின்னால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் சற்று இளையவர் என்பதால், உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு இன்றும் ஞாபகமிருக்கிறது. அது புதிய இடது பிறந்த காலகட்டம். அதன்பின்னர், தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தை நிராகரிப்பது அங்கே இருந்தது, அத்துடன், பல காரணங்களால், மிகப் பெருமளவிலான அரசியல் குழப்பத்தின் ஒரு காலகட்டமும் அங்கிருந்தது. இப்போது சோசலிசத்திலான ஆர்வம் மீண்டெழுவதையும், புத்துயிர் பெறுவதையும், மார்க்சிசத்திலான ஆர்வம் புத்துயிர் பெறுவதையும் நாம் காண்கிறோம். அது இந்த உரையாடலின் பகுதியாக இருக்கவில்லை.

நேற்றுத்தான், பேர்னி சாண்டர்ஸ் சமத்துவமின்மையின் அத்தனை தீமைகள் குறித்தும் புலம்புகின்ற ஒரு பத்தியை எழுதியிருந்தார், அத்தகைய ஒரு கட்டுரையில் “சோசலிசம்” என்ற வார்த்தையையோ அல்லது “முதலாளித்துவம்” என்ற வார்த்தையையோ ஒரு இடத்தில் கூட குறிப்பிடாமலே அவர் சமாளித்து எழுதி விட்டிருந்ததில் நான் திகைத்தே போய்விட்டேன்.

CH: அவர் “ஏகாதிபத்தியம்” என்ற வார்த்தையையும் கூட ஒருபோதும் குறிப்பிடுவது கிடையாது.

DN: ஆம் செய்யமாட்டார், அத்துடன் அவர் போர்-ஆதரவாளரும் கூட.

CH: நீங்கள் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இல்லாமல் ஒரு சோசலிஸ்டாக இருக்க முடியாது.

DN: கண்டிப்பாக.

CH: இதுதான் சாண்டர்ஸ் விடயத்தில் எனக்குப் பிரச்சினை.

DN: சாண்டர்ஸ் விடயத்தில் உங்களுக்குப் பல பிரச்சினைகள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆயினும் இது முக்கியமான பிரச்சினை.

CH: நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனாலும் கூட, துருவப்படுத்தப்படும் எந்த சமூகத்தையும் போலவே, நாமும், உள்ளடக்கத்தில் செயலிழந்து நிற்கிறோம் என்ற உண்மையை அறியாதவர்களாகவும் நாம் இருக்க முடியாது. ஒரு உயரடுக்கைச் சேர்ந்தவரோ அல்லது சதிக்கும்பலோ அதிகாரத்தைக் கைப்பற்றும்போது என்ன ஆகிறது, அது முடியாட்சியாக இருக்கட்டும் அல்லது ஸ்ராலினிச ஆட்சியாக இருக்கட்டும் அல்லது பாசிச ஆட்சியாக இருக்கட்டும்? அடிப்படையில் அவை அரசியல் செயலற்ற நிலையை உருவாக்குகின்றன. ஏனென்றால், ஒரு தாராளவாத முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினைகளை மேம்படுத்துவதற்குரிய விதத்தில் மேம்போக்காக உருவாக்கப்படும் அரசாங்க அமைப்புமுறைகள், கிளர்ச்சிசெய்யும் சக்திகளை மீண்டும் அந்த அமைப்புமுறைக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை உருவாக்கும் பொருட்டு அமைக்கப்படுகின்றன. இதைத் தான் புதிய ஒப்பந்தத்தில் (New Deal) நாம் கண்டோம்.

ரூஸ்வெல்ட் இதைப் பற்றி சற்று வெளிப்படையாகவே எழுதினார், முதலாளித்துவத்தைக் காப்பாற்றியது தான் தனது மாபெரும் சாதனை என்று அவர் கூறுகிறார். அவரது கடிதங்களில், அந்தரங்கக் கடிதங்களில் ஒன்றில் அவர் புரட்சி குறித்து பேசுகிறார். சக நிதிப்பிரபு ஒருவருக்கு கடிதம் எழுதுகையில் அவர் கூறுகிறார்: ஒன்று நாம் நமது பணத்தில் கொஞ்சத்தைக் கொடுக்கத் தொடங்க வேண்டும், இல்லையேல் நமது மொத்தப் பணத்தையும் நாம் தொலைத்து விடுவோம். அந்த அமைப்புமுறை உடைந்து விட்டிருக்கிறது. ஒரு தாராளவாத வர்க்கத்தின் மரணம் (Death of a Liberal Class) அதைப் பற்றிய ஒரு புத்தகம் தான். அந்த அமைப்புமுறை இனியும் வேலை செய்வதில்லை.

DN: அதற்கு புறநிலைக் காரணங்கள் இருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அது இருந்த நிலையை இனியும் கொண்டிருக்கவில்லை.

CH: அத்துடன், கலகத்தை முறியடிப்பதற்காக அமைப்புமுறைக்குள்ளாக போதுமான சமநிலையைக் கொண்டுவரும் பொருட்டு ஒருவகை பாதுகாப்பு வழிமுறையாக செயல்பட்ட அதே நிறுவனங்களை, பெருநிறுவனக் கட்டமைப்புகள் கபளீகரம் செய்து விட்டன அழித்து விட்டன என்ற உண்மையும் இருக்கிறது. கம்யூனிச எதிர்ப்பு என்ற பேரில் அந்த அமைப்புமுறை அத்தனையும் அழிக்கப்பட்டு விட்டிருக்கிறது. ஏனென்றால் தீவிரப்பட்ட இயக்கங்களான Wobblies, கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்டுகள், முற்போக்குக் கட்சியை அழித்ததன் பின்னர் அவர்கள் தாராளவாத இயக்கங்களை நோக்கித் திரும்பினர். ரூஸ்வெல்ட் செய்த ஒவ்வொன்றுமே அந்த தீவிரமயப்பட்ட இயக்கங்களில் இருந்தே வந்ததாகும். இதுதான் ஹோவார்ட் ஸின் எழுதிய அமெரிக்காவின் ஒரு வரலாறு (A History of the United States) குறிப்பிடும் விடயமாகும்.

உதாரணத்திற்கு, வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விட்டதால் கம்யூனிஸ்ட் கட்சிதான் 1920களில் உள்ளிருப்புப் போராட்டங்களை ஒழுங்கமைத்ததை நாம் வாசிப்பதில்லை. 1930களில் என்ன நடந்ததென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அந்த தந்திரோபாயம் அகற்றப்பட்டு விட்டது. அமெரிக்க “ஜனநாயகத்தின்” உண்மையான உந்துசக்திகளாக இருந்த அந்த தீவிரப்பட்ட இயக்கங்கள் அழிக்கப்பட்டன.

இது எப்போதும் ஒரு மூடிய அமைப்புமுறையாகவே இருந்து வந்திருக்கிறது, அப்படியான ஒன்றில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் தான் மக்கள் வாக்குகளில் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர் ஜனாதிபதியாக இருக்கவில்லை. இதற்கும் ரஷ்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கும் தேர்தல் கல்லூரிக்கும் தான் சம்பந்தம் இருக்கிறது.

அந்த தாராளவாத ஸ்தாபனங்கள் மரணித்த பின்னர், தற்சமயம் அத்தனை அமைப்புமுறைகளிலும் நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒரு சிறு சதிக்கும்பலின் நலன்களுக்கே சேவை செய்வதாக இருக்கின்ற, அப்பட்டமான கொள்ளையர்களது ஆட்சியாக இருக்கிறது. அது செயலின்மையை உருவாக்குகின்றது; நாம் ஒரு அரசாங்கத்தால் மூடப்படும் சாத்தியத்தின் விளிம்பிலிருக்கின்றோம்.

அந்த செயலின்மையையானது —அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துச் செல்லும் கவலைகளுக்கும் கஷ்டங்களுக்கும் பதிலிறுப்பு செய்ய அரசாங்க மற்றும் உத்தியோகபூர்வ ஸ்தாபனங்கள் திறனற்று இருக்கும் நிலை— தொடருமாயின், அமைப்புமுறை இறுதியில் செயல்பட முடியாது நின்று விடும். அந்த இடத்தில் தான் நாம் இப்போது இருக்கிறோம்.

DN: மறுபடியும், நீங்கள் மிக முக்கியமான மிகப் பல பிரச்சினைகளை எழுப்புவதால், இந்த நிகழ்வுப்போக்குகளின் அடிப்படை புறநிலைக் காரணங்கள் என்ன என்பதற்கே நாம் மறுபடியும் வந்தாக வேண்டியிருக்கிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு ஒரு ரூஸ்வெல்ட்டை ஏன் உருவாக்க சாத்தியமில்லாதிருக்கிறது? ஏன் அவர்கள் ஒரு ட்ரம்பைக் கொண்டுவந்து நிறுத்துகின்றனர். ட்ரம்ப் ஒன்றும் முன்னர் ஒரு ஈடன் பூங்காவாக இருந்த ஒன்றிற்குள் புகுந்துவிட்ட ஏதோ ஒரு வித அரக்கர் அல்ல.

என்னைப் போலவே உங்களுக்கும் தெரியும், பரந்த மக்களைப் பொறுத்தவரை, ட்ரம்புக்கும் கிளின்டனுக்கும் இடையில் முன்வைக்கப்பட்ட தெரிவு என்பது உண்மையில் ஒரு தெரிவே இல்லை என்பது. ட்ரம்ப், சமூக நிலைமைகள் —மக்களின் மிகப் பரந்த எண்ணிக்கையிலானோருக்கு நிலவுகின்ற நிலைமைகள்— மீதான ஒரு ஆழமான கோபத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதால் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இந்த நிகழ்வுப்போக்கை நாம் அமெரிக்காவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளிலும் கூட பார்க்கிறோம். ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் எந்தவொரு செல்லுபடியாகும் தன்மையும் நிலைமுறிந்து விட்டிருப்பது தான் அதன் கீழமைந்த காரணமாய் இருக்கிறது.

CH: சரியே.

DN: அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரச்சினைகளுக்கு எந்த தேசியரீதியான தீர்வும் கிடையாது. ஒரு போர்க் கொள்கையின் மூலமாக இதனை வெற்றிகாண்பதற்கு அமெரிக்கா முனைகிறது. ஏனென்றால் இறுதியில் ஏகாதிபத்தியம் என்பது, என்ன? தேசிய எல்லைகளுக்குள்ளாக தேசிய-அரசின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இயலாமல் போவதுதான் போர் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றும் கொள்கைக்கான உந்துதலாக இருக்கின்றது. அதுதான் இப்போது எழுந்து கொண்டிருக்கிறது. போர் நிலைமைகளின் மற்றும் போர் அச்சுறுத்தலின் கீழ், பெருகிச் செல்கின்ற மற்றும் அளவிட முடியாத சமத்துவமின்மையின் நிலைமைகளின் கீழ், ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. ஜனநாயகத்தை ஒடுக்குவதுதான் இப்போதைய போக்காக இருக்கிறது. எப்படி முதலாளித்துவத்திற்கு எந்த தேசியத் தீர்வும் கிடையாதோ, அதைப் போல தொழிலாள வர்க்கத்திற்கும் எந்தத் தேசியத் தீர்வும் கிடையாது.

CH: அது மிகச்சரி, இந்த நிலைமைகள், நாம் கிறிஸ்தவ வலதில் காண்பதைப் போல பாசிச-மாதிரிகள் அல்லது பாசிசத்திற்கு விளை நிலங்களாக இருக்கின்றன என்பதையும் நான் இவ்விடத்தில் கூற விரும்புகிறேன். அமெரிக்க பாசிஸ்டுகள்: கிறிஸ்தவ வலதும் அமெரிக்கா மீதான போரும் என்ற ஒரு புத்தகத்தை நான் எழுதினேன். நான் Harvard Divinity School படித்து பட்டம் பெற்றவன். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அத்தனை எளிதாகப் பயன்படுத்துபவனில்லை. அவர்கள் பாசிஸ்டுகள், அமெரிக்க தேசியவாதத்தின் சித்திரஅடையாளத்தையும் அரச மொழியையும், கிறிஸ்தவ மொழியின் அடையாளம் மற்றும் மொழியுடன் ஒன்றுகலப்பதையே அப்போது நாஜி ஜேர்மன் கிறிஸ்தவ திருச்சபையும் செய்தது.  

ட்ரம்ப் ஒரு அரசியல் வெற்றிடம், இந்த கிறிஸ்தவ பாசிசம் அந்த வெற்றிடத்தை நிரப்புவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நோம் சோம்ஸ்கி சொல்கிறார்: ட்ரம்பை அகற்றுவது பெரிய விடயம் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் மைக்கேல் பென்ஸ் அதனை விட மோசமானவராய் இருப்பார்.

AD: இந்த இடத்தில் குறுக்கிடக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் இருவருமே போர் என்ற விடயத்தையும், சர்வதேசியத்திற்கான தேவையையும் முன்நிறுத்தினீர்கள். ஈராக் போர் விடயத்தில் அவர் காட்டிய வெளிப்படையான எதிர்ப்புக்காக பெயர்பெற்றவரான போர்-எதிர்ப்பு செயல்பாட்டாளர் சின்டி சீஹனால் அனுப்பப்பட்டிருக்கும் ஒரு ஆதரவு செய்தியை வாசிக்க விரும்புகிறேன்:

“இந்த மிக முக்கியமான மற்றும் அத்தியாவசியமான நிகழ்வுக்கும் அதில் பேசுகின்ற மதிப்பிற்குரியவர்களுக்கும் எனது மிகத் தோழமையான வாழ்த்துக்களை அனுப்புகிறேன்; இணையத் தணிக்கைக்கு எதிரான இந்த அவசரமான போராட்டத்தில் தலைமை வகிப்பதற்காக WSWS மற்றும் SEPக்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“பத்திரிகையாளர் ஜோன் பில்கெரிடம் இருந்தான செய்தியை நான் முழுமையாகப் படித்து அதனுடன் முழுமையாக உடன்படுகிறேன், இணைய தணிக்கை விடயத்தில் ஒரேயொன்றைத் தவிர மேலதிகமாய் சேர்ப்பதற்கு எதுவுமில்லை, தேசியப் பாதுகாப்பு அரசானது அதிருப்தியை ஒடுக்குவதற்கு மட்டுமல்லாமல், நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று சாம்ராஜ்யம் விரும்புகிறதோ அந்த வழியில் சிந்திப்பதற்கு இணையப் பயனர்களை வழிநடத்துவதற்குமான வழிவகைகளை மேலும் மேலும் அதிகமான ஒழுங்கமைத்து கொண்டிருக்கிறது. மிகப்பெரும் சமூக ஊடகத் தளத்தின் உரிமையாளர் உள்ளபடியே அப்பட்டமாக இதனை ஒத்துக் கொண்டிருக்கிறார், அதிர்ச்சியூட்டும் விதமாய் அதற்கு எதிரான மிக மென்மையான எதிர்ப்புடன் —அப்படி எதையும் காட்டியிருந்த பட்சத்தில்— (இப்போது உடனிருப்பவர்கள் தவிர்த்து). அத்துடன், ஒருவேளை பரப்புரையைக் கொண்டு நம்மை போதுமான அளவுக்கு துரிதமாக போர் எந்திரத்தை அடியொற்றி நடக்கச் செய்ய முடியவில்லை என்றால், மிக வசதியான ஒரு வழியாக, ஹவாய் மக்களுக்கு பொய்யான ஒரு வெடிப்பு ஏவுகணை எச்சரிக்கையை வழங்குவது அதே வேலையைச் செய்து விடாதா?

“ஆன்லைனில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன் என்று நம்புகிறேன், அத்துடன் நமது கருத்துச் சுதந்திரத்தின் மீதும் அமெரிக்க சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதும் நடத்தப்படுகின்ற இந்த சமீபத்திய நச்சுத்தனமான தாக்குதலை எதிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் நாங்கள் செவிமடுப்போம் என்றும் நம்புகிறேன்.”

வெளிப்பட அவர் எழுப்பும் மிக முக்கியமான பிரச்சினைகள் மற்றும் தலைப்புகள் நாம் இப்போது விவாதித்துக் கொண்டிருப்பதில் அடங்கியிருக்கின்றன. அத்துடன் நமது வாசகர்களும் பார்வையாளர்களும் இந்த விவாதத்தின் பாதையில் எழுப்பிய கேள்விகள் பலவற்றையும் அவர் எழுப்புகிறார்: அடுத்து என்ன?” கரோலின் எழுதுகிறார்: “ஆக இதற்கான தீர்வு என்ன?”

ஜோசப்பிடம் இருந்து கிடைத்திருக்கும் கருத்து: “இணையத் தணிக்கையை முடிவுக்குக் கொண்டுவர தனிமனிதர்களாய் குடிமக்கள் குறிப்பாக செய்யக் கூடியது என்ன?”

பென் ஃபிராங்ளினிடம் இருந்தான இன்னொரு கருத்து கூறுகிறது: ”சோசலிஸ்டுகளும் புரட்சியாளர்களும் இணையத்தில் தகவல்தொடர்புக்கான மாற்று வழிகளை அமைக்க வேண்டியிருக்கிறது என்று கருதுகிறீர்களா, அல்லது பழைய முறை அச்சு-அடிப்படை பிரசுரங்களுக்கு நாம் திரும்ப வேண்டியது தானா?”

Derek3 எழுதுகிறார்: “தயவுசெய்து ஒழுங்கமைப்பு நிகழ்ச்சிப்போக்கை விவரியுங்கள். இணைய உள்கட்டமைப்பை பெருநிறுவனம் கையிலெடுத்துக் கொள்வதைத் தடுப்பதற்கான ஆக்குறைந்த நம்பிக்கையை இணையப் பயனர்கள் எவ்வாறு பெறலாம்?”

இந்தக் கேள்விகள், வெளிப்படையாக, உங்கள் இருவரையும் நோக்கியதாக இருக்கிறது.

DN: இதில் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. இந்த விவாதம் சர்வதேசரீதியாக நிலவும் பிரம்மாண்டமான நெருக்கடியின் உள்ளடக்கத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் போர் அபாயத்தை மிகைப்படுத்தி வருவதாக நம்புகின்ற எவரொருவரும் வார இறுதியில் ஹவாயில் என்ன நடந்தது என்பதைக் காணவேண்டும். மக்கள் இந்த நிகழ்வுகளை மிகவும் கவனத்தில்கொள்ளாமல் இருந்திருந்தால், இத்தகைய ஒரு பீதியான பதிலிறுப்பு அங்கே இருந்திருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அவர்கள் அதனை தீவிரத்துடன் நோக்குகிறார்கள், ஜூலியான் அசாஞ்ச் பயன்படுத்திய ஒரு வார்த்தையைக் கொண்டு சொல்வதானால், இந்த அச்சுறுத்தல் உயிர்வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் என்பதை, போர் அபாயம் பிரம்மாண்டமாய் நிற்கிறது என்பதை உணரத் தொடங்குகிறார்கள். இத்தகைய அபாயங்கள், கவனம்செலுத்துவதையும் நனவையும் ஒருங்குவிப்பதற்கு இட்டுச்செல்கின்றன. மக்கள் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டாக வேண்டும், பிரச்சினைகளை மிக ஆழமாகவும் தீவிரமாகவும் ஆய்வு செய்தாக வேண்டும் என்பதை உணரத் தொடங்குகிறார்கள்.

“ஏன்” நிகழ்கின்றது என்ற நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், போர் அபாயம் என்பது எதனால்? இறுதியில், அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை ஸ்தாபிக்க முனைகிறது, அதைச் செய்வதற்கு சமாதானமான வழியொன்றும் அங்கேயில்லை. போர் அபாயம் என்பது எத்தனை பெரிதாக நிற்கிறது என்பதற்கு இராணுவத்தில் இருக்கின்ற பல உயர்-நிலை அதிகாரிகளது கூற்றுகள் மேற்கோளிடப்பட்டவை உள்ளிட்ட ஏராளமான கட்டுரைகள் வலைத் தளத்தில் இருக்கின்றன.

எதைக் கொண்டு அதனை நிறுத்த முடியும்? சோசலிசத்தை நோக்கிய ஒரு இயக்கத்தைக் கொண்டு மட்டுமே. இந்தக் கேள்விகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்தவை. பரந்த சமத்துவமின்மை மட்டங்கள், போரின் மிகத் தீவிரமான அபாயம்: இத்தகைய நிலைமைகள் ஜனநாயகத்துடன் இணக்கமற்றவை. ஜனநாயகம் ஒடுக்கப்படுவது அவர்களுக்கு அவசியமாகிறது.

CH: இதில் எனது கருத்தையும் கூறவிடுகிறேன்: நாம் போரில் இருக்கின்றோம், 16 ஆண்டுகளாக போரில் இருந்து வருகிறோம். நியூ யோர்க் டைம்ஸ் மத்திய கிழக்கு பிரிவின் தலைவராக நான் இருந்திருக்கிறேன். மத்திய கிழக்கில் ஏழு ஆண்டுகள் இருந்திருக்கிறேன், ஈராக்கில் பல மாதங்கள் இருந்திருக்கிறேன். பிந்தைய அமெரிக்க சாம்ராஜ்யத்தின் மாபெரும் மூலோபாயத் தவறாக அது இருந்தது, ஏதென்ஸ் சாம்ராஜ்யம் சிசிலி மீது படையெடுத்து, அதில் அவர்களது ஒட்டுமொத்த கப்பலும் மூழ்கி அநேக வீரர்கள் கொல்லப்பட்டார்களே, அதற்கு நிகரான பெருந்தவறாய் இருந்தது. அங்கு அதன்பின் சாம்ராஜ்யம் முழுமையிலும் கலகங்கள் வெடிக்கக் கண்டிருந்தது.

இது அடிப்படையில் நமது சூயஸாக இருந்தது, 1956 இல் சூயஸ் கால்வாயை நாசர் தேசியமயமாக்கிய போது அதனை எதிர்க்க முனைந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அதன்பின் அவமானப்பட்டு திரும்பப்பெற வேண்டி வந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அதன்பின் மீட்சி காணவேயில்லை, ஸ்டெர்லிங் பவுண்டு உலக நாணயமதிப்பாக இருப்பதில் இருந்து அகற்றப்பட்டு பிரிட்டிஷ் பொருளாதாரத்தை அது நீடித்த வீழ்ச்சிக்குள் இட்டுச்சென்றது.

அமெரிக்க டாலர் உலக நாணயமதிப்பாக இல்லாது போகுமாயின், நாம் உடனடியான பொருளாதார உருக்குலைவினால் பாதிக்கப்படுவோம். வோல் ஸ்ட்ரீட் எல்லா விதமான விளையாட்டுகளையும் விளையாடிக் கொண்டிருப்பதால், நிச்சயமாக நாம் இன்னொரு பொருளாதாரப் பொறிவால் பாதிக்கப்படப் போவது நிச்சயம்.

பங்குச் சந்தை, மறுபடியும், இந்த கற்பனையான குமிழியில் உயர்ந்துசென்று கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆனால் அது சாம்ராஜ்யத்தை பின்வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கிறது. அத்தனை பிற்கால சாம்ராஜ்யங்களின் குணாம்சமாக இருக்கின்ற இந்த மூலோபாய தப்புக்கணக்கு, அமெரிக்காவின் உயிர்க்குருதியை ஏற்கனவே வற்றச் செய்து கொண்டிருக்கிறது.

டேவ், அவர்கள் இன்னுமொரு போர்-முனையைத் திறக்க முயலுகின்ற அளவுக்கு மிக முட்டாள்தனமாயுள்ளனர் என்பது சரியே. ஆனால், நாம் ஏற்கனவே 7 டிரில்லியன் டாலர்களை செலவழித்து விட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன், இன்னும் போரின் உயிர்ச் சேதங்கள் குறித்து சொல்லவும் வேண்டியதில்லை, அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, குறிப்பாக ஈராக்கியர்களுக்கு, ஆப்கானிஸ்தானியர்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு, ஏமனியர்களுக்கு (ஏமனில் சவுதி அரேபியாவின் பிரச்சாரம் குறித்து யாரும் பேசவும் விரும்புவதில்லை, படுபயங்கரமான காலரா பரவலை...)

ஆக, இதுதான் சமீபத்திய சாம்ராஜ்யத்தின் மரபான பதிலிறுப்பாக இருக்கிறது, வடகொரியாவுடனான ஏதேனையும் கூட நாம் காணக் கூடும், ஏனென்றால் “போர் என்பது அரசின் ஆரோக்கியம்” என்று ரண்டோல்ஃப் போர்ன் கூறியிருக்கிறார்.

போரின் பெயரால், நம்மைப் போன்ற எதிர்ப்பாளர்கள் “ரஷ்யாவின் வெளிநாட்டு முகவர்கள்” என்று சொல்லி தாக்கப்படுவதை ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். டேவிட் சொல்லாத ஒரு விஷயம், ஆனால் அது நீங்கள் நன்கறிந்தது தான், அதைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள், வெளிப்பார்வைக்கு, இந்த மென்பொருள் செயல்நிகழ்முறைகள் (algorithms) பிரயோகிக்கப்படுவதற்கான காரணம் “போலிச் செய்தி”களை நிறுத்துவதற்கு. இப்போது, உங்கள் வலைத் தளம், Truthdig அல்லது Counterpunch ரஷ்யாவுக்காக “போலிச் செய்தி”களை பிரசுரம் செய்வதில்லை. ஆனால் அவர்கள் அப்படியான வாதத்தைப் பயன்படுத்துகிறார்கள், போரின் ஒரு சமயத்தில், எதிர்ப்பவர்களை மோசமானவர்களாய் சித்தரிப்பதற்கு இது மிகவும் எளிதாக்கித் தரும்.

ஸ்பார்ட்டசிஸ்ட் எழுச்சிக்குப் பின்னர் ரோஸா லுக்சம்பேர்க் உடன் கொல்லப்பட்ட மாபெரும் ஜேர்மன் புரட்சியாளரான கார்ல் லீப்னெக்ட் “எதிரி வீட்டில் தான் இருக்கிறான்” என்று சொல்வதுண்டு, அதாவது ஜேர்மன் இராணுவவாதம் தான் எதிரி என்பார். நமது எதிரி இங்கே நமது நாட்டில் தான் இருக்கிறான்.

உதாரணத்திற்கு, குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நாம் தோற்று விட்ட பின்னர், இந்தப் போர்களை நாம் ஏன் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்? தலிபான்கள் முற்றிலும் மீண்டெழுந்து வருகின்றனர். ஈராக் போலல்லாமல், ஆப்கானியர்களில் வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே நகர்ப்புற பகுதிகளில் வாழ்கின்றனர். 80 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர், அவை ஒன்று சண்டைப் பகுதியாக இருக்கின்றன அல்லது தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பவையாக இருக்கின்றன, காபூல் மற்றும் கந்தகாரின் பகுதிகளும் கூட தலிபான்களது பிரசன்னத்தைக் கொண்டிருக்கின்றன.

அந்தப் போர்களை நாம் ஏன் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்? ரஷ்யாவுடனான ஒரு போரின் சாத்தியத்திற்கு ஏன் வரிந்து கட்டுகிறோம்? ஏனென்றால் ஆயுதத் தொழிற்துறையின் காரணத்திற்காக, Raytheon மற்றும் Haliburton மற்றும் Northrup Grumman ஆகியோருக்கு போர் நல்ல வர்த்தகமாக இருக்கிறது என்பதால்.

நான் வார்சோவில் இருந்தபோது, விமானநிலையத்தில் நான் சென்று இறங்கிப் பார்த்தால், அங்கே Raytheon க்கு ஒரு பிரம்மாண்டமான விளம்பரப் பலகை நின்று கொண்டிருந்தது. பேர்லின் சுவர் வீழ்ந்தபோது, நேட்டோ ஜேர்மனியைத் தாண்டி விரிவுபடுத்தப்படாது என்று ஜனாதிபதி ரீகன் கோர்ப்பசேவுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

ஆயினும் கூட அர்த்தமற்ற வகையில் அது ரஷ்யாவின் எல்லை வரைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆயுதங்கள் தயாரிப்புத் துறையை தவிர்த்து இது முரண்பாடுமிக்கதாகவும் அவசியமற்றதாகவும் இருந்தது, ஏனென்றால் செக்கோஸ்லேவேக்கியா, போலந்து, இந்த நாடுகள் அத்தனையும், அப்போது சோவியத்தின் தயாரிப்பாக இருந்த தமது ஒட்டுமொத்த ஆயுத முறைகளையும், நேட்டோ ஆயுதமுறைகளுக்கு இணக்கமாக மீளமைவு செய்ய வேண்டியதாகியது. அதற்கு பில்லியன் பில்லியன்களாய் டாலர்கள் செலவு. இதைத் தான் நீங்கள் ட்ரம்ப் நிர்வாகத்திலும் பார்த்திருக்கிறீர்கள். அது “அரசை கட்டுப்படுத்தும் குழு” (deep state) மற்றும் அதன் மீதான ஆயுதத் தயாரிப்புத் துறையை எதிர்த்துப் போராட இயலாமல் இருந்து வந்திருக்கிறது. 

DN: அவை அனைத்தும் நெருக்கமாகப் பிணைந்தவை, அத்துடன், இறுதி ஆய்வில், மீண்டும் இதற்குத் திரும்புவது எப்போதும் முக்கியமானது என்று நினைக்கிறேன்: போர் பேரழிவுகரமானது, ஆனால் அவர்களுக்கு வேறெந்த வழியும் இல்லை. போர் என்பது அமைப்புமுறையின் வலிமையின் வெளிப்பாடு அல்ல. அது ஆழமான மிகத் தீவிரமான நெருக்கடியின் ஒரு வெளிப்பாடு ஆகும்.

ட்ரொட்ஸ்கி இடைமருவல் வேலைத்திட்டத்தில் கூறினார்: “ஆளும் உயரடுக்கினர் கண்கள் மூடியபடி பேரழிவை நோக்கி வழுக்கிச் செல்கின்றனர்”. 1939 இல், 1914 இல் போலவே அழிவுகரமான பின்விளைவுகளைப் பற்றி நன்கறிந்த நிலையிலேயே அவர்கள் போருக்குச் சென்றனர். நிச்சயமாக, 1939 இல், போரின் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்தேயிருந்தனர்: போர் புரட்சியைக் கொண்டுவரும். ஆனால் அவர்களுக்கு வெளிவர வேறு வழி தெரியவில்லை.

இன்று நிலவக் கூடிய உலகப் பிரச்சினைகள் இரண்டு வழிகளில் ஒன்றின் மூலமே தீர்க்கப்பட முடியும்: முதலாளித்துவ, ஏகாதிபத்தியத் தீர்வு போர் மற்றும், நீங்கள் கூறியதைப் போன்ற, பாசிசம் ஆகியவை. தொழிலாள வர்க்கத்தின் தீர்வு சோசலிசப் புரட்சி. இதுவே நாம் முகம் கொடுக்கக் கூடிய மாற்று என நான் நினைக்கிறேன். ஆகவே, மிகப் பரந்த அர்த்தத்தில் முன்நிற்கக் கூடிய கேள்வி இதுதான்: நாம் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கான பதில் என்ன? ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது.

CH: ஒழுங்கமைப்பு குறித்த சில விவரங்களுக்கு செல்லலாம். ஆற்றலை மறுபடியும் ஒரு செத்துப்போன அமைப்புமுறைக்குள் —அதாவது ஜனநாயகக் கட்சிக்குள்— திருப்பி விடுவதற்கு உயரடுக்கினர் முயற்சி செய்கின்றனர், அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர். அதனால் தான் நான் —அவர் கவலைப்படுகிறாரா அல்லது இது முக்கியமானதா என்பதல்ல— பேர்னி சாண்டர்ஸை நான் வழிமொழிவதில்லை. ஏனென்றால் அந்த அத்தனை பணமும், அத்தனை ஆற்றலும் —ஞாபகத்தில் கொள்ளுங்கள், அவர் “புரட்சி” என்ற வார்த்தையையும் கூடப் பயன்படுத்தினார்— அவர் நாடெங்கிலும் ஓடி ஓடிப் போய் ஒவ்வொருவரிடம் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்கச் சொல்வதில் சென்று முடிந்தது.

DN: அது கச்சிதமாக முன்கணிக்கக்கூடியதாகவே இருந்தது....

CH: அது முழுமையாக முன்கணிக்கக் கூடியதாக இருந்தது. ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகம்...

DN: அத்துடன் அவருக்கு பல வழிவகையாளர்களும் இருந்தனர்...

CH: ஆம்... அது சாண்டர்ஸை வேட்பாளருக்கு அனுமதிக்கப் போவதில்லை என்பது தெரிந்திருந்தது. DNC மின்னஞ்சல் கசிவுகளில் நாம் அதனைக் காண்கிறோம், அதன்பின் ஹிலாரி கிளிண்டன் DNC [ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்வுசபை] க்கு போட்டியிடுவதாக தலைமைப் பெண்மணி அவரது புத்தகத்தில் அளித்த சொந்த வாக்குமூலத்திலும் கண்டோம். உதாரணத்திற்கு சுயாதீனமான வாக்காளர்களை முதனிலைத் தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து ஒதுக்கிவிடுவதற்கும் (அத்துடன் முதனிலைத் தேர்தல்களுக்கு ஆகும் செலவு கட்சிகள் செலுத்துவது அல்ல, அவை வரி செலுத்துவோரால் செலுத்தப்படுவதாகும் என்றும் என்னால் தைரியமாகச் சொல்ல முடியும்), நெவடா தேர்வுக் கூட்டத்தை திருடுவதற்கும், 1 பில்லியன் டாலர் கறுப்புப் பணத்தை, பெருநிறுவனப் பணத்தை கிளிண்டன் பிரச்சாரத்தின் கஜானாவுக்குள் பாய்ச்சுவதற்குமான பொறிமுறைகள் அவர்களிடம் இருந்தது. ஆகவே அது ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை.

அமைப்புமுறை தன்னைத்தானே திருத்திக் கொள்வதற்கு திறம்படைத்திருக்கிறது என்றோ, அல்லது நாம் அந்த அமைப்புமுறையை சீர்திருத்துமளவுக்குத் திறம்படைத்திருக்கிறோம் என்றோ நமக்கு நாமே மயக்கம் ஏற்படுத்தக் கூடாது, அல்லது முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஒத்துழையாமையின் தென்னாபிரிக்க மாதிரி தான் நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு முட்டுக்கட்டையிட வேண்டும்.நான் North Dakota இல் Standing Rock பகுதியில் பார்த்தேன். தண்ணீர் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நல்ல உதாரணமாக இருந்தன, அடிப்படையில் Dakota அணுகல் பைப்லைனை நேரடியாகத் தடுத்துக் கொண்டிருந்தன. ட்ரம்ப் அலுவலகத்திற்கு வரும்போது அதில் கையெழுத்திட்டு சட்டமாக்கி விடுகிறார் தான். என்றாலும் அதற்கும் வாஷிங்டனில் நடக்கும் “மகளிர் பேரணி”க்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள், பெரும்பகுதி ஜனநாயகக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டதாக இருந்த இது, உண்மையில் அரசியல் படோடாபமாக இருந்தது. Debbie Wasserman Schultz அங்கே ஒரு இடத்தில் பேசினார், அது இவ்விடயத்திலான ஒரு உட்பார்வையை உங்களுக்கு அளிக்கும்.

வாஷிங்டன் பதிலிறுப்பை ஸ்டாண்டிங் ராக் பதிலிறுப்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள்: 700க்கும் மேலான கைதுகள், முரட்டுத்தனமான வெளியேற்றல்கள், ரப்பர் புல்லட்டுகள், மிளகுத் தூவல்கள், தாக்குதல் நாய்கள், மிளகுத் தூவலுடன் பின்னிய தண்ணீர் பீரங்கிகள், பூச்சியத்திற்கும் குறைவான வெப்பநிலைகளில், தொடர்ச்சியான ஊடுருவல் இருந்து கொண்டிருந்தது.

நான் அங்கே இருந்தபோது, ஒருநாளில் 24 மணி நேரமும், அந்த முகாமை விமானங்கள் சுற்றிச்சுற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தன. அவர்கள் நவம்பரில் சாலைகளை மூடிவிட்டார்கள், ஆகவே நாங்கள் முழுதுமாகச் சுற்றி இன்னொரு பக்கத்தில் இருந்து வர வேண்டியதாய் இருந்தது. பின்பகுதி சாலைகளிலும் கூட, இராணுவம் போல் சீருடை போட்டுக் கொண்டு இராணுவ ஆயுதங்களை வைத்துக் கொண்டு அதே சமயத்தில் எந்த விதமான அடையாளச் சான்றும் இன்றி இருந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினர், கூலிப்படையினர் அமைத்து வைத்திருந்த சாலைத்தடைகளைக் கடந்து நாங்கள் செல்ல வேண்டியிருந்தது.

AD: உள்நாட்டுப் போரின் விடயத்தில், இணையத்தின் மீதான கட்டுப்பாட்டை ஆளும் உயரடுக்கினர் ஒரு உயிர்வாழ்க்கைத் தேவைக்கான அச்சுறுத்தலாகக் காண்கின்றனர் என்பது நிச்சயம். செனட்டிலும் அவையிலும் நடந்த விசாரணைகள் குறித்து உலக சோசலிச வலைத் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவரான கிளிண்ட் வாட்ஸ் பின்வருமாறு எழுதினார்: “உள்நாட்டுப் போர்கள் துப்பாக்கிமுழக்கங்களுடன் ஆரம்பிப்பதில்லை; அவை வார்த்தைகளைக் கொண்டு தொடங்குகின்றன. அமெரிக்கா தனக்குள்ளாக நடத்தும் போர் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கிறது. சமூக ஊடக யுத்தக்களத்தில், விரைவாக வன்முறையான மோதல்களுக்கு இட்டுச் செல்லக் கூடியதும், நம்மை பிளவுபட்ட அரசுகளாக எளிதில் மாற்றி விடக் கூடியதுமான தகவல் கலகங்களை பரவாமல் தடுப்பதில் நாம் அனைவரும் இப்போது செயல்பட்டாக வேண்டும்...”

CH: இங்கே குறுக்கிட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், அனைவரும் Ultranet இல் மக்ஸ் புளூமென்ட்தால் எழுதிய அவரைப் பற்றிய கட்டுரையைப் படிக்க வேண்டும், ஏனென்றால் அவர் முற்றிலும் ஒரு கிறுக்கர். வலது-சாரி சதித் தத்துவவாதி, எந்தவித மதிப்புமற்றவர். ஆனாலும் இந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவர் பயனுள்ளவராய் இருக்கிறார்.

DN: இணையம் குறித்து நாம் பேசும்போது, ஏன் உலக சோசலிச வலைத் தளம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு மிக தீர்க்கமான சாதனமாக இருக்கிறது என்றால், வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அபிவிருத்தி செய்வதே மிக இன்றியமையாத பிரச்சினை ஆகும்.

பாரிய சமூகப் போராட்டங்கள் வரவிருக்கின்றன, அவை ஏற்கனவே கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்றன. சோசலிசப் புரட்சியின் கேள்வி கற்பனாவாதமல்ல. அது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து புறநிலைரீதியாக எழக் கூடிய ஒரு நிகழ்ச்சிப்போக்காகும். 2008 முதலாக, நெருக்கடியின் ஒரு துரிதப்படலை நாம் கண்டு வந்திருக்கிறோம் என்று வாதிட முடியும் — நாம் இந்த வாதத்தை மேற்கொண்டோம். அது ஒருபோதும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை, அத்துடன் உண்மையில் சமூக சமத்துவமின்மையின் பாரிய மட்டங்களே கூட அவையளவில் ஒரு ஆரோக்கியமான ஒழுங்கினுடையதல்லாமல், ஒரு ஆழமாய் நோய்வாய்ப்பட்ட சமூகப்பொருளாதார ஒழுங்கின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. ஒவ்வொரு மட்டத்திலும் அது சமூக எதிர்ப்புக்கு எரியூட்டிக் கொண்டிருக்கிறது.

ரஷ்யப் புரட்சி ஸ்ராலினிசத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டமை, தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புகள்; அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படியச் செய்யப்பட்டமை என இருபதாம் நூற்றாண்டின் தோல்விகள் மற்றும் காட்டிக்கொடுப்புகளால் உருவாக்கப்பட்ட அரசியல் குழப்பத்தின் மரபைத் தாண்டச் செய்வது என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்பது உண்மையே. கற்றுக் கொள்ள வேண்டிய இன்றியமையாத பிரச்சினைகளும் பாடங்களும் உள்ளன. இந்தப் பிரச்சினைகளில் தொழிலாள வர்க்கத்திற்குக் கல்வியூட்டுவதும், முன்னோக்கை அபிவிருத்தி செய்வதுமே மிக இன்றியமையாத அம்சம் ஆகும்.

அபாயங்களைப் புரிந்து கொள்வது முக்கியமே என்றாலும் ஒருவர் சாத்தியங்களையும், அத்துடன் வரலாற்றுப் படிப்பினைகளது முக்கியத்துவத்தையும் கூடப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தப் படிப்பினைகள் இன்றியமையாதவை என்பதே எமது அணுகுமுறையாக இருக்கிறது. அடிப்படைப் பிரச்சினை துணிச்சலின்றி இருப்பது அல்ல. போராடும் விருப்பமின்றி இருப்பது அல்ல. புரிதல் இல்லாமல் இருப்பது....

CH: ...அத்துடன் அமைப்பு...

DN: ஆனால் பல விதமான அமைப்பு வடிவங்கள் இருக்கின்றன. நடுத்தர வர்க்க குழுக்கள் முன்வைக்கின்ற அமைப்பு வடிவமும் இருக்கிறது, ஏதேனும் ஒருவகையான அல்லது இன்னொரு வகையான மோதல்கள், ஒரு முன்னோக்கு இல்லாமல், இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அனுபவமான அக்டோபர் புரட்சியில் —அதன் வெற்றி மற்றும் அதன் காட்டிக்கொடுப்பு என்கிற துன்பியல் இரண்டிலிருந்தும்— இருந்து தேற்றம் செய்யப்பட்ட புரட்சிகரப் போராட்டத்தின் வரலாற்றுப் பயணப்பாதை குறித்த புரிதல் இல்லாமல். ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் குறித்து அறிந்திருக்காத எவரொருவராலும் இன்று அரசியலைக் குறித்து புத்திக்கூர்மையுடன் பேச முடியாது. சென்ற ஆண்டில், நியூ யோர்க் டைம்ஸ், ரஷ்யப் புரட்சியை கண்டனம் செய்வதற்கு, அதனைச் சிதைப்பதற்கும் பொய்மைப்படுத்துவதற்கும் ஏன் அத்தனை பல கட்டுரைகளை அர்ப்பணித்தது? அந்த அனுபவத்தைக் கண்டு அவர்கள் மிரட்சியடைகிறார்கள். புறநிலையாக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகர இயக்கத்துடன் ஒரு நனவான மார்க்சிசத் தலைமை சங்கமித்தற்கான ஒரு உதாரணமாக அது இருந்தது. இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தை நாம் எடுத்துப் பார்த்தால், இந்த உலகளாவிய இயக்கமானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைக் கண்டுதான் அவர்கள் மிரட்சியடைகின்றார்கள். ஆளும் உயரடுக்கினர் அவர்களிடம் சொல்வார்கள், இணையம் ஒரு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது என்று. அவர்களால் அதை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?

நிறைய ஆலோசனைகளை நான் கூற முடியும். முதலாவதாய், நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி பல மட்டங்களில் வருகிறது. மிகப் பரந்த விதத்தில், இந்த புள்ளியை ஆங்காங்கே நான் சொல்லி வந்திருக்கிறேன் என்று நம்புகிறேன், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசப் புரட்சிகர இயக்கத்தை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது, கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியிலும் அனைத்துலகக் குழுவிலும் செயலூக்கத்துடன் பங்குபெறுவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் எண்ணிக்கையை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் விண்ணப்பம் செய்கிறோம். ஆயினும், இன்று நாங்கள், இந்த கட்டமைப்புக்குள்ளாக, கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் முழுமூச்சுடனும் தீர்மானகரமான விதத்திலும் பாதுகாப்பதற்கான அவசியத்தையும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று நாம் நடத்துகின்ற இந்த கலந்துரையாடல், பல்வேறு பார்வைநிலைகளில் இருந்தும் இந்தப் பிரச்சினைகளை அணுகுவது, மிகவும் மதிப்புவாய்ந்தது என்று நான் கருதுகிறேன். அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபகரான கனன் ஒருமுறை கூறினார்: “உண்மை எவரொருவரையும் புண்படுத்துவது இல்லை, அவரும் அதே மட்டத்தில் நிற்கின்ற போது”. நாம் இருவருமே ஒரே மட்டத்தில் நிற்பவர்களாக இருப்பதால், இதுமாதிரியான விவாதத்தின் மூலம் நாம் புண்படப் போவது இல்லை.

நாம் முன்வைக்கப் போகும் ஆலோசனை என்னவென்றால், முதலாவதாய் இது எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன், சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களின் ஒரு கூட்டணியை உருவாக்குவது. பொருள்விளக்கம், வேலைத்திட்டம் மற்றும் வரலாறு விடயங்களில் கருத்துவித்தியாசங்கள் இருப்பினும் கூட, பங்கேற்பை நாங்கள் வரவேற்கிறோம்.

சோசலிசத்திற்காகவும் போரை எதிர்த்து —தவிர்க்கவியலாமல் அதன் பொருள், ஜனநாயகக் கட்சியை எதிர்த்தும், இரண்டு கட்சி அமைப்புமுறையை எதிர்த்தும், முதலாளித்துவ அரசியல் அமைப்பை எதிர்த்தும் என்பதாகும்— போராடவும் உறுதிபூண்டிருப்பவர்களுக்கு கருத்து சுதந்திரத்தையும், இணைய நடுநிலைமையையும் முழுமூச்சுடன் பாதுகாப்பதற்கும், தாக்குதலுக்குள்ளாகும் வலைத் தளங்கள் மற்றும் தனிமனிதர்கள் இரண்டையுமே பாதுகாப்பதற்கு ஒழுங்கமைப்பு செய்வதற்கும் ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், உலக சோசலிச வலைத் தளமும் அனைத்துலகக் குழுவும், இதில் தொடர்புடையை முக்கிய கேள்விகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களுடன் இணைந்து வேலைசெய்வதற்கு விருப்பத்துடன் இருக்கின்றன.

ஆனால் எல்லாவற்றையும் விட, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் முதலாளித்துவத்தின் நெருக்கடி, புரட்சிகர வேலைத்திட்டத்திற்கான போராட்டம் ஆகியவை குறித்த ஒரு புரிதலை அபிவிருத்தி செய்வதற்கான தேவைதான் மிக இன்றியமையாத பிரச்சினை என நாங்கள் நம்புகிறோம். பிரச்சினைகளுக்காக சண்டை பிடிக்கலாம், விவாதிக்கலாம், அப்படித் தான் கட்டாயம் நடந்தாக வேண்டும், அப்படித் தான் நாங்கள் முன்னோக்கிய வழியைக் காண்கிறோம்.

CH: இவை அனைத்திலும் நான் உடன்பட முடியும் என நினைக்கிறேன். அந்த நனவைக் கட்டியெழுப்புவதற்கு நிறைய செய்யப்பட வேண்டியிருக்கிறது. சில சக்திவாய்ந்த பொறிமுறைகள் இருக்கின்றன, எனது புத்தகங்களுக்கு மீண்டும் திரும்ப வேண்டாமென நினைக்கிறேன், இருந்தாலும் Empire of Illusion: The End of Literacy and the Triumph of Spectacle எப்படி என்றால் Guy Debord போல, அல்லது சீசெரோவைப் பார்த்தீர்களென்றால், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் உச்சசமயத்தில், ரோமானிய மக்கள் அவர்களது உணர்வுபூர்வ மற்றும் புத்திஜீவித வாழ்க்கையை விளையாட்டுகளில் முதலிட்ட போது அவர் ஆட்டக்களத்தை எப்படித் தாக்கினார்.

சக்திவாய்ந்த கவனம்மாற்றும் கண்கவர் பொறிமுறைகள் இருக்கின்றன. அத்தனை சர்வாதிபத்திய சமூகங்களும் இதில் நல்ல கைத்தேர்ச்சி பெற்றிருக்கின்றன. நம்முடைய சமுதாயமும் அதிலிருந்து வித்தியாசப்பட்டதல்ல. இதிலிருந்து உடைத்துக்கொள்ள  மக்கள் செயலூக்கமிக்கவர்களாய் இருக்கவேண்டும். என் வீட்டில் ஒரு தொலைக்காட்சி பெட்டியை நான் வைத்துக் கொள்ளவில்லை, இருந்தாலும் கூட, விமான நிலையங்களில் பொது இடங்களில், இந்தக் குப்பை வெகுஜன பொழுதுபோக்கு என்ற பேரில் நிறைந்து கிடக்கிறது, அது துப்புகின்ற குப்பை. இவை அனைத்துமே புத்திஜீவிதரீதியாக நம்மை நாமே மயக்கத்தில் ஆழ்த்திக் கொள்ளச் செய்கின்ற பொறிமுறைகளாய் இருக்கின்றன.

பெருநிறுவன முதலாளித்துவ அமைப்புமுறைகள் எவ்வாறு வேலைசெய்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் அச்சு-அடிப்படை கலாச்சாரத்தையே வேராகக் கொள்ள வேண்டியிருக்கும். மார்க்ஸைப் படிக்க வேண்டியிருக்கும். ட்ரொட்ஸ்கியைப் படிக்க வேண்டியிருக்கும். போலன்யியைப் படிக்க வேண்டியிருக்கும். ஷெல்டன் வோலின் எழுதிய ‘ஜனநாயக நிறுவனம்’ (Democracy Incorporated) படிக்க வேண்டியிருக்கும். கையடக்க மின்னணு சாதனங்களில் ஒரு நாளின் 24 மணி நேரமும் வழங்கப்படுவதாய் இருக்கின்ற பொழுதுபோக்குத் திசைதிருப்பல்கள் அனைத்தையுமே, நம்மை இந்தப் புள்ளிக்குக் கொண்டுவந்திருக்கிற புறநிலைமைகளை ஆய்வு செய்வதில் இருந்து மக்களைத் தடுப்பதற்கான அடிப்படை பொறிமுறைகளாக நான் பார்க்கிறேன்.

அந்த அர்த்தத்தில், கல்வியூட்டலின் முக்கியத்துவத்தை போதுமான அளவுக்கு நான் வலியுறுத்த முடியாது. அது சுய-கல்வியூட்டலாக இருக்க முடியும், அதை நீங்கள் ஒரு பிரபல பள்ளியில் சென்று பெறப் போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பிரபல பள்ளிகளுக்கு போகும் அநேகப் பேர் —நான் சென்ற வசந்தத்தில் பிரின்ஸ்டனில் பாடம் நடத்தியிருக்கிறேன்— கோல்ட்மன் சாக்ஸ்க்குப் போகிறார்கள். ஆனால் நீங்கள் நனவுடன் இருந்தாக வேண்டும். செவ்வியல் புரட்சிகர எழுத்துக்களுக்குத் திரும்புவது அந்த நனவின் ஒரு முக்கியமான பகுதி என்று நான் நினைக்கிறேன். கிராம்ஷி, ரோஸா லுக்செம்பேர்க் ஆகியோரது பெயர்களை நாம் குறிப்பிட்டோம். புரட்சிகரத் தத்துவத்துடன் கலந்துரையாடுவதாக இருக்கின்ற, அதிகாரம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் புரிந்திருக்கின்ற Canetti இன் மக்கள்கூட்டங்களும் அதிகாரமும் (Crowds and Power), அத்தனை வகையான மாபெரும் படைப்புகளுக்கும் நமக்கு இன்னும் அணுகல் இருக்கிறது. அவர்கள் அவற்றை நம்மிடம் இருந்து அகற்றிச் சென்று விடவில்லை. எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதில் அது ஒரு முக்கியமான அம்சமாகும்.

DN: கிறிஸ் அவரது புத்தகங்களை குறிப்பிட்டார், அவற்றை நானும் பரிந்துரைக்கிறேன், அவையெல்லாம் மிக நல்ல மற்றும் சுவாரஸ்யமான புத்தகங்கள், அத்துடன் கிறிஸ் இன்னுமொரு புத்தகத்தையும் முடித்து கொண்டிருக்கிறார். அதன் தலைப்பு...

CH: America: The Farewell Tour என்பதே அதன் தலைப்பு.

DN: பல கடினமான உண்மைகள் அதில் இருக்கும். ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்ற புத்தகத்தை மக்கள் வாசிப்பதற்கு நான் வலியுறுத்துவேன், அது நான் எழுதியது என்பதால் அல்ல, அது இருபதாம் நூற்றாண்டின் இன்றியமையாத அனுபவங்களை சுருங்கக் கூறச் செய்யப்பட்டிருக்கும் ஒரு முயற்சி என்பதால். நீங்கள் நினைவுகூர்ந்து பார்க்கலாம், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், வரலாறு முடிந்து விட்டதாக ”வரலாற்றின் முடிவு” என்பதான ஒரு செய்தி பரப்பப்பட்டது. அது வரலாற்றின் முடிவும் அல்ல, ஏன் இருபதாம் நூற்றாண்டின் முடிவே கூட அல்ல. கடந்தகால புரட்சிகர அனுபவங்களின் படிப்பினைகள் வழியாக நாங்கள் வேலைசெய்கிறோம், வேலை செய்தாக வேண்டும். லீப்னெக்ட் மற்றும் லுக்செம்பர்க்கின் எழுத்துக்களையும் நிச்சயமாக நான் பரிந்துரை செய்வேன். லீப்னெக்ட் கூறினார்: “அதற்காகவே அந்த அனைத்தும்”, இதனை அவர் ரோபர்ட் பர்ன்ஸிடம் இருந்து எடுத்தாண்டிருந்தார். ஆனால் விடயம் என்னவென்றால், என்ன தடைகள் இருந்தாலும், புறநிலைமைகள் புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

அத்தனை அபாயங்கள் (அடர்த்தியாக இருக்கின்றன) மற்றும் பிரச்சினைகள் (மலைபோல் குவிந்திருக்கின்றன) இருந்தாலும், நாம் என்ன செய்கிறோம் என்பதற்கு நாம் பொறுப்பாய் இருக்கிறோம். மேலும் மேலும் போர்க்குணமடைந்து செல்லும் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்திற்கு அது முகம்கொடுக்கின்ற அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதற்கு அவசியமாக இருக்கின்ற சிந்தனைகளையும் வேலைத்திட்டத்தையும் வழங்குவதே எங்களது சவாலாய் இருக்கிறது.

ஏராளமான எழுத்துக்களைக் குறிப்பிட்டீர்கள். “என்ன செய்ய வேண்டும்?” என்பதற்கான பதில் என்னவாக இருந்தது. சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டாக வேண்டும். நான் எமது வாசகர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். தொழிலாள வர்க்கம் ஒன்று அங்கே இருக்கிறது. அந்தத் தொழிலாள வர்க்கம் இப்போது எதனையும் செய்வதற்குத் தயாரான நிலையில் நிற்கிறது, அத்துடன் புரட்சிகர சிந்தனைகளுக்கும் செவிகொடுக்கிறது. நிலைமைகளை உருவாக்குவதே நமது சவாலாகும். தொழிலாளர்கள் இதனை பல்கலைக்கழகங்களில் கற்கப் போவதில்லை.

என்ன செய்ய வேண்டும் என்பதைத் தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்வதற்கு அதற்கு அவசியப்படுகின்ற புத்திஜீவித, கலாச்சாரக் கருவிகளை தொழிலாள வர்க்கத்திற்கு மார்க்சிச இயக்கமும், ட்ரொட்ஸ்கிச இயக்கமும் வழங்கியாக வேண்டும். ஒவ்வொரு புரட்சிகர இயக்கத்தின் உணர்ச்சிபூர்வமான இதயபூர்வமான உந்துசக்தி இப்போதிருக்கிறது. புரிந்துகொள்ளுதல் மட்டுமே அவசியமாக இருக்கிறது.

இணைய சுதந்திரத்தை நாங்கள் பாதுகாக்க முனைகிறோம் என்றால், அதற்குக் காரணம் இந்தக் கல்வியூட்டலுக்கும் புரட்சிகர நனவு மறுமலர்ச்சி காண்பது நடைபெறுவதற்குமான நிலைமைகளை உருவாக்குவதற்கு மற்றவற்றுடன் சேர்த்து இந்த ஊடகத்தையும் நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம் என்பதால் தான். அதுவே எங்களது மைய நோக்கமாகும்.

நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல நேயர்களுக்கு நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்: எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், தொடர்பு விவரங்கள் அத்தனையும் அங்கே இருக்கிறது, அத்துடன் வலைத் தளங்களில் செயலூக்கத்துடன் இயங்கும் மற்றவர்களுக்கு, நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதை தீவிரத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். நாங்கள் முழுத் தயாரிப்புடன் இருக்கிறோம், அத்துடன் ஜனநாயக உரிமைகளின் ஒரு சளைக்காத பாதுகாப்புக்கான மிகச்சிறந்த நிலைமைகளை உருவாக்குவதற்கு வெகு ஆர்வத்துடன் இருக்கிறோம். இதைச் செய்வதற்கான எங்களது தீர்மானகரமான உறுதியில் நாங்கள் எவரொருவருக்கும் வளைந்து கொடுப்பதில்லை, அத்துடன் இதற்கு இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து நமக்கு மிகப் பிரம்மாண்டமான ஆதரவு கிடைக்கும் என்று நான் கருதுகிறேன்.

AD: நிகழ்ச்சி முடிவதற்கான நேரம் நெருங்குகிறது என்று நினைக்கிறேன்.

DN: இங்கே வந்து பங்கேற்கும் துணிச்சலுக்காக கிறிஸுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் அதைப் பெரிதும் மதிக்கிறேன். அத்துடன் செய்தி அனுப்பிய ஜூலியான் அசாஞ்சுக்கும், முன்வந்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்த ஜோன் பில்கெருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில், இத்தகையதொரு அடிப்படையில், மேலதிக விவாதங்களுக்கும் ஒத்துழைப்புக்கும் இது தொடக்கமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

AD: இன்று பங்கேற்ற நமது விருந்தினர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், எமது வாசகர்கள், நேயர்கள் மற்றும் பார்வையாளர்கள் பார்வைத் திரையின் கீழே அல்லது endcensorship.org இல் தெரியும் படிவத்தின் மூலம் எங்களைத் தொடர்பு கொள்வதற்கும், அத்துடன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு நன்கொடை வழங்குவதற்கும் விண்ணப்பிக்க விரும்புகிறேன். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இதுபோன்று இன்னும் அதிகமான நேரலை நிகழ்வுகளையும் கலந்துரையாடல்களையும் நீங்கள் காண விரும்பினால், அதற்கு நிதியாதாரங்கள் அவசியமாக இருக்கிறது. ஆகவே நீங்கள் இன்றே இதில் அங்கம்வகிப்பதற்கும், நன்கொடை அளிப்பதற்கும் மற்றும் எங்களைத் தொடர்பு கொள்வதற்கும் உங்களைக் கேட்டுக் கொள்வேன். மிக்க நன்றி.