ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to World War III! For the building of a socialist anti-war movement!

மூன்றாம் உலகப் போர் வேண்டாம்! சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்!

Statement of the World Socialist Web Site Editorial Board
17 April 2018

அமெரிக்காவும் நேட்டோவும் சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் ஆகிய நகரங்களின் மீது 100க்கும் அதிகமான ஏவுகணைகளை தொடுத்ததற்குப் பின்னும், சமீபத்திய இரத்தக்களரியில் ஏகாதிபத்திய சக்திகள் திருப்தியடைந்து விட்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. தாக்குதல்கள் நடந்து சில மணி நேரங்களுக்குள்ளாக, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரை மேலும் தீவிரப்படுத்தக் கோரும் தலையங்கங்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தித்தாள்கள் அச்சேற்றத் தொடங்கியிருந்தன.

புதிதாக நியமிக்கப் பெற்றிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் உடன் நெருக்கமாக தொடர்புடைய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுக்காகப் பேசுகின்ற வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது: “ஒரேயொரு குண்டுவீச்சு சிரிய யுத்தக்களத்தின் அடிப்படைகளையோ, அல்லது ரஷ்யா-ஈரான்-அசாத் அச்சு வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற மூலோபாய யதார்த்தத்தையோ மாற்றி விடாது.”

“திரு. ட்ரம்ப்புக்கு ரஷ்ய மற்றும் ஈரானிய ஏகாதிபத்தியத்தை தடுத்து நிறுத்த விருப்பமிருக்குமேயானால்...., அவருக்கு கூடுதல் இலட்சியத்துடனான ஒரு மூலோபாயம் தேவை” என்று அது தொடர்ந்தது. “அடுத்த முறை, தாக்குதல் கூடுதல் தண்டிப்பானதாக இருந்தாக வேண்டும்.”

ஜேர்னல் இவ்வாறு நிறைவுசெய்தது: “ரஷ்யாவும் ஈரானும் சிரியாவில் ஒரு பெரும் விலையை செலுத்தத் தொடங்குகின்றபோது மட்டுமே” பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் நோக்கங்களை அடைய முடியும்.

இத்தகைய வசனங்கள் நிலைமைகளைத் தெளிவாக்குகின்றன: தந்திரோபாய பரிசீலனைகள் அமெரிக்காவை, ஈரான் மற்றும் ரஷ்யப் படைகளுடன் துப்பாக்கிச் சண்டைக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய ஒரு முழுவீச்சிலான தாக்குதலை அல்லாமல் ஏவுகணை வீச்சுக்கு மட்டும் இட்டுச் சென்றன என்ற அதேநேரத்தில், அதுமாதிரியான ஒரு தாக்குதல் தொடுக்கப்படுவது தேதி மட்டுமே கூறப்படாத ஒன்றாகும். அத்தகைய ஒரு மோதல் பிரளயகரமான பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் என்பதான உண்மை அதை நடத்துவதில் இருந்து ஏகாதிபத்திய சக்திகளைத் தடுத்து நிறுத்தி விடப் போவதில்லை.

“பிராந்திய மேலாதிக்கம்” மற்றும் “சிரியாவை அயத்துல்லாவின் வியட்நாமாக மாற்றுவதற்கான” கோரிக்கைகள் குறித்த இந்த பத்திரிகையின் மும்முரமான பேச்சில், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அற்பத்தனமான சாக்குபோக்காக இருந்த, ஏப்ரல் 7 அன்று டூமாவில் சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட விவகாரம், மறைந்தே போய்விட்டிருந்தது.

தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பிரச்சாரமானது உண்மை மற்றும் மக்களின் புத்தித்திறன் இரண்டிற்கும் அலட்சியம் காட்டியதாக இருந்தது. ஏகாதிபத்தியவாதிகள் பலவீனமான நாடுகளுக்கு எதிரான தங்களின் சூழ்ச்சிகளை மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான ஒரு புனித நடவடிக்கையாக அலங்கரித்துக் காட்டுவதற்கு வெறிகூச்சலான மற்றும் கபடவேடமான குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவார்கள் என்பதற்கு, 25 ஆண்டுகால முடிவற்ற போருக்குப் பின்னர், மில்லியன் கணக்கான மக்கள் பெரும்பாலும் நன்கு பழக்கப்பட்டு விட்டனர்.

“பேரழிவு ஆயுதங்கள்” குறித்த புஷ் நிர்வாகத்தின் பொய்களைக் குறித்தோ, அல்லது லிபியாவை தரைமட்டமாக்கி மும்மார் கடாபியைக் கொலைசெய்வதற்கு ஒபாமா பயன்படுத்திய மலிவான மனிதாபிமான சாக்குபோக்குகள் குறித்தோ எவரொருவருக்கும் நினைவில் இல்லை என்பதைப் போல கருதிக்கொண்டு வாஷிங்டன், இலண்டன், பாரிஸ் மற்றும் பேர்லின் நடந்து கொண்டு வருகின்றன.

இந்த கடைந்தெடுத்த பொய்களுக்குப் பின்னால் ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சிரிய நெருக்கடிக்கான பதிலிறுப்பில், Weizsäcker Foundation விடுத்த ஒரு அறிக்கை -இதில் ஜேர்மன் அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரிகள் கையெழுத்திட்டிருந்தனர்- அறிவித்தது: “முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற கட்டமைப்பு காரணங்களில் எதுவும் மறைந்து விட்டிருக்கவில்லை.”

இந்த “கட்டமைப்பு பிரச்சினைகள்” என்பது எவை? இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மார்க்சிஸ்டுகளால் அடையாளம் காணப்பட்ட, முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளே அவை: தேசிய-அரசுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் இடையிலான மோதலில் இருந்து எழுகின்ற, உலகத்தின் செல்வாக்குப் பகுதிகளுக்கும் பங்கிடும் துண்டுகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளிடையே நடைபெறுகின்ற இடைவிடாத போராட்டமாகும்.

ரஷ்யப் புரட்சியாளர் விளாடிமிர் லெனின், 100க்கும் அதிகமான வருடங்களுக்கும் முன்பாய், தனது மிக முக்கியமான எழுத்தான ஏகாதிபத்தியம் என்ற நூலில் எழுதினார்: “முதலாளித்துவத்தின் கீழ் செல்வாக்கு வட்டங்களை, நலன்களை, காலனிகளை மற்றும் இன்னபிறவற்றை பிரித்துக் கொள்வதற்கான ஒரே சிந்திக்கத்தக்க அடிப்படையாக இருப்பது, பங்குபெறுவோரின் வலிமையின், அவர்களது பொதுவான பொருளாதார, நிதி, இராணுவ வலிமையின் கணக்கீடு மட்டுமே”, அது இறுதியாக இராணுவ மோதலின் மூலமாக தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது. “அமைதியான கூட்டணிகள் போர்களுக்கான களத்தை தயாரிக்கின்றன” என்று குறிப்பிட்ட லெனின், “அவற்றின் பங்கிற்கு, போர்களில் இருந்து வளர்ந்தெழுகின்றன” என்றார்.

ஜேர்மன் கைய்சர் வில்ஹேல்ம் II “சூரியனில் இடம்” என்று அழைத்தாரோ அந்த, உலகத்தின் ஏகாதிபத்தியத் துண்டாடலிலும் மறுபங்கீட்டிலும் தமக்கான இடத்தை பத்திரப்படுத்திக் கொள்வதற்காக, ஏகாதிபத்திய சக்திகள் மிகப் பிரயாசையுடனான மற்றும் பேரழிவுகரமான இராணுவ நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுகின்றன.

எல்லாவற்றையும் விட, தனது பொருளாதார உச்ச அந்தஸ்து தொலைந்து போவதன் மூலம் தனது உலக மேலாதிக்கம் நொருங்கக் காணுகின்ற அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதற்கு வேறு எந்த வழியும் இல்லை. வாஷிங்டன் தனது பொருளாதாரப் பலவீனத்தை சரிக்கட்டுவதற்காக முடிவற்ற மற்றும் இரத்தக்களரியான போர்களின் ஒரு வரிசையை கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நடத்தி வந்திருக்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகளும் இராணுவ மோதலுக்கான தயாரிப்புகளும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பென்டகன் அறிவித்த “மூலோபாயப் போட்டி” என்ற சித்தாந்தத்தின் மூலமாக ஒன்றுடன் ஒன்று கலப்பது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய சக்திகள், அவற்றுக்குள்ளாகவும் அமெரிக்காவுடனும் அவற்றுக்கு தந்திரோபாய கருத்துவேறுபாடுகள் இருந்தபோதினும், உலகின் பங்கீட்டில் பங்குபெறுவதற்கும், சூறையாடலில் தமது பெருநிறுவனங்கள் ஒரு பங்கைப் பெறுவதை உறுதிசெய்வதற்கும் அவை கொண்டிருக்கின்ற உறுதியின் மூலமாக உந்தப்படுகின்றன.

கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நடைபெற்று வருகின்ற ஏகாதிபத்தியப் போரின் புதிய சகாப்தமானது, சிரியாவில் ஏவுகணைத் தாக்குதல்களுடன் முடிவடைந்து விடப் போவதில்லை. ஈரானில் ஒரு கைப்பாவை ஆட்சியை அமர்த்துகின்ற அல்லது அந்நாட்டைத் துண்டாடுகின்ற நோக்கத்துடன் அதற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கான முகவுரையாக, சிரியாவின் முழுமையான பிரிவினையை ஏகாதிபத்திய சக்திகள் எதிர்நோக்குகின்றன. இதே அணுகுமுறைதான் இறுதியில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் காத்திருப்பதாகும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அதன் 2016 பிப்ரவரி 18 சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அறிக்கையில் எச்சரித்தது: ”உலகம் ஒரு பேரழிவுகரமான உலக மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது..... 1914 இல் முதலாம் உலகப் போர் வெடிப்பதற்கும் மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கும் முந்தைய காலங்களில் போலவே, பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் என்பது நீண்ட தொலைதூரத்தில் சாத்தியமான ஒன்றல்ல, மாறாக அதிகம் சாத்தியமானதும் மற்றும், இன்னும் சொன்னால், தவிர்க்க முடியாததும் ஆகும் என்ற முடிவுக்கு அரசியல் தலைவர்களும் இராணுவத் திட்டமிடலாளர்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்”.

ICFI பிரகடனப்படுத்தியது: “மூன்றாம் உலகப் போருக்கான முனைப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராய் பரந்த எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் ஐக்கியப்படுத்துகின்ற, போருக்கு எதிரான ஒரு புதிய சர்வதேச இயக்கம் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும்.”

அதன்பின் வந்திருக்கும் இரண்டு ஆண்டுகளில், முதலாளித்துவத்துக்கு எதிராய் வளர்ந்து செல்லும் ஒரு சர்வதேச இயக்கத்தின் எழுச்சியால் அத்தகைய ஒரு இயக்கத்தின் உருவாக்கத்திற்கான சாத்தியம் அதிகரித்துச் சென்றிருக்கிறது. அமெரிக்காவில் ஆசிரியர்கள் தொடங்கி, ஜேர்மனியில் பொதுத்துறை மற்றும் விமானசேவைத் தொழிலாளர்கள், பிரான்சில் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், மற்றும் கிரேட் பிரிட்டனில் பல்கலைக்கழக மாணவர்கள் வரையிலும் தொழிலாள வர்க்கம் அணிதிரண்டு கொண்டிருக்கிறது.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாள-வர்க்க இயக்கத்தை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றிணைப்பதே இன்றியமையாத பணியாகும்.

“இடது” என்றும் “சோசலிஸ்ட்” என்றும் தங்களை மோசடியாக அழைத்துக் கொண்டு, ஏகாதிபத்தியப் போரை ஊக்குவித்தும் வழிமொழிந்தும் வந்திருக்கின்ற அத்தனை அரசியல் போக்குகளுக்கும் எதிரான ஒரு போராட்டம் இதற்கு அவசியமாக உள்ளது. அரசு முதலாளித்துவவாதிகளின் பல்வேறு கன்னைகள் மற்றும் ட்ரொட்ஸ்கிச-விரோத பப்லோவாத இயக்கத்தின் எச்சசொச்சங்கள் ஆகியோர் தான் அந்த பிற்போக்குத்தனமான, ஏகாதிபத்திய-ஆதரவு போலி-இடதின் முன்னிலைப் பிரதிநிதிகளாக உள்ளனர், இவர்கள் அனைவருமே சிரியாவின் ஏகாதிபத்திய துண்டாடலை அங்கீகரிப்பதற்கும் வழிமொழிவதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

உலகம் ஏகாதிபத்தியக் காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு புதிய மேலெழுச்சியைக் கண்ணுற்று வரும் நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 2016 பிப்ரவரியில் அது முன்னெடுத்த இன்றியமையாத கோட்பாடுகளை மீண்டும் ஊர்ஜிதம் செய்கிறது:

• போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், தனக்குப் பின்னால் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் அணிதிரட்டி நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

• புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும் இராணுவவாதம் மற்றும் போரின் அடிப்படைக் காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமான போராட்டத்தின் ஊடாய் அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்வு வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.

• ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும் மற்றும் அவற்றுக்குக் குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.

• அனைத்துக்கும் மேலாய், புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும்.

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் உலகெங்கிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானகரமான உறுதியுடன் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைத் தொடர்புகொள்வதற்கும் மூன்றாம் உலகப் போரைத் தடுப்பதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் இணைவதற்கும் நாங்கள் அழைக்கிறோம்.