ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The slaughter in Gaza and the crisis of Israel on its 70th anniversary

காசா படுகொலையும், இஸ்ரேலின் 70 வது ஸ்தாபக ஆண்டில் அதன் நெருக்கடியும்

Bill Van Auken
24 April 2018

இஸ்ரேலில் இருந்து காசா பகுதியைப் பிரிக்கும், அந்த பலமாக இராணுவமயப்பட்ட எல்லையில் தொடர்ந்து நடந்து வரும் படுகொலைகள், வாஷிங்டன் ஆதரவுடன் இஸ்ரேலிய அரசாங்கம் நடத்தும் திட்டமிட்டதும் கணிப்பிடப்பட்டதுமான ஒரு போர் குற்றமாகும்.

முன்னர் துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்திருந்த இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களின் உயிரிழப்போடு சேர்ந்து, மார்ச் 30 இல் தொடங்கிய, “மீண்டும் மாபெரும் பேரணி" இல் பங்கு பற்றுவதற்காக வந்த நிராயுதபாணியான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதன் எண்ணிக்கை திங்களன்று குறைந்தபட்சம் 40 ஆக அதிகரித்தது.

அவர்களில் ஒருவர், தஹ்ரிர் மஹ்மொத் வஹ்பா, 18 வயதே நிரம்பிய காது கேளாதவர் ஆவார். ஏப்ரல் 13 இல் நடந்த பாரிய வெகுஜன போராட்டத்தின் போது ஒரு இஸ்ரேலிய துப்பாக்கிதாரியால் தலையில் சுடப்பட்டு 10 நாட்கள் உயிருக்கு போராடி வந்தார். மற்றொரு இளைஞர், அப்துல்லாஹ் முஹம்மத் அல்-ஷமாலி (20), கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட காயங்களினால் ஞாயிறன்று நள்ளிரவு உயிரிழந்தார்.

இந்த சமீபத்திய உயிரிழப்புகள், 14 வயது நிரம்பிய மொஹம்மத் இப்ராஹிம் அயொப் உட்பட காசா பகுதியின் நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வெள்ளியன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சுடப்பட்டதைத் தொடர்ந்து வந்தவையாகும்.

உயிரிழந்தவர்களுக்கு அப்பாற்பட்டு, சுமார் 5,000 பாலஸ்தீனர்கள் நிஜமான குண்டுகள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் வாயு தாக்குதல்களால் போராட்டங்களில் காயமடைந்துள்ளனர். இவர்களில், 1,600 பேர் நிஜமான குண்டுகளால் காயமடைந்துள்ளனர், அவர்களில் பலர் வாழ்நாள் முழுவதும் முடமாகிவிடக்கூடிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் எல்லை வேலியை ஒட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒன்று கூடிய காசா பகுதியின் பத்தாயிரக் கணக்கானவர்களுக்கு எதிராக பாரியளவில் விகிதாச்சார பொருத்தமின்றி மிகவும் உயிராபத்தான வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது ஏனென்றால், அவர்களின் போராட்டம் உடனடியாக ஏதோவொருவித பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது என்பதனால் அல்ல. மாறாக, சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களால் உறுதி செய்யப்பட்ட பாலஸ்தீன அகதிகளுக்கான உரிமைக்காகவும், மற்றும் ஏழு பத்தாண்டுகளுக்கு முன்னர் வீடுகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் வன்முறையாக வெளியேற்றப்பட்ட அவர்களின் முன்னோர்களின் வம்சாவழியினரை மீண்டும் திரும்ப அனுமதிக்கவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பும் கோரிக்கையால் அந்த யூதவாத அரசுக்கு முன்னிறுத்தப்படும் உயிர்பிழைப்புக்கான சவாலை ஒடுக்கும் முயற்சியில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு (IDF) சுட்டுக் கொல்லும் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தங்களின் உரிமைகளைக் கோருவதற்கும் மற்றும் இப்புவியில் மிகப்பெரிய திறந்தவெளி சிறைச்சாலை என்று நியாயமாகவே வர்ணிக்கப்படும் காசா பகுதியின் அதிர்ச்சியூட்டும் நிலைமைகளுக்கு எதிராக போராடவும், நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் அந்த துப்பாக்கிச்சூட்டு பகுதிக்கு அணிவகுத்து செல்லும் காட்சிகள் குறித்து மேற்கத்திய அரசாங்கங்களும் பெருநிறுவன ஊடகங்களில் உள்ள அவற்றின் எழுத்தாளர்களும் காட்டும் முழு அலட்சியம் தான் காசா ஆர்ப்பாட்டங்கள் விவகாரத்தில் மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது.

இதுபோன்ற காட்சிகள் ரஷ்யாவிலோ, சீனா, சிரியா, ஈரான், வட கொரியா அல்லது வெனிசூலாவிலோ நடந்திருந்தால் அதற்கான விடையிறுப்பு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஒருவரால் நன்கு ஊகிக்க முடியும். “அட்டூழியங்கள்" மீது கொதிப்பான கண்டனங்களை வெளியிடவும், இராணுவ பலத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாசாங்குத்தனமாக "மனித உரிமைகளை" துணைக்கு இழுப்பதற்கும் நிக்கி ஹேலி ஐ.நா. பாதுகாப்பு அவையின் அவர் பதவியைப் பயன்படுத்தி இருப்பார். அந்த படுகொலைகள் எல்லாம் ஒவ்வொரு பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் நிரம்பியிருக்கும், ஒளிபரப்பப்படும் செய்திகளில் தலைப்பு செய்தியாக இருந்திருக்கும்.

ஆனால் காசா விடயத்திலோ, உடந்தையாய் இருப்பதும், அலட்சியமாய் மற்றும் மவுனமாய் இருப்பதும் தான் பிரதிபலிப்பாக உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அதன் புதிய உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கைகளை கடந்த வெள்ளியன்று வெளியிடுகையில், அதற்கான பத்திரிகையாளர் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள் மீண்டும் மீண்டும் காசா படுகொலை சம்பந்தமான எந்த கேள்விகளையும் ஏற்க மறுத்தனர். இஸ்ரேல் சம்பந்தமாக குறிப்பிட்ட அந்த அறிக்கை —1967 க்குப் பின்னர் இருந்து அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வார்த்தையான— "ஆக்கிரமிப்பு பிராந்தியங்களைக்" குறித்த எல்லா குறிப்புகளையும் கைவிட்டு, இஸ்ரேலின் காலனித்துவ ஒடுக்குமுறையையும் மற்றும் இறுதியாக மேற்கு கரை, காசா, கோலன் ஹைட்ஸ் பகுதிகளை இஸ்ரேல் இணைத்துக் கொண்டதையும் வாஷிங்டன் ஏற்றுக் கொண்டு விட்டதற்கு சமிக்ஞை காட்டியது.

அமெரிக்க ஊடகங்கள் திரும்ப திரும்ப சிரியாவில் இரசாயன ஆயுத தாக்குதல் குறித்து மதிப்பிழந்த பொய்களை முடிவில்லாமல் கூறி வருவதுடன், ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படும் மக்களின் ஒரு காணொளியை (இது இட்டுக்கட்டப்பட்ட புரளி என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும்) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி வரும் அந்த ஊடகங்களில் எதுவுமே ஆக்கிரமிப்பு பிராந்தியத்தில் இஸ்ரேல் —மற்றும் எகிப்தால்— மறிக்கப்பட்டிருப்பதன் காரணமாக மிக அடிப்படை மருந்து பொருட்கள் கூட இல்லாத பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கும் மற்றும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் காசாவின் வைத்தியசாலைகளுக்கு ஒரு செய்தியாளரை அனுப்புவது குறித்து கவலைப்படவில்லை.

அமெரிக்க ஊடகங்களில் மிக குறிப்பிடத்தக்க செய்தியாக இருப்பது, இஸ்ரேலில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள போவதில்லையென ஆஸ்கார் விருது வென்ற நடிகை நத்தலி போர்மன் இன் அறிக்கை ஆகும். அப்பெண்மணி வாரயிறுதியில் ஓர் அறிக்கை வெளியிட்டு, “துல்லியமாக 70 ஆண்டுகளுக்கு முன்னர், யூத இனப்படுகொலையால் அகதிகள் ஆனவர்களுக்கான புகலிடமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களை முறையின்றி கையாள்வதென்பது எனது யூத மதிப்புகளுடன் பொருந்தியதில்லை,” என்று அறிவித்தார்.

அமெரிக்க-இஸ்ரேலிய குடியுரிமை வைத்துள்ள போர்ட்மன், யூதவாதத்தின் (Zionism) ஓர் எதிர்ப்பாளராவார், இது ஏதோவொரு விதத்தில் காசா படுகொலைக்கு அவரது எதிர்வினையை அனைத்தையும் விட மிகவும் குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது. இதற்கு முன்னணி இஸ்ரேலிய அரசியல் பிரபலங்களின் விடையிறுப்போ வக்கிரமாக உள்ளது, அவர் ஹமாஸ் வசம் ஏமாந்து விட்டார் என்றும், அவரின் நடவடிக்கைகளை யூத-எதிர்ப்புவாதத்தினை (anti-Semitism) ஒத்ததாக இருப்பதாக அவரைக் குற்றஞ்சாட்டினர்.

பென்ஜமின் நெத்தனியாகுவின் வலதுசாரி அரசாங்கத்தின் பாகமாக உள்ள இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் (Knesset) குலானு கட்சி உறுப்பினர் ஒருவர், அதிக சர்ச்சைக்கு இடமற்ற ஒரு மதிப்பீட்டை வழங்கினார். “நத்தலி போர்ட்மன் நிராகரித்திருப்பது ஓர் எச்சரிக்கைக்கு அறிகுறியாக இருக்க வேண்டும்,” என்று அந்த சட்ட வல்லுனர் ரசேல் அஜாரியா ட்வீட் செய்தார். “அவர் மொத்தத்தில் நம்மில் ஒருவர் தான், அவரை யூதத்தன்மையோடும் இஸ்ரேலிய தன்மையோடும் அடையாளம் காண்கிறார். அவர் அமெரிக்க யூதர்கள் பலரின் குரலை, குறிப்பாக இளம் தலைமுறையினரின் குரலை, வெளிப்படுத்துகிறார். எப்போதுமே இந்த சமூகமானது இஸ்ரேல் அரசுக்கு ஒரு முக்கிய நங்கூரமாக இருந்துள்ளது என்பதுடன், இதனை இழப்போமானால் மிகவும் அதிகமாக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.”

உண்மையில் இதுவொரு எச்சரிக்கைக்கு அறிகுறி தான். ஊடக இருட்டடிப்பு மற்றும் அமெரிக்க அரசின் ஆதரவு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் மில்லியன் கணக்கான யூதர்கள் உட்பட உலகெங்கிலுமான பாரிய பெருந்திரளான மக்கள் காசா எல்லையில் கட்டவிழ்ந்த காட்சிகளால் அருவருப்படைந்துள்ளனர், அதிர்ந்து போயுள்ளனர்.

இந்த படுகொலைகள் தனித்த சம்பவங்கள் அல்ல, மாறாக இவை இஸ்ரேல் அரசின் அடித்தளத்தில் உள்ள கடுமையான முரண்பாடுகளில் இருந்தும், அதன் சமூகம் மற்றும் அரசாங்கத்தைப் பீடித்து ஆழமடைந்து வரும் நெருக்கடியிலிருந்தும் பெருக்கெடுக்கிறது. இதுபோன்ற குற்றங்களை நடத்த நிர்பந்திக்கப்பட்ட ஓர் ஆட்சி இயல்பாகவே ஸ்திரமின்றியே இருக்கும்.

ஒருசில வாரங்களில் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட 70 ஆம் நினைவாண்டு தினம் வரவிருக்கையில், யூத இனப்படுகொலை பயங்கரங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனத்தில் யூத அரசை ஏற்படுத்துவதே யூதர்களுக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் வழங்குமென கூறப்பட்ட யூதவாத கட்டுக்கதை, சிதைந்து சிதறி வருகிறது.

இப்போதைய இந்த முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள் பாலஸ்தீன பிரச்சினையைத் தீர்க்கவியலாது என்பதற்கு, காசா எல்லை படுகொலைகள், பயங்கரமான வெளிப்பாடுகளாகும். வலதுசாரி நெத்தனியாகு அரசாங்கமும் சரி அமெரிக்க ஏகாதிபத்தியமும் சரி இரண்டுமே, எப்போதும் ஒரு அரசியல் கட்டுக்கதையாக இருந்து வந்துள்ள, "இரட்டை-அரசு தீர்வு" என்றழைக்கப்படுவதை நடைமுறையளவில் கைத்துறந்துள்ளன, ஆனால் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் பாதுகாப்பு மண்டலங்கள் ஆகியவற்றின் தடையற்ற வளர்ச்சியானது அது சாத்தியமே இல்லை என்பதற்கு இப்போது உறுதியான அங்கீகரிப்பாக உள்ளது.

இந்த "மீண்டும் மாபெரும் பேரணி" ஆர்ப்பாட்டமே கூட, ஊழல் கொண்ட பாலஸ்தீன முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் ஏதோவிதத்தில் பங்கிடப்பட்ட சிறிய அரசை உருவாக்குவதன் மூலமாக தங்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற கருத்துரு மீது பாலஸ்தீனர்களது ஏமாற்றத்தின் ஒரு வெளிப்பாடு தான். ஒத்துழைப்புவாத பாலஸ்தீன ஆணையத்தின் அப்பாஸ் இல் இருந்து முதலாளித்துவ இஸ்லாமியவாத ஹமாஸ் வரையில், ஒவ்வொரு அரசியல் கன்னையும் மதிப்பிழந்துள்ளது.

ஊழலில் சிக்கியுள்ளதும் ஆழ்ந்த சமூக முரண்பாடுகளால் குழப்பமடைந்துள்ளதுமான இஸ்ரேலிய அரசு, இன்னும் அதிக ஒடுக்குமுறையை நடத்த உந்தப்படுவதுடன், இன்னும் அதிக அபாயகரமான போருக்கு, முதலும் முக்கியமாக ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகிறது, இது ஒரு பிராந்திய இன்னும் சொல்லப் போனால் உலகளாவிய மோதலின் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது.

பொருளாதார கூட்டுறவுக்கும் மற்றும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) நாடுகளில் மிகவும் சமநிலையற்ற சமூகமாக அமெரிக்காவுக்கு அடுத்து இஸ்ரேலிய சமூக தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதன் வறுமை விகிதம் OECD சராசரியை விட ஏறத்தாழ இரண்டு மடங்காகும், அத்துடன் முழுமையாக அந்நாட்டின் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு வறுமையில் வாழ்கின்றன. சமூக தொகுப்பின் மறுமுனையில், மிகப்பெரிய வர்த்தக அதிபர்களின் ஒரு சிறிய அடுக்கு, அந்நாட்டின் ஏற்றுமதி சந்தைகளில் இருந்து செல்வ வளங்களை அறுவடை செய்துள்ள அதேவேளையில், பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தையும் கட்டுப்பாட்டிலும் கொண்டுள்ளது.

ஈரான், துனிசியா மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனையப்பகுதிகளிலும், சர்வதேச அளவிலும், போலவே, இந்த நிலைமைகள் இஸ்ரேலுக்குள் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன. உலகின் மிகப் பெரிய உயிரி-மருந்து உற்பத்தியாளரான டெவா நிறுவன தொழிலாளர்கள் பாரியளவில் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கடந்த டிசம்பரில் அந்த ஆலை முற்றுகை போராட்டங்களைக் கண்டது, தனியார் துறை மற்றும் பொதுத்துறை தொழிலாளர்கள் இருதரப்பினரின் அரை நாள் பொது வேலைநிறுத்தமும் பின்தொடர்ந்தது.

ஏனைய பிற ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலிலும், இனமோ, மதமோ அல்லது வம்சாவழி சார்ந்த விடயங்களோ அல்ல, மாறாக வர்க்கமே அடிப்படை உந்துசக்தியாக உள்ளது. இஸ்ரேலின் 70 வது ஸ்தாபக நினைவாண்டில் அதன் கைக்கருவியாக ஆகியுள்ள இரத்தஆறு ஓடச்செய்யும் நடவடிக்கைகளும், ஒடுக்குமுறை, பிற்போக்குத்தனம் மற்றும் போரிலிருந்தும் வெளியே வருவதற்கான பாதை, அப்பிராந்தியத்தைப் பிளவுபடுத்தும் பகுத்தறிவற்ற தேசிய எல்லைகளைக் களைந்து ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதற்காக, முதலாளித்துவத்திற்கு எதிராக அரபு மற்றும் யூத தொழிலாளர்களின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் தான் தங்கியுள்ளது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் இதர கட்டுரைகள்:

Israel’s crisis and the historic contradictions of Zionism
[29 May 1998]