ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

කම්කරු විරෝධය මධ්‍යයේ වැඩ නැවැත්වූ කම්කරුවන් සේවයේ පිහිටුවීමට වතු කලමනාකාරීත්වයට බලකෙරේ

இலங்கை: டொரிங்டன் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியது

M. Thevarajah
10 April 2018


டொரிங்டன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கையின் மத்திய பெருந்தோட்ட பிரதேசமான அகரபத்தனைக்கு அருகில் உள்ள டொரிங்டன் தோட்டத்தின் நிர்வாகமானது வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த பி. கனகமூர்த்தி, எல். சசிதரன் ஆகிய இரு தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் 7 அன்று மீண்டும் வேலை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அந்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் உத்வேகமான போராட்டத்தின் விளைவாகவே நிர்வாகம் இந்த முடிவை எடுக்கத் தள்ளப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த இரண்டு தொழிலாளர்களும் வேலை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அகரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழேயே டொரிங்டன் தோட்டம் இயங்குகிறது.

கனகமூர்த்தியும் மற்றும் அவரது மகனும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றதை அடுத்து, மார்ச் 29 அன்று டொரிங்டன் தோட்டத்தின் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரு தொழிலாளர்களுக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க கோரியும் மோசமான வேலை நிலைமைகளுக்கு எதிராகவும் வேலை நிறுத்தம் செய்தனர். தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏப்ரல் 4 அன்று அரச தொழில் அலுவலர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பின்னர், மறுநாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அகரபத்தன-ஹட்டன் வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பொலிஸ் ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முயன்ற போதிலும், முடியாமல் போனது.

கனகமூர்த்தி மீது 7 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தேயிலை தூளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளதாக பொய் குற்றச்சாட்டுக் கூறி, அந்த குற்றச்சாட்டின் மீது தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்க முயன்றார், இந்த குற்றச்சாட்டு மூலம் நிர்வாகத்திற்கும் தோட்டத்துக்கும் அவப்பேறு ஏற்படுத்த முயற்சித்தார், கங்காணி வி. சுந்தரராஜை அசிங்கமான வார்த்தைகளில் திட்டினார், நிர்வாகத்திற்குப் பணியாமலும் அவமதிப்பாகவும் நடந்து கொள்கின்றார், ஆகியவை குற்றச்சாட்டுக்களில் அடங்கும். சசிதரன் தோட்ட வீதியின் படலை பூட்டை உடைத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தோட்டத்தில் கொடுக்கப்பட்ட தேயிலையில் தேநீர் குடித்த பின்னர் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கனகமூர்த்தி கூறினார். தேயிலையில் சில இரசாயனங்கள் கலந்திருப்பதாக அவர் நம்பினார். தோட்ட நுழைவாயில் எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும் சசிதரன் படலையைத் திறக்க முயன்றபோது பூட்டு உடைந்து போனது, என தொழிலாளர்கள் கூறினர்.

வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரம் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக வெடித்தன. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நிறுத்த தொழிலாளர்களை கேட்டுக்கொண்டன, ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். தொழிலாளர்களின் படி, கனகமூர்த்தி மற்றும் சசிதரன் மீதான குற்றச்சாட்டுகளை நீக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. கடினமான வேலை நிலைமைகள் தொடர்பான அடுத்த கலந்துரையாடல் ஏப்ரல் 26 அன்று நடைபெற உள்ளது.

தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் உள்ளன. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களையும் சேர்ந்தத்வர்கள். NUW மற்றும் ம.ம.மு. தற்போதைய அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருக்கும் அதேவேளை, இ.தொ.கா. அரசாங்கம், கூட்டு எதிர்க் கட்சி ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களிடம் பேசிய தொழிலாளர்கள், கம்பனி, நிரவாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். கனகமூர்த்தி இடைநீக்கம் செய்யப்பட்டதைப் போலவே, முகாமையாளர் முகம்மது ஜின்னாவின் எதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்த்த பல தொழிலாளர்கள் போலி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்தை ஆதரிக்கின்றன, தொழிலாளர்களை அல்ல. நாங்கள் தொழிற்சங்கங்களை புறக்கணித்து வேலைநிறுத்தத்தை தொடங்கினோம்”.

தொழிலாளர்கள் தோட்டதில் அடக்குமுறை வேலை நிலைமைகளை விளக்கினர். "ஒரு தொழிலாளியால் நோயினால் அல்லது வேறு காரணத்தால் 3 நாட்களுக்கு தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாவிட்டால், அவர் வேலை இடை நீக்கம் செய்யப்படுவார். காலையில் 7.30 மணிக்கு மலையில் நிற்குமாறு நிர்வாகம் எம்மை நெருக்குகிறது. நாங்கள் சில நிமிடங்கள் தாமதமாக சென்றால் அன்று வேலை கொடுக்க மறுக்கின்றது. சில தேயிலை மலைகள் எங்களது வீடுகளில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன. எப்படி நேரத்திற்கு அங்கு இருக்க முடியும்?

தொலைவில் உள்ள தேயிலை மலைகளில் வேலை செய்யும் போது சில சலுகைகள் இருந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். "முன்னர் ஒரு தொழிலாளி வேலைத் தளத்தில் சுகயீனமடைந்தால், குறிப்பாக பெண் தொழிலாளர்கள், அவரால் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஓய்வு பெறலாம், பின்னர் தங்கள் பணியை தொடரலாம். அவருக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டது. இப்போது அந்த சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன."

கனகமூர்த்தி தற்கொலைக்கு முயற்சித்த பின்னர், மார்ச் 31 அன்று இ.தொ.கா தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஏழு வாகனத் தொடரணியுடன் தோட்டத்திற்கு வந்தார். கனகமூர்த்தி எந்த தொழிற்சங்கத்தை சேர்ந்தவர் என விசாரித்தார். அவர் NUW உறுப்பினர் என தொழிலாளர்கள் பதிலளித்தபோது, தான் NUW இன் உறுப்பினரைப் பற்றி பேச முடியாது என்று தொண்டமான் கூறினார்.

ஒரு ஓய்வுபெற்ற மற்றும் பார்வை தெரியாத தொழிலாளியான இரத்தினவேல், "ஐயா நீங்கள் தொழிற்சங்க வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு தொழிலாளியினதும் உரிமையை பாதுகாக்க வேண்டும். கடந்த தேர்தலில் நீங்கள் எல்லோரையும் உங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டீர்கள், இப்போது நீங்களே ஒரு NUW உறுப்பினரை எவ்வாறு புறக்கணிக்க முடியும்" என தொண்டமானிடம் கேட்டார். தொண்டமான் கோபத்துடன் அவரை சட்டையில் பிடித்து இழுத்து தள்ளிவிட்டார்.


எதிப்பு நடவடிக்கையில் தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் அவரது மூர்க்கத்தனமான நடத்தையை எதிர்த்தபோது தொண்டமான் பேச்சை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு பெண் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறியதாவது: "கடந்த தேர்தலில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் வாக்குகளைப் பெற இங்கு வந்தனர், ஆனால் நாங்கள் எட்டு நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது யாரும் அதைப் பற்றி அக்கறை காட்டவில்லை. எங்களுக்கு உங்களை முதலில் தெரியாது, ஆனாலும் இங்கு வந்து ஆதரவு தருகின்றீர்கள். நாங்கள் மிகவும் கடினமான நிலையில் வாழ்கிறோம். 18 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே ஒரு நாளுக்கான முழு சம்பளமும் கிடைக்கும். இல்லாவிட்டால் அந்த நாளுக்கான 140 ரூபா கொடுப்பனவை இழப்போம்." தேங்காய், அரிசி, மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எப்படி உயர்ந்துள்ளன என்பதை அவர் விளக்கினார். ஆனால் எங்கள் அடிப்படை தினசரி சம்பளம் 500 ரூபாய். வாழ்க்கையை எவ்வாறு சமாளிப்பது? நிவாரணத்தை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் வாக்களித்தோம், ஆனால் நிலைமை மோசமாகிவிட்டது", என்று அவர் கூறினார்.

ஏப்ரல் 5 அன்று ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அரசியல் உறுப்பினர் எம். தேவராஜா, டொரிங்டன் தொழிலாளர்கள் முன் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கூறியதாவது: "சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் உங்கள் தைரியமான போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றது. நீங்கள் நிர்வாகத்திற்கு எதிராக மட்டுமன்றி, தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்துடன் நெருக்கமாக செயல்படும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் போராடுகிறீர்கள்.

“தன்னுடைய மகனுடன் கனகமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தது, எப்படி இந்தத் தோட்டத்தில் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இந்த கடினமான நிலைமைகளின் கீழ் நீங்கள் தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டுள்ளீர்கள். தற்கொலை என்பது தீர்வு அல்ல."

15,000 பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்களின் போராட்டம் உட்பட இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் போராட்டங்களுடன் மற்றும் ஏனைய நாடுகளில் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் முதலாளித்துவ அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக எதிர் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் தீவிரமயமாதலுடன் டொரிங்டன் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என அவர் விளக்கினார்.

"உங்களால் தனியாக போராட முடியாது. மற்ற தோட்டத் தொழிலாளர்களையும் அவர்களைச் சூழ ஏனைய தொழிலாளர் பகுதியனரையும் உங்களது போராட்டத்தில் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் வருவாய் பகிர்வு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களுக்கு மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராகி வருகிறது. தோட்டத் தொழிலாளர்கள் கடந்தகால போராட்டங்களின் மூலம் பெற்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி, மருத்துவ உதவிகள் மற்றும் சிறுவர் நலன்புரி போன்ற தமது குறைந்தபட்ச சமூக உரிமைகளைக் கூட இழக்க நேரிடும்" என தேவராஜா கூறினார்.

இந்த நடவடிக்கையை எதிர்ப்பதற்கு தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த கூட்டு உடன்படிக்கைகளில் அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வருவாய் பங்கீட்டு முறையை ஏற்றுக் கொண்டன என்று அவர் தொழிலாளர்களுக்கு நினைவூட்டினர். இது தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக ஆக்குவதற்கும் அவர்களது ஐக்கியத்தை தகர்ப்பதற்கும் வழிவகுக்கும்.

"தோட்டத் தொழிலாளர்கள், தோட்டக் கம்பனிகளுக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும் ஏஜன்டாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, போராட்டங்களை முன் தொடரவும் ஏனயை தொழிலாளர்களின் ஆதரவைப் பெறவும் நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.