ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

අගමැතිට එරෙහි විශ්වාසභංගය ලංකාවේ පාලක පන්තියේ ආන්තික කාකොටා ගැනීමක ප‍්‍රකාශනයක්

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இலங்கை ஆளும் வர்க்கத்துக்குள் நடக்கும் தீவிரமான வெட்டுக் குத்துகளின் வெளிப்பாடு

By Pradeep Ramanayake and Pani Wijesiriwardena 
3 April 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஏப்ரல் 4 புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது. இந்த பிரேரணையில் அடங்கியுள்ள விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 14ல் பெரும்பான்மையானவை அவர் மத்திய வங்கி பிணை முறி ஊழலுக்கு உடந்தையாக இருந்தமை பற்றியதாகும். மார்ச் மாதம், கண்டி பகுதியில் நடந்த முஸ்லிம்-விரோத இனவிரோத வன்முறைகளைத் தடுப்பது சம்பந்தமாக, அப்போது சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த விக்கிரமசிங்க தோல்வி கண்டுள்ளதாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சி என்ற பெயரில் இராஜபக்ஷவை சூழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் சேர்ந்து நிற்கும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.ம.சு.மு. அமைச்சர்கள் சிலரும் கூட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரியவந்துள்து.

இந்தப் பிரேரணைக்கும் தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களது எந்தவொரு சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை சாதகமாக்கிக்கொண்டு, மீண்டும் ஆட்சிக்கு வர எத்தனிக்கும் இராஜபக்ஷ தலைமயிலான குழுவின் அரசியல் தந்திரோபாயமாகும்.

எனினும், இராஜபக்ஷ முகாமில் உள்ளவர்கள் தூக்கிப் பிடிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியானது எந்த வகையிலும் மக்கள் அவரை ஆதரிப்பதன் வெளிப்பாடு அல்ல. அநேகமானவர்ள், தமது உரிமைகளுக்கு எதிராக கடும் தாக்குதல் நடத்தும் சிறிசேன-விக்கிரமசிங்கவின் "தேசிய ஐக்கிய அரசாங்கத்தின்" மீதான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கே இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு (ஸ்ரீ.ல.பொ.மு.) வாக்களித்தனர்.

பெரும் அவப்பேறு பெற்ற இராஜபக்ஷ மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். பத்து ஆண்டுகள் நேரடியாக ஆட்சியில் இருந்த இராஜபக்ஷ, உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்கி, தமிழ் மக்களை இரத்தக் களரியில் மூழ்கடித்தபோது அபிவிருத்தி செய்த பொலிஸ்-இராணுவ ஒடுக்குமுறை இயந்திரத்தை தெற்கில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராடங்களை ஒடுக்குவதற்காக கொடூரமாக பயன்படுத்திக்கொண்டார். அவர், 2015ல், குறித்த காலத்திற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது, மீண்டும் ஆட்சிக்கு வந்து சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டங்களை வேகமாக அமுல்படுத்தவும், அதற்கு எதிராக போராட்டத்திற்கு வரும் தொழிலாளர்களை கொடூரமான முறையில் ஒடுக்குவதற்குமே ஆகும்.

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் வளரும் எதிர்ப்பின் காரணமாக, அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது மட்டுமன்றி, இராஜபக்ஷ தலைமையிலான குழுவும் இந்த எதிர்ப்பை முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு சவாலாக காண்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில், இலங்கை சிக்கிக்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கடன்களதும் சுமைகளை, போராட்டத்துக்கு வரும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துவது எப்படி என்பதைப் பற்றியே முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கன்னையும் சிந்திக்கின்றது. அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சிக்கு வருவதற்கு இராஜபக்ஷ முயல்வதும் இந்த சமூக போராட்டங்களை நசுக்கும் கொடூரமான குறிக்கோளுடனேயே ஆகும். இராஜபக்ஷ கடந்த மூன்று ஆண்டுகளாக பௌத்த பீடங்களுக்கு சென்று சிங்கள-பௌத்த அதிதீவிரவாத அமைப்புக்களுக்கும் தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாத எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கும் முண்டு கொடுத்து, வலதுசாரி படைகளை அணிதிரட்டிக்கொண்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதுடன் சேர்த்து, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பதட்டங்கள் கூர்மையாகி வருகின்றன. கூட்டரசாங்கத்தின் பிரதான பங்காளியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு, தான் பொறுப்பல்ல என்று கூறி, ஜனாதிபதி சிறிசேன தனது கைகளை வலுப்படுத்திக்கொள்ள கடுமையாக முயன்று வருகின்றார். ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் பிரேரணைக்கு சார்பான நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில், கட்சியின் பிடியை தன்வசம் வைத்துக்கொள்வதில் ஜனாதிபதி சிறிசேன நெருக்கடியை எதிர்கொள்கின்றார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் அரசாங்கம் கவிழும் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியில், கடந்த வாரம் சிறிசேன அரசியலமைப்பை மீறி எதேச்சதிகாரமான முறையில் செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பல குறைக்கப்பட்டுள்ளன. அரசாங்க அமைச்சர்களை நியமனம் செய்து அமைச்சரவையில் மாற்றங்களை செய்யும் போது, ​​ஜனாதிபதியானவர் பிரதமரின் கருத்துக்களை ஆலோசிக்க வேண்டும். சிறிசேன, இவ்வாறு தன் கையில் இருந்த "அதிகாரங்ளை விருப்புடன் விட்டுக்கொடுத்த உலகின் ஒரே ஆட்சியாளர்" என்று கடந்த காலத்தில் கூறிக்கொண்டார்.

ஆனால், கடந்த வாரம் பிரதமர் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் இருந்த மத்திய வங்கி உட்பட பல நிறுவனங்கள் மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதே சமயம், பிரதமரின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய பொருளாதார முகாமைத்துவக் குழுவையும் அகற்றுவதை விக்கிரமசிங்கவின் அனுமதியின்றியே சிறிசேன அறிவித்தார். ஜனாதிபதியின் நடவடிக்கைகள் சிறியவை அல்ல. நம்பகத்தன்மையை வென்றாலும் தோற்றாலும் எதேச்சதிகார ஆட்சிக்கான சிறிசேனவின் முயற்சி வெளிப்படுத்துகிறது.

அரசாங்கத்தை அவப்பேறுக்கு உள்ளாக்கிய பிரமாண்டமான மத்திய வங்கி ஊழல், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை அமுல்படுத்துவது ஆகியவற்றில் தனக்குத் எந்த தொடர்பும் இல்லை என காட்ட சிறிசேன மேற்கொள்ளும் முயற்சி கபடத்தனமானது. சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் கூட்டாகவே இந்த தாக்குதல்களை முன்னெடுத்த அதேவேளை, அமெரிக்க-சார்பு வெளியுறவுக் கொள்கையின் கீழ் வாஷிங்டனின் இராணுவ மூலோபாய வலையமைப்புடன் இலங்கை இராணுவத்தை பிணைத்துள்ளனர்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க. எவ்வாறு செயல்படுத்தும் என்பதைப் பற்றிய ஜனாதிபதி சிறிசேன நேரடி அறிக்கை ஒன்றை வெளியிடவில்லை. ஆனால், அந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ.ல.சு.க.க்குள் பரஸ்பர முரண்பாடுகள் தோன்றியுள்ளன. தான் "நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடுமையாக எதிர்ப்பதாக" கடந்த வாரம் ஸ்ரீ.ல.சு.க. பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஊடகங்களிடம் கூறுகையில், மற்றொரு அமைச்சரான எஸ்.பி. திஸாநாயக்க, “ஸ்ரீ.ல.சு.க.விற்கு நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்த காரணமும் கிடையாது”, என்று கூறினார்.

விக்கிரமசிங்க தன்பக்கத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடித்து, தனது சொந்த கையை வலுப்படுத்திக்கொள்ள முயல்கிறார். தேர்தல் தோல்வி காரணமாக விக்கிரமசிங்க பிரமதர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சிக்குள் ஒரு குழு கூறினாலும், ஐ.தே.க. செயற்குழுவானது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க அணிதிரண்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க., சமூக எதிர்ப்பு வளரும் நிலைமையில், அரசாங்கத்தின் தோல்வியானது வர்க்க ஆட்சி ஆட்டம் காண வழிவகுக்கலாம் என எண்ணி, அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொள்ள முயல்கிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியினால் இரு தரப்பும் பிளவுபடும் நிலைமையை நெருங்கிய போதிலும், அரசாங்கத்தை ஆட்டம் காண இடம் கொடுக்கக் கூடாது என அமெரிக்காவும் இந்தியாவும் சிறிசேனவையும் விக்கிரமசிங்கவையும் எச்சரித்தன.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அணுரகுமார திசாநாயக்க, இரு நாட்களுக்கு முன்னர் தனது யோசனைகளும் அடங்கிய நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களுக்கு கூறினார். அதன் வரலாறு முழுவதும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான முதலாளித்துவ கட்சிகளின் தந்திரோபாயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஜே.வி.பி, இராஜபக்ஷ ஆட்சியை கவிழ்த்து சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவரவும் உதவியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக சமிக்ஞை காட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்காக சேவை செய்யும் அதேவேளை, கொழும்பு அரசாங்கத்திடம் இருந்து தமிழ் உயரடுக்குக்கு சலுகைகள் பெறும் பிற்போக்கு வேலைத்திட்டத்தில் தமிழ் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

எனினும், ஆளும் வர்க்கத்தின் இந்த விரிசல்கள் மற்றும் பிளவுகளுக்கும் கீழ் உள்ள பிரதான காரணம், தமது வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து போர்க்குணமே ஆகும். இந்த குழுக்களில் மத்தியில் தந்திரோபாய சர்ச்சைகளே உள்ளன. சர்வதேச மூலதனத்தின் கட்டளையின் அடிப்படையில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அரச அடக்குமுறையை முன்னெடுப்பது மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவது சம்பந்தமாக இந்த தரப்பின் சகலருக்கும் பொதுவான உடன்பாடு உள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெட்டுதல், தனியார்மயமாக்கத்தை துரிதப்படுத்தல் மற்றும் இவற்றுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை நசுக்குதலும் இந்த ஆளும் வர்க்கத்தின் எந்த கன்னையும் கட்டியெழுப்பும் எத்தகைய புதிய அரசியல் அணிதிரள்வினதும் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் அடங்கும். பொலிஸ் ஆட்சிக்கு மாறிக்கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ குழுக்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கும் எந்த தேர்வும் கிடையாது.

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் சகல குழுக்களில் இருந்தும் அரசியல் ரீதியில் சுயாதீனமடைந்து, ஏழைகள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டிக்கொண்டு, சோசலிச வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுவதே ஒரே மாற்றீடு ஆகும்.