ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

චුදිත හමුදා නිලධාරීන් ආරක්ෂා කිරීම සඳහා ජනාධිපති සිරිසේන ගේ මැදිහත්වීම- වැඩකරන ජනතාවට අනතුරු ඇඟවීමක්

குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை பாதுகாக்க ஜனாதிபதி சிறிசேனவின் தலையீடு- உழைக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

W.A. Sunil
17 September 2018

செப்டம்பர் 12 அன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவத் தளபதிகளை கைது செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். செய்திகளின் படி, அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட எதுவும் வெளிவிடப்படக்கூடாது என "ஒருமனதாக" முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், அநேகமான விடயங்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளன.

சிறிசேன இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கான உடனடி காரணம், நீதிமன்ற உத்தரவின் கீழ் பாதுகாப்பு சபைத் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்படுவதை தடுப்பதே என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் மட்டுமன்றி பொதுவில் குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளை கைது செய்து அவர்கள் “தொந்தரவுக்கு உள்ளாகும் வகையில் செயற்படுவது” பற்றி அந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேன கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். "நாட்டைக் காப்பாற்றிய போர் வீரர்களுக்கு தேவையற்ற துன்புறுத்தல் கொடுப்பதை நிறுத்த வேண்டும்" என்றும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர்களைக் கைது செய்யாமல் வழக்கு பதிவு செய்யுமாறு அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் வெளிநாடு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனது கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமிக்ஞை செய்துள்ளார்.

இது, இராணுவ அதிகாரிகளை குற்றவியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்குவது மற்றும் கைதுசெய்யப்படுவதையும் தடுப்பதற்காக கடந்த இரண்டு வாரங்களில் சிறிசேன நடத்திய மூன்றாவது கூட்டம் ஆகும். ஆகஸ்ட் 28 அன்று, அவர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர்கள், இராணுவத் தலைவர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை நடத்தியிருந்தார். செப்டம்பர் 11 அன்று, நீதியமைச்சர் தலதா அதுகோரல, உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விஜேதாச இராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் உட்பட அதிகாரிகளுடன் இன்னொரு கூட்டத்தை நடத்தி, இராணுவத்துக்கு எதிராக பொலிஸ் செயற்படும் விதத்தைப் பற்றி தனது அபிவிருத்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வழக்கு பதிவு செய்யுமாறு சிறிசேன கூறியுள்ள கருத்து, மோசடியானதாகும். இப்போது விசாரணை செய்யப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் சம்பந்தமான வழக்குகளுடன் தொடர்புபட்ட, நீதித்துறைக்குத் தேவையான முப்படைகளின் உள்ளக தகவல்களை வழங்க வேண்டாம் என ஆகஸ்ட் 28 அன்று நடந்த கூட்டத்தில் அவர் கட்டளையிட்டுள்ளார். அத்தகைய தகவல்கள் இல்லாத சமயத்தில் வழக்குகள் பயனற்றுப் போகும் என்பதை சொல்லத் தேவையில்லை.

சிறிசேன எந்தளவு ஜனநயாக விரோத இராணுவச் சார்பு தலையீட்டைச் செய்கின்றார் என்பதை, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளார்கள் என குற்றச்சாட்டப்படும் குற்றங்களின் கொடூரமே வெளிப்படுத்தும்.

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படை புலனாய்வு அதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி அல்லது நேவி சம்பத் என்ற நபருக்கு தஞ்சம் கொடுத்தமை மற்றும் நாட்டை விட்டு தப்பிப்பதற்கு உடந்தையாக இருந்தமை பற்றி பாதுகாப்பு சபை தலைவர் விஜே குணரத்ன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது ஒரு பாரதூரமான குற்றம் பற்றிய குற்றச்சாட்டாகும். ஆதாரம் இருந்தால், அவரை கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகஸ்ட் 29 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.

2008-2009 ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி காலகட்டத்திலேயே இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டனர். கஸ்தூரியாராச்சிலாகே ஜான் ரீட், ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மொஹமட் சாஜித், திலகேஸ்வரன் ராமலிங்கம், ஜமால்டீன் டிலான், அமலன் லியோன், ரொஷான் லியோன், அந்தோணி கஸ்தூரியாராச்சி, கனகராஜ் ஜெகன் மற்றும் முகமது அலி அன்வர் ஆகிய பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்களாவர்.

அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு உறவினர்களிடம் கப்பம் பெற்றுக்கொண்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

முன்னாள் தளபதி வசந்த கரன்னகொடவின் தனிப்பட்ட உதவியாளர் லெப்டினன்ட் கமான்டர் சம்பத் முனசிங்க மற்றும் லெப்டினன்ட் கமான்டர் வருன் என்ற சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் சுமித் ரணசிங்க உட்பட கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட பத்து பேர் மீது, இந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பந்தமாகவும் சந்தன ஹெட்டியாரச்சி மீது இன்னொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

அட்மிரல் விஜேகுணரத்ன மீது இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்றும், சந்தேக நபர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற உதவியமை பற்றிய குற்றச்சாட்டே அவருக்கு உள்ளது என்றும் கூறி, ஜனாதிபதி சிறிசேன அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் தலைவருக்கு வக்காலத்து வாங்கியுள்ளார். குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒரு நபருக்கு தஞ்சம் ஏற்பாடு செய்தல் மற்றும் நாட்டை விட்டு வெளியேற உதவுவதும் ஒரு பாரிய சட்டப் பிழையாகும், ஆனால் சிறிசேனவுக்கு அது அற்பமான பிரச்சினையாகும்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை பதிவு செய்து செப்டம்பர் 10 அன்று விஜேகுணரத்னவை நீதிமன்றத்திற்கு முற்படுத்தவிருந்தது. ஆனால் அதே நாளில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியுறவு அமைச்சின் செயலாளருக்குத் தெரியாமல் மற்றும் அவரது அனுமதி இல்லாமல் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடியாது என, காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் அச்சலா செனவிரத்ன 12ம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். முப்படைகளின் பிரதான கட்டளைத் தளபதியான ஜனாதிபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறுவதை அறியாமல் இருக்க முடியாது.

சிறிசேனவின் தலையீட்டின் மத்தியில், சனிக்கிழமை ஒரு அறிக்கையினை வெளியிட்ட இரகசிய பொலிஸ், அட்மிரல் விஜேகுணரதனவை கைது செய்யும் எந்த திட்டமும் இல்லை என்றும், அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற மட்டுமே எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தது.

பொலிஸின் நடவடிக்கைகள் சிறிசேனவின் கோபத்திற்கு உள்ளானாலும், உண்மை நிலைமை அது அல்ல. மேலே குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் நடந்து ஒரு தசாப்தம் கடந்திருந்த போதிலும், சிறிசேன உட்பட கொழும்பு ஆட்சியாளர்களின் அங்கீகராத்துடனேயே, அவற்றை மூடி மறைக்க பொலிஸ் செயற்பட்டுள்ளது. இந்த குற்றங்கள் சம்பந்தமாக எழுந்த சர்வதேச விமர்சனங்களோடு பாதிக்கப்பட்டவர்களின் மட்டுமன்றி சிந்திக்கும் தட்டினரதும் கவனத்திற்கு உள்ளாகிய நிலைமையிலேயே, பொலிஸ் மற்றும் நீதித்துறை பாசாங்குகள் இடம்பெறுகின்றன.

பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான முப்பது வருட கால யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் படி, யுத்தத்தின் இறுதி நாட்களில் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 20,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலாக, சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இன்னும் பலரை கடத்தி தாக்கியமை சம்பந்தமான குற்றச்சாட்டுக்களும் பாதுகாப்பு படையினர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவை எதைப் பற்றியும் வழக்கு விசாரணை செய்து, இதுவரை அவற்றுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

அதற்கு பதிலாக, தானும் அமைச்சராக இருந்த முந்தைய அரசாங்கம் செய்த குற்றங்களை மூடி மறைக்கும் சிறிசேன, அவற்றுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை நேரடியாக பாதுகாக்கின்றார். போர்க்குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு பாதுகாப்புத் துறை அலுவலரையும் நீதிமன்றத்திற்கு அழைக்க அல்லது தண்டனைக்கு உள்ளாக்க இடமளிப்பதில்லை என அவர் மீண்டும் மீண்டும் சபதம் செய்துள்ளார்.

குற்றங்களை செய்தவர்களை தராதரம் பார்க்காமல் தண்டிப்பதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இப்போது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி போன்றே போர் குற்றவாளிகளை பாதுகாக்கின்ற ஒரு ஆளும் கும்பலே என்பது போதுமானளவு நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்கள் சம்பந்தமாக சிறிசேன தலைமையிலான முதலாளித்துவ ஆளும் வர்க்கம் முற்றிலும் மாறுபட்ட கொடூரமான கொள்கையையே பின்பற்றுகின்றது. சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவும் அவர்களது போராட்டங்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் அவசர காலச் சட்டத்தை ஏவிவிடுவதில் தயக்கம் காட்டவில்லை. கடந்த வாரம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக அச்சுறுத்தியவாறே அவர்களை தீவிரவாதிகள் என சிறிசனே திட்டினார்.

வெள்ளிக்கிழமை, தேர்வு செய்யப்பட்ட ஊடகங்களின் தலைவர்களை கூட்டமொன்றுக்கு அழைத்த சிறிசேன, இலங்கை இராணுவத்தை போர் குற்றச் சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற, தனது சொந்த விசேட யோசனை ஒன்றை விரைவில் இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் முன்வைப்பதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகளை நாட்டில் உள்ள சட்டத்திற்கும் மேலாக தூக்கி நிறுத்துவதற்கு கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வேலைத் திட்டத்தை புதிய உச்சத்திற்க உயத்துவதற்கு சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சி செயற்பட்டு வருவதையே சிறிசேன இந்த நடவடிக்கையில் காட்டுகின்றார். முந்தைய குற்றங்களில் இருந்து இராணுவம் மற்றும் பொலிசை விடுவிப்பது, எதிர்கால ஒடுக்குமுறைகளுக்கு அவற்றுக்கு அழைப்பு விடுப்பதற்கே ஆகும்.

பிரெடரிக் ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் தெளிவுபடுத்திய விதத்தில், இராணுவ, பொலிஸ் மற்றும் நீதித்துறை உட்பட அரச இயந்திரம், முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறை கருவிகளாகும். நெருக்கடியின் போது, அவை உழைக்கும் மக்களுக்கு எதிரான வெளிப்படையான அடக்குமுறைக்கு கட்டவிழ்த்து விடப்படும்.

உலக பொருளாதார நெருக்கடியினால் ஆழமடைந்து வரும் இலங்கை பொருளாதார பிரச்சினைகளுக்கு, சர்வதேச நாணய நிதிய உபதேசத்தின் படி செயற்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி கண்டு வரும் போராட்டங்களை எதிர்கொள்கின்ற ஆளும் வர்க்கத்தின் தட்டுக்கள் வலுவான ஆட்சி, ஸ்திரமான அரசாங்கம் மற்றும் எதேச்சதிகார ஆட்சியை உருவாக்கிக்கொள்ளும் மாற்றீட்டைப் பற்றி கலந்துரையாடுகின்றன. அவர்களுக்கு தேவையான பொலிஸ் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்படும் தயாரிப்புகளே சிறிசேனவின் நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.