ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

දේශපාලන සිරකරුවන් නිදහස් කරන ලෙස ඉල්ලමින් ශ්‍රී ලංකාවේ උතුරේ සිය ගනනක් විරෝධතා දක්වති

இலங்கையின் வடக்கில் நூற்றுக்கணக்கானவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்

By Subash Somachandran
19 October 2018

இலங்கையில் யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வடக்கில், கடந்த வாரம் நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக்களும் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 9 அன்று நடை பயணம் ஒன்றை ஆரம்பித்து அக்டோபர் 13 அன்று வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தை வந்தடைந்தனர். அங்குள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு டசின் அரசியல் கைதிகள் தங்களின் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத்தினை ஆரம்பித்தார்கள். மாணவர்களுடைய நடைபயணம் கிளிநொச்சி மற்றும் வவுனியாவைக் கடந்து சென்றபோது, ​​பிரதேச பொதுமக்களும் மாணவர்களும் தங்கள் அதரவைத் தெரிவித்திருந்தனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தமிழ் வெகுஜனங்களின் கோரிக்கையை இந்த ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் முன்கொணர்ந்துள்ளன. கிட்டத்தட்ட மூன்று தசாப்தகால இனவாத யுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவிற்கும் மேலாக, மேலும் மேலும் மோசமடைந்து வரும் சமூக மற்றும் வாழ்க்கை நிலமைகள் மற்றும் தொடர்ச்சியாக இடம்பெறும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறைகள் சம்பந்தமாக வடக்கில் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பையும் இது எடுத்துக் காட்டுகின்று.

2009 மே மாதம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இராணுவ ஆக்கிரமிப்பும் மற்றும் இராணுவ ஆட்சியும் தொடர்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அரசியல் கைதிகளை விடுப்பதாகவும், மனித உரிமை மீறல், காணாமல் ஆக்கப்ட்டவர்கள் மற்றும் ஏனைய யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதாகவும் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால் அவை அனைத்தும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக எழுந்த வெகுஜன கோபங்களைச் சுரண்டிக்கொண்டு, அமெரிக்க சார்பு ஆட்சியை கொழும்பில் ஸ்தாபிப்பதற்காக அவர்கள் கொடுத்த போலி வாக்குறுதிகளே என்பது இப்போது நீரூபணமாகியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே முற்றுமுழுதாக அமெரிக்க-சார்பு ஆட்சியுடன் இணைந்திருக்கின்றது.

ஒடுக்குமுறை நிலமைகள் ஆழமடைந்துவருவதனால் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தின் காரணமாக, தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் ஏமாற்று வாயடிப்பு வேலைகளை மீண்டும் ஆரம்பிக்க நெருக்கப்பட்டன. அதனால் அவை கடந்தவாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு “ஆதரவளித்தன”.

செப்டம்பர் 14 அன்று அநுராதபுரம் சிறைச்சாலையில் எட்டு அரசியல் கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடர்ந்தே, இந்த எதிர்ப்புக்கள் நடத்தப்பட்டன. அதை அடுத்து, கொழும்பு மகசீன் மற்றும் கண்டி தும்பர சிறைச்சாலைகளில் உள்ள நான்கு டசின் கணக்கான கைதிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

போலி வாக்குறுதிகளினால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்துபோன தமிழ் கூட்டமைப்பு, மீண்டும் உடனடியாகவே நடவடிக்கைகளுக்கு பாய்ந்து சென்றது. அக்டோபர் 14 அன்று, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்த தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மீண்டும் வாக்குறுதி வழங்கினார்: “17ம் திகதி, நடக்கவிருக்கின்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் அரசியல் கைதிகள் சம்பந்தமாக ஒரு உறுதியான முடிவு எடுக்கப்படும்” என அவர் கூறினார். “அங்கு ஏதும் நடக்கவில்லை என்றால், அக்டோபர் 18ம் திகதி, நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக முடிவு எடுப்போம்” என அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துகோறள, அக்டோபர் 7 அன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது, “சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை.” என்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட அல்லது விசாரணைகள் நிலுவையில் உள்ள அல்லது விசாரணை நடந்து கொண்டிருக்கும் கைதிகளே உள்ளனர்”, என அவர் பிரகடனம் செய்தார்.

தமிழ் கூட்டமைப்புத் தலைவர் ஆர். சம்பந்தன், எம். சுமந்திரன் ஆகியோர் பிரதமருடன் ஒரு கலந்துரையாடலில் இருந்தபோதே, தான் இதை வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுவே ராஜபக்ஷ அரசாங்கமும் எடுத்த நிலைப்பாடு ஆகும்.

சம்பந்தன் இன்னொரு போலி விவாதத்தை கண்டுபிடித்துள்ளார். அவர் அண்மையில் பாராளுமன்றத்தில் பேசும்போது, புதிய பயங்கரவாத தடைச் சட்ட மசோதாவில், கைதிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தினை அவர்களுக்கு எதிரான வழக்கில் ஆதாரமாக பயன்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது, என அவர் கூறினார். “ஒப்புதல் வாக்குமூலத்தின்” அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இப்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர் கூறிக்கொண்டார். எவ்வாறாயினும், புதிய பயங்கரவாத மசோதா, எதேச்சதிகார ஆட்சிக்கான கொடூரமான சட்டங்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பு இந்தப் புதிய சட்டங்களுக்கு ஆதரவளிப்பதையே சம்பந்தனின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் மற்றும் தமிழ் கூட்டமைப்புத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மற்றொரு அவநம்பிக்கையான திட்டத்தினை முன்வைத்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை நிபந்தனையாக வைத்தே எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தின்போது, தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும், என அவர் கேட்டுக்கொண்டார். முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், பின்னர், துணைப்படைக் குழுவின் தலைவருமாக இருந்த, விநாயகமூர்த்தி முரளிதரன் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு திரியும் அதேவேளை, அவர் உட்பட புலிகளின் தலைவர்களின் உத்தரவுகளுக்கு அமைவாக செயற்பட்டவர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், என்று அவர் மேலும் கூறினார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைரான சக்திவேலும், அரசியல் கைதிகளின் விடுதலையை நிபந்தனையாக வைத்தே வரவு-செலவுத் திட்டத்துக்கு வாக்களிக்க வேண்டும், என்ற விக்னேஸ்வரனின் கருத்தினையே பின்பற்றினார்.

தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த உள்ளது பற்றிக் கவலைகொள்ளவில்லை.

செப்டம்பர் 15, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து, யாழப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஒரு மகஜர் கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தினதும் மற்றும் யு.என்.எச்.சி.ஆர் உட்பட ஏகாதிபத்திய ஐ.நா.வினதும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் இடையில் யாரும் வேறுபாட்டை காண முடியாது. அவர்கள் சிறிசேன – விக்ரமசிங்க அரசாங்கத்தினை ஆதரிக்கின்றனர்.

தமிழ் தேசியவாதக் கட்சிகள் மற்றும் குழுக்களின் சகல பிரிவுகளும், அவர்களுக்குள் என்ன வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும், அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக அனைவரும் ஓரே வேலைத்திட்டத்தில் உள்ளர். அது, அமெரிக்கா மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உட்பட ஏகாதிபத்தியவாதிகளுக்கும் மற்றும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் மேற்கத்தைய-சார்பு கொழும்பு அரசாங்கத்துக்கும் வேண்டுகோள் விடுப்பதாகும். 

அதே சமயம், தமிழ் மக்களுக்கு எதிராக கொழும்பு அரசாங்கத்துக்கு உதவியவர்களும் துணைப்படைக் குழுக்களாக செயற்பட்டவர்களும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு போலியாக கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து, தங்களின் இரத்தம் தோய்ந்த அரசியலை மூடிமறைப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் பராளுமன்ற உறுப்பினரான மு.சந்திரகுமார் தலமையிலான சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் மற்றொரு எதிர்ப்பினை நடத்தியிருந்தது. “அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தால், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது,” என சந்திரகுமார் கூறினார். அவர் கூறும் நல்லிணக்கத்தின் அர்த்தம், தமிழ் கட்சிகள் தங்களின் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட எதிர்பார்ப்பதே ஆகும். ஈ.பி.டி.பி, எப்போதும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. இது இலங்கை இராணுவத்தின் கூலிப்படையாக ஒரு ஆயுதக்குழுவை நடத்தியது. யுத்தத்துக்கும் அவசரகாலச் சட்டத்துக்கும் ஆதரவளித்ததுடன், யுத்தக் குற்றங்களுக்கும் மற்றும் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும் அது பெரும் பொறுப்பாளியாகும்.

இதன் மூலம், வடக்கில் வாழும் தொழிலாளர், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்கள் முன்னெடுக்கும் ஜனநாய உரிமைகள் மற்றும் சமூக உரிமைகளுக்கான நேர்மையான போராட்டங்களை தடம்புரளச் செய்வதற்கு இந்தச் சகல அமைப்புக்களும் முன்வந்துள்ளன. அரசியல் கைதிகள் நிபந்தனையற்று விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் ஆக்கிரமித்துள்ள இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர்கள் எதிராக நிற்கின்றனர்.

நடைபவனியாகச் சென்ற மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்னால் கூடிநின்றபோது, சில சிங்கள இனவாத குண்டர்கள் அவர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் வார்த்தைப் பிரயோகத்துடன் அவர்களை அச்சுறுத்தினர்: “இங்கு அரசியல் கைதிகள் இல்லை. அங்கு இருப்பவர்கள் அனைவரும் புலிகளே”. பொலிஸ் அவர்கள் அச்சுறுத்தல் விடுக்க அனுமதித்து பார்த்துக்கொண்டிருந்தது. ஆளும் வர்க்கத்தினால் ஊக்குவிக்கப்படும் இலங்கை இனவாத கும்பல்கள், ஜனநாயக உரிமைகளுக்கான கோரிக்கையை எழுப்பும் எவருக்கும் எதிராக, குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக குண்டர் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடுவதில் பேர்போனவை ஆகும்.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத யுத்தம் மற்றும் அட்டூழியங்களின் போதே இந்த கைதிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை தடுத்து வைத்திருப்பதன் மூலம் இலங்கை ஆளும் வர்க்கம் தொடர்ச்சியாக அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான, சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், இந்த அரசியல் கைதிகள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் இனவாதப் பாகுபாடுகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தினதும் பலிகடாக்கள், என தொடச்சியாக வலியுறுத்தி வருகின்றன. நாங்கள், புலிகளின் ஏகாதிபத்திய சார்பு தேசியவாத முதலாளித்துவ அரசியலை எதிர்க்கின்ற அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடினோம்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக போராடுவதோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றவும் கோருகிறது. பெரும் வல்லரசுகளுக்கும், ஐ.நா மற்றும் யு.என்.எச்.சி.ஆர். உட்பட அவற்றின் சர்வதேச அமைப்புகளுக்கும் எண்ணிலடங்கா வேண்டுகோள்கள் விடுத்தாலும், அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான பிரச்சினைக்கும் மற்றும் அந்தவகையில் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைக்கும் கொழும்பு ஆளும் தட்டு பதிலளிக்கப் போவதில்லை.

உலக முதலாளித்துவத்தின் ஆதரவுடனான இலங்கை முதலாளித்துவமே பாரபட்சங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்தினதும் தோற்றுவாயாகும். ஜனநாயக உரிமைகளை வெல்வதற்கு முதலாளித்துவத்தைத் தூக்கிவீசி சோசலிச அமைப்பு முறையை ஸ்தாபிக்க வேண்டும்.

அதனாலேயே, சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காகவும், தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்காகப் போராட அழைப்பு விடுக்கின்றன.