ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US missile treaty withdrawal: “Prepare for nuclear war”

அமெரிக்கா ஏவுகணை உடன்படிக்கையிலிருந்து விலகுதல்: “அணுஆயுத போருக்கு தயாரிப்பு"

Andre Damon
24 October 2018

குறுகிய-தூர மற்றும் மத்திய-தூர ஏவுகணைகளை அபிவிருத்தி செய்வதிலிருந்து வாஷிங்டனையும் மாஸ்கோவையும் தடுத்து வைத்திருந்த மத்திய-தூர அணுஆயுத சக்தி (INF) உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

இந்த நடவடிக்கையின் குற்றகரத்தன்மை மற்றும் பொறுப்பற்றதன்மையை மிகைப்படுத்தி கூறுவது சிரமம். ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை, வேண்டுமென்றே பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவுக்கு எதிரான வாஷிங்டனின் அணுஆயுத கட்டியெழுப்பும் மோதல்களுக்கு இடையே நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ திட்டவகுப்பாளர்கள் அணுஆயுதங்களை ஆயத்தப்படுத்தி வைப்பதற்கு மட்டுமல்ல, மாறாக மோதலின் போது பயன்படுத்தவும் உத்தேசித்துள்ளனர். அவர்களுக்கு எந்த மனிதாபிமான அல்லது தார்மீக கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதையும், வாஷிங்டன் ஆயுதங்களில் மட்டுமல்ல, மாறாக இரத்தவேட்கையிலும் அதன் போட்டியாளர்களுக்கு குறைந்ததில்லை என்பதையும் அவர்களின் விரோதிகளாக இருக்கக்கூடியவர்களுக்கு எடுத்துக் காட்டுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

இந்த திட்டங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியதை ஒரு பிரச்சினையே இல்லை என்பதைப் போல கையாள்கிறது. அந்த விடயம் அதன் முதல் பக்க செய்திகளில் கூட இடம் பெறவில்லை, அப்பத்திரிகை அது குறித்து எந்த தலையங்கமோ அல்லது கட்டுரைகளையோ பிரசுரிக்கவில்லை. ஞாயிறன்று உரையாடல் நிகழ்ச்சிகளிலும் அது விவாதிக்கப்படவில்லை.

ஜனநாயகக் கட்சியினர் இந்த பாதிப்புகள் குறித்து ஏறத்தாழ முற்றிலும் மவுனமாக உள்ளனர், மேலும் 2018 இடைக்காலதேர்தல்களுக்கு இன்னும் வெறும் இரண்டே வாரங்கள் இருக்கையில், உலகளாவிய போர் அபாயம் அல்லது எந்தவொரு போர் எதிர்ப்பும் கூட ஒரு பிரச்சினை என்பதிலிருந்தே தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் வெளியுறவுக் கொள்கை பத்திரிகைகளும் மற்றும் சிந்தனை குழாம் பிரசுரங்களிலும் அணுஆயுத போர் ஓர் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு முன்னரே கூட, Foreign Affairs பத்திரிகை அதன் தற்போதைய பதிப்பை ஓர் ஏவுகணை ஏவப்படுவதைக் காட்டும் முதல்பக்க படத்துடன் அணுஆயுத விவாதத்திற்காக அர்பணித்திருந்தது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடைமுறையளவில் முடிந்துவிட்டதாகவும், “வல்லரசு போட்டி" தொடங்கியிருப்பதாகவும் பிரகடனப்படுத்திய, ஜனவரி மாதம் பிரசுரிக்கப்பட்ட பென்டகனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் பிரதான எழுத்தாளர்களில் ஒருவரான எல்பிரிட்ஜ் எ. கோல்பி (Elbridge A. Colby) இன் ஒரு கட்டுரை Foreign Affairs இன் இந்த பதிப்பில் இடம் பெற்றிருந்தது.

மூலோபாயம் மற்றும் படைகளின் அபிவிருத்திக்கான முன்னாள் துணை உதவி செயலரான கோல்பி, “சமாதானம் வேண்டுமானால், அணுஆயுத போருக்குத் தயாரிப்பு செய்யுங்கள்,” என்று அவர் கட்டுரைக்கு தலைப்பிட்டிருந்தார். அவர் எழுதுகிறார்: “அணுஆயுத இராஜாங்க நடைமுறைகளின் அபாயகரமான ஆபத்துக்கள் மிகப்பெரியளவில் இருக்கலாம், ஆனால் ஒரு எதிராளி மீது அணுஆயுதங்களைக் கொண்டு ஆதாயங்களைப் பெறுவதற்கு அதைத்தான் விலை செலுத்தலாக கொடுக்க வேண்டியுள்ளது,” என்றார்.

“ரஷ்யா அல்லது சீனாவுடனான எந்தவொரு எதிர்கால மோதலும் அணுஆயுத மோதலாக செல்ல முடியும்,” என்று Colby எச்சரிக்கிறார். “ஒரு கடுமையான மோதலில், அதிக நிச்சயமற்ற போராட்டத்தில், சண்டையிடும் ஒவ்வொரு சிப்பாயும் முந்திக் கொண்டு எதிர் தரப்பினர் உறுதியாக இருப்பதை பரீட்சித்துப் பார்க்க, அல்லது தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருக்க அணுஆயுத போர்முரசை எட்டுவதற்கு முனையலாம்.”

அறிவுள்ள ஒருவர் இதை அணுஆயுத அழித்தலுக்கான ஓர் வாதமாக தான் பார்ப்பார். ஆனால் பென்டகனின் தொழில்முறைசார் கொலையாளிகளின் மனதில், இது அதுபோன்ற ஆயுதங்களைக் கட்டமைக்கவும் பயன்படுத்தவும் தேவையான அவசரத்தைப் பேசுகிறது.

“ஓர் அணுஆயுத போரைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி,” கோல்பி எழுதுகிறார், “மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றை கொண்டு சண்டையிட தயாராக இருக்க வேண்டும் என்பது தான்.” இந்த அபாயகரமான உலகில், “அமெரிக்கா மட்டுப்படுத்தப்பட்ட, நடைமுறையளவிலான அணுஆயுத நடவடிக்கைகளை நடத்த தயாராக உள்ளது,” என்பதை “அமெரிக்க அதிகாரிகள்" எடுத்துக்காட்ட வேண்டும் என்று கோல்பி எழுதுகிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், திரு. கோல்பி சண்டையில் அணுஆயுதங்களை, ஓர் இறுதியான அணுவாயுத போர் சூழலில் அல்ல, மாறாக, ரஷ்யாவுக்கு எதிராக பால்டிக்கிலோ அல்லது சீனாவுக்கு எதிராக கிழக்கு பசிபிக்கிலோ, மரபார்ந்த இராணுவ மோதலின் ஒரு விரிவாக்கத்திலேயே பயன்படுத்துவதற்கு அறிவுறுத்துகிறார்.

இதுபோன்ற வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை என்றாலும், இந்த பைத்தியக்காரத்தனம் ஒரு புறநிலை அடித்தளத்தைக் கொண்டுள்ளது. தேசிய-அரசுக்கும் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் இடையிலான தீர்க்கவியலாத மோதலில் சிக்கியுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கு, மனிதயினத்தை ஒரு பேரழிவை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

INF உடன்படிக்கை ரஷ்யாவுடன் செய்யப்பட்டது என்றாலும், அதிலிருந்து விலகுவதென்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்குப் பின்னால் இருக்கும் பிரதான கணக்கீடு சீனாவுடன் அதிகரித்து வரும் மோதலுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த முடிவைப் பாராட்டும் ஒரு கட்டுரையில், National Interest அந்த நகர்வை "சீனாவின் புதிய தீயகனவு" என்று குறிப்பிட்டது. அந்த சஞ்சிகை எழுதியது, வாஷிங்டன், "மேற்கத்திய பசிபிக்கில் அனுகூலமற்ற கடல்கள் மற்றும் வான்வழிகளைப் பாதுகாப்பாக கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இராணுவ அமைப்புமுறைகளுக்கு இடையே நடந்து வரும் 'பரந்த போர்' அபாயங்களில் குறிப்பிடத்தக்களவில் 'நின்றுபிடிக்க முடியாததாக' மாறி வருகிறது.”

“ஆனால் INF இல் இருந்து அமெரிக்கா விலகியமை, இந்த இயக்கவியலைத் திருப்புவதற்கு உதவக்கூடும்,” என்று குறிப்பிட்ட அது, “புதிய அமெரிக்க அணுஆயுதங்கள் சாராத தளவாடங்களை...” ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற "மூழ்கிப் போய்விடாத, வழியிலிருந்து ஒதுங்கி இருக்கும் உள்ளூர்களில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

இந்த நாடுகள் “மூழ்கி போய்விடாது” என்றாலும், அங்கே நூறு மில்லியன் கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். கொள்கை வகுப்பாளர்கள், இரகசிய ஆவணங்களில், துல்லியமாக எத்தனை மில்லியன் பேர் சாக வேண்டுமென திட்டம் தீட்டுகின்ற அதேவேளையில், அதுபோன்ற ஏவுகணை தளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம், அணுஆயுத போர் சாத்தியமில்லை என்று கூறப்படலாம்.

வாஷிங்டனின் அபாயகரமான அணுஆயுத இராஜாங்க நடைமுறைகளுக்கு உந்துசக்தியாக இருப்பது, அதன் போட்டியாளர்களுடன், பிரதானமாக சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவினது உலகளாவிய பொருளாதார அதிகாரத்தின் நீடித்த வீழ்ச்சியாகும். ஆனால் இந்த நிகழ்ச்சிபோக்கு, சீனாவின் உயர்மதிப்பு உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப துறையை ஊக்குவிப்பதற்காக சீன ஆளும் உயரடுக்கின் பாகத்தில் செய்யப்பட்டு வரும் ஒருமித்த முயற்சியுடன் சேர்ந்து, சமீபத்திய ஆண்டுகளில் ஒரு துல்லியமான கட்டத்தில் நுழைந்துள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு புதிய இராணுவ மற்றும் பொருளாதார தீவிரப்பாட்டை அறிவிக்கும் ஓர் உரையில், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், “ரோபோடிக்ஸ், உயிரிதொழில்நுட்பம், மற்றும் செயற்கை நுண்ணறிவு,” உட்பட "21 ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்தின் கட்டுப்படுத்தும் உயரங்கள்" என்றவர் குறிப்பிட்டதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை சீனா கைவிட வேண்டுமென கோரினார், இதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா "புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க பலத்துடன் எங்களின் நலன்களைப் பாதுகாத்து" வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

“நாங்கள் எங்களின் அணுஆயுத தளவாடங்களை நவீனப்படுத்தி வருகிறோம்,” என்று பென்ஸ் அச்சுறுத்தினார். “நாங்கள் புதிய அதிநவீன போர்விமானங்கள் மற்றும் குண்டுவீசிகளை அபிவிருத்தி செய்து நிலைநிறுத்தி வருகிறோம். நாங்கள் புதிய தலைமுறை போர்விமான தாங்கி கப்பல்கள் மற்றும் போர் கப்பல்களைக் கட்டமைத்து வருகிறோம். எங்களின் ஆயுதப்படைகளில் இதற்கு முன்னர் ஒருபோதும் செய்யப்படாத அளவுக்கு நாங்கள் முதலீடு செய்து வருகிறோம்,” என்றார்.

அனைத்து அரசியல் எதிர்ப்பின் மீதும் ஒரு பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையோடு சேர்ந்து, ஒரு முழுமையான போராக இருக்கக்கூடிய அணுஆயுத போருக்கான செயலூக்கமான தயாரிப்புகளைப் பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பதால், அவர்களின் முதுகுக்குப் பின்னால் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஜனநாயகக் கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இராணுவ ஆயத்தப்படுத்தலை எதிர்க்காமல், ட்ரம்ப் போதுமானளவுக்கு ரஷ்யாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக இல்லை என்ற வாதங்களின் மீது ட்ரம்ப் மீதான அவர்களின் விமர்சனங்களில் ஒருங்குவிந்துள்ளனர், இது உள்நாட்டு எதிர்ப்பை மவுனமாக்கும் நோக்கில் இணைய தணிக்கை ஆட்சியைத் திணிப்பதற்கான சாக்குபோக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைத்தியக்காரத்தனமான கொள்கையைத் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே நிறுத்த முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் பெப்ரவரி 2016 அறிக்கையான "சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்" என்பதில் முன்னெடுத்த முக்கிய கோட்பாடுகளை மீளவலியுறுத்துகிறது:

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானகரமாக உள்ளவர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைத் தொடர்பு கொள்ளுமாறும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணையுமாறும் நாங்கள் உலகெங்கிலுமான அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.