ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

All men are not created equal
The American oligarchy’s attack on birthright citizenship

அனைவரும் சமமானவர்கள் இல்லை

பிறப்பு குடியுரிமை மீதான அமெரிக்க செல்வந்த தட்டின் தாக்குதல்

Eric London
1 November 2018

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆம் திருத்தத்தில் பொதிந்துள்ள அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்குமான பிறப்பு குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்மொழிவு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலில் மற்றொரு மைல்கல்லாகும்.

இந்நகர்வுடன், அமெரிக்க செல்வந்த தட்டு “அனைவரும் சமமானவர்கள்" என்ற சுதந்திர பிரகடன சாசனத்தில் எழுதப்பட்ட, அமெரிக்க குடியரசு எதன் மீது ஸ்தாபிக்கப்பட்டதோ அந்த அடிப்படை ஜனநாயக கோட்பாட்டை மறுத்தளிக்கிறது. நிர்வாக ஆணையைக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி 14 வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கினால், ஒட்டுமொத்த உரிமைகள் சாசனத்தையும் மாற்றுவதிலிருந்து அவரை எது தடுத்துவிடப் போகிறது, பேச்சு சுதந்திரத்திற்கும், காரணமற்ற தேடல் மற்றும் பறிமுதல்களில் இருந்து பாதுகாப்பிற்கும், முறையான நீதி விசாரணைகளுக்கும், ஆலோசனை பெறுவதற்கான உரிமைக்கும், ஏனைய அடிப்படை பாதுகாப்புகளுக்கும் எது உத்தரவாதம் அளித்து விடப் போகிறது?

இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாட்களில் வருகின்ற ட்ரம்பின் இந்த முன்மொழிவானது, வெளிநாட்டவர் விரோத உணர்வுகளை முடுக்கி விட்டு, அதிவலது அரசியலமைப்புக்கு-அப்பாற்பட்ட இயக்கத்திற்கான ஒரு அதிகார வட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நிர்வாகம் மற்றும் அதன் பாசிசவாத பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் ஓர் ஆத்திரமூட்டலாகும். இதுபோன்றவொரு இயக்கம், ட்ரம்பின் பெருநிறுவன-சார்பான, போர்-சார்பான, புலம்பெயர்வோர்-விரோத திட்டநிரலை நடைமுறைப்படுத்த அவசியமானதாக கருதப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கான மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான பிறப்பு குடியுரிமையை இரத்து செய்வதன் பாதிப்பு நாசகரமாக இருக்கும். அது அமெரிக்காவில் பிறந்த 300,000 குழந்தைகளை, தடுப்புக்காவலில் அடைக்கும் என்பதோடு, ஒவ்வொரு ஆண்டும் நாடு கடத்தும் அபாயத்திற்கு உள்ளாக்கும் விதத்தில் அவர்களைக் குடியுரிமையற்ற பெற்றோர்களின் குழந்தைகளாக மாற்றிவிடும்.

அது, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கும், மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதற்கும், அல்லது சுகவீனமான குழந்தைகளை மருத்துவமனைகளுக்கு இட்டுச் செல்வதற்கும் பயப்படும் புலம்பெயர்ந்த குடும்பங்களின் ஓர் அடிமட்ட தட்டை உருவாக்கும். மில்லியன் கணக்கான குழந்தைகள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள் என்பதோடு, எந்தவொரு நாட்டிலும் அவர்களுக்கு குடியுரிமை இல்லாமல் போகும். சேரி மாவட்டங்களும் இன்னும் சொல்லப்போனால் மூன்றாம் உலகத்தில் சுவர் எழுப்பி தடுக்கப்பட்ட சேரிப் பிரதேசங்களும், இனரீதியில் ஒதுக்கப்பட்ட நிலைமைகளும் பொது இடங்களாக உருவாகிவிடும்.

கடந்தகாலத்தை பயன்படுத்தினால், பிறப்பு குடியுரிமையை இரத்து செய்வது 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாடு கடத்தப்படுத்தப்படும் உடனடி அபாயத்தில் நிறுத்துமென செய்திகள் தெரிவிக்கின்றன. எந்தவிதத்தில் பார்த்தாலும், ஆவணமற்றவர்களின் அதிகரிப்புக்கு அரசாங்கம், இன்னும் கூடுதல் தடுப்புக்காவல் முகாம்கள் கட்டமைப்பது, இன்னும் கூடுதலாக குடியேற்ற முகவர்கள் மற்றும் சிப்பாய்களை நிலைநிறுத்துவது உட்பட இராணுவ சட்டத்தை எல்லைகளில் மட்டுமின்றி பிரதான பெருநகர பகுதிகளிலும் பயன்படுத்தும் இன்னும் கூடுதல் நகர்வுகளைக் கொண்டு விடையிறுக்கும்.

நேற்று அமெரிக்க குடியேற்ற கவுன்சில் குறிப்பிட்டவாறு, இந்த முடிவு "அமெரிக்கர்கள் அனைவருக்கும் இன்னல்களைக் கொண்டு வரும், அதற்கு மேல் அவர்கள் குடியுரிமை ஆதாரமாக பிறப்பு சான்றிதழைக் காட்ட முடியாது. பிறப்பிடம், குடியுரிமைக்கு உத்தரவாதமாக இருக்காது என்றால், பின்னர் —ஆவணமற்ற பெற்றோர்களைக் கொண்டவர்கள் மட்டுமின்றி— அமெரிக்கர்கள் அனைவரும் அமெரிக்க பிரஜைகளாக அங்கீகாரம் பெறுவதற்காக அரசிடம் அவர்களின் பெற்றோர்களது தேச குடியுரிமையை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.”

தொழிலாளர்களும் ஏழைகளும் அவர்களின் குடும்ப வம்சாவழியைக் கண்டறிய வேண்டிய மிக கடுமையான காலக்கட்டத்தில் இருப்பார்கள், அவ்விதத்தில் அவர்களுக்கு முறையான விசாரணை உரிமை, வாக்குரிமை மற்றும் சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமைகள் மறுக்கப்படலாம்.

இந்த நகர்வு ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயக கோட்பாடுகள் எந்தளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. களவாடப்பட்ட 2000 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கிய பின்னர் இருந்து அண்மித்து 20 ஆண்டுகளாக, இரண்டு கட்சிகளும் பொய்யான பாசாங்குத்தனங்களின் கீழ் நாடுகள் மீது குண்டுவீசியும், டிரோன்களைக் கொண்டு ஆயிரக் கணக்கானவர்களைப் படுகொலை செய்தும், சித்திரவதை, பெருந்திரளான மக்கள் மீதான உளவுபார்ப்பு மற்றும் பாரிய நாடுகடத்தல்களை நடத்தியும், ஏற்கனவே உரிமைகள் சாசனத்தைச் சுக்குநூறாக கிழித்தெறிந்துள்ளன.

ஜனநாயக கட்சியும் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பான பெருநிறுவன ஊடகங்களும் ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை பறிப்பை ஆதரித்துள்ளன அல்லது வேண்டுமென்றே அதை குறைத்துக் காட்டுகின்றன.

இன்டியானாவின் ஜனநாயக கட்சி செனட்டர் ஜொ டொன்னெல்லி நேற்று அறிவிக்கையில், பிறப்பு குடியுரிமை மறுப்பை அவர் ஆதரிப்பதாக தெரிவித்தார், அதேவேளையில் மிசோரியின் ஜனநாயகக் கட்சி செனட்டர் கிளைர் மெக்காஸ்கில் CNN க்குத் தெரிவிக்கையில், “எல்லையைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு என்ன செய்ய தேவைப்படுகிறதோ அதை செய்ய 100 சதவீதம் அவரை நான் ஆதரிக்கிறேன்,” என்றார்.

பேர்ணி சாண்டர்ஸ் மேரிலாந்தில் ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டர் வேட்பாளருக்கான பிரச்சார பேரணியில் செவ்வாயன்று உரையாற்றுகையில், ட்ரம்பின் பிறப்பு குடியுரிமை மீதான தாக்குதலைக் குறித்து பேசுவதைத் திட்டமிட்டு தவிர்த்து கொண்டதாக NBC அறிவித்தது.

சாண்டர்ஸ், அதற்கு ஒரு நாள் முன்னதாக, சனிக்கிழமை பிட்ஸ்பேர்கின் Tree of Life யூத வழிபாட்டு தலத்தில் 11 யூதர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை ட்ரம்பின் பாசிசவாத வாய்வீச்சுக்களுடன் தொடர்புபடுத்த முயன்றவர்களைக் குறைகூறியதன் மூலம், அதிதீவிர வலதின் அபாயங்களைக் குறைத்துக் காட்டினார். “நான் இங்கே உட்கார்ந்து கொண்டு,” அந்த துப்பாக்கிச்சூட்டிற்காக "ஜனாதிபதியைக் குறைகூறி கொண்டிருக்கப் போவதில்லை,” என்றார்.

நேற்று நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்டின் இணையவழி பதிப்புகளில் வெளியான 28 தலையங்கங்கள் மற்றும் துணை-தலையங்க கட்டுரைகளில், வெறும் மூன்று மட்டுமே பிறப்பு குடியுரிமை மீதான ட்ரம்பின் தாக்குதலைக் குறித்து எழுதப்பட்டிருந்தன.

அவற்றில் ஒன்று, வாஷிங்டன் போஸ்டில் ஜோர்ஜ் கொன்வே மற்றும் நெய்ல் கட்யால் எழுதிய துணை-தலையங்க கட்டுரை, ட்ரம்பின் நகர்வு "ஐயத்திற்கிடமின்றி" நீதிமன்றங்களால் தடுக்கப்படும் என்று முனைமழுங்கச் செய்வதற்காக இருந்தது, அதேவேளையில் மெகன் மெக்அர்டில் எழுதிய மற்றொன்று, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான அவர் நகர்வுகளுக்கும் பாசிசம் அல்லது சர்வாதிகாரத்துடன் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதற்காக அதை "அத்துமீறிய பித்துநிலை" என்று குறிப்பிட்டு, ட்ரம்பைப் பாதுகாத்தது. “அவ்விதத்தில் வாதிடுவது முட்டாள்தனமானது, இடதுசாரி நாட்டுப்புறத்தார்களை முறிக்க வேண்டியிருக்கும்,” என்று அப்பெண்மணி எழுதினார்.

ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் அணிசேர்ந்த பத்திரிகைகளின் விடையிறுப்பானது, இவர்களுக்கும் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியினருக்கும் வேறுவேறு முன்னுரிமைகள் இருந்தாலும், நிதியியல் பிரபுத்துவத்தின் இந்த கன்னை ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சியினரைப் போலவே அதேயளவுக்கு ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமாக உள்ளன என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சியினரும் ட்ரம்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படுபாதக சூழலை உருவாக்க மக்களில் பின்தங்கிய கூறுபாடுகளைக் கிளர்ச்சிக்குத் தள்ள முயன்று வருகின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியின் பிரதான நோக்கமோ இணைய தணிக்கைக்காகவும், பெருநிறுவனங்கள் மற்றும் சிஐஏ க்கு "அதிகாரமில்லை" என்ற எந்தவொரு அரசியல் கண்ணோட்டத்தையும் வாயடைக்கச் செய்வதற்காகவும் இராணுவ-உளவுத்துறை முகமைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதாக உள்ளது.

“வெளிநாட்டு குறுக்கீடு" மற்றும் "ரஷ்யா" என்பதை "புலம்பெயர்ந்து ஊடுருவியவர்கள்" மற்றும் "தீயவர்கள்" என்பதைக் கொண்டு பிரதியீடு செய்தால், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் ஊக்குவிக்கும் வலதுசாரி விஷமப் பிரச்சாரத்தில் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடுகிறது. இரண்டு விடயங்களிலும், ஜனநாயக உரிமைகள் மீதான மிகவும் வக்கிரமான தாக்குதல்கள் "தேசிய பாதுகாப்புக்கு" அச்சுறுத்தல் என்ற முடிவில்லா எச்சரிக்கைகளால் நியாயப்படுத்தப்படுகின்றன.

பிறப்பு குடியுரிமையானது 1866 இல் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டு, 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலை 28, 1868 இல் மாநிலங்களின் நான்கில் மூன்று பங்கினரின் ஒப்புதலைப் பெற்று, அமெரிக்க அரசியலமைப்பின் 14 அரசியல் திருத்தத்தில் பொதியப்பட்டது.

இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம், “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற அனைவரும் ... அமெரிக்காவின் பிரஜைகள்,” என்ற வார்த்தைகளுடன் தொடங்கி, இந்த உரிமையுடன் தொடர்புபட்ட விதத்தில், எந்த மாநிலமும் "முறையான நீதி விசாரணையின்றி எவரொருவரின் வாழ்க்கை, சுதந்திரம், அல்லது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய" முடியாது என்பதை ஸ்தாபிக்க செல்கிறது.

ட்ரம்ப் அவர் முன்மொழிவை நியாயப்படுத்தி நேற்று, “இந்த வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்,” என்று ட்வீட் செய்தார்.

பிறப்பு குடியுரிமை மீதான "வழக்கு" ஏற்கனவே—600,000 க்கும் அதிகமான மக்களைப் பலி கொண்ட ஓர் உள்நாட்டு போரில்—தீர்க்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் அவரது 1863 கெட்டிஸ்பேர்க் உரையில் விவரித்தவாறு, 1861 இல் இருந்து 1865 வரையில் நீடித்த அப்போரானது, ஒரு தேசம் “அனைவரும் சமம் என்ற கருத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டதா... நீண்டகாலத்திற்குத் தாக்குப்பிடிக்குமா" என்பதை பரிசோதித்தது.

இந்த 14 ஆம் அரசியலமைப்பு திருத்தம் மூன்று "உள்நாட்டு போர் அரசியலமைப்பு திருத்தங்களில்" ஒன்றாக அறியப்படுகிறது. அடிமைத்தனத்திற்குத் தடைவிதித்த 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்துடன் சேர்ந்து, வயது வந்தவர்களுக்கு வாக்குரிமைக்கு உத்தரவாதம் அளித்த 15 ஆம் அரசியலமைப்பு திருத்தத்துடன் சேர்ந்து, உண்மையில் குடியரசின் தலைச்சிறந்த இராணுவம் எதற்காக நிறைவு செய்யப்பட்டதோ அவை சட்டமாக உள்நாட்டு போர் அரசிலமைப்பு திருத்தங்களில் பொதியப்பட்டது.

14 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் பிறப்பு குடியுரிமை ஷரத்தானது, உரிமைகளும் குடியுரிமையும் இரத்தம், இனம் அல்லது உன்னத அந்தஸ்தில் இருந்து பெறப்படுகின்றன என்ற கருத்துருவை நிராகரித்தது. அது குறிப்பாக Dred Scott v. Sandford இன் இழிவார்ந்த 1857 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது, அது ஆபிரிக்க வழிவந்தவர்கள் அமெரிக்க பிரஜைகள் இல்லை என்றும், முறையான நீதி விசாரணை போன்ற அடிப்படை உரிமைகளைப் பெற முடியாது என்றும் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நகர்வுகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட நகர்வுகளின் இறுதி இலக்கு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை, அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் மீதான பரந்த ஏமாற்றம் ஆகியவற்றிற்கு மத்தியில், முதலாளித்துவ வர்க்கம் ஒரு காலத்தில் அதன் புரட்சிகர சகாப்தத்தில் "சுய-நிரூபணமாக" தாங்கிப் பிடித்திருந்த உண்மைகள் எல்லாம், இப்போது பெருநிறுவன இலாபம் மற்றும் உலக இராணுவ மேலாதிக்கத்திற்கான அதன் முனைவுக்குப் பொருத்தமற்றதாக அருவருக்கத்தக்க விடயமாகி விட்டன.

அமெரிக்க மண்ணில் குடியுரிமை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உரிமைகளை அனுபவிப்பதற்கான புலம்பெயர்ந்தவர்களின் உரிமையும் பேச்சு சுதந்திர உரிமையும்—ஏனைய அனைத்து ஜனநாயக உரிமைகளுடன் சேர்ந்து—ஆளும் உயரடுக்கின் கண்களில், உலக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் மற்றும் கல்வியூட்டவும் மட்டுமே அனுகூலமாக இருக்கும் என்பதோடு, அவர்கள் எதற்காக மிகப்பெரியளவில் அஞ்சுகிறார்களோ, அதாவது சோசலிச புரட்சி மற்றும் மனிதயினத்தின் நலன்களுக்காக அவர்களின் செல்வங்களைப் பறிமுதல் செய்வதற்கும் மட்டுமே அடித்தளங்களை அமைக்கும்.