ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In another anti-democratic act, Sri Lankan president dissolves parliament

இலங்கை ஜனாதிபதி இன்னொரு ஜனநாயக விரோத நடவடிக்கையில் பாராளுமன்றத்தை கலைத்தார்

By K. Ratnayake 
10 November 2018

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாட்டின் அரசியலமைப்பை வெளிப்படையாக மீறி, உத்தியோகபூர்வமாக முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பாராளுமன்றத்தை கலைத்துவிட்டார். நேற்று இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனவரி 5 அன்று புதிய தேர்தல்கள் நடைபெறும், புதிய பாராளுமன்றம் ஜனவரி 17 ம் திகதி கூடும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் நியமித்து இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிறிசேனவின் அடுத்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிசேன பின்னர் பாராளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு நவம்பர் 16 வரை ஒத்தி வைத்தார். பின்னர் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் நவம்பர் 14 கூடுவதற்கு திகதியை மாற்றினார். இந்த ஒத்தி வைப்பானது 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக இராஜபக்ஷவுக்கு கால அவகாசம் கொடுக்கும் ஒரு சூழ்ச்சியே ஆகும்.

இராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை பெற இன்னும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அறிவித்த பின்னரே சிறிசேன நேற்று பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

இராஜபக்ஷ உட்பட சிலர் மட்டுமே சிறிசேனவின் முடிவைப் பற்றி தெரிந்திருந்தனர். அறிவிப்புக்கு சற்று முன்னதாக சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) செயலாளர் ரோகண லக்ஷ்மன் பியதாச, பாராளுமன்றம் கலைக்கப்படாது என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சிறிசேன நேற்று அமைச்சரவைக்கு குறைந்த பட்சம் ஏழு அமைச்சர்களை நியமித்ததுடன், ஜனவரி தேர்தல்கள் முடியும் வரை, சிறிசேன-இராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி "காபந்து அரசாங்கமாகம்" எனப்படுவதாக இருக்கும் என்று கூறினார். தேர்தல்களை புரட்டிப் போடுவதற்கு அரச இயந்திரங்கள் மற்றும் அதன் வளங்களை பயன்படுத்திக்கொள்வதில் இலங்கை அரசாங்கங்கள் பேர் போனவை ஆகும்.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த மூன்று வாரங்களில் தனது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த சிறிசேன தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நேற்று இலங்கை பாதுகாப்பு அமைச்சர் என்ற தனது பதவியைப் பயன்படுத்தி அவர் அரச அச்சகத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். அண்மையில் சட்ட ஒழுங்கு அமைச்சையும் ஊடக அமைச்சையும் கூட அவர் எடுத்துக் கொண்டார். தற்போது 18 அமைச்சுப் பதவிகளை தன்வசம் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஆகி நான்கு மாதங்களுக்கு பின்னர், 2015 ஏப்ரலில், சிறிசேன இலங்கை அரசியலமைப்பில் 19 வது திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இதை எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதை நோக்கிய நடவடிக்கை என்றும் ஜனநாயகத்திற்கான வெற்றி என்றும் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும், கல்வியாளர்கள் மற்றும் போலி இடதுகளுன் சேர்ந்து பாராட்டினர்.

19 வது திருத்தமானது பாராளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் போது பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை அகற்றியது மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதையும் தடை செய்துள்ளது.

சிறிசேன இப்போது இந்த இரண்டு பிரிவுகளையும் மீறி, தெளிவற்ற சட்ட விளக்கங்களைப் பயன்படுத்தி, ஜனாதிபதியின் எதேச்சதிகார அதிகாரங்களை மீண்டும் நிறுவ முயற்சிக்கின்றார். இந்த வெறுக்கப்படும் நிறைவேற்று அதிகாரங்கள், அவரது அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மட்டுமன்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடுவதற்கு முன்வரும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்படும்.

ஒருபுறம், விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. மற்றும் மறுபுறம் இப்பொழுது "ஐக்கியப்பட்ட" ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) இல் இராஜபக்ஷவுடனான ஜனாதிபதியின் புதிய கூட்டணிக்கும் இடையிலான தீவிரமான மோதலின் ஒரு பகுதியாகவே சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தார்.

விக்கிரமசிங்க பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையை விடுவிப்பதற்கு மறுத்துள்ளதுடன், அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ஐ.தே.க. இன் பிரச்சாரத்தை அவர் இயக்குகின்றார். பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாகக் கூறி, பாராளுமன்றத்தை உடனடியாக மீண்டும் கூட்டுமாறு அவரது கட்சி கோருகிறது.

நேற்றைய அறிவிப்பை அடுத்து, ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும், தாம்  "சட்ட ரீதியான நடவடிக்கைகளை" எடுக்க முயற்சிப்பதாகவும் ஐ.தே.க. தலைவர்கள் தெரிவித்தனர். அதாவது, சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு ஐ.தே.க. உச்சநீதிமன்றத்திடம் கோரும்.

ஐ.தே.க. ஜனாதிபதியின் “சட்ட விரோத நடவடிக்கைக்கு” எதிராக தனது பிரச்சாரத்தை தீவிரமாக்கும் என, முன்னாள் சுகாதார மற்றும் சுதேச மருந்துகள் அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று அலரி மாளிகையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் அதை விவரிக்கவில்லை. ஐ.தே.க., கொழும்பில் திங்களன்று ஒரு பெரிய பேரணியை நடத்தவுள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது.

விக்கிரமசிங்க மற்றும் சிறிசேனா-இராஜபக்ஷ முகாம்களின் "ஜனநாயக" பாசாங்குகள், முற்றிலும் போலித்தனமானவை. 1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஏழு தசாப்தங்களாக இலங்கையை தொடர்ச்சியாக ஆட்சி செய்துவரும் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கங்கள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் போன்ற அனைத்து உழைக்கும் மக்களினதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை திட்டமிட்டு ஒடுக்கி வந்துள்ளன.

2014 நவம்பரில், சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறி 2015 இல் விக்கிரமசிங்கவுடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்க சதி செய்தார். இராஜபக்ஷ குடும்ப ஆட்சி நடத்துவதாகவும், ஜனநாயக உரிமைகளை மீறுவதோடு, உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நசுக்குவதாகவும் சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் குற்றம் சாட்டினர். இது 2005ல் இருந்து 2015 வரை இராஜபக்ஷவின் தசாப்தகால சர்வாதிகார ஆட்சி மீதான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வெகுஜன எதிர்ப்பை சுரண்டுக்கொள்வதற்கான வாய்சவடால்களாக இருந்தன.

சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் நேரடியாக ஈடுபட்டு இராஜபக்ஷவை அகற்றியமை, அமெரிக்கவால் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டம் ஆகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை வாஷிங்டன் ஆதரித்தது. ஆனால் அது பெய்ஜிங்குடன் இராஜபக்ஷ கொண்டிருந்த உறவுகளை கவிழ்க்க முயற்சித்ததுடன், சீனாவுடன் மோதிக்கொள்வதற்கான அமெரிக்க நகர்வுகளுடன் இலங்கையை அணிதிரட்ட நவடிக்கை எடுத்தது.

சிறிசேன தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. பிரிவினைக்கும் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. இற்கும் இடையிலான மோதல் வானத்தில் இருந்து விழுந்ததல்ல. நான்கு ஆண்டுகளுக்குள் சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் மோசமாக மதிப்பிழந்து போயுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகளும் மாணவர்களும் இந்த ஆண்டு பெருகிய அளவில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவும் பிற முக்கிய வல்லரசுகளும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற ஐ.தே.க. மற்றும் விக்கிரமசிங்கவினதும் கோரிக்கைகளை ஆதரிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக கொழும்புடன் வளர்த்துக்கொண்ட அரசியல் மற்றும் இராணுவ உறவுகள் பாதிக்கப்படும் என்பதையிட்டு வாஷங்டன் குறிப்பாக கவலை கொண்டதோடு இதுபற்றி பல முறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஒரு ஸ்ரீ.ல.சு.க. கூட்டத்தில் உரையாற்றிய இராஜபக்ஷ, அமெரிக்காவிற்கு விடுத்த தெளிவான சமிக்ஞையில், தனது கட்டுப்பாட்டின் கீழான எந்தவொரு அரசாங்கமும் "மேற்கு மற்றும் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக" அறிவித்தார்.

சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை, இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிந்த நிலையின் இன்னொரு அறிகுறியாகும். இது ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன், எதேச்சதிகார வடிவ ஆட்சிக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது.

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான சாக்குப் போக்கின் கீழ், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐ.தே.க.இன் பக்கம் சாந்துள்ளன. கல்விமான்கள் மற்றும் நவ சம சமாஜ கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளும், விக்கிரமசிங்கவையே ஆதரிக்கின்றன. இந்த கட்சிகள் முன்னர் 2015இல் சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியை ஸ்தாபிப்பதற்காக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்தன.

தொழிலாள வர்க்கம் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் அவர்களின் சந்தர்ப்பவாத ஆதரவாளர்களையும் நிராகரிக்க வேண்டும். அத்தகைய அரசியல் அமைப்புக்களில் இருந்து அது சுயாதீனமாக அணிதிரண்டு, சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்கு ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அணியான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பும் மட்டுமே இந்த முன்னோக்குக்காகப் போராடுகின்றன.

கட்டுரை ஆசிரியரின் பரிந்துரை:

இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு ஒரு சோசலிச தீர்வுக்காகப் போராடு 

[31 அக்டோபர் 2018]